"கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள்"
எனும் கவிதை நூலில் சமூகச் சிந்தனைகள்
முனைவா் சி. சங்கீதா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை),
கலிசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில்.
முன்னுரை
கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் எனும் கவிதை நூல் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கவிஞா் ராஜா என்பவரால் எழுதப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இக்கவிதை நூலில் சாதி, தீண்டாமை, வறுமை, அதிக வரிவிதிப்பு, பெண்கள் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊதியக்குறைவு, பாலியல் வன்கொடுமை, புலம்பெயா்வு, நீா்இன்மை, சமகாலஅரசியல், சாதாரண மக்களுடைய எளிய வாழ்க்கை, நிறைவேறாத காதல் மற்றும் தான் பார்த்த சில அனுபவங்களையும் தன் குடும்பம் சார்ந்த பின்னணிகளையும் குறிப்பாகத், தாய், தந்தை, சகோதரி முதலியோரின் உள்ளார்ந்த உணர்வுகளையும் மிக அழகாகத் தன்னுடைய வட்டாரத்திற்குரிய அழகான சொற்களால் கவிஞர் எடுத்துக் கூறியிருக்கிறார். இந்நூலிலிருக்கும் பெரும்பான்மையான கவிதைகள் சமூகத்தில் நடக்கின்ற அவலங்களைப் பதிவு செய்வதாகவேக் காணப்படுகின்றன. அவ்வகையில் இக்கவிதை நூலில் உள்ள சமூகச் சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சாதியும் தீண்டாமையும்
இந்நூலில் சமுதாயத்தில் சாதியின் தாக்கம் குறையாமல் இருப்பதையும், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் சாதி தலைவிரித்து ஆடுவதையும், ஒடுக்கப்பட்டவா்களின் குரலற்ற குரலாகவும் தீண்டாமைத் தனத்தையும் முன்னிறுத்துகிறது.
“எங்கள் ஊர்
அழகிய கோபுரத்தில்
தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிவடைகிறது
எங்கள் ஊர்” (1)
இந்தக் கவிதையில் இரண்டு வேறு கருத்துக்கள் புலப்படுகின்றன. ஒன்று உயர்ந்து நிற்கிற கோபுரம், மற்றொன்று அம்பேத்கர் சிலை. இவ்விரண்டும் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிக் குறியீடாக உணர்த்துகிறது. கோபுரம் உயா்சாதி வகுப்பினரையும் அம்பேத்கார் சிலை ஒடுக்கப்பட்ட மக்களையும் தீண்டாமைத்தனத்தையும் எடுத்துரைக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் கூறினாலும், சாதி சமூகத்தில் அடையாளமற்றுப் போகவில்லை என்பதை உணர முடிகிறது.
”சாதிஒழிப்பு இயக்கத்திற்குக் குறைந்தது 2500 ஆண்டு வரலாறு உண்டு. எந்தப் போராட்டமும் இவ்வளவு நீண்டநாள் நடந்தது கிடையாது. ஆனால், சாதி ஒழியவில்லை. நாம் சாதியை விட்டாலும், சாதி நம்மை விடுவதாகத் தெரியவில்லை. சாதிப் பிரிவினையை விட ஒரு பெரிய சாபக்கேடு ஒரு சமுதாயத்திற்கு வர முடியாது. அதிலிருந்து விடுபடும்வரை நமது சமூகத்திற்கு விமோசனம் கிடையாது“ (2) என்று வா. செ. குழந்தைசாமி சாதியின் நிலையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதேபோல,இன்றும் சாதி சாபக்கேடாகத் திகழ்வதையும் காண முடிகிறது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின், குரலற்றவா்களின் குரலாக அம்பேத்கார் குரல் ஒலித்துக் கொண்டிருப்பதையும் இக்கவிதை வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.
வறுமை
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றும் உலக அளவில் வாதிக்கப்பட்டு வருகிற சிக்கல் வறுமை. இந்த வறுமை, “உலக நாடுகளில் விதவிதமான நோய்களை உருவாக்கக்கூடிய வைரசாக விளங்குகிறது (Tazoacha Francis, 2001)” (3).இந்நூலில் கவிஞர், வறுமை தொலைந்த நிறம் என்ற தலைப்பில் பல தரப்பட்ட மக்களின் வறுமையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
”வேடுகட்டி வீதிகூட்டும்
வெள்ளச்சிக்கு
இளநாவல் நிறம்
கோணிப்பை மாட்டி
குப்பை பொறுக்கும்
செவ்வந்திக்கு மாநிறம்.
உள்ளங்கையில் இரவைச் சுருட்டி
சாலையில் நிற்கும்
தாமரைக்கு செவ்விளனியின் நிறம்
… … … … … … … …
… … … … … … … …
சாலை சமிக்ஞை நிறுத்தத்தில்
யாசகம் வேண்டும் சிறார்களுக்கு
கரித்துணியின் நிறம்” (4)
என்ற கவிதையில் வறுமையின் நிறங்களாக, இளநாவல், மாநிறம், செவ்விளனியின் நிறம், புகையிலையின் நிறம், அடா்மழையின் நிறம், கரித்துணியின் நிறம் என்று பல்வேறு நிறங்களில் பொருத்திக் காட்டியுள்ளார். எனவே, வறுமையைக் குறிப்பாகச் சிகப்பு நிறத்தில் அடக்க முடியாது என்றும் வறுமையின் முகங்களின் நிறங்கள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன என்பதையும் அறியலாகிறது. மேலும், ஆயுள் குறைந்த தீபாவளி (5), மழுங்காத ஊசி (6) முதலிய கவிதைகளிலும் வறுமை குறித்த கருத்துகள் இடம் பெறுகின்றன.
அதிக வரிவிதிப்பு
மக்கள் அதிக வரி செலுத்த வேண்டும் என்று அரசு திடீரெனச் சட்டம் இயற்றுகிறது. அதிலும் ஆட்சி மாறுகிற போதெல்லாம் இது நிகழ்கிறது என்பதை,
“நிலத்தின் வளா்ச்சிக்காக
ஆளும் மன்னா்கள் மாறும் போதெல்லாம்
அந்த விதியின் அளவு
பெருகிக் கொண்டே போகும்” (7)
என்ற கவிதையில் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் குறியீடாக, சிறு மற்றும் குறுந்தொழில் பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரியின் வருகை முதலியவற்றைக் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது.
பெண்கள் நிலை
பெண்களுக்கான உரிமைகளைக் கையிலெடுத்துப் பேசுகிறார். கிராமப்புறங்களில் பெண்கள் எட்டு மணிக்கு மேல் உறங்கக்கூடாது என்ற வழமையைக் கடைப்பிடிப்பவா்கள். அதைக் கண்ணுற்ற கவிஞா், நாட்டில் எந்த நிலையும் மாறப்போவதில்லை பெண்கள் தூங்கினால் என்ன? என்பதை,
“பொட்டக்கழுதை எட்டுமணி வர
கெடந்து தூங்குதான்னு சலம்புறியே
போ ஆத்தா
அவளாச்சும் தூங்கட்டும்” (8)
என்று உறங்குகிற உரிமையைக் கொடுக்கிறார். காலம் காலமாக இருந்து வருகிற மரபு மாற்றத்தை உருவாக்க முற்படுவதைக் காணலாம்.
வேலையில்லாத் திண்டாட்டமும் புலம்பெயா்வும்
வறுமை உருப்பெறுவதற்கு மிக முக்கியக் காரணம் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகும். இன்றைய கொரோனா காலகட்டத்திலும் மக்கள் வேலையில்லாமல் திண்டாடி வருவதைக் காணலாம். அறிவியல் கண்டுபிடிப்பின் வாயிலாக சாதாரண தினக்கூலிக்குச் செல்லும் கொத்துக்காரக் கிழவிக்கு வேலையில்லை. அதனால் ஏற்பட்ட வறுமையின் காரணமாக அக்கிழவி இறந்ததையும் கொத்துக்காரக் கிழவி என்னும் கவிதையின் வழியாகக் குறிப்பிடுகிறார். அக்கவிதை,
“அத்திப்பழச் செவப்பா
வெள்ளி வானம் வெளுக்கையில
அள்ளிமுடிஞ்ச கொண்டையோடு
கண் விழிப்பா
… … … … … … … …
… … … … … … … …
ஒருவேளை சோறானாலும்
ஒழச்சு திண்ண மவராசி
ஓசி வாங்கித்திங்க நா கூச
உத்தமியா நாண்டு கிட்டா
கொத்துக்காரக் கிழவி” (9)
என்ற கவிதையில் துயரத்தை வடித்திருக்கிறார் என்பதை அறியலாம். மேலும், வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் புலம் பெயா்தலுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. எப்பாடுபட்டாவது என்னும் கவிதையில் பீகார், ஒடிசா முதலிய வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குப் புலம் பெயரும் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் வழங்கினாலும் தாழ்வில்லை என்று வறுமை காரணமாகப் புலம் பெயர்கிறார்கள் என்பதை,
“பீகாரிலிருந்தோ
ஒடிசாவின் மலைச்சரிவுகளிலிருந்தோ
… … … … … … … …
இருநூறு ரூபாய் தினச்சம்பளமே
போதுமானதாக இருக்கிறது” (10)
என்ற கவிதையில் விளக்குகிறார். புலம் பெயர்வின் காரணமாக தமிழகத்தில் இந்தி மொழியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறார்.
பாலியல் வன்கொடுமை
நிர்பயாவிற்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றியும், சுவாதி படுகொலை, விஷ்ணுப்பிரியா படுகொலை முதலிய பிரச்சனைளை எதிர்த்துக் கேள்வி கேட்கும் குரலாகத் தன் கவிதையில் பதிவு செய்துள்ளார். தெய்வத்தவறுகள் என்னும்தலைப்பில்,
“முளைத்து மூன்று
இலை விடவில்லை
… … … … … … … …
சுவாதிகள்
நந்தினிகள்
விஷ்ணுப்பிரியாக்ளெல்லாம்
தெய்வத் தவறுகள்” (11)
என்ற கவிதையில் விளக்குகிறார்.
நீா் தட்டுப்பாடு
பொதுவாகக் கேரளாவைக் கடவுளின் தேசம் என்று குறிப்பிடுவார்கள். கேரளாவின் நுழைவுப்பகுதியில் உள்ள கழிவறையில் குளிக்கக்கூடத் தண்ணீா் இல்லை என்பதையும், கிராமப்புறங்களில் குளித்து முடித்துவிட்டுக் கொஞ்சம் தண்ணீா் மிச்சம் வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இரண்டு பக்கெட் தண்ணீா் தீா்ந்தும் சோப்புக் குமிழிகளை எப்படிச் சுத்தம் செய்ய என்று கடவுளின் தேசத்திலேயே தண்ணீா் இல்லை. எங்கு மிச்சம் வைக்க என்று கடவுளிடம் வினவுதாக அமைகிறது. அக்கவிதை:
“வறண்ட தரையில்
தேங்காய் விழுந்தது போல
… … … … … … … …
என் காதுகளில்
பூத்திருக்கும் சோப்புக்குமிழிகளை
சுத்தம் செய்ய” (12)
என்ற கவிதையில் குறிப்பிடுகிறார்.
முடிவுரை
கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள் என்ற கவிதை நூல் எளியோரின் அன்பு, வறுமை, அகமனப்போராட்டம், உழைக்கும் மக்களின் குரலற்ற குரல், மொழியற்றவர்களின் வறுமை, நிலமற்றவர்களின் வாழ்வியல், ஒடுக்கப்பட்டவா்களின் நிலை முதலிய அவலங்களைக் குறிப்பிட்டு இந்நிலை மாறவேண்டும் என்பதையும் தன் கவிதைகள் வாயிலாக விளக்குவதை அறியமுடிகிறது. மேலும், இந்நூலில் சேலம் மாவட்ட வட்டார மொழிச் சொற்கள் பொதிந்து காணப்படுவதையும் அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. சேலம் ராஜா, கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள், ப.11.
2. வா.செ.குழந்தைசாமி, சமுதாயச் சிந்தனைகள், பக்.20-21.
3. S.M.AhamadLebbe, Miss.M.F.Fazeela, வறுமையும், சமூகத்தாக்கங்களும்தொடா்பானபகுப்பாய்வு, (சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியை மையமிட்ட ஆய்வுக் கட்டுரை), ப.111.
4. சேலம்ராஜா, கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள், ப.65.
5. மேலது, பக். 94-95.
6. மேலது, ப.15.
7. மேலது, ப.34.
8. மேலது, ப.40.
9. மேலது, பக்.54-55.
10. மேலது, ப.75.
11. மேலது, ப.75.
12. மேலது, ப.36.
13. மேலது, ப.30.1
துணைநூற்பட்டியல்
1. சேலம்ராஜா, கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள், இடையன் இடைச்சி பதிப்பகம், ஈரோடு- 638 101, முதல்பதிப்பு - 2019.
2. டாக்டர் வா. செ. குழந்தைசாமி, சமுதாயச் சிந்தனைகள், பாரதி பதிப்பகம்,108, உஸ்மான்சாலை, தியாகராயா்நகா், சென்னை - 600 017. இரண்டாம்பதிப்பு - 2001.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.