வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு
இல. ஜெயபிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்), தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர் - 636 121.
முன்னுரை
மனிதனின் வாழ்க்கை கடவுளின் ஆணைப்படி நிகழ்வது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது எனும் கூற்று இதனை நன்கு உணர்த்தும். ஆயினும் மனிதன் மாயையில் மூழ்கி மாயவாழ்வை மெய்யென்று எண்ணி நிலையில்லா இன்பம் அடைகின்றான். நீர்க்குமிழி வாழக்கை என்றும் இன்பம் என நினைக்கும் உள்ளத்திற்கு வள்ளலார் கூறும் காட்டும் மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.
மரணமிலாப் பெருவாழ்வு
இந்த உலகம் ஐந்து பூதங்களால் ஆனது போன்றே மனித உடலும் ஐந்து புலன்களைத் தன்னகத்தே கொண்டது. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி, என்றும் இதனால் பெறும் பலனை சுவை, ஒளி , ஊறு, ஓசை, நாற்றம் என்றும் கூறுவர் உலகியலோர். இவைகள் வரம்பு மீறிச் செல்கின்ற போது தன் வயமிழந்து படைத்தானையும் நினையாது என்று சிவஞான போதம் எட்டாஞ் சூத்திரம் விளங்கும்,
“ஐம்புல வேடரின் அயர்ந்தனை
வளர்ந்து என்தம் முதல் குருவுமாய்த்
தவத்தினில் உணர்ந்த விட்டு அந்நியம்
இன்மையின் அரன் சூழல் செலுமே” (1)
வள்ளுவர் கூறும் போது நிலத்திற்கு ஏற்ப நீரின் சுவை மாறுபடுவது போல் இனத்திற்கு ஏற்ப மனித அறிவும் நிலை பெயரும் என்கிறார்.
“நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும் மாந்தர்க்கு
இணத்தியல்ப தாகும் அறிவு” (2)
இந்த மாறும் அறிவை மாற்றக்கூடிய வல்லமை இறைவனுக்கு மட்டுமே உண்டு. அவ்விறையைப் பசு, பாசத்தை ஒழிக்கும் போது கண்டு இன்பம் பெறும் இந்த இன்பமே இறவாத இன்பமாகும்.
மனிதன் குழவிப்பருவம் முதல் கிழப்பருவம் வரை பல்வகை இன்பங்களை அனுபவிக்கின்றான். அந்த மகிழ்ச்சி ஒவ்வொரு நிலையிலும் மாறுபடுகிறது. இறுதி நிலையில் அவன் வேண்டுவது பற்றுக்களைத் தவிர்க்க இறைவனை நோக்கிய தவநிலை. இதனைத் தொல்காப்பியம் அடியிற்கண்டவாறு உணர்த்தும்,
“காமஞ்சான்ற கடைக்கோற் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனுக் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்த தன் பயனே” (3)
பற்றற்றவனின் பற்றைப் பெறவேண்டும் எனும் நிலையில் இறைவனையே நினைத்து உருகுகின்றான் என்று தாயுமானவர்,
“அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளும் சுமைகாண் பராபரமே” (4)
என்பர். இறையோடு மூழ்குவோருக்கு யான், எனது என்றும் பகல் இரவாவதுகூடத் தெரியாது என்றும் கூறுகிறாள் மாணிக்கவாசகர்,
“எனை நான் என்பதறியேன் பகலிரவு ஆவதும் அறியேன்” (5)
வள்ளலாரின் இந்த நிலையே பெருவாழ்வு என்று சுட்டுகிறார்.
“நினைந்து நினைந்து தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந் தளேமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந் தேத்து நாம் நும்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்” (6)
என்று நினைந்தும் நெகிழ்ந்தும் நினைந்தும் வனைந்தும் போற்றின் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம் என்கிறார்.
எப்பொருளைக் காண்கினும் பற்று விட்டு எல்லாம் இறையே என்று காண்கின்றது மனம். ஓடும் பொன்னும் ஒன்றே என்று நினக்கிறது. வீடுபேற்றின் மேல் இன்பம் கொள்வதும் அவாவே எனவே அதுவும் வேண்டா என்கிறார். இதுவே மரணமிலாப் பெருவாழ்வு என்பது வள்ளலாரின் கருத்துமாகும்,
“ஓடும் செம்பொன்னும் ஓக்கவே றாக்குவர்
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” (7)
என்கிறார் சேக்கிழார். வள்ளலார் இதனைக் குறிப்பிடும் போது,
“புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழி ஓர் பொய்மொழி என்னாதீர்
வருந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
உடமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றோ” (8)
என்கிறார்.
மேலும் திருநாவுக்கரசர் கூறும் பொழுது
“உற்றார் யாருளரோ உயிர் கொண்டு போம்பொழுது
குற்றலாத்துறை கூத்தனல்லால் நமக்குற்றார் ஆருளரோ” (9)
என்கிறார். ஆகவே கடவுளையே நினைத்து அவனருளால் அவன்தாள் வணங்கிப் பெறும் இன்பமே மரணமிலாப் பெருவாழ்வு என்றும் மரணம் என்பதே அதற்கில்லை.
இறவாத இறை அன்பு
பன்னிரு திருமுறை கண்டோரும் நாயன்மார்களும் பன்னிரு ஆழ்வார்களும் அதனையன்றி சாத்திரஞ் செய்தோரும் வள்ளலார் போன்றோர் பெற்ற இன்பமும் இறவாத அன்புதான். இறவாத “மரணமில்லாத இந்த இரு சொற்களின் பொருளும் ஒன்றே வள்ளலார் இறை இன்பம் கண்டவர். அதனைத் தான் மட்டுமே கண்டு பயன்கொள்வது போதாது உலக மக்கள் அனைவரும் காணவேண்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது வள்ளலார் எண்ணம். எனவேதான், உலகத்து மக்கள் அனைவரையும் ஒருங்கடைத்து இறையை இவ்வாறு அழைத்து பயன் பெறுங்கள் என்கிறார்.
உலகத்து மக்களே! பல காலம் பணிந்து மன அலைவு இன்றி மிகவும் தனிவுற்றுப் பரமசிவனைப் பாடுவீர்களாக! பரம்பரமே சிதம்பரமே! சுவைக் கரும்பே! செம்பொருளே! செங்கனியே! விலையிலா மெய்ப்பொருளே! தயாநிதியே கதியே! வரமே! துணிற்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே! சமரச சன்மார்க்கச் சத்தியமே! இயற்கையுண்மைத் தனிப்பதியே என்றெல்லாம் கூறி இறைவனைக் கிளைக்கில் அவன் காண முடியாத காட்சிகள் அனைத்தையும் நமக்குத் தருவான்.
திருமறைக்காட்டில் சிவன் “அம்மையே” என்றழைக்க “அப்பா” என்று காரைக்காலம்மையார் தன்னைத் தான் மறந்து இறை இன்பத்தில் மூழ்கி அழைத்த போது, அம்மைக்கு அவர் காட்டிய காட்சி கண்டு இவ்வாறு பாடினார்.
“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்வேண்டுகிறார்
பிறவாமை வேண்டும்” (10)
இதனை வள்ளலார் கூறும் போதும் இதுவரை மாயையில் விடுத்து “மெய்ந்நெறிக் கடைபிடித்து மெய்பொருள் நன்குணர்ந்தே எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே” (11)
என்று மரணமில்லாமை, இறவாமை எனும் சொல்லாட்சியைக் கையாள்கிறார்.
மெய்நெறி
மெய்நெறி தவிர்த்து உலகில் நெறியில்லாத நெறிகள் பலவுண்டு அதனை இனம் சிறநெறிகளைப் பிழைத்து வருதல் வேண்டும். எனவேதான் இறைவன் திருவடி கண்டோர் பலரும் இறைவன் எவ்வடிவினன் என்பதற்கு,
“ஓர் உருவம் ஓர் நாமம் ஒன்றுமிலான்” (12)
என்றும் வள்ளலார் சொல்லும்போது,
“தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
தினிப்பதியாய் விளங்கிடும் எனதந்தை என்தாயை
வானே அவ் வான்கருவே வான்கருவின் முதலே
வள்ளல் என் றன்பரெல்லாம் உள்ள நின் றவனைத்” (13)
என்று சொல்லுகிறார். ஆகவே சிறுநெறியில் சேர்ந்து, சிவநெறி சேர்ந்து, சிவநெறியில் விடுத்தவர்க்கும் உடனிருப்பவன் அம்மையப்பன். இதனைச் சிவஞான சித்தியார் கூறும் போது,
“யாதொயரு தெய்வங் கண்டீர் அத்தெய்வமாகி அங்கே
மாதொரு பாகனார் தாம் வருவார்” (14)
மாணிக்கவாசகர் சிறுதெய்வ வழிபாடு பற்றிக் கூறும் போது,
“எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே!” (15)
ஆகவே சிவநெறி விடுத்த ஏனைய எதுவும் பெருவாழ்வாம் மரணமிலா வாழ்வைப் பெறவியலாது.
ஞானசபை
உலகத்து மக்களே, உண்ணவும் உறங்கவும் உமக்குத் தெரியும் இதில் உறக்கம் - இறப்பு, விழிப்பு, பிறப்பு என்பதை அறியவில்லை உலகக் காட்சிகள் அனைத்தையும் நீங்கள் ஒருங்கேக் காண வேண்டும் என்று நினைத்தால் சிவநெறியைக் கடைபிடிக்கும் மக்களாலும் உமக்கு நன்மை உண்டு. மரணபயம் போக்கும் தன்மையும் உண்டு. மரணத்தைத் தடுக்கும் சக்தியும் சிவநெறிக்கே உண்டு இதனை ஞானசம்பந்தர் கூறும்போது,
“நல்லவர் தீயவர் எனாது நச்சினார்
செல்வல் கெடச் சிவமூர்த்தி காட்டுவ
கொல்ல நமன் தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கொடுப்பவன் அஞ்செழுத்துமே! (16)
என்கிறார்.
இதனையே வள்ளலார் இன்னும் ஒருபடி மேல் சென்று கூறும் போது மரணத்தைத் தடுக்கும் சக்தி ஞானசபை என்கிறார்.
“ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும உணர்நீர்
உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணம் உண்டோ அந்தே
மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா
சார்ந்திடும் அம் மரணத்தைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திரு சிற் சபை நடத்தைத் தரிசஞனஞ் செய்வீரே” (17)
எனும் வரிகள் அழியா ஆற்றல் உள்ளமையைக் காட்டுகின்றான்.
முடிவுரை
மரணமிலாப் பெருவாழ்வு என்பது இறைவனை நினைத்து மூழ்கும் நிலை என்பதும், இதனை எளிதில் அடைய இயலாமல் செய்வது மாய விந்தை என்றும் அறிந்ததோடு என்றும், மேலும் பிறந்த இப்பிறவியால் நித்திய மெய்வாழ்வு பெற்றிடலாம், இன்பம் பெறலாம் என்றும், “சார் உலகவாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம் சற்குருவை நேர் உறவை எவராலும் கண்டுகொளற்கரிதாம்” என்றும் கூறுவது மரணமிலாப் பெருவாழ்வு குறித்து வள்ளலாரின் வாழ்வைப் படம் பிடித்துக்காட்டும். இன்பமே எந்நாளும் துன்பமில்லை எனும் நிலையை உண்டாக்குவது மரணமில்லாப் பெருவாழ்வே என்பது இக்கட்டுரையின் தெளிந்த முடிவாகும்.
அடிக்குறிப்புகள்
1. சென்னியப்பனார் (உ.ஆ) சிவஞான போதம் சூத்.8
2. பரிமேலழகர், திருக்குறள்.452
3. நச்சினார்க்கினியர் (உ.ஆ), தொல்காப்பியம், கா.கற்பியல்.நூ.51
4. தாயுமானவர், பராபரக்கண்ணி.91
5. திருவாசகம், உயிருண்ணிப்பத்து, பா.3
6. திருவருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா, பாடல். எண்:5576
7. சேக்கிழார், பெரியபுராணம் பா.8
8. திருவருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா, பாடல். எண்:5577
9. திருஅங்கமாலை பா.10
10. பெரியபுராணம், காரைக்காலம்மையார்,பா.60
11. திருவருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா, பாடல். எண்:5579
12. மாணிக்கவாசகர், திருவாசகம், திருத்தெள்ளேணம், பா.1
13. திருவருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா, பாடல். எண்:5589
14. சிவஞான சித்தியார்
15. மாணிக்கவாசகர், திருவாசகம், 4
16. திருஞானசம்பந்தர் தேவாரம், பஞ்சாக்கரப்பதிகம், பா.4
17. திருவருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா, பாடல். எண்:5596
பார்வை நூல்
1. திருவருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர் - 607 303.
2. சேக்கிழார், உமா பதிப்பகம், சென்னை.
3. சம்பந்தர், தேவாரம், உமா பதிப்பகம், சென்னை.
4. வரதராசனார்.மு (உ.ஆ), திருக்குறள், பாரிநிலையம், சென்னை.
5. ராஜ்கௌதமன், கண்மூடி பழக்கமெல்லாம், மண்மூடி போக, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை.
கட்டுரையாளர் கவனத்திற்கு :
அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்கள் மற்றும் பார்வை நூல்கள் ஆகியவற்றுக்கு நூலாசிரியர், நூலின் பெயர், வெளியீட்டகம், பதிப்பு மற்றும் ஆண்டு ஆகியவை இணைக்கப்பட வேண்டும். தாங்கள் அதை அனுப்பி வைக்கும் போது இக்குறிப்பு நீக்கப்பட்டு, அடிக்குறிப்புகள் மற்றும் பார்வை நூல்கள் விவரம் மாற்றம் செய்யப்படும். - ஆசிரியர்
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.