கள்ளிக்காட்டு இதிகாசத்தில் சாதிய விதிகள்
முனைவர் பி. வித்யா
மதுரை - 625016
முன்னுரை
மனிதர்கள் ஒருவரோடொருவர் சேர்ந்து வாழும் இச்சமூக அமைப்பில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இவை சமூகக் குழுக்களுக்குத் தகுந்தவாறு மாறுபடலாம். ஆனால், பெரும்பான்மையும் அதிகாரமும் பெற்ற மனிதர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களை அடக்கி ஆளவும், அவர்கள் அவ்விதிகளை மீறினால் தண்டிக்கவுமான நடைமுறைகளைக் கைக்கொள்கின்றனர். அதிகாரத்திலுள்ளவர்களே பொதுச் சொத்துக்களை அனுபவிப்பதும்,பிறரை அனுபவிக்க விடாமல் விதிகளைக் கையாளுவதும் ஆன ஆளுகையினைப் பெற்றுள்ளார்கள். இத்தகுதன்மை மேலும் மெருகூட்டப்பட்டு வரும் சந்ததிகளும் அதைச் சரியென்று ஏற்றுக் கொள்ளுமாறும் செய்து விடுகின்றனர். அத்தகைய சாதிய விதிமுறைகள் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்திலும் இடம் பெற்றுள்ளன. அத்தகைய எழுதப்படாத சாதிய விதிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
சாதியவிதிகள்
கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்தில் சாதிய விதிகள் எவ்வாறு பேசப்பட்டுள்ளன என்று அறிவதற்கு,
1. பொதுக்கிணற்றைப் பயன்படுத்தத் தடை
2. கீழ்ச்சாதியினர் வீட்டில் உணவு உண்ணாமை
3. காதல் மறுப்பு
4. மேல் சாதியினருக்கான மரியாதை
என்பதாகப் பகுத்துக் கொண்டு காணலாம்.
பொதுக்கிணற்றைப் பயன்படுத்தத் தடை
ஊருக்குப் பொதுவாக உள்ள நீர்நிலைகளில் மக்கள் அனைவரும் நீர் எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், உயர்சாதியினர் பொது நீர்நிலைகளைச் சுதந்திரமாகப் பயன்படுத்துதலைப் போல் கீழ்ச்சாதியினர் எனக் கருதப்படுவோர் அந்நீர்நிலைகளை நினைத்த மாத்திரத்திலே பயன்படுத்தி விட முடியாதவாறு சாதிய விதிமுறைகள் முற்காலங்களில் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனையேக் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினமும் பதிவு செய்துள்ளது. பொதுக்கிணற்றில் நீரிறைக்க தாழ்ந்த சாதியினருக்கு உரிமை இல்லை என மறுத்தலை, “ஊருக்கெல்லாம் ஒரே ஒரு குடிதண்ணீர் கிணறு; பொதுக்கிணறு அதைப் பொதுக்கிணறுங்கிறது ஒரு பேச்சுக்குத்தானே தவிர அதுல ‘பாவப்பட்ட’ ரெண்டு மூணு சாதிக்காரவக மட்டும் தண்ணியெடுக்க முடியாது. தோல் தைக்கிற வீடு, சவரம் பண்ற வீடு, வெட்டியான் வீடு” (1) என்கிறார்.
மேலும், அவர்கள் கையால் அந்தத் தண்ணீரை இறைக்கவும் கூடாது என்கிற விதிமுறையும் பின்பற்றப்பட்டதனை, “பொம்பளைகள்ளாம் அந்த உருளையில சகட போட்டு இறைச்சுற முடியாது. தண்ணிக் கெணத்தோரமாக் கொடத்த வச்சுக் குத்தவச்சு ஒக்காந்திருப்பாக. தண்ணி எறைக்க வர்ற பொம்பளைகள்ள யாரோ ஒரு இரக்கமுள்ள மகராசி தன் குடத்த நிறைச்சுட்டு அவுக குடத்தையும் நிறைச்சுட்டுப் போவா. அன்னைக்கு அந்த மகராசி யாருங்கிறது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” (2) என்று மக்களின் நிலையைக் காட்டுகிறார்.
ஒருவேளை பொதுக்கிணற்றில் நீரிறைக்க முற்பட்டால் என்னவாகும் என்கிற கேள்விக்குப் பதிலாக, “முருகாயி வீட்டு ஆளுகளுக்கு ஒரு மாசம் தண்ணி ஊத்தாம ஊரே ஒதுக்கி வைக்கிறது” (3) என்று ஊர்ப் பெரியவர்கள் கூடிக் கிடைக்கிற கொஞ்சக் குடிதண்ணீரையும் கிடைக்க விடாமல் செய்வதனை மேற்சொன்ன கூற்றின் மூலம் அறியமுடிகிறது.
கீழ்ச்சாதியினர் வீட்டில் உணவு உண்ணாமை
கீழ்ச்சாதியினரைத் தீண்டுதலோ, அவர்களின் உடைமைகளைத் தொடுதலோ, அவர்களின் வாடை பட்ட காற்றைக் கூட தீட்டு என்று கருதும் நிலையில்,கீழ்ச்சாதியினர் வீட்டில் சமைத்த உணவினை மேல்ச்சாதியினர் உண்ணாமை என்பது எழுதப்படாத அதே நேரத்தில் எல்லோரும் பின்பற்றக்கூடிய விதியாக இருந்ததனை கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம் பதிவு செய்துள்ளது.
சாதிய விதிகளை மதிக்காத காதல் மனதோ நம் வீட்டில் காதலர் உணவுண்ண மாட்டாரா? நாம் பரிமாறமாட்டோமா? என்று ஏக்கத்தோடுதான் இருக்கிறது. இதனை,“அவுக நம்ம வீட்லயெல்லாம் சுக்குத் தண்ணி குடிப்பாகளா?’என்னாடா இது… அடுப்பாங்கரையிலிருந்து குயில் குஞ்சு கூவுது! ஆனா அவ கேட்ட கேள்வியில எகத்தாளத்த விட ஏக்கந்தான் தூக்கலா தெரிஞ்சுச்சு” (4) என்று காட்டுகிறார்.
சிறு வயதினனனாக இருந்த போதும், இத்தகைய நடைமுறைகள் மனதில் வேரூன்றி விட்டதால் கீழ்ச்சாதியினன் கொடுக்கும் உணவினை மேல்ச்சாதிச் சிறுவன் மறுக்கும் நிகழ்வினை, “மாசானம் கருப்பையா கொலுவிருக்கும் வேப்பமரக் கிளையில் ஒரு கிழிஞ்ச சீலைத்துணியில் கட்டி வைத்திருந்த அவிச்ச கல்லுப்பயறை அவிழ்த்த தொத்தன் அதிலிருந்து ஒரு கைகல்லுப்பயறு அள்ளி ஒரு பாதியை வாயில் போட்டு மென்று கொண்டு மறுபாதியை மொக்கராசிடம் நீட்ட அவனும் அதைத் தயங்கிக் தயங்கி வாங்கிக் கொண்டான்” (5) என் கையில் அச்சிறுவனுக்கு ஏற்பட்ட தயக்கம் இயல்பாக வந்தது அல்ல. சாதிய விதிமுறைகளின் அழுத்தத்தால் எழுந்தது என்பதனையும் அறிய முடிகிறது.
ஒரு வேளை இவ்விதியானது மீறப்பட்டால் என்னவாகும்? தாழ்த்தப்பட்டச் சாதியினர் மகிழ்ச்சி கொள்வர். காதலன் தன் வீட்டில் உணவுண்டால் தாழ்ந்த சாதிப் பெண்ணின் மனது சிறகு கொள்ளும் என்பதனை, “யாத்தே! நம்ம வீட்ல அவுக சாப்பிடுவாங்களான்னுதான் கேட்டோம். அது காடையச் சாப்பிட்டா என்னா… கருணைக்கெழங்கச் சாப்பிட்டா என்னா… சாப்பிட்டாக சந்தோசம்” (6) என்று அப்பெண் மகிழ்வதைக் காட்டுகிறார் வைரமுத்து.
காதல் மறுப்பு
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுப்பட்டது இன்பம் என்பர். காதலர் வாழ்வு காதல் கைகூடுவதில்தான் நிறைவு பெறுகிறது. ஆனாலும், சாதி மாற்றித் திருமணம் செய்வது ஒருபுறம் இருக்கட்டும் சாதி மாற்றி காதல் கொண்டாலே ஊரார் தூற்றுவதும், ஊராரின் தூற்றலுக்குப் பயந்தே அக்காதல் முளைவிடும் முன்பே அவிந்து போவதையும் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம் பதிவு செய்திருக்கிறது.
மேல்சாதியினரைக் காதல் செய்வதற்கு முடிவு செய்யும் முன்னேயே காதலைக் காதலரே அழித்துக் கொள்ள முற்படுவதனை, “குதிகால் இல்லாதவ கொலுசுக்கு ஏன் ஆசப்படுற? இந்த ஊர் ஒலகத்தப் பத்திப் தெரியாதா ஒனக்கு! கூனு குருடுன்னாலும் சொந்தச் சாதிக்காரியக் கல்யாணம் பண்ணுவாகளே தவிர மகாராணியா இருந்தாலும் மத்த சாதிக்காரியத் தொடுவாகளா?இது ஒனக்கே நல்லாருக்கா” (7) என தனக்குத்தானே தன் உள்ளத்தினைக் கட்டுப்படுத்த காதலி முனைவதனைக் காட்டுகிறார்.
இது தாழ்ந்த சாதி காதலியின் மனதை மட்டுமா பாதிக்கிறது? மேல் சாதிக் காதலானாலும் தாங்கிக் கொள்ள முடியாத் தடையாகவேத் தொடர்கிறது. இதனைக் காதலன் கதாப்பாத்திரத்தின் வழி, “முருகாயி மாதிரி மூக்கு முழியுமா ஒருத்தி இந்த எட்டூர்லயும் இல்ல; வாஸ்த்தவம்தான், ஆனா அவ சாதி என்ன? ஒஞ்சாதி என்ன? நாளப்பின்ன தாய்பிள்ளைக மதிக்குமா? தண்ணி கிண்ணி பொழங்க முடியுமா?அவளுக்கும் ஒணக்குமே ஒண்ணு ஆகிப் போச்சுன்னு வச்சுக்க ஒன் வீட்ல நல்லது பொல்லதுக்கு ஆள் வருமா?” (8) என்று மனம் நொந்து கொள்வதனைக் காட்டியிருக்கிறார்.
காதலர்களின் மனதில் காதலை விடவும்,காதலை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் இச்சமூகத்தின் ஆணிவேரால் வேரறுந்துப் போகிறது. அதோடு அது மனதில் துளிர் விடவே தயங்கும் நிலையினை வைரமுத்து, “மழைக்காச்சும் ஒன் வீட்ல மனுசன் ஒதுங்குவானா? மறந்துடுறா அவள! மானங்கெட்டப் பயலே” (9) என்று சமூகத்தின் மீதான பயமே மேலாவதைக் காண முடிகிறது.
பொதுக்கிணற்றில் நீரெடுக்க முடியாமல் சாதி குறுக்கிட முருகாயி என்கிற தன் காதலி தண்ணீருக்காகக் கால்கடுக்க, மனம் நொந்து காத்திருப்பதைத் தாங்காத காதலரான பேயத்தேவரின் மனம் சாதித் தளையினைத் தாண்டி அவளுக்கு உதவ முன்வருகிறது. இதனைத் தாங்க முடியாத சமூகப் பெரியவர்கள் அதற்குத் தண்டனை தரவே விழைகின்றனர். காதல் சாதியை மறுக்கும்,அழிக்கும் என்று அவர்களுக்குத் தெரியும் அதனாலேயே காலங்காலமாக காதலை அவர்கள் மறுத்து வந்துள்ளனர்.
இவ்வாறாகப் பெரியவர்கள் கூடி ஒரு முடிவெடுத்ததனை, “பெரியதேவரு மகன் பேயத்தேவன் பண்ணினது தப்புத்தான் இதுக்கு என்னடா பரிகாரம்ன்னு ஊர்ப்பஞ்சாயத்து கூடி யோசிச்சு தெகட்டலான தீர்ப்புச் சொல்லுச்சு. தீட்டுப்பட்ட கிணத்துத் தண்ணிய பேயத்தேவன் ஒரு துளி கூட இல்லாம ஒத்த ஆளா நின்னு எறைச்சுக் குடுத்திடறது” (10) என்று அதிதீவிரமான அதிரடியான முடிவெடுத்ததைக் காணமுடிகிறது.
இதோடு ஊரார் நின்று விடுவரா? ஏன்றால் இல்லை. அவர்களின் மனதில் தாம் சேரவே முடியாது என்று தோணும் வரை ஊரார் தூற்றிக்கொண்டே இருப்பர். இதனைக் காண, “ஏலே! வௌசாயம் பண்றவன்தானடா வெட்டருவா தீட்டணும்? வாஸ்தவமான பேச்சு பேயத்தேவனும் தீட்றான்? ஏன் பேயத்தேவன் வெட்டருவா தீட்டப்படாதா? வெட்டருவா தீட்றத விட்டுப்புட்டு, கத்திகித்தி தீட்டிப் பழகுனான்னா கல்யாணத்துக்குப் பெறகு கஞ்சி ஊத்தும் இல்லையா…” (11) என்று இடித்துரைப்பதிலிருந்து காதல் என்று வந்துவிட்டால் மேல்சாதியினனாக இருந்தாலும் அவனும் கீழ்ச்சாதிக்கே உரித்தானவன் ஆவான் எனக் காதல்உணர்வை மாற்றி சாதியுணர்வைத் தூண்டுவதைக் காண முடிகிறது.
மேல் சாதியினருக்கான மரியாதை
மேல்சாதியினருக்கு ஒரு சில மரியாதைகள் தரவேண்டும் என்பதும் கீழ்சாதியினர் அவர்களை அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதும் சாதிய விதியாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.மேல்சாதியினர் எப்படிப்பட்டவர்களாக இருந்த போதும் அவர்களை மரியாதை விகுதிகளால் அழைப்பது கீழ்ச்சாதியினருக்கு விதிக்கப்பட்டதாக உள்ளது.
இதற்கு ஒரு உதாரணப்பதிவினை வைரமுத்து, “ஒரு ஒக்காரமா ஒக்காரு சாமி… வெந்து முடிக்க எடுத்துக் குடுத்துடறேன் எலும்ப” (12) என்று மேல்சாதியினனான மொக்கராசினை எண்பது வயதினைத் தாண்டிய தொத்தன் மரியாதையாக அழைப்பதனைப் பதிவு செய்கிறார். அதே போன்று இருவரின் உரையாடல் புதினத்தில் இவ்வாறே மரியாதை விகுதியால் அழைப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுகருதத்தக்கது. “அது ஒண்ணும் இல்ல சாமி… நடக்கிறது தான் நடமொறயில உள்ளதுதான்” என்று குறிப்பிடுவது இதன் பொருட்டேயாகும். ஆனால் இந்நடைமுறைக்கு நேர்மாறாக ஒரு மேல்சாதி சிறுவன் கூட எவ்வளவு வயதான கீழ்ச்சாதியினரையும் மரியாதைக் குறைவாகப் பேசிவிட முடிகிறது. இதனை இயல்பான ஒன்றுதான் என்பதைப் போல உலகமும் ஏற்றுக்கொண்டு விடுவதைக் காணமுடிகிறது.
இதற்கு உதாரணமாக, ஐம்பது வயதைத் தொட்ட ஒருவரை பதினெட்டுவயது நிரம்பாத சிறுவன் எப்படி அழைப்பதாகப் பதிவு செய்கிறார் எனில், “வெள்ளையா கெடாமீச வக்கணும்” (14) என்று வெகு இயல்பாக எந்தவித சலனமுமின்றி அழைப்பதைக் காணமுடிகிறது. இதே போன்று தன் தாயினது வயதிருக்கும் ஒரு பெண்ணை மகள் வயது பெண்கள் அவள் இவள் என்று பேசுவதும், அதனைக் கீழ்ச்சாதி எனச் சொல்லப்பட்டோர் இயல்பாக ஏற்றுக் கொள்வதுமான நிலையை வைரமுத்து, “ஆக்குப்பாரைக்குள்ள அவளாப் போறதும் உப்பு, புளி, மொளகாய அவ வச்ச சட்டத்துக்கு எடுத்தாள்றதும் நொய்நொய்ன்னு அழுகிற பிள்ளைக்குப் பால் கேட்டா “ பொறுஆத்தா! ரசத்த எறக்கிட்டுப் பால் சுட வைக்கிறேன்னு வாய்தாப் போடறதும் கொஞ்சங் கூடப் புடிக்கல வாழாவெட்டியா வந்தவளுக்கு” (15) என்று பதிவு செய்கிறார்.
மேலும் அக்காள் தங்கை இருவரும் சேர்ந்தாலே தஞ்சம் என்று வந்த கீழ்ச்சாதிப் பெண்ணான முருகாயியை மரியாதையின்றிப் பேசுவதை,
“ஆத்தா செத்ததும் பொம்பள பொசுபொசுன்னு ஆயிட்டாள்ல?”
“ஆமா! ஆளில்லாத வீட்ல அவளா அள்ளித் திங்கறாள்ல”
“நேத்துப் பாத்ததுக்கு இன்னைக்கு நெறமா இருக்காள்ல?”
“கன்னத்துலயும் கழுத்துலயும் ஒரு புதுச்சதை போட்ருக்கு பாரு. என்னமோ போன சனிக்கிழமைதான் சடங்கான கொமரி மாதிரி” (16) என்று வார்த்தைகளால் வஞ்சிப்பதைப் பதிவு செய்கிறார்.
முடிவுரை
காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த சாதிய விதிகள் எங்ஙனம் கடைபிடிக்கப்பட்டன என்பதை, கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம் பதிவு செய்யும் அதே வேளையில் பொதுக்கிணற்றினைப் பயன்படுத்துதலிலும், கீழ்ச்சாதியினர் வீட்டில் உணவு உண்ணாதிருக்கின்ற பழக்கத்தையும் காதலானது தவிடுபொடி ஆக்குவதையும், அதனாலேயே காதல் அடுத்தவர்களின் தூற்றுதலுக்கு ஆளாகி, முளையிலேயே கிள்ளி எறியப்படுவதையும் பதிவு செய்கிறார்.
அதே போல எப்பொழுதும் கீழ்ச்சாதியினர் மேல்சாதியினருக்கு மரியாதை தரவேண்டும் என்பதைப் போல் விதிகள் படைக்கப்பட்டிருப்பதை இப்புதினம் பதிவு செய்கிறது. எது எப்படியிருப்பினும் சாதிய விதிகள் மறைய வேண்டுமானால் நல்ல காதல்கள் முகிழ்க்க வேண்டும் என்கிற தீர்வையும் இப்புதினம் தருகிறது எனலாம்.
அடிக்குறிப்புகள்
1. வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம், ப. 242
2. மேலது
3. மேலது, ப.243
4. மேலது, ப.241
5. மேலது, ப.179
6. மேலது, ப.242
7. மேலது, ப.236
8. மேலது, ப.234
9. மேலது
10. மேலது, ப.243
11. மேலது, ப.247
12. மேலது, ப.177
13. மேலது, ப.181
14. மேலது, ப.229
15. மேலது, ப.217
16. மேலது, ப.216
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.