ஊசிகள் கவிதைகளில் அரசியல் எதார்த்தம்
முனைவர் பா. ஈஸ்வரன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை),
கலிசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில்.
முன்னுரை
ஊசிகள் கவிதைகளில் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டைக் கூறுவதில் கிண்டல், குத்தல் உத்திகளைக் கையாளுதல், அரசியல் வாதிகள் வறுமையை வெளியேற்றும் விதத்தைக் கேலி செய்தல், ஊரைக் கொள்ளையடிப்பதை எடுத்துரைத்தல், சுரண்டுதலை நகையுணர்வோடு கூறுதல், பதவி ஆசை பிடித்துத் திரிதல், சோஷலிசத்தை அடையக்கூடிய வழி, எதிர்பார்ப்புகள் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
ஆசிரியர் குறிப்பு
மீ. ராஜேந்திரன் என்பதைச் சுருக்கி மீரா என்று தன்னுடைய புனைப்பெயராக வைத்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் 10.10.1938 ஆம் ஆண்டு மீனாட்சிசுந்தரம் - இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் படித்தவர். கவிஞர் அப்துல் ரகுமான் மீராவின் வகுப்புத்தோழர். இவர் இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும், கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், ஊசிகள், கோடையும் வசந்தமும், குக்கூ என்னும் கவிதைப் படைப்புகளின் வாயிலாகத் தமிழ் உலகிற்கு அறிமுகமானவர். தொடக்கத்தில் சிவகங்கை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். பின்பு முதல்வர் பொறுப்பு வரை பதவி உயர்வு பெற்று, பணி ஓய்வு பெற்றவர். தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா, அறிஞர் காரல் மார்க் மூவரின் சங்கமமாகக் கவிஞர் மீராவின் செயல்பாடு காணப்படும். மீரா 1.9.2002 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
புதுக்கவிதையின் இலக்கணம்
புதுக்கவிதையின் இலக்கணம் குறித்து கவிஞர் நிறைமதி கீழ்க்காணுமாறு கூறுகின்றார். அவை,
“எதுகையும் மோனையும்
ஊடல் கொள்ள
புலமையும் புதுமையும்
புணர்ந்து கொள்ள
பூத்தது புதுக்கவிதை” (1)
புதுக்கவிதையில் இலக்கண மரபுகள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. இருந்தாலும் தவறில்லை. புதிய புதிய உத்தி முறைகள், புதுமையான கருத்துக்கள் புதுக்கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். கவிஞர்களின் புலமைத்திறன்கள் புதுக்கவிதைகளில் புகுந்திருக்கும் என்ற கருத்தினை மேற்காணும் புதுக்கவிதையின் இலக்கணம் சுட்டுகின்றது.
அரசியல்வாதிகள் காட்டும் வேகம்
அரசியல்வாதிகள் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குத் தொண்டு செய்வதில் வேகத்தைக் காட்டவில்லை. மாறாகத் தாங்கள் பதவி பெறுவதற்கும், பணம் பெறுவதற்குமாகக் கட்சி விட்டுக் கட்சி மாறுவதில் வேகத்தைக் காட்டுகின்றனர். இதனை,
“எங்கள் ஊர் எம்.எல்.ஏ
ஏழு மாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்
மின்னல் வேகம்
என்ன வேகம்?
இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்…
என்ன தேசம்?
இந்தத் தேசம்?” (2)
என்னும் கவிதை எடுத்துரைக்கின்றது.
மேலும், கவிஞர் மீரா இக்கவிதையின் வாயிலாக இன்றைய அரசியல்வாதிகளின் தரத்தினைக் கிண்டலும், கேலியும், குத்தலும், நையாண்டியும் செய்திருக்கின்ற பாங்கினைக் காணமுடிகின்றது. அதனால்தான், எழுபது கட்சிகளிருந்தாலும், இதைவிட இன்னும் கட்சி மாறுவதில் வேகம் காட்டியிருப்பார்கள் என்று வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறுகிறார்.
அரசியலாளர்கள் வறுமையை வெளியேற்றும் விதம்
அரசியலாளர்கள் மக்களிடம் காணப்படுகின்ற வறுமையை வெளியேற்ற வேண்டுமென்றால், அவர்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், தண்ணீர், கல்வி, வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். இது நாட்டை ஆளுகின்ற அரசு மற்றும் அரசியலாளர்களின் தலையாய கடமை. இப்படிப்பட்ட நல்ல செயல்பாடுகளை அரசியல்வாதிகள் செய்வதில்லை. மாறாக, ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் வறுமையில் வாடியிருக்கின்ற ஒருவர், செட்டியார் வீட்டுத் திருமணப் பந்தியில் சாப்பிவதற்காக அமர்ந்திருக்கின்றார். அப்போது, அங்கு சென்ற அரசியல்வாதி அவரை எட்டி உதைத்து வெளியேற்றுகின்ற செயலை ஆசிரியர் ‘வறுமையே வெளியேறு’ என்னும் கவிதையின் வாயிலாக நையாண்டி செய்துள்ளார். இதனை,
“எட்டுமாதமாய்
எங்கள் தலைவர்
தெருவில் நின்று
செழிக்கச் செய்தார்
முழக்கம்…
வறுமை
வெறிறே றிற்றா
விரைவாய்…?
நேற்று
செட்டியார் வீட்டுத்
திருமணப் பந்தியில்
எதுவும் பேசாது
எங்கள் தலைவர்
எட்டி உதைத்தார்…
வறுமை,
வேக வேகமாய்
வெளியேறிற்று -
பரட்டைத் தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக…!” (3)
என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. இன்றளவும் அரசும், அரசியல்வாதிகளும் வறுமையில் வாழ்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட வழிவகை செய்வதில்லை. மாறாக இலவசம் என்பதைக் கொடுத்து மக்களைச் சிந்திக்க முடியாதபடி செய்கின்றனர். இதனால், காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் சில இடையூறுகள் ஏற்படும் போது மக்கள் உணவுக்குத் திண்டாடுகின்ற அவல நிலை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக இன்றைய கரோனா-19 நோய்த் தொற்றுக் காலகட்டத்தினைக் கூறலாம்.
தேர்தல் மாற்றமும் பொதுவாதலும்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் என்பது இந்திய அரசின் சட்டமாக இருக்கின்றது. இச்சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் மக்களுக்குச் சேவை செய்வதைத் தவிர்த்தும், குறைவாகச் செய்தும் மக்களுக்குச் சேவை செய்யவேண்டிய பணத்தை தங்களுடைய பணமாக வைத்துக்கொள்கின்ற எண்ணம் அவர்களுக்கு உருவாகின்றது. பணம் ஒரே இடத்தில் மலைபோல் குவிகின்றது. சாதாரண பாமர மக்களிடம் ஒரு நேர உணவிற்கும், இருக்க இருப்பிட வசதியில்லாமலும், நல்ல குடிநீர் கிடைக்க வழியில்லாமலும் திண்டாடுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். அதற்குப் பண்டைய காலச் சோழர் ஆட்சி முறையில் இருந்த வருடாவருடம் தேர்தல் என்கின்ற முறையைக் கொண்டுவர வேண்டும். தேர்தலில் நிற்பதற்கான கல்வித் தகுதிகள் மற்றும் சோழர் காலத்தில் இருந்த விதிமுறைகளை நடைமுறைப் படுத்துதல் வேண்டும். அப்போதுதான் பணம் அனைவருக்கும் பொதுவானதாக அமையும்.
வருடா வருடம் தேர்தல் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால். தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்கு வரும். பணத்தை மக்களுக்குச் செலவுசெய்வர். தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் அடுத்த முறை வெற்றிபெறவேண்டும் என்பதற்காக மக்களுக்கான சேவையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முனைப்புக் காட்டுவார்கள். மிக எளிதான முறையில் பொதுவுடமையை அடையலாம் என்பதைனை,
“ஐந்து வருடம்
முடிந்தால் தேர்தல்
என்பதை மாற்றி
இங்கே
வருடா வருடம்
வைத்தால் போதும்.
பெரும் பெரும்
புள்ளிகள் எல்லாம்
வெள்ளிப் பணத்தை
அள்ளி இறைப்பார்
ஆடிக் கரைப்பார்
சுலப மாகச்
சோஷலிசத்தை
அடையும் வழியிது;
அற்புத வழியிது.” (4)
எனும் மேற்காணும் கவிதையின் வாயிலாக மீரா எடுத்துரைக்கின்றார்.
மக்கள் கண்ட தற்கால அரசியல்வாதிகள்
மக்கள் தற்காலத்தில் கண்ட அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் என்னவெனில், மக்களின் சேவை பணத்தைச் சுரண்டுதல், மக்களிடமிருந்து எதிர்பார்த்தல், மக்களிடம் கொள்ளையடித்தல், உயிரோடு இருந்தாலும் இறந்தாலும் பதவி ஆசை பிடித்துத் திரிதல் போன்றவைகளாகத்தான் இருக்கின்றனர். இதனை, மீரா தனது கவிதையில் பல இடங்களில் சுட்டிச் செல்கின்றார். ஊரைக் கொள்ளையடிக்கின்ற செயலை “மேயர் மகன் தோட்டி மகனுக்குக் கூறியது” (5) என்கின்ற கவிதையில் கூறுவது மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கின்றார்.
மேலும், ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை’ விடாது என்கிற பழமொழிக்கேற்ப “பழக்கம் பொல்லாதது” (6) என்கின்ற கவிதையில் பதவியில் இருந்த போது, மக்களிடம் சுரண்டிய பழக்கம் பதவியில் இல்லாதபோது தனது ஆசை மனைவியைச் சுரண்டுகின்றார் என்று நகையுணர்வோடு எடுத்துரைக்கின்ற பாங்கையும் காணமுடிகின்றது. அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு உடையவர்கள் என்பதை, “துண்டு விழுந்தது” (7) என்கின்ற கவிதையில் அரசியல்வாதி தான் பேசும் போது பேச்சில் துண்டு விழக் காரணம் என்வெனில், கழுத்தில் துண்டு விழாக் காரணம் என்று குத்தலாகவும், அரசியல்வாதிகள் பதவி ஆசை பிடித்தவர்கள் என்பதை “ஆனை மாதிரி” (8) என்கின்ற கவிதையில் இருந்த போது ‘எம்.பி.,’ பதவி இறந்தபோது ‘சிவலோகப் பதவி’ என்று கிண்டலாகவும் எடுத்துரைப்பதைக் காணமுடிகின்றது.
பண்டைய கால அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க விரும்ப மாட்டார்கள். தேர்தலில் நின்று வெற்று பெற்றுவிட்டால் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து மக்களுக்காகப் பாடுபடுவார். மக்களின் சேவைக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் கக்கன் எம்.எல்.ஏ., மற்றும் பலர் இருந்திருக்கின்றனர். அதனால்தான் இன்னும் கர்ம வீரர் காமராசரை சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர். நல்லதொரு அரசியல்வாதிக்கு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் கூறுகின்றனர். ஆதலால்தான் அன்று அரசியல் புனிதமாக இருந்திருக்கின்றது. இன்றைய காலத்திலும் (A.B.J.) அபுல் பகீர் ஜைனுலாபுதின் அப்துல்கலாம் நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தவர் என்பது நாடறிந்த உண்மை.
இன்றைய காலகட்டத்தில் தேர்தலில் ஏராளமானோர் போட்டி போடுகின்றனர். காரணம், பணம் விரைவில் சம்பாதிக்கலாம் என்பதேயாகும். இப்படிப்பட்டச் சூழல் நிலவுவதால்தான் பல அரசியல்வாதிகள் நேர்மையாகச் செயல்படுவதில்லை. மக்களுக்குச் சேவையும் செய்வதில்லை. மாறாகத் தங்கள் வாழ்வில் உயர்விற்காகவும், வருங்காலத் தலைமுறைக்காகவும் சொத்துக்கள் குவிப்பதைத்தான் மக்கள் விமர்சனம் செய்கின்றனர். வரப்பு உயர, நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர, குடி உயரும், குடி உயர, அரசன் உயர்வான் என்பது புறநானூற்றுப்பாடல். அதுபோல மக்கள் வறுமையின்றி வளமாக வாழ்ந்தால்தான் அரசியல்வாதிகளும் வளமாக வாழமுடியும் என்பது நிதர்சனம். மக்களை ஏமாற்றுகின்ற, கொள்ளையடிக்கின்ற அரசியல்வாதிகள் பற்றி மிகக் கடுமையாகச் சாடும் உத்தியாகக் கிண்டலையும், குத்தலையும், நையாண்டியையும் மீரா கையாண்டிருப்பதனை அறிய முடிகின்றது.
உண்மையான, நோ்மையான, மக்களுக்குச் சேவை செய்யும் அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும். அதற்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறைத் தேர்தல் என்பதை மாற்றவேண்டும். சோழர்கால ஆட்சியில் இருந்ததைப் போன்று வருடத்திற்கு ஒருமுறைத் தேர்தல் என்ற சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று மீரா தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்துகின்றார்.
அடிக்குறிப்புக்கள்
1. நிறைமதி தமிழ் உரை. பக்.164.
2. ஊசிகள் கவிதை, ராஜேந்திரன், மீ.- வேகம். பக்.15
3. மேலது, வறுமையே வெளியேறு. பக்.18.
4. மேலது, ஜனநாயக சோஷலிசம்.பக்.30.
துணைநூல் பட்டியல்
1. ராஜேந்திரன், மீ., ஊசிகள் கவிதை, அன்னம், மனை எண்.1. நிர்மலா நகர், தஞ்சாவூர். 613 007.
2. ஜெயம், அ. & சந்திரலேகா வைத்தியநாதன், தமிழ் இலக்கிய வரலாறு, ஜனகா பதிப்பகம்,1563, தம்பையா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை 600 033.
3. சந்திரா, ச. நிறைமதி தமிழ் உரை, பாவை பிரிண்டர்ஸ், (பி) லிட்இ 16 (142) ஜானி ஜான் கான் சாலை, இரயப்பேட்டை, சென்னை - 600 014.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.