பேராசிரியர் சி. இலக்குவனாரின் தமிழ்பற்றும் இதழ்ப் பணியும்
முனைவர் பொ. ஆறுமுகசெல்வி
பெற்றோர் ஆசிரியர் கழக விரிவுரையாளர்,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, காந்திநகர், திருநெல்வேலி - 8.
முன்னுரை
பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ்மொழியை தன் சொல்லாலும், எழுத்தாலும், செயலாலும், தனித்தமிழ் மொழியாக உயர்த்தி விட்டுச் சென்றவர் பேரா. சி. இலக்குவனார். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் விடுதலையும், விழிப்புணர்வும் ஏற்படுத்திய தமிழ்ப்புலவர் பேரா. சி. இலக்குவனார் என்றால் மிகையாகாது. தமிழின் தொன்மைச் சிறப்பையும், இலக்கணச் சிறப்புகளையும் அயலவரும் அறியும் வண்ணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக்கியது இவர் தமிழுக்குச் செய்த பெருந்தொண்டு ஆகும். தமிழ்க்காப்புத் தலைவரான இவரின் தமிழ்ப்பற்றையும் இதழ்ப் பணியையும் இன்றைய இளைய தமிழுலகம் அறியும் வண்ணம் எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பேரா. சி. இலக்குவனின் படைப்புகள்
தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் இருகண்களாக கொண்டவர் பேரா. சி. இலக்குவனார். தனது தமிழ்ப்பற்றின் வெளிப்படாக சீரிய சிந்தனையால் படைக்கப்பட்டது. அமைத்துப்பார், எல்லோரும் இந்நாட்டு மன்னர், உண்மைத்தொண்டர், குடிமைப்பயிற்சி, காதலில் வெற்றி அல்லது வள்ளுவர் கண்ட இல்லறம், திருக்குறள் எளிய பொழிப்புரை போன்ற நூல்கள் உள்ளிட்ட பன்னிரெண்டு நூல்களைத் திருக்குறளில் தந்திருக்கிறார். காதலில் வெற்றி என்ற நூலில் இவ்வாழ்க்கையின் ஒழுக்கலாறுகளை பல்வேறு உத்திகள் கொண்டு மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் எடுத்தியம்பியுள்ளார். இந்நூலில் இருபத்தொன்பது அதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளார்.
தொல்காப்பியத்தை முதன்முதலில் திறனாய்வு செய்தவர் பேரா. சி. இலக்கிவனார். இவர் தொல்காப்பியத்தைத் திறனாய்வு செய்து “தொல்காப்பிய ஆராய்ச்சி” என்றும் நூலாக வெளியிட்டார். இதில் மூன்று அதிகாரத்திலும் அனைத்து இயல்களுக்கும் எளிய முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சங்ககால மக்களின் அக, புற வாழ்வைக் கூறும் வகையில், “சங்ககால தமிழர் வாழ்வியல்” என்னும் நூலையும் படைத்துள்ளார். தமிழ் மொழியின் ஆழத்தை அயலவரும் தெரிந்து கொள்வதற்காக ஆங்கில நூல்களையும் படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் மொத்தம் முப்பத்திரெண்டு. இவை அனைத்தும் பேரா. சி. இலக்குவனாரின் தமிழ்ப்பற்றினால் உருவானது.
பேரா. சி. இலக்குவனாரின் தமிழ்ப்பற்று
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன், தமிழ்மொழியும் தமிழ்மக்களும் பட்டதுயரங்கள் சொல்லி மீள முடியாதவை. அக்காலக் கட்டத்தில் வாழ்ந்து தமிழுக்காவும் போராடிய பெருந்தலைவர்களுள் பேரா. சி. இலக்குவனார் சிறப்பிற்குரியவர். தமிழும் தமிழ்மக்களும் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்பதற்காக, இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டு மொழிப்போர் நடத்திய பெருமை இவரையும் சாரும். அனைத்துத் தமிழ் அறிஞர்களும் ஒன்று சேர்ந்து தமிழைக் காக்க வேண்டுமெனத் தமிழ் அறிஞர்களை வலியுறுத்தினார். தமிழுக்காக இந்தி எதிர்ப்புப் பேராட்டத்தில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றவர். எழுதுவதற்கு ஏடும், பேசுவதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ்பரப்ப என்பது பேராசிரியர் இலக்குவனார் அடிக்கடி கூறி வரும் முழக்கமாகும். அதனால் பல இதழ்கள் தொடங்கினார்.
இதழ்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள் மூலமகாவும், தமிழர் உள்ளத்தில் தமிழின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்துவதைத் தனது கடமையாகக் கொண்டவர். பேரா. சி. இலக்குவனார். சங்க இலக்கிய நூலான திருக்குறள் போன்றவற்றை பாமர மக்களுக்கும் படித்தறிய வேண்டும் என்பதற்காக இதழ்கள் நடத்தினார். இவரின் இதழ்ப்பணி தமிழ்ப்பற்றிக்குச் சிறந்த சான்றாக விளக்குகிறது.
தமிழ்க்காப்புக் கழகம், குறள் நெறி இயக்கம், தனித்தமிழ் இயக்கம் போன்றவைகளை உருவாக்கிய பெருமைக்குரியவர். விடுமுறை நாட்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தி, மக்களைக் குறள் வழியில் நடக்கப் பயிற்சியளித்தார். குறள் வழியில் நடந்தால், வாழ்க்கை துன்பமின்றி இன்பமாக அமையும் என்பதை எடுத்துரைத்து திருக்குறள் கற்க மக்களை வலியுறுத்தினார். இத்தகைய செயல்பாடுகள் பேரா. சி. இலக்குவனாரின் தமிழ்ப்பற்றை விளக்குவதாக உள்ளது.
முதன்மையான மொழி தமிழ்மொழி
பேரறிஞர் கால்டுவெல் போன்று நம்மால் போற்றத் தகுந்தவர் பேரறிஞர் இராசு ஆவார். இவர் தம்மைத் திராவிடர் என்றே அழைத்துக் கொண்டவர். அவர் மறைந்த மாநகரங்களான ஆராப்பா, மோகஞ்சதாரோ என்றும் இரண்டினைப்பற்றி நன்கு ஆராய்ந்து, அங்கு வழங்கிய மொழி தமிழே என்று நிலை நாட்டியுள்ளார், தமிழ்மொழியின் தொன்மைக்குச் சான்று காட்டியதோடு, தமிழ் இந்நாட்டு மொழியே. ஆரியம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னர், இந்தியா முழுவதும் வழங்கிய மொழி பழந்தமிழே என்று நிலைநாட்டுவதற்கு நன்னெறி முருகன் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் சுனித்குமார் சட்டர்ஜி இயற்றியுள்ள ‘வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூல் பெரிதும் துணைபுரிந்துள்ளது என்று எடுத்துக்காட்டி அனைத்து மொழிகளுக்கும் தலைமையான முதன்மையான மொழி தமிழ் என்பதை நிரூபித்துள்ளார்.
பேரா. சி. இலக்குவனாரின் இதழ்ப் பணி
தமிழ்ப் பேராசிரியராக இருந்து இவர் கவிதைகள் படைத்தும், உரை நூல்கள் எழுதியும், தமிழ் இயக்கங்கள் நடத்தியும், தாய் மொழியாம் தமிழை அடிமையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது இவரின் குறிக்கோள். அதனால், தமிழை எளிய முறையில் மக்களுக்குக் கொண்டு செல்லும் ஊடகமான இதழ்கள் நடத்த முன் வந்தார். சங்க இலக்கியம், இலக்கியம், திராவிட கூட்டரசு, குறள்நெறி ஆகிய இதழ்கள் இவர் நடத்தியவைகள் ஆகும். தமிழ் மக்களுக்கு, தமிழ்ப்பற்று உணர்ச்சிப் பூர்வமாக வர வேண்டும் என்பதற்காக, திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றவற்றிலிருந்து கட்டுரை எழுதியும், விளக்கஉரைகள் எழுதியும் தம் இதழ்கள் மூலமாக வெளியிட்டார்.
சங்க இலக்கியம் இதழ்
நம் தமிழ்ச் சமுதாயம், காதலும் வீரமும் நிறைந்த பண்பட்ட பழந்தமிழ் சமுதாயம் என்பதை மக்களுக்கு உணர்த்த எண்ணினார். 1944-இல் திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது சங்க இலக்கியம் இதழ். புலவர்களுக்கு மட்டும் அறிமுகமான சங்க இலக்கியம் பொதுமக்களும் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்விதழை வெளியிட்டார். ‘சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக்கடலில் எறிவோம்’ என்று பேசி வந்த சில அறிஞர்களுக்கு மத்தியில் சங்க இலக்கியம் இன்சுவை அமுது என்று மக்களுக்கு எடுத்துரைத்தார். முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்த பாலைத்திணை பிரிவு பற்றி பேசும் மாமூலனாரின் முப்பது பாடல்களுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதனை நாடகம் நடப்பது போன்று, காதல் காட்சிகளை கண்முன் நிறுத்தினாற் போன்று உரைஎழுதி இதழ் தோறும் வெளியிட்டார்.
இலக்கியம் இதழ்
விருதுநகரில் திங்கள் இருமுறை இதழாக 1947-ஆம் ஆண்டு வெளிவந்தது. இவ்விதழ் தமிழிலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு குறுக்கெழுத்துப் போட்டி நடத்தியது நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்களின் தன் வரலாறு தொடர் கட்டுரையாகவும், சங்க இலக்கியங்களில் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் பற்றிய விளக்கக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. தமிழ் எங்கெல்லாம் கெடுகிறதோ அங்கெல்லாம் கிளர்ச்சி செய்து தமிழ் எழுச்சிக்கு வித்திட்டது. இவ்விதழ் “சபாபதி” திரைப்படத்தில் தமிழாசிரியர் கோமாளி போல காட்டப்பட்டது. பாகவதர் சொந்தமாக எடுத்த திரைப்படத்திற்கு ‘ராஜமுக்தி’ என்று வடமொழிப் பெயர் வைத்தது போன்றவற்றை இலக்கியம் இதழ் கடுமையாகக் கண்டித்து தலையங்கம் எழுதியது. ஆங்கிலமும், இந்தியும் தழைத்தோங்கியிருந்த காலத்தில் தமிழை மீட்டெடுக்க பேரா. சி. இலக்குவனார் செய்த பெரும் முயற்சி. தமிழ் மக்களிடையே மொழிப்பற்றை ஏற்படுத்த இலக்கியம் இதழ் ஆயுதமாக பயன்பட்டது என்றே சொல்லலாம்.
திராவிட கூட்டரசு இதழ்
விருதுநகர் கல்லூரியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுத் தஞ்சைக்கு சென்ற இலக்குவனார், தஞ்சையில் ‘திராவிட கூட்டரசு’ என்னும் பெயரில் தமிழில் திங்கள் இருமுறை இதழும், ‘Dravidian Federation’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் திங்களிருமுறை இதழும் வெளியிட்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும் தமிழ் வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதால் இவ்விதழ் வெளிவந்துள்ளது. திராவிட கூட்டரசு என்ற பெயரே இவர் தமிழின் மீது கொண்ட பற்றைப் புலப்படுத்துவதாக உள்ளது. மாத ஊதியம் பெறாத காலத்திலும், தமிழுக்கு விடியல் ஏற்பட வேண்டும் என்பதற்காக முயன்ற தமிழ்த்தலைவர் இவர் என்றால் மிகையாகாது.
குறள்நெறி இதழ்
இவ்விதழ் குறள்நெறிக் கழகத்தின் சார்பில் குறள்நெறி எனும் மாத வெளியீடு புத்தக வடிவில் வெளிவந்தது. ‘உழைப்பில் உயர்ந்தேன்’ என்னும் நெடுங்கவிதை தொடராக வெளிவந்தது. திருவள்ளுவர், அர்த்தசாத்திரம் முதலான வடமொழி நூலிலிருந்து பெற்றுக் கொண்ட கருத்துகளையேக் குறளில் வழங்கியுள்ளார் என்று வையாபுரி பிள்ளையின் கருத்தை மறுக்கும் விதமாக ‘பொய்யா மொழியாரும், பொய்யாபுரியாரும்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதித் தொடராக வெளியிடப்பட்டது. இவ்விதழ் 1963ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டு திங்களிருமுறை இதழாக வெளிவந்தது.
இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக இந்தி பிரகடனப்படுத்தப்படப் போகிறது என்பதைத் தமிழர்களுக்கு உணர்த்தினார். அனைத்து மொழிகளுக்கும் சமநிலை தர அரசை வலியுறுத்துவது இவ்விதழின் குறிக்கோளாக இருந்தது. குறள்நெறி இயக்கத்தில் சேர விரும்புவோர் ‘வாழ்வில் எல்லா நிலைகளிலும் வள்ளுவர் வகுத்த குறள் நெறியையேப் பின்பற்றுவேன்’ என உறுதி கூறிக் கையொப்பமிட்டு அனுப்புபவர்கள் குறள்நெறி இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவர்களது பெயர்கள் முகவரிகளுடன் குறள்நெறி இதழில் வெளியிடப்பட்டன.
இவ்வாறு மக்கள் ஒழக்கமுறையில் வாழ வழிவகுப்பதோடு தமிழ் உணர்வும், தமிழ்ப்பற்றும் இலக்கியம் மூலம் ஏற்படச் செய்தார், அதனால் இவருக்குத் தமிழ்த்தாய், மொழிப்போர் தலைவர், தமிழ்க்காப்பபுத் தலைவர் என்ற பட்டங்கள் வழங்கப் பெற்றன.
முடிவுரை
பேரா. சி. இலக்குவனார் ஊர் ஊராகச் சென்று சங்க இலக்கியம், திருக்குறள் சொற்பொழிவு நடத்தி மக்களுக்கு மொழிப்பற்று, ஏற்படச் செய்த சொற்பொழிவாளர், இதழாசிரியர், கவிஞர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் என பன்முக ஆளுமை கொண்டவர். தனது பேச்சாலும், எழுத்தாலும் அன்றைய மாணவ சமுதாயத்தை ஈர்த்து, அவர்களுக்கு மொழிப்பற்றை மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு வரவேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் விழா, ஔவையார் விழா, இளங்கோவடிகள் விழா, தொல்காப்பியம் விழா, தமிழ் மறுமலர்ச்சி விழா என விழாக்கள் எடுத்து மாணவச் சமுதாயத்தை ஒன்று திரட்டி தமிழ் வளர்க்க முயன்றவர். பல்வேறு அரசியல் தலைவர்களின் மத்தியில் இருந்தும் கூட, அரசியலில் ஈடுபடாமல் தமிழுக்காகவேத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெரும் அறிஞர் பேரா. சி. இலக்குவனார் ஆவார்.
இவர் ம.தி.தா இந்துக்கல்லூரியில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புலவர்களுக்கு விழா எடுத்தது போன்று ம.தி.தா இந்துக்கல்லூரியில் தமிழ்துறை தமிழ் அறிஞர்களையும் போற்றும் விதமாகக் கருத்தரங்குள் நடத்தியது. பேரா. சி. இலக்குவனார்க்கும், ம.தி.தா இந்து கல்லூரியில் மூன்று நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
துணைநின்ற நூல்கள்
1. மறைமலை இலக்குவனார், இந்திய இலக்கிய சிற்பிகள், பேரா.சி.இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இரவீந்திர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுதில்லி, இரண்டாம் பதிப்பு, 2011.
2. இலக்குவனார் திருவள்ளுவன், படைப்பாளர் பார்வையில் பேரா.சி.இலக்குவனார், மூவேந்தர் அச்சகம், சென்னை -600014, 2008.
3. பேரா.சி.இலக்குவனார் - இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், இலக்குவனார் திருவள்ளுவன் (ப.ஆ), இலக்குவனார் இலக்கிய இணையம், 12 அ, வீணா தோட்டம், இரகுராமன் தெரு, அரும்பாக்கம், சென்னை - 600106. மூன்றாம் பதிப்பு, 2011.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.