பிரபஞ்சனின் காகிதமனிதர்கள் படைப்பில் சமூக மதிப்பீடு
முனைவர் த. லக்ஷ்மி
துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635130
முன்னுரை
‘எழுதுகோல் தெய்வம் எழுத்தும் தெய்வம்’ என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். இவ்வெழுத்து என்னும் தெய்வத்தை எட்டுவதற்காகப் படைப்புத்தவம் செய்கின்ற எழுத்தாளர்கள் மிகச்சிறந்த படைப்பாளர்களாக இலக்கிய உலகத்தில் திகழ்கிறார்கள். இலக்கியமானது கவிதை, உரைநடை, சிறுகதை, புதினம் எனப் பல பிரிவுகளாகக் கிளைத்துத் தழைத்து வருகின்றது. இவற்றுள் புதினம் என்னும் நாவல் படைப்பாளிகள், சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடியாக விளங்குகிறார்கள். கண்ணாடிகள் எதிரே உள்ளதை உள்ளவாறு காட்டும் தன்மை படைத்தவை. ஆனால், இப்படைப்பாளர்கள் சமுதாயத்தை ஊடுருவிப் பார்த்து வாசகர்களுக்குக் காட்டுவது மட்டுமல்லாமல் சமுதாயத்தின் சிக்கல்களுக்குத் தீர்வை வழங்கும் சமுதாய மருத்துவர்களாகவும் இருக்கின்றார்கள். அந்த வகையில் புதினம், சிறுகதை முதலிய இலக்கிய வடிவங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய இலக்கியங்களை வழங்கும் எழுத்தாளர் வரிசையில் பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கின்றார் என்பது தெளிவு. இத்தகைய சிறப்புமிக்க படைப்பாளரது காகிதமனிதர்கள் படைப்புக் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
காகித மனிதர்கள் - ஒரு பார்வை
இந்நாவல் உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நேர்மையற்ற-காமுகத்தனம் வாய்ந்த-மாணவர்களின் நலம் கருதாத அவலங்களையெல்லாம் படம் பிடித்துக் காட்டுகின்றது. கல்வி வணிகப் பொருளாகிவிட்டக் கீழ்மைத்தனத்தையும் எடுத்துரைக்கின்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுப்பிரமணி. இவர் நேர்மையாகச் செயல்படுவதனால் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார். இறுதியில் பதவியைவிட்டே விரட்டப்படுகிறார் என்பதைப் பிரபஞ்சன் விளக்கமாகக் கூறுகின்றார். அழகேசன், கண்ணன் என்னும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மாணவியர்களைத் தகாத முறையில் நடத்துவதையும் தங்கள் இச்சைக்கு இணங்காத மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதையும் பிரபஞ்சன் விரிவாகப் பேசுகின்றார். அரசியல்வாதிகளின் பின்புலத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கல்விக் கோயிலை கடைவீதியாக மாற்றுகின்ற கயமைத்தனத்தையும் பிரபஞ்சன் சாடுகின்றார். மாணவர்களின் போராட்டங்களும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன. நூலகத்திற்குச் சென்றுவிட்டு இரவில் காலதாமதமாக வரும் மாணவர்களைக் காவல் துறையினர் தடுத்து வைத்து இழிவாக நடத்தும் அவலத்தையும் ஆசிரியர் பேசத்தவறவில்லை. ஆக, இந்நாவல் கல்வி நிலையங்களின் பிற்போக்குதனத்தை வருணிக்கின்ற படைப்பாக உள்ளது எனலாம்.
காகித மனிதர்கள் - பெயர்ப்பொருத்தம்
பொதுவாக மனித வாழ்க்கை அன்பும் நேர்மையும் கொண்டதாக விளங்கினால் சமுதாயம் பயனடையும். ஆனால், இந்நாவலில் நேர்மைக்குப் புறம்பான அன்பற்ற மனிதர்களின் கீழ்மைத்தனம் தோலுரித்துக் காட்டப்படுகின்றது. மலரென்றால் நறுமணம் வீசும். காகித மலரில் சுகந்த வாசத்தை எதிர்பார்க்க முடியுமா? அதுபோலத்தான் இந்நாவலில் வரும் கதை எதிர் மாந்தர்கள் மற்றவர்களுக்கு நன்மை நல்காத ‘காகித மனிதர்கள்’ என்று பிரபஞ்சனால் அழைக்கப்படுகிறார்கள்.
கல்வி பற்றிய ஆசிரியரின் மதிப்பீடும் தற்கால நிலைமையும்
படைப்பாளன் தான் காலூன்றி இருக்கும் சமுதாயம் மேற்கொண்டு எவ்வாறு உயரவேண்டும் என்கிற சிந்தனைப் போக்கில் மேம்பட்டு நிற்பவனாவான். அந்த வகையில், நமது தமிழ்ச் சமுதாயத்தில் கல்வி பற்றிய இலட்சியக் கனவு பிரபஞ்சனிடத்திலும் ஊடாடுகின்றது. அவர்தம் கல்வியின் நோக்கத்தை இந்நாவலில் தாமே முன்வந்து கூறுகின்றார்.
“சமீபகாலமாக நான் அதிகம் சிந்திக்கிற விசயம் ஒன்றுண்டு, கல்வியைப் பற்றித்தான் நான் அதிகம் சிந்திக்கிறேன். மனிதனை உயர்ந்தவனாக ஒப்பற்றவனாக மாற்றுவது கல்வி. ஒழுக்கமுள்ளவனாக மாற்றுவது கல்வி அதற்காகவேப் புதிதாய் பல பல்கலைக்கழகங்களை நாம் தொடங்கி இருக்கிறோம். இருந்தாலும் நாம் எதிர்பார்த்த இந்த நிறுவனங்களை ஆக்ரமித்துவிட்டார்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கண்ட கனவு நிறைவேறத் தவறிவிட்டது. ஆகவே, தமிழ்மொழியின் நலம் கருதியும், தமிழர்களின் உயர்வு கருதியும் சில நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டியுள்ளது” (1)
என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் ஆசிரியர். சான்றோர்கள் காணும் கனவை நனவாக்க வேண்டியது தற்போதைய அவசியம் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஏனென்றால், நல்ல கல்வியறிவில்லாத நடத்தையில் ஒழுங்கில்லாத சமுதாயத்தால் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்க முடியாதல்லவா?
மாணவியரின் அவலநிலை
இந்நாவலில் உயர்கல்வி பயிலும் பெண்கள் தங்கள் ஆசிரியர்கள் மூலம் அடையும் துன்பங்கள் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன. ஆய்வு மாணவியரைக் காமக்கண்ணோட்டத்தோடு அணுகும் பேராசிரியர்களின் குரூரத்தனமான இருட்டு மனத்தை ஆசிரியர் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார். அழகேசன் என்னும் தமிழ்ப்பேராசிரியர் மாணவியரைத் தனது வீட்டிற்கு வரும்படி வற்புறுத்துகின்றார். இணங்கிச் செல்பவர்களின் கல்வி இடையூறின்றி விரைவில் நிறைவேறுகின்றது. அவ்வாறு செல்ல மறுப்பவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடுகின்றது. பேராசிரியர் கண்ணன் வகுப்பறையிலேயே மாணவியரை காமுகத்தனத்தோடு நோக்கும் அவலமும் அரங்கேறுகின்றது. இத்தகையக் கீழ்மைத்தனத்தை எல்லாம் மாணவியர் துணைவேந்தர் சுப்பிரமணியனுக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கின்றனர்.
“ஐயா, பேராசிரியர்களும், நெறியாளர்களும் செய்யும் தொந்திரவுகள் சகிக்க முடியவில்லை. அவர்கள் எங்களில் பலரைத் தவறான செயல்களுக்குக் கூப்பிடுகின்றார்கள். அதன்படி அவர்களுடன் ஒத்துழைத்தால் சீக்கிரம் எங்களுக்கு எம்ஃபில், பி.எச்டி பட்டங்கள் அளிப்பதாகக் கூறுகின்றார்கள். அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால், எங்கள் வாழ்க்கையையே இருண்டு போகச் செய்துவிடுவோம் என்றும் அச்சுறுத்துகின்றார்கள்” (2)
இவ்வாறாக அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டிக்கும் துணைவேந்தரை மேற்சொன்ன பேராசிரியர்கள் அரசியல்வாதிகளின் துணையோடு பதவி விலகச் செய்கின்ற பாதகமும் நிகழ்கின்றது. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் எப்படி இருக்கவேண்டும் என்கின்ற சிந்தனையை, ‘பள்ளி ஆசிரியனுக்கு ஒரு தாயின் சகிப்புத்தன்மையும் எல்லையற்ற அன்பும் இருக்க வேண்டும்’ என்று பிரபஞ்சன் சமுதாய அக்கறை ததும்பப் பதிவு செய்கின்றார். இன்றைய கல்வி வளர்ச்சி மக்களுக்குப் பயன் அளிக்கத்தக்க வகையில் அமையப் பெறுதல் வேண்டும். பழமை பாராட்டிக் கொண்டு தேவையில்லாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது நம் பயன்பாட்டுக்குத் தடையாக அமையும். கல்வியிலும், ஆராய்ச்சியிலும் புதிய சிந்தனைகள் உருவாக வேண்டும் என்பது ஆசிரியரின் கருத்தாக அமைகிறது.
நிர்வாகச் சீர்கேடுகள்
ஓர் அரசு இயந்திரம் சீராக இயங்கினால் மட்டுமே நாடும் மக்களும் நன்மைகள் பெற்று நலமாக வாழ முடியும். ஆனால், காகித மனிதர்கள் நாவலில் அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு அதிகாரத்தை தீமையின் பக்கம் திருப்புகின்ற இழிநிலைமையைக் காணமுடிகின்றது. பல்கலைக்கழகத்தில் தீமையே வடிவான பேராசிரியர்களுக்கு அரசியல் அதிகாரம் பக்கபலமாகவும் நன்மைக்குக் குரல் கொடுக்கும் துணைவேந்தரையேத் தூக்கி எறியும் கேவலம் அரங்கேறுவதையும் காணமுடிகின்றது. வாய்மையே வெல்லும் நேர்மையே நிலைநிற்கும் என்கின்ற தத்துவ வாசகங்களெல்லாம் இன்றைய துஷ்டத்தனத்தில் தூள்தூளாகப் போவதை இந்நாவல் சுட்டிக்காட்டுகின்றது. நேர்மையாளர்கள் நிலைபெற முடியாமல் தவிப்பதையும், தவறான பாதையில் செல்வோர் அரியணையில் அமர்ந்து தழைத்து வாழ்வதையும் பிரபஞ்சன் எடுத்துக் கூறுகின்றார். அரசு நிர்வாகத்தின் தலைவராக விளங்கும் முதலமைச்சரே கூட தமது கடமையை உணர்ந்து செயலாற்றுவதில்லை என்பதை வருத்தத்தோடு பிரபஞ்சன் எழுதுகின்றார்.
“முதல்வர் கோட்டைக்கு வருவதே அண்மைக் காலமாக இல்லாமல், தப்பித் தவறி வந்தால் அது ஆச்சரியமான சங்கதியாக மாறி வந்து கொண்டிருந்தது. முக்கிய அதிகாரிகள் அதாவது அவருக்கு நம்பகமாக இருந்துவரும் அதிகாரிகள் மற்றும் முன்னாள் இந்நாள் நடிகையர்கள் இல்லத் திருமணங்களுக்கு மட்டும் முதல்வர் எழுந்தருளி சூட்கேஸ் அன்பளிப்பு வழங்கிக் கொண்டிருந்தார். அதிகாரிகளும், அமைச்சர்களுமே கூட முதல்வரை காதணி, புஷ்பவதி மற்றும் கல்யாணச் சடங்கின்போதுதான் பார்க்கும்படியாக முதல்வர் ஆகியிருந்தார்” (3)
இதில் அரசின் அதிகாரத்தை, அரசுக்காகப் பயன்படுத்தாத ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளாக இருக்கின்றார்கள் என்ற சிந்தனையை வெளிப்படுத்த முனைந்துள்ளதை அறியலாம்.
‘காகித மனிதர்கள்’ என்னும் இந்த நாவலில் உயர்கல்வி நிலையங்கள் தற்காலத்தில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், அரசு அதிகாரம் தீமையின் பக்கம் சாய்ந்து நன்மையை எவ்வாறு சிதைக்கின்றது என்பதையும் பிரபஞ்சன் ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகின்றார். ‘ஒழுக்கமில்லாத கல்வி படித்த அயோக்கியர்களைத் தான் உருவாக்கும்’ என்று அண்ணல் காந்தியடிகள் கூறுவார். ஆசிரியர்களாக இருப்பவர்களே அயோக்கியத்தனத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்தால் எதிர்காலச் சமுதாயம் மனசாட்சி உள்ளதாக எப்படி வாழமுடியும் என்கின்ற ஏக்கம் பிரபஞ்சனின் எழுத்துக்களில் தொனிக்கின்றது. மூத்தவர்கள் வாழ்ந்து காட்டும் முறையை வைத்துதான் இளையவர்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ளமுடியும். வாழ்க்கை என்பது போதனையால் வருவதல்ல. இன்னொரு வாழ்க்கையைப் பார்த்துக் கற்றுக்கொள்வது, போதிக்கின்ற ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் போதித்தால்தான் அது மாணவர்கள் மனத்தில் பதியும். வெற்றுவார்த்தைகள் என்றுமே உபதேசம் ஆகாது. அதனால்தான் பாரதியார் தமது சுயசரிதையில்,
‘மூத்தவர் வெறும் வேடத்தில் நிற்குங்கால்
மூடப்பிள்ளை அறம் எவண் ஓர்வதே’
என்று பாடுகின்றார். இந்த நாவல் கல்வி சார்ந்த நல்ல சமுதாயம் உருவாவதற்கான சேவையைப் புரிகின்றது என்றால் அது மிகையாகாது. அறிஞர்களைப் போற்றும் அரசியல்வாதிகள் உருவாக வேண்டும் என்கின்ற நிதர்சனத்தை இந்நாவல் வழங்குகின்றது எனலாம்.
தமிழில் பெரும்பாலான வாசகர்களால் அறியப்பட்ட படைப்பாளி பிரபஞ்சன். இவரது படைப்புகளை ஆய்வு மாணவர்கள் இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். சமகால வாழ்க்கையை மிக நுட்பமாக அலசி ஆராய்ந்து அவற்றைத் தம் நாவல்களில் படைத்துக் காட்டியுள்ளார். இன்றைய சமுதாயம் பல நிலைகளில் சீர்கெட்டுக் கிடக்கின்றது என்பதைக் காட்டும் அதே வேளை நாம் வாழுகின்ற சமுதாயம் செம்மைப்பட வேண்டும் என்று விரும்புபவர். இவருடைய விருப்பம் நிறைவேறினால் சமூகம் மதிப்புமிக்கதாகத் திகழும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
சான்றெண் விளக்கம்
1. பிரபஞ்சன், காகிதமனிதர்கள், கவிதா வெளியீடு-சென்னை (1995), ப.146.
2. மேலது, ப.13.
3. மேலது, ப.144.
(குறிப்பு: இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்ட துணைநூற்கள் பட்டியலையும் சேர்த்து அளித்திருந்தால் கட்டுரை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். - ஆசிரியர்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.