இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வியலில் கருவேல மரங்கள்
முனைவர் இரா. பழனிச்சாமி
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி), பெரம்பலூர் - 621 220.
முன்னுரை
தமிழகத்தில் உள்ள மிகப் பின்தங்கிய மாவட்டங்களுள் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டம் வறட்சியாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவதாக இக்கருவேல மரங்களின் இருப்பும், வளர்ச்சியும் உள்ளன. இம்மரங்களைப் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுகள், இவை தீமை தரக்கூடியவை என்பதனைத் தொடர்ந்து கூறி வந்தாலும், இங்குள்ள மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வுச் சிந்தனைகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இம்மரங்கள் தங்களுக்கு நன்மைகளைத் தருவதாக இம்மக்கள் எண்ணுகின்றனர். எனவே இம்மரம் பற்றியும், அதனுடைய வரலாறு பற்றியும் அது அளிக்கும் நன்மை, தீமைகள் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமானதாகும். அவ்வகையில் இம்மரத்தின் பயன்பாடுகள் பற்றியும், இந்த மரம் இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வியலில் இடம் பெற்றிருப்பது பற்றியும் விளக்குவதாக இக்கட்டுரைஅமைகின்றது.
இராமநாதபுரம் மாவட்டம் அமைவும், சிறப்பும்
இம்மாவட்டம் பல்வேறு அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. “1063-ல் முதலாம் ராஜேந்திர சோழனின் கட்டுப்பாட்டில் சோழ சாம்ராஜ்யத்துடன் இணைந்து இருந்தது. அதன் பின்னர் 1520-ல் இருந்து நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் பாண்டிய நாட்டின் ஒரு பாளையமாகப் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மறவர்கள் படைத்தலைவர்களாக இருந்து இப்பகுதியை மேற்பார்வை செய்துள்ளனர்.” (1)
நாயக்க மன்னர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்ட இரகுநாதத் தேவர் என்னும் கிழவன் சேதுபதி மன்னரானார். 1730-ல் ஆற்காடு நவாப் சாந்தா சாகிப் ராமநாதபுரத்தைக் கைப்பற்றினார். 1741-ல் மராத்தியர்களிடமும் 1744-ல் நிஜாமின் கீழும் இருந்து வந்துள்ளது. இதன் பின் ராணி வேலுநாச்சியார் ஆட்சியதிகாரத்தில் இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, மருது சகோதரர்கள் சில காலம் ஆண்டனர். அவர்களை ஆங்கிலேயர் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு, கௌரி வல்லப பெரியஉடையத்தேவர் ஜமீன்தாராக நியமிக்கப்பட்டார். “1910-ல் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைப் பிரித்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் இம்மாவட்டத்தில் முதல் மாவட்ட ஆட்சியர் ஆவார்.” (2) இம்மாவட்டம் முகவை மாவட்டம் எனவும் வழங்கப்பட்டது. இம்மாவட்டத்தைப் பிரித்தே சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருவேல மரம் - வரலாறு
கருவேல மரம் சீமைக் கருவேல மரம் எனவும், நாட்டுக் கருவேல மரம் எனவும் வகைப்படுத்தப்படுகின்றது. “இதில் சீமைக் கருவேல மரம் என்பது நிலைத்திணை வகையைச் சார்ந்த பபேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது ஒரு நச்சு மரமாகும். தாவர அறிவியலில் ஆராய்ச்சி நிறுவனங்களால் ஆபத்தான தாவரம் என்று அறிவித்துத் தடை செய்யப்பட்ட இந்தத் தாவரத்தின் வேதிப்பெயர் “ப்ரொசொபிஸ் ஜூலி பிளோரா (prosopis juli flora) என்பதாகும்.” (3) இதனைத் தமிழில் சீமைக் கருவேலம், வேலிக் காத்தான், டெல்லி முள், காட்டுக் கருவேல், பெண்டன்முள், வேலிக் கருவல் என்று பல்வேறு வட்டாரப் பெயர்களும் இதற்குண்டு.
மெக்சிகோ, கரீபியன் தீவுகள், தென்அமெரிக்கா போன்ற நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த நச்சுமரம் நமது நாட்டின் வளமான பகுதிகளைச் சீரழிக்க சில அந்நிய சக்திகளால் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் இம்மரம் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.
சீமைக் கருவேல மரம், கருவேல மரம்
கருவேல மரமும், சீமைக்கருவேல மரமும் ஒன்றாகக் கூறப்பட்டாலும் இவை இரண்டும் வேறுவேறானவை. ஒருவரைப் போல மற்றொருவர் இருந்தால், அதுவும் அந்த மற்றொருவன் தனது மோசமான நடவடிக்கையால் மக்களைத் துன்புறச் செய்பவனாக இருந்தால் அதனுடைய விளைவுகள் எல்லாம் நல்லவனுக்கும் போகும். அதனால் அவனை எல்லோரும் திட்டுவார்கள். நான் அவனில்லை என்று சொன்னால் இன்னும் திட்டு அதிகம் கிடைக்கும். இவ்வாறான நிலை மனிதர்களுக்கு எப்படி ஏற்படுகின்றதோ, அதனைப் போன்று இயற்கையைக் காக்கும் மரம், செடி, கொடி போன்ற தாவரங்களுக்கும் உண்டு. அவ்வாறு பாதிப்பினைச் சந்திக்கும் ஒரு மரம்தான் கருவேல மரம்.
கருவேல மரம் தொன்மையான மரம் என்பதற்கு அதிகமான சான்றுகள் உள்ளன. பழமையான மருத்துவ நூல்களில் இது பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இதன் ஒரு சான்றாக, ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்னும் பழமொழி அமைகின்றது. இதில் குறிப்பிடப்படும் ஆல் என்பது ஆலமரத்தையும், வேல் என்பது கருவேல மரத்தையும் குறிப்பனவாகும்” (4) சிலர் வேல் என்பதனை வேம்பு எனப் பொருள் கண்டாலும் கருவேலம் என்பதுவே சரியான பொருளாகும். இம்மரத்தின் குச்சிகளை ஒடித்துப் பல் துலக்குவதனால் பல்லில் வரும் நோய்கள் குணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமைக் கருவேல மரம் என்பது பிசின் எடுக்கப் பயன்படும் மரமாக உள்ளது. இதனை ஆடுகள் மேயும். இதன் நெற்றுக்களை கால்நடைகள் விரும்பியுண்ணும். எனினும் இது ஆபத்தான மரமாகவே பார்க்கப்படுகின்றது.
சீமைக் கருவேல மரத்தின் தீமைகள்
இம்மரம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது. இது இயற்கைக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துக்களைக் கூறுகின்றனர். அவர்கள் கூறும் தீமைகளின் பட்டியலைக் கீழேக் காணலாம்.
1. இம்மரம் அதிக விஷத்தன்மை கொண்டதாகும்.
2. இம்மரத்தின் வேர்கள் ஆழமாகச் சென்று நீரை உறிஞ்சிவிடுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு, வறட்சி ஏற்படக் காரணமாகின்றது.
3. இம்மரத்தின் எப்பகுதியும் பயன்படுவதில்லை. இதன் இலை, காய், பழம் என எதுவும் மக்களுக்கு உதவாது. இதோடு காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருப்பதால் இது பாதிப்பினை மிகுதியாக்குகின்றது.
4. நிலத்தடி நீரை விஷமாக மாற்றுவதோடு இல்லாமல் மண்ணின் வளத்தை முற்றிலுமாகச் சீரழித்துவிடும். இது வளர்ந்த இடத்தில் எதையுமே பயிரிட முடியாது. விவசாய நிலங்களை ஆக்ரமித்து விவசாயத்தைக் கெடுக்கிறது.
5. இம்மரத்தில் கால்நடைகளைக் கட்டிவைத்தால் அவை மலடாக மாறும். அதனுடைய கன்றுகள் ஊனமாய் பிறக்கும் என்றும் கூறப்படுகின்றது.
நன்மைகள்
1. இது விஷச்செடி என்று கூறப்பட்டாலும் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி எந்தவிதமான ஆதாரங்களுமில்லை. அதேபோன்று இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் நம்பும்படியான தகவல்கள் இல்லை.
2. இம்மரத்தினால் வறட்சி ஏற்படுகின்றது என்று கூறப்படும் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் உவர்மண் நிலங்களை இம்மரங்கள் வளமாக ஆக்கியுள்ளன என்று கூறப்படுகின்றது.
3. ஏழை மக்களின் எரிசக்தியாக இம்மரம் பயன்படுகின்றது. கிராமங்களில் இன்றும் அடுப்பெரிக்கப் பயன்படும் முக்கியமான பொருளாக இது இருக்கின்றது.
4. இம்மரத்தின் நெத்து (காய்) ஆடு மாடுகளுக்கு உணவாகப் பயன்படுகின்றது. இதில் ப்ரோடின் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் கால்நடைகள் நன்றாக வளர்வதாகக் கூறப்படுகின்றது.
5. இம்மரங்களின் கட்டைகள் வீட்டின் நிலையாகவும், சாளரக் கட்டைகளாகவும் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகின்றது. மேலும் விவசாயக் கலப்பை செய்யப் பயன்படும் மேழியாக இம்மரம் அதிகம் பயன்பட்டது என்பதனைக் களஆய்வில் தெரிந்து கொள்ள முடிந்தது.
6. இம்மரம் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகின்றது. இம்மரத்தினை எரித்து உண்டாகும் வெப்பத்தினால் இம்மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. இத்தகு மின்னாலை இம்மாவட்டத்தின் “வழுதூர்” என்னும் ஊரிலும், பரமக்குடிக்கு அருகில் “பாம்பூர்“ என்னும் ஊரிலும் நிறுவப்பட்டுள்ளன.
7. கால்நடைகளுக்கு இயற்கை மருந்தாக இம்மரத்தின் பாகங்கள் பயன்படுகின்றன.
8. ஏழைகளின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் மரமாக இது உள்ளது.
மக்களின் வாழ்வியலில் இம்மரங்களின் பங்களிப்பு
இராமநாதபுர மாவட்ட மக்கள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகள் ஏதுமில்லாததால் வேலைவாய்ப்பின்மை நிறைந்துள்ளது. அதிலிருந்து ஓரளவு மீட்கும் மரமாக இது உள்ளது. இம்மரத்தை வெட்டி விறவாகவும், சுட்டுக் கரியாகவும் அனுப்புவதன் மூலம் இங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பினையும், பொருளாதாரப் பலத்தையும் பெருக்குகின்றனர்.
இம்மரங்கள் இம்மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் வாழிடம் அருகே இருக்கும். எனவே அதனை நிழலாகவும், கால்நடைகளைக் கட்டிப்போடும் இடமாகவும் பயன்படுத்துவதனைக் காணமுடிகின்றது.
முடிவுரை
கருவேல மரங்கள் இருவகைப்பட்டதாக உள்ளதை அறிய முடிகின்றது. இம்மரங்கள் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடையதாக உள்ளது. இம்மக்களின் பொருளாதாரத்தில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. பண்பாட்டு அடிப்படையில் இம்மக்களின் மனநிலை மாற்றங்களுக்குக் காரணமாகவும் இம்மரம் திகழ்வதைக் காண முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
1. இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள், எஸ்.எம்.கமால் மற்றும் நா. முகமது செரீபு, லெனின் சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், பரமக்குடி -623707. ஜூன்’ 1984 (ப.5)
2. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் - இணைய முகவரி: https://ramanathapuram.nic.in/ta/
3. தமிழ் விக்கிப்பீடியா - கருவேலம் கட்டுரை - https://ta.wikipedia.org/s/8sb
4. வெப்துனியா இணையதளத்தில் “ஆலமரத்தின் முக்கியத்துவம் செய்தி” - http://tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/ஆலமரத்தின்-முக்கியத்துவம்-111011400038_1.htm
துணை நின்றவை
1. தமிழக மாவட்ட நூல் வரிசை: இராமநாதபுரம் மாவட்டம், ஆக்கியோர்: மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு, பதிப்பாசிரியர்: லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 4, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600017. (1987)
2. இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுக் குறிப்புகள், எஸ்.எம்.கமால் மற்றும் நா. முகமது செரீபு, லெனின் சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், பரமக்குடி -623707. ஜூன்’ 1984
3. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும் முனைவர் கு. க. கவிதா அவர்களது ‘கருவேலம்’ கட்டுரை - http://www.tamilvu.org/tdb/titles_cont/environmental/html/babul.htm
4. “இன்றைய வேளாண்மை....!” வலைப்பூவில் ‘கருவேல மரம்’ குறித்த தகவல் - http://ramesh52500.blogspot.com/2012/05/blog-post_26.html
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.