தொண்டை நாட்டின் சந்திப் பூஜைகள்
மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.
முன்னுரை
மனித வாழ்வு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பலவிதமான நம்பிக்கைகள் அவன் வாழ்க்கையை இயக்கும் உந்து சக்தியாய்த் திகழ்ந்தன. மனிதன் தெய்வங்களைத் தொழுவதன் மூலம் தன் வாழ்வில் தீமைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்று நம்பினான். இவ்வாறு அவன் நம்பியதன் விளைவாய் பலவிதமான தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றின. தமிழர்கள் தெய்வப்பற்று மிக்கவர்கள், எப்பொழுதும் இறைவனைத் தொழ மறவாதவர்கள். இவ்வாறு இறைவனைத் தொழவும், அத்தெய்வத்தை சாந்திபடுத்தவும் பல்வேறு வழிபாட்டு முறைகள் தோன்றின. அவ்வாறான ஒரு சிறப்பான வழிபாட்டு முறையே சந்திப்பூஜையாகும். இடைக்காலத் தொண்டை நாட்டில் (வடதமிழகம்) தமிழ் மக்கள் சிறப்புடன் இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றினர்.
இடைக்காலத்தில் பொதுமக்கள் தம் நேர்த்திக்கடனைச் செலுத்தக் கோயில்களுக்கு விளக்கெரிக்க எண்ணையும், அன்னதானம் வழங்க கால்நடைகளையும், நிலங்களையும் தானமாக வழங்கினர். அதே சமயம் அரசர்களும், பிரபுக்களும், அரசு அலுவலரும், உயர்குடியினரும் தாம் வழிபட்ட கோவில்களில் சந்திப்பூஜைகளை நிறுவி தம் தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவைம் அக்கால அரசர்கள் எத்துணை தெய்வப்பற்று மிக்கவர்களாகவும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர் என்பதைப் புலப்படுத்தின. இடைக்காலத் தமிழகத்தின் சந்திப்பூஜைகள் தமிழர் பண்பாட்டு முதிர்ச்சியின் அடையாளங்களாகத் திகழ்ந்தன. இன்று நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் சந்தி மற்றும் பல்வேளைப் பூஜைகளுக்கு இச்சந்திப்பூஜைகளே முன்னோடிகளாய்த் திகழ்ந்தன. இவற்றைப் பற்றி பல்வேறு கல்வெட்டுகள் அழகுடன் சான்று பகர்கின்றன. அவற்றை ஈண்டு ஆராய்வோம்.
தொண்டை நாடும், சந்திப்பூஜைகளும்
தொண்டை நாடென்பது வட தமிழ்நாட்டைக் குறிக்கும். இது சங்ககாலம் தொட்டு சிறப்பிடம் பெற்ற பகுதியாகும். சங்ககாலத்தில் இப்பகுதி சுதந்திரமான பகுதியாகத் திழ்ந்த போதிலும் பல்லவர் காலத்திலும் அதன்பின் வந்த பிற்காலச் சோழர் காலத்திலும் அவர்தம் ஆளுகையின் கீழிருந்து பல்வகை கலாச்சாரப் பண்பாட்டுச் சிறப்புகள் பெற்றது. சோழர்களின் குறுநில மன்னர்களான சம்புவராயர்கள் இடைக்காலத்தில் தொண்டை நாட்டை சுதந்திரமாக ஆட்சி புரிந்து வந்தனர். “தொண்டை நாடு சான்றோர் உடைத்து” என்பது முதுமொழி. சான்றோர்கள் நிறைந்த பகுதியாதலால் இது பல்வகை கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு முன்னோடியாகத் திழ்ந்தது. அவ்வாறு திகழ்ந்த பல்வகைப் பண்பாட்டு நிகழ்வுகளில் சந்திப்பூஜையும் ஒன்றாகும். சமய கலாச்சார நிகழ்வுகளில் தொண்டைநாடு பிற பகுதிகளுக்கு முன்னோடியாக விளங்கியது என்பதற்கு சந்திப்பூஜைகளே சாலச் சிறந்த சான்றுகளாகும்.
சந்திப்பூஜைகளின் சிறப்பு
இடைக்காலத் தமிழகத்தில் தொண்டை நாட்டில் சந்திப்பூஜைகள் கோவில்களில் தினசரி நடத்தப்பட்டன. இப்பூஜைகள் மன்னர்களாலும், பிரபுக்களாலும், அரசு அலுவலர்களாலும், உயர்குடியினராலும் நடத்தப்பட்டன. அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சிறப்பு நிகழ்வுகளைக் கொண்டாடவும், அவர்கள் பெற்ற வெற்றிகளைச் சிறப்பிக்கவும் இச்சந்திப்பூஜைகள் ஏற்படுத்தப்பட்டன. இப்பூஜைகள் இதை ஏற்படுத்தியவர் பெயராலும், அவர்கள் பெற்ற வெற்றிகளின் பெயராலும் அழைக்கப்பட்டன. கோயில்களில் தொடர்ச்சியாக, பூஜைகள் செய்யப்பட்டு பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளை முறையாக செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கோயில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காகும் செலவுகளை ஈடு செய்யக் கோயில்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. பொதுவில் கோயில்களுக்கு அருகில் உள்ள கிராமங்களே மானியங்களாக வழங்கப்பட்டன. அக்கிராமத்தின் மூலம் வரும் வருவாய் யாவும் அரசாங்கத்தைச் சேராமல் இப்பூஜைகளுக்காகக் கோவில்களுக்கு வழங்கப்பட்டன. இப்பூஜைகள் நாடு முழுவதும் சைவ, வைணவக் கோயில்களில் நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு சிறப்புடன் கொண்டாடப்பட்ட பூஜைகள்வருமாறு;
செய்யாற்றைவென்றான்சந்தி
இச்சந்திப்பூஜை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள அரங்கநாதர் கோயிலில் ஏற்படுத்தப்பட்டது. சம்புவராய மன்னர் குலசேகர சம்புவராயன் சேர மன்னன் பாஸ்கர இரவிவர்மனையும், அவனுக்குத் துணை நின்ற பாண்டிய மன்னன் வீரபாண்டியனையும் சேயாற்றங்கரையில் (திருவொத்தூர்) வெற்றி கொண்டான். தன்னுடைய வெற்றியை இறைவனுக்குக் காணிக்கையாக "செய்யாற்றை வென்றான்” என்ற ஊரை ஏற்படுத்தியதுடன், செய்யாற்றை வென்றான் சந்தி என்ற சந்தியை இங்குள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் ஏற்படுத்தினான். இந்தப் பூஜைக்காக அத்தி என்ற கிராமம் கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்டது. (ARE.NO:456/1925).
வீரசம்பன்சந்தி
சம்புவராய மன்னன் வீரசம்பன் என்பவன் தன் பெயரில் விழுப்புரம் மாவட்டம் திருத்தலூரில் உள்ள சித்தீஸ்வரர் கோவிலும் (ARE.NO:436/1935), இதே மாவட்டம் மாரங்கியூரில் உள்ள இராமலிங்கேஸ்வரர் கோவிலிலும் (ARE.NO:91/1935), காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியில் உள்ள விஜயராகவப் பெருமாள் கோவிலிலும் சந்திப்பூஜைகளை ஏற்படுத்தினான் (ARE.NO:183/1916). தன்னுடைய பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இப்பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்காக வீரசம்பநல்லூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டுக் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது.
இராஜநாராயணன் சந்தி
இரண்டாம் இராஜநாராயணன் என்ற மன்னன் தன்னுடைய ஆட்சி சிறக்க விழுப்புரம் மாவட்டம் சோழகுலவளநல்லூரில் உள்ள வடக்கிருந்தவர் கோவிலில் இச்சந்தியை நிறுவினார் (ARE.NO:49/1922). இந்தப் பூஜைக்காகக் கீழ்புத்தூர் கிராமத்தில் 3 வேலி நிலம் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவனது மகனான மூன்றாம் இராஜநாராயணன் தன்னுடைய பெயரில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரர் கோவிலில் ஒரு சந்திப்பூஜையை நிறுவினான் (ARE.NO:64/1922). இதற்காக சோழிங்கநல்லூர் என்ற கிராமம் தானமாகக் கோவிலுக்கு வழங்கப்பட்டது.
பசவசங்கரன் சந்தி
வேலூர் மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ஜலநாதீஸ்வரர் கோவிலில் இச்சந்தி நிறுவப்பட்டது (ARE.NO:201/1921). முதலாம் இராஜநாராயண சம்புவராயன் காலத்தில் அவனது சிற்றரசனான பொதுக்காமூர் நாட்டைச் சார்ந்த புல்லகண்டன் என்பவன் பஸவசங்கரன் சந்தி என்ற சந்தியை நிறுவினார். இதற்காக மாபூதி தண்டலம் என்ற கிராமம் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது.
கண்டகோபாலன்சந்தி
தெலுங்கு சோழமன்னான விஜயகண்ட கோபாலன் என்பவன் காஞ்சீபுரத்தை வென்று தன் ஆட்சியைத் தொண்டை மண்டலத்தில் நிறுவினான். தன் வெற்றியைக் கொண்டாடக் காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒரு சந்திப்பூஜையை நிறுவினான் (ARE.NO:556/1919). இதுகண்ட கோபாலன் சந்தி என்று அழைக்கப்பட்டது.
ஆளப்பிறந்தான் சந்தி
சம்புவராயமன்னனான வீரபெருமாள் சம்புவராயன் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆளப்பிறந்தான் சந்தியை நிறுவினான். இதற்காகப் பெருங்காநல்லூர் என்ற கிராமம் இக்கோவிலுக்கு மானியமாக வழங்கப்பட்டது (ARE.NO:556/1919).
அழகியசோழன் சந்தி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அத்தீஸ்வரர் கோவிலில் இச்சந்தி நிறுவப்பட்டது. சம்புவராய மன்னன் எதிரிலிச் சோழ சம்புவராயன் இச்சந்தியை நிறுவினான் (ARE.NO:182/1962). இதற்காக அழகிய சோழநல்லூர் என்ற கிராமம் உருவாக்கப்பட்டு இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது.
காளிங்கராயன் சந்தி
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள புகழ் பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் இச்சந்தி நிறுவப்பட்டது. அக்காலத்தில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்த ஆர்ப்பாக்கத்தைச் சார்ந்த காளிங்கராயன் என்ற அரசு அதிகாரியால் இது ஏற்படுத்தப்பட்டது. இச்சந்திப் பூஜைக்காக குளத்தூர் என்ற கிராமம் தானமாகக் கோயிலுக்கு வழங்கப்பட்டது. (ஜெயந்தி.ச, திருக்கழுக்குன்றம், சென்னை, 2008, ப:16)
முடிவுரை
இடைக்காலத் தமிழகத்தின் சிறப்பான பண்பாட்டுக் கூறாக சந்திப்பூஜைகள் திகழ்ந்தன. அக்காலமக்களின் இறைநம்பிக்கைகளுக்குச் சாட்சிகளாக இச்சந்திப்பூஜைகள் திகழ்ந்தன. இப்பூஜைகள் தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டாலும் தொண்டை நாட்டில் சிறப்புற்று விளங்கியது. இச்சந்தி பூஜைகளை நிறுவிய மன்னர்களும், பிரபுக்களும் அதுதொடர்ந்து தடையறாது நடைபெற இடைவிடாது கண்காணித்தனர். இப்பூஜைகள் நடத்தப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தாராளமாக நிலங்கள் மானியங்களாக வழங்கப்பட்டன. பூஜைகளைக் கோயில் அதிகாரிகளான ஸ்ரீகாரியம், ஸ்ரீமகேஸ்வரர், தேவகன்மிகள், கரணத்தவர்கள் போன்றோர் பொறுப்புடன் நடத்தினர். இடைக்காலத் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் ஏராளமான சந்திப்பூஜைகள் நிறுவப்பட்டாலும் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தன. இப்பூஜைகளை நிறுவிய மன்னர்களும், அலுவலர்களும், உயர்குடியினரும் மறைந்தாலும் அவர்கள் ஏற்படுத்திய இச்சந்திப்பூஜைகள் அவர்களுடைய இறை உள்ளங்களுக்கும், கொடை நெஞ்சங்களுக்கும், பண்பாட்டு உணர்வுகளுக்கும், பக்திச் சிறப்பிற்கும், சாட்சிகளாகத் திகழ்ந்து வருகின்றன.
விரிவாக்கம்
ARE-Annual Report on Indian Epigraphy.
கருவி நூற்பட்டியல்
1. Pillai.K.K, A Social History of the Tamils, Chennai,1975.
2. Swaminathan.A, Social and Cultural History of Tamil Nadu,Chennai,1991.
3. பிள்ளை.கே.கே, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், சென்னை, 2013.
4. தங்கவேலு.கோ.& தியாகராஜன்.இல, சம்புவராயர் வரலாறு,சென்னை, 1990.
5. தமிழக வரலாறு-சோழர்காலம், சென்னை, 1998.
6. ஜெயந்தி.ச, திருக்கழுக்குன்றம், சென்னை, 2008.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.