‘மீரா’வின் ஊசிகள் எனும் புதுக்கவிதை தொகுப்பில் நகைச்சுவை
முனைவர் கோ. தர்மராஜ்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை..
முன்னுரை
மனித சமூகம் அறிவியலில் எவ்வளவோ சாதனை புரிந்து முன்னேற்றம் கண்டிருக்கலாம். ஏன் நிலவில் கூடக் காலடி வைத்திருக்கலாம். ஆனாலும், அடிப்படையான மனித உணர்வு என்பது, என்றென்றும் நகைச்சுவையுடன் மனதில் ஒட்டி உறவாடிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட நகைச்சுவையைப் பற்றி மகாத்மா காந்தியடிகள் கூறும் போது, நகைச்சுவை இல்லை என்றால் வாழ்க்கையில் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று ஒருமுறை கூறினார். தனி மனித வாழ்வில் மட்டுமின்றி வாழ்வின் படப்பிடிப்பான இலக்கியத்திலும், நகைச்சுவைக்கு முக்கியமான, முதன்மையான ஓர் இடமுண்டு. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் எண் வகைச் சுவைகளைப் பட்டியலிடும் போது, நகைச்சுவைக்கு முதல் இடம் தந்து, எள்ளல், இளமை, பேதைமை, மடம் என்ற நான்கின் அடிப்படையில் நகைச்சுவை பிறக்கும் என்பது தொல்காப்பியர் கருத்து. வான்புகழ் வள்ளுவரோ ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என என்றென்றும் தேவைப்படும் வாழ்வியல் அறத்திணை உரைப்பார். இனி இக்கருத்துக்களின் வழியில் மீராவின் ‘ஊசிகள்’ எனும் புதுக்கவிதையில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவை உணர்வைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மீரா - அறிமுகம்
மீரா (மீ.ராசேந்திரன் 1938-2002) கவிதையைச் சுவைப்பவர்களின் நெஞ்சில் இன்பத் தேனைப் பாய்ச்சுபவர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தமக்கென ஒரு தனியிடத்தினைத் தேடிக் கொண்ட ஆளுமைக்குச் சொந்தக்காரர். மதுரையில் உள்ள ‘தீந்தமிழ்த் தியாகராசர் கல்லூரி’ உருவாக்கிய கவிதைப் பரம்பரையின் முன்வரிசையில் மீராவுக்கு ஓர் இடமுண்டு. அவரது மரபுக் கவிதைகளின் தொகுதி ‘இராசேந்திரன் கவிதைகள்’ (1965). ‘மூன்றும் ஆறும்’ (1965) என்பது மீரா பல்வேறு கவியரங்குகளில் பாடிய கவிதைகளின் தொகுப்பு. தமிழ்க்கவிதை உலகில் மீராவைப் பரவலாக அறியச் செய்த படைப்பு ‘கனவுகள் - கற்பனைகள் - காகிதங்கள்’. அங்கதக் கவிதை பாடுவதில் வல்லவர் மீரா என்பதற்குக் கூறும் தொகுப்பு ‘ஊசிகள்’ (1974). ஈழத்து மஹாகவியின் குறும்பாக்களை அடியொற்றி மீரா படைத்துத் தந்திருக்கும் கவிதை நூல்’ குக்கூ’ (2002). கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு முன்பாக ‘ஜீனியர் விகடன்’ இதழில் வாரந்தோறும் குறுங்கட்டுரை எழுதும் மரபினைத் தொடங்கி வைத்த பெருமையும் மீராவுக்கு உண்டு.
“வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
வேகப் படித்திவிடு தாயே!” (மீரா கவிதைகள், ப.159)
என்ற கவிதையில் மீராவின் எழுதுகோல் படைத்துத் தந்திருக்கும் வைர வரிகள் பலவாகும். இனி ஒரு நகைச்சுவையாளர் என்ற நோக்கில் மீராவின் ‘ஊசிகள்’ கவிதையில் அமைந்திருக்கும் நகைச்சுவையை அலசிப் பார்ப்போம்.
வேகம்
நகைச்சுவையின் பரிமாணங்களுள் முதன்மையானது அங்கதம். தொல்காப்பியர் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என அங்கத்தின் இருவகைகளைச் சுட்டுவார். “ஒருவனுடைய குறையையோ ஒரு சமூகத்தினர் குறையையோ, அன்னார் நெஞ்சில் உறுத்தும் வண்ணம் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் கூறுதல் அங்கதமாகும். அங்ஙனங்கூறுங்கால், நகைச்சுவை தோன்றக் கூறுதல் இன்புறத்தக்கதொன்றாகும்” (உரைநடைக்கோவை, இரண்டாம் பாகம், ப.75) என அங்கதத்திற்கு பண்டிதமணி மு. கதிரேசனார் விளக்கம் தருவார். ‘தமிழ் அங்கதக் கவிதைகளின் தொகுப்பு’ என்னும் சிறப்புக் குறிப்புடன் 1974 ஆம் ஆண்டில் வெளிவந்த மீராவின் கவிதைப் படைப்பு ‘ஊசிகள்’ ஆகும். இதில் ‘வேகம்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல் கவிதையில் வருமாறு,
“எங்கள் ஊர் எம்.எல்.ஏ.
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
கட்டி இருப்பார்... ... ...
என்ன தேசம்
இந்தத் தேசம்?” (ஊசிகள், ப.13)
எனும் புதுக்கவிதையில் நமது அரசியல்வாதிகள் வேகம் காட்டுவது நாட்டை முன்னேற்றுவதில் அல்ல, வறுமையை ஓட ஓட விரட்டுவதில் அல்ல, தொகுதியை வளப்படுத்துவதில் அல்ல. அவர்கள் கட்சி விட்டுக் கட்சி தாவுவதில்தான் வேகம் காட்டுகிறார்கள். அதுவும் ஏழு மாதத்தில் எட்டுத்தடவை மின்னல் வேகத்தில் கட்சி மாறுகிறார்கள். இன்னும் கூடுதலாகக் கட்சிகள் இருந்திருந்தால் அவர்கள் இன்னும் வேகம் காட்டியிருப்பார்கள். ‘என்ன தேசம் இந்தத் தேசம்?’ என்னும் நகைச்சுவையுடன் நிறைவு செய்துள்ளார். கூர்மையான சமூக விமர்சனப் பார்வை படைத்தவர் மீரா. ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ என்பார்கள். அதுபோல இன்றைய சமூக நடப்பினை, சம கால மனிதனின் போக்கினை நகைச்சுவையுடன் குத்திக் காட்டுவதன் வழியாக அவரின் தனித்தன்மையை உணரமுடிகின்றது.
சுரண்டல்
அன்று, அடிமையாக இருந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டில் பல்வேறு பொருட்களைச் சுரண்டிச் சென்றனர். இன்று, சுதந்திரம் அடைந்தும் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற தொடர் பணியை அமைச்சர் பதவியில் உள்ளவர்களும், இழந்தவர்களும் சுரண்டுகின்றனர். அவற்றை,
“ஆரா வமுதன்
அமைச்சர் பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஓர் இரவில்
அருகில் தூங்கிய
ஆசை மனைவியை
சும்மா சும்மா
சுரண்ட லானார்;
அம்மா கேட்டார்
ஆத்திரத்தில்:
“ஏன்தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப் பழக்கம்
போக வில்லையோ?” (ஊசிகள், ப.19)
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ எனும் பழமொழிக்கேற்ப ஆராவமுதன் அமைச்சர் பதவியில் இருந்தபோது சுரண்டுவதைப் போன்று, பதவியை இழந்தும் இரவில் தூங்கிய மனைவியை சும்மா சும்மா சுரண்டினார். இந்தப் பொல்லாத பழக்கம் இன்னும் உங்களை விட்டுப் போகவில்லையே என நகைச்சுவையுடன் படைத்திருப்பதைக் காணமுடிகின்றது.
காதலோ காதல்
அஃறிணை உயிர்களும், உயர்திணை உயிர்களும் யாருக்கும் அடங்காமல் சமூகத்தில் அலைந்து திரிந்தாலும் ‘காதல்’ என்ற அன்பிற்கு மட்டும் அடங்கிவிடும். அப்படிப்பட்ட காதலை இலக்கணங்களும், இலக்கியங்களும் உயர்வாகப் போற்றித் துதித்தாலும், தற்காலத்தில் காதலின் மதிப்பு கத்தரிக்காயை விட மோசமாக உள்ளன என்பதை,
“ ‘காதல் என்ன கத்தரிக்காயா’
என்ற தொடர்கதை
இரவில் எழுதிய
வாணி மணாளன்
பகலில்
வாரச்சந்தையில்
கிலோ விலை ரூபாய்
இரண்டெனக் கேட்டதும்
அயர்ந்தார்; கண்களை
அகலத் திறந்தார்... ... ...
காய்கறிக் காரன்
கடுப்பில் கேட்டான்
‘அத்தனை மலிவாய்
அள்ளிக் கொள்ள
கத்தரிக்காய் என்ன
காதலா... ... ... ?” (ஊசிகள்,ப.18)
என்ற கவிதையில் வாணிமணாளன் இரவில் ‘காதல் என்ன கத்தரிக்காயா’ என்ற தொடர்கதையை எழுதி விட்டு, பகலில் வாரச்சந்தையில் கத்தரிக்காய் கிலோ இரண்டு ரூபாய் என்றதும் அதிர்ச்சியடைந்தான். உடனே காய்கறிக்காரன் கடுப்பில் அவ்வளவு மலிவாக அள்ளிக் கொள்ள கத்தரிக்காய் என்ன காதலா? என நகைச்சுவையாக தற்காலத்தில் நிகழும் காதலின் போக்கைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டி (பாட்டி) மன்றம்
மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த மனிதர்களிடையே இறந்த பிணத்தை எரிப்பதா, புதைப்பதா என்ற சந்தேகத்தில் மூழ்கியவர்களுக்கு நாசுக்காக குத்திக் காமிக்கிறார். இவற்றை,
“பாட்டி செத்த
பத்தாம் வினாடி
பெரிய குழப்பம்
பிணத்தை
எரிப்பதா புதைப்பதா என்று...
உள்ளுர்ப் புலவர் ஓடிவந்தார்
பட்டி மன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று”(ஊசிகள், ப.21)
என்ற கவிதை வரியில் உணரலாம்.
எச்சரித்தல்
‘தொடாதே அபாயம்’ என மின்சாரத்தைத் தொட வரும் மனிதனுக்கு எச்சரிக்கை விடுவார்கள். அதுபோல பட்டணத்து விலைமகளிரைத் தொட வரும் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுவதைக் காணலாம். அதனை,
“எச்சரிப் பதிலே
எங்கள் பட்டணப்
பெண்கள் நல்லவர்... ...
பெரிதும் நல்லவர்!
தொலைவில் வருவோர்
விலகிச் சென்றிட
உதட்டில் சாயம்
ஒளிவிட வருவார்...
உபாயம் தெரிந்தவர்
உடனே தப்பலாம்;
அபாயம் அருகே
வராதீர் என்றே
எச்சரிப்பதிலே
எங்கள் பட்டணப்
பெண்கள் நல்லவர்...
பெரிதும் நல்லவர்” (ஊசிகள், ப.36)
என்ற கவிதையில் உதட்டில் சாயத்தைப் பூசிக்கொண்டு பல குடும்பங்களின் ஆண்களைக் கவர்ந்து பணத்தைக் கையாடும் பட்டணத்துப் பெண்கள் எச்சரிப்பதில் நல்லவர் என கிண்டலாக நகைச்சுவையுடன் உணர்த்தியுள்ளார்.
தமிழன் கண்டுபிடிப்பு
மேலை நாட்டு அறிவியலாளர்கள், அறிவியலை ஆராய்ந்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்தாலும், அறிவியல் தொலைநோக்குப் பார்வையுடன் இளந்தமிழன் எதார்த்தக் கண்டுபிடிப்பினைக் கண்டுபிடித்துள்ளான்.
“ஆர்க்கிமிடீஸ் முதல்
ஐன்ஸ்டீன் வரை
இங்கு
ஆயிரம் ஆயிரமாக
அந்நியர்
கண்டு பிடிப்புக்
கணக்கைப் பெருக்கினர்...
“கடன்
அன்பை முறிக்கும்”
என்றே உருப்படியாக ஒன்றைக்
கண்டு பிடிக்க
யாரால் முடிந்தது
எங்கள்
இளந்தமிழனைத் தவிர” (ஊசிகள், ப.42)
பல ஆயிரம் கண்டுபிடிப்பு மேல்நாட்டினர் கண்டுபிடித்தாலும், ‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற சிந்தனையை இளந்தமிழன் தான் கண்டறிந்தான் என எதார்த்த நகைச்சுவையுடன் பதிவு செய்துள்ளதைக் காணலாம்.
அவமானம்
பாரத இந்தியாவில் தொடக்கத்தில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என ஓரிரு கட்சிகள் மட்டுமே இருந்தன. இன்றைக்கு மாவட்டத்திற்கொன்று, தாலுகாவிற்கொன்று, பஞ்சாயத்திற்கொன்று, வீதிக்கொன்று என கட்சிகள் பன்றிகள் குட்டியிடுவதைப்போல், பெருகிக்கொண்டு வருவதைச் சுட்டியுள்ளார். அதை,
“பாரதச் செல்வனும்
அந்நியச் சிறுவனும்
தத்தம்
தேசப்பெருமை
பேசலானார்
எங்கள் நாட்டில்
நாய்கள் பற்பல
குட்டிகள் போடும்...”
“எங்கள் நாட்டில்
மட்டும் என்னவாம்?”
“எங்கள் நாட்டில்
பன்றிகள் பற்பல
குட்டிகள் போடும்... ...”
“ஆச்சரியம் இதில்
என்னவாம்... ...”
அங்கும் அப்படியே!!”
“எங்கள் நாட்டில்
கட்சிகள் பற்பல
குட்டிகள் போடும்... ...”
அந்நியச் சிறுவன்
அமைதியாகத்
தலையைக் கீழே
தொங்கப் போட்டான்” (ஊசிகள், பக்.58-59)
நாய்களும், பன்றிகளும் குட்டிகளைப் போடுவது போல நாட்டில் கட்சிகளும் பற்பல குட்டிகளைப் போடுகின்றன என நகைச்சுவையாக குத்திக்காட்டியிருக்கும் பாங்கு சிந்தனைக்குரியதாகும்.
முடிவுரை
* அரசியல் மோகம் பிடித்த அரசியல்வாதிகள் குரங்கைப் போன்று, கட்சி விட்டு கட்சி தாவும் இழிசெயலினைக் காணமுடிகின்றது.
* சுதந்திரம் அடைந்த இந்தியாவில் இன்னும் தமிழ் அந்நியர் நாட்டைச் சுரண்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது புலப்படுகிறது.
* நாட்டில் உண்மையான காதலர்கள் இல்லாத காரணத்தால் ‘காதல்’ கத்தரிக்காயை விட மோசமாக இருப்பதை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.
* பட்டணத்து விலைமகளிரை குத்தலாக எச்சரிக்கை செய்துள்ள பாங்கு போற்றுதற்குரியது.
* நாட்டில் கட்சிகள் பற்பல குட்டிகள் போடுவதை அஃறினை உயிர்களுக்குப் பொருத்தி நகைச்சுவையுடன் படைத்துள்ளதைக் காணலாம்.
* கிழிந்த சமூகத்தைத் தைப்பதர்க்காகவே ‘ஊசிகள்’ எனும் புதுக்கவிதையைப் படைத்துள்ள படைப்பாளரின் சிந்தனைப் பாராட்டிற்குரியதாகும்.
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|