இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தோல் புதினத்தில் தொழிலாளர் நிலை

பி. வித்யா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர்.


முன்னுரை

தொழிற்துறை இன்று பரந்துபட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளது. இத்தகைய நிலையில் தொழிற்துறை முதலாளிகளுக்குச் சாதகமானதாகவே உள்ளது. தொழிலாளர் நிலையோ இன்னும் நலிவடையத் தொடங்கிவிட்டது. தொழிலாளர்கள் உழைப்புச் சக்தியை முழுவதுமாக தாரை வார்த்தபோதும், அவர்களது பொருளாதாரத்திலோ, வாழ்க்கையிலோ எத்தகைய முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆகவே தொழிலாளர்களின் இந்நிலை ஆய்வுக்குரியதாகும். தொழிலாளர்கள் மீது செலுத்தப்படும் முதலாளிகளின் செல்வாக்கும், உரிமை மறுப்பும், தொழிலாளர்கள் மீதான வன்முறையையும் சமூகப் பின்னணிகளை வைத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் இதற்கான தீர்வுகளை எட்ட முடியும். இவற்றை மனதில் கொண்டு தோல் புதினத்தில் காட்டப்படும் தொழிலாளர்கள் நிலையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

தொழிலாளர்கள் நிலை

முதலாளிகளுக்குக் கீழே அவர்கள் கொடுக்கும் கூலிக்காக வேலை செய்வோர் தொழிலாளர் எனப்படுவர். இதனைப் பென் பெக்கர், “தொழிலாளி வர்க்கம் என்பது பிறருக்காக உழைக்கும் மனிதர்களை உள்ளடக்கியதாகும்” (1) என்று குறிப்பிடுவர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் கூலி என்பதனைக் குறித்து மார்க்ஸ் கூறும்போது, “குறிப்பிட்ட உழைப்பு நேரத்துக்காக, அல்லது உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் குறிபிட்ட அளவு பண்டத்துக்காக, முதலாளி அளிக்கும் பணத்தொகையே கூலி எனப்படுவது” (2) என்று கூறுகிறார். ஆகக் கூலி எனப்படுவதுதொழிலாளர் உழைப்புச் சக்தியின் விலையாகும். இவ்வாறு உழைப்புச் சக்தியை விற்கும் தொழிலாளர்கள் பல்வேறான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களின் இன்னல்களை அறிவதும், அவற்றைக் களையும் தீர்வுகளை அறிவதும் அவசியமாகும். இவற்றை விரிவாக அறிய,

1. முதலாளியின் செல்வாக்கு

2. தொழிலாளர் உரிமை மறுப்பு

3. தொழிலாளர் மீதான வன்முறை

4. தொழிலாளர் பாதிப்புகள்

5. தொழிலாளர் போராட்டங்கள்

என்பவையாகப் பகுத்துக் கொள்ளலாம்.

1. முதலாளியின் செல்வாக்கு

தொழிலாளர்களையும், தொழிலாளர் இன்னல்களையும் அறிய விழையும் போது, அவர்களின் இன்னல்களுக்குக் காரணமான ஆதிக்கச் சக்தியையும் தெளிவான முறையில் அறிந்து கொண்டாலொழிய தொழிலாளர் இன்னல்களுக்குத் தீர்வுகளைக் காண இயலாது. ஆகவே முதலாளிகள் யார்? என்பதும் அவர்களின் அதிகார எல்லை யாது? என்பதும் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

முதலாளிகளை எவ்வாறு காண வேண்டும்? ஏன்பதற்கு “அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?” என்ற நூல், “உற்பத்திச் சாதனங்கள் முதலாளி வர்க்கத்தின் கரங்களில் குவிந்துள்ளன. எனவே முதலாளி வர்க்கம் கூலித் தொழிலாளர்களின் உழைப்பின் விளைபயன்களைச் சுவீகரிக்கிறது” (3) என்று கூறுகிறது. அதாவது உற்பத்திப் பொருள்களின் கையிருப்பைக் கொண்டவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுபவர்களே முதலாளிகள் என்று கூறுகிறது.

முதலாளிகள் குறித்து ஷாமில்ஸ், “நவீனப் பொருட்களைச் சட்ட ரீதியாகச் சொந்தமாக்கிக் கொண்டு, அவற்றிலிருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் தமது பெரும் செல்வததைக் குவிக்கின்றனர்” (4) என்று காட்டுகிறார். முதலாளிகள் தமது அதிகாரத்தைத் தொழிலாளர்கள் மேல் காட்டும் விதத்தை பிரெடரிக் எங்கெல்ஸ், “தொழிலாளி வர்க்கத்தினரிடமிருந்து இடையறாது மனித பலி வாங்கியும், உழைப்புச் சக்தியைத் துடுக்குத் தனமாக வீணடித்தும், சமூக அராஜகம் மூலம் நாசம் விழைத்தும் தனது ஆத்திரத்தைக் காட்டுகிறது” (5) என்கிறார்.


இத்தகைய முதலாளித்துவ முறை தொழிலாளர்களை எங்ஙனம் பாதிக்கிறது என்பதனை தமது புதினம் முழுவதும் படைத்துக் காட்டுகிறார் டி.செல்வராஜ். முதலாளியின் செல்வாக்கினைப் பதிவு செய்கிறார். அவை,

1.1 அரசியல் செல்வாக்கு

1.2 காவல்துறையில் செல்வாக்கு

1.3 அடியாள் செல்வாக்கு

1.4 மதச் செல்வாக்கு

1.5 அரசாங்கச் செல்வாக்கு

1.1 அரசியல் செல்வாக்கு

முதலாளிகள் அரசியல் கட்சியில் உறுப்பினர்களாயும் மிகப்பெரும் புள்ளிகளாயும் இருப்பதால், அவர்களின் தவறுகள் வெளியில் வராமல் மறைக்கப்படுகிறது. இதனைச் செல்வராஜ், “முஸ்தாபா மீரான் பேகம்பூரில் மகா வஸ்தாது. மஜ்லீஸ் அமைப்பின் தலைவரும் கூட மட்டுமல்லாமல், ஊரிலேயே செல்வாக்கு மிக்க முதலாளியின் மச்சான். பெரிய பள்ளிவாசலே அவர்களது ஆதிக்கத்தில் தான் இருக்கிறது. மேலும் முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவன்” (6) என்று காட்டுகிறார். இந்நிலையில் அவர்கள் எப்படிப்பட்ட அட்டூழியங்களைச் செயதபோதும் தட்டிக்கேட்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

1.2 காவல்துறையில் செல்வாக்கு

அரசியல் செல்வாக்கு உடையவர்களாய் இருத்தலோடு, காவல் துறையிலும் செல்வாக்கு கொண்டவர்களாய் முதலாளிகள் காணப்படுகின்றனர். அதிகப் பணமும், அரசியல் செல்வாக்குமே காவல் துறையினரின் மனதை மாற்றிவிடுகிறது. அதனால் முதலாளிகளின் தொழிலகங்களில் என்ன நடந்தாலும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை. மம்முதன் முதலாளியை எதிர்த்ததும் அவனைக் கொலை செய்த முதலாளிக்கு துணையாக இருந்தது காவல்துறையே ஆகும். இந்நிகழ்வைச் செல்வராஜ், “பிணத்தின் மீது விசாரணைக்கு வந்த போலீஸ், நீத்துக் குழியில் கால் இடறி விழுந்து இறந்து போனதாக வழக்கை முடித்துக் கொண்டு போனது” (7) என்று காட்டுகிறார்.

1.3 அடியாள் செல்வாக்கு

முதலாளிகள் அதிகமான அடியாட்களைப் பெற்றிருந்தனர். அடியாட்கள் மூலம் தொழிலாளர்களைப் பல நிலைகளிலும் ஒடுக்க முடியும் என்பது முதலாளிகளின் எண்ணம். இதனைச் செல்வராஜ்,“வேலைப்பளுவும், கொடுமையும் தாங்காமல், தப்பியோடும் தோல் ‘கப்புத் தொழிலாளர்களைப் பிடிப்பதற்கும் பிடித்தவர்களைச் சம்பந்தப்பட்ட முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காகவும், தோல் ஷாப்பு முதலாளிகள் ரெயில்வே ஸ்டேஷனிலும்,பஸ் நிலையங்களிலும் நியமித்திருக்கும் அடியாட்கள்” (8) என்று காட்டுகிறார். தொழிலாளர்களைப் பல்வேறு விதங்களில் ஒடுக்குவதற்கு இத்தகைய அடியாட்கள் பயன்பட்டனர் என்பதனை பலவிடங்களில் பதிவு செய்கிறார்.


1.4 மதச் செல்வாக்கு

முதலாளிகள் மதங்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டவர்களாய் இருந்தனர். மதத்தினைக் காரணங்காட்டி தொழிலாளர் ஒடுக்கப்பட்டனர். இதனைச் செல்வராஜ், “சங்க உறுப்பினரான கிறிஸ்தவர்கள் தேவாலயத்தின் சகல சடங்குகளினின்றும் திரஸ்காரம் செய்யப்பட்டிருந்தனர். சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு மட்டிலும் நன்மை இதரச் சடங்குகளிலும் பங்கு பெறும் உரிமை உண்டு என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்” (9) என்னும் கூற்று மதத்திலும் செல்வாக்கு கொண்டிருந்தனர் என்பதை விளக்கிவிடுகிறது.

1.5 அரசாங்கச் செல்வாக்கு

அரசும் பெரிய தனவந்தர்களான முதலாளிகளுக்குச் சாதகமானதாகவே உருவான காலந்தொட்டு இருந்து வந்துள்ளதை லெனின், “முதலாளிகளின் உடைமைகளையும் ஆட்சிகளையும் பாதுகாக்கின்ற அதிகமான ஜனநாயக ரீதியான நாடாளுமன்றமும் கூட சுரண்டல்காரர்களின் சிறு குழுக்கள் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை அடக்குவதற்கு பயன்படும் இயந்திரமே” (10) என்று கூறுகிறார். இத்தகைய முதலாளித்துவ முறைக்குச் சாதகமான அரசின் திட்டங்களைச் செல்வராஜ், “அரசு நிறைவேற்றிய நியாய வாரச்சட்டம், பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டத்தின் விதிகளை அமல்படுத்தாமல் அரசு, பண்ணையாளர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும் சாதகமாகவே நடந்து கொண்டிருந்தது” (11) என்று காட்டுகிறார்.

இவ்வாறாக முதலாளிகள் கட்சி, காவல்துறை, அடியாட்கள், மதம், அரசு என்று பல்வேறு நிலைகளிலும் பன்முகச் செல்வாக்கு கொண்டவர்களாக இருப்பதால் நீதிமன்றமும், சிறைச்சாலையும் அவர்கள் கட்டுப்பாட்டில் இயங்கியது. அதன் மூலம் தொடர்ந்து தொழிலாளர் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்பட்டன என்பதனை உணர முடிகிறது.

2. தொழிலாளர் உரிமை மறுப்பு

தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே வந்துள்ளன. தொழிலாளர்கள் தங்களது உழைப்பை முழுவதுமாக தொழிலகங்களில் தாரை வார்த்தபோதும், அவர்களது உழைப்பிற்குத் தகுந்த கூலி தரப்படவில்லை. மேலும் பலவகையான உரிமை மறுப்புகளும் நிகழ்கின்றன. இதனை,

2.1 தகுந்த கூலித் தரப்படாமை

2.2 அடிமைகளாக நடத்துகின்றமை

2.3 விடுமுறையின்மை

2.4 பாதுகாப்பின்மை

2.5 அமருவதற்குத் தடை


2.1 தகுந்த கூலித் தரப்படாமை

தகுந்த கூலித் தரப்படாததாலும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படாததாலும் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வறுமைக்கு உள்ளாகி, தொழிலாளர்களாகவே பின்னும் தொடர்வது. வேறுவகையில் கூற வேண்டுமானால், முதலாளிகள் தங்களுக்குக் கீழே பணிபுரியும் தொழிலாளர்களை உருவாக்கிக் கொண்டேயிருப்பது எனலாம். இதனைச் செல்வராஜ் தனது கதாபாத்திரமான ஆசீர்வாதத்தின் மனைவி இறந்ததும் அவளை அடக்கம் செய்ய இயலாத நிலையில் முதலாளியிடம் கையேந்தி நிற்க, முதலாளியோ,“ஒம் பொண்டாட்டி மையச்செலவுக்குப் பணம் கேட்டாயில்லே நீயும், இந்தப் பொடியனும் முறியிலே கை ஒப்பம் வச்சிட்டுச் சல்லிய வாங்கிட்டுப் போ, மத்ததெல்லாம் பொறவு பாத்துக்கலாம்” (12) என்று காட்டுவதன் மூலம் மனைவியை அடக்கம் செய்யப் பணம் கேட்ட ஆசீர்வாதம் தன் மகனையும் அடிமையாக்கிவிட்ட நிலை புலப்படுகிறது.

2.2 அடிமைகளாக நடத்துகின்றமை

தொழிலாளர்களை அடிமைகளாகப் பாவித்தலும், அடிமைப்படுத்தலும் முதலாளிகளால் கையாளப்படுகிறது. இதனை, மம்முதன் ஓர் ஆண்டுக்கு முறி எழுதிக் கொடுத்து அஸன்ராவுத்தர் தோல் ஷாப்பில் சேர்ந்திருந்தான்” (13) என்று காட்டுகிறார். அதோடு அந்த ஆவணத்தைத் திரும்பிக் கொடுக்காமல் தொடர்ந்து நிர்பந்திப்பதையும் செல்வராஜ் காட்டுகிறார். ஒருமுறை தோல் தொழிலகத்தில் சேர்ந்துவிட்டால் உயிர் போகும்வரை அங்கேயே வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை முதலாளிகள் ஏற்படுத்தியதையும் உணர முடிகிறது.

2.3 விடுமுறையின்மை

ஓய்வு என்பது அடுத்த நாளுக்கான உற்பத்தியை மேம்படுத்த உதவும். ஆனால் தொழிலகங்களில் கொடுக்கப்படும் தொடர் வேலைகள், தொழிலாளர்களை அன்றாடப் பணிகளைக் கூட செய்யவிடாமல் தடுக்கும். இவை தொடர்வதால் தொழிலாளர்கள் இயந்திரங்களைப் போல் ஆவதோடு தங்களது வலுவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி விடுகின்றனர். இவ்வாறாகத் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரமோ, விடுமுறைகளோ அளிக்கப்படாமல் உழைப்புச் சுரண்டல் நிகழ்வதைச் செல்வராஜ், “ஒம் பொண்டாட்டி மவுத்தான சமுச்சாரத்த சொல்லிட்டேல்ல. இண்ணெக்கி வேணன்டா லீவு எடுத்துக்க” (14) என்ற முதலாளியின் கூற்றை நோக்க, தொழிலாளர்களின் வீடுகளில் யார் இறந்தாலும், எவ்வித இழப்பு ஏற்பட்டாலும் முதலாளிகள் விடுமுறை தர மறுத்ததை உணர முடிகிறது.

2.4 பாதுகாப்பின்மை

பெரும்பாலும் எல்லாத் தொழிலகங்களிலும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை. ஆபத்தான பணிகள் என்று அறிந்த போதும், அதற்கென பாதுகாப்புகள் முதலாளிகளால் ஏற்படுத்துவதில்லை. இச்செயல் இன்று வரை தொடர்வதைச் செல்வராஜ், “நுகத்தடியில் பூட்டப்பட்ட காளையாக நாளெல்லாம் கோவணத்தோடு செக்குமாடாகப் பிணையல் வர வேண்டும். நீர்த்தப்படும் சுண்ணாம்பிலிருந்து கிளம்பும் வெக்கையால் உடம்பெல்லாம் வெந்தது போன்ற உணர்வோடு உடம்பே வியர்த்துக் கொட்டும், தப்பித் தவறி கால் இடறி குழியில் விழுந்தால் நீர்த்துப்போக வேண்டியதுதான்” (15) என்று காட்டுகிறார்.

2.5 அமருவதற்குத் தடை

தொழிலாளர் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தி, உரிமைகளைப் பெற்ற போதும் தொழிலாளர் பிரதிநிதிகள் கூட முதலாளிகள் முன்னே அமரக்கூடாது எனக் கண்டிக்கப்பட்டமையைச் செல்வராஜ், “நாங்க இந்தப் பறப்பயல்களோட சரிசமமா ஒக்கார முடியாது சாமி. இது இந்த ஜென்மத்தில் நடக்காத காரியம் கலெக்டரய்யா சிங்காரிச்சு மூக்கறுத்ததாட்டம் கேவலப்படுத்தீட்டீங்களே” (16) என்று முதலாளிகள் தங்களது கண்டிப்பைப் பதிவு செய்தமையைக் காட்டுகிறார்.


3. தொழிலாளர்கள் மீதான வன்முறைகள்

வன்முறைகள் எல்லா இடங்களிலும் பெருகிவிட்டது. வலிமை மிகுந்தவர்கள் வலிமை அற்றவர்களைப் பல்வேறு விதமான வன்முறைகளால் ஒடுக்குகின்றனர். அவற்றில் ஒன்றுதான் தொழிலாளர் மீதான வன்முறையாகும். வன்முறை குறித்து வாசுகி ஜெயரத்தினம், “பிறர் மனம் - உடல் நோகும்படி நடந்து கொள்வது வன்முறை” (17) என்றுரைக்கிறார். முதலாளிகள், தொழிலாளர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். இத்தகைய வன்முறைகள் தொழிலாளர்களை மனிதர்களாகக் கூட நினைக்காத நிலையில் நடைபெறுவது நினைவுகூரத்தக்கது. இதனை,

3.1 கசையாலடித்தல்

3.2 கொலை செய்தல்

3.3 பாலியல் துன்புறுத்தல்

3.4 சாதியின்ல் பெயரால் திட்டுதல்

எனப் பிரிக்கலாம்.

3.1 கசையாலடித்தல்

முதலாளிகளை எதிர்த்துப் பேசும் தொழிலாளர்களை மற்ற தொழிலாளர்கள் எதிர்த்து பேசத் துணியக்கூடாது என்பதற்காகப் பொது மக்கள் கூடும் இடங்களில் வைத்து அவர்களைக் கசையால் அடித்துள்ளனர். பணி முடிந்த பிறகும் அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் அச்சத்தில் ஆழ்த்தி வைக்கவே இத்தகைய நடவடிக்கையை முதலாளிகள் மேற்கொள்கின்றனர். இதனைச் செல்வராஜ், “குற்றம் செய்த தோல் ஷாப்புத் தொழிலாளியை இப்படிக் கல்தூணில் தொங்கப் போட்டுச் சாட்டை வாரினால் அடித்துக் காயப்படுத்துவது என்பது அந்த ஊர் தோல் ஷாப்புகளில் சாதாரண நடைமுறை” என்று கூறுகிறார்.

3.2 கொலை செய்தல்

தொழிலாளர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கேட்டால் கூட தொழிலாளர்கள் பல விதங்களில் பழிவாங்கப்படுதல் நிகழ்வதோடு அத்தொழிலாளர்களைக் கொலை செய்வதும் நிகழ்ந்ததைச் செல்வராஜ், “யேய் எகிறாதலே, அஸன் ராவுத்தனைப் பத்தி ஒனக்குத் தெரியாது. நீ, இந்தத் தோல் ஷாப்பை விட்டு போவமாட்டே,“லேய்” ஒம் பொணம் தான் போவும்” (19) என்று மிரட்டுவதைக் காட்டுகிறார்.

3.3 பாலியல் துன்புறுத்தல்

ஆண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விடப் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்படுபவை மனதைக் கனக்கச் செய்வதாய் அமைகிறது. பெண் தொழிலாளர்கள் என்பதாலேயேப் பெண்கள் முதலாளிகளின் இச்சையை தீர்த்தாக வேண்டிய நிலையையும், அவை அன்றாடம் நிகழ்வதைப் போல சகித்துக் கொள்ள பழக்கியிருத்தலும் காணப்பட்டமையைச் செல்வராஜ், “எந்த ஒரு பெண்ணும் கண்ணுக்குப் பசுமையாகவும், புதுமையாகவும் இருந்துவிடக் கூடாது. அவனது காமாந்தகாரக்கண் எந்தப் பெண் மீது படுகிறதோ, அந்தப் பெண் அவனது இச்சையைப் பூர்த்தி செய்தாக வேண்டும். மறுத்தாலோ, அவன் மிருகமாகவே நடந்து கொள்வான்” (20) என்று பதிவு செய்கிறார்.

3.4 சாதியின் பெயரால் திட்டுதல்

பிறரை மனம் நோகும்படி பேசுதலே தவறு என்கையில், சாதியின் பெயரால் திட்டுதல் குற்றமாகும். தொழிலாளர்களைச் சாதியின் பெயரால் திட்டியமை நடந்ததைச் செல்வராஜ், “ஏ சேசுவே” ஓசேப்புத் தலையை உயர்த்தி வேதனை தாங்காமல் சொன்ன வார்த்தைகள் அவரது இதயத்தையே பிளப்பதுபோல் இருந்தது. “பறத்தேவடியா மவன் சாமியக் கூப்பிடுதயாக்கும்” ஏசியபடி கழுவன் மீண்டும் தாக்கலானான்” (21) என்று ஒரு தொழிலாளி சாதியின் பெயரால் திட்டப்படுதலைப் பதிவு செய்கிறார்.

4. தொழிலாளர் பாதிப்புகள்

தோல் தொழிலகங்களிலே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடலில் பலவிதமான இடர்ப்பாடுகள் தோன்றகின்றன. அதோடு நோய்கள் அதிகமாகி இறப்பிற்கே இட்டுச் செல்கின்றன. இதனைப் புதினம் முழுதும் சுட்டுகிறார் ஆசிரியர். தொழிலாளர் உடலில் ஏற்படும் பாதிப்புகளை “நாள் முழுவவதும் சுண்ணாம்புக் கலவை கலந்த நீரில், நாற்றம் பிடித்த நிணவாடை வீசும் மதாட்டுத் தோலையும் ஆட்டுத் தோலையும் போட்டு அலசுவதாலும், மிதித்துச் சவட்டுவதாலும், பாதங்களும் கரங்களின் உட்பகுதியும் வெந்து ரணமாகிக் காய்த்துப் போய்விட்டன. பாதங்களில் விப்பும் விரிவும் ஏற்பட்டு நடப்பதற்கேச் சிரமம். அதிலும் புதிதாகச் சுண்ணாம்புக் கலவையைக் குழியில் கலக்கிக் கொண்டு தோல்களை அலசும்போது அவனை அறியாமலே மூச்சுத் திணறும்” (22) என்று அவர்கள் படும் துயரத்தைக் காட்டும் அதே வேளையில், பெண்கள் படும் துயரத்தையும் காட்டுகிறார்.

“உப்புத் தேய்த்துப் பதப்படுத்திவரும், மாட்டுத் தோலிலும், ஆட்டுத் தோலிலும் நாட்பட்ட புண்ணில் இருந்து வடியும் சீழ்வாடை கலந்த ஊணின் வாடை தாங்கமாட்டாமல் ஓங்கரிக்க வரும். பல தவணைகளில் வீச்சம் தாங்கமாட்டாமல் வாந்தி எடுத்திருக்கிறாள்” (23) என்று காட்டுகிறார்.

மேலும் சுண்ணாம்பு நீரில் தோல்களை அலசும் நிலையில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாகும். இதனை ஆசிரியர், “இடுப்புவரை நிறைந்து கிடக்கும் சுண்ணாம்பு நீரில் நின்று தோல்களை அலசுவதற்குள் உயிரு போய்விடும். ஆடை முழுவதும் சுண்ணாம்பில் ஊறி உடம்பில் சுண்ணாம்புத் தண்ணீர்ப்பட்ட இடமெல்லாம் நமைச்சல் தாங்காது. பிறகு அது புண்ணாகி ரணவேதனை எடுக்கும்” (24) என்று பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் காட்டுவதோடு சுவாசக் கோளாறும், அதைத் தொடர்ந்து மரணமும் வந்துவிடுவதை பதிவு செய்கிறார். இத்தகைய பாதிப்புகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.


5.தொழிலாளர் போராட்டங்கள்

தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்தங்களைச் செய்யத் தொடங்கினர். இதனால் பல இன்னல்களைச சந்திக்க வேண்டியதாயிற்று. இத்தகைய நிலையை ஆசிரியர், “தோல் ஷாப்பு முதலாளிகள், ஸ்ட்ரைக்கை உடைப்பதற்காகவும், தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகவும் தங்களது அடியாட்கள் வாயிலாக, அடி, உதை, தீ வைப்பு என்று பலவிதமான கிரிமினல் நடவடிக்கை மூலம் தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தனர்” (25) என்று கூறுகிறார். அத்தகைய நிலையிலிருந்து தொழிலாளர்கள் உணர்வு பெறவும், ஒன்றுபடவும் சங்கங்கள் உதவின. தொழிலாளர்களின் வெற்றிப் போராட்ட நிலையை, தொழிலாளர் பாதிப்பு, வெகுண்டெழல், தொழிலாளர் ஒற்றுமை, சங்கம், அரசியல் கட்சி என்ற படிநிலைகளில் அறியலாம். மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம்தான். மக்களோடு இணைந்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை ச. மாடசாமி, “எளிய மனிதர்களே போராட்டங்களுக்கு உயிரும் ஆற்றலும் கொடுக்கிறார்கள். பதிலுக்குப் போராட்டங்கள் எளிய மனிதர்களைக் கம்பீரமானவர்களாய் உருவாக்குகின்றன” (26) என்று கூறுவதோடு, “தொழிலாளர் போராட்டங்களில் வேலை நிறுத்தம் என்ற புரட்சிகர வழிகாட்டுதலுக்கும் தினசரி வேலைகளில் அக்கறை வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கும் இடையே முரண்பாடு எதுவும் இல்லை” (27) என்று விளக்குகிறார். இத்தகைய போராட்டங்களின் சில உரிமைகளை வென்றெடுத்ததையும் செல்வராஜ் புதினத்தில் பதிவு செய்கிறார்.

போராட்ட வெற்றிகள்

விடுமுறைகள் தரப்பட்டுள்ளமை போராட்டங்களின் விளைவே ஆகும். இது குறித்து,“முன்னைப்போல் அல்லாமல் இப்போது ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நகரத்தின் எல்லாத் தொழிற்சாலைகளிலும் விடுமுறை” என்று காட்டுவதோடு, தீண்டப்படாதவர்கள் என்றும் முதலாளிகள் முன் கைகட்டி, வாய் பொத்தி நிற்க வேண்டும் என்கிற நிலை மாறி,தொழிலாளர்களும் அரசியல் பதவிகளை வகிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை, “கசையடிக்காட்படுத்தப்பட்ட அடிமை ஓசேப்பை நகர மக்கள் நகர சபையின் தலைவராகத் தேர்வு செய்யப் போகிறார்கள்” (28) என்று குறிப்பிடுகிறார்.

தொழிலாளர்களை அடிமைகளாக்கி எழுதிய முறிசீட்டு முறையும் நின்றதனை, “அடிமைச்சாசனமான முறிச்சீட்டுக்கு மொத்தமாக முடிவு கட்டப்பட்டுப் போயிற்று. அடிமை முறிசீட்டு எழுதி ரிஜிஸ்தர் செய்வது என்று கேள்விப்பட்டாலே, அந்த நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்று அரசாங்கமே தோல் ஷாப்புகளை எச்சரிக்க வேண்டி வந்தது” என்று பதிவிடுகிறார்.

இவைகளெல்லாம் மாறியதோடு தொழிலாளர் நலச்சட்டங்களும் உயிர் பெற்றது. இதன் காரணம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்துப் போராடியதே ஆகும்.

முடிவுரை

முதலாளிகள் தங்கள் பன்முகச் செல்வாக்காலும், அரசியல் உத்திகளாலும் தொடர்ந்து தொழிலாளர்களை ஒடுக்கி வந்துள்ளனர். இதனால் தொழிலாளர்களுக்கான உரிமைகளை முற்றிலுமாக முதலாளிகள் ஒதுக்கிவிடுவதோடு, அவர்களுக்கெதிரான வன்முறைகளையும் கையாளுகின்றனர். இவற்றில் இருந்து விடுபடத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கங்கள் அமைத்து தொடர்ந்து வலுவான போராட்டங்களை மேற்கொள்வதோடு தொழிலாளர் நலச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பாடுபட வேண்டும். மேலும் தொழிலாளர் உரிமைகளை முன்னிறுத்தும் அரசியல் கட்சி இதற்கு சிறந்த தீர்வாகும். அனைவருக்குமான அதிகார பகிர்வே நல்ல சமூகத்திற்கான கால்கோளாகும்.

அடிக்குறிப்புகள்

1. தமிழில் நிழல்வண்ணன், மார்க்சியத்தின் அடிப்படைகள், ப.15

2. கார்ல்மார்க்ஸ், கூலியுழைப்பும் மூலதனமும், ப.26

3. தமிழில் நிழல்வண்ணன், மேலது, ப.31

4. எஸ்.இல்யீன், அ.தொத்திலோவ், மொ.பெ.இரா.பாஸ்கரன், அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன?, ப.46

5. மார்க்ஸ்,ஏங்கெல்ஸ், லெனின், கம்யூனிஸ்ட் சமூகம், ப.74

6. செல்வராஜ். டி, தோல், ப.3

7. மேலது,

8. மேலது, ப.59

9. மேலது, ப.492

10. லெனின், பாட்டாளி வர்க்க தேசியவாதம், ப.245

11. செல்வராஜ்.டி., மேலது, ப.678

12. மேலது, ப.44

13. மேலது, ப.19

14. மேலது, ப.43

15. மேலது, பக். 18-19

16. மேலது, ப.176

17. வாசுகி ஜெயரத்தினம், பெண்ணியச்சுவடுகள், ப.39

18. செல்வராஜ்.டி., மேலது, ப.76

19. மேலது, ப.19

20. மேலது, ப.3

21. மேலது, ப.77

22. மேலது, ப.9

23. மேலது, ப.39

24. மேலது, ப.40

25. மாடசாமி.ச, பொதுவுடமை இலக்கியம் பார்வையும் பயணமும், ப.140

26. செல்வராஜ்.டி., தோல், ப.667

27. மாடசாமி.ச., மேலது, ப.139

28. செல்வராஜ்.டி., மேலது, ப.667

29. மேலது, ப.672

(குறிப்பு: அடிக்குறிப்புகளுக்கான நூலின் பெயர், நூலாசிரியர் ஆகியவற்றுடன் வெளியிட்ட பதிப்பகம், ஊர், ஆண்டு, பதிப்பு விவரம் தரப்பட்டால் கட்டுரை மேலும் சிறப்பாக அமையும். இக்கட்டுரையினைப் படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாகவும் அமையும் - ஆசிரியர்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p183.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License