இலங்கையின் புகழ்பூத்தத் தமிழறிஞர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
(நாற்பதாவது நினைவு தினக் கட்டுரை)
கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
இலங்கை

“பண்டூரும் முகிற்குலங்கள் எமதிறைவர் மருகர்திருப் பதியீதென்ன
விண்டூர மழைபொழியும் சிறப்பதனால் வளம்மலிந்து மிகுந்து தோன்றும்
மண்டூரி லுறைமுருகன் மலரடிக்கோர் திருப்பதிகம் மரபிற் சொற்றான்
கண்டூருமினிய மொழிப் பெரியதம்பிப் பிள்ளையெனும் கலைவல்லோனே!”
நமது முத்தமிழ் மாமுனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் புலவர்மணி பற்றிய வாழ்த்துதல் இது.
ஈழத்துத் தமிழறிஞர் வரிசையிலே இமயமெனப் பேரறிஞராகி - தனக்கென ஒரு தனியிடத்தை வகித்துக்கொண்ட - இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் ஈழத்தின் கிழக்கு மண்ணில் - இமயம் வரை தமிழ் முத்திரை பதித்த ஈழக் கரிகாலன் சுவாமி விபுலானந்த அடிகளாருக்குப் பின் அடுத்த நிலையில்வைத்து எண்ணத்தக்கவராகின்றார். தலைசிறந்த புலவனாக - அழகுதமிழின் உரைநடை வல்லாளனாக - சிறந்த மேடைப் பேச்சாளனாக - போற்றுதலுக்குரிய நல்லாசிரியனாக - புரட்சி எண்ணங்களுடன்கூடிய சமூகச் சீர்திருத்தவாதியாக - நல்லதோர் அரசியல் விமர்சகனாக - நவீன சிந்தனையாளனாக - மனிதநேயப் பண்பாளனாக - அத்தனைக்கும் மேலாகத் தலைச்சிறந்த குடும்பத்தலைவனாக கம்பீரமாகப் பவனிவந்தவர் புலவர்மணி அவர்கள்.
“நிமிர்ந்த நடை மெலிந்த உடல் நீள்உருவம் வெள்ளாடை
கனிந்தவிழி உயர;நெற்றி கம்பீரமான குரல்
எவரிடமும் கெஞ்சாமை எதுவரினும் அஞ்சாமை
புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை இவராகும்”
முதலில் அவரது கம்பீரமான அழகிய உருவத்தை மனக்கண்ணில் பதியவிடுவதால், அவரைப்பற்றி அறியாத பலர் அறிந்து கொள்ளவும் அறிந்து கொண்டவர்கள் மீண்டும் அவரை நினைத்துப் பார்க்கவும் என் போன்றவர்கள் அவரது நனவிடை தோயவும் வாய்ப்பாக அமையுமென நம்பலாம். பின்வரும் பிரிவுகளில் இக்கட்டுரையினை முன்னெடுப்பதன் மூலம், அவரது தனிமனித வியாபகம் பற்றியும் இலக்கிய ஆளுமை பற்றியும் கூடவே ஒன்றியிருந்த மனிதநேயப் பண்பாட்டு விழுமியங்கள் பற்றியும் முடிந்தவரை வெளிக்கொணரமுடியும். அந்த வகையில்,
1. புலவர்மணியின் வாழ்வும் சிறப்பும்
2. புலவர்மணியின் தமிழ்ப் பணிகள்
3. புலவர்மணியின் சமூக சமயப் பங்களிப்புகள்
4. புலவர்மணிபற்றிய இன்றைய காலக்கணிப்பு
என அவை அமையும்.
1. புலவர்மணியின் வாழ்வும் சிறப்பும்
புலவர்மணி தனது பிறப்புப் பற்றிக் கூறுவதை அவர் எழுத்துக்களிலே நாமும் பதிவு செய்யலாம்.
“நான் எனது தாய்நாட்டுக்கு வெளியிலிருந்து கொண்டு இதனை எழுதுகிறேன். எனது தாய்நாடு சின்மயமான பரமாத்மபதம். அது வானுலகுக்கு அப்பாலுள்ளது. அது இராப்பகலற்ற இடம். நான் அங்கிருந்து 1899ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று சகுனப் பிரம்மமாகிய குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் கடவைச் சீட்டும் வாசகால அனுமதிப் பத்திரமும்பெற்று மண்ணுலகமாகிய இந்த வெளிநாட்டுக்கு அறிவுச் சுற்றுலாவின்பொருட்டு வந்துள்ளேன். இந்த மண்ணுலகம் எனது சொந்த நாடன்று. கடவைச் சீட்டு எனது உடம்பு. அனுமதிப் பத்திரம் எனது ஆயுட்காலம்”
அவரது உள்ளதும் நல்லதும் கட்டுரைகளின் முதல் கட்டுரையின் தொடக்கமேயிது.
செந்தூர்த் தமிழ்பாட செவ்வேள் நடமாடும்தில்லைப் பதி மண்டூர். இப்பழம்பதியே புலவர்மணியைப் பெற்றெடுத்துப் பெருமை கொண்ட திருப்பதி. ஆங்கே திருப்படைக் கோவிலாகவும், தேசத்துக் கோவிலாகவும் தமிழர்தம் பண்பாட்டு வழிபாட்டியலின் மரபுரிமையையும், வழக்காறுகளையும் இன்றும் நிலைநிறுத்தி நிற்பது மண்டூர் கந்தசுவாமி ஆலயம். அங்கு ஒரு நீண்டகாலம் வண்ணக்கராகப் பணியாற்றியவர் ஏகாம்பரப்பிள்ளை அவர்கள். அவரது மூத்த புதல்வரே புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை. இவரது தாயார் சின்னத்தங்கம் அம்மையார். அவரது தந்தையாரும் அவ்வாலய வண்ணக்கராகப் பெரும்பணியாற்றியவர். ஆக, புலவர்மணியின் தந்தையாரும் பாட்டனாரும் அப்பிரதேசத்தில் தனிச்சிறப்பும் பெரும் செல்வாக்கும் பெற்றிருந்தவர்கள் என்பது இதனால் புலப்படவே செய்யும்.
புலவர்மணி அவர்கள் தனது ஐந்தாம் வகுப்புவரை மண்டூர் வெஸ்லியன் மிசன் பாடசாலையில் பயின்றபின் குருகுல வாசம், அவரது இல்லத்தின் ஒரு புறத்திலேயே ஆரம்பமானது. யாழ்ப்பாணம் புலோலி சந்திரசேகரம் உபாத்தியாயரே அவரது குருகுலத்தின் முதல் குரு. அங்கே திருச்செந்தூர்ப் புராணம், நிகண்டு, சூடாமணி, இராமாயணம், மகாபாரதம், கந்தப்புராணம் போன்றவற்றைப் புலவர்மணி கற்றுத் தேர்ந்தார். இதில் திருச்செந்தூர்ப் புராணத்தை அவர் விரும்பிக் கற்றார். அதற்கு ஒரு காரணம் இருந்தது. கந்தசஷ்டி விரதக் காலத்தில் மட்டக்களப்புப் பிரதேசமெங்கும் கந்தப் புராணமே படிப்பது வழக்கம். ஆனால், மண்டூரில் மாத்திரம் திருச்செந்தூர்ப் புராணமே படித்துப் பயன் சொல்லப்படும். தனது குழந்தைப் பருவம் முதல் திருச்செந்தூர்ப் புராணத்தில் ஊறித் திளைத்தவர் புலவர்மணி அவர்கள்.
இந்தச் சூழ்நிலையில் அவரது 12வது வயதில் தனது அன்புத் தாயாரை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு புலவர்மணி ஆளானார். தாயாரின் பிரிவு அவருக்குப் பேரிழப்பாகவே அமைந்தது. புலவர்மணியின் பள்ளிக்காலம் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலமாக அமைந்ததால் மிசனறிப் பாடசாலைகள் ஆங்கிலக் கல்விக்கே முன்னுரிமை அளித்தன. ஐந்தாம் வகுப்புவரை தன்னுடன் மண்டூர் வெஸ்லியன் மிசன் பாடசாலையில் பயின்றவர்கள் கல்முனை வெஸ்லியன் மிசன் பாடசாலையில் இணைந்து ஆங்கில மொழிமூலம் கல்வியை மேற்கொண்டபோது, தான் தனது வீட்டிலேயே முடங்கியிருந்து தமிழைப் பயின்று கொண்டிருந்தது உள்ளூர அவருக்கு ஒரு வேதனையாகவே இருந்திருக்க வேண்டும். எனினும், தனது 14வது வயதில் அந்த வாய்ப்பு கிடைத்தபோது அவரது எண்ணம் ஓரளவு நிறைவேறலானது.
கல்முனையில் அவரது முதல் ஆசானாக வாய்த்தவர் அன்று மயில்வாகனாக இருந்த சுவாமி விபுலானந்தருக்கு கல்விபோதித்த குஞ்சித்தம்பி ஆசிரியர். அதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக வந்து நற்பணியாற்றிய கல்விமான் சேதுகாவலரிடம் ஆங்கிலம் பயிலும் வாய்ப்பும் புலவர்மணிக்குக் கிடைத்தது. இதே காலத்தில், அப்பாடசாலையின் தமிழாசிரியர் வராத சூழ்நிலையில் ஏழு, எட்டு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் போதிக்கும் சின்ன வாத்தியாராகவும் புலவர்மணி செயல்பட்டார். இது அவரது தமிழ்ப்பணியில் முதல்பணியாகவும் அமைந்தது.
புலவர்மணியின் 17வது வயதில் சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க நாட்டு சீடர்களில் ஒருவரான அவபாமியா அம்மையாரின் தொடர்பும் கிட்டியது. அவர் இங்கு வந்தபோது அவருடன் இணைந்து பல இடங்களில் இந்துமதப் பிரசரங்களில் ஈடுபடலானார் அத்துடன் பல இந்துமதப் பெரியார்களின் தொடர்பினையும் அவர் பெற்றுக் கொண்டார்.
புலவர்மணியின் 18வது வயது அவருக்கு ஒரு திருப்புமுனையென்றே கூறவேண்டும். அதன்போது அவர் மட்டுவில் தம்பிமுத்துப்பிள்ளை என்பவரது உதவியுடன் பண்டிதர் மகாலிங்க சிவத்தின் அறிமுகத்தில் நாவலர் உபகார நிதியத்தின்கீழ் வண்ணார்பண்ணையிலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் தனது தமிழ்க் கல்வியை தொடரும் வாய்ப்பைப் பெற்றார். யாழ்ப்பாணம் வந்துற்றபோது அவரை இன்முகத்துடன் வரவேற்றவர் நமது பண்டிதர் மயில்வாகனனார் என்ற சுவாமி விபுலானந்தர். இதுகுறித்து புலவர்மணி தனது உள்ளதும் நல்லதும் கட்டுரையில் குறிப்பிடும்போது, ‘யாழ்ப்பாணத்தில் வைத்து என்மீது அரும்பிய பண்டிதர் மயில்வாகனனாரின் அன்பு அவர் துறவியான பின்னர் அருளாக மலர்ந்துள்ளதை நினைந்து நினைந்து உள்ளம் உருகி நிற்கிறேன்’எனக் கூறுகின்றார். சைவப் பிரகாச வித்தியாலயத்தில் புலவர்மணியுடன் ஒன்றாக இணைந்து கல்வி பயின்றவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். அன்றுமுதல் வாழ்வின் இறுதிவரை நட்பில் இறுக்கம்கொண்ட தோழர்கள். ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் இவர்கள்.
தனக்கு யாழ் மண்ணில் பேருதவியாக விளங்கிய பண்டிதர் மகாலிங்க சிவத்தையும் இறுதிவரை புலவர்மணி நினைவுகூரவே செய்தார். பண்டிதர் மகாலிங்கசிவம் இவ்வுலக வாழ்வை நீத்தபோது அவர் உளமுருகிப் பாடிய பதினைந்து பாடல்களும் அதற்குச் சான்று பகரும்.
“மட்டுவிலாம் பூங்கொடியில் மலர்ந்தமலர் சாதிமலர் மலர்கள்தாழ
மட்டவிழ்ந்து மணம்கமழ்ந்து வயங்குமலர் மாணவராய் வண்டுசூழ்ந்து
தொட்டருந்தும் இனியமலர் மகாலிங்க சிவமலர்தன் தொடர்பாம்பாசக்
கட்டறுத்துக் கருணைமலர் சிவபெருமான் கழல்மலர்க்கீழ் கலந்ததன்றே!”
அதிலொன்று இப்பாடல்.
மேலும், இங்கு வாழ்ந்த காலத்தில்தான் புலவர்மணிக்கு சுவாமி விபுலாநந்தரின் தொடர்பில் விவேகானந்த சபையின் நெருக்கமும் யோகர்சுவாமி போன்றவர்களின் பழக்கமும் கிடைக்கப் பெறுவதாயிற்று. கூடவே, அடிக்கடி அங்கு இடம்பெறும் விபுலானந்தரின் சொற்பொழிவு நிகழ்வின் தொகுப்பாளராகவும் புலவர்மணி செயல்படலானார். இதுவே, பின்னாளில் புலவர்மணி தலைச்சிறந்த சொற்பொழிவாளராக விளங்க அவருக்கு வழியமைத்துக் கொடுத்தது எனலாம். அங்கு தனது படிப்பை முடித்துக்கொண்ட புலவர்மணி சிறிது காலம் நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை சைவ வித்தியாசாலையிலும் அதன் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றலானார். இதன்போது அவர் அங்குள்ள இந்து வாலிபர் சங்கத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தார். இச்சூழலில் அங்கு நிகழ்ந்த முக்கிய சம்பவமொன்றினையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாக அமையும்.
புலவர்மணி சாவகச்சேரியில் தங்கியிருந்தவேளையில் ஆறுமுகம் என்ற பெரியாரும் அப்பாத்துரையென்ற அவரது மகனும் அடிக்கடி அவரைச் சந்திக்க வருவார்கள். அவர்கள் அங்கு தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்கள். பெரியார் ஆறுமுகம் நல்ல தமிழறிஞர். சிறந்த பண்பாளர். இசை வல்லுனரும்கூட. அதேபோல் அப்பாத்துரையும் கல்வியறிவுடைய சிறந்த இசைவாணர். அவர்களோடு உரையாடி மகிழ்வது புலவர்மணிக்கு மிகமிகப் பிடிக்கும். புலவர்மணி அவர்களுடன் பிரியமாகப் பழகுவது அங்குள்ள இந்துக் கனவான்களுக்கு அறவேப் பிடிக்கவில்லை. அவர்கள் புலவர்மணியை கடும் வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள். இது புலவர்மணியின் நெஞ்சில் எரிதணலாய் தொடர்ந்து கனன்று கொண்டேயிருந்தது. அவர் தனது 24வது வயதில் கிறிஸ்தவத்தைத் தழுவ முக்கிய கால்கோளாயும் இது அமைந்துவிட்டது. பெரியார் ஆறுமுகம் காலமானதும் அவர் மனமுருகிப் பாடிய பத்து அஞ்சலி வெண்பாக்களும் நெஞ்சைவிட்டகலாதவை.
“ஒழுக்கத் துயர்குலமாம் ஓங்குபுக ழுண்டாம்
இழுக்கத் திழிகுலமா மென்றே - விழுப்பத்து
நூற்குலத்தை யெல்லாம் நுணிகியறிந் தாறுமுகன்
மேற்குலத்த னானான் விரைந்து”
உண்மையில் சொல்லப்போனால் தனது மட்டக்களப்பு மண் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதான ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதில் அவர் என்றும் பெருமிதம் கொண்டவராகவேயிருந்தார். அவரது இப்பாடல்மூலம் இதனை நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
“கோயிலிலும் பள்ளிக் குளங்களிலும் நீர்பெருகிப்
பாயும் நதியில் வயற் பண்ணையிலும் - போயொருங்கோர்
தாய்வயிற்றுப் பிள்ளைகள்போல் சார்ந்துசம மாயெவரும்
நேயமுடன் வாழும் நிறைநாடு - தூயமனச்
சிட்டர் புகழும் திருநாடு செந்தமிழ் வாழ்
மட்டக் களப்பென்னும் மாநாடு”
என்பதே அப்பாடல்.
அதன்பின்னர் தனது 24ஆம் வயதின் பிற்பகுதியில் கிறிஸ்தவன் என்ற அடையாளத்துடன் அதிலே மேலும் பயிற்சியினைப் பெறுவதற்காக, தமிழ்நாட்டின் மதுரையை அண்மித்த பசுமலைக்கு புலவர்மணி சென்றார். அவர் அங்கு வாழ்ந்த ஒரு குறுகிய காலத்துள் கிறிஸ்தவ மதத்திற்கு அளப்பரிய சேவையினைப் புரிந்தவராகவே கணிப்பிடப்படுகின்றார். அவர் அங்கு நிகழ்த்திய கிறிஸ்தவமத உரைகள் சார்ந்த வெளியீடுகள் எழுதிய கட்டுரைகள் இன்றும் அங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளமையைப் பார்க்கின்றோம். இந்தச் சூழ்நிலையில் நமது முத்தமிழ்மாமுனிவர் சுவாமி விபுலானந்த அடிகளார் மதுரையில் மங்கம்மாள் சத்திரத்தில் தங்கியிருக்கும் செய்தி புலவர்மணிக்கு கிடைக்கின்றது. அச்சேதிகேட்டு சுவாமியைச் சந்திக்கப் புலவர்மணி விரைகின்றார். இது தொடர்பாக அவர் என்ன சொல்கின்றார் பார்ப்போம்.
‘எனது நிலை காந்தத்தை நோக்கிய இரும்பு போலாயிற்று. மதுரைக்கு விரைகின்றேன். மங்கம்மாள் சத்திரத்தில் அடிகளாரின் அறைவாயிலை அணுகி முகத்தைக் காட்டிக் கொண்டு அமைதியாக நின்ற என்னைக் கண்டதும் விரைந்து வந்து இரும்பைக் காந்தம் இழுப்பதைப்போல அவர் இறுக என்னைத் தழுவிக் கொண்டார். இரண்டு நிமிடம் ஒரு பேச்சும் இல்லை. பரமகம்சர் கைபட்ட நரேந்திரர் போல் ஆகிவிட்டேன் நான். பரிசதீட்சை கிடைத்துவிட்டது. இனிநான் வேறுமனிதன்’
“சங்கத் தமிழ்மதுரைச் சத்திரத்தில் வைத்தெம்மை
அங்கு வசமாக்கி அருள்செய்தே - தங்கியெம்
புத்தி புகுந்த விபுலானந்தர்”
என அவர் போற்றும் சுவாமிகளின் உள்ளக் கமலத்தைப் பற்றிய தன்மையில் அவரால் மீண்டும் ஆட்கொள்ளப்பட்டு அடிகளாரின் அறிவுரையினை ஏற்று நாடு திரும்புகின்றார் புலவர்மணி. அப்போது அவருக்கு வயது 26. தான் கிறிஸ்தவத்திலிருந்து மீண்டும் சைவத்திற்கு வந்த நிகழ்வை நாவுக்கரசர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மீண்ட சம்பவத்தோடு புலவர்மணி ஒப்பிடுவார்.
1935 முதல் அவரது நாட்டம் முழுக்க முழுக்க அரசியல் பக்கமே சாய்ந்தது. அதனைத் தொடர்ந்து சிலகாலம் மண்டூர் உபதபால் அதிபராகவும் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணியாற்றலானார். அதன் பின்னர் மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பெரும்பணியாற்றிய நல்லையா அவர்களது வேண்டுதலால் 1947 முதல் ‘கிழக்கின் சாந்தி நிகேதனம்’ என புலவர்மணி குறிப்பிடும் மட்டக்களப்பு அரசினர் கல்லூரியின் தமிழாசானாகப் பொறுப்பேற்றார். 1959 பெப்ரவரி 15ல் அவர் ஓய்வு பெறும் வரை அவரது ஆசிரியப்பணி இங்கு நீடித்தது. தொடர்ந்தும் ஓய்வொழிச்சலின்றி நற்பணியாற்றிய புலவர்மணி அவர்கள் 1978 நவம்பர் 2ல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
2. புலவர்மணியின் தமிழ்ப்பணி
பொதுவாகப் பார்க்குமிடத்து புலவர்மணியின் தமிழ்ப்பணி தனியாக ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். எனினும் எடுத்துக் கொண்ட தலைப்பு ஒரு மீள்பார்வையாக அமைவதால் சில முக்கியத் தகவல்களை மாத்திரம் இங்கு பதிவு செய்யலாம். புலவர்மணி தனது இளமைக்காலம் முதல்கொண்டே பண்டிதர் என்ற பட்டத்தோடு பவனி வந்தவர். கல்முனை வெஸ்லியன் மிசன் பாடசாலையில் பயின்று கொண்டே தன்னோடொத்த மாணவர்களுக்குத் தமிழ் போதித்த ஆசான் அவர். இப்பணியானது அவரது 60 வயதுவரை நீடித்திருக்கின்றது. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு எனப் பரவலாக அவரிடம் தமிழ் பயின்ற நூற்றுக்கணக்கானவர்கள் பின்னாளில் உன்னத நிலையை எட்டியிருக்கின்றார்கள். தனது ஆசிரியப் பணியோடு புலவர்மணி தமிழ்ப் பண்டிதர் வகுப்புக்களையும் நடாத்தியுள்ளார். இன்னும் பலர் அவரிடம் தனியாக தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்று உயர்ந்துள்ளனர்.
புலவர்மணி ஒரு தலைச்சிறந்த மரபுக் கவிஞர். அவர் புதுமையை விரும்பினாரெனினும் அது மரபைக் கட்டுடைத்துச் செல்வதை அவர் ஏற்றுக்கொண்டவரல்ல. இயற்கையாக ஊற்றெடுக்கும் கவித்துவத்தை அதற்கான இலக்கண மரபால் வளம்செய்ய வேண்டுமென்பதில் புலவர்மணி உறுதியாக நின்றவர். வளம்பெறாத கவியூற்று வற்றிப் போகும் என்பதும் அது நிச்சயம் நிலைத்து வாழாது என்பதும் அவர் முடிவாகவிருந்தது.
“மக்கள் நடைக்கு வரம்புண் டதுபோல
மக்கள் கவிக்கும் வரம்புண்டு - மக்கள்
வரம்பு கடந்தால் மதியார் கவியும்
வரம்பு கடந்தால் வழு”
இது புலவர்மணியின் நம்பிக்கை. அவர் எழுதிய ஆசிரியப்பா, விருத்தப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, அகவற்பா மற்றும் சந்தப் பாடல்கள், இசைப் பாடல்கள், கீர்த்தனைகள் அனைத்துமே காலத்தால் அழியாதவை. பள்ளிக்காலத்தில் பாடநூலில் இடம்பெற்று நாம் பாடிமகிழ்ந்த ‘இலங்கை மணித்திரு நாடெங்கள் நாடே - இந்த இனிய உணர்ச்சிபெற்றால் இன்ப வீடே’ போன்ற பாடல்கள் இன்றும் நினைவில் நிற்பவை.
1944ல் சுவாமி விபுலானந்தர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் அவர் நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மீட்சிவேண்டி புலவர்மணியால் உடனடியாக எழுதி அனுப்பப்பட்ட மீட்சிப் பத்தின் பத்துப்பாடல்களும் நெஞ்சத்தை நெகிழச்செய்பவை என்றே கூறவேண்டும்.
“காரே றுந்திரு மூதூர்த் தாய்தரு கடவுட் காதல்மகன்
கருவிற் திருவுள கலைஞன் பெற்றோர் கண்ணிறை திருமயிலோன்
ஏரே றும்படி கீழ்ப்பால் மேல்பா லாக்கிநல் லிசைநட்டோன்
இமயத் தலையிற் தமிழ்முத் திரைவரை ஈழக் கரிகாலன்
சீரே றுந்தமி ழறிவர்க் காங்கில நூற்சுவை இனிதூட்டித்
தெருட்டும் புதுமைக் கபிலன் கலியுக தெய்வ அகத்தியனாம்
பாரே றும்புக ழாளன் மீள்கெனக் கூவாய் பைங்குயிலே
பன்மொழி விபுலா னந்தன் வாழ்கெனக் கூவாய் பைங்குயிலே”
என வரும் சொற்சுவை, பொருட்சுவை அனைத்தும் பல்கிப் பெருக்கெடுக்கும் பத்துப் பாடல்களையும் படிக்கும் எவரும் அக்கவித்துவ மேதையை நெஞ்சாரப் போற்றவே செய்வர்.
புலவர்மணியின் நெஞ்சைத்தொடும் பல கவிதைகள் அவரது சமூகக் கோபம், அதை வெளிப்படுத்தும் பாங்கில் கையாளும் நியாயமான எள்ளல், அங்கத உத்திகள், இயல்பான நகைச்சுவை. பண்பட்டுக் கைவந்த படைப்புக் கலைநயம், சொற்களின் நளினம் என்பவற்றின் வெளிப்பாடாகவேயுள்ளன. சமூக நச்சுக் கோடுகளுக்கு மூல ஆதாரங்களாக முகம் மறைத்து வாழும் சமூகத்தின் மேல்மட்டத்தினராகத் தங்களை இனம் காட்டிக் கொள்பவர்களை அவர் மறைமுகமாகச் சாடுகின்ற தன்மையினை அவரது உற்ற நண்பர் ஆறுமுகத்தின் மறைவின் போது அவரால் எழுதப்பட்ட பத்து வெண்பாக்களும் சான்று பகர்வதைக்காணலாம்.
புலவர்மணி ஒரு தலைசிறந்த படைப்பிலக்கியவாதி. தனது அந்திமக் காலம் வரை தொடர்ந்தும் எழுதிக் கொண்டேயிருந்தவர். அவரது படைப்புக்களில் பதினேழு நூலுருப் பெற்றுள்ளன. அவற்றில் பகவத்கீதை வெண்பா, புலவர்மணி கவிதைகள், உள்ளதும் நல்லதும், பாலைக்கலி, புலவர்மணி கட்டுரைகள், விபுலானந்தர் மீட்சிப்பத்து போன்ற இலக்கியங்கள் என்றுமே நின்று நிலைப்பவை. பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத கருவூலங்கள்.
புலவர்மணி ஈழத்துப் பத்திரிகைகளில் பல சிறப்பான கட்டுரைகளைப் பல்துறை சார்ந்தும் எழுதியுள்ளார். அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகள் மிக்கத் தரம் வாய்ந்தவையாக ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளமை மனம் கொள்ளத்தக்கது. புலவர்மணி எவ்வாறு ஒரு தலைச்சிறந்த மரபுக் கவிஞராகப் போற்றப்படுகின்றாரோ, அவ்வாறே சிறந்த உரைநடை வல்லோனாகவும் போற்றப்படுகின்றார். அவரது எழுத்துக்கள் எளிமையும் இனிமையும் கொண்டவை. படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டுபவை. புலவர்மணி சிந்தாமணி ஞாயிறு இதழில் தொடராக எழுதி நூலுருப்பெற்ற ‘உள்ளதும் நல்லதும்’ கட்டுரைத் தொடர் இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.
புலவர்மணி மிகச் சிறந்த சொற்பொழிவாளராக வலம் வந்தவர். ஈழத்திலும் தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான மேடைகளைக் கண்டவர். இலக்கிய நிகழ்வானாலும், சமயக் கூட்டங்களானாலும் அரசியல் மேடைகளானாலும், பொது நிகழ்வுகளானாலும் புலவர்மணியின் உரையினைக் கேட்கப் பலரும் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஒலிபெருக்கி தளர்ந்தாலும் சபை ஓய்ந்தடங்கும் தன்மையில் அவரது சிம்மக்குரல் அனைவரையும் கட்டிவைக்கும். இலங்கை கலைக்கழகம், இலங்கை வானொலி கல்வி ஒலிபரப்பு ஆலோசனைச் சபை, அரசகருமமொழித் திணைக்கள ஆலோசனைச் சபை போன்றவற்றின் உறுப்பினராக அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகள் காலத்தால் அழியாதவை. அவரை அடையாளப்படுத்துகின்ற புலவர்மணிப் பட்டம், அவரது தாயகமான மட்டக்களப்பின் தமிழ்க்கலை மன்றத்தின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் கவிராசகேசரி பண்டிதர் ஆ. சபாபதி அவர்களால் 1951ல் வழங்கப்பட்டதாகும். இதனைப் புலவர்மணி மனதாரவிரும்பி ஏற்றுக்கொண்டார். அவரது மறைவுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு இலக்கிய வித்தகர் மற்றும் இலக்கிய கலாநிதிப் பட்டங்களையளித்து அவரது தமிழ்ப் பணியைக் கௌரவித்துள்ளன. இந்து கலாசார அமைச்சும் இலக்கியச் செம்மல் என்ற சிறப்பினை அவருக்கு வழங்கிப் பெருமை கொண்டது.
3. புலவர்மணியின் சமூக சமயப் பணிகள்
புலவர்மணியின் தமிழ்ப்பணி எவ்வாறு வியந்து போற்றத்தக்கதோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அவரது சமூக சமயப் பணிகளும் சமநிலைப்பட்டனவாகவேயுள்ளன. அவரது புரட்சிகர எண்ணங்களும் தூரநோக்கும் அனைவரையும் சமநிலையில் வைத்துப் பார்க்கும் மனிதாபிமான சிந்தனையும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத அவரது உயரிய மனப்பக்குவமுமே அவரை ஒரு சிறந்த நடுநிலையாளனாக மக்கள் மத்தியில் உலாவவிட்டது. மகாகவி பாரதிக்குப் பிடித்த ‘சிறுமைகண்டு பொங்கும்’ மனோநிலை புலவர்மணிக்கும் கூடவேயிருந்தது.
எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் சமூகச் சூழ்நிலையும் மனச்சாட்சியுள்ளவனுக்கு ஒரு சவாலாகவே அமைந்து விடுகின்றது. காரணத்தைப் புரிந்து கொள்வது இதில் மிகமிகக் கடினம். நாட்டின் அரசியல் அமைப்புகள்கூட சில வழிகளிலோ அன்றேல் பல வழிகளிலோ குறைபாடுகளைக் கொண்டவையாகத்தானிருக்கின்றன. சமூக அமைப்புகளும் பொதுவாக அத்தன்மையினதே. ஒரு மனிதன் என்றைக்குமே ஓர் அரசியல் இலட்சியத்தை அல்லது சமூக இலட்சியத்தை முன்னிறுத்திச் செயல்படுவதால் அதனைச் சென்றடைவது அவனுக்கு ஒரு பாரிய சவாலாகவே அமைந்து விடுகின்றது. இந்தச் சூழ்நிலையில்தான் புலவர்மணி தனது சமூகச் சமயப் பணிகளை முன்னெடுக்கின்றார். அவர் எந்த ஒரு காலகட்டத்திலும் தன்னை எழுவாய்க்கேங்கிய பயனிலையாக நிலைநிறுத்திக் கொண்டவரல்ல. வாழ்வில் கேள்விக்குறிகள் தோன்றும் போதெல்லாம் அவற்றை கால் மாத்திரையாகவோ, அரைமாத்திரையாகவோ மாற்றிக் கொண்டு ஒரு நம்பிக்கையின் தூண்டுதலின் பேரில் வாழ்ந்து அதில் சாதனை படைத்தவர் புலவர்மணி.
புலவர்மணி தனது சிறுபராயம் முதலே நமது ஆலயங்களின் நடைமுறைகளினால் மிகுந்த உள்மனப் போராட்டங்களில் சிக்கியவர். அடக்குமுறையும் சாதீயமும் ஏற்றத் தாழ்வும் நிருவாகக் குளறுபடிகளும் தமிழினத்தின் சாபத்தீடாயிருப்பது கண்டு மிகுந்த கொதிப்புற்றவர். ஒருவரையொருவர் சுரண்டிப் பிழைக்கும் அடுக்காத செயலை அடியோடு வெறுத்தவர். அவரது சமூக சமயப் பணிகளில் இவையே மையம்கொண்டிருப்பதை அவரது செயலும் பேச்சும் எழுத்தும் முழுமையாகவே வெளிப்படுத்தியிருக்கின்றன. எனினும், இப்பேற்பட்ட கொடுமைகளைச் சமூகத்திலிருந்து நீக்குவதற்கு அவர் வன்முறைகளைப் பரிகாரமாக்க அடியோடு விரும்பியவரல்ல. மாறாகப் பிரச்சனைகளை நிதானமாக அணுகி அவற்றிற்குப் பரிகாரம் தேடும் முயற்சியே புலவர்மணியின் செயல்பாடாக இருந்திருக்கின்றது. இப்பிரதேசத்தில் சில ஆலயங்களிலிருந்த நிருவாகப் பிரச்சனைகள், சமூக ஒதுக்கல்கள், மேலாதிக்கப் போக்கு என்பவற்றை அரசின் விசாரணைக்குழு உறுப்பினராகவிருந்து தனியொரு மனிதனாகச் செயல்பட்டு அவற்றைத் தீர்த்து வைத்திருக்கும் விதம் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாகும். இவ்வாறாகப் பதினொரு விசாரணைக் குழுக்களில் புலவர்மணியின் முழுமையான பங்களிப்பு இருந்திருக்கின்றது.
புலவர்மணி 1970ல் இந்து சமய விவகார ஆலோசனைச் சபையின் உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்டிருந்தார். அதன் போது அவர் ஆற்றிய பணிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. உதாரணமாக, புத்த ஜயந்தியை இலங்கையின் அனைத்து இந்து நிறுவனங்களும் கொண்டாட வேண்டுமென அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை அன்றைய சிறிமாவோ அரசின் சார்பாளர்களாகவிருந்த பல உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டபோது அதனைத் தடுக்கப் புலவர்மணி முன் வைத்த கருத்துக்கள் காலம்தோறும் மனம் கொள்ளத்தக்கவை.
“ஒரு சமயத்தை இன்னொரு சமயம் கௌரவிப்பது மிகவும் அவசியமானது. ஆனால், அது சுதந்திரம்மிக்க செயல்பாடாக அமையவேண்டும். பௌத்த நிறுவனங்கள் இவ்வேண்டுகோளை விடுத்திருந்தால் அன்புப் பணிப்பாக ஏற்று நாம் இதனைக் கொண்டாடலாம். இதனை அரசாங்கம் விடுத்திருப்பது அதிகாரப் பணிப்பாகும். பௌத்தத்தின் மீது நான் வைத்திருக்கின்ற பெருமதிப்பினால் சொல்கின்றேன். இவ்வேண்டுகோளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது” எவ்வளவு பண்பாக தனது கருத்தினை புலவர்மணி இங்கு முன்வைக்கின்றார் பாருங்கள்.
1974ல் புலவர்மணி தன்னோடொத்த சில சீர்திருத்தவாதிகளை இணைத்துக்ககொண்டு ஆலய நடைமுறைகளைச் செம்மைப்படுத்தும் நோக்கில் ‘இந்து அறநிலய நிதிநிருவாகச் சட்டம்’ எனும் பெயரில் ஒரு புதிய சட்டவாக்கத்தை கலாசார அமைச்சின் ஊடாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டார். சட்ட வல்லுனர்களைக்கொண்டு நகல் சட்டம் தயாரிக்கப்பட்ட நிலையில் தங்களை இந்து மதத்தின் தலைவர்களாக இனம் காட்டிக்கொண்ட சில கொழும்புக் கனவான்கள் அந்த நகல் சட்டத்தை அமைச்சர் குலதிலகாவுக்கு செல்லவிடாது தடுத்து விட்டனர். இச்செயலானது புலவர்மணியின் வாழ்வில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
புலவர்மணி கிறிஸ்தவராக வாழ்ந்த ஒரு சில வருடங்கள் தன்னால் முடிந்த பங்களிப்பினை அம்மதத்திற்கு செய்திருக்கின்றார். குறிப்பாக, தமிழ்நாட்டின் பசுமலை வேதசாஸ்திரப் பாடசாலையில் அவர் பயின்ற காலத்தில் கிறிஸ்தவ அறிஞர்களே பாராட்டத்தக்க வகையில் பல முக்கிய இடங்களுக்குச் சென்று கிறிஸ்தவ மதப்பிரசங்கங்களை நிகழ்த்தியிருக்கின்றார். அங்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் உயர்வாகக் கருதப்பட்ட மேலைத்தேய நடைமுறைகளைப் போக்கவும் அவர்களிடையே நிலவிய சாதீயத்தைக் களையவும் அங்கு அவர் பெருமுயற்சியினை மேற்கொண்டிருக்கின்றார். அவரால் எழுதப்பட்ட ‘கிறிஸ்தவ திருஅவதார கீதங்கள்’, ‘கிறிஸ்தவ சபைத் துயிலுணர்ச்சி’ போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டினையும் அதன் சமூக ஒருமைப்பாட்டினையும் கிறிஸ்தவ மதத்துள் நிலைநிறுத்தும் தன்மைமிக்கவை என்றே குறிப்பிடலாம்.
புலவர்மணி கிறிஸ்தவத்தைப் போன்றே இஸ்லாம் மதத்தையும் முஸ்லிம் மக்களையும் வெகுவாக நேசித்தவர். இந்துக்களும் முஸ்லிம்களும் என்றுமே பிரிக்கப்படக்கூடாதவர்கள் என்பதில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். பல முஸ்லிம் தலைவர்களும் கல்விமான்களும் அவருக்கு உற்ற நண்பர்களாக விளங்கினர். புலவர்மணி பல இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளிலும் கலாசார நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்திருக்கின்றார். கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு தொடர்ந்து நிலைபெற வேண்டுமென்பதில் அவர் மிக்க ஆர்வமுள்ளவராகவே விளங்கினார்.
“இருதயத்தின் ஈரிதழ்போல் இந்துமுஸ் லிம்யாம்
ஒருவயிற்றுப் பிள்ளைகள்போ லுள்ளோம் - அரசியலில்
பேராசை கொண்டோர் பிரித்துநமை வேறாக்கி
ஆராயார் செய்வார் அழிவு”
1956ல் மருதமுனையில் இடம்பெற்ற மாநாட்டில் அவர் தனது உரையினைத் தொடங்குமுன் முன்மொழிந்த இப்பாடல் சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவரது தீர்க்கதரிசனத்தை உணர்த்தி நிற்பதை இப்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றதல்லவா?
புலவர்மணியவர்கள் 20ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற சிந்தனையாளர். அவரது பல்துறை சார்ந்த சிறப்புக்கள் என்றுமே தனித்துவமானவை. அவரது சமூகப் பார்வையில் அவரது இளமைக்கால அனுபவங்கள் நிச்சயமாக அடித்தளமமைக்கும் வாய்ப்பினை அவருக்கு நல்கியிருக்க முடியும். மட்டக்களப்புப் பிரதேசத்தே நிலவிய இன சௌஜன்னியமும் சமூக ஒருமைப்பாடும் அவரது மனதில் ஆழப்பதிந்தவை. தமிழரும் முஸ்லிம்களும் உற்ற சகோதரராய் ஒட்டி உறவாடிய சமூகப் பின்னணியும் இலங்கையின் மூவின மக்களிடையேயும் நிலவிய நல்லுறவும் பின்புலமாயமைந்த தன்மையில் ‘இலங்கை மணித்திரு நாடெங்கள் நாடே’ என்ற பாடலை அப்போது அவரால் பாடமுடிந்தது. அவரது யாழ்ப்பாணம் மற்றும் தமிழக அனுபவங்கள் அவர் காணவிழைந்த சமரசம் மிக்க சமூகத்தளத்துள் கீறல்களை உண்டாக்கி ரணகளப்பட்டு நிற்பதை கண்டபின்னர் அதனைப் போக்கத் தன்னால் முடிந்தவரை அதில் ஈடுபாடு கொண்டுழைத்தார். அவரது வாழ்நாளில் அவர் மேற்கொண்ட பலதரப்பட்ட பணிகளுள் சமூகம் சார்ந்த பணிகள் என்றுமே புனிதமானவை - மனிதநேயம்மிக்கவை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள நம்மால் முடிகின்றது.
4. புலவர்மணி பற்றிய இன்றைய காலக்கணிப்பு
புலவர்மணி மண்ணுலக வாழ்வை நீத்து இன்று நாற்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் நாமிங்கு அவரை நினைவு கூருகின்றோமென்றால் அது எதனைக் காட்டுகின்றது. இது அவர் காலத்தின் குரலாகவும் காலத்தின் கொடையாகவும் நின்று நிலைப்பவர் என்றுதானே பொருளாகி நிற்கின்றது. உண்மையில் அவரது பணிகள் அனைத்துமே தூரநோக்கும் தீர்க்க தரிசனமும் மிக்கவையாகவே விளங்கியிருக்கின்றன. வாழும் போதே ஒரு வரமாகக் கிடைத்த அவர் பண்டிதர், புலவர்மணி, பாவேந்தர், சித்தாந்த ஞானபானு, மதுரகவி, கவியரசு, பன்மொழிச் சைவமணி என்றெல்லாம் பன்முக ஆளுமையின் சிறப்பைச் சேர்த்த பட்டங்கள் அவரது மறைவின் பின்னர் இலக்கிய கலாநிதி, இலக்கிய வித்தகர், இலக்கியச் செம்மல் என்ற பட்டங்களையும் இணைத்திருக்கின்றது. அத்தோடு இலங்கை அரசும் 22.05.1994ல் புலவர்மணி நினைவு முத்திரையினை வெளியிட்டு சிறப்பு சேர்த்துள்ளமையும், புலவர்மணியை தேசிய வீரராக அங்கீகரித்தமையும் வரலாற்றுப் பதிவாகவே அமையும்.
புலவர்மணி உண்மையில் சாமானியருள் சாமானியர். சாதனையாளர்களுள் சாதனையாளர். அவரது சாதனைகளும் உயர்வும் பிறர்தர வந்தவையல்ல. அவையனைத்தும் அவரது உன்னத உழைப்பினையும் விடாமுயற்சியினையும் உரமாக்கி உயிர்த்தவை. வேண்டுமானால் அவரது பொன்னுடல் நெருப்பில் கனன்று நீரில் கரைந்து போயிருக்கலாம். ஆனால் அவரது திருப்பங்கள் ஒவ்வொன்றும் நெருப்பில் நனைந்து நீரில் கனன்று வந்தவை. ஆதலினால்தான் இருபதாம் நுற்றாண்டின் இணையற்ற அந்த மகாகவி இருபத்தியோராம் நூற்றாண்டிலும் மாபெரும் மேதையாக வியாபித்து நிற்கின்றார். புலவர்மணி வரலாற்றில் இற்று விழுந்தவரல்ல. நமது தமிழ் மண்ணின் சொந்தக்காரன். என்றுமே பெயர்த்தெடுக்க முடியாத பெரும் குன்று. ஆதலினால் அவரது வரலாறு ஒருகாலும் முற்றுப்பெறப் போவதல்ல. அது காலமுள்ளவரை நிலைத்தேயிருக்கும். நாம் வாழும் காலத்திலேயே நமக்கு வரமாகக் கிடைத்த அவரை அறிவதும் உணர்வதும் நம்மோடொத்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் நாளைய நமது சந்ததியினருக்கும் வாழ்வில் பெருமிதமாகவே அமையும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.