ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகளில் சமுதாயம்
பா. அனுசுயா
பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத் துறை,
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி (தன்னாட்சி), மேல்விஷாரம் - 632 509.
முன்னுரை
ஆண்டாள் பிரியதர்ஷினி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை எனப் பல்வேறு தளங்களில் 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுள் ஒருவர். முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். இவரின் நூல்கள் கல்லூரி மற்றும் பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர். மனித சமூகத்தின் பல்வேறு நுட்பமான பகுதிகளைத் தொட்டுக் காட்டித் தன் படைப்புகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயச் சூழலை இக்கட்டுரையில் காண்போம்.
இலக்கியங்களில் சமுதாயம்
பல குடும்பங்கள் இணைந்தது சமூகம். சமூகம் என்ற சொல் சமுதாயம் என்றாகி பிறகு சமுதாயம் என்பது சமூக உறவுகளால் பின்னப்பட்ட வலை என்று கூறப்படுகிறது. குடும்பம் என்ற தளத்திலும் சமூகம் என்ற தளத்திலும் நடைபெறும் பல்வேறுபட்ட பிரச்சனைகளைப் பல கோணங்களில் அணுகி ஆராய்வது இலக்கியங்களின் பணியாகும். இலக்கியங்களின் பொருண்மைகள் பல்வேறுபட்ட சமூகப்பிரச்சனைகளையே குறிப்பிடுகின்றன. சமூகத்தில் ஆங்காங்கே காணப்படும் தீய செயல்களையும், நல்ல செயல்களையும் தன் பாத்திரங்களின் மூலம் எடுத்துக்காட்டி இறுதியில் நல்ல செயல்களே சமூகத்திற்கு ஆரோக்கியமானது என இனம் காட்டுவதாகவே இலக்கியங்கள் அமைகின்றன.
கதை ஆசிரியரின் சமுதாயப் பார்வை
பல்லாண்டு காலமாக சமூகத்தில் நடைபெறும் கேடுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும் வேலையை இலக்கியவாதிகள் செய்து வருகின்றனர். எழுத்துக்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தும் எழுத்தாளர்கள் பெருகிவிட்டனர். அந்த வகையில் சமூகப் பிரச்சனைகளைப் புதிய நோக்கில் அணுகியுள்ள ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறு கதைகள் குறிப்பிடத்தக்கதாகின்றது. ஆண்டாள் பிரியதர்ஷினி கதைகள் பெரும்பாலும் பெண்களின் நிலை குறித்துப் பேசுவனவாகவும் சிறுபான்மை சமூகக் கொடுமைகளும் வன்முறைகளும் கூறுவனவாக படைக்கப்பட்டுள்ளன. குடும்பச் சிக்கல், பெண் விடுதலை, மூடநம்பிக்கை வறுமை ஒழிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சமுதாய மேம்பாடு, கல்வி மேம்பாடு, சாதிய ஒழிப்பு ஆகியவற்றை கதைக் கருவாக்கி அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் கூறியுள்ளன. ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறுகதைகளில் காணப்படும் குடும்ப அமைப்புகள் அனைத்தும் ஆண் தலைமைக் குடும்பங்களாகக் காணப்படுகின்றன. திருமணங்கள்
பெரும்பான்மை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டும் சிறுபான்மை காதல் திருமணமாகவும் அமைந்துள்ளன. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்துவதும் காட்டப்பட்டுள்ளது.
பெண்ணியப் பார்வை
ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறுகதைகள், குழந்தை இல்லை என்பதற்காக கணவன் வேறொரு திருமணம் செய்து கொள்வதும், கணவனையும் சோதிக்க வேண்டும் என்று கூறியமைக்காக மனைவியைத் தள்ளிவைப்பதும், மனைவியைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும் தான் கட்டியவளைப் பணத்திற்காக மற்றொருவனுக்குத் தாரை வார்ப்பதும் குடும்பத்திலும், வேலை தளத்திலும், ஓய்வின்றித் தவிக்கும் பெண் மனதை ஆறுதல்படுத்த ஆளில்லாமல் தடுமாறுவதும், குடிகாரக் கணவனிடம் அகப்பட்டுத் தத்தளிப்பதுமாகிய பல குடும்பம் சார்ந்த பெண்ணியப் பிரச்சனைகளை இனம் காட்டி அவற்றிற்கு ஆக்கப்பூர்வமான தீர்வைக் கூறுகிறது.
சமுதாயத்தில் வறுமை நிலை
சமூகத்தில் தொடர்ந்து வரக்கூடிய பிரச்சனையாக வறுமைநிலை இருப்பதோடு அந்நிலையானது குடும்பத்தில் பிரச்சனை வருவதற்குக் காரணமாகின்றது. சமுதாயத்தில் மேலோங்கி இருக்கும் வறுமை நிலையைக் கண்டு யார் இரக்கப்படுகிறார்களோ இல்லையோ ஆனால் எழுத்தாளர்கள் மனதில் இரக்கம் மட்டுமின்றி மிகுந்த வருத்தமும் கொள்கிறார்கள். அதன் விளைவு படைப்புகளாக வெளிவரும். இதனை ஆண்டாள் பிரியதர்ஷினி தம் சிறுகதைகளில் புதிய நோக்கில் அணுகியுள்ளார். இவரது “மழைநாளில் சில மனிதர்கள்” என்னும் சிறுகதை வீடு இல்லாமல் நடைமேடையில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கை நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
“கல்லூரி ஹாஸ்டல் சுற்றுச்சுவர் ஒரு பக்கச்சுவராய்க் கிடைத்ததால் பாலிதீன் கீத்தினால் கூரை வேய்ந்திருக்கிறது. இல்லையென்றால் அஞ்சுக்கு அஞ்சு பிளாட்பாரத் தளம் மட்டும்தான்
வீடென்று பேராகியிருக்கும். கூரையும் இல்லாத சுவரும் ஜன்னலும் மறைப்பும் இல்லாத வெட்டவெளி தாம்பத்யம் இந்தக் கூரையால் லேசுபாசாய் மறைந்திருக்கிறது. கோணியும் பழந்துணியும் போட்டு சின்னியைப் பொதிந்து வைத்தாலும் குழந்தையை மழை நனைத்துப் பார்த்ததில் ஜிரத்தில் உச்சம் எகிறியிருக்கிறது இப்போது” (1) என்று நடைமேடைகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறார்.
“ரெண்டு கொடம் மழைத் தண்ணி புடிச்சேன். லாரித்தண்ணி காசு மிச்சம் ஊருக்கே கொட்டித் தீர்த்த மழையில் உள்ளங்கை அளவு பிடித்துக்கொண்ட திருப்தி தனத்துக்கு” (2) என குழந்தை ஜுரத்தில் தவித்தபோதும் கூட இரண்டு குடம் மழைத்தண்ணீர் பிடித்ததற்காக மகிழும் தாயின் நிலையைச் சுட்டுகிறார்.
“போன வாரக் கூலி வாங்கி வந்தபோது இட்லிக்கார ஆயாவிடம் நந்நாங்கு இட்லி சுடச்சுட சட்னியும் சாம்பாரும் விரவித் தின்றதோடு சரி இந்த நிமிஷம் வரை தண்ணீர்தான் வயிற்றை நிரப்புகிறது” (3) என்ற வரிகளில் உணவில்லாமல் கைக்குழந்தைக்குப் பாலூட்டும் தாய் வருந்தும் நிலையைச் சுட்டுகிறது. இதன் காரணமாக, கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனை எழுகிறது. குழந்தை தாயின் மார்பில் பாலில்லாமல் பசியாலும் ஜீரத்தாலும் அனத்துகிறது. சப்பிக் குடிக்க நினைத்தாலும் தாயின் மார்பில் பாலில்லாத காரணத்தால் அதன் பசி தீர்க்கப்படவில்லை. “வெலவெலவென்று காற்றுப் போன பலூனாய் ஊசலாடியது மார்பு பசித்த வயிற்றுக்குச் சோறு என்று ஏதாவது தின்ன நேர்ந்தால் கொஞ்சமாவது தனத்துக்குப் பால் சுரக்கும். ஒன்றுமேயில்லாமல் வாயில் வைத்தவுடன் பால் சுரந்துவிட அவளின் முலைகள் காமதேனுவா என்ன?” (4) என்று வருந்தும் ஆசிரியர் தினக்கூலி கிடைக்கும் போது மட்டும் நெத்திலியும் அரிசிச்சோறும் காரக்குழம்பும் செய்து சாப்பிடுவர்.
இவர்களின் வறுமையும் தொழில் இல்லாமல் துன்புறும் நிலையும் அரசாங்கத்திற்கு தெரிவதுமில்லை. இவர்கள் அதனை அரசுக்கு உணர்த்த முயல்வதுமில்லை என்பது ஆசிரியரின் ஆதங்கம். உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இருப்பிடமும் இல்லாத இவர்களிடம் ஓட்டுக்கேட்டு வரும் அரசியல்வாதியைப் பார்த்து மயங்குகின்றனர். அவர்களைக் கைகூப்பி வணங்குகின்றனர். சென்ற முறை தங்களிடம் கைகூப்பி ஓட்டுக்கேட்டுச் சென்ற அவர் தங்களைப் பற்றி எந்த அக்கறையும் எடுக்கவில்லை என்று தெரிந்த பிறகும், இந்த முறையும் அவருக்கே வாக்களிக்க முடிவு செய்கின்றனர் என்ற அவலத்தைத் தனது கதையில் பதிவு செய்துள்ளார். கல்வி கற்ற பெண்களின் வறுமை நிலையைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகையில், “கவிதையைத் தின்று பசியாறு” என்னும் சிறுகதையில் கவிதை எழுதுபவனை நேசித்து வந்த காரணத்தால் வறுமையை அனுபவிக்கும் பெணணை அடையாளப்படுத்தியுள்ளார். தாய்மைக்காக ஏங்கும் பெண்கள் தம் வாழ்வில் கிடைக்கும் முதல் குழந்தையைப் போற்றி வளர்க்கும் நிலையில் வறுமை காரணமாகக் கருவைக் கலைக்க நினைக்கும் பெண்ணின் மனவேதனையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். தான் முன்னேறிய பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில், “ஒருவேளை சோத்துக்கே காசில்லாமல் பரிதவிக்கிறோம். இப்பவே இது வேணுமா ஜீவா? நமக்கு வயசு இருக்கு. கால் ஊனி நின்னப்புறம் பார்த்துக்கலாமா? டாக்டர் கிட்ட சொல்லிடவா?” (5) என்று வறுமை காரணமாகத் தாய்மையை இழக்க நினைக்கும் பெண்ணின் மனநிலையைச் சுட்டுகிறது இப்பதிவு.
இவரது “முதுகு” என்னும் சிறுகதையில் சரஸ்வதி எழுதிய கதைக்கு உரிய ஊதியம் கிடைக்காததால் வருந்துகிறாள். தான் எழுதிய கதையை பதிப்பகத்தில் கொடுத்து விட்டு பணம் பெறுவதற்காக தினந்தோறும் அலைகிறாள். அந்த நேரத்தில் வண்டி விபத்துக்குள்ளாக, கணவனின் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. அவனது முதுகைச் சரிசெய்ய போதிய பணமும் அவளிடம் இல்லை. அதனால் புத்தக பதிப்பாளரைச் சந்தித்து பண உதவி கேட்கின்றாள். ஆனால், அவரோ கடுமையான வார்த்தைகளை வீசினார். தினமும் அவரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம், முதலாளியின் உதவியாளரே வந்து, “இன்று பார்க்க முடியாது. முக்கிய வேலையில் இருக்கின்றார். கிளம்புங்கள்” என்று கூறிவிடுவார்.
தன் கணவனின் மருத்துவச் செலவிற்காக இன்று பதிப்பாளரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று காத்திருந்தாள். அப்போது அறைக்கு உள்ளிருந்து பதிப்பாளர், “சும்மா சொல்லக்கூடாது, இந்த அம்மாவின் புத்தகம் நன்றாகவே விற்பனை ஆகிறது. லைப்ரரியிலும் கேட்டிருக்கிறார்கள். பிப்ரவரி, ஜீன் என்று செகண்ட் எடிசன் போட்டு அடிச்சிடு. அறுநூறு புக்கு கோயம்புத்தூர்ல கேட்டாங்க அனுப்பிடு. அந்தம்மாட்டே எதுவும் சொல்லாத” (6) என்று கூறுகின்றார். அறையில் இருந்து வெளியே வந்த பதிப்பாளர் உதவியாளரை நோக்கி, புஸ்தவதத்துக்கு முதுகு நல்லா இருக்கணும் என்று கூறினார். சரஸ்வதிக்குத் தெரிந்தது எல்லாம் குமாருடைய முதுகு மட்டும்தான். வெளியே வந்த பதிப்பாளர் தனது காரில் ஏறியவுடன் கார் விரைந்தது. காரின் சக்கரத்தில் தனது கவிதை நசுங்கியதாகவும் காரின் நான்கு சக்கரமாக எழுத்தாளர்கள் சுழன்று சுற்றுவதாகவும் உணர்ந்தார் என்று கதை முடிவடைகிறது. கலைஞர்கள் தமது படைப்புக்குக் கிடைக்கும் பாராட்டை விட பசியாறுவதையே முதன்மையாகக் கருதுகின்றனர் என்பதை “கவிதையைத் தின்று பசியாறு” என்ற கதையில் பதிவு செய்து எழுத்தாளர்களின் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். கவிஞர்களின் திறமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
“தகனம்” என்ற கதையில் தாழ்ந்த குடியில் பிறந்து பிணம் எரிக்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்களின் வறுமை நிலையைச் சுட்டியுள்ளார்.
பெண்களின் நிலை
பணியிடச் சூழலில் மட்டுமின்றி, பொதுவாகவே பெண்களுக்கு இன்றைய சமுதாயத்தில் போதிய பாதுகாப்பில்லை. தனிமையில் செல்லும்போது சீட்கை ஒலி எழுப்புவதும் தவறான முறையில் பார்ப்பதும் தனிமையில் இருக்கும் பெண்ணைக் காம இச்சையுடன் நெருங்குவதும் போன்ற பல பாதுகாப்பற்ற சூழலை இன்றைய சமூகச்சூழலில் பெரும்பான்மையான பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாலைப்பொழுது வருவதற்கு முன்னேயே வீட்டிற்குள் வந்துவிட வேண்டும். இல்லையேல் அவர்களுக்குப் பாதுகாப்பு சிறிதும் இல்லை.
சிறுமிகள் கூட சுதந்திரமாக வாழமுடியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலையை ‘வலி ‘ என்னும் சிறுகதை விளக்குகிறது. சிறுமி நிலாவை சிறுவயது முதலே பள்ளிக்கு அழைத்துச் செல்லும் டிரைவர். அவள் புஷ்பவதியானதும் அவளது பிறந்த நாளன்று அவளை அந்தப் புங்குருத்தை குரூரமான முறையில் சீரழிக்கின்றான். இதைப் பல குடும்பங்கள் மறைக்கின்றன. அதைப்போலவே, நிலாவின் குடும்பமும் மறைக்க நினைக்கிறது. ஆனால் நீதிபதியான நிலாவின் தாத்தாவால் அதனை மறைக்கவும் மறக்கவும் இயலவில்லை. குடும்பத்தின் கட்டுக்கோப்பினைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வின் மேலோங்களால் தவறுகளை வெளிக்கொணரவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் பெண்கள் தயங்குகின்றனர்.
“குடும்பம் என்னும் அமைப்பு சிதையுமாயின் பெண்களுக்கு வாழ்வில்லை” (7) எனும் உண்மை நிலையால் குடும்பச் சிதைவிற்குக் காரணமான செயல்களைப் பெண்கள் செய்வதில்லை என்பதை சிறுமியின் தாய்வழி ஆசிரியர் விளக்கியுள்ளார்.
‘பரிகாரம் ‘என்ற சிறுகதையில், சிறுபெண்ணை மணம் முடிக்கத் துடிக்கும் அரசியல்வாதி கணவன் ஒரு புறம் எம் மகளை காப்பாத்துங்கம்மா ஒண்ணுந் தெரியாத கொழந்தை அது என்று கதறும் தாய் மறுபுறம். தவறுக்கும் மகாபாவத்துக்கும் அடிபணிவதும் கேள்வி கேட்காமல் மௌனியாவதும்தான் தனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதா.? என்று அவள் மனதுக்குள் எழும் கேள்வி இன்னொரு புறம். இத்தனைக் குழப்பத்திற்கு இடையிலும் அவள் மனசு சிறுமியை நினைத்துக் கதறியது. சின்னப்பூவைப் பூதாகரமான இரும்புக்கரம் கசக்கி முகர்ந்து இச்சிப்பதாய் அவள் மனது பதறியது. அதற்குப் பரிகாரம் தேடுகிறாள். சிறுமியின் தாயிடமிருந்து எலி மருந்தை பிடுங்கி தன் கணவனுக்குப் பாலில் ஊற்றித் தருகிறாள். மனிதாபிமானம் ஜீவிக்க கொலையும் கூடப் பரிகாரம்தான் என்று கதாசிரியர் கதையை முடிக்கிறார்.
‘அடையாளம்’ என்ற சிறுகதையில் உடல் நிலை நன்முறையில் இருந்த நிலையில், கணவன் அன்பாக இருக்கிறான். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று அறிந்தவுடன் அவளை மணமுறிவு செய்ய முனைகிறான். அவளை அடையாளம் தொலைத்த அலி என்று வார்த்தைகளால் மனம் நோகச் செய்கிறான். கணவன் மனமுறிவு என்றவுடன் அதற்கான காரணத்தைக் கேட்டு அறிந்துகொண்ட சரஸ்வதி “இதுவா? இது மட்டுமா என் அடையாளம்? வேறெதுவுமே நான் இல்லையா? இத்தனை வருஷத் தாம்பத்யமும் இதில்தான் ஊசலாடியதா? வெற்றுச் சதைதான் பந்தத்தின் பரிபாஷையா? நான் என் அன்பு என் பிரேமை என் கரிசனம் என் அக்கறை எதுவுமே நான் இல்லையா? இதுதான் என் ஸ்தூல அடையாளமா? கடவுளே கடவுளே” (8) என்று சரஸ்வதி தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறாள். ராகவனின் அடையாளம் துண்டாகித் தூர விழஅவரின் தீனக் கதறல் சுகமாய் காதில் ஒலித்தது. கதைத் தலைவி எந்தவித் தயக்கமுமின்றி முடிவெடுக்கிறாள். இக்கதையில் தனக்குக் கொடுமை செய்த கணவனுக்கு அவள் வழங்கும் தண்டனை புதுமையாக அமைகிறது.
மேலும் பெண்கள் பற்றி பேசும் ஆசிரியர் தீ, தகனம ஆகிய சிறுகதைகளில் குடும்பத்தில் பெண்குழந்தை வெறுக்கப்படும் நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார். பெண் குழந்தை பிறப்பை தாயே வெறுப்பதாகவும் கதை சுட்டுகிறது. தீ என்னும் சிறுகதை ஆணாதிக்க அச்சுறுத்தல்களின் காரணமாகப் பெண் குழந்தையைக் கொல்லும் அளவிற்குத் தாய்மார்கள் செல்வதைச் சுட்டுகிறது. ‘வெளி‘ என்ற சிறுகதையில் சரஸ்வதி என்ற பெண் கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறான். வீட்டில் கணவனின் எதிர்ப்பு எழுகிறது எதிர்ப்பையும் மீறி அறை ஒன்றை வாடகைகு எடுத்து எழுதத் தொடங்குகிறாள்.
கணவன் இறந்தால் பெண்கள் எந்த சுகங்களையும் அனுபவிக்கக் கூடாது என்ற கீழ்த்தரமான நிலையை சித்தரிக்கும் வண்ணமாக ‘நதியைக் கைது பண்ண‘ என்ற சிறுகதை சித்தரிக்கிறது. கணவன் இறந்ததும் அவளது குழந்தைகள் தீபாவளி கொண்டாட ஆசைப்படுகிறார்கள். சோகத்தின் சாயலே தெரியாத நிலையில் இருந்த குழந்தைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொண்டு தெருவில் நடந்த போது, “பர்சேஸ் பலமாயிருக்கு? தூக்க முடியாம தூக்கிட்டு வர்றே? ஒத்த ஆளுக்கான செலவு நின்னு போச்சே. ஆதான் கைக்காசை வாரி விடறா புருஷன் இல்லாதது கூட வசதிதான். எல்லாம் இவ இஷ்டம்தானே?” (9) என்று விஷ வார்த்தைகளை வீசுகின்றனர். குழந்தைகள் ஆசையை நிறைவு செய்ய மைசூர்பாகு செய்தாள். அதற்கு அக்கம்பக்கத்தாரெல்லாம் “பொம்பளையாடி இவ? விவஸ்தை கெட்டவ புருஷன் செத்தத ஸ்வீட்டோட கொண்டாடறா ஒரே மாசத்துல பண்டிகை கேக்குதாக்கும்? அப்படி அலையணுமா. ஸ்வீட்டிற்கும் புதுப்புடவைக்கும்? செத்தது சொந்தப் புருஷனா? வச்சுக்கிட்டவனா? துக்கம் அனுஷ்டிக்காம துடைச்சுப் போட்டுட்டாளே ஒரு வருஷம் கூடவா காத்திருக்க முடியாது?” (10) என்ற அக்கினி வார்த்தைகளுக்கிடையிலும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் தன் குழந்தைகளின் நலனை விரும்பியவளானாள்.
‘சமம்‘ என்ற சிறகதையில் மூன்று மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் நடுநிசியில் எழுந்து சமையல் செய்கிறாள். அப்பொழுது பிறருக்கு தொந்தரவு நிகழாவண்ணம் பயந்து பயந்து வேலைகளைச் செய்கிறாள். கணவனின் கண்டுகொள்ளாத தன்மையையும் இக்கதையில் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். ‘தாய்மை என்பது‘ என்னும் சிறுகதையில் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியலேன்னு கைவிடப்பட்ட பாக்கியலஷ்மியின் கணவன் தன்னை உதாசீனப்படுத்திவிட்டு மறுமணம் செய்து கொண்டதை எண்ணி வருந்துகிறாள். பெண்ணுக்கு ஆண் பிரச்சனைகளை உருவாக்கும் களமாகவே அமைகிறான் என்பதை ஆண்டாள் பிரியதர்ஷினி கதைகள் விளக்குகின்றன.
இன்றைய சூழலில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளிடம் கூட அதிகக் கவனம் செலுத்த முடியாத நிலையை ‘வணக்கம் நேயர்களே‘ சிறுகதை விளக்குகிறது.
ஒளிப்பதிவு அலுவலகத்தில் குறித்த நேரத்தில் வேலை முடியாமல் பசியும் பதட்டமுமாக இருக்கும் புரணியைப் போன்று இன்றையச் சமூகத்தில் பல பெண்கள் அவதிப்படும் நிலையை ஆசிரியர் சுட்டியுள்ளார். வேலைத் தளங்களில் பிறபெண்களைத் தங்கள் விருப்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆண்கள் தங்கள் மனைவியர் தொழில் நிமித்தமாக பிற ஆண்களிடம் பேசுவதை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை எரிக்க முடியாத அக்னிகள் என்னும் சிறுகதை விளக்குகிறது. இந்தக் கதையின் நாயகன் குமார் தன்னுடன் நடிக்கும் நடிகை ஷாலினியிடம் அத்துமீறி நடந்துகொள்கிறான். வீட்டில் தன் மனைவியிடம் அவளது நண்பர் அசோக் வேலை விஷயமாகப் பேசிக்கொண்டிருந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் அசோக்கை வெளியில் தள்ளி கதவைச் சாத்தியவன் தன் மனைவி அகல்யாவை நோக்கி, “ஏண்டிபுருஷன் வெளில போயிருக்கப்போ வர்ற ஆம்பிளையோட கூத்தடிக்கிறது தான் நீ படிச்சபடிப்பா நம்ம பெட்ரூமிலே அவனுக்கு என்ன வேலை?” (11) என்று அவளது தலைமுடியைப் பிடித்து உலுக்குகிறான்.
“அய்யோ…..அவர் என்னோட நல்ல பிரெண்டுங்க காலேஜ்லே இலக்கிய மன்ற செக்ரட்டரியாய் இருந்தார் கதை கவிதை எழுதறதிலே ரொம்ப ஆர்வம் நம் கல்யாணத்துக்குக் கூட கவிதை வாசிச்சுத் தந்தாரே ரொம்ப ஏழை நீங்க ஏதாவது உதவி பண்ணினால் நல்லாயிருக்கும்” (12) என்றவளிடம்“ப்ரெண்டுன்னா பெட் ரூமுக்குள்ளே நுழையணுமா தடியன்?” (13) என்று அவளை பலவாறாகப் பேசுகிறான். அவளது நட்பை உதாசீனப்படுத்தும் அவன் தான் மட்டும் இன்னொரு பெண்ணுடன் அதுவும் தன் மனைவியின் தோழியுடன் விருந்து உண்ணச் செல்கிறான். அதனால் தனக்காகக் காத்திருக்காமல் அவளை உணவு உண்ணுமாறு கட்டளையிடுகிறான். மனசுக்குள் பூத்துக் கிளம்பிய அக்னிப் பிரவாகத்தைக் கண்ணீரால் மெல்ல அணைத்து சரியெனத் தலையாட்டினாள் அகல்யா. ஆண் நட்பும் பெண் நட்பும் சமமாக போற்றப்படுவதில்லை. திருமணத்திற்குப் பிறகு பெண் நட்பு சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படுகிறது என்பதை ஆசிரியர் சுட்டியுள்ளார்.
கடை நிலை ஊழியர்களின் நிலை
தகனம் என்ற சிறுகதை மயானத்தில் பிணங்களை எரிப்பதைப் பணியாகக் கொண்டு பசிக்கு இரை தேடும் அவல வாழ்க்கை வாழ்கின்ற மக்களைப் பற்றியது. “எனக்கு வார வத்துல….மசானத்துச் சிதை நெருப்புல போயி சோறு பொங்கிரலாமான்னு வருது மாரிஅரை வவுத்துக் கஞ்சிக்கு இந்தப்பாடு. பொட்டைப் பொறப்பு. நாய விட சீரழிப்பாயிருச்சு” (14) என்று மயானத் தொழில் செய்பவர்கள் வறுமையால் வாடும் நிலையை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
‘கழிவு‘ என்ற சிறுகதையில் கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறார். கழிவு அள்ளுபவனுக்குள்ளே அவன்பட்ட கஷ்டங்கள் தவித்த தவிப்புகள் உடம்பிலும் மனதிலும் புரையோடிப் போன நாத்த செல்கள். மனிதத்தைப் புரியவைக்கும் புனிதமான கதைப்படைப்பு பொழுதுபோக்கிற்காக இலக்கியம் படைக்காமல் சமூக அக்கறையோடு இலக்கியம் படைக்கும் ஆணடாள் பிரியதர்ஷினியின் சமூக நோக்கை இக்கதை சுட்டுகின்றது.
பெண் கல்வி
‘ஆங்கோர் ஏழைக்கு‘ என்னும் சிறுகதையில் சரஸ்வதியின் சின்னம்மா (அப்பாவின் இரண்டாம் மனைவி) அவருக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறாள். புத்திசுவாதீனமில்லாத ஒருவனுக்கு டீச்சருக்குப் படிக்க ஆசைப்படும் சரஸ்வதியை மணம் முடிக்க முயல்கின்றனர். சரஸ்வதியின் சித்தி அவள் வாழ்க்கையை அவள்தான் முடிவு பண்ண வேண்டும் என்கிறார். சரசு டீச்சரிடம் விண்ணப்பத்தை வாங்கிவரக்கூறினாள். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து போட்டாள். படிப்பதற்குச் சீட்டு கிடைத்தது.
சரசு தனது சின்னம்மாவிடம் மாப்பிள்ளைக்கு மோதிரம் வாங்க டவுனுக்கு போய் வருகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு காவல்துறை சென்றாள். அங்கு ஒரு போலீஸ்காரர் உதவியுடன் திருமணத்தை நிறுத்த போலீஸ்காரருடன் நம்பிக்கையோடு சென்றாள். ஒரு பெண்ணின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றால் பொதுப்பணியில் உள்ளவர்கள் அதனை தடுத்து அப்பெண்ணிற்கு கல்வி பெற உதவ வேண்டும் என்ற ஆசிரியரின் மனக்கருத்து இங்கு வெளிப்படுகிறது.
‘சரஸ்வதியின் ஏடு தொலைந்து போனது‘ என்ற சிறுகதையில் பள்ளிப் படிப்பிற்காகத் தொலைதூரம் நடந்து செல்லும்போது வெள்ள நீரில் தவறி விழுந்த சரஸ்வதி ஏடு தொலைந்துபோனது. தொலைந்தது அவளது ஏடு மட்டுமல் பள்ளி வாழ்க்கையும் என்கிறார்.
குடும்பம் சமூகம் இரண்டிலுமே பெண் கல்வி இன்றளவும் போராட்டங்களையே சந்தித்து வருகிறது என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
மூடநம்பிக்கைக்குத் தீர்வு
பெண்கள் தங்கள் கணவன் இறந்த உடன் பூ, பொட்டை இழக்கின்றனர். சமூகத்தில் அவர்கள் எவ்வளவு உயர்நிலையில் இருந்தாலும் குறைந்தே மதிக்கப்படுகிறார்கள். அதனை ‘பூஜை‘ என்ற சிறுகதையில் ஆசிரியர், மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக எழுதியுள்ளார். சுமங்கலி பூஜையில் கலந்து கொள்வதற்காகப் பூரணி கோயிலுக்கு வருகிறாள். அவளின் வருகையால் குத்துவிளக்கு, சாமந்திப்பூ, கர்ப்பகிரக அம்மன், தூண்கள், மாடங்கள் என அனைத்து அஃறிணைகளும் மகிழ்ந்தன. அவை அவளின் வருகையை வரவேற்றன” என்று எழுதுகிறார்.
முடிவுரை
ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறுகதைகளில் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், பெண்ளின் அடிமை நிலை, வறுமை போன்றவைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பெண்களுக்காகவே படைப்புகளை உருவாக்கும் விதமாக பெண்களின் துயர நிலையானது எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் சமூகத்தில் சூழ்ந்துள்ள வறுமை நிலையை விளக்கியுள்ளார். கடைநிலை ஊழியர்களின் பணியின் தன்மையையும் அவர்கள் வறுமையால் வாடும் சூழலையும் எடுத்துக்காட்டியதோடு தனது சமூக அக்கறையைப் பதிவு செய்துள்ளார்.
அடிக்குறிப்புகள்
1. ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் ப.88
2. மேலது ப 88
3. மேலது ப 88
4. மேலது ப 89
5. மேலது ப 258
6. மேலது ப.173
7. ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் முன்னுரை .9
8. ஆண்டாள் பிரியதர்ஷினி நதியைக் கைது பண்ண ப.149
9. ஆண்டாள் பிரியதர்ஷினி நதியைக் கைது பண்ண ப.131
10. மேலது ப.132
11. ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் ப 409
12. மேலது ப 409
13. மேலது ப 409
14. ஆண்டாள் பிரியதர்ஷினி. தகனம் ப.889
துணை நூற் பட்டியல்
1. ஆண்டாள் பிரியதர்ஷினி, வானவில் வாழ்க்கை, கங்கை புத்தகநிலையம், சென்னை – 17. இரண்டாம் பதிப்பு, ஜீன் 2007.
2. ஆண்டாள் பிரியதர்ஷினி, ரிஷியும் மனுஷியும், கங்கை புத்தகநிலையம், சென்னை – 17. இரண்டாம் பதிப்பு, ஜீன் 2007.
3. ஆண்டாள் பிரியதர்ஷினி, தோஷம், ராகவேந்திரா வெளியீடு, சென்னை – 40. முதற் பதிப்பு, 2001.
4. ஆண்டாள் பிரியதர்ஷினி, தலைமுறை தாகம், திருவரசு புத்தக நிலையம், சென்னை – 17. முதற் பதிப்பு, நவம்பர் 2004.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.