புதுக்கவிதைகளில் தொன்மம்
முனைவர் த. ராதிகா லட்சுமி
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி,
பொள்ளாச்சி.
தொன்மங்கள் என்பது தனி மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மனிதர்களால் சமூகத்தின் பிம்பத்தைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. இத்தகைய தொன்மங்கள் மனித மனத்தின் ஆழத்தில் பதிந்துள்ளன. நம் சமூகத்தில் இராமாயணமும், மகாபாரதமும், புராணங்களும் வெறும் கதைக் களஞ்சியமல்ல. இவை நம் மக்களின் மனதில் வேரூன்றி உணர்வுகளோடு ஒன்றிக் கிடக்கின்றன. கவிஞர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வாழ்கின்ற மக்களின் சமூக அமைப்பு, மானிடவியல், உளவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு பல மனிதர்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், கவிதைகளைப் படைக்க பல வகையான உத்திகளைக் கையாளுகின்றனர். இவ்வகையில் கவிஞர்கள் தொன்ம உத்தியைக் கையாண்டு மீட்டுருவாக்கத்தின் வாயிலாக வாசகர்களின் சிந்தனையை விழிப்படையச் செய்கின்றனர். இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டு புதுக்கவிதைகளில் தொன்மங்கள் செலுத்தும் ஆளுமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
தொன்மம்
தொன்மம் என்பது பழமையைக் குறிப்பதாகும். இதனை ஆங்கிலத்தில் “மித்” என்பர். மித்தோஸ் என்ற கிரேக்கச் சொல்லின் திரிபாகக் குறிப்பிடுவர். மித் என்பதற்கு உண்மையான அல்லது கற்பனையான கதை என்றும் உட்கருவை அடிப்படையாகக் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம்.
அரிஸ்டாட்டில் கவிதையியல் நூலில் தொன்மத்தைப் புராணிகம் என்ற பொருளில் கையாள்கிறார்.
“தொன்மை தானே சொல்லுங்காலை
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே”
(தொல்காப்பியம் - செய்யுளியல், நூ.எ.2290)
என்ற தொல்காப்பியர் கூற்றின் வாயிலாகத் தொன்மை என்பது புராணத்தைக் குறிக்கிறது.
மனிதன் தொன்மத்தைத் தெய்வத்தன்மை, சிறப்புத் தன்மை, முக்கியத்துவம் பெற்றதாகக் கருதினான். முறையான சமயக் கொள்கைகள் தோன்றுவதற்கு முன்பே புராண, இதிகாசக் கதைகள் வாய்மொழியாக வளர்ந்து வந்தன. மனித மனதில் பதிந்த இக்கதைகள் இலக்கியங்களில் தொன்று தொட்டு தொடர்வதுடன் தற்காலக் கவிதைக்கு நவீன உத்தியாகவும் திகழ்கிறது.
மனிதன் தனிப்பட்டு வாழ்பவன் அல்லன். குடும்பமாக, கூட்டமாக இணைந்து குழுக்களாக வாழ முற்பட்டதன் விளைவாக, மனித சமூகத்திடையே பல்வேறு வாய்மொழிக் கதைகளும் பல்கிப் பெருகலாயின. தொன்மத்தை மூன்று வகையான பொருட்களில் பிரிக்கலாம் என்று வை. சச்சிதானந்தம் குறிப்பிடுகிறார்.
1. தொடக்கநிலையினையும், ஆசிரியர் யார் என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாத மிகப் பழங்காலத்தில் பாரம்பரியமான கதைத் தொடர்களை இச்சொல் உள்ளடக்கியது.
2. பர உலகத்திலுள்ள உயிர்களின் எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் உட்பட்டு இந்த உலகம் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதை விவரிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
3. சமூக பழக்கவழக்கங்கள் மனிதர்தம் வாழ்வினை அமைப்பதற்குத் தேவையான நியதிகளின் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாட்டினையும் இச்சொல் உறுதிப்படுத்தும்”
(வை. சச்சிதானந்தம் - மேலை இலக்கிய சொல்லகராதி, ப.125)
எனினும் இயல்புலகில் நாட்டுப்புறக் கதைகள், மாபெரும் வீரர்கள், முன்னோர்களின் சாதனைகள், மனிதத் தன்மையும் கடந்த சக்தி வாய்ந்த மாந்தர்கள், போர்கள், இயற்கையின் தோற்றம், நீதி மற்றும் வினோதமான புனைவுக் கதைகள், மாயக் கதைகள், இறை நெறிகள், இதிகாசங்களான இராமாயண, மகாபாரதக் கதைகள், கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் உட்பட பல்வேறு கதைகள் தொன்மத்திற்கு வித்தாக அமைகின்றன. இக்கதைகள் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. இத்தகையது எனக் குறிப்பிட்டு வரையறுக்கவோ, வகைப்படுத்தவோ இயலாதெனினும் இத்தொன்மக்கதைகள், மக்களின் வாழ்க்கையிலும், படைப்பிலக்கியத் தளத்திலும் இயல்பாக பங்கு கொள்கின்றன எனில் அது மிகையாகாது. இவை பழங்கதைகளாக இருப்பினும், தற்காலச்சூழலுக்கு மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு மாற்றமடைந்து மீட்டுருவாக்கத்தில் மிளிர்கின்றன. கவிஞர்கள் புதுக்கவிதைகளில் தொன்மங்களை உத்தியாகக் கொண்டு மனித வாழ்வின் பண்பாட்டு அடையாளங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சீதை
இராமாயணக் கதை மாந்தரான சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டு, அசோகவனத்தில் துன்புற்ற நிலையை கவிஞர் மு.மேத்தா மீட்டுருவாக்கமாக புனைகிறார்.
“நவீன இராவணன்மார்களோ
சீதைகளைப் பக்குவமாகக்
கடத்திச் செல்கிறார்கள்…
திருமணம் செய்து கொண்டு” (யாழ் சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப.101)
என்பதில் சமூகக் கட்டமைப்பான திருமணம் கூட, இன்றையப் பெண்களுக்கு அசோக வனச் சோகமாகவே மாறுவதைப் புலப்படுத்துகிறது. தற்காலத்தில் பெண்கள் உண்மை நிலையை ஆராயாது மாயவுலகில் மோகத்தில் ஆழ்ந்திருப்பதைக் கவிஞர் அப்துல் ரகுமான்;
“மாயமான்களின் மோகத்தில்
இராவணர்களிடம்
சோரம் போகும் சீதைகள்” (அப்துல் ரகுமான், பால்வீதி, ப.51)
அன்று மான் மீது கொண்ட ஆசையால் சீதை இராவணணால் கடத்தப்பட்டாள். இன்று பகட்டான ஆசையால் பெண்கள் இராவணர்களிடம் தங்களை இழக்கும் நிலையை இக்கவிதை சுட்டுகிறது.
“இந்த
வரதட்சணை வில்லை
வளைப்பது யார்...?
இனி நாமே ஒடிப்பதே நியாயம்
எங்கே சீதைகளே கொஞ்சம்
சேருங்களேன்?” (வைரமுத்து கவிதைகள், ப.245)
என்ற வைரமுத்துவின் கவிதை, சமூகத்தின் அவலமான வரதட்சணையைச் சாடுகிறது.
இன்றைய மணமகனான ராமர்களுக்கு எதிர்க்க இரத்தமில்லை. சனகன் எனும் தந்தையோ இயலாமல் சாய்வு நாற்காலியில் இருக்க, யாரையும் எதிர்பார்க்காமல் சீதைகளே! நமக்கான நியாயத்தை நாம் ஒருங்கிணைந்து பெறுவோம் என விளித்துப் பெண்ணியக் கருத்தை முன் வைக்கிறது.
இராமன்
கவிஞர் அப்துல் ரகுமான் இராமனையும், சீதையையும் மையப்படுத்தி நீர்ப்பரீட்சை எனும் இத்தொன்மக் கவிதையை இயற்றியுள்ளார்.
“நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
ஒரு வண்ணானின் நாக்கு
அழுக்காக்கியது
மானம் காக்கத்
தன்விரத ஆடையைக்
களைத்தெறிந்தான் இராமன்” (அப்துல் ரகுமான், பால்வீதி, ப.49)
என்னும் இக்கவிதை வண்ணானின் பேச்சால், இராமன் சீதையைச் சந்தேகப்பட்டதைக் குறிக்கிறது. இராமன் மீதுள்ள அதிகபட்சமான நம்பிக்கையையும், இராமனின் ஆழ்மன அழுக்கினையும் குறியீடாக வெளிப்படுத்துகிறது. இராமன் இலட்சியக் கணவனாய் இருப்பினும், அன்றிருந்த சமூக அறத்திற்கும், அரசியல் கட்டுப்பாட்டிற்கும் பயந்து, பணிந்து மனைவியை அக்கினிப்பிரவேசம் செய்ய அனுப்பினான் என்று காரணம் கற்பிக்கப்படினும் பெண்ணியநோக்கில் அணுகும் போது ஏகபத்தினி விரதனான இராமனே மனைவிக்கு உறுதுணையாக இல்லாமல் ஊரின் சொல்லுக்கு முக்கியத்துவம் அளித்து, சுயநலத்துடன் செயல்பட்டது சாடுவதற்குரியதே. சீதை தரப்புச் சொற்களைக் கேட்பதில் இராமன் ஆர்வங்காட்டாமல் செயல்பட்டது உறுதியாக சீதையின் மனதைப் பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதிகாசம் தோற்றத்திற்கான காரணங்களாக மண்ணாசையையும், பெண்ணாசையையும் குறிப்பிடுவர். இக்கருத்தை வலியுறுத்தும் நோக்கில் கவிஞர் நகுலன்
“அன்றுமுதல் இன்றுவரை
இராம - இராவண யுத்தம்
சீதை நிமித்தம்” (யாழ் சு.சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள்;, ப.103)
என்று சமுதாயத்தில் நிலவும் பூசலுக்குக் காரணத்தை வரையறுக்கிறார்.
மக்களாட்சியில் மக்களுக்குப் பயன்படாத அரசியல்வாதிகள் இருப்பதற்குக் காரணத்தைக் கவிஞர் மு.மேத்தா கும்பகர்ண - இலக்குவப் பண்புகளைக் குறியீடாகக் கொண்டு விளக்குகிறார்.
“இந்தியக் கும்பகர்ணர்கள்
எப்போது
இலக்குவச் சீற்றத்துடன்
எழுந்து நிற்பார்களோ
அப்போது தான்
பதவி நாற்காலிகள்
நமக்குப் பயன்படும்” (மு.மேத்தா, முகத்துக்கு முகம், ப.54)
என்பதில் தவறைத் தட்டிக் கேட்கும், தலைமைப் பதவியை ஏற்கத் துணியாத இன்றைய இளைஞர்களின் மனப்போக்கையும், உறங்கும் மனப்பான்மையையும் இவர்களிடம் இல்லாத எழுச்சியையும் சாடுவதைக் காண முடிகிறது.
அகலிகை
தொன்மக் கதைகளில் பெண்ணின் கற்பு குறித்த கருத்தாக்கத்தை வலியுறுத்தும் அகலிகை கதை குறிப்பிடத்தக்கது. இராமாயண கால அகலிகை உடலால், மனதால் களங்கப்பட்டு அதற்குரிய சாபம் மற்றும் சாப - விமோசனம் என சித்தரிக்கப்பட்டிருப்பதில் அக்காலப் பெண்ணின் நிலை புலனாகின்றது. தமிழ் நவீன இலக்கியத்தில் பெண்ணின் இடத்தை மறுவரையறை செய்யும் முனைப்போடு கவிஞர் வைரமுத்து,
“ஏடி அகலிகை
எப்போதடி பெண்ணாவாய்?
கானகத்தில்
அன்று
கதைக்கல்லாய்க்
கிடந்த நீ
சமூக சந்நிதியில்
இன்று
சதைக்கல்லாய்க் கிடக்கிறாய்” (வைரமுத்து கவிதைகள், ப.175)
என்று சமூகத்தில் பெண், ஆணின் உடைமைப் பொருளாகக் கருதப்படும் பரிதாப நிலையைச் சுட்டுகிறது. இரவில் பெண்ணாகவும், பகலில் ஆலை, அலுவலகம், கழனி, சாலை உட்பட சமூகத் தளங்களில் கல்லாகச் சாபத்துடன் வாழும் பெண்களைக் குறித்து கவிஞர் வைரமுத்து பாடுகிறார். மேலும், அகலிகை குறியீட்டின் வாயிலாக சுயத்தை உணரத் தொடங்கு பெண்ணே! என்று விழிப்புணர்ச்சியைத் தூண்டுகிறது.
சகுந்தலை
விசுவாமித்திரரின் மகள் சகுந்தலை. காதலன் துஷ்யந்தனின் நினைவால் நிகழ்காலத்தை மறந்த சகுந்தலை, துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகிச் சாபம் பெற்றாள். இதன் விளைவாக, துஷ்யந்தன் அளித்த மோதிரத்தை இழந்து சகுந்தலை பட்ட துன்பங்கள் மூலப்படிவமாக மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கதையைக் கவிஞர் சிற்பி, ‘ஓ சகுந்தலா’ என்ற தலைப்பில் இக்காலப் பெண்களோடு ஒப்பிட்டுக் கவிதையாக இயற்றியுள்ளார்.
“வசந்த உற்சவத்துக்கு
முதல் தாம்பூலம் வாங்கி
இலையுதிர்காலத்தில் வாய்
கொப்புளித்து உமிழும்
விசுவ எத்தர்களும்
துரோக துஷ்யந்தர்களும்
இன்னும் எங்களில் இருக்கின்றார்கள்
ஆனால் எமது சகுந்தலைகள்
இப்போது தொலைப்பது
மோதிரங்கள் அல்ல
பொருந்தாத காதலரை” (சிற்பி, சர்ப்பயாகம், ப.36)
பெற்றோரால் கைவிடப்பட்டு, காதலனால் புறக்கணிக்கப்பட்ட சகுந்தலை மோதிரத்தைத் தொலைத்தாள். எத்தர்களும், துரோகிகளும் உள்ள தற்கால உலகில் இன்றைய சகுந்தலைகள் மோதிரத்தைத் தொலைக்காமல் தெளிவாக தனக்குப் பொருந்தாத காதலரைத் தொலைத்து விடும் புதுமைப் பெண்களாய் இருப்பதைச் சுட்டுகிறார்.
“நானும்
சகுந்தலை தான்
கிடைத்த மோதிரத்தைத்
தொலைத்தவள் அல்ல
மோதிரமே கிடைக்காதவள்” (மு.மேத்தா, ஊர்வலம், ப.56)
என்ற மேத்தாவின் ‘உன் பழைய கடிதங்கள்’ எனும் கவிதை அடையாளம் கிட்டாத காதலியின் நிலையைக் குறிக்கிறது. சகுந்தலையின் கதையைப் புதுநோக்கில் இக்காலப் பெண்ணின் தெளிவோடும், கிடைத்த, கிடைக்காத என்ற முரண்பட்ட நிலையில் அங்கீகாரமற்ற காதலியின் அவலத்தையும் உணர்த்துவதாக இங்கு தொன்மம் கையாளப்பட்டுள்ளது.
தமயந்தி
கவிஞர் அப்துல் ரகுமான் தொன்ம உத்தியை சமகால அவலங்களின் திரிபுகளாக ‘வாக்குமூலம்’ என்ற தலைப்பில் கையாண்டுள்ள விதம் நேர்த்தியானது.
“புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத்தமயந்தி” (அப்துல் ரகுமான், பால்வீதி, ப.72)
தமயந்தி நளனை மணக்க விரும்பியதை அறிந்த தேவர்கள், தமயந்தியை அடையக் கருதி நளன் உருவத்தில் சுயம்வர மண்டபத்தில் கூடினர். தமயந்தி கண்ணிமைக்கும் தன்மையைக் கொண்டு உண்மையான நளனை அறிந்து மாலையை அணிவித்ததை மகாபாரதம் எடுத்துரைக்கிறது. இதைக் கவிஞர், தற்கால தேர்தல் நடைமுறையோடு ஒப்பிட்டு எள்ளல்படுத்துகிறார். புறத்திணைச் சுயம்வர மண்டபம் என்பது அரசியல் களமாக, குருட்டுத் தமயந்தியாக வாக்காளர்களும், போலி நளன்களாக வேட்பாளர்களும் இருப்பதைக் குறியீடாகக் கொண்டு அங்கதப்படுத்தும் விதத்தை அறியமுடிகிறது.
பாஞ்சாலி
கலியுக இதிகாசம் என்னும் கவிதையில் கவிஞர் அப்துல் ரகுமான் மகாபாரதப் பாத்திரங்களை முரணோடு இணைத்து இன்றைய சமுதாய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
“எண்ணிக்கையே தர்மமாகிய
குருஷேத்திரத்தில்
வெற்றிகளெல்லாம்
கௌரவர்களுக்கே போய்ச் சேருகின்றன…
அவர்கள் விருந்து மண்டபத்தில்
காபரே ஆடுகிறாள் பாஞ்சாலி” (அப்துல் ரகுமான், பால்வீதி, ப.51)
மகாபாரதத்தில் தர்மத்திற்கான வெற்றி பாண்டவர்களிடம் சேர, கலியுகத்தில் அது கௌரவர்களைச் சென்றடைந்த சமூகச் சீர்கேட்டைக் குறிப்பிடுகிறார். பாஞ்சாலி சபையில் துகிலுரியப்பட்டு அவமானமடைய இன்றைய பாஞ்சாலியோ காபரே ஆடுவதாக முரண் உத்தியைப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர்.
சகுனியும், கண்ணனும்
இன்றைய அரசியல் தலைவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது அன்றாடம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். மக்களின் நலத்தைக் கருதாது தங்கள் சுயநலத்தையே பிரதானமாகக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளின் கட்சித்தாவல்களை ஈரோடு தமிழன்பன் தொன்மக் குறியீடாகக் கையாள்கிறார்.
“தாயங்களில் சகுனி
வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள்
வளர்க்க வளர்க்க…
மாயக் கண்ணன்
கட்சி மாறுகிறான்” (ஈரோடு தமிழன்பன் கவிதைகள், ப.76)
மாயங்கள் புரியும் கண்ணன் தர்மத்தை நிலை நாட்டாமல் கட்சி மாறுவதை அரசியல்வாதியோடு ஒப்பிட்டு நோக்கி, சமுதாயச் சீர்கேட்டைப் புலப்படுத்துகிறார்.
ஜனமே ஜயன்
ஜனமே ஜயன், தன் தந்தை இறப்பிற்குக் காரணமான சர்ப்பத்தை அழிப்பதற்காக சர்ப்ப யாகத்தை நிகழ்த்தினான். இத்தொன்ம உத்தியைக் கவிஞர் சிற்பி இன்றைய அரசியல் களத்தோடு ஒப்பிட்டு, சர்ப்பயாகம் என்ற கவிதையைப் படைத்திருக்கிறார். பரமபதப் படத்தினைத் தேசமாகவும். பாம்புகளை அரசியல்வாதியாகவும், தாயம் உருட்டி விளையாடுபவர்களை மக்களாகவும் உருவகப்படுத்தும் இக்கவிதை அரசியல் ஏற்றத்தாழ்வுகளைப் பறை சாற்றுகிறது.
“தலை மேல் பூமியை
வைத்தால் சுமக்கும்
ஆதி(க்க) சேடர்கள்…
அதனால்
நாகங்கள் அழிக்கும்
யாகங்கள் தொடங்கினோம்
கொடிய சர்ப்பயாகம்! …
இந்த எரிதழற் சாம்பலில்
ஒரு
பரமபதத்தை
எங்கள்
சிரம பதத்தால்
சிருஷ்டித்துக் கொடுப்போம்
ஏனெனில் இது
‘ஜனமே ஜய’
யுகம்” (சிற்பி, சர்ப்பயாகம், ப.47)
எங்கோ இருக்கும் ஏணிகளைப் பிடித்து மக்கள் முன்னேற முயன்றாலும் அரசியல்வாதியான பாம்புகளின் விச நாக்கால் தீண்டப்பட்டு மீண்டும் ஆரம்பப்புள்ளிக்கே வந்து சேர்கின்றனர். எனவே பாம்புகளை அழித்த சர்ப்ப யாகத்தை ஒத்து அரசியல்வாதிகளை அழிக்க ஒரு புதிய யாகத்தைத் தொடங்குவோம். புதிய பரமபதம் எனும் நாட்டினைச் சமைப்போம். ஏனெனில், இது மக்களின் யுகம் என கவிஞர் இயற்றியதில் எளிய மனிதனின் மனக்குமுறல் வெளிப்படுகிறது.
இதிகாசப் பெண்கள்
பொதுவாக கவிஞர்கள் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் பறை சாற்றுவதற்கு இதிகாசப் பெண்களின் கதைகளைத் தொன்மமாக கையாண்டிருக்கின்றனர். செல்வகுமாரியின் கவிதையில் குந்தி, சீதை போன்ற பெண்களின் நிலையை எடுத்துக் காட்டுகிறார்.
“இலக்கியப் பெண்கள் மட்டும்
உயிர்பெற்று வாழ்ந்திருந்தால்
காவியமும்,காப்பியமும்
இலக்கியமும், இதிகாசமும்
கதைமாறி போயிருக்கும்…
குந்தியவள் நினைத்திருந்தால்
கர்ணனையே கலைத்திருப்பாள்
சீதையவள் கொதித்தெழுந்தால்
இராமனையே எரித்திருப்பாள்” (ஜெ.செல்வகுமாரி, பெண்ணியம் பேசுகிறாள், ப.34 )
எனும் கவிதையில் காலம் காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் பெண்ணின் குரல் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது.
முடிவுரை
தொன்மங்கள் சமூகத்தின் உயிர்ப் பொருளாகவும், எண்ணத்தை வெளிப்படுத்துகின்ற கருவியாகவும் விளங்குகின்றன. மக்கள் இராமன், சீதை, அகலிகை, கண்ணன், சகுனி, சகுந்தலை, பாஞ்சாலி, பாண்டவர்கள், கௌரவர்கள், தமயந்தி, நளன், கர்ணன் ஆகியோரின் குணநலன்களை மூலப்படிவமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் அந்தந்தக் காலத்தில் தோன்றும் தொன்மங்கள் அந்தக்காலச் சமுதாய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுவனவாக அமைகின்றன. தொன்மம் என்பது இலக்கிய உத்தியாக மட்டும் செயல்படாமல், மனித வாழ்வில் இயைந்து நம் பண்பாட்டின் அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்பவையாகத் திகழ்கின்றன.
இதிகாச நிகழ்வுகள், மாந்தர்களைத் தொன்மக் குறியீடுகளாகக் கையாள்வதன் மூலம் கருத்துகள் மிக எளிதாக வாசகனை அடைகின்றன. சமூக மாற்றத்தை விரும்பும் படைப்பாளர்கள் கதைகளை மாற்றாமல் கதை மாந்தர்களின் கூற்றுகளை மாற்றியமைத்து வாசகர்களை விழிப்படையச் செய்கின்றனர். பெண்ணுரிமை குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு இரு பாலினத்தவரிடம் மற்றும் சமூகக் கட்டமைப்பிலும் மாற்றத்தை விளைவிக்க படைப்பாளர்கள் விரும்புகின்றனர். மேலும், நம் அரசியலமைப்பு, அரசியல்வாதிகளின் போக்கு, அதை மாற்ற வேண்டிய மக்களின் கடமையையும் எடுத்துரைக்கும் வகையில் சமூக அவலங்களைப் பறை சாற்றுகின்றனர். படைப்பாளர்கள் தொன்மங்களை உருவகம், குறியீடு, படிமம், முரண் போன்ற பல்வேறு உத்திகளாக தமக்குரிய நடையில், தம் ஆளுமையை வெளிப்படுத்துவதை அறிய முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. அப்துல் ரகுமான், பால்வீதி, கவிக்கோ பதிப்பகம், சென்னை, ஆறாம் பதிப்பு, 1996.
2. சச்சிதானந்தம்.வை, மேலை இலக்கிய சொல்லகராதி, மேக்மில்லன் இந்தியா லிமிடெட், சென்னை.
3. சந்திரா யாழ்.சு., தொன்மவியல் கட்டுரைகள், அறிவு பதிப்பகம், சென்னை, முதலாம் பதிப்பு, 2009.
4. சிற்பி பாலசுப்பிரமணியம், சர்ப்பயாகம், அன்னம் வெளியீடு, சிவகங்கை, மூன்றாம் பதிப்பு, 1996.
5. செல்வகுமாரி. ஜெ, பெண்ணியம் பேசுகிறாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதலாம் பதிப்பு, 2012.
6.மேத்தா.மு, ஊர்வலம், திருமகள் நிலையம், 16ஆம் பதிப்பு, 2009.
7. மேத்தா.மு, முகத்துக்கு முகம், திருமகள் நிலையம், 8ஆம் பதிப்பு, 2003.
8. வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், சூர்யா லிட்ரேச்சர் பி லிட், சென்னை , 13 ஆம் பதிப்பு, 2011.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.