நாம் இப்போது இருபத்து ஒன்றாவது நூற்றாண்டில் இருக்கிறோம். அணு ஆயுதச் சோதனையைச் செய்து இந்தியா உலக வளர்ச்சியில் தனது அறிவியல் பூர்வமான பங்களிப்பைச் செய்து வளர்ந்து வந்திருக்கிறது. உலகின் கம்ப்யூட்டர் வளர்ச்சியிலும் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு அவசியத் தேவையாகி விட்டது என்று வளர்ந்து விட்ட நாடுகள் தெரிவித்த கருத்துக்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம்தான். இன்னும் அறிவியல் வளர்ச்சியில் நாம் எத்தனையோ காண இருக்கிறோம்.
இந்நிலையில் எதிர்கால இந்தியா எப்படி இருக்கப் போகிறது? தலை நரைத்துப் போய்விட்ட நாம் எதிர்கால தலைமுறைக்கு என்ன சொல்லப் போகிறோம்? எடுத்துரைப்பதும், எச்சரிப்பதும் நம் கடமை. நம் தவறுகளுக்கான பிராயச்சித்தத்தை நமக்கும் சேர்த்து அவர்களைச் செயல்படுத்தக் கேட்டுக் கொள்ள வேண்டியதே நம் ஒரே வழி. வேறு வழி...?
ஆதிமனிதன் இடியைக் கண்டு திகைத்தான். சூறாவளியைக் கண்டு மிரண்டான். பாய்ந்து வந்த நீரும், பற்றி எரிந்த நெருப்பும் அவனுள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தின. அச்சம் அவனை நிதானப்படுத்தியது, ஆசுவாசப்படுத்தியது. நிலநடுக்கத்தை, எரிமலையை, நீரை, நெருப்பை, இடியை, ஆகாயத்தை அவன் வணங்கத் துவங்கினான். நீரைக் "கங்கா" என்றான், நெருப்பை "அக்கினி" என்றான், நிலத்தைப் "பூமாதேவி" என்றான், மழையை "வருணன்" என்றான். இப்படி இயற்கையைக் கண்டு அச்சமடைந்தவன் அதை "இறைவன்" என்று சொல்லி வணங்க முற்பட்டான். இயற்கையும் இறைவனும் அவனுக்கு ஒன்றாகப் பட்டது. அவன் வணங்கிய இயற்கை அவனை வாழ வைத்த பொழுது வரம் என்றான். அழிக்க முற்பட்ட பொழுது சாபம் என்றான். வரமும் சாபமும் அவனால் சரிசமமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மெய்ஞானம் வளர்ந்தது. இயற்கையின் தாலாட்டில் எங்கும் அமைதி நிலவியது. ஆன்மீகம் ஆட்சி செய்யத் துவங்கியது.
நூற்றாண்டுகள் கடந்து கொண்டிருக்க, மனிதனின் ஆறாவது அறிவு அதிகமாக வேலை செய்யத் துவங்கியது. அறிவு அவனைக் குழப்பியது. குழப்பம் தெளியத் தெளிய விஞ்ஞானம் வளர்ந்தது. இயற்கையோடு இணைந்து அதைத் தெய்வமாக வணங்கி வாழ்ந்தவன் இயற்கையைக் கட்டுப்படுத்த முற்பட்டான். மனித வாழ்வை வளப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவன் துவங்கிய முயற்சிகள் இன்று மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான போரட்டங்களாகி விட்டன. கை கோர்த்து வாழ்ந்தவர்கள் கைகலக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.
வெள்ளத்தைத் தடுக்கவும், தண்ணீர் தேவைக்காகவும் அணைகளைக் கட்டினான். அந்த அணையில் மரங்கள் மூழ்கின. வனங்கள் அழிய, அங்கிருந்த விலங்குகளும் அழியத் துவங்கின. அணையிலிருந்த நீர் வயலில் பாய்ந்தது, விஞ்ஞானம் உழுதது. விளைச்சலை அதிகரிக்க, பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தான். பூச்சியோடு அழகான புள்ளினங்களும் அழியத் துவங்கியது. மரங்களை வெட்டினான், காகிதங்களும் பல சாதனங்களும் செய்தான். மலைகளைத் தகர்த்தான், சாலைகளும், பாலங்களும் அமைத்தான். வசதியான வாழ்க்கைக்காக வாகனங்கள் கண்டான். தொழிற்சாலைகள் உருவாக்கினான். அனைத்தையும் விஞ்ஞானப் புரட்சி என்றான்.
புரட்சியால் புவி புகை மண்டலமாகியது. இயற்கைக்கு மூச்சு திணறியது. மனிதன் அதன் கையில் விலங்கு மாட்ட முயற்சித்தான். அதை அடிமையாக்க முயன்றான். தான் அனைத்தும் அறிந்தவன் என்றான். சூரியனை நேருக்கு நேராகப் பார்த்தான்.
அழிவு காலம் துவங்கியது. ஓசோனில் ஓட்டை என்றனர். காரணம் க்ளோரா ( OFC ) ப்ளூரோ கார்பன் ( CFC) என்றனர். ஆஸ்திரேலியாவில் சருமப் புற்று நோய் பரவியது. அமெரிக்கா, மெக்சிகோவில் வனங்கள் தானாகவேத் தீப்பற்றி எரியத் துவங்கியது. விஞ்ஞானமும், அதன் கண்டுபிடிப்புகளும் அதைத் தடுக்க படாத பாடுபட்டுப் போய் விட்டன. ஜெர்மனியில் வெள்ளம் வந்த போதும், ஜப்பானில் எரிமலை வாய்திறந்து எதிர்ப்பைத் தெரிவித்த போதும், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுனாமி எனும் கடலின் ஆழிப்பேரலைத் தாக்குதலையும் விஞ்ஞானத்தால் தடுக்க முடியவில்லை. ஆப்பிக்காவில் பஞ்சம் வந்த போது விஞ்ஞானம் பதுங்கிக் கொண்டு விட்டது.
உதவி என்றனர், விஞ்ஞானம் ஓடோடி வந்தது. நெருப்பிற்குக் காரணம் சொன்னது. நிலநடுக்கத்தை அளந்து சொன்னது. காரணம் அணைகள் என்றது. பஞ்சத்திற்கு மழை இல்லாததே காரணம் என்றது. உள்நாட்டுப் போர் என்றது. தடுக்க வழி கேட்ட போது அனுபவி என்றது. விஞ்ஞானம் அவனைக் கை கழுவியது. ஆனால் மனித நேயம் மட்டும் உதவிக்கு வந்தது.
விஞ்ஞானத்தால் எதையும் செய்ய முடியும் என்று நம்பியவன் சிந்தித்தான். மீண்டும், மீண்டும் சிந்தித்தான். அவனுடைய சிந்தனைக்கான முடிவில் விடையும் கிடைத்தது. அது
இறைவன் - இயற்கை - மனிதன்
மனித வாழ்வில் அழியாத நிரந்தர முக்கோணம் இது என்று அறிந்து, புரிந்து தெளிந்தான். ஒன்றை ஒன்று சார்ந்தது எனக் கண்டு கொண்டான். இறையுணர்வு, இயற்கை வளம், மனிதநேயம் உலகை உய்விக்கும் என்பதை உணர்ந்து கொண்டான். வரும்காலத்தில் இயற்கையையும், அதன் மூலம் இறைவனையும் உணர் என்றான். இயற்கையை மனிதனின் தோழன் என்றுணர்ந்தான். இயற்கையை மீண்டும் நேசிக்கக் கற்றுக் கொண்டான்.
நம்பினான், நம்பிக்கையே எல்லாம் என்றான். இயற்கையை உணர்ந்தான். இறைவனை உணர்ந்தான். சிந்தனையோடு உணர்வும் அவசியம் என்பதறிந்தான். அறிவியலோடு ஆண்மீகமும் தேவை என்பதை அறிந்தான். அன்பு, அமைதி, அரவணைப்பு, நட்பு, மனதநேயம் இவை அனைத்தும் எதிர்காலச் சமூகமே. உன்னை வாழ வைக்கும் என்பதை அறிந்து கொள். நிலம் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றை நேசி. அவை உன்னை வாழ வைக்கும்.