பாடத்திட்டமும் பொது நோக்கமும் சிறப்பு நோக்கமும் - ஒரு மேலோட்டப் பார்வை
சீதாலட்சுமி
உதவித்தலைவர் / ஆ.மொ.ப (தமிழ்),
ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடு,
தேசியக் கல்வியியல் நிறுவனம், சிங்கப்பூர் - 637616.

இன்று கல்வித்துறை உலகெங்கும் ஒரு பொருள் பொதிந்த முதலீட்டுத்துறையாக அமைந்துள்ளது. கல்வி என்பதே ஒரு பெரிய முதலீடுதான். இந்த நிலையில் பல நாடுகள் கல்விக்கும் தற்காப்புக்கும் சுகாதாரத்துக்கும் அதிக அளவில் தம் பணத்தைச் செலவிடுகின்றன. நிதித்துறையின் வருவாய் பெருமளவில் இந்த மூன்று துறைகளுக்குச் செல்கின்றன. இந்த மூன்று துறைகளில் இன்று கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கதாக இடம் பெறும் பாடத்திட்டம் குறித்து இப்பகுதி நோக்குகிறது.
பாடத்திட்டம் என்பது மூன்று நிலைகளில் அமையும். அது இடம், பொருள், ஏவல் ஆகியவற்றுக்கு ஏற்ப அமையும். இங்கு, பாடத்திட்டம் என்ற சொல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று நோக்குவது பயன்மிக்கது. பொதுவாகப் பாடத்திட்டம் என்பது முற்காலத்தில் மூன்று நிலைகளில் இருந்தது என்றால் அது எவ்வாறு இருந்தது என்று பார்க்கும் போது, நாட்டுக்கான பாடத்திட்டம் (Curriculum for the Country),குறிப்பிட்ட துறைப் பாடத்துக்கான பாடத்திட்டம் (Curriculum for the Subject - This is the Syllabus for the Subject), வகுப்பறையில் குறிப்பிட்ட பாடத்தை நடத்தும் வகையில் வழிகாட்டும். அதாவது, நடத்தப் போகவிருக்கும் அந்த அரைமணி நேர அல்லது ஒரு மணிநேரப் பாடத்திற்கான பாடத்திட்டம் (Plan for the Lesson at the classroom) என்று பல நாடுகளிலும் ஆய்வுலகிலும் குறிப்பிடப்படும். தற்போது அவை சிங்கப்பூரில் கல்வி அமைச்சில் பாடக்கலைத் திட்டம், பாடத்திட்டம், பாடக்குறிப்பு என்று அழைக்கப்படுகின்றன.வேறு சில நாடுகளில் வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும் பாடத்திட்டம் என்பதை வகுப்பறையில் நடத்தப் போகும் பாடத்தினைத் திட்டமிடும் திட்டத்துக்குக் கொடுத்திருப்பதாகவும் அவ்வாறே தொடர்ந்து அழைப்பதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று நிலைகளிலான பாடத்திட்டம், பருநிலையிலான பாடத்திட்டம் (Macro Curriculum- Curriculum), நடுநிலையிலான பாடத்திட்டம் (Meso Curriculum- Syllabus), நுண்நிலையிலான பாடத்திட்டம் (Micro Curriculum Lesson Plan) என்ற முறையில் அவை இடம் பெறுகின்றன. வகுப்பறையில் இடம்பெறும் பாடத்திட்டம், நாட்டின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியான குறிப்பிட்ட பாடத்துறை தொடர்பான பாடத்திட்டத்தின் ஒரு சிறு பகுதியாக அமைகிறது. இந்தப் பாடத்திட்டம், ஆசிரியப்பயிற்சி பெறும் மாணவ ஆசிரியர்களுக்கு அவர்களது பாடத்தை அவர்கள் எவ்வாறு நடத்தப் போகிறார்கள் என்பதை மனத்திற்குள் ஒத்திகை பார்க்கவும் பார்த்த ஒத்திகையைப் புத்தகத்தில் எழுத உதவும் அல்லது தட்டச்சில் வடிவமைக்கவும் பேருதியாக அமையும். இது A4 தாளில் விரிவான முறையில் சுமார் ஐந்து பக்கங்களுக்கு அமையும். அதாவது வகுப்பில் பாடம் நடத்தும் போது பாடத்தில் பங்கேற்கும் மாணவர்கள் என்னென்ன செய்திகளைப் பெறுவார்கள், ஆசிரியர் எத்தகைய கேள்விகளைக் கேட்பார், மாணவர்கள் அவற்றுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆசிரியர் முன்னுரைக்கவும் ஊகிக்கவும் வேண்டியநிலை தற்போது உள்ளது.
இதன் வாயிலாக, அவர் ஒரு பாடத்தைப் பற்றித் திட்டமிடும்போது, அதாவது, தான் நடத்தவிருக்கும் பாடத்துக்கான திட்டத்தை எழுதும் போது, தமது வகுப்பறைப் பாடத்தைத் சிந்தனையில் முதலில் ஒத்திகை பார்த்துப் பின் தம் மனக்கண்ணில் ஒத்திகை பார்க்கும் ஒரு நிலை இங்கு இடம் பெறுகிறது. இதனால் அந்தப் பயிற்சி ஆசிரியர், முடிந்தவரை தம் பாடத்தை நன்கு நடத்த வழியும் உதவியும் கிடைக்கின்றன.
பாடத்திட்டம் என்பது பாடத்தில் என்னென்ன கூறுகள் இடம்பெறும் என்ற ஆசிரியரின் சிந்தனைகளின் சுருக்கத் தொகுப்பு என்கிறார் ஃபேரல்.
(Farrel, 2002 cf.Amalia & Imperiani, (2013) இல். ப. 277)
அதாவது, ஆசிரியர் பாடத்தை நடத்த வரும் முன்பே பாடத்தில் என்னென்ன இடம் பெறப்போகிறது என்பது குறித்து முறைப்படி பட்டியல்களைத் தயாரிக்க வேண்டும்.அப்போதுதான் அவருக்குப் பாடத்தில் என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறார் என்று தெரியும்.
பாடத்திட்டம் என்பது அனுபவமில்லா ஆரம்ப ஆசிரியர்களுக்கும் அனுபவமிக்க ஆசிரியர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்கிறார் ஜென்ஸென்
(Jensen cf. Amalia&Imperiani, 2013, pg. 277)
இப்போது ஒரு பாடத்திட்டத்தில் இடம்பெறும் பொது நோக்கம், சிறப்பு நோக்கம் ஆகியன குறித்த செய்திகள் இங்கு இடம் பெறுகின்றன.
பொது நோக்கம் (General Objective)
ஒரு பாடத்தின் முடிவில் என்ன நிறைவேற்றப்பட உள்ளதோ அதைப் பற்றிய பருந்துப் பார்வைதான் பொது நோக்கம். ஒரு பாடத்தின் முடிவில் என்ன நிறைவேற்றப்பட உள்ளதோ, பாடத்தின் முடிவில் மாணவர்கள் எத்தகைய திறன்களைப் பெறுகிறார்களோ அதைப்பற்றி நேரடியாக, கூர்மையாக, ஆழமாக எடுத்துக்காட்டும் பகுதிதான் சிறப்பு நோக்கம்.
ஒரு பாடத்தின் திட்டத்தில் எந்த இடத்தில் சிறப்பு நோக்கம் நிறைவேறுகிறது என்பதை ஓர் ஆசிரியர் தெளிவாக எடுத்துக்காட்டத் தெரிந்திருக்க வேண்டும். பொது நோக்கம் பரந்துபட்டது. சிறப்பு நோக்கம் ஊசியைப் போல் கூரானது. ஒரு பொது நோக்கம் பல பாடங்களுக்கு வரலாம். ஆனால், அத்தனைப் பாடங்களுக்கும் ஒரே சிறப்பு நோக்கம் அல்லது இரண்டே சிறப்பு நோக்கங்கள் அமைய இயலா. ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு வகையான சிறப்பு நோக்கங்கள் அமைந்திருக்கும்.
பொதுநோக்கம் என்பது வரிசை முறைப்படி அமைந்த பல படிநிலைகளின் இறுதியில் நிறைவேற்றப்படும் ஓர் இலக்கு. இது ஒரு பாடத்தை மேல்நிலையில் அல்லது பருந்துப் பார்வை நிலையில் (Holistic View) அல்லது முதல் நிலையில் பார்க்கும் போது நமக்குத் தெரிவது. ஒரு வீட்டினை வெளியே இருந்து பார்க்கும் போது அந்த வீடு எப்படித் தோன்றுகிறதோ அது போல் இருப்பது. வீட்டைப்பற்றி முழுமையாக அறியத் தலைவாசலைக் கடந்துதான் போக வேண்டும். அதுபோல் பொது நோக்கத்தைக் கடந்துதான் சிறப்பு நோக்கத்துக்குச் செல்ல வேண்டும். இந்தப் பொது நோக்கம் மாணவ ஆசிரியர்கள் பாடத்துக்கான துணைக்கருவிகளைத் தேடவும் வடிவமைக்கவும் உதவியாக அமையும்.
சிறப்பு நோக்கம் (Special Objective)
வாசிப்புப் பாடமாக இருந்தால் பாடத்தின் இறுதியில் மாணவர்கள் ஒரு பகுதியைப் பொருளுணர்ந்து படிக்க அறிவர் என்று வந்தால் சிறப்பு நோக்கம், அதன் ஆழமான நிலையை எடுத்துக்காட்டும். மேலும் அந்தச் சிறப்பு நோக்கத்தை மாணவர்களுக்குத் தரப்படும் மதிப்பீட்டிலிருந்து உணரமுடியும். எனவே ஒரு பாடத்தில் பொதுநோக்கமும் அதை ஆழமாக நோக்க வழி செய்யும் சிறப்பு நோக்கமும் / சிறப்பு நோக்கங்களும், அந்தச் சிறப்பு நோக்கத்தை / சிறப்பு நோக்கங்களை மாணவர்கள் அடைந்து விட்டார்களா என்பதைப் பாடத்தின் இறுதியில் தரப்படும் மதிப்பீட்டின் வழியே அறிவதும் ஒரு பாடத்தில் இடம்பெற வேண்டிய அவசியமான கூறுகள். இந்தக் கூறுகளுக்கு வசதி செய்வனவாகப் பாடத்தை ஆசிரியர் நடத்திச் செல்லும்படி நிலைகள் அமைகின்றன. இந்தப் படிநிலைகள் மாணவர்கள் அப்பாடத்தில் பெறக்கூடிய கற்றல் அனுபவங்களை அவர்களுக்குத் தருகின்றன. பொதுவாக, ஒரு பாடத்தில் ஒரு பொது நோக்கமும் இரண்டு சிறப்பு நோக்கங்களும்அமையலாம்.
இது ஒரு மணி நேரப் பாடத்திற்கு அல்லது இரண்டு பாடவேளைகளுக்குப் பொருந்தும். ஓரிரண்டு கூடுதலாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அவை குறிப்பிட்ட பாடத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
வாசிப்புப் பாடமாக இருந்தால் மற்றொரு வகையிலும் பொதுநோக்கம் அமையலாம். பாடத்தின் இறுதியில் மாணவர்கள் பகுதியைப் பொருளுணர்ந்து உரக்க வாசிக்க அறிவர் என்று வந்தால் அப்பாடத்தின் சிறப்பு நோக்கமாக உச்சரிப்பு, உரக்க வாசித்தல் ஆகியன இடம்பெறும். இவை இரண்டும் அப்பாடத்தில் கட்டாயம் நடைபெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் செய்யும் மதிப்பீட்டில் அவை நிறைவேற்றப்பட்டது தெளிவாகக் காட்டப்பட வேண்டும். இல்லை என்றால் ஏதோ எழுதுவதற்காக எழுதப்பட்டது போல் அமையும்.
எழுத்துப் பாடமாக இருந்தால் பாடத்தின் இறுதியில் மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை எழுதும் திறனில் மேம்படுவர் அல்லது எழுத அறிவர் என்று பொது நோக்கத்தில் கூறலாம். மாணவர்கள் பாடத்தின் இறுதியில் கருத்துகளை நிரல்பட எழுதுவதையும் கருத்து விளக்கக் கட்டுரையை எழுதுவதையும் அறிவர் என்றால் அங்கு அவை சிறப்பு நோக்கங்களாக அமையும்.
அப்படிப்பட்ட நிலையில் பாடத்தின் இறுதியில் தரப்படும் பணி ஒரு கருத்து விளக்கக் கட்டுரையை எழுதுவதாக அமையும்.கேட்டல் பாடமாக இருந்தால் பாடத்தின் இறுதியில் மாணவர்கள் தாம் கேட்கும் பனுவல் எதைக் கூறுகிறது என்று அறிந்து, தமக்குத் தரப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்க அறிந்து கொள்வர் அல்லது விடையளிப்பதில் மேம்படுவர் என்று கூறலாம்.
சிறப்பு நோக்கம் என்றால் மாணவர்கள் தேசிய நாள் குறித்த பகுதியைத் தெளிவாகவும் கவனமாகவும் கேட்டுத் தரப்பட்ட வினாக்களுக்கு விடையளிப்பர் என்றும் தேசிய நாளைப் பற்றிப் பல அரிய செய்திகளை அறிந்திருப்பர் என்றும் கூறலாம். இதற்கு ஏதுவாக, மாணவர்கள் கேட்டல் கருத்தறிதல் பகுதியில் தரப்படும் வினாக்களுக்கு விடையளிப்பதுடன் ஆசிரியர் பாடத்தின் முடிவில், “இதுவரை இப்பாடத்தில் நீங்கள் அனைவரும் என்ன கற்றுக் கொண்டீர்கள்?” என்று கேட்டு அவர்கள் அறிந்த அரிய செய்திகளைச் செவிமடுக்க வேண்டும். இதனால் மாணவர்கள் உண்மையிலேயே அரிய செய்திகளை அறிந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தலாம்.
பேசுதல் பாடமாக இருந்தால் மாணவர்கள் பாடத்தின் இறுதியில் தரப்பட்ட படத்தைப் பற்றி அறிந்து அது தொடர்பாகத் தரப்படும் வினாக்களுக்கு விடை தர அறிவர் அல்லது விடை தருவதில் மேம்படுவர் என்று பொது நோக்கத்தைக் கூறலாம். மாணவர்கள் ஆசிரியர் வகுப்பில் காட்டிய சுனாமி படத்தின் பின்னணியைப் பற்றியும் படத்தின் பலவகைக் கூறுகள் (படத்தின் நிறம், படத்தில் இருப்போர், அவர்களைப் பற்றிய செய்திகள், படம் காட்டும் புவியியல் பகுதி, படம் காட்டும் காலம், படம் காட்டும் பண்பாட்டுச் செய்திகள் போன்றன)
சுனாமி என்றால் என்ன என்பதுடன் சுனாமி பற்றிய செய்திகள் பலவற்றையும் அறிந்திருப்பதுடன் அவற்றைப் பற்றி நன்கு விளக்கமாகப் பேசத் தெரிந்திருப்பர் என்றும் கூறலாம்.
பயன்பாட்டு இலக்கணப் பாடமாக இருந்தால் மாணவர்கள் பாடத்தின் இறுதியில் தரப்பட்ட இலக்கணக் கூறுகளை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது என்று அறிந்து பயன்படுத்த முனைவர் அல்லது பயன்படுத்த ஊக்கம் பெறுவர் என்று கூறலாம். இங்கே இலக்கணக் கூறுகள் என்றால் மாணவர்கள் யாரை, எதை என்ற வினாக்களுக்கு விடை தரும் வகையில் ஐ என்ற வேற்றுமை உருபை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பயன்படுத்த அறிவர் என்றும் அவ்வாறு பயன்படுத்துவதைத் தம் பேச்சில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்துவர் என்றும் சிறப்பு நோக்கங்களைக் கூறலாம். அதற்கு ஏற்ப ஆசிரியர் பாடத்தின் இடைப்பகுதியில் அல்லது இறுதியில் மாணவர்களை ஐ வேற்றுமை உருபைப் பயன்படுத்திப் பேசும் வகையிலும் எழுதும் வகையிலும் மதிப்பீட்டைத் தந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடில் பாடத்திட்டம் சரியில்லை என்றும் சிறப்பு நோக்கங்கள் முழுமையாக நிறைவேறவில்லை என்றும் குறிப்பிடலாம்.
இங்கே பயன்பாட்டு இலக்கணம் என்பதால் அவற்றை ஆசிரியர் மாணவர்களின் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் மதிப்பீட்டில் தர வேண்டும். பொதுநோக்கப் பகுதியில், பொதுவாக என்ன கிடைக்கும் என்று கூறலாம். இதுதிருமணத்திற்குச் சென்றால் திருமண அழைப்பிதழில் இடம் பெற்றுள்ள மணமக்களின் திருமணத்தைக் கண்டுகளித்து மகிழ்வர் அல்லது கண்டுகளிப்பதுடன் ஆசீர்வதித்தும் வருவர் என்று கூறலாம். ஆனால், சிறப்பு நோக்கம் எனும் போது அழைப்பிதழில் உள்ள மணமக்களின் திருமணம் எவ்வாறு என்னென்ன படிநிலைகளுடன் நடைபெற்றது என்று அறிந்து வருவர். அத்திருமணத்தில் இடம்பெற்ற படிநிலைகளைப் பற்றி ஒரு படைப்பைச் செய்ய அறிந்திருப்பார்கள் என்று கூறலாம். இதுவரை தாங்கள் பார்த்த திருமணங்களிலிருந்து இந்தத் திருமணம் எவ்வாறு வேறுபட்டு அமைகிறது என்று அறிந்து எடுத்துக்கூறும் திறன் பெறுவர் என்றும் கூறலாம்.
பொதுநோக்கம் எனும் போது பாடத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அது எடுத்துச் சொல்ல வேண்டும். பாடத்தில் மாணவர்கள் எதை ஏன் எவ்வாறு கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று கூற வேண்டும்.
இறந்த காலம் பற்றிய பாடம் என்றால் பாடத்தில் மாணவர்கள் இறந்த காலம் பற்றியும் அது எவ்வாறு பயன்பாட்டில் அமையலாம் என்றும் சிறுவர் கதை வழியே அறிவார்கள் என்று கூறமுடியும்.
இந்தக் குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்கள் எதை அடையப் போகிறார்கள் என்றும் அதை எவ்வாறு அடையப் போகிறார்கள் என்றும் அதனால் என்ன பயன் பெறுவார்கள் என்றும் கூற வேண்டும். அப்போது அது மிகத் தெளிவாக இருக்கும்போது சிறப்பு நோக்கமாக அல்லது சிறப்பு நோக்கங்களாக வெளிப்பட வழிகள் உள்ளன.
பாடத்திட்டத்தின் வழியே மாணவர்கள் அந்தப் பாடத்தில் என்ன கற்கப் போகிறார்கள் என்று எடுத்துக்காட்ட வேண்டும். நீங்கள் ஆசிரியராக இருக்கும்பட்சத்தில், என்னென்ன கருவிகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாடத்தை நடத்துவீர்கள், என்ன மாதிரியான மதிப்பீட்டை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்று கூற வேண்டும். பொதுவாகப் பாடத்திட்டத்தின் தொடக்கத்தில் அல்லது முதற்பகுதியில் நோக்கம் அமையும். பாடத்தின் கடைசியில் மாணவர்கள் என்ன படித்திருப்பார்கள் என்பதை முன்கூட்டியேக் கூறுவதுதான்,நோக்கம். அது பொதுவாக அமையும் போது, அதாவது, பருந்துப் பார்வையாக அமையும் போது பொது நோக்கம் எனப்படும். ஆழமாகக் கீழ்நிலையில் இருக்கும் போது சிறப்பு நோக்கமாகஇருக்கும்.
மாணவர்கள் பாடத்தின் இறுதியில் எதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அது பாடத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். பாடத்தின் முடிவில் என்ன பயனை மாணவர்கள் பெறுவார்கள், எத்தகைய புதிய அறிவை மாணவர்கள் பெறுவார்கள் என்று முடிவு செய்து அதை அடிப்படையாக வைத்துப் பின்னால் இருந்து முன்னால் வரும் வகையில் (from back to front) பாடத்திட்டத்தை எழுதலாம். இங்கே பாடத்தின் முடிவில் மாணவர்கள் திட்டவட்டமாக எதிர்பார்த்த நோக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நோக்கத்தைப் பொது நோக்கமாகவும் சிறப்பு நோக்கங்களாகவும் வடிவமைக்க முடியும். சரி முடிவை எப்படி அறிவது? ஆசிரியர் பாடத்தின் இறுதியில் தரும் மதிப்பீட்டிலிருந்து இதை உறுதி செய்யமுடியும். எனவே பாடத்தின் இறுதியில் வரும் மதிப்பீடு நன்கு திட்டமிட்டு அமைய வேண்டும். பாடத்தின் நோக்கம் தொடக்கமாக இருந்தால் பாடத்தின் இறுதி மதிப்பீடாக இருந்தால் பாடத்தில் மாணவர்களின் கற்றல் அனுபவங்கள் பாடத்தின் இடைப்பகுதியாக இடம்பெற வேண்டும்.
எடுத்துக்காட்டாகப் பாடம், ஒரு கட்டுரை எழுதுவது தொடர்பான பாடமாக இருந்தால், அப்பாடத்தில் கட்டுரையை எழுத வைக்கப் போகிறோமா அல்லது கட்டுரை எழுதுவதற்கான ஆயத்தத்தைச் செய்யப்போகிறோமா என்று சிந்திக்க வேண்டும். அப்போது பாடத்தின் முடிவு அதற்கு ஏற்ப அமையும். அப்படி அமைய ஆசிரியர் தமது சிறப்பு நோக்கங்களைக் கட்டுரைக்கு ஆயத்தத்தைக் கற்றுத் தருவதற்காக வடிவமைக்கப் போகிறாரா அல்லது கட்டுரையை முழுமையாக எழுதுவதற்காக வடிவமைக்கப் போகிறாரா என்று தெளிவாக வரையறுத்து, முடிவு செய்து பின் எழுத வேண்டும். இவ்வாறு பொது, சிறப்பு நோக்கங்கள் ஒரு பாடத்தில் இடம் பெறுவது ஆசிரியர் தெளிவாகத் தம் பாடத்தைக் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.
ஒரு பாடத்தில் சிறப்பு நோக்கம் என்பது பாடத்தின் நடுநாயகமாக இருந்து பாடத்தைப் பொது நோக்கத்திலிருந்து பாடத் தொடக்கம், பாட வளர்ச்சி, பாட முடிவு என்று கொண்டு சென்று பாடத்திற்கு ஒரு நல்ல முமுமையையும் முடிவையும் தரும். பாடத்தை நன்கு நடத்திச் சென்று முடிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் பொருத்தமில்லாத் துணைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. பொருத்தமான துணைக்கருவிகளையும் வெண்பலகையையும் கணினியையும் தம் மாணவர்களின் ஈடுபாட்டுடன் கூடிய அனுபவப் பகிர்வுகளையும் பயன்படுத்திப் பாடத்தைக் கொண்டு செல்ல முடியும்.
எனவே, வகுப்பறையில் ஒரு பாடத்துக்குப் பொருத்தமான பாடத்திட்டத்தின் உதவியுடன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடத்தை நடத்திச் செல்வதில், பாடத்துக்கு உயிர் தருவதில் திறம்பட்ட ஆசிரியரை விஞ்ச யாரும் வர இயலாது. இத்தகையவர் பாடத்தை நடத்தி முடித்ததும் இன்றைய பாடத்தில் எது சிறப்பாக அமைந்தது, எப்பகுதி மாணவர்களை அதிகம் பேசவைத்தது, எந்தப்பகுதி மாணவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாத பகுதியாக அமைந்த, வகுப்பறையில் கூடுதல் உயிரோட்டத்தைத் தந்த பகுதி எது, எந்தப்பகுதி மாணவர்களின் சிந்தனையை அதிகம் தூண்டியது என்று எதிரொளித்துத் தொடர்ந்து தன் பாடத்தை மேம்படுத்துவார். இங்கு அவர் மனத்தில் நினைத்தாலே அவரது அடுத்த பாடம் மிகச்சிறப்பாக அமைந்துவிடும். இதுதான் கற்பித்தலின் அதாவது பாடத்திற்கு உயிர் கொடுத்தலின் உத்தம தத்துவம்!
மேற்கோள் நூல் / கட்டுரை
Amalia&Imperiani, (2013). Mentor coaching to help pre-service teachers in designing an Effective Lesson Plan. Indonesian Journal of Applied Linguistics, Vol. 2 No. 2, January 2013, pp. 275-280
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.