அரசியல் வரலாற்றுடன் சமூக வரலாற்றையும் அறிவதற்கு ஆவணங்கள் பெரிதும் துணை செய்கின்றன. அவ்வகையில் மோடி ஆவணத் தொகுப்பில் உள்ள தமிழ் ஆவணங்களின் (எண் : CR88/002/70,71) வழி அறியப்படும் அரசகுடும்பத் திருமண வழக்காறுகள் குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
1676 முதல் 1855 வரை தஞ்சாவூரை அரசாண்ட மராத்திய மன்னர்கள் அரசு நடைமுறைகள், கணக்கு விவரங்கள், கடிதங்கள், அரசியல் குறிப்புகள், ஆணைகள், மக்கள் கோரிக்கைகள் முதலியவற்றை மராத்திய மொழியில் மோடி எழுத்துருவில் எழுதினர். மராத்திய மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களுக்கு இடையில் அதன் விளக்கங்கள் சுருங்கிய குறிப்புகளாகத் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டன. அத்தமிழ் மொழிப்பதிவுகள் மோடிப் பலகணி என்றழைக்கப்படுகிறது. மோடிப் பலகணி அன்றி, மோடி ஆவணத் தொகுப்பில் தமிழில் எழுதப்பட்ட ஆவணங்களையும் காணமுடிகிறது.
மோடி எழுத்துருக்களில் எழுதப்பட்ட ஆவணங்கள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மராத்தி மொழியை எழுதுவதற்கு தேவநாகரி எழுத்துருவில் இருந்து மோடி என்ற எழுத்துருவை ஹேமாட்பந்த் என்பார் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார் என்பர். (1) கைகளை எடுக்காமலும் விரைவாகவும் எழுதுவதற்கு ஏற்ப இந்த எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (2)
இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள இத்தமிழ் ஆவணத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காணலாம்.
1. யாருக்கு யார் எழுதியது என்ற தொடக்கப்பகுதி.
2. கேரரிக்கை குறித்த விளக்கப்பகுதி.
3. ஆண்டு மாதம் முதலியன குறிப்பிட்டுக் கையொப்பமிடும் இறுதிப் பகுதி.
தஞ்சாவூர் அரசு முகவர் அவர்கள் அலுவலகத்தில் சர்க்கீலாகப் பணியாற்றும் ஸ்ரீமான் கோவிந்தராயர் அவர்களுக்கு கண்டி தேசம் முதல் மற்றும் இரண்டாம் ராணியின் சகோதரரும் கண்டி தேச மகாராசாவின் பேரப்பிள்ளைகளான தர்மராசா, சாயாதேவி இவர்களின் பாதுகாவலருமாகிய சின்னசாமி நாயக்கர் எழுதிக்கொண்டது என்ற விவரம் இந்த ஆவணத்தின் தொடக்கப்பகுதியாக உள்ளது.
“தஞ்சாவூர் கவுனர்மேண்டு ஏஜெணடு
துரைஅவர்கள் ஆபீஸ் சர்க்கீல்
ஸ்ரீமான்-கோவிந்தறாயர் அவர்களுக்கு
கண்டீ தேசம் முதலாவது
இரண்டாவது றாணிமார் சகோதரமும்
மேல்படி கணடி மஹாறாசாவின் பேரப் பி
ள்ளையான தர்மறாஜா, சாயா தேவி வினு
டைய சவரகஷகள கர்த்தனான சின்ன
சாமி நாயக்கர் எழுதிக் கொண்டது ”
இத்தொடக்கப்பகுதி யாருக்கு யார் எழுதியது என்ற விவரத்துடன் அமைகிறது. எனினும் இப்பகுதியில் இடம்பெறும் அறிமுக விளக்கங்கள் அடுத்து இடம்பெறப் போகும் செய்திகளுக்குத் தொடர்புடையனவாக உள்ளன என்பது கவனத்திற்குரியதாகும்.
கண்டி மகாராசாவின் பேத்தி சாயாதேவியை நாகப்பட்டணத்தில் இருக்கும் கண்டி ஓய்வூதியதாரா் துரைசாமி நாயக்கரின் மகன் ராமசாமி நாயக்கருக்குத் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஆண்குழந்தையும் பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் சாயாதேவி கண்டி தேசத்தில் இருக்க, நாகப்பட்டணத்தில் இருக்கும் ராமசாமி நாயக்கருக்கு நாகப்பட்டணத்தில் இருக்கும் வெங்கிட ராமசாமியின் மனைவி பங்காருசுப்பம்மாள் தன்மகளை இரண்டாம் திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்று வேண்டப்படுறது.
இக்கோரிக்கையில் தங்கள் உறவுமுறைகளில் மனைவியும் குழந்தையும் உள்ள ஒருவர் இரண்டாம் திருமணம் செய்வது வழக்கம் இல்லை என்றும், ராமசாமி இரண்டாந் திருமணத்திற்கு உடன்படும் அளவில் அவருக்கு தவறான கருத்துகளைக் கூறியுள்ளனர் என்றும், ராச வம்சத்தில் தோன்றிய பெண்ணைத் திருமணம் செய்பவர் அப்பெண்ணுடன் அரண்மனையில் இருக்க வேண்டும். அவ்வாறே சாயா தேவியின் சகோதரிகளின் கணவர்கள் 15 ஆண்டுகளாக அரண்மனையில் வசித்து வருகின்றனர் என்றும் குறிக்கப்படுகிறது.
கண்டி தேச மகாராவினுடைய பேத்தி சாயா தேவியை நாகப்பட்டணத்திலிருக்கும் கண்டி ஓய்வூதியதாரா் துரைசாமி நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கருக்குத் திருமணம் செய்து கொடுத்து ஆண்குழந்தையும் பிறந்து மூன்று மாதங்களாவதை;
”இப்பவும் மேல்படி மஹா
றாஜாவினுடைய பேத்தியாகிய சாயா
தேவியை நாகப்படடணத்திலிருக்கும்
கண்டி பென்ஷனர் துரைசாமி நாயக்க
ர் குமாரன் றாமசாமி நாயக்கருக்கு வி
வாகம் செய்து கொடுத்து ஆண் கொழந்
தையும் பிறந்து மூண்று மாசகாலமாகி
றது.”
என்றும், இந்நிலையில் நாகப்பட்டணத்திலிருக்கும் வெங்கிடராமசாமியின் மனைவி பங்காரு சுப்பம்மாள் தன் மகளை மேற்படி ராமசாமி நாயக்கருக்கு நாகப்பட்டணத்தில் ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை 6 ஆம் நாளில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை இக்கோரிக்கை ஆவணம்,
”இப்படிருக்க நாப்பட்டணத்திலிருக்
கும் வெங்கிட ராமசாமி பெண்சாதி பங்கா
ருசுப்பம்மாள் தன்மகளை மேல்படி றாமசா
மினுருக்கு நாகப்பட்டணத்தில் நாளது ஆவணி
மாசம் 6 தேதி வெள்ளிக் கிழமை விவாகம்
செய்ய எத்தனப்படுகிறார்கள்”
என்றும் நாயக்கர் உறவுமுறைகளில் ஏழையாய் இருக்கப்பட்டவர்கள் கூட மனைவி, குழுந்தைகள் இருக்கும் போது வேறு திருமணம் செய்யக்கூடாது (செய்யமாட்டார்கள்) என்பதை;
”எங்கள் உறைமுறையாயில் ஏழை
யாய் இருக்கப்பட்டார்கள் கூட
பெண்சாதி பிள்ளை இருக்கும் போது
வேறு கலியாணம் செய்யகூடாது”
என்றும், ராச வம்சத்தில் தோன்றிய பெண்ணை ராமசாமி (நாயக்கர்) திருமணம் செய்துகொண்டு தவறான சொற்களைக் கேட்டு, அதன்படி அறமற்ற முறையில் மேல்குறிப்பிட்டபடி திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர் என்பதை,
”அப்படிருக்க இராஜ வமிசத்தில் தோன்றிய
பெண்ணை கலியாண மேல்படி றாமசாமி
கலியாணம் செய்து கொண்டு துர்ப்போ
தணைகிணங்கி அக்கிறமமாய் மேல்கண்ட
மாதிரி ஆரம்பத்திருக்கிறார்கள்”
என்றும் இதுநாள் வரையில் நடைபெற்றுவரும் ராச குடும்பத்து வழக்கம் என்னவென்றால், ராச குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அந்தப் பெண் இருக்கும் அரண்மனையிலே இருக்க (வேண்டும்) மேற்படி சாயாதேவி சகோதரிகளாகிய மந்தாளசாமி, பார்கவி தேவி, ஆண்டாளதேவி எனும் இவர்களின் கணவர்கள் எல்லோரும் அந்த அம்மாக்கள் இருக்கும் சாகையிலே திருமணமான நாள் முதல் 15 வருடங்களாக அரண்மனையிலேயே உள்ளார்கள். இரு ராச குடும்பத்தின் வழக்கம் என்பதை,
”மேலும் றாஜ குடும்பத்தின் வழக்கம் நாளது
வரையில் யென்னமென்றால்
இராஜ குடும்பத்து பெண்ணை கலியாணம்
செய்து கொண்டால் அவர்கள் இருக்கப்ப
ட்ட அரண்மணைலேயே இருக்கிறவச…
மேல்படி சாயாதேவி தமைக்கைகளா
கிய மந்தாளசாமி, பார்காவீ தேவி ஆண்
டாளதேவி, இவர்கள் புருஷர்கள் எல்லோ
ரும் அந்த அம்மாக்கள் இருக்கும் சாகைலே
யே கலியாணமான நாள்முதல்கொண்டு
நாளது வரையில் சுமார் 15 வருஷகால
ங்களாய் அவடத்திலேயே இருக்கிறார்கள்.
இது றாஜ குடுபத்தின் வழக்கம்”
என்றும் அதனால் நாகப்பட்டணத்தில் ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்படி இறந்து போன வெங்கிட ராமசாமி மனைவியாகிய பங்காருசுப்பம்மாள் அறமற்ற முறையில் தன் மகளை, கண்டி ஓய்வூதியதாரா் மேற்படி ராமசாமி நாயக்கருக்கு மறுபடியும் திருமணம் செய்விப்பது அறமற்றதாய் இருப்பதால் தாங்கள் தயவு செய்து மேற்படி திருமணத்தை நடக்கவிடாமல் செய்ய வேண்டும் என்றுத் தங்களை மிகவும் மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன் என்பதை,
“ஆகையால் நாகப்ப
ட்டணத்தில் பென்ஷன் வாங்கிவரும் மேல்
படி இரந்து போன வெங்கிட றாமசாமி
பெண்சாதியாகிய பங்காருசுப்பம்மாள்
அக்கிறமயாய் தன் மகளை கண்டி பென்ஷ
னர் மேல்படி துரைசாமி நாயக்கர் மகன்
றாமசாமி நாய்க்கருக்கு மருபடியும் கலியா
ணம் செய்விப்பது அக்கிறமமாய் இருப்பதால் தாங்கள் தய
வு செயது மேல்படி அக்கிறமமான கலியாண
த்தை நடக்கவெயிடடாமல் செயய
வேண்டுமென்று தங்களை மிகவும்
மன்றாடிகேட்டுக்கொள்ளுகிறேன்”
என்றும் குறிக்கப்படுகிறது.
இந்த ஆவணத்தின் இறுதிப் பகுதியில் இக்கோரிக்கை எழுதப்பட்ட நாளாக 15.08.1875 குறிக்கப்பட்டுள்ளது. இது ஆவணி 1 ஞாயிற்றுக் கிழமையாகும். (3) இன்னும் ஐந்து நாளில், அதாவது (20.08.1875) ஆவணி 6 வெள்ளிக்கிழமையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள திருமணத்தை நிறுத்துவதற்கான கோரிக்கையாக அமைவதை இப்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள நாள் விவரங்களின் வழி அறியமுடிகிறது. நாளினைத் தொடர்ந்து கையொப்பம் இடம் பெறுகிறது.
அரசகுடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர் அப்பெண் வசிக்குமிடத்திலே வசிப்பது வழக்கமாகும். மணந்துகொண்ட பெண்ணும் அவர்களின் குழந்தையும் இருக்கும் நிலையில் இரண்டாம் திருமணம் செய்தல் வழக்கமன்று. இவ்வாறான வழக்காறுகளில் தவறி நடக்கும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை உண்டு என்பதையும் இந்த ஆவணத்தின் வழி அறிய முடிகிறது.
1. Besekar, D. N., and R. J. Ramteke. "Study for Theoretical Analysis of Handwritten MODI Script-A Recognition Perspective." International Journal of Computer Applications 64.3 (2013): 45-49.
2. Joseph, Solley, and Jossy George. "Feature extraction and classification techniques of MODI script character recognition." Pertanika J Sci Technol 27.4 (2019): 1649-1669.
3. https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=15/08/1875