சு. வேணுகோபால் சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள்
முனைவர் ஆர். பால்சிங்
உதவிப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர், பெட் கலை அறிவியல் கல்லூரி, வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம்
ஆய்வுச் சுருக்கம்
தொண்ணூறுகளுக்குப் பின்பு தமிழின் கலை இலக்கியச் சூழல்களில் பின்நவீனத்துவக் கோட்பாடு பரபரப்பாகப் பேசப்பட்டது. இக்கோட்பாடு முன் வைக்கும் மையம் ´விளிம்பு எதிர்க்கதையாடல்களில், விளிம்பு நிலை கருத்தாக்கங்கள் பல புதிய திறப்புகளை அளித்தது. இதனால் புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் உள்ளான விளிம்புநிலை மக்கள் குறித்த பார்வைகளும் பதிவுகளும் புதிய துலக்கம் பெற்றன. இதன் பின்னணியில் பல படைப்பாளிகளின் பங்களிப்புகளும் உள்ளன. இதில் சு. வேணுகோபால் குறிப்பிடத்தக்கவர். இவரது எல்லா கதைகளிலும் மனிதநேயம் அடிநாதமாக ஒலிக்கிறது. நிலவும் ஆதிக்க சமூகம் குறித்த கூர்மையான விமர்சனத் தொனியுடன் அடித்தட்டு மக்களுக்காக விளிம்புநிலை மக்களுக்காக இவர் எழுப்பும் குரல் கதைகளில் மௌனமாகப் பதிவாகியுள்ளது. இவ்வாறு மையத்தில் கலவாத விளிம்புநிலையில் வாழும் விவசாயக்கூலிகள், பெண்கள், உடல் ஊனமுற்றவர்கள், திருநங்கைகள் இவர்களைக் குறித்த சு.வேணுகோபாலின் புனைவுகளை இக்கட்டுரை அலசுகிறது.
சு. வேணுகோபால் யதார்த்தவாதப் பின்னணியுடன் நேரடியான விவரணையில் கதை சொல்பவர். அவரின் சிறுகதைத் தொகுப்புக்களாக ஐந்திற்கும் மேற்பட்ட தொகுப்புகள் உள்ள நிலையில் அவற்றினை ஆய்வெல்லையாகக் கொண்டு இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.
சு. வேணுகோபாலின் கதைகள் விளிம்பு மனிதர்களை, அவர்கள் வாழ்வை, அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது என்ற கருதுகோளை முன்வைத்தே இவ்வாய்வுக்கட்டுரை நகர்கிறது. ஆதரவும் ஆறுதலும் அரவணைப்பும் வேண்டுமென ஏங்கும் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் உடல் அவஸ்தையும், மன அவஸ்தையும் உறவுகளின் நெரிசலான செயல்களும் சு. வேணுகோபாலின் கதைகளின் மையங்களாகின்றன. அவரின் இப்பார்வை குறித்து ஆராய்கிறது இவ்வாய்வுக் கட்டுரை.
முன்னுரை
தமிழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர் சு. வேணுகோபால். விவசாயியாக, பேராசிரியராக, படைப்பாளியாகப் பன்முகப் பரிமாணங்களில் தன்னை முன்வைத்து வருகிறார். தன் காத்திரமான படைப்புகளால் தமிழ் இலக்கியச் சூழலில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறார். இவரின் கதைகள் நேரடியானவை, விவரணைகள் மூலம் கதைக்களனைச் செறிவுபடுத்துபவை, சாதாரணமானவை. ஆனால், உட்கிடையில் மிக ஆழமானவை. படைப்புகளின் மூலம் மனித மனத்தின் அகத்தில் பொதிந்துள்ள கீழ்மை, மாசு, வக்கிரம், அதிகாரத்தொனி முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்திக்காட்டி, மறுக்க முடியாத கவனத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துவதில் தனித்தன்மை கொண்டவராக விளங்குகிறார் சு. வேணுகோபால். குறிப்பாகக் கொந்தளிப்பான தருணங்களை நித்தம் நித்தம் எதிர்கொண்டு வாழ்வில் வெளிச்சத்திற்கான எந்த வழியும் தெரியாமல் வாழும் விளிம்புநிலை மக்கள் மீது இவருக்குப் பெரும் கரிசனம் இருப்பதாகத் தெரிகிறது.
மையம் x விளிம்பு
படைப்பிலக்கியங்களில் பொது நீரோட்டத்தில் கலவாத, மக்களை அவர்களின் பண்பாட்டுக் கலாச்சார அடையாளங்களைப் பேசமுடியாத நிலை ஒரு காலம் வரை நிலைத்திருந்தது. ஆனால், இந்நிலைப்பாடு மாறிவிட்டச் சூழலில், அறிவுச் செயல்பாட்டில் பின் நவீனத்துவச் சிந்தனை முறைகளால், இது குறித்த அணுகுமுறைகளில் மேலதிக வளர்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டது. அதன் தாக்கம் ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை மையம் x விளிம்பு என்ற எதிர்நிலைப்பாட்டில் நிறுத்தி ஆராயப் புகுந்தது. மையம் என்பது ஆதிக்கம் கொண்ட அதிகாரத்தினையும், பொருளாதார வல்லாண்மையையும் குறித்தது. விளிம்பு என்பது அதற்கு நேரெதிராக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் அடையாளங்களைப் பேசுவதாக முன்வைக்கப்பட்டது. மிகச்சமீப காலம் வரை இலக்கியப் பதிவுகள் பெரும்பாலும் மையங்களாகிய மேலாண் சாதிகள், வர்க்கங்கள் அதிகார அமைப்புகளின் சார்புடைய மக்கள் வாழ்வைத்தான் பதிவு செய்துள்ளன என்றும், விளிம்புநிலை மக்கள் பற்றிய அவர்களின் வாழ்வு / மொழி பற்றிய பதிவுகள் வரலாறுதோறும் தவிர்க்கப்பட்டே வந்துள்ளன என்கிறார் அ. மார்க்ஸ் (தலித் அரசியல், எதிர் வெளியீடு, காவல்நிலையம் சாலை, பொள்ளாச்சி - 642 001).
இந்நிலையில் ஒரு மாற்று ஏற்பாடாகவும், மக்களின் முக்கிய நீரோட்டமாக விளங்கும் விளிம்புநிலை மக்களின் வாழ்வைப் பதிவு செய்யும் நோக்கிலும், விடுதலைக்கான முன்னெடுப்பாகவும் விளிம்புநிலை இலக்கியப் படைப்புகள் உருவாவது காலத்தின் கட்டாயமாக ஆனது என்பதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். இம்முயற்சியில் ராஜ்கௌதமன், பாமா, சிவகாமி, விழி. பா. இதயவேந்தன், இமயம், ஸ்ரீதர கணேசன் போன்றோரது பங்களிப்புகள் முக்கியமானவை. இவ்வரிசையில் தலித் அல்லாதோரின் பங்களிப்புகளும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவையாக உள்ளன. அதிலும் ஒரு நீண்ட வரிசையுண்டு. விளிம்புச் சமூகத்திற்காக, அதன் முன்னேற்றத்திற்காகத் தனக்கென்றொரு தனிப்பாணியில், கூர்மையான சித்தரிப்பில் விளிம்பு மக்களின் கதைசொல்லியாகத் திகழும் சு.வேணுகோபாலின் படைப்புகள் இத்தன்மையில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.
சு. வேணுகோபாலின் சிறுகதைகளைப் பொறுத்தவரை, ஒரே வரியில் ஒரு விமர்சனக்கருத்து சொல்லப்பட வேண்டுமென்றால், ‘மானுடத்தை நேசிக்கும் கதைகள்’ என்று கூறலாம். வேறெதையும் விட உயிர் வேட்கையே அவருக்கு முக்கியமானதாக இருக்கிறது. உறவுகளைப் பேசுவதில் அவரது இலட்சியவாதமும், சமூகத்தைப் பேசுவதில் அவரது மானுடநேசமும் வெளிப்படுகிறது. குறிப்பாக அவர் சிறுகதைகளில் சாதாரணர்களுக்காக அவர்களின் தரப்புக்குரலாக இந்த மானுடநேசம் வெளிப்படுகிறது எனினும் இதனைப் பிரச்சாரமாக, விலகல் தொனியுடன் அவர் முன்வைக்கவில்லை. யதார்த்தப்பாணியில் நேரிடையாகவே முகத்திலறைந்தால் போல் வெளிப்படுத்துகிறார்.
உடல் ஊனமுற்றவர்கள்
வேணுகோபாலின் கதைகளில் யதார்த்தத்தின் இருளை வெளிப்படுத்திக் காட்டும் நிகழ்வுகளேப் பிரதானமாகப்படுகிறது. இதில் உடல் ஊனமுற்றவர்களின் விளிம்புநிலை வாழ்வு ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரு துளி துயரம், நிகரற்ற ஒளி போன்ற கதைகளில் இதற்கான சான்றுகள் உள்ளன.
ஒரு துளி துயரம் கதையில் வரும் விமலா இளமையிலேயே கால் ஊனமானவள். திருமண மேடையில் நிமிர்ந்து நிற்க முயற்சி செய்து தவறி விழுவது, லவக் லவக் என்று குறுகி நிமிர்ந்து நடப்பது என்று சிறுசிறு தகவல்களில் அவள் ஊனத்தின் வலியை வேணுகோபால் அழகாக உணர்த்தி விடுகிறார். அவள் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் புறக்கணிப்பின் அரசியலால் தளும்புகிறது. அப்படித்தான் அவளது மணவாழ்க்கையும் அமைகிறது. இறுதியாக, பலராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவளை ராஜேந்திரன் மணக்கிறான். அவனுடைய இளவயது நண்பனும் பைனான்சியருமான கிருஷ்ணனை, மணநாளின் போது மொய் வசூலிக்கும் பொறுப்பை அளித்து அமர்த்துகிறான் ராஜேந்திரன். ஆனால் முதலிரவு முடிந்து மறுநாள் கிருஷ்ணனிடம் மொய்ப் பணத்தைக் கேட்கும் போது அவன் கடனுக்கும் வட்டிக்கும் கழித்துக் கொண்டு பணத்தைத் திருப்பித் தர மறுத்து விடுகிறான். ஏற்கனவே வெள்ளாமையால் நஷ்டங்களை அனுபவிக்கும் ராஜேந்திரனுக்கு இது பேரிடியாக அமைந்து விடுகிறது. மொய்ப் பணத்தைக் கொண்டு தீர்க்கலாம் என்று இருந்த கடன்களின் அழுத்தமும் தன் நெருங்கிய நண்பன் இழைத்த துரோகமும் வதைக்க ராஜேந்திரன் தற்கொலை செய்து கொள்கிறான். விமலா சில காலத்திற்குப் பின் பைனான்சியர் கிருஷ்ணனுக்குத் திருப்பித் தர வேண்டிய மீதிப் பணத்துடன் அவனைச் சந்திக்கச் செல்கிறாள். ‘செத்துப்போ’ என்றும் எந்தப் பைத்தியமாவது இப்படி செய்யுமா?’ என்று வசைமாரிப் பொழியும் தன் அப்பாவுடன்தான் சென்றாள் விமலா. ‘நீங்க உலகத்தில் அந்த மனுஷன் கிட்டயாவது முழு நம்பிக்கை வைக்கலையேன்று கொண்டு வந்தேன். ஏன் அத கேட்காம எடுத்துக்கிறீங்க... எத்தனை பேருடைய அன்பளிப்பு’ (ஒரு துளி துயரம், ப.27) என்று கிருஷ்ணனிடம் கேட்கிறாள் விமலா. அவளின் இந்தச் செயலுக்கு இன்றைய உலகில் பொருளேதும் இல்லைதான் என்றாலும், முதலிரவில், ‘உண்மையா என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?’ என்று இவள் கேட்க, ‘உன்னை மட்டுமல்ல, உன் குழந்தைக்காலும் பிடிச்சிருக்கு’ என்று சவலையாகத் தொங்கிய பாதத்தில் ராஜேந்திரன் இட்ட ஒற்றை முத்தம். அந்தக் கணம் ஏதோ ஒன்று விமலா மனதில் பிரவாகமாக இறங்கிய ஆபூர்வகணம். அந்தக் கணத்தில் அவளுக்குள் தோன்றிய அன்பின் ஊற்று அவளை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது. அந்த அன்பிற்கு இவள் காட்டும் கைம்மாறு, மனித அற்பத்தனங்களின் சகதியில் ஊனமுற்ற ஒருத்தியின் நம்பிக்கை மலராக மலர்கின்றது. இதைப்போன்று பல விளிம்புநிலைப் பாத்திரங்களை வேணுகோபாலின் கதைகளில் இருந்து சான்று காட்டலாம். இப்பாத்திரங்கள் அடைகின்ற வலியையோ, துயரங்களையோ விளக்கி வாசகர்களின் வெற்று அனுதாபங்களைப் பெறுவதில் வேணுகோபாலுக்கு உடன்பாடு இல்லை. மாறாகப் பாத்திரங்களின் இயல்பான சித்தரிப்பு அழகியலில் வெளிப்படும் மென்மையான உணர்வுகளைத் தருவதில்தான் அவரின் கவனம் குவிவதாகப்படுகிறது.
பெண்கள்
சு. வேணுகோபாலின் சிறுகதைகளில் பெண்கள், பெரிய மனச்சோர்வில் உழல்பவர்களாகவும், பெரிய துயர்களின் நடுவில், கொந்தளிப்பான வாழ்க்கையில் வெளிச்சத்திற்கான எந்த வழியும் இல்லாமல் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களாகவும் வாழும் நிலையினைக் காண முடிகிறது. இவ்வகையில் இவர்களின் வாழ்வு சபிக்கப்பட்ட, விளிம்புநிலை வாழ்வாக உள்ளது. முதல் தொகுப்பான ‘பூமிக்கள் ஓடுகிறது நதி’ முதல் வெண்ணிலை தொகுப்பு வரை இக்கருக்களையே அவர் கதைகளில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் காணமுடிகிறது. அவரின் சிறுகதைகள் பெண்களின் பார்வையில், அவர்களையே மையப்படுத்தி கதை சொல்கிறது.
‘இளவெயிலில் உலகமே ஒரு குழந்தை’ என எண்ண வைக்கும் ‘பேதை’, ஒரு நாய்க்குட்டி, பெண் என்பதாலேயே அதனைத் தெருவில் விடச்சொல்லும் அம்மாவிடம், ‘அம்மா நான் உங்கூடயே இருக்கேம்மா என்னை தொலைச்சிடாதம்மா’ எனக் கெஞ்சும் ‘புற்று’, கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ரணங்களை ஒற்றைச் சிரிப்பைக் கொண்டே மருந்து போட்டுக் கொள்ளும் ‘கிடந்த கோலம்’, அவளின் நடுங்கும் கரங்களை வைத்தே நம் மனசாட்சியை நடுங்க வைக்கும் ‘வெண்ணிலை’ நாள்தோறும் சாலையில் நம்மைக் கடக்கும் கணக்கற்ற பெண்களின் அடியில் உறங்கும் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ என்று ஒவ்வொரு கதையிலும் பெண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சுழலும், சிற்றின்ப உதாசீன, புறக்கணிப்பின் ஊசலாட்டங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறார். சு.வேணுகோபாலின் எல்லா கதைத்தொகுப்புகளிலும் பெண்களுக்கென்று கதைகள் இருக்கின்றன. அதிலும் விளிம்பு நிலையில் வாழும் பெண்களின் கதைகளைக் கூறக் கூற அவருக்குத் தீரவில்லை போலும். வெண்ணிலை கதைத் தொகுப்பில் உள்ள ‘தொப்புள்கொடி’ கதை மனநிலை பிறழ்ந்த ஒரு பெண்ணின் துயர் நிறைந்த வாழ்வு வெகு இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. சு. வேணுகோபாலுக்கு மனநிலை சரியில்லாத பெண்கள் மீது மட்டும் தனிக்கரிசனம் இருப்பதாகத் தோன்றுகிறது. அவரது எல்லாத் தொகுப்புகளிலும் இவர்களைப் பற்றிய கதைகள் இடம்பெறத் தவறுவதில்லை. மனநிலை பிறழ்ந்த ஆண்களை விட பெண்களின் நிலை சமூகத்தில் மிக மோசமாக இருப்பதே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
மனநிலை சரியில்லாத பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி கருவுறச் செய்யும் கீழ்மை மனித சமூகத்தை விலங்கு நிலைக்கு இட்டுச் செல்வது. ஆனால், இங்கு அதுதான் நிகழ்கிறது. தொப்புள் கொடி கதையில் வரும் கார்த்திகா மனநிலை சரியில்லாதவள். ஆனாலும் ஊராருக்கு உதவிகள் செய்து வருபவள். அதற்காக எந்தப் பிரதிபலனும் எதிர்ப் பார்க்காதவள். தட்டில் உணவளித்தாலும் அதனைப் பெறாது கழுநீர் தொட்டியினுள் கைவிட்டு பருக்கைகளை அள்ளித்தின்பவள். அவள் அசந்த நேரம் ஒரு காமவெறி பிடித்த மிருகத்திடம் ஏமாந்து கரு உண்டாகி குழந்தையையும் கடும் போராட்டத்திற்குப் பின் பெற்றெடுத்திருக்கிறாள். ஆனால் குழந்தையைப் பராமரிக்கத் தெரியாமலும், யாரையும் நெருங்க விடாமலும் இறந்த விட்டக் குழந்தையைத் துர்நாற்றம் வீச தூக்கிக்கொண்டு திரிகிறாள். இறுதியில் ஊரார் முன்னிலையில் பெற்றெடுத்த தந்தையாலேயே வலிய பாலிடாய்ன் மருந்து ஊற்றப்பட்டுக் கொல்லப்படுகிறாள். கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும் இவளுக்கு நேர்ந்த துயரின் உச்சம்.
“ ‘அம்மா...’ நுரையை உடைத்துக்கொண்டு குரல் வந்தது. அது நோவா? அழைப்பா? குழந்தைக்கே உரிய பரிபாசையா?” (தொப்புள் கொடி. ப.271) என்று கதையின் இறுதியாக வரும் மனநிலை பிறழ்ந்த கார்த்திகாவின் குரல். கடும் உளச்சோர்வை வரவழைத்து விடுகின்றது. சு. வேணுகோபாலின் கதைகளின் பெண்களின் இருப்பு, இவ்விதமாகச் சொல்லப்படுகிறது. நமது பண்பாட்டுச் சூழலில் அதிகாரங்களைக் கட்டமைக்கும் நிறுவனங்களில் குடும்பமும் ஒன்று. இதன் வழியாகப் பெண்கள் அடையும் துயரையும் வலியையும் சு. வேணுகோபாலின் பல கதைகள் பேசுகின்றன.
விவசாயக் கூலிகள்
சு. வேணுகோபாலின் கதைகளில் விவசாயக் கூலிகள், விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், இதன் காரணமாகவே மனம் பிறழ்ந்தவர்களின் உலகம் விரிவாகவேச் சொல்லப்பட்டிருக்கிறது.
“வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்து கொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம் கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொது அறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் எனப் பல்வேறு தளங்களில் மாறி மாறி இயங்கி வந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன” என்கிறார் எழுத்தாளர் பாவண்ணன் (சுனில் கிருஷ்ணன், (பொ.ஆ.) 2015, சு. வேணுகோபால் சிறப்பிதழ் பதகை, (இணைய இதழ்)). இவர் குறிப்படுகின்ற இவ்விமர்சனம் வேணுகோபாலின் கதைகளை வாசிக்கையில் நிஜமெனப்படுகிறது. விளிம்புநிலை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட விவசாயப் பெருங்குடிகளின் இயல்புகளும், தன்மையும், புறக்கணிக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கையும் அவர் கதைவெளிக்குள் மீண்டும் மீண்டும் துலங்கப்படுகின்றன.
தாய்மை கதையில் வரும் ‘காரை வீட்டுக்காரி’ இதற்குத் தக்க சான்றான பாத்திரமாகும். உழைத்து உழைத்து காரை வீடு கட்டியதோடு நாப்பது அம்பது குழி வைத்து சம்சாரித்தனம் செய்தவள். தான் சம்பாதித்த நிலம் அனைத்தையும், தன் மூன்று ஆண்வாரிசுகளுக்கும் எழுதி கொடுத்தவள். தன் மகள் வயிற்றுப் பேத்தி திருமணத்திற்கு மூன்று பேரும் தலா பத்து பவுன் போடுவது என்று ஒற்றை வாக்கை மட்டும் அதற்கு ஈடாகப் பெற்றவள். ஆனால், வாக்கு காற்றில் பறந்தது. மூன்று மாமன்களும் திருமணத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமல், போடுவதாகக் கூறியிருந்த நகையையும் போடமுடியாது என்று மறுத்துவிடவே, வயதான நிலையில் சண்டையும் போடமுடியாமல் ஓய்ந்து விட்டாள் காரை வீட்டுக்காரி. அன்றாடங்காய்ச்சி நிலைக்கு வந்துவிட்ட அவளின் வாழ்க்கைதான் விவசாயக்கூலிகளின் பொதுவாழ்க்கையைக் காட்டுகிறது. வயதானாலும் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற உந்துதலில் களை பறிக்கச் செல்கிறாள்.
“பயிர்த்தண்டில் கொத்துமுனை படாமல் கிழவி வெட்டினாள். பயிர்க்காலடியில் இருந்த கோரைகளை விரல் நகங்களால் மண் தோயக் கவ்விப் பிடுங்கிவிட்டு மேலேறி வெட்டினாள். ‘யக்கோ... வெரச வெட்டி வா’ என்று ஓங்கிச் சொன்னாள் தோட்டத்துக்காரி தங்கம். நேத்தே சொன்னேன். யக்கா, களை கடுக இருக்கும்னு. வயசாச்சுன்னு வீட்ல இருந்தா தான” (தாய்மை, ப.79) என்ற தோட்டக்காரியின் அதிகாரம் கொண்ட குரல், காரைவீட்டுக்காரிக்கு மனதில் முள்ளாகக் குத்தியது. வேலை செய்ய முடியாத வயசாளி என்ற சொல் அவள் நெஞ்சுக்குள் புகுந்து குடைந்தது. பெரும்பாலான உழைக்கும் சமூகம் எதிர்கொள்ளும் அவமானங்களில் இவ்வார்த்தைப் பிரயோகம் பெரும் வலியைத் தருவது. அதனாலேயே எந்த எல்லைக்கும் சென்றுவிடத் துணிவது. காரைவீட்டுக்காரியும், தன் மகன்களுக்கே தீமை சேர நாட்ராயன் கோயிலுக்குச் சென்று காசுவெட்டிப்போட வைத்து விடுகிறது. வெள்ளாமையைக் கைவிட்டதின் வலியைக் காரைவீட்டுக்காரி அப்போதுதான் உணருகின்றாள்.
இதைப்போலவே விவசாயத்தைக் கைவிட்ட நிறைய பாத்திரங்களை வேணுகோபாலின் கதைகளில் காண முடிகிறது. இந்தியக் கிராமங்களில் விவசாயம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இம்மாற்றத்தைச் சாதாரணமாகக் கதைகளில் பதிவு செய்துள்ளதோடு அதன் காரணங்களையும் அடுக்கி விடுகிறார் சு. வேணுகோபால்.
‘‘நின்று காய்க்கும் தோப்பு இப்போதுதான் பதினைந்து வருடங்கள் முடிந்திருக்கின்றன. நீர்வரத்து மட்டும் நன்றாக இருந்தால் 50, 60 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மரமும் ஊக்கமாகப் பலன் தரும் இரண்டே நாட்களில் அறவை மிஷின் புகுந்து அறுத்தெறிந்து விட்டது” (தாயுமானவள், ப.29). விவசாயம் குறைந்து வருவதற்குப் பல காரணங்கள் இன்று அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால், வேணுகோபால் அதற்கு அதிக அழுத்தம் கதைகளில் தருவதில்லை. அவருடைய மைய நோக்கே சரிந்து வரும் மானுடக்கீழ்மையை முன்வைப்பது மட்டுமே. அதனால் இக்கதாப்பாத்திரங்களைக் கதைவெளிகளில் எங்கும் உலவ விடுகிறார். அத்தகைய ஒரு கதாப்பாத்திரம்தான் உடையாளி. ‘கூருகெட்டவன்’ கதையின் மையமும் உடையாளிதான். அவனுக்கென்று நிர்பந்திக்கப்பட்ட வேலை எதுவுமில்லை. மனைவியின் துணிமணிகளைத் துவைப்பது. கட்டிட வேலை செய்யும் கொத்தனாருக்கு எடுபிடி வேலை செய்வது, பேரல்களில் தண்ணி கொண்டு வருவது என்று எந்த வேலையும் செய்ய நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கை அவனுடையது என்றாலும் ஊருக்கு அவன், ‘வெவஸ்தை கெட்ட உடையாளிதான்’. யாரும் அவனை ஒரு மனிதனாக மதிப்பதில்லை. செய்யும் வேலைக்கேற்ற கூலியும் கொடுப்பதில்லை. எளிதில் ஏமாறும், ஏமாற்றப்படும் ஒரு கோமாளியாகவே ஊரார் அவனை நினைக்கின்றனர். அவனுக்குள் இருக்கும் மனிதாபிமானம், அன்பு, உதவி செய்யும் கருணை மனம் என எதுவும் அவனின் ‘கோமாளி’ பிம்பத்தை மறைத்துவிடவில்லை. ஒரு வகையில் இதுவும் மையம் x விளிம்பு என்ற இரட்டைத் தன்மையில் வருவதுதான். ஒடுக்கப்பட்டோரின் (விளிம்பு) கனவு என்பது ஒருவேளை உணவாகத்தான் இன்றும் இருக்கிறது. உடையாளியும் ஒருவேளை கஞ்சிக்காகத்தான் அத்தனை வேலைகளைச் செய்கிறான். அதனையும் வஞ்சிக்கும் சமூகமே அவன் இருப்பினை விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது. ஒருவகையில் உடையாளியும், நாஞ்சில் நாடனின் எடலாக்குடி ராசாவும் ஒரே வரிசையில் இருப்பவர்கள்தாம். அவர்களுக்கென்று சமூகத்தில் பெரிய எதிர்பார்ப்புகளும் கனவுகளும் இல்லை. ஆனாலும், இருவருமே மானுடத்தை நேசிப்பவர்கள். தமது ஏழ்மையைப் பயன்படுத்தி அதிகாரத்தின் வரம்பிற்குள் தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள்.
அரவாணிகள் (திருநங்கைகள்)
ஒரு மனிதன் சக மனிதனுக்கு இழைக்கப்படும் தீமைகளில் உடல் சார்ந்து அடையாளப்படுத்தப்படும் தீமைகளும் புறக்கணிப்புகளும் பெரும் உளைச்சலுக்கு உட்படுபவை. இதனையே மானுடத்துக்கம் என்பர். உடல் என்ற அமைப்பு உருவாகும்போதே, அதன் கட்டமைப்பிற்குள் அடக்கப்பட்ட துக்கம் இது. மனிதன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் அனைத்து துக்கங்களுக்கும் ஆதாரமாக இது அமைந்து விடுகிறது அல்லது அதன் பிரதிபலிப்புகளில் வெளிப்படுவது இத்துக்கமாகும். இதனை நித்தம் நித்தம் அனுபவிப்பவர்கள் நம்கண் முன்னே உலவிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வித குற்றவுணர்ச்சியும் இன்றி நாமும் இத்துக்கத்தையே அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்கள்தாம் மூன்றாம் பாலினத்தவராக இன்று அடையாளப்படுத்தப்படும் திருநங்ககைகள் ஆவர். ஒரு மனிதனின் அடையாளத்தைச் சந்தேகிக்கும் ஒரு சொல்லானது மீளாத்துயரத்திற்கு இட்டுச்செல்வதாகும். இதனை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு அவ்வலி தரும் அவமானங்களையும் புறக்கணிப்புகளோடு தாங்கி வாழும் வாழ்க்கை அவர்களுக்கு நிர்பந்திக்கப்பட்டிருப்பது வேதனையானது. இவர்களைக் குறித்த படைப்புகள் படைப்பாளிகளால் இடையிடையே முன்வைக்கப்பட்டிருந்தாலும் சு. வேணுகோபாலின் ‘பால்கனிகள்’ என்ற கதை இவ்வரிசையில் குறிப்பிடத்தக்க படைப்பாகும். மதுரை, தேனி, கம்பம் ஆகிய இடங்களில் பரவி வாழும் விவசாயத்தை நம்பி வாழும் ஒரு குடும்பத்தில் நிகழும் கதை.
கதையின் நாயகன் கிட்ணா. வீட்டின் செல்லப்பிள்ளை. அவன் வளர வளர அவன் பால் திரிபு குடும்பத்தால் கண்டிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் தான் ஒரு பெண் என்பதைத் திட்டவட்டமாக உணர்ந்து கொண்டு, ஊரை விட்டே வெளியேறி விடுகிறான் கிட்ணா. இதன் காரணமாக அவன் பாகமான சொத்தையும் இழக்கிறான். நெடுநாள் கழித்து தன் குலதெய்வ வழிபாட்டில் ஒரு பெண்ணாகக் கலந்து கொள்ளும் அவனை ஊராரும் குடும்பமும் இணைந்து அவமானப்படுத்தி அடித்து விரட்டுகின்றனர்.
“போடா அலிப்பயலே என்ற வசவு காதில் விழுந்தும், ‘ஆமாண்டா அது என்ன நொட்ட வரும்போது தெரியலையோ? இன்னொருக்க சொல்லிப்பாரேன் கொட்டையில மிதிக்கிறேன்’ என ஆவேசமாக புடவை வரித்துக் கிளம்பும் போது, “எப்டிக்கா மனுஷனால வெறுக்க முடியுது? வெறுக்கறதுக்கா வாழ முடியுமா?” (பால்கனிகள்) என்ற கேள்வி எழுப்பும் கிட்னாவின் வார்த்தைகளில் அவமதிப்பும், புறக்கணிப்பும், கீழ்மையும் நிறைந்து வெளிப்படுவதைக் காணலாம். விளிம்பு நிலைப் பிரிவினரான அரவாணிகள் உடலால் தனிமைப்படுத்தப்படும், புறக்கணிக்கப்படும் நிலை மானுட மனத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்றாகிறது. நிலவுடமைச் சமுதாயம் மாறி ஜனநாயக அமைப்பிற்குள் நாம் இன்று நுழைந்து விட்டோம். ஆனால், நமது சமூக ஆழ்மனம் இந்த நிலபிரபுத்துவ மனநிலையில் இருந்து முற்றாக வெளிவரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
முடிவுரை
சு. வேணுகோபாலின் சிறுகதைகளில் பெரும்பாலும், விவசாயத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் நிலை அதன் காரணமாக நேரும் உறவுச்சிக்கல்கள், அவமானங்கள், பிளவுபட்ட முரண்பாடு கொண்ட சமூகப் படிநிலை ஆகியவை அதிகாரத்துவம் நிறைந்த வாழ்க்கையைக் கட்டமைக்கும் சூழலைக் காட்சிப்படுத்துகின்றன. மட்டுமின்றி, கதைகள்தோறும் மையம் x விளிம்பு என்ற இரு நிலைப்பாட்டில் வாழும் மனிதர்கள் வந்து வந்து போகின்றனர். இதில், விளிம்புநிலை மனிதர்களின் மீது சு. வேணுகோபாலுக்கு இயல்பாகவேக் கரிசனம் சற்றுக் கூடுதலாக இருப்பதாகப்படுகிறது. செங்கற்சூளையின் வெப்பத்திலும், நெல் அறுப்பின் கடின உழைப்பிலும், தோல் தொழிற்சாலைகளிலும், கூலிகளாக வாழும் மக்களையும், உடலால் ஊனப்பட்டவர்களையும், சமூகத்தால் புறந்தள்ளப்பட்டவர்களையும், மனநிலை பிறழ்ந்தவர்களையும் அவர் அனாசயமாகக் கையாள்கிறார். அவர்களின் நிச்சயமில்லாத வாழ்க்கையும், புறக்கணிப்பின் பல்வேறு வாழ்க்கைச் சூழலையும் அவர் எளிதாகக் கட்டமைத்து விடுகிறார். சமூகம், இவர்கள் மீது பரிவோ, பாசமோ காட்டாமல் அச்சுறுத்தி அவமானப்படுத்தி மகிழ்கிற கொடூரமாக இருப்பதை கதைகள் காட்சிப்படுத்துகின்றன.
கட்டுரைக்கு உதவிய நூல்கள் மற்றும் இதழ்கள்
1. சுனில் கிருஷ்ணன், (பொ.ஆ.), சு. வேணுகோபால் சிறப்பிதழ் பதகை, (இணைய இதழ்), (2015)
2. மகேந்திரன், சி., ஜுன் தாமரை இலக்கிய மாத இதழ், 48, 10வது அவென்யூ, அசோக்பில்லர், சென்னை-83 (2010)
3. மார்க்ஸ், அ., தலித் அரசியல், எதிர் வெளியீடு காவல்நிலையம் சாலை, பொள்ளாச்சி - 642 001. (2009)
4. மார்க்ஸ், அ., விளிம்புநிலை ஆய்வுகளும், தமிழ்க் கதையாடல்களும் இதழ் 2, ப.11.
5. வேணுகோபால், சு., பூமிக்குள் ஓடுகிறது நதி, தமிழினி சேலவாயல், சென்னை- 51. (2000)
6. வேணுகோபால், சு., களவுபோகும் புரவிகள், தமிழினி சேலவாயல், சென்னை- 51. (2001)
7. வேணுகோபால், சு., பால்கனிகள், தமிழினி சேலவாயல், சென்னை - 51. (2012)
8. வேணுகோபால், சு., வெண்ணிலை, தமிழினி சேலவாயல், சென்னை-51. (2017)
9. வேணுகோபால், சு., தாயுமானவள், தமிழினி சேலவாயல், சென்னை- 51. (2020)
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|