சுவடிப் பாதுகாப்பில் மருந்துகள்
முனைவர் பு. இந்திராகாந்தி
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (த),
தஞ்சாவூர்-7
முன்னுரை
ஒரு இனத்தின் பண்பாட்டை அதன் விழுமியங்களை எடுத்துக் கொண்டாடுவது மொழி. மனித இனம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் கருத்துப் பரிமாற்றத்திற்காகப் பயன்பட்ட மொழியானது தொடக்கத்தில் அவர்கள் குழுவாக வாழத் தொடங்கியக் காலத்தில் உணவு மற்றும் பிறத் தேடலுக்காகப் பிற இடங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முற்பட்டபோது மொழி ஒலியாகவும், கீரல்களாகவும், பிறகான காலத்தில் ஓவியமாகவும் பரிணமித்து மெல்ல அழகிய மொழிவடிவம் ஆனது. உணர்வுகள் வாய்மொழி, வழக்காறுகலாக நெடுங்காலம் மண்ணில் மனிதர்களோடு புழங்கி, வாய்மொழி இலக்கியங்களின் வகைகள் அதிகமாகப் பெருகியதால் அவற்றை வகைப்படுத்தும் இலக்கணங்கள் உருவாகின.
தனக்குத் தெரிந்தவற்றை அழியாமல் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுது எழுத்து வடிவம் தோன்றியது. அவைகள் கோடுகளாக, குறீயீடுகளாக, படங்களாக எழுதி வந்த நிலையில் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை பனையோலையில் எழுதும் முறை ஆசிய நாடுகள் முழுமைக்கும் இருந்திருக்கிறது. இப்படி ஓலையில் எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்பட்டன. எழுதப்பட்ட ஓலைகள் கட்டித்தொகுக்கப்பட்டன அவைகள் பொத்தகம், பொத்தகக் கவளி என்றும் அழைக்கப்பட்டது. பிற்பாடு அவைகள் பல்வேறு படிநிலைக்குப்பின் எழுத்து வடிவமாக
மாறின அப்பொழுது பானை ஓடுகள் ,கல்வெட்டுகள்,செப்பேடுகள் ஆகியவற்றில் எழுத்துகள் கருத்துக்களாக ஆக்கம் பெற்றன.
மனிதர்களுக்கு கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனையோலை, பூர்ஜ மரப்பட்டைகள், மரப்பலகை தோல், மூங்கில், போன்றவைகள் எழுது பொருள்களாகப்
பயன்பட்டன, எகிப்தியர், கிரேக்கர்கள், ரோமர்கள், யூதர்கள் பண்டைக்காலத்தில் பேப்பரைஸ் தாள்களையும், விலங்குகளின் தோல்களையும், எழுதப்படும் பொருள்களாகப் பயன்படுத்தியக் காலத்தில் நமது நாட்டவர் பனை ஓலைகளால் ஆன ஓலைச்சுவடிகளில் நூல்களை எழுதினர்.
அறிவின் அடையாளமான ஓலைச்சுவடிகளைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்ற தன்முனைப்பும் ஏற்பட்டது அச்சூழலில் பல்வேறு பாதுகாப்பு தன்மைகள், தனி மனிதர்களின், அர்ப்பணிப்பு, மடங்களின் பங்களிப்புகள் என அவைகள் விரிந்த நிலையில் சுவடிகளைப் பாதுகாக்கும் தன்மைகளில் மருந்துகள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ஆய்வதாகக் கட்டுரை அமைகிறது.
சுவடியின் அமைப்பும், ஓலை தயாரித்தலும்
ஓலைகளில் எழுத்துச் சுவடு பதியுமாறு ஆணிகளைக் கொண்டு எழுதப்பெற்ற ஏடுகளின் தொகுப்பு சுவடியாகின்றது. தோடு, மடல், ஓலை, ஏடு இதழ் என்னும் பெயர்கள் புறத்துக் காலுடையப் பனை, தெங்கு (தென்னை), கமுகு (பாக்கு) முதலியவற்றின் இலைகளைக் குறிக்கும் மரபுச் சொற்களாகும். இவற்றில் மடல், ஓலை என்பன கடித வடிவில் எழுதப்பட்டவைகளாகும். சுவடி என்றும், எழுதப்பட்ட ஓலைகளின் தொகுப்பு ஓலைச்சுவடி என்றும் அழைக்கப்பட்டு நாளடைவில் ஏடு, ஓலை என்றும் அழைக்கப்பெற்றது. ஏடு என்றும் ஏடுகளின் தொகுப்பு சுவடி என்று அழைக்கப்படுகிறது.
”பாட்டுப்புறம் எழுதிய கட்டமைப்பு சுவடி”
என்கிறது பெருங்கதை.மேலும் ஆங்கிலப் பேரகரதி கையால் எழுதப்பெற்ற படிவம் ‘சுவடி’ எனப்படும் எந்தப் பொருளிலும் எழுதப்பட்டதாக இருக்கலாம் எளிதாகவும் விரைவாகவும் எழுதக்கூடிய எழுது கருவிகளால் எழுதப்பெற்றதேச் சுவடியாகும். கல்லில் வெட்டுவது போன்று கருவிகளைக் கொண்டு செதுக்கப்பெறும் கல்வெட்டு படிவங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதேச் சுவடியாகும் மிகப்பழங்காலத்தில் அல்லது இடைக்காலத்தில் எழுதப்பெற்ற எழுத்துப் படிவங்களைக் குறிப்பதற்கேச் சுவடி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்று சுட்டுவது கவனிக்கத்தக்கது.
கருத்துக்களை உள்ளடக்கி எழுதுவதற்கு ஓலையை மிகுதியாகப் பயன்படுத்தினர். இதற்குக் காரணம் இலை, மரப்பட்டை, களிமண், பலகை போன்றவை விரைவில் அழியக் கூடியவை. மரப்பலகை, மூங்கில், பத்தை போன்றவற்றில் பெரிய நூல்களை எழுதி அவற்றைக் கையாள்வது கடினம். தோல், துணி, உலோகத்தகடு போன்றவை மிகுந்தப்
பொருட் செலவினை உண்டாக்கும். அவற்றில், விரைவாக எழுதவும் முடியாது. கருங்கல் போன்ற பிறப் பொருள்களை பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதும் கடினம். இச்சூழலில் ஓலைச்சுவடிகள்தாம் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு அழியாதவை, மிகுந்தசெலவு இல்லாதது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் அதிகம் கிடைக்கக் கூடியது. மேலும், மிகப்பெரிய நூலாக இருந்தாலும் ஒரு கட்டில் கட்டக்கூடியது. பிற இடங்களுக்கு எடுத்துச் செல்வதும் எளிது. பாதுகாக்க ஏற்றது. இக்காரணத்தினால் ஓலைச்சுவடிகளைத் தமிழர் பயன்படுத்தினர் என்று பூ. சுப்பிரமணியம் தனது சுவடியல் நூலில் குறிப்பிடுகிறார்.
ஓலையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் செய்திகளுக்கு ஏற்பவும், பிறக் காரணங்களுக்காகவும் அதன் பெயர்கள் பல வகைகளாக இருந்தன. ஓலைகள், பட்டோலை, பொன்னோலை, மந்திர ஓலை, வெள்ளோலை, படியோலை என்று இலக்கியங்களிலும், அறையோலை, கையோலை, இறையோலை, கீழோலை, தூதோலை, ஓலை பிடிபாடென்று கல்வெட்டிலும் ஓலை குறித்தப் பதிவுகள் காணப்படுகின்றன.
ஓலை தயாரித்தல்
பனை மரத்தின் இளம் பதமுள்ள ஓலைகளை, அதாவது, அதிக முற்றலும், அதிக இளமையும் இல்லாமல் நடுநிலையில் உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து குழந்தையின் நகம் வெட்டுவது போல், நளினமாக நரம்பு நீக்கி, தேவையான அளவுக்குத் தக்கவாறு நறுக்கிச் சேகரித்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்வர். இதனை ஓலை வாருதல் என்பர்.
பனை ஓலையின் மேற்பரப்பு கடினமானதாக இருப்பதால் அதனைப் பதப்படுத்தாமல் எழுத முடியாது. ஓலைகளை மிருதுவாக்கவும், அவை சேதமடையாமல் இருக்கவும், வெட்டப்பட்ட ஓலைகளை நிழலில் உலர்த்துதல், பனியில் போட்டுப் பதப்படுத்துதல், வெந்நீரில் போட்டு ஒரு சீராக வெதுப்பியெடுத்தல், சேற்றில் புதைத்தல் போன்ற பலமுறைகள் நடைமுறையில் இருந்துள்ளன. இவற்றோடு,
அ) ஓலைகளைத் தண்ணீர் அல்லது பாலில் வேகவைத்தல்
ஆ) நீராவியில் வேகவைத்தல்
இ) ஈரமணலில் புதைத்தல்
ஈ) நல்லெண்ணெய் பூசி ஊற வைத்தல்
உ) ஈரமான வைக்கோல் போரில் வைத்திருத்தல்
என்ற நிலையில் பதப்படுத்தப்பட்ட ஓலைகளைக் காய்ந்த பிறகு, கனமான சங்கு அல்லது கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்த்து அழகுபடுத்துவர். இப்படிச் செய்வதால் ஏடு எழுதுவதற்கு ஏற்ப தகடுபோல் ஆகிவிடும். ஓலைகளின் மேற்பரப்பும் மிருதுவானதுடன் அதில் உள்ள லிக்னின் என்ற பொருள் வெளியாகிவிடும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட ஓலையில் ஒன்று அல்லது இரண்டு துளைகளிடுவர் இதனை ஓலைக்கண் என்பர். ஒரு துளையில் கயிற்றை நுழைப்பர், கயிரு உருவாமலிருக்க ஈர்க்குடன் உள்ள ஓலையில் இரண்டு முக்கோணங்கள் உள்ளதாக கிளி மூக்குபோல் கத்தரித்துக் கட்டியிருப்பர். இதனை, கிளிமூக்கு என்பர். மற்றொரு துளையில் ஒரு குச்சி அல்லது ஆணியைச் செருகியிருப்பர். இதற்கு, சுள்ளாணி என்று பெயர்.
சுவடிகளுக்கு மேலும் கீழும் மரத்தாலான சட்டங்களை வைத்து, கிளிமூக்கு கட்டப்பட்டக் கயிற்றினால் சுவடியை இறுக்கிக் கட்டி வைப்பர். இப்பொழுது, சுவடி எழுதுவதற்கு ஏற்ற வகையில் ஓலை தயாராகிவிடுகிறது.
சுவடிக்கட்டின் அமைப்பு
மரம் மற்றும் தந்தங்களால் சட்டங்கள் அமைப்பது தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அவற்றைக் கொண்டு கட்டிய ஓலையை அழகிய துணியில் சுற்றி வைக்கும் முறையும் இருந்து வந்துள்ளது. சுவடிகளை நூல் கயிறு அல்லது பட்டுக்கயிறு போன்றவற்றால் சுற்றிக் கட்டுவர். இக்கட்டானது ஏடுகளைச் சிதறாமல் பாதுகாத்து நிற்கும். ஒரு துளையில் குச்சியோ அல்லது ஆணியோ நின்று சுவடியை மேலும் பலப்படுத்தும்.
இரு முக்கோணங்கள் இணைந்தாற்போல் வெட்டப்பட்ட நரம்போடு கூடிய, கிளிமூக்கு என்னும் ஓலைத்துண்டு கயிற்றின் நுனியில் கட்டப்பட்டுக் கயிறு கழன்று விழாதபடிப்
பாதுகாக்கும். சில ஏடு எழுதுபவர்கள் அவர்களின் கலைமனதிற்கேற்ப செப்புக்காசு, உலோகத்தகடு போன்றவற்றை கிளிமூக்கிற்குப் பதில் பயன்படுத்துவதும் உண்டு.
எழுதப்படும் பொருள்கள்
தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும் நீர் நிலைக்கு ஏற்பவும் பல்வேறு இடங்களில் காணப்படும் வெவ்வேறு எழுது பொருள்களைப் பயன்படுத்தினர். எழுதப்படும் பொருள்கள் தாவரப் பொருள்களிலிருந்தும், விலங்கினங்களின் உறுப்புகளிலிந்ருதும் பயன்படுத்தியிருக்கின்றனர். தாவரப்பொருள்களான மரப்பலகை, மரப்பட்டை, மூங்கில் தப்பை பனையோலை, இலைகள், பேப்பரைசு, துணிகள், நீர் தாவரதின் உள்தண்டிலிருது செய்யப்பட்ட தட்டுகள், தோல் பார்ச்மெண்ட் எனப்படும் உள் தோல், சங்கு, சிப்பி, ஆமையோடு விலங்குகளின் உறுதியான எலும்புகள். யானை தந்தம், போன்றவைகள் எழுதப்படும் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன.
எழுது கருவிகள்
கல், செங்கல், களிமண், பலகை, உலோகத்தகடுகள் (தங்கம், வெள்ளி, தாமிரம், காரியம், இரும்பு) போன்றவைகளும் எழுதப்படும் பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன. எழுதப்படும் பொருள்களின் தன்மைக்கேற்ப எழுது கருவிகளைப் பயன்படுத்தினர். ஆணி, எழுத்தாணி இவைகள் பலவிதம். அவைகள் குண்டெழுத்தாணி, வெட்டெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, கூரெழுத்தாணி என்பவையாகும். கூரிய கல், தண்டு, பறவை இறகு, பன்றி, முள், விலங்குகளின் கூரிய எலும்புகள், மெல்லிய தூரிகை, யானைப் பித்திகை, முகை, உகிர், பொன்னூசி போன்ற எழுது கருவிகளைப் பயன்படுத்தினர். எழுத்தாணியை எழுத்தூசி எனவும் அழைத்தனர்.
சுவடிப் பாதுகாப்பு முறைகள்
சுவடிகள், இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் அழிவதைத் தடுக்க பல முறைகள் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டன. அப்படியான பாதுகாப்பு அவசியம் ஏன் தேவை என்கிற போது, சுவடியைக் கையாள்வது தொடங்கி அவற்றை வைக்குமிடம் பூஞ்சை மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாத்தல் காலமுறை கண்காணித்தல் போன்றவைகளைக் காரணிகளாகக் கொள்ளலாம்.
சுவடிப் பாதுகாப்பு முறைகள் மரபு வழியாகவும், இன்றையக் காழச்சூழலுக்கு ஏற்ப அறிவியல் முறையிலும் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சுவடிப் பாதுகாப்பில் மருந்துகள் குறிப்பிட்டப் பங்கை வகிக்கின்றன. சுவடியைப் பாதுகாத்தல் என்பது அவசியம் என்பதோடு காலம் தந்த அடையாளங்களுள் அதுவும் ஒன்று, அவற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்த வேண்டியக் கடமை நம் அனைவருக்கும் உண்டு, ஓலையில் எழுதப்பெற்ற பல, பாதுகாக்கப்பட்டு பதிப்பிக்கப் பெற்றதால்தான் இலக்கியத்தின் அழகினை, ஒரு மொழி பேசும் மானுட வாழ்வின் விழுமியங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
மரபு வழி மருந்து கொண்டு பாதுகாக்கும் முறை
மரபு வழியில் இயற்கை கொடுத்த கிருமி நாசினிகளைப் பயன்படுத்திக் காலம்காலமாய்ப் பாதுகாத்து வந்தனர். இம்முறையில் மஞ்சள், வேப்ப எண்ணைய், கோவையிலைச்சாறு, மை, மணப்பொருள் முடிச்சு போன்றவற்றைக் கொண்டு பாதுகாப்பது உண்டு. பூச்சி எதிர்ப்புப் பொருட்கள் பயன்படுத்துதல் மட்டுமின்றி, பூச்சிகளின் பாதிப்பைத் தடுக்க இயற்கையில் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனேகமாக நாப்தலின் உருண்டைகள், நாப்தலின் கட்டிகள், பூச்சி எதிர்ப்புப் பொருள்களாகப் பயன்படுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிகொல்லிகளான டிடிடி, பிஎச்சி, மெதில் புரோமைடு போன்றவைகள் நூலகங்களில் பயன்படுத்துவதும் உண்டு. இந்த முறையில் துணிகளைக் கொண்டு சுவடிகளில் உள்ள படிவுகளைச் சுத்தம் செய்தபின் கரைகளை அகற்றலாம் மற்றும் பூச்சிகளின் எச்சங்களை எத்தில் ஆல்கஹாலை சுத்தமான நீருடன் கலந்து சுத்தம் செய்யும் முறை நடைமுறையில் இருந்துள்ளது. வேதிமக் கரைசலான அசிட்டோன் அல்லது கார்பன் டெட்ரா குளோரைடைப் பயனபடுத்திச் சுத்தம் செய்யும் முறையும் உள்ளது. இவற்றோடு ஓலையில் கிளிசரின் மற்றும் சுத்தமான நீர் ஆகியவற்றை 1:10 என்ற தன்மையில் கிளிசரின் மற்றும் எதில் ஆல்கஹால் 1:1 கலந்து கொண்டும் சுத்தம் செய்யப்படுகிறது.
மஞ்சள், வேப்ப எண்ணெய்ப் பூச்சுமுறை
மஞ்சள் பூச்சு முறையில், மஞ்சளை அரைத்து நன்றாகக் குழம்பாக்கிக் கொண்டு சுவடியின் அடிப்புறமும் மேற்புறமும் தடவ வேண்டும். அவ்வாறு தடவுகையில், சுவடிகளை அழிக்கக்கூடிய கரையான், அந்துப்பூச்சி போன்றவைகள் அழிக்கப்பட்டு சுவடிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மஞ்சளானது பூச்சிகளைக் கொல்லும் என்பதை தமிழர் நெடுங்காலத்திற்கு முன்பே அறிந்திருந்தனர். வேப்ப எண்ணெய் பூச்சு முறையில், தூரிகை உதவியால் சுவடியின் மேற்புறமும் அடிப்புறமும் பூசும் போது சுவடிக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகள் அழிக்கப்பட்டுச் சுவடி நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படுகிறது.
மை கொண்டு பாதுகாத்தல்
கோவையிலைச்சாறு, ஊமத்தையிலைச்சாறு இவற்றுடன் அருகம்புல், மாவிலை இவற்றை எரித்த கரி, அடுப்புக்கரி, வசம்புக்கரி, கொட்டாங்கச்சிக்கரி, இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அவற்றுடன் விளக்கெண்ணையில் புகையைச் சேர்த்து, மை தயாரிக்க வேண்டும். இம்மையைச் சுவடியின் மேற்புறமும் அடிப்புறமும் தடவி சுவடியைப் பாதுகாக்கலாம். இப்படி பாதுகாப்பு செய்யப்பட்ட ஏட்டில்தான் எழுத்தாணி கொண்டு எழுதுவர்.
மணப் பொருள் முடிச்சு
ஓலையை அழிக்கும் தன்மை கொண்ட பூச்சிகளுக்கு எதிரான எதிர்ப்பு மணம் கொண்ட மூலிகைப் பொருட்களின் பொடியைச் சிறுசிறு முடிச்சுகளாகக் கட்டி சுவடிகள் வைக்கும் அலமாரியில் வைக்கப்படும் முறை உள்ளது. இதற்கு மணப்பொருள் முடிச்சு என்று பெயர். இம்மணப்பொருள் முடிச்சில் வசம்பு ஒரு பங்கு, கருஞ்சீரகம் ஒருபங்கு, இலவங்கப் பட்டை ஒரு பங்கு, மிளகு நாளில் ஒரு பங்கு, கிராம்பு நாளில் ஒரு பங்கு ஆகிய பொருட்களை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, 12 X12 என்கின்ற அளவில் வெள்ளைத் துணியில் 1 1/ 2 தேக்கரண்டிப் பொடியுடன் ஐந்து கிராம் அளவுள்ள பூங்கற்பூரம் வைத்து முடிச்சுகளாகக் கட்டி, இவற்றுடன் பூச்சிகள் விரும்பாத மணம் கொண்ட பொருட்களான வேப்ப இலை, வேப்பம் பூ, வேப்பம் பருப்பு, நொச்சி இலை, புங்கன்இலை, யூகாலிப்டஸ் மர இலை, புகையிலை சின்கோனாயிலை, கிராம்புத் தைலம், கற்பூரத் தைலம், சந்தன தைலம், வசம்பு, கற்பூரம், வெட்டிவேர், மிளகு, கிராம்பு, படிகாரம், மஞ்சள் போன்ற பூச்சி எதிர்ப்புப் பொருட்களும் சுவடிகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பூச்சு எண்ணெய்கள்
சுவடியில் உள்ள நீர்த்தன்மை, காலத்தின் சூழலில் தட்பவெப்பநிலை மாறுபாட்டால் ஆவியாவதால் சுவடிகள் சேதமடைகின்றன. இதனைத் தடுக்க விரைவில் ஆவியாகக் கூடிய தாவரத் தைலங்கள் மற்றும் எண்ணெய்களும் பூசப்படுகின்றன. தாவர எண்ணெய்களான கற்பூரத்தைலம், சிற்றனெல்லா தைலம், ஆமணக்கெண்ணைய், லெமன்கிராஸ் தைலம், விளக்கெண்ணைய், கடுகு எண்ணைய், நல்லெண்ணை, வேப்ப எண்ணைய், யூகாலிப்ட்ஸ் தைலம், தாளகிரந்த தைலம், ஊமத்தையிலைச்சாறு போன்றவைகள் பூசி, சுவடி பாதுகாக்கப்படுகிறது.
வேதிமப்பொருட்கள்
இம்முறையில் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க நுண்கிருமிப் பேழையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வைத்து, அதன் ஆவியின் மூலம் பூச்சிகள் அழிக்கப்படுகின்றன. பாலி எதிலின் குளுகால் - 200, தைமால் பேரா-டை, குளோரோ பென்சின், சிலிக்கா ஜெல் போன்ற வேதிமப் பொருட்கள் சுவடியைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பாலி எதிலின் குளுகால் -200
தைலம் அல்லது எண்ணைகள் பூசும் பொழுது சிலசமயங்களில் பாதிப்பு ஏற்படும். அத்தருணங்களில். பாலி எதிலின் குளுகால்-200. லெமன்கிராஸ் தைலம் ஆகியவற்றை 1:4 என்ற அளவில் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இப்படி செய்கையில், சிதலமடைந்த சுவடிகள் விரைந்து உறுதியடைந்து வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறுகிறது. தைமால் சுவடியில் உள்ள பூஞ்சைக்,காளானை அழிக்க தைமால் நுண்கிருமி பயன்படுதப்படுகிறது.
பாரா –டை குளோரோ பென்சின்
சுவடிகளில் பூச்சிகள் மற்றும் பூஞ்சைக்காளான் பாதிப்பு இருக்குமானால் அதைக் கட்டுப்படுத்த பாராடை குளோரோ பென்சின் என்னும் வேதிப்பொருளை நுண்கிருமி
நீக்கப் பேழையின் மேல்தட்டில் வைத்து மின் விளக்கால் வெப்பப்படுத்தி ஆவியாக்கி பூச்சிகள் பூஞ்சைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
சிலிக்கா ஜெல்
சுவடி வைக்கப்படும் அறையில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும் பொழுது, அந்த இடத்தில் சிலிக்காஜெல் வைத்தால் அங்கு நிலவும் கூடுதலான ஈரத்தை சிலிக்காஜெல் உள்வாங்கி, தனது நிறத்தை நீலமாக மாற்றிக் கொள்ளும். ஓலை இருக்கும் அறையை உரிய ஈரப்பத்தில் பாதுகாக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.
சுவடியாக ஆக்கம் பெற, ஓலை பல்வேறு படிகளைத் தாண்டி சுவடியாகிறது. அத்தகையச் சுவடிகள் எழுத்துக்களைத் தாங்கி ஒரு மொழியின் வளத்தினை எடுத்தியம்புகின்றன. ஒரு மொழியின் வளமையை அது உணர்த்தும் விழுமியங்களை எடுத்துரைக்கும் சுவடிகளைப் பாதுகாக்க, மரபுவழி மருந்துகள் பயன்படுவதுடன், நவீன இரசாயண மருந்துகளும் பயன் படுத்தப்படும் நிலையில் மரபு சார்ந்த மருந்து பொருள்கள் மட்டுமே சூழலுக்கும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல்
இருக்கும். ஆதலால் கொஞ்சம் மரபு சார்ந்த வழிமுறைகள் நடைமுறைப்படுத்துவது கடினம் என்றாலும், அம்முறையே சிறந்த முறையாகக் கொள்ளலாம்.
பார்வைநூல்கள்
1. சுப்பிரமணியம். பூ., சுவடியல், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
2. மோ.கோவைமணி, ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், தஞ்சாவூர்.
3. த.கோ.பரமசிவம், சுவடிப் பதிப்பு நெறிமுறைகள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
4. ஆங்கிலப்பேரகராதி, செண்பகா பதிப்பகம், சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.