பெண்ணிய நோக்கில் இரட்டைக் காப்பியங்கள்
பா. அனிதா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி (தன்னாட்சி), மேல்விஷாரம்,
இராணிப்பேட்டை மாவட்டம்.
ஆய்வுச் சுருக்கம்
உலக அளவில் மேலைநாட்டுக் கோட்பாடுகளுள் ஒன்றுதான் பெண்ணியக் கோட்பாடு, பிரெஞ்சு மொழியில் தோன்றி, இந்தியச் சூழலுக்குள், தமிழ்ச் சூழலுக்குள் கால்கொள்ளத் தொடங்கிய உடன் பெண்கள் குறித்த இலக்கியப்பதிவுகள், புனைவுகள், கருத்தாக்கங்கள் குறித்த விவாதங்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் இரட்டைக்காப்பியங்களில் இளங்கோவும், சாத்தனாரும் பல்வேறு பெண்பாத்திரங்களைக் காப்பியத் தேவைக்காகப் படைத்திருந்தாலும், கண்ணகியின் பொறுமை, அவளுடைய சுயத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட போது நீதியை நிலைநாட்ட அவளுக்குத் துணிவைக் கொடுத்தது, அவளுள் இருந்த கற்புக்கனல். கணிகையர் குலத்தில் தோன்றினாலும் குலமகளாகலாம் என்ற மாதவியின் வாழ்வு. “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்று சொல்லி உயிர்நீத்த கோப்பெருந்தேவி, கற்பின்குறியீடான அருந்ததி, உண்டி கொடுத்து உயிர் கொடுத்த மணிமேகலை, அமுதசுரபியில் முதன்முதலில் பிச்சையிட்ட கற்புத்தின்மை கொண்ட ஆதிரை இவர்களின் இயல்புகளை ஆய்வு செய்து அதன் முடிபாக பெண்ணியச் சிந்தனை, பெண்ணறக் கோட்பாடு, கற்புத்தின்மையால் உயர்ந்து நிற்றல், பெண்ணியக் கோட்பாடு, பெண்ணிலை வாதம், பெண்கள் துணிவு, ஆற்றல், வல்லமையால் சாதனைப் படைத்த திறம் ஆகியவை குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
குறிச்சொற்கள்
கற்புக்கனலி - மடல் - கற்புக்குறியீடு - மிவியல்புத்தன்மை
முன்னுரை
உலக இலக்கியங்களிலே தமிழ் இலக்கியங்களுக்குத் தனி இடம் உண்டு. தமிழ் இலக்கியங்களிலேக் காப்பிய இலக்கியத்திற்குச் சிறப்பிருந்தாலும், இரட்டைக் காப்பியங்களைப் பல்வேறு நோக்கங்களிலே உற்று நோக்கினாலும், அவை தகுதிப்பாட்டிலும், தரத்திலும் தனக்கெனத் தனியிடத்தில் உயர்ந்து நிற்பதை அறியமுடிகிறது. இதற்குரிய காரணங்கள் பல இருப்பினும் அவற்றுள் ஒன்று, இவை இரண்டும் பெண்ணை முதன்மைப்படுத்திய, பெண்ணிற்கு உயர்வளித்தக் காப்பியங்களாகும். பெண்ணியச் சிந்தனைகள் பரவலாகப் பேசப்படும் இக்காலத்தில் இரட்டைக் காப்பியத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய பெண்களைப் பெண்ணியப் பார்வைக்கு உட்படுத்தி ஆய்வு மேற்கொள்வது என்பது இலக்கிய மேம்பாட்டிற்கும், இன்றைய தேவைக்குமாக அமைகிறது.
பெண்ணியநோக்கில் - கண்ணகி
பெண்ணிற்கு நிலவை உவமைப்படுத்துவதும், நிலவைப் பெண்ணாக உருவகப்படுத்துவதும் இலக்கியமரபு. ஆண்டவனையும், அரசனையும் விடுத்து புதிய முயற்சியாக, புதிய புரட்சியாக முதன்முதலில் இயற்கையை வாழ்த்தாகப் பாடினான் இளங்கோ. இதன் நோக்கம் சிலம்பின் தலைவியாகிய கண்ணகியை முதன்மைப்படுத்த வேண்டும் என்பது தான். நிலவைப் போல் பெண் மென்மைத்தன்மை உடையவள், ஒளிவீசி இல்லற இருள்போக்கும் பாங்கினள். இவையாவும் கண்ணகிக்கும் பொருத்தமானதாக இருப்பதால் கண்ணகியை மனதில் நினைத்துப் பாடிய வாழ்த்தே,
“திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்” (1)
என்பது ஆகும். இங்கு பெண்ணிய வாழ்த்து கடவுள் வாழ்த்தாக, இயற்கை வாழ்த்தாக அமைத்திருப்பது சிந்தனைக்குரியது.
கண்ணகியைப் பாராட்டும் உயரிய நிலை
தொல்காப்பியர் குறிப்பிடும் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்ற நால்வகைப் பண்பு நலன்கள் பெண்களுக்கு அத்தியாவசியமானது. “பெண்டிர் கொண்டிருந்த குணங்களுள் நாணமும் பயிர்ப்பும் பண்பாட்டு குணங்களாகும்” (2) என்று ஞா. தேவநேயன் குறிப்பிடுகிறார். பொறுமை பெண்டிர்க்குரிய குணங்களுள் ஒன்றாகும். “பொறை எனப்படுவது மென்மையான மனத்துடன் பொறுத்துப் போகும் பண்பாகும்” (3). இப்பொறையுடைமை கண்ணகியிடம் இருந்ததால் இளங்கோ,
“போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலன் பெயர் மன்னுங் கண்ணகியென்பாள் மன்னோ” (4)
என்று பாராட்டுகிறார்.
கண்ணகி “போதிலார் திருவினாள்’’ என்றும், “புகழுடைவடிவென்றும்” அடையாளம் காட்டப்படுகிறாள். மேலும், “தீதிலாவடமீனின்திறம் இவள்திறம்” என்றும், “மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்” என்றும் பாராட்டப்படுகிறாள்.
இவ்வாறு வரிக்குவரி பாராட்டி பெண்ணைப் பெருமைப்படுத்துகிறது.
‘வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலன்’ என்ற அளவில் செல்வச்செழிப்பில் வாழ்ந்தவள். கணவன் அவளை விட்டுப் பிரிந்து மாதவியின் பால் வாழ்ந்த போது அப்பிரிவைத் தாங்கியவள். கோவலன் வந்து ‘வருகென’ அழைத்ததும் மறுமொழி எதுவும் கூறாமல் உடனே எழுந்தவள். அவனுடன் காடுமேடுகளைக் கடந்து சென்றவள். கவுந்தியடிகள் அடைக்கலமாகத் தந்த மாதரியின் மகள் ஐயை வீட்டில் உணவு சமைத்து, பரிமாறி பல்வேறு பணிகளைக் கணவனுக்காகச் செய்து மகிழ்ந்தவள். மனச் சுமைகளைக் கூடச் சுகங்களாகச் சுமந்து வாழ்ந்த கண்ணகியை இளங்கோ சாதித்துக்காட்டிய முதல் பெண்மணியாகப் பதிவு செய்து உயர்வளிக்கிறார்.
ஆடலரசி மாதவியை மேம்படுத்திய நிலை
“பல வகையாலும் உயர் நெறியதாகிய அன்புடை வாழ்க்கை பூவிற்குப் புல்லிதழ் வாய்த்தாற் போலவும், மதிக்கு மறுவாய்த்தாற் போலவும் பரத்தையர் பிரிவு என்னும் இழிந்த ஒழுக்கத்தினால் கலக்கமடைகிறது” (5) என்று உ.வே.சா கூறுகிறார். காமக்கிழத்தி, காதற்பரத்தை சேரிப்பரத்தை போன்றோர் வாழ்ந்த வரலாறு இலக்கணத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
“கண்ணிய காமக்கிழத்தியர் மேன”
எனத் தொல்காப்பியரும்,
“வருகுலப் பரத்தையர் மகளிராகி
காமக்கு வரைந்தோர் காமக்கிழத்தியர்” (6)
என்று நம்பியும் கூறியுள்ளதால் அறியமுடிகிறது.
கோவலன் இறந்த பிறகு, குலமகளிர் போலவே கைம்மை நோன்பிற்குரிய கோலம் பூண்டு, துறவு வாழ்க்கையை மேற்கொண்டதோடு, தன் மகள் மணிமேகலையையும் துறவு வாழ்க்கையில் ஈடுபடுத்தி இருப்பதாகப் படைத்திருப்பதில் இருந்து இளங்கோ பெண்மையை, பெண்நலனை, அறக்கோட்பாட்டை சொல்ல முற்படுவதில் இருந்து பெண்ணியச் சிந்தனையைக் காணமுடிகிறது.
மடலால் கிடைத்த மாண்பு
அறிஞர்கள் சமுதாயச் சீர்த்திருத்தங்களைத் தங்களின் எண்ணக் கருத்தோட்டங்களின் வழியாக உணர்த்துவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது மாதவியின் மடல்கள்தான். இன்று கடித இலக்கியங்கள் ஏட்டளவில் நின்றுவிட்டன. கைப்பேசி வந்த பிறகு கடிதங்கள் எழுதுவது இல்லாமல் போய்விட்டன. தமிழ்த்தேர்வில் மட்டும் இன்றும் ஒரு வினா கடிதம் எழுதுமாறு கேட்கப்படுகிறது அவ்வளவுதான்.
சிலம்பில் மாதவி இரண்டு மடல்களைக் கோவலனுக்கு எழுதுகிறாள். முதல் மடலைச் சண்பகம். தமாலம், கருமுகை வெண்பூ, மல்லிகை, வெட்டிவேர் போன்ற வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்ட செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதினாள். இதை,
‘சண்பக மாதவி தமாலங் கருமுகை
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அஞ்செங் கழுநீராயிதழ்க் கத்திகை
எதிர்பூஞ் செவ்வி யிடை நிலத் தியாத்த
முதிர்பூந் தாழை முடங்கல் வெண்டோட்டு” (7)
என்ற அடிகள் உணர்த்தும்.
இம்மடலை வயந்தமாலையிடம் கொடுத்து கோவலனிடம் கொடுக்குமாறு வேண்டுகிறாள். இரண்டாவது மடலைத் தாழை மடலில் எழுதுகிறாள். அதில் கோவலன் மதுரையை அடைந்ததற்காக வருந்தி கோசிகமாணியிடம் கொடுத்தனுப்புகிறாள் அதில்,
‘அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்” (8)
என்ற வரிகள், நம்பிக்கை இழந்து, இரக்க உணர்வு மேலோங்க தான் செய்ததில் பிழை இருப்பின் மன்னித்து ஏற்க வேண்டும் என்று எழுதுகிறாள். இந்த இரண்டாவது மடல் நல்லமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
“கோசிகன் வாராதிருப்பின் மாதவியைப்பற்றி நமக்கு உயர்ந்த எண்ணம் தோன்றாது. இந்த இரண்டாவது கடிதம் மாதவியை மிக உயர்த்திவிட்டது” (9)
என்று கா. மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகிறார்.
மாதவி, கோவலன் மனமாற்றத்தின் உத்தி முறையாக மடல்கள் அமைந்தன.
“இறக்கப் போகும் கோவலன் 12 ஆண்டுகள் மாதவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தவன். அவளைப் பற்றிய தவறான உணர்வுடன் மடியக்கூடாது என்ற எண்ணத்தில் இக்கடிதம் வழி பாத்திரப்படைப்பை இளங்கோ உயர்த்தியிருக்கிறார்” (10) என்று காசிராஜன் கூறியிருப்பதில் இருந்து கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி மேல் தீய எண்ணங்களைப் போக்கிக் கோசிகன் வாயிலாக அவளுக்கு இளங்கோ பெருமையைக் கூட்டியிருக்கிறார்.
அரசி கோப்பெருந்தேவி
வழக்குரைக் காதையில் பாண்டிய மன்னன் மயக்க முற்று வீழ்ந்து மடிந்ததைக் கண்ட அவன் மனைவி கோப்பெருந்தேவிக்கு உள்ளம் குலைந்து உடல் நடுங்குகிறது. தாய் தந்தை முதலானவர்களை இழந்தவர்களுக்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டுதல் கூடும். ஆயினும், கணவனை இழந்த மகளிர்க்கு அங்ஙனம் சொல்லிக்காட்டுதல் இயலாது என்று பேசியதை,
“கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி” (11)
மேற்காண் வரிகள் உணர்த்தும்.
தன் கணவனுடைய அடிகளைத் தொட்டு வணங்கி நிலத்தில் விழுந்து இறந்தாள். கோப்பெருந்தேவி கணவன் இறந்த உடனே இறந்ததற்கான கற்பின் தின்மையைப் புலப்படுத்திப் பெருமைப்படுத்துகிறார். பத்தினி பெண்டிர் எழுவரின் வரலாற்றைக் கூறி பெண்ணறக் கோட்பாட்டை தெளிவுப்படுத்துகிறார்.
அருந்ததி கற்புக்குறியீடு
கற்பு என்பதற்கு அருந்ததி ஒரு வரையறையாக அமைகின்றாள். அதனால் கற்புடைய மகளிர்க்கு அவளை உவைமாகக் காட்டுகின்றனர். கண்ணகிக்குத் திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே அவளைக் கண்ட மகளிர் அருந்ததி போன்ற கற்பினள் என்று பாராட்டுகிறார்கள் என்பதை,
“அங்கண் உலகின் அருந்ததி அண்ணாளை
மங்கல நல்லமளி யேற்றினர்” (12)
என்று குறிப்பிடுகிறார்.
அருந்ததி கற்பின் குறியீடாகவே கருதப்படுகிறாள்.
மணிமேகலையின் மாண்பு
புரட்சிக்காப்பியம், புதுமைக்காப்பியம் என்ற தகுதி படைத்தது. மணிமேகலைக் காப்பியத்தில் பரத்தை, மது, சிறை, சாதி ஒழிப்பு குறித்த செய்திகள் சொல்லப்பட்டு சமுதாயச் சீர்திருத்தக் காப்பியமாக திகழ்ந்தாலும் பசியை ஒழித்தலே தலையாய அறமாகிறது. மணிமேகலையின் பேரழகை ஆடவர் கண்டு அகலமுடியாது இவளைத் தவநெறிப்படுத்திய தாயோ கொடியவள் என்பதை,
“அணி அமைதோற்றத்து அருந்தவப்படுத்திய
தாயோகொடியள் தகவிலள்” (13)
என்று அவளது பேரழகைக் கூறி, இத்தகு அழகு படைத்தவள், துறவு பூணுவதற்குரிய பருவமல்லாத இளமைப் பருவத்திலே ஆசை ஒழித்து துறவு மேற்கொண்டதைக் குறிப்பிட்டு கணிகையர்களுடைய பொருளுக்கான முதலீடே ஆசையுடன் இருப்பதும், ஆசைப்பட வைப்பதுமே ஆகும். அவற்றையெல்லாம் கடந்த அறச்செல்வியின் திறம் பாராட்டப்டுவதைக் காணமுடிகிறது.
இராசமாதேவி இன்னா செய்த போதும் இனியவே செய்தாள், அறவுரை வாயிலாக அவளைத் திருந்தி தவறை உணர வைத்தாள். அங்கே மணிமேகலை உயர்த்தப்படுகிறாள்.
முடிவுரை
இரட்டைக் காப்பியங்களில் பல்வேறு பெண் பாத்திரங்கள் பங்கேற்றுள்ளன. மாதரி, கவுந்தியடிகள், தேவந்தி, சேரஅரசி வேண்மாள், சுதமதி, தீவதிலகை, ஆதிரை இன்னும் பல பெண்பாத்திரங்கள் விரிவஞ்சி ஆய்விற்கு எடுத்துக் கொள்ள இயலவில்லை. இக்கட்டுரையில் அதிக அளவில் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள பெண்களை ஆசிரியர்கள் மேன்மைப்படுத்தியதை விளக்கிக் காட்டும் போது, எதிர்காலச் சமுதாயம் பெண்கள் போற்றப்பட வேண்டுமானால் போற்றுதற்குரிய உயரிய செல்பாடுகளை மீவியல் புத்தன்மையோடு செய்ய வேண்டும் என்று உணர வைப்பதோடு, நம் பண்டைய பண்பாட்டுச் சிறப்புடைய பெண்டிர்களின் ஆற்றல் வாய்ந்த சாதனைகளையும் உணர்த்தி நிற்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அடிக்குறிப்புகள்
1. சிலம்பு 1:1
2. தேவநேயன் ஞா.பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும், ப.225
3. பாலசுப்ரமணியன் சி.சங்ககால மகளிர், ப 37
4. சிலம்பு 1: 26-29
5. உ.வே.சா. குறு உரைபதிப்பு முகவுரை, ப-75
6. தொல்.பொருள்.கற்.நூ10, நம்பி அகம் நூ 113
7. சிலம்பு 8:45-49
8. மேலது 13:87-91
9. மீனாட்சி சுந்தரம் கா.சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும், ப 228
10. காசிராஜன் இரா. காப்பியத்தோற்றமும் வளர்ச்சியும், ப. 286
11. சிலம்பு 20 : 79-81
12. மேலது 1 : 63-64
13. மேலது 3: 149-150
துணை நூற்பட்டியல்
1. காசிராஜன். இரா., காப்பியத் தோற்றமும் வளர்ச்சியும், புனித நிலையம்., சென்னை. (1986)
2. தேவநேயன் ஞா., பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும், நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி விரிவு. (1972 மு.பதிப்பு)
3. பாலசுப்ரமணியன் சி., சங்க கால மகளிர், பாரிநிலையம், சென்னை. (1983 மு.ப)
4. மீனாட்சி சுந்தரம் கா., சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும், ஒளிப்பதிப்பகம், சென்னை. (1976 மு.ப)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.