சீர்மிகு கட்சி மாநகர்
மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.
முன்னுரை
உலகில் உள்ள பழமையான நகருள் காஞ்சிபுரமும் ஒன்று. அது மிகவும புனிதமான நகரும் கூட. அது கோயில் நகரம் என்ற சிறப்பு பெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் தலமான காசிக்கு இணையாக இந்நகரைக் கொள்வர். இத்தகைய புனித நகரான காஞ்சிபுரம் சங்க காலம் முதல் சிறப்புற்றுத் திகழ்ந்து வந்தது. அது தொண்டை நாட்டின் தலைநகரென்ற பேறு பெற்றது. இந்நகர் சங்க காலத்தில் திருவெஃகா என்றும், கச்சி என்றும் அழைக்கப்பட்டது. சங்க காலக் கச்சி மாநகரைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
கச்சியின் தோற்றம்
தொண்டைநாடு என்பது வட தமிழ்நாடும் ஆந்திராவின் தென் பகுதியும் சேர்ந்த பகுதியாகும். இதன் தலைநகர் காஞ்சிபுரமாகும். காடுகளும் மலைகளும் நிறைந்த இப்பகுதியைச் சீர்திருத்தி நாடாக்கியப் பெருமை சங்க காலச் சோழ மன்னன் கரிகாலனையேச் சாரும். அவனே காட்டை அழித்து நாடாக்கி காஞ்சி நகரை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தினான். மேலும் அவன் தொண்டை நாட்டை 24 கோட்டங்களாகப் பகுத்தான். அவன் இமயம் நோக்கிப் படையெடுத்த பொழுது, வழியில் சந்தித்த ”சிந்து மேதான்” என்ற வேடன் மூலம் காஞ்சித் தலத்தின் பெருமையை அறிந்து அந்த நகரைப் புதியதாக உருவாக்கியளித்தான் என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
“என்று முள்ளவின் நகார் கலியுகத்து
லிலங்கு வேறுகரி காற்பெரு வளத்தோன்
வற்றி றற்புலி யிமயமால் வரைமேல்
வைக்க வெகுவோன் றன்க்கிதன் வளமை
சென்று வெடன்முன் கண்டுரை செய்ய
திருந்து காகுமென் குட்ட வகுத்து
குன்று போலுமா மதில் புடை போக்கிக்கு
குடிய ருத்தின கொள்கையின் விளக்கும்”
(பெரிய புராணம். திருக்குறிப்புத் தொண்டர் புரா - 82)
இந்நகரை தாமரை மொட்டு வடிவில் கரிகாலன் வடிவமைத்தான். இது திருவிழாக்கள் மலிந்த நகராகவும், அகன்ற தெருக்கள் உடைய நகராகவும் சங்க காலத்தில் திகழ்ந்தது.
“நீல நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக உருவற் பயந்த பல்லிதழ்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிய”
(பெரு.பா.படை:402.4)
காஞ்சி மாநகர் குறித்து சங்க இலக்கியங்கள் சிறப்புடன் பேசுகின்றன. இந்கரைக் கச்சி என்றும் அவை சுட்டுகின்றன. பரிசில் பெற்று பெரும்பாணன் ஒருவன் மற்றொரு வறிய பாணனுக்கு காஞ்சியைப் பற்றி உரைக்கும் செய்தி பெரும்பாணாற்றுப் படையில் உள்ளது. பண்டைய கச்சியில் பாம்பைப் படுக்கையாகக் கொண்டு திருமால் பள்ளி கொண்டிருந்தார். அங்கு அடர்ந்த சோலைவனமும், குருக்கத்திக் கொடிகளும், காஞ்சி மரங்களும் மிகுந்து காணப்பட்டன. இச்சோலைகளுக்கு அப்பால் காவற் காடுகளும், அதனை அடுத்து கச்சியின் கோட்டை மதிலும் காணப்பட்டன. இங்குதான் திருமாலின் திருப்பதியான திருவெஃகா காணப்பட்டது.
“பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் அங்கண்”
(பெரு.பா.படை:373)
இதேச் செய்தியை திருமங்கையாழ்வாரும் தம் திருவாய்மொழியில் உறுதிசெய்கின்றார்.
“பாந்தன் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெகஃகாவுளே”
(பெரிய.திரு:10.1.7)
கச்சியின் சிறப்பு
இந்நகரில் சோலைகளும் நெடிய தெருக்களும் மறவர் குடியிருப்புகளும் அங்காடிகளும் காவற் காடுகளும் எல்லா சமயத்தவரின் கோயில்களும் நிறைந்து காணப்பட்டன. திருவெஃகா என்பதே பிற்காலத்தில் வேகவதி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட ஆறாக விளங்கியது. இச்செய்தியை பல்லவர் காலக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன (எஸ்.எஸ்.ஐ.தொகுதி.3.எண்:352). இக்கருத்தையேப் புராணக் கதைகளும் ஆதரித்துப் பேசுகின்றன. ஒரு சமயம் பிரமன் திருவெஃகா என்ற கோயில் அருகே தவம் செய்து கொண்டு இருந்த போது அத்தவதைக் கெடுக்க விரும்பிய சரஸ்வதி தேவியானவள் வெஃகா என்ற ஆறாக உருவெடுத்து அவன் முன் தோன்றினாள். ஆற்று வெள்ளத்தைக் கண்ட பிரமன் அஞ்சி, திருமாலை வேண்ட அவரும் நீரை தடுக்க அணைபோன்று அவ்விடம் பள்ளி கொண்டார். ஆடையற்று பள்ளி கொண்ட திருமாலைக் கண்ட கலைமகளும் வெட்கி தன் போக்கை மாற்றிக் கொண்டாள் என்ற இச்செய்தி காஞ்சி தலபுராணத்தில் காணப்படுகின்றது (செங்கல்பட்டு மாவட்ட மானுவல் (1879) ப:133)
இது தவிர சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய மணிமேகலையில் காஞ்சி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இங்கு பெரிய கோட்டை இருந்ததையும், சோழன் தொடுகழற் கிள்ளி வளவனின் தம்பியாகிய இளங்கிள்ளி கட்டிய புத்தர் கோயிலையும் மணிமேகலை பதிவு செய்துள்ளது.
“தொடுகழல் கள்ளி துணை இளங் கிள்ளி
செம்பொன் மாச்சினைத் திருத்தணி பாசடைப்
மைப்பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது...”
(மணி,28.172-175)
அத்துடன் அந்நகரில் முக்காலத்தையும் அறிவிக்கும் கந்திற் பாவை என்ற தெய்வத்தின் கோயிலும் காணப்பட்டது. இது தவிர, சாத்தன் என்ற காரி கடவுளின் கோயிலும் இந்நகரில் காணப்பட்டது. இமயப் படையெடுப்பின் போது இத்தெய்வத்தை வணங்கிய கரிகால் சோழனுக்கு இத் தெய்வம் செண்டு (ஆயுதம்) அளித்து ஆதரித்தது.
“கச்சி வளைக்கச்சி காமக்கோட்ட டங்காவல்
மெச்சி இனித்திருக்கும் மெச்சத்தான் - பூச்செண்டு
கம்பக் களிற்றுத் கரிகாற் பெருவளத்தான்
செம்பொன் திரி திரித்த செண்டு”
எனவே காஞ்சியானது ஆரம்பத்தில் திருவெஃகா என்று அழைக்கப்பட்டு பின்னர் கச்சி என்றும், கச்சிப்பேடு என்றும் அழைக்கப்பட்டது. இந்நகரத்தின் கரையில் வேகவதி நதி பாய்ந்தோடியது. அதன் கரையிலே இந்நகர் அமைந்து செழித்த செய்தியை ”பூ மலி பெருந்துறை” என்ற வரிகள் உறுதிசெய்யும். சங்க காலக் கச்சியில் பல புலவர் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். கச்சிப்பேட்டு நன்னாகையார், கச்சிபேட்டு இளந்தச்சனார், கச்சிபேட்டு பெருந்தச்சனார் போன்றோர் அங்கு வாழ்ந்து இலக்கிய பணி புரிந்தனர்.
கச்சி என்பதும் கச்சிப்பேடு என்பதும் வெவ்வேறான பகுதியாகும். கச்சிப்பேடு என்பது கச்சியின் புறநகார் பகுதியாகும். இச்செய்தியைக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. கச்சிப்பேட்டில்தான் புகழ்பெற்ற
பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் (எ.ஆர்.இ.எண்:206-1915) கச்சபேஸ்வரர் கோயில் (எ.ஆர்.இ.எண்:79-1921) உலகளந்த பெருமாள் கோயில் (எஸ்.எஸ்.ஐ.தொகுதி:3.எண்:1942) போன்றவை அமைந்திருந்தன. இக்கருத்தை உறுதி செய்யும் சோழர்களின் திருவாலங்காட்டு செப்பேடுகள்” எயிற்கோட்டத்து எயில் நாட்டு கட்சிப்பேடு”(எஸ்.எஸ்.ஐ.தொகுதி:3எண்:205) என்று இந்நகரை அழைப்பதை எண்ணிப்பார்க்கலாம். எனவே, சங்க காலத்திற்கு முன்னும், சங்க காலத்திலும் திருவெஃகா என்று அழைக்கப்பட்ட பகுதியானது சங்கம் மருவிய காலத்திலும் பல்லவர் சோழர் காலத்திலும் கச்சி மற்றும் கச்சிப்பேடு என்றும் அழைக்கப்பட்டது. திருவெஃகா என்று அழைக்கப்பட்ட வேகவதி ஆறும் திருமாலின் உறைவிடமும் அமைந்த பகுதியானது பிற்காலத்தில் கச்சிபேடு என்று அழைக்கப்பட்டதை தொல்லியல் சான்றுகளும் உறுதி செய்கின்றன (எ.ஆர்.இ.எண்:21-1921). முதலில் கச்சிப்பேட்டும் பின்னர் கச்சியும் அடுத்தடுத்து அமைந்திருந்தன.
முடிவுரை
காஞ்சிபுரம் பழமையும் பெருமையும் ஒருங்கேக் கொண்ட நகராகும். இந்நகர் புத்தர் பிரான் வந்து தரிசித்த பெருமையுடையது. புகழ் பெற்ற அசோகர் இந்நகருக்கு வந்து ஓர் பௌத்த ஸ்துபத்தை அமைத்துத் தந்தார். இது தவிர மகான்களான ஆதிசங்கரர், இராமானுஜஎ மற்றும் புகழ்பெற்ற புனிதப் பயணியான யுவாங் சுவாங் போன்றோரும் இந்நகருக்கு வருகை புரிந்துள்ளனர். காளிதாசர் போன்ற மகாகவிகளும் இந்நகரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். தொண்டைமான் இளந்திரையன் போன்றோர் இந்நகரில் இருந்து சிறப்புடன் ஆட்சி செய்துள்ளனர். சங்கக் காலத்தில் இப்பகுதி தமிழகத்தின் தலைச்சிறந்த வைணவத் தலமாக திகழ்ந்தது. இன்று அந்நகர் கோயில் நகராகத் திகழ்வதற்கு அன்றே அடித்தளமிடப்பட்டது. தமிழர்கள் நகரங்களை உருவாக்கி அளிப்பதில் உலகிற்கே முன்னோடிகள் என்பதற்கு பழமையான காஞ்சி நகரே சாலச்சிறந்த எடுத்துக்காட்டு.
பார்வை நூற்பட்டியல்
1. பெரிய புராணம், திருமகள் நிலையம், சென்னை. (2012)
2. பெரிய திருவாய் மொழி, சீனிவாஸ அச்சுக் கூடம், காஞ்சிபுரம். (1911)
3. பெரும்பாணாற்றுப்படை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிட், சென்னை. (2010)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.