தனிநாயகம் அடிகளாரின் தமிழியல் ஆய்வுகள்
முனைவர் மு. சங்கர்
உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
முன்னுரை
தமிழியல் ஆய்வு மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. ஒரு படைப்பினை நுணுகி ஆராய்தல் என்பது பண்டைய காலந்தொட்டே இருந்து வருகின்றது. மேலைநாட்டுக் கொள்கைகளைத் தமிழியலோடு பொருத்திப் பார்க்கும் தன்மையிலும் தமிழியல் படைப்புகளைப் படித்து இரசித்து அழகியலோடும் முருகியலோடும் வெளிப்படுத்தும் தன்மையிலும் தமிழியல் ஆய்வுகள் பயணிக்கின்றன. இவ்வாய்வுப் பணியில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகக் கருதப்படுபவர் சேவியர் எஸ். தனிநாயகம் அடிகளார். இவரது ஆய்வுமுறை தனித்துவமானது. வ.வே.சு., டி.கே.சிதம்பரநாதன் ஆகியோர் வளர்த்த முருகியலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவர்களுள் முதன்மையானவர் தனிநாயகம் அடிகளார். அன்னாரின் தமிழியல் ஆய்வுகள் பற்றிக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
பழந்தமிழ் இலக்கியம்
தனிநாயகம் அடிகளார் இளமைக் காலத்தில் ஆங்கிலம் நன்கு கற்றவராக இருந்தார். தமிழின் எல்லைப் பரப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகமே அவருக்குத் தந்தது என்றால் அது மிகையன்று. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், அ. சிதம்பரநாதன் செட்டியார் என்ற இரு ஆளுமைகளே அதற்குக் காரணமாக அமைந்தனர் எனலாம். அங்கு அவருக்குப் பழந்தமிழ் இலக்கியம் நன்கு பரிச்சயமானது. அங்கு எம்.லிட் பட்டத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களை எடுத்துக் கொணடார். அவ்விலக்கியங்களில் காணப்படும் இயற்கை பற்றியதாக அவரின் ஆய்வு அமைந்தது. அவ்வாய்வேட்டின் பெயர் பழந்தமிழ்ச் செய்யுட்களில் இயற்கை என்பதே. இவ்வாய்வேடு ஆங்கிலத்தில் அமைந்தது. இவ்வாய்வேடு Landscape and Poetry - A Study in Classical Tamil poetry, Nature in Tamil Poetry - The Classical Period என்னும் இரு பெயர்களில் நூலாகவும் வெளிவந்துள்ளது. இதில் ஒப்பியல் முறையைக் கையாள்கின்றார். பழந்தமிழ் இலக்கியங்களைக் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளோடு ஒப்பிடுகின்றார். பழந்தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் எடுத்து விளக்கும் தன்மையில் அடிகளாரின் ஆய்வுகள் அமைந்துள்ளன. இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் இவரின் தமிழ்த்தூது என்னும் நூலில் உள்ள சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள், மலரும் மாலையும் என்னும் இரு கட்டுரைகளைக் குறிப்பிடலாம். சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள் என்னும் கட்டுரையில் சங்க இலக்கியத்தில் காணலாகும் ஒன்றே உலகம் என்ற உயரிய மனப்பான்மை, எக்காலத்தும் எந்நாட்டவர்க்கும் இலக்கியச் சுவை அளிக்க வல்ல தன்மை, பரந்த நோக்கம் என்ற கண்ணோட்டம், நீதியைக் கூறும் பாங்கு, சுவை போன்ற கருத்துக்களை எடுத்துக் காட்டுகின்றார். அடுத்து அவருடைய மலரும் மாலையும் என்னும் கட்டுரை. இக்கட்டுரை பழந்தமிழரின் பண்பாட்டை விளக்கக் கூடியதாக அமைந்துள்ளது. ஐந்திணைகளில் அல்லது ஐந்நிலங்களில் குறிப்பிடப்படும் மலர்களைப் பற்றியதாக, அம்மலர்கள் அந்நிலத்திற்கு எங்ஙனம் பொருந்தி வருகின்றன என்பதையும் தமிழ்ப் புலவர்கள் மலர்களை எங்ஙனம் உவமையாகக் கையாண்டுள்ளனர், பழந்தமிழரின் திருமணச் சடங்கில், அகவாழ்க்கையில், வழிபாட்டில் அம்மலர்களின் பங்களிப்பைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழி விளக்கிக் காட்டுகின்றார்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் நினைவுச் சொற்பொழிவாக அமைந்ததுதான் தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் என்னும் கட்டுரை. இதில் தமிழரின் பண்பாட்டுக் களஞ்சியமாகத் திகழ்பவை என்று தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொகை, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். அடுத்து பண்பாடு என்பதையும் நாகரீகம் என்பதையும் வேறுபடுத்திக் காட்டுகின்றார். தமிழர் பண்பாட்டிற்கே உரிய சில கோட்பாடுகளை எடுத்தியம்புகின்றார். அவை: 1. உலக மனப்பான்மை, 2. கண்ணோட்டம், 3. பக்தி, 4. ஒழுக்கம், 5. மக்கள் நலக் கொள்கை, 6. பிறர் அன்பு, 7. இயற்கை, 8. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும், 9. அரசியலாட்சி, 10. கவின் கலைகள் என்பன. இக்கட்டுரையின் நிறைவில் அடிகளார், சிந்துவெளி நாகரீகத்தோடு தமிழர் நாகரீகமும் பண்பாடும் கொண்டுள்ள தொடர்பைக் குறிப்பிடுகின்றார்.
அடிகளாரின் தமிழியல் ஆய்வில் திருக்குறளுக்கும் இடம் உண்டு. ஏனெனில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் திருவள்ளுவர் என்னும் பெயரில் 1967 - இல் வெளிவந்துள்ளது. அடுத்து உலக ஒழுக்கவியலில் திருக்குறள் என்னும் தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.
மொழி ஆய்வு
தனிநாயகம் அடிகளாரின் தமிழியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க ஒன்று மொழியுரிமைகள் பற்றிய சிந்தனை. இவற்றை வலியுறுத்தும் பொருட்டு நம் மொழியுரிமைகள் என்னும் தலைப்பில் நூலாக எழுதினார். இந்நூலில் ஈழத்தில் நிகழ்ந்து வரும் மொழியுரிமைகள் பற்றியும் அவற்றுள் தமிழ் மொழியின் உரிமைகள் பற்றியும் விவாதிக்கின்றார். மேலும் இந்நூல் உலகச் சட்ட வழக்கு, பின்லாந்தைப் பின்பற்றலாம், நமக்கே உரிமை, சம உரிமை என்றால் என்ன?, தனிச் சிங்களத்தை எப்படி எதிர்ப்பது, சட்டம் நிறைவேற்றினாலும் போராட்டம் ஓயாது, தமிழ் மக்களின் கடமை, ஒற்றுமை வேண்டும் முதலிய தலைப்புகளைக் கொண்டு தமிழ் மொழியின் உரிமைகளைக் காக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகின்றார். ஈழத்தமிழர்கள் தமிழ் மொழியைப் காப்பதற்கான கடமையை எடுத்துக் கூறுகின்றார். அரசியல், கல்வித்துறை, பண்பாட்டுத்துறை, சமூகத்துறை போன்ற துறைகளில் பணியாற்றி வருபவர்கள் புது இயக்கங்களை உண்டாக்கித் தமிழ் மக்களுடைய முன்னேற்றத்திற்காகத் திட்டங்கள் வகுத்தல் வேண்டும் (ப.12) என்பதையும் இவ்வியக்கம் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் என்னும் பெயரில் செயல்பட்டு வருவதையும் எடுத்துக் கூறுகின்றார். ஈழத்தில் தோன்றிய தமிழ்மொழிப் போரில் ஆடவர், பெண்டிர், மாணவர், முதியோர் என்று அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றார். இக்கருத்தினின்று காணுகையில் அடிகளாரின் தமிழ்மொழிப் பற்றுப் புலனாகின்றது. மேனாட்டார் தமிழ் மொழியைப் பற்றி அறிந்து கொள்ள தமிழ்க் கல்சரில் ‘The Vocabulary and Content of Tamil Primers and First Readers’ என்னும் கட்டுரையை எழுதினார். இதில், உயிர்கள், உயிர்மெய்கள், வாக்கியங்கள், கவிதை பற்றி விளக்குகின்றார். இக்கட்டுரையில் தமிழ் மொழியில் வாக்கியங்கள் உருவாகும் விதத்தையும் அவ்வாக்கியங்களைக் கொண்டு கவிதை படைக்கும் ஆற்றலையும் எடுத்துக் காட்டுக்கின்றார்.
கல்வியியல்
தனிநாயகம் அடிகளார் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு ஆகியவற்றில் கொண்ட ஈடுபாட்டைப் போல, கல்வியியல் துறையிலும் தனது பணியைத் தொடர்ந்தார். அடிகளார் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். தமிழரின் கல்வி முறையில் ஈடுபாடு கொண்டதால் இலண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக “Educational thoughts in Ancient Tamil literature” என்னும் தலைப்பைத் தேர்ந்தார். இவ்வாய்வில் பண்டைய ஐரோப்பிய மற்றும் இந்தியக் கல்வி முறைகளைச் சுட்டிக் காட்டித் தமிழரின் கல்வி முறையை ஆராய்கின்றார். இவ்வாய்விற்கு இப்பல்கலைக்கழகம் 1957 - இல் முனைவர் பட்டம் வழங்கியது. மலேசியாவில் உள்ள இந்திய ஆய்வியல் துறையின் தலைவராக 1968 - இல் பொறுப்பேற்றார். மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
கல்வியியலில் அடிகளார் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, ‘Tamil Cultural Influences in South East Asia’ , ‘Ancient Tamil Literature and the study of Ancient Indian Education’, ‘The Educators of Early Tamil Society’, ‘Language Rights in Ceylon’ ‘A Seminal Period of Indian Thought’ , ‘Ancient Tamil Poet - Educators’ ஆகிய கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பயண இலக்கியம்
தனிநாயகம் அடிகளார் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ், கிரீக் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். வடமொழி, ரசிய மொழி, போர்ச்சுகீஸ், சிங்களம், ஹீப்ரு ஆகிய மொழிகளையும் சிறிது அறிந்தவராக இருந்தார். இதனால் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பர்மா, இந்தோனேசியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சேவியத் ஒன்றியம், இங்கிலாந்து, பிரெஞ்சு, ஜெர்மன், ஆஸ்திரேலியா, இத்தாலி, வத்திகன், கிரேக்கம், போர்ச்சுகல், ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, நடு கிழக்கு நாடுகள் முதலிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளையும், தன்னுடைய அனுபவங்களையும் ஒன்றே உலகம் என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய சுற்றுப்பயணம் சிறு வயதிலேயே தொடங்கியது என்றும் அப்பயணமானது ஊர்க்காவற் துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் இருந்தது என்றும், தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுவதையும் அங்குத் தமிழர் பண்பாடு செல்வாக்குப் பெற்றுச் சிறந்து விளங்குவதைச் சோழர் காலந் தொட்டுக் காணலாம் என்றும் குறிப்பிடுகின்றார். அடிகளார் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள பண்பாடுகள் எங்ஙனம் இந்தியப் பண்பாட்டோடு அல்லது தமிழர் பண்பாட்டோடு தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் கண்டு வியக்கின்றார்.
கட்டுரைகள்
இவர் 1952 - இல் முத்திங்கள் இதழான தமிழ்க் கல்சர் வழியாகப் பல்வேறு கட்டுரைகளைத் தமிழியலுக்குத் தந்துள்ளார். இவ்விதழின் ஆசிரியராகவும் இவரே இருந்துள்ளார். இவ்விதழில் எஸ்.வையாபுரி பிள்ளை, தெ.பொ.மீ., சுவாமி ஞானப்பிரகாசர், சி.எஸ்.ராகவன், ஏ.சி.பால் நாடார், கே.கே.பிள்ளை, ஆண்டர்னோ, எம்.ரத்னசாமி, மு.வ., சுவாமி விபுலானந்தர், வ.ஐ.சுப்பிரமணியம், சி.ஜேசுதாஸ், ஏ.சிதம்பரநாத செட்டியார், எச்.ஹிராஸ், கமில்சுவலபில், ரா.பி.சேதுபிள்ளை போன்றோர் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
இவ்விதழில் அடிகளாரின் ‘The Tamils said it all with flowers’ என்னும் கட்டுரை மிக முக்கியமான கட்டுரையாகும். இக்கட்டுரையில் அடிகளார் இயற்கையின் மீது பழந்தமிழர் கொண்ட காதலையும், அவர்கள் வாழ்வில் மலர்கள் மற்றும் தாவரங்கள் பெறுமிடத்தையும் சுட்டிக்காட்டுகின்றார். பழந்தமிழர் வாழ்வில் வேங்கை மலர், ஆம்பல் மலர், காவல் மரம் ஆகியவை பெறுமிடத்தையும் குறிப்பிடுகின்றார். கபிலர் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடும் மலர்கள் பற்றியும் சுட்டிக்காட்டுகின்றார்.
அடுத்து, ‘The Philosophic Stage of Development in Sangam Literature’ என்னும் கட்டுரையில் திருக்குறளைத் தம்மபதத்தோடு ஒப்பிடுகின்றார். காஞ்சி, உறையூர், மதுரை, வஞ்சி போன்ற நகரங்களில் தத்துவவாதிகள் இருந்துள்ளனர் என்றும் அறவணஅடிகள் - பௌத்தத் தத்துவவாதியாகவும், கவுந்தி அடிகள் - ஜைன தத்துவவதியாகவும் இருந்துள்ளனர் என்றும் குறிப்பிடுகின்றார்.
‘The First Books Printed in Tamil’ என்னும் கட்டுரையில் முதன்முதலில் அச்சிட்டு வெளிவந்த 4 நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவை: 1. Cartilha, Pp.38, 1554, 2. Doctrina Christam or Tambiran Vanakkam, Pp.16, 1577, 3. Doctrina Christam - கிரீ சித்தியாணி வணக்கம், Pp.120, 1579 - கொச்சின், 4. Flos Sanctorum olibro delas vidas di algunos santos transladas en lengua malavar, Pp.669, 1586 - தூத்துக்குடி - புன்னைக்காயல் என்பன.
இவை மட்டுமின்றி இருபதாம் நூற்றாண்டு கவிதைகளில் காணலாகும் தேசியம் பற்றியும் எழுதியுள்ளார் (Regional Nationalism in Twentieth Century Tamil Literature - Renaissance Writers). இக்கட்டுரையில் தென்னிந்தியாவில் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், நல்லசாமி பிள்ளை ஆகியோரையும், வட இந்தியாவில் தேசியத்தை வளர்த்தவர்களில் தாகூர், சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே ஆகியோரையும் குறிப்பிடுகின்றார். தேசியத்தைக் கவிதைகளில் வெளிப்படுத்தியவரான பாரதியார் பற்றியும், தேசியத்தை உரைநடையில் வெளிப்படுத்திய திரு.வி.க., தேசிக விநாயகம் பிள்ளை, ரா.பி.சேதுபிள்ளை ஆகியோர் பற்றியும் திராவிடப் பார்வையைக் கவிதைகளில் புலப்படுத்திய பாரதிதாசன், முடியரசன், கண்ணதாசன் பற்றியும் குறிப்பிடுகின்றார்.
திறனாய்வியல்
தனிநாயகம் அடிகளாரின் திறனாய்வியல் பங்களிப்பை ‘Apperception in Tamil Literary Studies’ என்னும் கட்டுரையில் காணலாம். இக்கட்டுரையில் திறனாய்வியல் பற்றி விளக்கமாக எழுதுகின்றார். மேலும், இருபதாம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த நடையியல் பற்றியும் சிந்தித்துள்ளார். இவர் குறிப்பிடும் நடையியல் வகைகளாகப் பின்வருவனவற்றைக் காணலாம். 1. Metrical Stylistics, 2. Imagery Stylistics, 3. Psychological Stylistics என்பன. இவற்றை எல்லா வகையான இலக்கியங்கள் மீதும் பொருத்திப் பார்க்கும் விதத்தையும் குறிப்பிடுகின்றார். ‘Metrical Stylistics’ என்னும் தலைப்பின் கீழ்ச் சங்கப் பாடல்கள் அகவல் யாப்பில் அமைவதைப் பற்றி எடுத்துரைக்கின்றார்.
அகராதியியல்
அகராதியியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக அடிகளார் திகழ்ந்துள்ளார். இதற்கு ‘Antao De Proenca’s Tamil - Portuguese Dictionary - An Introduction, 1679’ என்னும் கட்டுரையே சிறந்த சான்று. இக்கட்டுரையில் அவர் தமிழ் மற்றும் போர்த்துக்கீசில் உள்ள சில சொற்களைப் பற்றி விளக்கியுரைக்கின்றார்.
இவை மட்டுமின்றி தமிழாய்வின் செம்மைப் பற்றி ஆய்வாளர்கள் நன்கு அறிந்து கொள்ளும் பொருட்டு ‘The Tamil Development and Research Council’ gw;wpAk; ‘A Bibliographical Guide to Tamil Studies’ பற்றியும் குறிப்பிடுகின்றார்.
நிறைவாக
தமிழ்த்தூது, ஒன்றே உலகம், நம் மொழியுரிமைகள் ஆகிய நூற்களை எழுதியமை, தமிழ்க் கல்சர் என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியமை, உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி, தமிழை உலகறிய செய்தமை ஆகியவை அடிகளாரின் தமிழியல் பங்களிப்பாகும்.
அடிகளாரின் தமிழியல் ஆய்வில் பழந்தமிழ் இலக்கியங்களே அவரின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ஏனெனில், இவையே தமிழரின் பண்பாட்டை, நாகரீகத்தை எடுத்துக் காட்டும் ஆவணங்களாகும் என்பது அடிகளாரின் எண்ணமாகும். தம் காலத்தில் வாழ்ந்த ரா.பி.சேதுபிள்ளையின் இறப்பை (25.04.1961) ஒட்டி ஒரு கட்டுரையைத் தமிழ்க் கல்சரில் எழுதியுள்ளார் என்பதும் இங்கு நினைத்தற்குரியது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.