திருக்குறளில் கலைச்சொற்கள்
முனைவர் சி. இராமச்சந்திரன்
ஆராய்ச்சி உதவியாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை - 600 113.
முன்னுரை
திருவள்ளுவரால் இயற்றப்பெற்று உலகம் முழுமைக்கும் பொதுமறையாக விளங்கக்கூடிய திருக்குறள் இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கின்றது. இது மக்கள் இலக்கியமாகத் திகழ்கின்றது என்பதே இதற்குக் காரணம். இதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் மானுட சமூகம் பரவியிருக்கின்ற திசைகளுக்கெல்லாம் பொருந்தி போகக்கூடியதாகும். தமிழுக்கும் தமிழர்க்கும் மட்டுமல்லாமல் எல்லோருக்குமான வழிகாட்டி நூலாகத் திருக்குறள் திகழ்கின்றது. விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டும் மதம் சார்ந்த சித்தாந்தங்களைச் சேர்க்காமலும் யார் பக்கமும் நில்லாமல் பொதுவாக நீதி சொல்லும் திருவள்ளுவர், தாமியற்றிய குறட்பாக்களில் சொற்களைச் சிறப்பாக கையாண்டிருக்கின்றார். அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்களில் அழகியலும், சொல் நயமும், பொருள்நயமும், அணிநயமும் இயல்பாகவே காணப்படுகின்றன. அதேபோன்று அரிய பொருள்தரும் பல சொற்களையும் காணமுடிகின்றது. இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கும் பல சொற்கள் திருக்குறளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு திருக்குறள் பொருட்பால் மற்றும் காமத்துப்பாலில் இடம்பெற்றிருக்கும் நாற்பது அரிய சொற்கள் இக்கட்டுரையில் தொகுத்தளிக்கப்படுகின்றன.
திருக்குறளில் கலைச்சொற்கள்
1. வாய் (vāy) - மனை/இடம்/வாசல் (குறள்.1001:1)
2. ஈட்டம் (īṭṭam) - சம்பாதிக்கை (குறள். 1003:1)
3. பொறை (poṟai) - பாரம் (குறள். 1003:2)
4. தமியள் (tamiyaḷ) - தனியாயிருப்பவள் (குறள். 1007:2)
5. துனி (tuṉi) - வெறுப்பு / வறுமை (குறள். 1010:1)
6. வறம் (vaṟam) - வற்றுகை / வறுமை (குறள். 1010:2)
7. திரு (tiru) - அழகு (குறள். 1011:1)
8. மடி (maṭi) - ஆடை (குறள்.1023:2)
9. உஞற்று (uñaṟṟu) - முயற்சி (குறள்.1024:2)
10. தோல் (tōl) - புகழ் (குறள்.1043:1)
11. நெருநல் (nerunal) - நேற்று (குறள். 1048:1)
12. நிரப்பு (nirappu) - வறுமை (குறள். 1049:1)
13. கண்பாடு (kaṇpāṭu) - நித்திரை (குறள். 1049:2)
14. காடி (kāṭi) - கஞ்சி (குறள்.1050:2)
15. கரப்பு (karappu) - மறைக்கை (குறள். 1051:1)
16. கரவு (karavu) - மறைவு (குறள். 1061:1)
17. புற்கை (puṟkai) - ஒருவகை கஞ்சி / சோறு (குறள். 1065:1)
18. ஊங்கு (ūṅku) - மேம்பட்டது (குறள். 1065:2)
19. பக்கு (pakku) - பிளப்பு (குறள். 1068:2)
20. அகப்பட்டி (akappaṭṭi) - காவலினிறித் திரிவோன் (குறள். 1074:1)
21. அஞர் (añar) - அச்சம் (குறள். 1086:1)
22. கட்படாம் (kaṭpaṭām) - யானைமுகத் தணியாடை/யானை முகத்து அணியும் முகமூடி (குறள். 1087:1)
23. ஞாட்பு (ñāṭpu) - போர்க்களம் (குறள். 1088:1)
24. அடுநறா (aṭunaṟā) - காய்ச்சிய சாராயம் (குறள். 1090:1)
25. யாப்பு (yāppu) - அன்பு (குறள். 1093:2)
26. கதுப்பு (katuppu) - தலைமயிர் (குறள். 1105:2)
27. அறுவு (aṟuvu) - முழுமை (குறள். 1117:1)
28. தூவி (tūvi) - பறவையிறகு (குறள். 1120:1)
29. வால் (vāl) - வெண்மை (குறள். 1121:2)
30. வேபாக்கு (vēpākku) - வேகுகை (குறள். 1128:1)
31. கரப்பு (karappu) - மறைக்கை (குறள். 1129:1)
32. புணை (puṇai) - மரக்கலம் (குறள். 1134:2)
33. மறுகு (maṟuku) - தெரு (குறள். 1139:2)
34. இன்கண் (iṉkaṇ) - இன்பம் (குறள். 1152:1)
35. நீப்பு (nīppu) - பிரிவு (குறள். 1154:1)
36. இனன் (iṉaṉ) - உறவினன் (குறள். 1158:1)
37. உயல் (uyal) - சீவிக்கை (குறள். 1174:1)
38. படல் (paṭal) - உறக்கம் (குறள். 1175:1)
39. பெட்டார் (peṭṭār) - விரும்பியவர் (குறள். 1178:1)
40. அஞர் (añar) - மனவருத்தம் (குறள். 1179:1)
முடிவுரை
திருக்குறள் ஒரு சொற்களஞ்சியமாகும். அதிலிருந்து சில சொற்கள் திரட்டப்பட்டு மேற்கண்ட பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நறுக்குத் தெறித்தாற் போல் இரண்டு மூன்று எழுத்துக்களில் கூட ஒரு அரிய பொருள்தரக்கூடிய சொல் இருக்கின்றது என்பதைத் திருக்குறளை ஆழ்ந்து படிப்பவர்கள் உணர்ந்துகொள்ளலாம். அதனடிப்படையில் அரிய பொருள்தரக்கூடிய புதுப்புது சொற்கள் இக்கட்டுரையில் திரட்டித் தரப்பட்டுள்ளன. இச்சொற்களைக் கொண்டே திருவள்ளுவரின் மொழியறிவையும் இலக்கியப் புலமையையும் உணர்ந்துகொள்ளலாம். ஒன்றே முக்கால் அடிக் குறளில் தாம் கூற வந்த கருத்து அறுபட்டுவிடாமல் இருப்பதற்கு மணிகள் கோர்த்தார்போன்ற சொல்லாக்கத்தைத் திருவள்ளுவர் கையாண்டுள்ளார். எந்த ஒரு சொல்லையும் விட்டுவிட்டு அவர் கூறும் கருத்துக்களை உணர்ந்துகொள்ளுதல் கடினம்.
துணைநின்ற நூல்கள்
1. திருக்குறண் மூலமும் பரிமேலழகருரையும், வாணிநிகேதனவச்சுக்கூடம், சென்னபட்டணம்.
2. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், 1936, சென்னை.
3. தமிழ் - தமிழ் அகரமுதலி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.