விஜயாலய சோழீஸ்வரம் - நார்த்தா மலை
மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.
முன்னுரை
“ஆலயம் தொழுதல் சாலவும் நன்று” என்பார் ஒளவையார். இவற்றால் ஆலயம் தொழுதலை மனித வாழ்வுக்கு ஊதியம் என்பதை அவர் நன்கு உணர்த்தினார். ஆலயம் என்பது மனித வாழ்வினை நெறிப்படுத்தும் இயல்பினது என்பதால் ஆலயம் அமைத்தலை அரும்பணி என்று அறிவுசார்ந்த நம் முன்னோர் கருதினார். இதனால் தான் தமிழகத்தின் ஊர்கள் தோறும் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. பழந்தமிழர் இறைப் பற்றாளர்கள் என்பதால் சங்ககாலம் தொட்டுக் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. ஆனால். அவற்றின் ஒன்று கூட இன்று வரை கிடைத்தில. அவை யாவும் மண்தளியாலும், மரத்தாலும் செய்யப்பட்டன என்பதால் அவை கலத்தால் சுவடு தெரியாமல் அழிவுற்றன. இதை நுட்பமாகக் கண்ணுற்ற பல்லவ வேந்தர்கள் காலத்தால் அழியாத ஆலயங்களை அமைக்க எண்ணிக் கல்லையும், பாறையையும் கொண்டு ஆலயம் எடுப்பித்தனர்.
பல்லவர்களின் ஆலயம் யாவும் அளவில் சிறியன என்றாலும் கலை நுட்பத்திலும், அழகு வேலைப்பாட்டிலும் தலைச் சிறந்தனவாகும். இதன் பின் வந்த சோழ, பாண்டிய வேந்தர்கள் அமைத்த ஆலயங்கள் யாவும் கலை நுட்பத்தில் பல்லவரைக் காட்டிலும் குறைந்தன என்றாலும் அளவில் பெரியனவாகும். அவர்களின் பிரம்மாண்டக் கோயிலமைப்பு முறை அவர்களுக்குத் தென்னிந்திய அரசர்களிடம் சிறப்பான இடத்தைப் பெற்றுத்தந்தது. அந்த வகையில் சோழர்காலக் கற்றளி கோயில் வகையில் சிறப்பு பெற்றதாக நார்த்தா மலையில் உள்ள விஜயாலய சோழீஸ்வர ஆலயம் திகழ்ந்து வருகின்றது. முற்காலச் சோழரின் கோயிற் கலையமைப்பிற்கு சாலச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் இவ்வாலயத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.
கோயில் அமைவிடமும், காலமும்
விஜயாலய சோழீஸ்வரம் என்ற இச்சிவாலயம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையில் அமைந்துள்ளது. இது திருச்சி-மானாமதுரை இருப்புப் பாதையில் நார்த்தா மலை இரயில் நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது. இது திருச்சியிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நாரத்தா மலை என்பது நகரத்தார் மலை என்பதன் திரிபாகும். இங்கு இடைக்காலத்தில் “நானா தேசிகர்” என்ற வணிகர்கள் (நகரத்தார்) பெருமளவு வசித்தனர். இராமாயணத்தில் அனுமன் சஞ்சீவி பர்வத மலையை இலங்கையிலிருந்து பெயர்த்துக் கொண்டு வந்த பொழுது இவ்விடத்தில் அதன் ஓர் பகுதி விழுந்ததாக தொன்ம நம்பிக்கை. இவ்வூர் ஏழாம் நூற்றாண்டில் தெலுங்கர் குலக் காலபுரம் என்றும், 13 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழப்பட்டிணம் என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயில் முதல் சோழ மன்னனான விஜயாலய சோழனால் (கி.பி.850-870) கட்டப்பட்டது என்பதை இதன் பெயரிலிருந்தே அறிந்து கொள்ளலாம். கி.பி 1228 இல் வெட்டப்பட்ட கோமாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு வழங்கிய சுந்தரப் பாண்டியத் தேவரின் கல்வெட்டு இவ்வாலயத்தை “விஜயாலய சோழீஸ்வரம்” என்றே குறிப்பிடுகின்றது. இதைத் தவிர இக்கோயிலின் பெயர் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு ஏதும் இதுவரை கிடைக்காததால், இதற்கு முன் யாது பெயரில் இக்கோயில் அழைக்கப்பட்டது என்று அறியக்கூடவில்லை. ஆனால் இக்கோயில் கலை அமைப்பில் பல்லவரின் கட்டிடக்கலையின் கூறுகள் உள்ளதால் அவர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று அறிய முடிகின்றது.
பல்லவர்களின் ஆட்சியின் கீழ்த் தஞ்சையை ஆட்சி செய்த முத்தரையர்களே இக்கோயிலைக் கட்டினர் என்று சில ஆய்வாளர்கள் கருதுவர். அவர்கள் காலமான அதாவது நிருபதுங்கவர்ம பல்லவனின் 7 ஆம் ஆட்சியாண்டில் “சாத்தன் பழியிலி” என்ற தளபதியால் இக்கோயில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு சான்றுகள் உரைக்கின்றது (ARE.No:216/1940-41). இதன் பின் வந்த “தென்னவன் தமிழாதிரையன்” என்பவனால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதாக மற்றொரு கல்வெட்டுச் சான்று உணர்த்தும் (புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகள் எண்:11). எனவே முத்தரையர் காலத்தில் கட்டப்பட்ட பல்லவர் கோயிலமைப்பினாலான இக்கோயில் அதன் பின் ஆட்சிக்கு வந்த விஜயாலய சோழனால் விரிவாக்கம் செய்யப்பட்டு அவன் பெயரிலே விஜயாலய சோழீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்பது அறியலாகின்றது. இன்று கம்பர் மலை என்று அழைக்கப்படும் இம்மலையின் மேலுள்ள எழில்மிகு இவ்வாலயத்தின் சிறப்பை நன்குணர்ந்த யுனஸ்கோ (UNESCO) என்ற உலகளாவிய கலாச்சார அமைப்பு, இதை உலகத்தின் பழமை வாய்ந்த சின்னமாக அறிவித்தது இதன் சிறப்பை உணர்த்துகின்றது.
கோயிலின் அமைப்பு
நார்த்தா மலையில் உள்ள எட்டுக் குன்றுகளில் ஒன்றான மேல் மலையில் உள்ள கிழக்கு நோக்கிய இரட்டைக் குடைவரை கோயிலுக்கு எதிரே பாறையைத் தளமாகக் கொண்டு இக்கட்டுமானக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இது முழுக்கக் முழுக்க கற்களால் கட்டப்பட்ட கற்றளியாகும். தொடக்கக் காலச் சோழ மன்னனான விஜயாலயனின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் இது முதன்மையானது. இது கிழக்கு நோக்கிய சன்னதியை உடையது. கருவரை, முன்மண்டபம், பரிவாரக் கோயில், கோபுரம், திருமதில் என்ற அமைப்புகளைக் கொண்டது. பண்டு இக்கோயில் எட்டுப் பரிவாரக் கோயில்கள் கொண்டிருந்தாலும் இன்று ஆறு மட்டுமே விஞ்சியுள்ளன. பிரதானக் கோயிலின் நந்திக்குப் பின் இரண்டு குடைவரை கோயில்கள் காணப்படுகின்றன. அது சமணச் சமயத்தது என்றும், பின்பு விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டது என்றும் உரைக்கப்படுகின்றது. இக்கற்கோயிலின் விமானம் சதுர வடிவில் மூன்று தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது அதிட்டானம், சுவர், கூரை என்ற அமைப்புகளுடன் மேல் தளங்களைக் கொண்டு திகழ்கின்றது. இக்கோயிலின் அடித்தளம் பாதாந்த அதிட்டானம் என்ற வகையைச் சார்ந்தது. அடித்தளத்தில் உள்ள ஜகதியானது முப்பட்டை, குமுதம், கண்டம், பட்டகை போன்ற உறுப்புகளைக் கொண்டது.
கோயிலின் வாயிலில் மிளிரும் துவாரப் பாலகர் சிலைகள் உள்ளன. கோயிலின் அடித்தளத்தை அடுத்துள்ள வார்ப்புப் பகுதியில் அமைந்த கீழ்ப் பகுதியான உபானவரி, முகசாலை என்ற அமைப்பு முகப்பில் மட்டும் முன்வைத்ததாய் அமைந்துள்ளது. இதைத் தவிரப் பிறவிடங்கள் யாவும் ஓரே சீராய் அமைந்துள்ளமை இவ்வாலயத்தின் சிறப்பாகும். இப்பகுதியில் பல்வகைச் சிற்பங்கள் அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. இசைக்கலைஞர்கள், நடனமாடும் நங்கை, யாளியைத் தாங்கும் சிங்கம், அன்னப் பறவை, ஆடும் மயில், களிறு, சிங்கம் போன்ற சிற்பங்கள் சிறப்புடன் செதுக்கப்பட்டுள்ளன. இதன் அடித்தளம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முன்னும் பின்னும் வருவதாய் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கர்ணக் கூடு, பஞ்சரம் மற்றும் மையசாலை ஆகிய உறுப்புகள் யாவும் ஓரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது இதன் சிறப்பு. கருவறையின் வெளி புறச்சுவர்கள் யாவும் அரைத்துண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவை கால், தாடி, கும்பம், யாளி, பலகை, வீரகண்டம், பொதிகை என்னும் உறுப்புகளுடன் காணப்படுகின்றன. சுவரின் அகாரைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தூண்கள் எளிமையானதாய் அமைந்த அமைப்பானது இக்கோயில் தொடக்ககாலச் சோழருக்குரியது என்பதை உணர்த்தும்.
கோயில் கருவறையின் சுவர் பகுதி உட்சுவர், வெளிச்சுவர் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கிடையே திருச்சுற்று என்ற மூன்றாவதான ஓர் அமைப்பும் காணப்படுகின்றது. இவ்வகைக் கட்டிட அமைப்பு முறை பிற்காலப் பல்லவரின் கட்டிட அமைப்பு முறையை உணர்த்தும். இதற்குச் சான்றாகக் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைச் சுட்டலாம். இவ்வாலயத்தின் முதல் தளச் சுவரானது உத்திரம், வாஜனம், எழுதகம், கபோதகம், யாளி போன்ற உறுப்புகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள எழுதகத்தின் மேல் அமைந்துள்ள கபோதக கூடுகளில் யானை, நந்தி, சிங்கம், மனிதத் தலைப் போன்ற அமைப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. கபோதக வட்டகங்கள் யாவும் மிகவும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. இதில் உள்ள யாளி வரியின் மேல் கர்ணக் கூடுகளும், மையத்தில் முகசாலையும், அதற்கிடையில் பஞ்சரங்களும் இணைந்தவாறு அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் இரண்டாம் தளத்தில் உள்ள கருவறையின் உட்சுவர் பகுதியானது பூமியின் மட்டத்திலிருந்து மேலெழும்பும் வண்ணம் அமைந்துள்ளது. இதன் சுவர் பகுதி எழு பத்தி அமைப்புடன் காணப்படுகின்றது. இதன் இரண்டாம் தளச்சுவரை மூடும் கூரையானது ஆதிதள கூரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள யாளிகளின் மேல் அமைந்த கர்ணக் கூடுகள் அகாரை சாலை போன்ற வடிவமைப்புடன் காணப்படுகின்றன. இக்கட்டிட வடிவமைப்பானது மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜா கோயிலமைப்புடன் ஒத்துள்ளதை எண்ணிப்பார்க்கலாம். இதன் மூன்றாம் தளமானது மற்ற இரு தளத்தின் சதுர அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளது. இச்சுவரைச் சுற்றிலும் வட்டவடிவில் அமைக்கப்பட்ட எட்டுத் தூண்கள் இதைத் தாங்கும் வண்ணம் உள்ளன. இங்குள்ள எழுதக வரிசையில் பூதகணங்கள், அன்னப் பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கூரையைப் பலவித அழகிய கூடுகள் அலங்கரிக்கின்றன.
கோயில் கூரையை அடுத்துள்ள மேல் மட்டத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு அழகிய நந்திகள் காணப்படுகின்றன. இங்குள்ள வட்ட வடிவிலான வேதிகை அமைப்பின் மேல் கிரீவக் கோட்டங்களில் பல வகை தெய்வங்கள் காணப்படுகின்றன. வடதிசை நோக்கி நான்முகன் என்ற பிரம்மனும், கிழக்கு நோக்கித் முருகப்பெருமானும், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும், மேற்கு நோக்கி உமாதேவி சமேத ஈஸ்வரமூர்த்தியும் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள் பாலிக்கின்றனர். வட்டவடிவிலான கிரீவத்தின் மேல் மகாபத்மமும், கீழ்வரம்புகளைச் சுற்றிப் பெரிய வட்டங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இவ்வாலயத்தின் அடித்தளம் முதல் கிரீவம் வரை ஆறு அங்கங்களும், மூன்று தளங்களில் முறையாகப் பொருத்தமுற அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். மேலும், இக்கோயிலின் விமானத்தைப் போன்றே கருவறையும் தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றது. கருவறையானது ஓங்கார வடிவுடன் வட்ட வடிவில் அமைக்கப் பட்டுள்ளது. கருவறையின் நடுவில் லிங்கேஸ்வர மூர்த்தியாய்ச் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். இக்கோயிலில் சிவபெருமான் ஈஸ்வர மூர்த்தியாயும், இறைவி உமையன்னையாகவும் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலின் மேல் மட்டத்தில் மகாபத்மம், ஜகதி போன்ற அமைப்புகள் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நான்கு பகுதிகளிலும் நான்கு சதுரமான சுவர்கள் காணப்படுகின்றன. இச்சுவர்களை எளிய அமைப்புடன் உள்ள நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையின் முன் உள்ள மண்டபத்தின் உட்பகுதியில் உள்ள ஆறு தூண்களும், சுவருடன் இணைந்துள்ள ஆறு தூண்களும் இணைந்து உத்திரத்தைத் தாங்கி நிற்கின்றன. இத்தூண்கள் நீள் சதுரமாகவும், இடையில் எண்பட்டையுடனும் காணப்படுகின்றன. இவ்வகை தூண்களின் அமைப்பினைப் பல்லவரின் குடைவரை கோயில்களில் காணலாம். சான்றாகச் சீயமங்கலத்தில் உள்ள குடைவரை கோயிலைச் சுட்டலாம். இக்கோயிலின் விமான அடித்தளச் சுவர் மற்றும் கூரை பரிவார ஆலயங்களின் அமைப்பு போன்றவை தொடக்ககாலச் சோழரின் கலைநுட்பத்தைப் பறைசாற்றும். இவற்றால் இவ்வாலயம் பல்லவச் சோழக் கலைப் பாணியின் கலப்பு வடிவமாகத் திகழ்கிறது என்பது புலனாகின்றது. கோயிலின் அர்த்தமண்டபத்தில் பல வகை சாந்து பூச்சு சுதை ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை யாவும் பிற்காலமான கி.பி. 17 ஆம் நூற்றாண்டை (நாயகர் காலம்) சார்ந்தது.
முடிவுரை
கோயில்கள் என்ற அமைப்பு மனிதன் மனதை நல்வழிப்படுத்தும் இயல்பினது. அது அவனைத் தவறு செய்யாமல் தடுத்து நிறுத்தி, பிறவிப் பெருங்கடல் நீந்த உறுதுணையாய்த் திகழக்கூடியது. இத்தகைய கோயில்கள் ஆரம்பத்தில் எளிமையுடன் அமைக்கப்பட்டாலும் காலம் செல்லச்செல்ல அவற்றில் கலை நுட்பங்கள் புகுத்தப்பட்டன. ஆலயங்கள் பக்தியை மட்டும் வெளிப்படுத்தாமல் பக்தர்கள் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இக்கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய சிறப்பான கலைநுட்பங்கள் கோயில்களில் இருப்பதால்தான் மேல்நாட்டினரும் நம் தமிழகக் கோயில்களைக் கண்டு வியந்து பாராட்டிச் செல்கின்றனர். அந்த வகையில் தனிச்சிறப்புடன் நார்த்தா மலையில் உள்ள விஜயாலய சோழீஸ்வரம் திகழ்ந்து வருகின்றது. இதன் வடிவமைப்பும், கலைப்படைப்பும் பல்லவர் காலக் கட்டிடக்கலையை நினைவு படுத்துகின்றன. ஆனால் இவற்றில் சோழர் கலைபாணி பெருமளவு கலந்திருப்பதால் இவ்வாலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுப் பின்பு சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டதை அறியலாம். பல்லவ-சோழ கலைப்பாணியின் இணைப்புக்கு இவ்வாலயம் சாலச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆலயங்களை முழுக்கக் முழுக்க கற்களால் வடிவமைத்த பல்லவ, சோழ, பாண்டியத் தமிழ் மன்னர்களின் கலைத்திறனும், தீர்க்கதரிசனமும் போற்றுதற்குரியதாகும். இவ்வாலயங்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நின்று எதிர்வரும் தலைமுறைகள் அவற்றைத் துய்த்துப் போற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு அமைக்கப்பட்டன. ஆலயங்களில் அமைக்கப்பட்ட அரும்பணிகள் அவற்றைப் பத்தியுடன் பூஜிக்கவும், பரவசத்துடன் வியந்து போற்றவும் செய்கின்றன. பல்லவர் மற்றும் சோழர் ஆலயங்களின் கலைப் படைப்புகள் காண்போரை வியக்கச் செய்வனவாகும். அந்த வகையில் அமைக்கப்பட்ட விஜயாலய சோழீஸ்வரம் கோயிலைக் கண்ட நம் நாட்டவரும், மேல் நாட்டவரும் புகழ்ந்து பாராட்டுதல் வியப்பன்று. இச்சிறப்புமிகு கோயில் கட்டி ஏறத்தாழ 1300 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அதன் பின் எத்தனையோ அரசு குலங்கள் தமிழகத்தில் தோன்றி, ஆட்சி செய்து, அவற்றின் எச்சங்களை விட்டுச்செல்லாமல் காலவெள்ளத்தில் மறைந்தன. ஆனால் சோழ மன்னர்கள் அமைத்த இது போன்ற ஏராளமான கற்றளிகள் இன்று வரை காலத்தை வென்று நிலைத்து நின்று அவர்தம் பெருமையை எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன.
சுருக்கம் (Abbrevations)
1. ARE-Annual Report on Indian Epigraphy
பார்வை நூற்பட்டியல்
1. பாலசுப்பிரமணியம்.எஸ்.ஆர்,(1966),முற்காலச் சோழர் கலையும், சிற்பமும், சென்னை: தமிழ் வெளியீட்டுக் கழகம்
2. சோமசுந்தரம் பிள்ளை.ஜெ.எம்.(1962), சோழர் கோயிற் பணிகள், சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
3. Balasubramanyam.S.R. (1971), Early Chola Temples, Bombay: Orient Longman Publication
4. Balasubramanyam.S.R. (1975), Middle Chola Temples, Faridabad: Thomson Press (India) Limited
5. Balasubramanyam.S.R. (1979), Later Chola Temples, Faridabad: Mudgala Trust
6. Srinivasan.K.R. (1964), Cave Temples of The Pallavas, New Delhi: Archaeology Survey of India
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.