இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கோபல்ல கிராமத்தில் கி.ரா.வின் மொழிநடை

முனைவர் மு. சங்கர்

உதவிப்பேராசிரியர், தமிழியல் துறை,
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.


முன்னுரை

மொழி என்பது ஒருவரது எண்ணங்களை மற்றவர்களுக்குக் கூறும் ஒலிச்சங்கேதமாகும். இம்மொழியே விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்துகின்றது. மனித நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஆணிவேராகத் திகழும் மொழியைச் சரிவரக் கையாளும் படைப்பாளரே இலக்கிய உலகில் வெற்றி பெறுகின்றார். இவ்வெற்றி அவரது மொழிநடையைப் பொறுத்து அமைகின்றது. இம்மொழிநடை படைப்பாளருக்குப் படைப்பாளர் வேறுபடும். இவ்வேறுபாடு படைப்பாளரின் வாழ்வியலைப் பொருத்தும், அவர் பார்க்கின்ற அக, புறக் காரணிகளைப் பொருத்தும், அவரது அனுபவத்தைப் பொருத்தும் அமைகின்றது. அந்த வகையில் கி.ரா.வின் மொழிநடை தனிச்சிறப்புடையது. அதை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

கி. ராஜநாராயணன் பற்றிய அறிமுகம்

கரிசல் இலக்கியத்தின் தந்தையென அழைக்கப்படும் இவர் கோவில்பட்டிக்கு அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் 16.09.1923 இல் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம் - லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயா் ஸ்ரீ கிருஷ்ண ராஜநாராயண பெருமாள் ராமானுஜம் ஆகும். இவா் எட்டாம் வகுப்போடு தமது படிப்பை நிறுத்துக் கொண்டாலும், வாசிப்பை மட்டும் நிறுத்தவே இல்லை. கரிசல் வட்டாரத்தைச் சேர்ந்தவா் என்பதால் கரிசல் மக்களின் வாழ்வியலை எழுதத் தலைப்பட்டார். இவர் தமது தந்தையிடம் கேட்ட பல கதைகளை அதற்கு உரமாக எடுத்துக் கொண்டார். கரிசல் மக்களின் பேச்சு வழக்குகளையும் பழமொழிகளையும் மிக இலாவகமாகத் தமது படைப்பில் பயன்படுத்தியுள்ளார். இவரது முதல் கதை, 1958 இல் சரசுவதி இதழில் வெளியானது. சிறந்த கதைசொல்லியான இவருக்குக் கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருது 1991 இல் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இலக்கியச் சாதனை விருது, தமிழக அரசின் விருது, இலக்கியச் சிந்தனை விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகளுள் கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கா், கிடை, பிஞ்சுகள் ஆகிய புதினங்களும் கன்னிமை, மின்னல், கோமதி, கதவு, வேட்டி, மாயமான் உள்ளிட்ட சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, அழிந்து போன நந்தவனங்கள், கரிசல்காட்டுக் கடுதாசி, மாமலை ஜீவா, புதுமைப்பித்தன் முதலிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம், கரிசல் வட்டார வழக்கு அகராதி ஆகிய இரண்டும் இவரது பெயரைப் பறைசாற்றுபவை.


மொழிநடை

தனியொரு படைப்பாளரின் மொழிநடையை அறிந்து கொள்ள, அவர் பயன்படுத்தும் சொற்களும் உத்திகளும் பயன்படுகின்றன. இவையே அவரது ஆளுமையையும் தனித்திறனையும் வெளிக்கொணர்வதாக அமையும். லாங்மென் அகராதி மொழிநடையை இரண்டாகப் பிரித்து விளக்கம் தருகின்றது. அவை: “ஒன்று மொழியை விளக்கிக் கூறும் திறன் (a manner of expression in language); மற்றொன்று உரையாடும்போது மேற்கொள்ளும் நடைத்திறன் (a manner or tone assumed in conversation)” (1) என்பன. டேவிட் லாட்ஜ் என்னும் மேனாட்டறிஞர், “நடையாவது எடுத்துக் கொண்ட கருத்துக்குக் கலை வடிவம் தரும் முழு நிறைவான ஊடகமேயாகும்” (2) என்று விளக்கம் தருகின்றார். ஜெ. நீதிவாணன், “இலக்கியத்தைக் கற்கின்ற மாணவன் ஒருவன் அவ்விலக்கியம் எதனை அவனது உள்ளத்தில் தூண்ட விரும்புகின்றதோ அத்தூண்டலைப் புரிந்து கொள்ளாவிடில் அதனை ஒருபோதும் சுவைக்க இயலாது. அத்தூண்டலைப் புரிந்து கொள்ளத் துணை செய்வது நடையாகும்” (3) என்று இயம்புகின்றார். ஆக, மொழிநடை என்பது படைப்பாளரின் ஆளுமையை அல்லது தனித்தன்மையை வெளிக்காட்டுவதாக அமையும் எனலாம். அதுவே, வாசகர்களைப் படிக்கத் தூண்டும். அத்தகைய படைப்பே இலக்கிய உலகில் என்றும் நிலைபெற்றுத் திகழும். அந்த வகையில் கரிசல் மண்ணின் மணத்தைப் பிரதிபலிக்கும் புதினமாகக் கி.ரா.வின் கோபல்ல கிராமம் அமைகின்றது. இப்புதினத்தில் பல்வேறு நிகழ்வுகள் (தெலுங்கு நாயக்கா்கள் துலுக்கர்களுக்கு அஞ்சி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் குடிபெயா்ந்த விதம், அவா்கள்பட்ட இன்னல்கள், கோபல்ல கிராமம் உருவான விதம், கழுவேற்றம், தீவட்டி கொள்ளையா்கள் பற்றிய செய்திகள், ஆங்கிலேயா்களின் வருகை, வெட்டுக்கிளிகளின் வருகையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்டவை) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்புதினத்தைப் படிப்பவா்கள் நாயக்கரின மக்களின் வரலாற்றெழுதியலை நன்கு புரிந்து கொள்ளலாம். இப்புதினம் முழுவதும் ஆசிரியா் கூற்றிலேயே (இறந்தகாலம் x நிகழ்காலம்) அமைந்துள்ளது. சிற்சில இடங்களில் பாத்திரங்களின் உரையாடல்கள் அமைகின்றன. கி.ரா.வே தம்மை ஒரு கதைமாந்தராக மாற்றிக் கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஆக, இப்புதினம் ஆசிரியர் தம் கூற்றாகச் சொல்லும் மொழிநடையைப் பிரதிபலிக்கின்றது எனலாம். இப்புதினத்தின் வாயிலாகக் கி.ரா.வின் மொழிநடையை ஒருவாறு ஊகிக்க முடியும்.

மொழிநடை சிறக்க கி.ரா. கையாண்டவை

அ) இரட்டைக்கிளவிகள்

ஆ) உவமை வெளிப்பாடு

இ) பிறமொழிக் கலப்பு

ஈ) பேச்சு வழக்கு

உ) கதை சொல்லல்

ஊ) உரையாடல்

எ) வருணனை

ஏ) ஒலிக்குறிப்புச் சொற்கள்

ஐ) வினாத்தொடா்கள்

ஒ) நகைச்சுவை கலந்த நடை


அ) இரட்டைக்கிளவிகள்

கி.ரா.வின் மொழிநடையில் இரட்டைக்கிளவிகளின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அமைந்துள்ளது. ஒலிக்குறிப்பிற்காகப் பிரியாது இரட்டைச் சொற்களாகவே நின்று, பிரித்தால் பொருள் தராமல், வினைச்சொற்களை ஒட்டி அடைமொழியாக வருவன இரட்டைக்கிளவிகள் ஆகும். அஃதாவது, இச்சொற்கள் இரட்டித்து நின்றேப் பொருள் உணா்த்தும். பிரித்தால் பொருள் உணா்த்தா. இச்சொற்கள் பற்றித் தொல்காப்பியம், “இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்து இசையா” (தொல்.531) என்கின்றது. இச்சொற்களும் ஒலிக்குறிப்புச் சொற்களைப் போலவே இசை, குறிப்பு, பண்பு ஆகிய பல பொருட்களில் வருவதோடு, சொல்வோனின் குறிப்பையும் சூழலையும் தெளிவாக உணா்த்துகின்றன.

கி.ரா.வின் மொழிநடையில் பயின்று வரும் இரட்டைக்கிளவிகளாவன :

* தகுணு தகுணாய் சதையின் மேடு பள்ளங்கள் (ப.27) - கிருஷ்ணப்ப நாயக்கா்

* மளமள வென்று இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது (ப.32)

* கிருஷ்ணப்ப நாயக்கார் விறுவிறு என்று நடந்த சங்கதிகளைச் சொல்லி முடித்தார் (ப.34)

* பொலபொல வென்று கண்ணீர் சிந்தும் இடங்கள் (ப.44)

* கலகல வென்று சிரிக்கும் கட்டடங்கள் (ப.44)

* சடசடவென்று சொடக்குகள் விழ வைத்தாள் (ப.54)

* முணுமுணுக்கும் குரலில் (ப.55)

* பிறவியிலேயே ஒரு அசாத்திய சுறுசுறுப்பு (ப.63)

* வெளுவெளு என்று வெளுத்தார்கள் (ப.65) * கோட்டேரின் சரசர வென்ற சத்தத்தோடு ஏர்க்கால்கள் தரையில் இழுபட (ப.68) * படைவீரா்கள் படபட வென்று கோயிலுக்குள் நுழைந்தார்கள் (ப.79) * மளமள வென்று ஒன்றிலிருந்து மற்றொன்று (ப.94)

* பாட்டி மூஸ்மூஸ் என்று அழுதாள் (ப.102)

* தீ சடசடவென்று வேகத்தோடு பிடித்து எரிந்தது (ப.116)

* கூட்டத்தில் சிறு முணுமுணுப்பும் சலசலப்பும் உண்டானது (ப.150)

* எந்தப் பக்கம் எங்கே திரும்பினாலும் படபடவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள் (ப.189)

இச்சொற்கள் குறிப்பிட்ட ஒலிப்பின் அடிப்படையில் பொருளுக்கு ஒருவகை அழுத்தத்தைத் தருகின்றன.

ஆ) உவமை வெளிப்பாடு

கி.ரா.வின் மொழிநடையில் உவமையின் வெளிப்பாடு அதிகம் என்றேக் கூறலாம். தொல்காப்பியர் காலம் தொட்டுப் பல்வேறு உவம உருபுகள் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளன. ஆனால், தற்காலத்தில் இவற்றின் பயன்பாடு மிகச் சொற்ப அளவிலேயே உள்ளன. தற்கால இலக்கியங்களில் போல, போல், போலும், போன்ற, மாதிரி ஆகிய உவம உருபுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன (போல் - போல என்பதன் மாற்று வடிவமாகக் கொள்ளலாம்). இவ்வுவம உருபுகளைக் கி.ரா. சூழலுக்கேற்பவே கோபல்ல கிராமத்தில் அமைத்துள்ளார். உரையாசிரியர் கூறுவதைப் போல், புலன் அல்லாதன புலன் ஆதல் பொருட்டு உவம உருபுகளைக் கையாண்டுள்ளார். கி.ரா. குறிப்பாக, இவற்றை வருணனையின் போது பயன்படுத்தியுள்ள பாங்கு பாராட்டுதற்குரியது.

1) கோட்டைச் சுவர்

கோட்டையார் வீட்டின் பழமையான கோட்டைச் சுவரைக் “கோட்டைச் சுவரும் ஏதோ புராதனச் சின்னங்கள் போல் சோகமாய் நின்று கொண்டிருந்தன” (ப.19) என்றும், அந்தக் கோட்டைச் சுவரில் பாசி படர்ந்திருப்பதை, “நத்த மண்ணினால் கட்டப்பட்ட கோட்டைச் சுவரில் பச்சை வெல்வெட் மாதிரி பாசி படா்ந்திருக்கும்” (ப.19) என்றும் உவமை வழி வருணிக்கின்றார்.

2) கம்மாளர் ஜாதியைச் சோ்ந்த ஒரு பெண் கொலை செய்யப்படல்

“அறுந்த காதுகளோடு அந்தப் பெண் வாயில் கடித்த பெருவிரலோடு ஏதோ கரும்புத்துண்டைக் கடித்து வாயில் வைத்துக் கொண்டது மாதிரி பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டு கண்களை அகட்டி பயம் காட்டுவது போன்ற முகத்துடன் மல்லாந்து கிடந்தாள்” (ப.32).

3) வேப்பமரம்

வேப்பமரத்தை உவமையின் மூலம் வருணிக்கும் போது, “பெண் ஒருத்தி பச்சை உடுக்கை உடுத்தி வெண்ணிற ரவிக்கை அணிந்து கொண்டிருப்பதைப் போலிருக்கும்” (ப.42) என்கின்றார்.

4) மங்கத்தாயாரு அம்மாள்

மங்கத்தாயாரு அம்மாளை அறிமுகம் செய்யும் போது, “எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும் அந்த உருவத்தைப் பார்க்கும் போது, ரோமத்தையெல்லாம் இழந்துவிட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும்” (ப.42) என்கின்றார்.

5) குந்தம் - கண்நோய்

“கண்விழிகளைக் குருடாக்கி அந்த விழிகளிலிருந்து கொம்பு முளைப்பது போல் சதைப் பிண்டம் வெளியே துருத்தி அரைவிரல் நீளம் நீண்டிருக்கும்” (ப.74).


6) துளசி - கூந்தல் -

“அந்த அம்மாளின் மகள்போ் துளசி. ஒரே மகள். பிறக்கும்போதே அவளுக்குத் தலைமுடி கொடுக்காப்புளி பிஞ்சுகள் மாதிரி சுருள்சுருளாய் இருக்குமாம்” (ப.84).

7) வெள்ளை நாகம்

“ஒரு வெள்ளி மின்னலைப் போல் அது தோன்றிய வேகத்தில் ஓடி மறைந்தது” (ப.117).

8) காட்டுப்பன்றி

“அதன் கீழ்த்தாடையிலிருந்து இரண்டு கொம்புப் பற்கள் மேல்நோக்கி வளா்ந்து யானைத் தந்தம் போல் இருந்தது” (ப.117).

9) பார்த்தசாரதி நாயக்கா்

“சாந்த மூா்த்தியான ராமனைத் தெய்வமாக வழிபட்டாலும், அவர் லட்சுமணன் போல கோபியாகவே இருக்கிறார்” (ப.152).

10) கருப்பு அதிகாரி

“வளமான திருகிவிடப்பட்ட மீசை, செம்மறி ஆட்டங்கிடாய் கொம்புகள் மாதிரி” (ப.169).

“தெறித்து விழுகிற மாதிரியான பெரும் விழிகள் ஆட்களை மருட்டுகிற மாதிரி இருந்தது” (ப.169).

11) கும்பினியா் செயல்

“வெள்ளைக்காரன் இவன்களை வரிசையாக நிறுத்தி அவன் இவா்கள் எதிரே நின்று கொண்டு குயவன் மண்ணை மிதிக்கிற மாதிரி, மாறி மாறி ஒரு காலை மாற்றி ஒரு காலை வெறும் தரையில் மிதிப்பானாம். எதிரே வரிசையாய் நிற்கும் இவன்களையும் அதே மாதிரி மிதிக்கச் சொல்லுவானாம்” (ப.195).

இவ்வாறு கி.ரா. அவா்கள் ஒரு கருத்தை அழகுற விளக்குவதற்காகவும், வாசிப்பாளர்கள் சுவையின்பம் பெறுவதற்காகவும் மேற்கூறிய உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார் எனலாம்.

இ) பிறமொழிக் கலப்பு

ஒரு மொழி பிறிதொரு மொழியுடன் தொடா்பு கொள்ளும் போது, அம்மொழியில் உள்ள சொற்கள் பிறிதொரு மொழியில் கலத்தல் இயல்பாகும். தமிழ்மொழியில் காலந்தோறும் பிறமொழிக் கலப்பு ஏற்பட்டுள்ளதைக் காணலாம். பிறமொழி ஆட்சியாளர்களின் வருகை, வாணிப நிலை, இடப்பெயா்வு உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய கலப்பு ஏற்படுதல் தவிர்க்க இயலாத ஒன்று. எனவே, குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றிய படைப்பாளர்களும் தத்தம் படைப்புகளில், தம் காலத்தில் வழக்கில் இருந்த பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துதல் இயல்பு. இந்நிலையைக் கி.ரா.விடம் காணலாம். அவரது மொழிநடையில் வடமொழி, தெலுங்கு, உருது ஆகிய மொழிகளின் கலப்பினை உணரலாம்.

உதாரணத்திற்குச் சில சொற்கள் :

வடசொற்கள்

பவ்யம் (ப.19), காம்பீர்யம் (ப.19), வர்ணம் (ப.29), நாதம் (ப.40), சாரீரம் (ப.41), ராஜா (ப.45), தேசம் (ப.45), ஜாடை (ப.46), ஆசனம் (ப.52), யோஜிக்காதே (ப.55), பூஜை (ப.55), அதிர்ஷ்டம் (ப.55), சங்கல்பம் (ப.60), கலயம் (ப.68), ராஜபோகம் (ப.77), ருஜி (ப.77), ஸ்தலங்கள் (ப.82), புண்யவதி (ப.85), பிராயம் (ப.85), ராத்திரி (ப.87), குஷால் (ப.87), ஸ்ரீரங்கம் (ப.103), சுபாவம் (ப.125), ஜோடி (ப.125), ஜோசியம் (ப.131), ஜாதகம் (ப.135), ருசி (ப.185)

தெலுங்கு மொழிச் சொற்கள்

செல்லீ (ப.52), கோவ்பல்ல எங்க்கடம்ம இல்லு எதி? (ப.72), துண்டபண்டு வெங்கிடம்மா (ப.73), ரண்டி ரண்டி (ப.76), அத்தாளம் (ப.87) , தைப்பாறுறது (ப.93), எங்க்கட்ராயலு (ப.131), ஏமி பத்துகூரா அக்கையா (ப.134), ராயலுகாரு இக்கட ரண்டி (ப.154),எங்க்கச்சியக்கா (ப.185), அய்யோ தேவுடா (ப.190)

உருதுச் சொல்

இலாகா (ப.41)

ஈ) பேச்சு வழக்குச் சொற்கள்

இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்துள்ள மொழியில் பேச்சு வழக்குச் சொற்கள் சில இடம் பெறுவன இயற்கையே. இலக்கிய வழக்கு அல்லாத சொற்களைப் பேச்சு வழக்குகள் என்கின்றோம். இச்சொற்கள் அந்தந்த வட்டாரம் சார்ந்தும் மண் சார்ந்தும் இடம் பெறுவதுண்டு. தற்கால இலக்கியங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பேச்சு வழக்குகள் இடம் பெறுகின்றன. அவை தவிர்க்க இயலாதவாறு படைப்பில் கலந்துள்ளமையைக் காணலாம். இந்நிலையைத்தான் கி.ரா.வின் கோபல்ல கிராமத்திலும் காண்கின்றோம். கி.ரா. அவா்கள் ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்தவா் என்றாலும் தொடர்ந்து இலக்கிய வாசிப்பில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். எனவே, கரிசல் மண்ணின் வாசத்தை அப்படியே படைப்பில் தர வேண்டும் என்ற எண்ணத்தில் பேச்சு வழக்கு நடையைத் தமது படைப்பில் கையாண்டுள்ளார்.

மந்தை (ப.18)

அம்மான் (ப.25), பைதாக்கள் (ப.28), இப்பிடிகூடி (ப.29), பொம்பிளை (ப.29), நோக்கலை (ப.30), தொள்ளாளி (ப.31), தபா (ப.37), என்னத்துக்கு (ப.37), லச்சை (ப.42), ரோமம் (ப.42), கோயிந்தப்பா (ப.53), சொடக்குகள் (ப.54), கடேசி (ப.55), கொட்டகை (ப.57), வெளிக்கு (ப.58), ஒங்களுக்கு (ப.64), தெசை (ப.65), டக்கு (ப.69), ரெண்டு (ப.71), இண்ணைக்கு (ப.93), அம்மாசி (ப.93), நேத்தோடெ (ப.93), அண்ணைக்கு (ப.93), நாலு (ப.108), நோவு (ப.109), ஒண்ணுக்கு (ப.125), ஒத்தை (ப.131), அண்ணாந்து (ப.139), இக்குனூண்டு (ப.185)

உ) கதை சொல்லல்

கோபல்ல கிராமத்தில் கி.ரா. கதை சொல்லல் என்னும் பாணியைப் பின்பற்றுகின்றார். இப்புதினத்தில் மங்கத்தாயாரு அம்மாளின் விவரிப்பில் இறந்த காலமும், கோவிந்தப்ப நாயக்கா் பார்வையில் நிகழ்காலமும் கலந்த தன்மையைக் காணலாம். மங்கத்தாயாரு அம்மாள் கூறும், சென்னாதேவியின் கதையும், துளசியின் கதையும் புதினத்தின் கதையோட்டத்தில் மர்மம் சூழ்ந்த நிலையைக் காட்டுகின்றன. கோவிந்தப்ப நாயக்கா் காலத்தில் நிலவிய கொலை, கொள்ளை (தீவட்டிக் கொள்ளை), சஞ்சீவினி மூலிகையின் தன்மை - கதை, கும்பினியா்களின் வருகை ஆகியவை கதையின் போக்கிற்கு நிகழ்காலத் தன்மையை வழங்குவனவாக அமைந்துள்ளன.

இவைதவிர, புதினத்தின் கதைப்போக்கில் அக்கையா என்ற கதைமாந்தா் கதை கூறுவதாக இடையே ஒரு பகுதி அமைந்துள்ளது. அதில் அவா்,

“ஒரு ஊர்லெ ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மகன், கல்யாணம் ஆகவேண்டிய வயசு, கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். பொண்ணு ரெண்டு. அக்கா தங்கை. அதுகளும் ராஜகுமாரத்திகதான். கல்யாணம் தடபுடலாய் நடந்து முடிஞ்சது” (ப.90) என்று கதையைக் கூறத் தொடங்குகின்றார். இக்கதை சொல்லல் தன்மை புதினத்தின் கதைப்போக்கை எங்கும் தடைசெய்யவில்லை. கிராமத்தில் நடக்கும் நிகழ்வுதானே அது.


ஊ) உரையாடல்

புதினத்தின் கதையோட்டத்தை விறுவிறுப்புடையதாக மாற்ற படைப்பாளர்கள் உரையாடல் வடிவத்தைக் கையாள்வதுண்டு. இவ்வுரையாடலானது மிக நீண்டதாகக் கூட அமையலாம். படைப்பாளா் புதினத்தின் கதையோட்டம் தடைப்படாதவாறு இவ்வுரையாடலை அமைப்பா். பேச்சு வடிவில் அமையும் கருத்தாடலில் உரையாடல் இன்றியமையாத பங்காற்றுகின்றது. கி.ரா.வும் தமது கோபல்ல கிராமத்தில் உரையாடல் பாங்கினைப் பயன்படுத்தியுள்ளார்.

உதாரணத்திற்கு ஓா் உரையாடல் பகுதி :

தீவட்டிக் கொள்ளையா்கள் கிடையைத் தாக்கி நான்கு கிடாய்களைப் பிடித்துக் கொண்டு போய்விட்டனா். இத்தகவலை அந்தக் கிடைக்குக் காவல்காரன், கீதாரியான ராமப்ப நாயக்கரைத் தேடி கோட்டையார் வீட்டிற்கு வந்து அந்தத் தகவலைக் கூறுகின்றான். அதற்கு அங்கிருந்தவா்கள் திகைத்துச் சிரிக்கின்றனா். அப்போது நடைபெறும் உரையாடல் வருமாறு:

“வெறுங்கையோடெ வீட்டுக்குப் போனா எப்படி? என்றார் அக்கையா

போட்டும்; போட்டும். அந்த வலிக்கு நல்ல சாராயத்தையும் குடிச்சி, ஆட்டு வறுவலையும் திங்கணும்! என்றார் கோவப்ப நாயக்கா்” (ப.98).

எ) வருணனை

கி.ரா. தமது கோபல்ல கிராமத்தில் சில பகுதிகளை விளக்கமாகக் கூற வேண்டும் என்பதற்காக வருணனை முறையைக் கையாள்கின்றார். இவ்வருணனை கதை மாந்தா்களை அறிமுகம் செய்யும்போதும் இடத்தைக் குறிக்கும் போதும் இடம்பெறக் காணலாம்.

மங்கத்தாயாரு அம்மாள் வருணனை

“வீட்டின் நீண்ட திண்ணையை ஒட்டி ஆள் உயரத்துக்கு இருக்கும் நான்கு ஜன்னல்கள். வடக்குக் கடைசி ஜன்னல் வழியாகப் பார்த்தால், ஒரு தனி அறையில் பனைநார்க் கட்டிலில் ரொம்பவும் வயசான ஒரு பெரியம்மாள் இருப்பது தெரியும். எலும்பும் தோலுமாய் நீண்ட மூக்குடன் இருக்கும் அந்த உருவத்தைப் பார்க்கும் போது, ரோமத்தையெல்லாம் இழந்து விட்ட ரொம்ப வயசான ஒரு கழுகின் ஞாபகம் வரும். அந்தப் பூட்டியின் பெயா் மங்கத்தாயாரு அம்மாள். அவளுக்கு இப்பொழுது நூற்றி முப்பத்து ஏழு வயசாகிறது” (ப.42).

சென்னாதேவி வருணனை

“அவளுடைய குரல்தான் என்ன இனிமை என்கிறாய்! அவள் பாட ஆரம்பித்தால் இந்தப் பிரபஞ்சமே ஒலியடங்கி மௌனியாகிவிடும். காற்று அசைவதை நிறுத்திவிடும். கொடிகள் ஆடாமல் நிற்கும். பூமியில் நம்முடைய பாரம் லேசாகி அப்படியே கொஞ்சங் கொஞ்சமாக மேலே கிளம்பி காற்றில் மிதப்பது போல் ஆகிவிடும். பெருங்குளத்தின் நிறை தண்ணீரைப் போல ஆனந்தம் தாங்காமல் தத்தளிக்கும் நம் மனசு” (பக்.46,47).

ஏ) ஒலிக்குறிப்புச் சொற்கள்

உலகில் உள்ள ஏதாவது ஓா் உலகப்பொருள் எழுப்பும் ஒலியடிப்படையில் தோற்றம் கொள்ளும் சொற்கள் ‘ஒலிக்குறிப்புச்சொற்கள்’ என்றழைக்கப்படுகின்றன. இச்சொற்கள் பெரும்பாலும் பறவை, விலங்கு, அருவி ஆகியவை எழுப்பும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டவை. இச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவதுண்டு. நிகழ்ச்சியின் வருணனைகளில் சூழலை வாசகர் முன் நிறுத்தவும் உணா்ச்சிகளை வெளிக்கொணரவும் இவை பெரிதும் பயன்படுகின்றன. கி.ரா. அவா்கள் கோபல்ல கிராமத்தில் சில செயல்களையும் உணா்வுகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்தில் இவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

* தக்தக் என்றுதான் அடி வைத்து நடப்பார்கள் (ப.19)

* மொறுக் மொறுக் என்று மெல்லும்போது (ப.34) - கோவிந்தப்ப நாயக்கர் வெற்றிலை மெல்லுதல்

* அவை சளப் சளப் என்று நாக்கை நீட்டி (ப.40) - நாய்கள் நீர்குடித்தல்

* விட்டில்கள் மேயும் சத்தம் நெறுக்நெறுக் என்று காடெல்லாம் ஒன்று போல (ப.189)

ஐ) வினா வாக்கியங்கள்

தமிழில் யார், எவன், எது, என்ன, ஏன், எவை, எவள், எங்கு உள்ளிட்ட வடிவங்கள் வினா வடிவங்களாக உள்ளன. இவைதவிர எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினாவெழுத்துக்களாக உள்ளன. இவை தொடர்களில் இருந்து வாக்கியங்களாக மாறும்போது வினா வாக்கியங்கள் தோற்றங்கொள்கின்றன. கி.ரா. அவா்கள் தமது புதினத்தில் பின்வருமாறு வினா வாக்கியங்களை அமைத்துள்ளார்.



* காட்டை அழிப்பது லேசு பிறகு இந்த மாதிரி வேண்டும் என்றால் கிடைக்குமா?

* எனக்கு நீ இப்படிச் செய்யலாமா? என்று கேட்பான் (ள்) (ப.21)

* ஐயா, இப்பிடிக்கூடி ஒரு பொம்பிளை போனதைப் பாத்தியளா? (ப.29)



* நம்ம பெண்டுகளுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருக்கானோ? (ப.178)

என்ன

* வர்ணம் என்ன? என்று கேட்டார் (ப.29)

* அது என்ன? (ப.31)

* இண்ணைக்கு என்ன கிழமை? என்ன நட்சத்திரம்?

எத்தனை

* இந்த மாதிரித் தகவல்கள் இது எத்தனாவது தபா? (ப.37)


எவ்வளவு

எவ்வளவு நேரம்தான் அழமுடியும்? (ப.55)

எங்கே

தண்ணி எங்கே? (ப.71)ம் மாடுகள் எங்கே? (ப.72), எங்கே போறீர்? (ப.91)

எதி (எது)

கோவ்பல்ல எங்க்கடம்ம இல்லு எதி? (எது) (ப.72)

எப்படி

நீங்கள் அந்த துலுக்க ராஜாவிடமிருந்து எப்படித் தப்பித்து வந்தீர்கள்? (ப.76), எப்படி வெளியே வந்தான்? (ப.172)

என்னது

என்னது இது நீர் செஞ்சி வச்ச கல்யாணம்? (ப.135)

ஏன்

ஏன் தகப்பனுக்கே கட்டி வச்சிருக்கப்படாதா அந்தப் பொண்ணை? (ப.135), மனிதனில் மட்டும் ஏன் அப்படி இல்லை? (ப.174)

யார் + உம் (ஏ)

யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லலையே? (ப.188)

இவ்வாக்கியங்கள் எல்லாம் உரையாடும் பாங்கில் அமையும் பகுதிகளில் இடம் பெற்றுள்ளன.

ஒ) நகைச்சுவை கலந்த நடை

கி.ரா. கோபல்ல கிராமத்தில் சில இடங்களில் நகைச்சுவை நடையைக் கையாண்டுள்ளார். வெள்ளைக்காரர்கள் பட்டாளத்திற்குப் பயிற்சியளிக்கும் முறையைப் பற்றிக் கூறும்போது, அக்கையா என்ற கதைமாந்தா் வழி நகைச்சுவையை ஊட்டுகின்றார் படைப்பாளர்.

துணிநெய்பவரிடம் சுந்தரப்ப நாயக்கா் வேடிக்கையாக,

“இந்த சேலை சாயம் போகுமா? என்று கேட்டார். அவ்வளவுதான்! அவருக்கே உண்டான பார்வையோடு சுந்தரப்ப நாயக்கரைப் பார்த்து அந்தச் சேலையைக் காட்டி, ‘குளத்துத் தண்ணியிலே அலசுனா சாயம் போகாது....’ என்று சொல்லி நிறுத்தினார். அவா் அப்படிச் சொன்னது யாருக்கும் புரியலை. நெசவாளிகள் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அந்தப் பார்வை, ‘அதென்ன குளத்துத் தண்ணியிலே அலசுனா சாயம் போகாது?’ என்று கேட்பது மாதிரி இருந்தது. அக்கையா நிறுத்தின இடத்திலிருந்து தொடர்ந்தார்.

..... ஆத்துத் தண்ணியிலே அலசுனா சாயம் போயிடும்!.... ஏன்னா குளத்துத் தண்ணியெச் சுத்....தி நாலு பக்கமும் கரை போட்டிருக்கு; சாயம் போகாது!. நெசவாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் அதுக்கப்புறம்தான் புரிந்தது அவா் கொண்டு வந்த தோரணை. ரொம்ப நேரம் அதை அனுபவித்துச் சிரித்தார்கள்” (பக்.62-63).

“ஓலைக்கால், சீலைக்கால், ஓலைக்கால், சீலைக்கால். ஓலைக்கால்ண்ணா இடது காலை உதைக்கணும்; சீலைக்கால்ண்ணா வலது காலை உதைக்கணும்” இப்படிச் சொல்லிச் சிரித்தார் அக்கையா (ப.195).


நிறைவாக,

தமிழ்ப் புதின வரலாற்றில் கி.ரா.வின் மொழிநடை தனித்துவமானது. எளிய நடை உடையதாய் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கக் கூடியதாய் அமைந்துள்ளது. இது அவரது நுண்ணறிவை, நுண்ணுணா்வை வெளிக்காட்டுகின்றது. மேலும், இவரது மொழிநடையில் இரட்டைக்கிளவிகளையும் உவமைகளையும் அதிகமாகக் காணமுடிகின்றன. இவற்றைச் சூழலுக்கேற்பவே அமைந்துள்ளார். இவை வாசிப்பாளரிடையேப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன. கி.ரா.வின் கோபல்ல கிராமத்தில் வடசொற்களின் கலப்பு, தெலுங்கு சொற்களின் கலப்பு மிகுதியாக உள்ளன. கதை சொல்லல் வெளிப்படும் இடங்களில் உண்மைத் தன்மை வெளிப்படுகின்றது. இது புதினத்தின் கதையோட்டத்தை நிகழ்காலத்தில் இருந்து கொண்டு இறந்த காலத்தையும் மீண்டும் நிகழ்காலத்தையும் காண்பதாக உள்ளது. பேச்சு வழக்கு சார்ந்த பதிவுகள், பிறமொழிச் சொற்களின் வருகை ஆகியவை கோபல்ல கிராமத்து மக்களை உயிர்ப்புடன் வைக்கின்றன.

உரையாடல், வருணனை ஆகிய இரண்டும் புதினத்தில் தவிர்க்க இயலாதவை. இவை வாசிப்பாளருக்குச் சலிப்பூட்டும் பாங்கில் அமையாமல், கதைமாந்தர்களின் செயல்களையும் கதை நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்துள்ளன. கி.ரா.வின் கோபல்ல கிராமம் நாயக்கர் இன மக்களின் வாழ்வியல், பண்பாட்டுப் பதிவுகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. அதற்கேற்பவே தமது மொழிநடையைப் புதினத்தில் கையாள்கின்றார். தமக்கே உரித்தான தனித்துவமான பாணியில் புதினத்தை வளா்த்துச் செல்கின்றார் எனலாம்.

குறிப்புகள்

1. Longman Dictionary of English Language, p.1490.

2. கி. சி. ஆறுமுகசாமி, கருணாநிதியின் சிறுகதைகளில் மொழிநடை, (13 ஆவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி - 2), ப.12.

3. ஜெ. நீதிவாணன், கண்ணதாசனின் நடை, (முத்துச்சண்முகன் + இராம.பெரியகருப்பன் (ப.ஆ), வையை, மலா் - 1 மதுரை, 1973 - 74), ப.56.

துணையன்கள்

1. ஆறுமுகசாமி, கி.சி. கருணாநிதியின் சிறுகதைகளில் மொழிநடை, ச.அகத்தியலிங்கம், தா.ஏ.ஞானமூா்த்தி, செ.வை.சண்முகம், கி.கருணாகரன் (ப.ஆ), 13 - வது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி - 2, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியா் மன்றம், அண்ணாமலை நகர், 1984, பக்.12 - 17.

2. சுப்பிரமணியன், ச.வே. தொல்காப்பியம் - தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பத்தாம் பதிப்பு: 2009.

3. நீதிவாணன், ஜெ. கண்ணதாசனின் கவிதை நடை, முத்துச்சண்முகன், இரா.பெரியகருப்பன் (ப.ஆ), வையை, மலா் - 1, தமிழ்த்துறை, மதுரை காமராசா் பல்கலைக்கழகம், மதுரை, 1973 - 1974, பக்.55-69.

4. ராஜநாராயணன், கி. கோபல்ல கிராமம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், இரண்டாம் பதிப்பு: 2009.

5. ....., Longman Dictionary of the English language, Longman Group Limited, Longman House, England, 1984 (1st ed.)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p240.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License