இலங்கை வடக்கு, கிழக்கு பிரதேச பல்கலைக் கழகங்களில்
பரதக்கலையின் பங்களிப்பு
மலர்விழி சிவஞானசோதிகுரு
முனைவர் பட்ட ஆய்வாளர், இசைத்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
ஆய்வுச் சுருக்கம்
இலங்கையில் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற பரதக்கலையின் ஊடாக மாணவர்களின் திறனையும் அவர்களின் தேர்ச்சி மட்டத்தை அதிகரித்தல் பல்கலைக்கழகங்களினூடாக பரதக்கலையைப் பாதுகாத்தல்.
முன்னுரை
இலங்கைக் கல்வி நிறுவனங்களில் மிக முதன்மையானது பல்கலைக்கழகங்கள் ஆகும். இப்பல்கலைக்கழகங்களுள் கலை, கல்வி, கலாச்சாரங்களை மையமாகக் கொண்டு பல விடயங்கள் காணப்படுகின்றன. பல்கலைக்கழகங்கள், கலை சார்ந்த நிகழ்வுகள், கல்விசார் நடவடிக்கைகள், மாணவர்களின் திறன் விருத்தி, அவர்களின் எதிர்கால நோக்கங்கள், நிறுவனங்களின் சாதனைகள், கலைகளைப் பாதுகாத்து அதை வளர்க்கும் விதம் என்பவற்றை நாம் நோக்குவோம்.
பரதக்கலை
பண்ணும் பரதமும் செழிப்புற்று வளர்ந்த நாடு “தமிழ் நாடு” இங்கு நிகழ்கலை என்ற சதிர் கச்சேரிகளிலிருந்து மாறுதல் அடைந்தது தற்காலத்தில் காணப்படுகின்ற பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பரதக்கலையானது தமிழ் நாட்டில் மட்டுமின்றி உலகில் அனைத்து பிரதேசங்களிலும் அதன் செல்வாக்கையும் வலிமையையும் பெற்றுக் காணப்படுகின்றது. பரதநாட்டியம் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எவ்வாறு தன்னுடைய பங்களிப்பை ஆற்றுகின்றது என்பதைச் சிறிது கண்ணோட்டங்களுடன் நோக்குவோம்.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள்
இலங்கையில் பல்கலைக்கழக முறைமையானது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கத் திருத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் விதிக்கப்பட்ட வரையறைக்குள் இயங்குகிறது. பல்கலைக்கழகங்களில் பட்டபயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்கான மாணவர்களின் தெரிவு விதந்துரைக்கப்பட்ட சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு) குறித்தொகுக்கப்பட்ட ஒரு பணியாகும். இப்பணியைப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து ஆற்றுகின்றது.
பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் வளாகங்களில், “14 தேசியப் பல்கலைக்கழகங்கள் 3 வளாகங்கள் மற்றும் 5 நிறுவகங்கள் ஆகியவற்றில் பட்டபயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்காக மாணவர்களைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்கின்றது.
“14 பல்கலைக்கழகங்கள் மூன்று வளாகங்கள் மற்றும் ஐந்து நிறுவகங்கள் ஆகியவற்றில் உள்ள பட்டபயில் நெறிகளுக்கான தெரிவு நடைமுறை விதிகளும், ஒழுங்கு விதிகளும் அரசாங்கத்தாலோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினாலோ எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைய மீளாய்விற்கு உட்பட்டவையாகும்”. (1)
இலங்கை பல்கலைக்கழகத்தின் அனுமதி கற்கை நெறிகள்
பாடசாலை கற்கை நெறியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தங்களுடைய பாடத்தில் சித்தி பெறுபவர்களே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள். கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் உள்ள பாடங்கள் ஐந்து முக்கிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. கலைப்பிரிவு, வணிகவியல் பிரிவு, உயிரியல் விஞ்ஞானப் பிரிவு, கணிதப் பிரிவு, தொழில்நுட்ப பிரிவு. இப்பிரிவுகளில் கலைப்பிரிவில் சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கியலும், கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும், சித்திரமும் வடிவமைப்பும், கட்புல கலை போன்ற பல பிரிவுகள் காணப்படுகின்றன. (2)
கலை கற்கை நெறி அனுமதிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்
சங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பும், நாடகமும் அரங்கியலும், கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும், கட்புலக் கலை ஆகிய கற்கை நெறிகளை தெரிவு செய்வதற்குப் பரீட்சார்த்திகள் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் ஆகக் குறைந்த திறமைச் சித்தியை ( ஊ ) அவர்கள் விரும்பிய பாடங்களில் சித்தி அடைந்து வேறு ஏதாவது இரண்டு பாடங்களிலும் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (3) சித்தி பெறுபவர்கள் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்திலும் அனுமதிக்கப்படுகின்றனர். இப்பல்கலைக்கழகங்கள் நான்கு வருட பட்டமானி நிகழ்ச்சித் திட்டங்களில் இயங்கி வருகின்றது.
கலைப்பீடம்
கலைப்பீடம் அதன் மாணவர்களுக்கு பரந்த அடிப்படையிலான கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை வழங்குகின்றது.
பீடத்தினால் பின்வரும் பட்டதாரி நிகழ்ச்சித் திட்டங்கள் வழங்கப்படுகின்றது.
1. கலைமாணி (பொது) பட்டம் ( 3 வருடம் )
2. கலைமாணி (விசேட) பட்டம் ( 4 வருடம் )
இவ்வாறு கலைப் பீடங்களின் பட்டப் படிப்புக்கள் விசேடப் பாடப்பிரிவுகளாகவும் பொதுப் பாடப்பிரிவுகளாகவும் ஒரு சில பாடங்கள் கட்டாயப் பாடங்களாகவும் காணப்படுகின்றன. (4)
பல்கலைக்கழகம் சார்ந்த அரசு உயர் கல்வி நிறுவனங்களின் தோற்றம்
இலங்கையில் பல்கலைக்கழகம் சார்ந்த அரசு உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் (University Grant Commission) கீழ் இயங்குகின்றன. இலங்கையில் மொத்தமாக 15 பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகமும், கிழக்கு மாகாணத்திலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகமும் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழr பண்பாட்டின் பாரம்பரியக் கலைகளான கருநாடக இசையையும் பரதநாட்டியத்தையும் வளர்க்கும் நிறுவனங்களாகவும் யாழ்ப்பாணத்தில் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியும், மட்டக்களப்பிலுள்ள சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. இருப்பினும் இவற்றின் மூலம் கிடைக்கும் வித்தாண்மை தகைமையானது (Diploma), பட்டப்படிப்பை (Degree) விடத் தரம் குறைந்ததாக கருதப்பட்டமையால் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
இராமநாதன் நுண்கலைக் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் 1974 இல் இணைக்கப்பட்டு “இராமநாதன் நுண்கலைக் கழகம்” எனப் பெயர் மாற்றம் பெற்றது. அதேபோல் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் 2005 ஆம் ஆண்டு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி பொறுப்பேற்கப்பட்டது. இதன் பின்னர் “சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்” எனப் பெயர் மாற்றம் பெற்றது.
இதன் பின்னர் இவ்வுயர்கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தில்(G.P.A) முறை கொண்டுவரப்பட்டது. அதாவது மாணவர்களின் ஒட்டுமொத்தமான கல்விசார் அடைவின் எண்சார் வெளிப்பாட்டுப் பயில்முறை ஆகும். அதாவது அரையாண்டு பருவ அடிப்படையிலான கற்கை முறையாகும். பல்கலைக்கழக சீர்திருத்தங்களுக்கேற்ப (கிரெடிட்) வெகுமதி மதிப்பிடப்பட்ட அரையாண்டு பருவ முறையை அடிப்படையாகக் கொண்ட புதிய அமைப்பினை தற்பொழுது பயன்படுத்தி வருகின்றது. மாணவரது எல்லா பாட அலகினையும் உள்ளடக்கிய அடைவை அளவிடுவதற்குத் தரப்புள்ளிச் சராசரி பயன்படுகிறது. இப் புதிய முறையானது 2003/2004 கல்வி ஆண்டிலிருந்து இன்று வரை மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்கல்வி முறையினை பெற்று வெளியேறும் மாணவர்கள் இராமநாதன் நுண்கலைக் கழகத்தினூடாக “நுண்கலைமாணிப் பட்டத்தினையும்” (நடனம்) சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தினூடாக “இளங்கலைமாணி பட்டத்தினையும்” (நடனம்) பெற்று வெளியேறுகின்றனர்.
ஒவ்வொரு கல்வியாண்டும் இரண்டு அரையாண்டு பருவங்களைக் கொண்டதுடன் நான்கு ஆண்டு சிறப்புப் பட்டமும் எட்டு அரையாண்டு பருவப் படிப்பையும் உள்ளடக்கியதாக அமைகின்றது. இன்று இவ்விரண்டு நிறுவகங்களும் நுண்கலைகளுக்கு பட்டப் படிப்பை வழங்கும் நிறுவகங்களாக திகழ்ந்து வருகிறது. இவற்றிலிருந்து பட்டப்படிப்பைப் பெற்று வெளியேறும் மாணவர்கள் பாடசாலைகளில் நடன ஆசிரியர் தொழிலைச் செய்து கொண்டும் வெளிநாடுகளுக்குச் சென்று பரதநாட்டியத்தைப் பயிற்றுவித்துக் கொண்டும் இருக்கின்றமை நமது நாட்டில் எந்த அளவில் இப்பாரம்பரியக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.
யாழ்ப்பாண இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் தோற்றம்
1947 ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1998 இல் இக்கழகம் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் இணைக்கப்பட்டு கல்விசார் நடவடிக்கைகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாகிய இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் வளர்ச்சியினை மூன்று காலகட்டங்களின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். முதலாவதாக 1974 தொடக்கம் 1984 வரை, இரண்டாவதாக 1984 தொடக்கம் 1992 வரை, மூன்றாவதாக 1992 தொடக்கம் இன்று வரையான காலப்பகுதி என ஆசிரியச் சங்க அறிக்கைகள் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.
இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் வளர்ச்சிப் போக்கு
சு.நடேசப்பிள்ளை அவர்களால் 9-10-1960 இல் இராமநாதன் கல்லூரிக்கு முன் உள்ள ஒரு வீட்டில் இராமநாதன் இசைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் சென்னை தமிழிசை சங்க காப்பாளருள் ஒருவராகவும் இருந்த திரு.வு.ஆ நாராயண சுவாமி பிள்ளை அவர்களால் இக்கல்லூரி அமைக்கப்பட்டது. இங்கு முதல் அதிபராக சங்கீதக் கலாநிதி மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து ஐயர் அவர்களின் மூத்த புதல்வர் மகாராஜபுரம் வி. சந்தானம் அவர்கள் அதிபராகவும், விரிவுரையாளராகவும் நியமனம் பெற்றார். இங்கு நான்கு ஆண்டு காலம் கொண்ட முழு நேர கற்கை நெறியாக இசையும், இசை சார்ந்த பாடங்களும் பிரதானத் துணைப்பாடங்களாக கற்பிக்கப்பட்டன.
சுமார் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் படிப்படியாக மாணவர் தொகை அதிகமாக தொடங்கியது. “1965 ஆம் ஆண்டில் இங்கு இசை பயின்ற மாணவர்களுக்கு இறுதித் தேர்வில் “சங்கீத ரத்னம்” எனும் விருது வழங்கும் பொருட்டு இப்பரீட்சைக்குப் பொறுப்பாக பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி அவர்களும், பேராசிரியர் சத்தியா வந்தனம் சீனிவாசராவ் அவர்களும் அழைக்கப்பட்டனர். (5) 1965 ஆம் ஆண்டு மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் இந்தியா சென்றுவிட 1966 ஐப்பசி வரையான காலப்பகுதியில் கல்லூரி தளர்ச்சியடையத் தொடங்கியது. இக்காலப் பகுதியில் கல்லூரிக்கு புத்துயிர் அளிக்கும் பொருட்டு நிர்வாகப் பொறுப்பைத் திரு. எஸ் சரவணமுத்து அவர்கள் ஏற்றுக் கொண்டார். அவரின் கீழ் புதிய நிர்வாகக் குழுவும் செயற்பட ஆரம்பித்தது. 1967 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட பேராசிரியர் எம். ஏ. கல்யாண கிருஷ்ண பாகவதர், எமது நாட்டின் ஏ. ஜி. ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோர் வாய்ப்பாட்டுத் துறையில் நியமனம் பெற்றனர்.
அதுமட்டுமன்றித் திரு. எம். ஏ கல்யாண கிருஷ்ண பாகவதரிடம் கல்லூரியின் அதிபர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டிலிருந்து பண்ணிசையும் மிருதங்கமும் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு போதனாசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இக்காலத்தில் வீணையும், வயலினும் துணைப்பாடமாக பயிற்றுவிக்கப்பட்டது. 1973 இல் நாடகமும் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் கீழ் இக்கல்வி நிறுவனம் கொண்டு வரப்பட்டு இராமநாதன் அரசினர் நுண்கலைக் கல்லூரி எனும் பெயருடன் இக்கல்லூரி இயங்கத் தொடங்கியது. (6) 1974 இல் இக் கல்லூரி யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான ஓர் அங்கமாக உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட ஆரம்பமானது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இராமநாதன் நுண்கலைக் கழகமும் இவ்வாறு பரிணாம வளர்ச்சியடைந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் கல்வியிலும் அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்றத்தை கண்டது.
இராமநாதன் நுண்கலைத்துறையின் பரதநாட்டியக் கற்கை நெறியின் கலைத்திட்டங்கள் கலைத்திட்டம் என்னும் பதத்திற்குரிய ஆங்கிலச் சொல் “Curriculum” என்பதாகும். அச்சொல்லுக்குப் பொருள் கூறும் போது ஆங்கில அகராதி “கல்வியில் வழிகாட்டும் பாதை” எனப் பொருள் கூறுகின்றது. கலைத்திட்டம் காலத்திற்கேற்ப, நாட்டின் தேவைக்கேற்ப, கல்விச் சிந்தனைகளுக்கு ஏற்ப மாறுபடக் கூடியதாகும். ஒரு பல்கலைக்கழகத்தின் சிறப்பிற்குக் காரணமாகவுள்ளது கலைத்திட்டமாகும். திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு கலைத்திட்டத்தின் மூலம் ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்க முடியும். எனவே, பல்கலைக்கழகத்தின் கலைத்திட்டம் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஏற்ற முறையில் அமைந்திருந்தது. பின்னர் நாட்டின் தேவைக்கேற்ப, கல்விச் சிந்தனைக்கேற்ப மாற்றம் பெற்று வந்தமையை காணமுடிகின்றது.
1972 ஆம் ஆண்டு பாடசாலை கலைத்திட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கமைய 1975 ஆம் ஆண்டு பரதநாட்டியக் கற்கை நெறியை உருவாக்கியது. இதில் முதன்முறையாக சான்றிதழ் வழங்கும் கற்கை நெறியும் அதனைத் தொடர்ந்து வருடாந்தப் பரீட்சை பாடத்திட்டமும் பருவநிலை பட்டப் பரீட்சை பாடத்திட்டமும் இன்று மாணவர்களின் ஒட்டுமொத்தமான கல்விசார் வெளிப்பாட்டுப் பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியதாக இராமநாதன் நுண்கலைத் துறை விளங்குகின்றது. இவற்றில் ஆரம்பக் கலைத்திட்டங்கள் ஆசிரியர் தொழிலை மையமாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளன. இன்றைய மாணவர்களின் ஒட்டுமொத்தமான எண்சார் வெளிப்பாட்டுக் கற்கையின் கலைத்திட்டங்கள் கழகத்துடன் ஒன்றிணைந்த பல தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு காலத்திற்குக் காலம் மாறுபடும். அத்தகைய கலைத்திட்டங்களை இராமநாதன் நுண்கலைத்துறை கொண்டுள்ளது.
பரத நாட்டிய பாட விதானம்
மாணவர்களுக்குப் பருவ நிலைப் பாட அமைப்பிலும் (Semester System) ஒட்டுமொத்த எண்சார் வெளிப்பாட்டு பயில் துறையிலும் (GPA System) அமைந்து காணப்படுகின்றன. வடமொழிகள், சமஸ்கிருதம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன. பரத நாட்டிய உருப்படி வரிசையின் படி கற்றல் கற்பித்தல் நடைபெற்றது. நான்காம் வருடத்தில் அவைக்காற்றுகை பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டது. நான்காம் வருடத்தில் மாணவர்களின் புத்தகமாக்கம் என்ற பாட விதானக்கூறு கொண்டுவரப்பட்டது. செயல்முறையோடு நட்டுவாங்கப் பயிற்சி வழங்கப்பட்டது. கணணி அறிவு மாணவர்களுக்கு புகுத்தப்பட்டது. மாணவர்களின் திறன்களைப் பல்வகையான நிகழ்வுகளினூடாக மாணவர்களின் திறன் விரிவாக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் தோற்றம்
இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியரும் மட்டக்களப்பின் அருந்தவப் புதல்வரும் இராமகிருஷ்ண மடத்தின் புகழ் பூத்த துறவியுமான சுவாமி விபுலானந்தரின் (1892-1947) ஞாபகார்த்தமாக பிராந்திய அபிவிருத்தி மற்றும் இந்து கலாச்சார அமைச்சினால் 29-05-1982ல் ஸ்தாபிக்கப்பட்டது. இக்கல்லூரியில் வழங்கப்பட்ட பட்டங்கள் கல்வி அமைச்சரினால் அங்கீகரிக்கப்படவில்லை. 1999 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியைப் பல்கலைக்கழகத்தரத்திற்கு உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் அறிமுகம்
2005 ஆம் ஆண்டு இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துடன் உத்தியோகப் பூர்வமாக இணைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் இசை, நாடகம், நடனம், தொழில்நுட்பம் சார்ந்து கல்வி ஆண்டின் முதல் தொகுதி ஆரம்பிக்கப்பட்டது. இப் பல்கலைக்கழகத்தில் இசை, நடனம், நாடகம், ஓவியம் ஆகிய பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு நான்காவது ஆண்டு இறுதியில் அவர்களுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
நடனத்துறை ஆரம்பம்
1982 ஆம் ஆண்டு நடனப் பாடநெறியானது திருமதி கமலாதேவி ஞானதாஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து இந்தியக் கலைஞரான திருமதி. லக்ஷ்மி சிறிஸ் கந்தராஜா, மாலதி யோகேந்திரன், பிரிமினி விமலதாச அவர்களால் பட்டயக் கல்வி திட்டத்தின் கீழ் நடனம் கற்பிக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் 2005 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்த பின் முதலாவது 2005, 2006 ஆம் ஆண்டுகளில் 27 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் (Z - score) அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட செய்முறை ((Practical) நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். இளம் கலைமாணி பட்டத்தினை பெறுவதற்கு 2005/2006ஆம் ஆண்டுகளில் ஏறக்குறைய 27 மாணவர்கள் உள்வாங்கப்படும் தொகையானது படிப்படியாக அதிகரிக்கப்பட மாணவர்கள் பரதநாட்டியம் கற்பதற்காக உள்வாங்கப்பட்டனர்.
பட்டப்படிப்பு நெறியின் காலப்பகுதி
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பு நான்கு வருடங்களைக் கொண்டு காணப்படும். பாடங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். பிரதானப் பாடம், துணைப்பாடம், மேலதிகப் பாடம் என்பவையாகும்.
(இராமநாதன் நுண்கலைக் கழகம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்)
“ செய்முறைப் பாடங்கள்
* அடவுகள்
* ஹஸ்தங்கள்
* அலாரிப்பு
* ஜதீஸ்வரம்
* கௌத்துவம்
* சப்தம்
* பதம்
* கீர்த்தனம்
* தில்லானா
* வர்ணம்
* அவைக்காற்றுகை
* நட்டுவாங்கம்
* கிராமிய நடனங்கள்
* ஒப்பனை
* கருநாடக இசை
* இசைக் கருவிகள்
* கற்பித்தல் முறை
அறிமுறைப் பாடங்கள்
* அபிநயங்கள்
* நடராஜர் வடிவமும் தத்துவமும் தாண்டவம் லாஸ்யம்
* ரஸப்பிரகரணம்
* நாயக நாயகி பிரகரணம்
* 64 கலைகள்
* தாளத் தசப் பிராணன்
* பரதக்கலை வரலாறு
* பரதநாட்டிய அடிப்படைகள்
* பரதநாட்டிய கலைஞர்கள்
* சமஸ்கிருதம்
* இந்து நாகரீகம்
* தமிழ்
* ஆங்கிலம்” (7)
இலங்கையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் பரதக்கலை கற்கும் மாணவர்களிடையே காணப்படும் உளச்சார் தன்மைகளாவன;
* தொழில் உலகத்தில் தம்மை தயார்ப்படுத்தி தன்னிறைவான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லுதல்.
* தனிப்பட்ட திறன்களை விருத்தி செய்தல்.
* சமுதாயமாக்கப்படல். அதாவது மாணவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் எச்சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை தயார்ப்படுத்தல்.
* கலை கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல்.
* பரதக் கலையானது நலிந்து போகாது மேன்மேலும் உன்னத நிலையை அடைந்து செல்ல உதவுகின்றது.
- அதாவது கலையானது பரிணாம வளர்ச்சியை அடைந்து எல்லோராலும் கற்கக் கூடிய வசதியில் காணப்படுதல்
* இத்துறையினூடாக ஒழுக்கக் கல்வி வழங்கப்பட்டு நாட்டின் நற்பிரஜைகள் உருவாகுவதற்குக் காரணியாக அமைதல்.
* நோயற்ற வாழ்வினையும் சமத்துவமான ஒரு வாழ்வாதாரத்தையும் கொண்டிருத்தல்.
* மாணவர்களிடையே காணப்படுகின்ற திறமைகளை கண்டறிந்து அதில் அவர்கள் தேர்ச்சி பெற்று மிளிர்வதற்கு உதவியாக அமைகின்றது.
* மாணவர்களின் அவைக்காற்றுகை ஊடாக ஆளுமை விருத்தி, தலைமைத்துவப் பண்பு விருத்தி செய்தல்.
பல்கலைக்கழகங்களினூடாக எதிர்காலத்தில் சாந்தியும் சமாதானமும் நிறைந்த நற்பிரஜைகளை உருவாக்கி சுபிட்சமான நாட்டை கட்டியெழுப்புதல்.
அடிக்குறிப்பு
1, வெளியீடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை 2013ஃ2014 பக்கம் 3.
2, மேலது நூல் பக்கம் 14
3, மேலது நூல் பக்கம் 18
4, மேலது நூல் பக்கம் 87
5, மகேந்திரன் சி. தமிழர்; குழுவியல் 1999 பக்கம் 25
6, மேலது நூல் பக்கம் 27
7, இராமநாதன் நுண்கலைக் கல்லூரி 4ம் வருட மாணவி செல்வி. பி. துவீத்தா, சுவாமி விபுலானந்தா அழகியல்; கற்கைகள் நிறுவக 3ம் வருட மாணவி செல்வி. எஸ். டினேஸ் பிரியாவுடனான நேர்காணல்.
துணை நூல் பட்டியல்
1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை, வெளியீடு 2013 / 2014, பக்கம் 3.
2. மகேந்திரன் சி., தமிழர் குழுவியல், 1999
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.