தமிழ் ஆண்டும் தமிழ் கணக்கும்
ஆல்பர்ட் பெர்னாண்டோ
ஏப்ரல் மாதத்திற்கு சில சிறப்புகள் இருக்கின்றன. ஏபரல் மாத காலந்தேர், ஆங்கிலத்தில் காலண்டர் என்று சொல்கிறோமே அதன் தமிழ் வடிவம்தான் காலந்தேர்! எவ்வளவு அருமையான தமிழ்ச் சொல்!(காலம்+தேர்+காலந்தேர்( Chariot of Time) காலந்தேர் அறிவிக்கும் சிறப்பு தினங்கள் இந்த மாதத்தை ஒரு பொன்மாதம் எனப் பட்டியலிடுகிறது.
ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு நம் தாய்மொழியாம் தமிழ் வழி மலரும் விய வருடப் பிறப்பு! மற்றொன்று ஏப்ரல் 21 பாரதிதாசனின் நினைவு தினம்! இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையன என்பது தமிழர்கள் அறிந்த பேருண்மை.. இதிலும் இன்னொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஏப்ரல் 29 பாரதிதாசனின் பிறந்த நாளும் முகிழ்க்கிறது!சட்ட மேதை முனைவர். அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளும் கூட!
ஏப்ரல் - 7 ,உலக சுகாதாரதினம், கிறித்தவர்களின் புனித வெள்ளி ஏப்ரல் 14..! உலக புவி தினம் ஏப்ரல் 22...! குழந்தைத் தொழிலாளர் தினம் ஏப்ரல் - 30ல்! இப்படிப் பல சிறப்புக்களுடன் சித்திரைச் செவ்வானம் மலர்கிறது.
பார்த்திப வருடம் முடிவுற்று விய ஆண்டு துவங்குகிறது. சித்ரபானு துவங்குவதற்கு அடுத்த நாள் அறிவன். அந்த வாரத்தில் ஞாயிறுக்கு முதல் நாள் காரியன்று விடுமுறை நாளாகும். சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, துளி, சிலை என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இப்படித்தான் தமிழ் பத்தி பேசினாலே நம்மில் பலருக்கு புரிய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. யாரையும் குறை சொல்லமுடியாது. தமிழ் பின் புலம் அப்படி. யார் என்ன செய்ய முடியும்? தொடக்கப் பள்ளி துவங்கி கல்லூரி வரை மாணவராகட்டும், போன வருடம் என்ன வருடம் என்று கேட்டுப்பாருங்க? 2005 அப்டீன்னுதான் சொல்லுவாங்க. எத்தனை பேர் தமிழ் வருடத்தைச் சொல்லுவாங்க?
அனேகமா யாரும் சொல்ல மாட்டாங்க. தமிழ் சொல்லிக்குடுக்கிற ஆசிரியர்களிடம் கூட கேட்டுப் பாருங்க? நூத்துக்கு அய்ந்து சதவிகிதம் சொன்னால் அதிகம். இவ்வளவு ஏன்? எந்தத் தமிழ் நாளிதழாவது தமிழ்ல இன்ன வருடம்னோ, தேதின்னோ போடுறது உண்டா? கிடையாது. காரணம் என்ன?
உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே வருடம், மாதம், நாள், கிழமைகளைத் தான் ஏற்றுக் கொண்டு நடைமுறையில் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம், என்பதுதான் உண்மை. இதில் யாரும் விதிவிலக்கில்லை.
"கரு", " கயரு", " களஉயரு " அப்டீன்னா என்ன? "கரு"ன்னா தெரியும். "கயரு" ன்னா தெரியும். அது என்ன "கள உயரு" இப்படி எல்லாம் சொல்லி எங்கள சோதிக்காதீங்க?! அப்டீங்கிறீங்களா? நீங்க நெனைக்கிற கரு, கயரு இது கிடையாது. இதெல்லாம் தமிழ் எழுத்துக்களில் வரும் தமிழ் எண்கள். காதுல பூ வைக்கிற சமாச்சாரமெல்லாம் இல்லை. ஒரு "கரு" கைமாத்தா கொடேன், என்றால் 12 ரூபா கைமாத்தா கொடேன் என்றுதான் பொருள். அந்தக் காலத் தமிழ்! அதுக்குன்னு இந்தக் காலத்துல, ஒரு "கரு" கைமாத்தா கொடுன்னு கேக்கக்கூடாதவங்ககிட்ட கேட்டால், நல்லா மாத்துதான் கிடைக்கும் இல்லீங்களா? க=1,உ=2,ரு=5,ய=10,ள=100. 15 என்பதை கயரு என்றும் 125 என்பதை களஉயரு என்றே எழுதுவார்கள். தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது போல கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இருந்திருக்கின்றன. மனம் தான் கணினி (கம்ப்யூட்டர்) போல. உள்ளிட்டது (இன்புட்) தான் அப்படியே வரும்.
நமக்கு இந்தத் தமிழ் வேண்டாம்கிறீங்களா? நடைமுறையிலிருக்கிறதே நல்ல தமிழ்தான் என்ற முடிவுக்குச் சட்டென்று வந்துவிடுவோம். சரி... தமிழ் ஆராய்ச்சிய அப்பறமா வச்சுக்குவோம். "பார்த்திப" என்ற கடந்தவாண்டு முடிவடைந்து "விய" ஆண்டு புலருகிறது. பஞ்சாங்க கணிப்புகளின்படி இவ்வாண்டு பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை. ஆகவே நல்ல ஆண்டாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறதாம். தமிழ் ஆண்டுச் சுழற்சியில் இருபதாம் ஆண்டு இவ்வாண்டு!
அக்காலத்தில் சூரியனே பூமியை அல்லது மேருவைச் சுற்றி வருவதாக நம்பினார்கள். ஆகவே சூரியன் ஒருமுறை சுற்றிவரும் கால அளவு என்றே கருதினார்கள். இதனை சூரியனின் பெயரால் சௌரமான ஆண்டுக்கணிப்பு என்று அழைத்தார்கள். இது 365.25+++ நாள்கால அளவு கொண்டது. சௌரமான மாதங்கள் சாந்திரமான மாதப்பெயர்களையும் முக்கிய திதிகளையும் பெற்றுக்கொண்டன. செளரமான மாதங்கள் வானத்து விண்மீன்களின் அதாவது நட்சத்திரங்களின் பெயர்கள் கொண்டே நிர்ணயித்தனர். தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேஷ ராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.
இன்னொன்றில் சந்திரன் பூமியைச் சுற்றும் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு அமாவாசையில் இருந்து மறு அமாவாசை வரைக்கும் கொண்ட கால அளவு. இது 29.5 நாள்களைக் கொண்டது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துடன் சந்திரன் கூடியிருக்கும் போதே முழு நிலவு ஏற்படும். ஆகவே ஒவ்வொரு சாந்திரமான மாதமும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயரேலேயே அழைக்கப்படலாயிற்று. சித்திரை, வைகாசி என்றெல்லாம் அப்படித்தான் ஏற்பட்டன.
பழங்காலத்திலேயே சௌரமானத்தையும் சாந்திரமானத்தையும் இணைத்து விட்டார்கள். இதன்படி தமிழ் மாதங்களை
சித்திரை - மேட ஞாயிறு
வைகாசி - இடப ஞாயிறு
ஆனி - மிதுன ஞாயிறு
ஆடி - கடக ஞாயிறு
ஆவணி - சிங்க ஞாயிறு
புரட்டசி - கன்னி ஞாயிறு
ஐப்பசி - துலா ஞாயிறு
கார்த்திகை - விருச்சிக ஞாயிறு
மார்கழி - தனு ஞாயிறு
தை - மகர ஞாயிறு
மாசி - கும்ப ஞாயிறு
பங்குனி - மீன ஞாயிறு
- என்றும் வழக்கத்தில் கொண்டிருந்திருக்கின்றனர்.
அடுத்து ஆண்டு கணக்கிடும் முறையில், அறுபது ஆண்டுகளுக்கு பெயர் சூட்டி, 60 ஆண்டுகள் ஆனதும் அந்தப் பெயர்களையே திரும்பவும் பயன்படுத்தும் சுழற்சி முறை இடைக்காலத்தில் புகுந்த வைதீக வழிபாட்டு முறையாகும். இந்தப் பற்சக்கர முறையில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு வழங்கிய கணக்கு ஆபாசக் கணக்கு! அதற்கு முன் விக்கிரமன் சகாப்தம், சாலி வாகன சகாப்தம், போன்று ஆண்டுகளைத் தொடர்ச்சியாக எண்ணிக் குறிக்கும் முறையே இருந்திருக்கிறது. வைதிக முறையில் அமையும் பிரபவ, விபவ முதலான ஆண்டுப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களும் அல்ல; வரலாற்று அறிவு பெறவும், காலம் கணக்கிடவும் ஏற்றதுமல்ல; இருந்த போதும் வடமொழியை வாயிலாக வைத்து பிரசவித்த வருடங்களைத்தான் தமிழ் வருடங்களாகப் பாவித்து வருகிறோம் என்பது மிகக் கசக்கும் உண்மை. தமிழாண்டுப் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம். தற்போது நடை முறையில் உள்ள தமிழாண்டு 21 வது ஆண்டாகும்.
திருவள்ளுவராண்டு
திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழ் நாட்டரசு சொன்னாலும் அது இன்னும் மக்களிடம் நடைமுறையில் இல்லை. யாரும் நான் திருவள்ளுவர் ஆண்டு 1900ல் பிறந்தேன் என்று சொல்லிக் கொள்வதில்லை. கல்யாணப் பத்திரிகைகளில் கூட திருவள்ளுவர் ஆண்டு வரிசையைப் பயன்படுத்துவதில்லை. நம்மிடமும் பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட வட்டமொன்று இருக்கிறது. இப்போது அது வழக்கில் இல்லை. அதனை இப்போது மாமாங்கம் என்று குறிப்பிடுகிறோம்.
தூரகிழக்கு தென்கிழக்காசிய நாடுகள் அனைத்துக்குமே சொந்த காலந்தேர்கள் (காலண்டர்கள்) இருக்கின்றன.
ஜாவாவில் சக ஆண்டு.
ஜப்பானில் சக்கரவர்த்தி வம்சத்தின் தொடக்கம்.
தாய்லந்தில் பௌத்த ஆண்டு.
சீனாவுக்கு கான்பூஷியஸ் ஆண்டு, தாஓ ஆண்டு முதலியவை.
இருப்பினும் சீனாவில் அதிகம் பயில்வது கிரெகோரியன் காலண்டர்தான். வியாழன் / குரு பன்னிரண்டு ராசிகளிலும் சஞ்சரித்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வரும் கால அளவு ஒரு மாமாங்கம்.
மனித வாழ்க்கையில் ஒரு மாமாங்கம் என்பது முக்கியமான அளவுகோல்.
பன்னிரண்டு வயதில் திருமணம் செய்வார்கள். தமிழருக்கு தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்கும் முறை இல்லா நிலை நீக்க தமிழறிஞர்கள், சான்றோர் புலவர் பெருமக்கள் 1921ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தனர். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தமிழ்தென்றல் திருவிக., தமிழ்க்காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பொ.விசுவநாதம் ஆகியோர் உட்பட்ட தமிழ்ப் பேராளர்கள் இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக ஆண்டுக் கணக்கு மேற்கொள்ளத் தமிழர்கள் குறிக்கும் வகையில் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தீர்மானித்தது. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். வள்ளுவராண்டு என்று அவர்கள் கணித்திருப்பது கூட தவறான கணிப்புத்தான் என்று சொல்லுவாரும் உண்டு.
1971ல் தமிழக அரசு நாட்குறிப்புகளில் திருவள்ளுவராண்டு இடம் பெறத் துவங்கியது; 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981லிருந்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலிலும் திருவள்ளுவராண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்துமாறு அரசால் அறிவுறுத்தப் படவில்லை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் 50ஆண்டுகள் அயராது ஆராய்ச்சி செய்து சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்கள் பெயர்கள் தமிழோடு தொடர்புடையது அல்ல என்று அடித்துக் கூறி, "சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, தலை, துளி, சிலை" ஆகிய 12 மாதப் பெயர்களையும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்று ஏழு கிழமைகளுக்கான தமிழ்ப் பெயர்களையும் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
செய்யத்தக்கவை என்று சான்றோர் பெருமக்கள் புகழ்ந்து கூறியவைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தோருக்கு எப்போதும் நன்மை இல்லை என்பது அய்யன் வள்ளுவனின் வேதவாக்கு.
"புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - 538 எனவே தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனும் வளனும் நாடுவோர் திருவள்ளுவராண்டை உபயோகிப்பர்.
கிமுக்களில்...
பொதுவாக ஆண்டுக் கணக்கு நம் முன்னோர்களால் எப்படி எப்படியோ கணக்கிடப்பட்டு பின்பற்றப்பட்டு வந்திருந்தாலும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அதாவது 3102 லிருந்து ஒரு ஒழுங்கு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட ஆண்டுக் கணக்கு கடைப்பிடிக்கப் பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. ஆண்டுக் கணக்கை "அப்தம்" என்று வழங்கி வந்திருக்கின்றனர். கி.மு.3102 லிருந்து தொடங்கப்படுவதை "கலியப்தம்" என்று நெறிப்படுத்தப்பட்டு நடப்பிலிருந்தது. தமிழர்களிடம் மட்டுமல்லாது சில பண்டைய இனங்களான மாயா, சுமேரியன் ஆகியோரிடமும் இருந்து வந்திருக்கிறது. இதன் பின்னர் பல அப்தங்கள் ஏற்பட்டன.
விக்கிரமாதித்தன் பெயரால் தோன்றியது. விக்ரமாப்தம் அல்லது விக்ரமாங்க சகாப்தம் ஆகும். கி.பி. 78ல் ஏற்பட்டது "சக சகாப்தம்"ஆகும். இதுதான் பாரதத்தின் பெரும் பகுதியிலும் தென்கிழக்காசியா பகுதிகளிலும் பரவியது. இன்றும் பயன் படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வராலாற்றுப் பழமையுடைய, அராபியர்களூம், சீனர்களும் சந்திரனை அடிப்படையாக வைத்து ஒரு பவுர்ணமியிலிருந்து இன்னொரு பவுர்ணமி வரை கொண்ட 28 நாட்களை ஒருமாதம் என்று கணித்திருந்தனர். இந்த முறையில் கோள் சுழற்சிக் கணிப்பை வரையறுப்பதில் குழப்பம் ஏற்படவே சீனப்பேரரசர் கணியர்களைத் தூக்கிலிட்டதாகவும் அதன் பின் தமிழ்க் கணியர்களைச் சீன நாட்டுக்கு அழைத்து நம் முறையில் கணிதம் பயிற்றுவிக்கச் செய்ததாக சீன வரலாற்றுக் குறிப்புகள் அதிர்ந்து தெரிவிக்கிறது.
தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது போல அந்தக் காலத்தில் கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இருந்திருக்கின்றன. மனம் தான் கணினி.
மில்லியனும், பில்லியனையும் அன்றைய தமிழன் கணக்கிட்ட முறையைப் பாருங்கள்!
10 கோடி - 1 அற்புதம்
10 அற்புதம் - 1 நிகற்புதம்
10 நிகற்புதம் - 1 கும்பம்
10 கும்பம் - 1 கணம்
10 கணம் - 1 கற்பம்
10 கற்பம் - 1 நிகற்பம்
10 நிகற்பம் - 1 பதுமம்
10 பதுமம் - 1 சங்கம்
10 சங்கம் - 1 வெள்ளம் அ சமுத்திரம்
10 வெள்ளம் - 1 அந்நியம் அ ஆம்பல்
10 அன்னியம் - 1 மத்தியம் அ அர்த்தம்
10 மத்தியம் - 1 பரார்த்தம்
10 பரார்த்தம் - 1 பூரியம்
தற்போது புழங்கும் தசம எண்வரிசை இந்தியாவில் கருவாகி உருவாகிப், பின் அரேபிய நாடுகளின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது என்பது எண்ணியல் அறிஞர் கருத்தாகும். வானவியலில் மிகுந்த முன்னேற்றமடைந்திருந்த இந்தியாவில் மிகப் பெரிய எண்களுக்கும் தேவையிருந்தது.
விந்தம் - 64,00,000
நியுதம் - மில்லியன்
மகாகும்பம் - பில்லியன்
கற்பம் - பத்து பில்லியன்
கடல் - பத்தாயிரம் பில்லியன்
பரார்த்தம் - ஒரு லட்சம் பில்லியன்
நிகற்பம் - பத்து டிரில்லியன்
மகாகிதி - ஓராயிரம் டிரில்லியன்
மகாகோணி - பத்து டிரில்லியன்
மகாக்ஷக்தி - ஆயிரம் டிரில்லியன்
சோபம் - பத்தாயிரம் டிரில்லியன்
சாகரம் - பத்து குவாடிரில்லியன்
மகாசாகரம் - 18 சாகரம்
மகாசோபம் - நூறாயிரம் டிரில்லியன்
மகாபூரி - பத்து குவின்டில்லியன்
கீழ்க்கண்ட மிகப்பெரிய எண்களை தமிழர்கள் புழக்கத்தில் புரள விட்டுள்ளனர். ஆனால் அவை எதைக் குறிப்பிட்டன என்பதை தமிழறிஞர்கள் கருத்துரைத்தால் பலரும் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும்!
மகாதோரை
மகாநிகற்பம்
மகாமகரம்
மகாவரி
மகாவற்புதம்
மகாவுற்பலம்
பிரம்மகற்பம்
கமலம்
பல்லம்
பெகுலம்
தேவகோடி
விற்கோடி
மகாவேணு
தோழம்
பற்பம்
கணனை
தன்மனை
அபிதான சிந்தாமணி சொல்லும் எண்ணின் வகுப்பு (36 வகை):
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
பதினாயிரம்
இலக்கம்
பத்திலக்கம்
கோடி
பத்துக்கோடி
நூறுகோடி
அர்ப்புதம்
கர்வம்
மகாகர்வம்
பதுமம்
மகாபதுமம்
சங்கம்
மகாசங்கம்
§க்ஷ¡ணி
மகா§க்ஷ¡ணி
க்ஷதி
மகாக்ஷதி
க்ஷோபம்
மகாக்ஷோபம்
பரார்த்தம்
சாகரம்
பரதம்
அசிந்தியம்
அத்தியந்தம்
அனந்தம்
பூரி
மகாபூரி
அப்பிரமேயம்
அதுலம்
அகம்மியம்
அவ்வியத்தம்
இது தவிர யுகக்கணக்கு, தெய்வத்துள் வைக்கப்பட்டவர் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து) வயதுக் கணக்கு, வான் கணக்கு, நிலக் கணக்கு, நுணுக்கக் கணக்கு, பின்னக் கணக்கு (முந்திரி?) என்றெல்லாம் இருந்துள்ளன.
காரி நாயனார் கணக்கதிகாரத்தில் கொஞ்சம் காணலாம். தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறையைக் கொஞ்சம் பாருங்களேன்.
8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு
தமிழர்களிடம் வணங்குவது, வழிபடுவது, எழுதுவது, பேசுவது மிகுதியாகவும் போற்றுவது, பின்பற்றுவது, பரப்புவது, செயல்படுத்துவது குறைவாகவும் இருக்கின்றன. தனித்தனியாக உயரும் பண்பாடு மிகுதியாகவும், கூட்டாக் ஒன்று சேர்ந்து உயரும் பண்பாடு குறைவாகவும் உள்ளன.
தமிழ்ப் புத்தாண்டு மலரும் பொன் காலைப் பொழுதில் தமிழர்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து தூய ஆடை அணிந்து கதிரவனை வணங்குகின்றனர். சிலர் தங்கள் குலதெய்வம் குடி கொண்டிருக்கிற கோவில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். விசேச ஆராதனை, அபிசேகங்கள் செய்து வழிபடுகின்றனர். அதே நேரத்தில் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வீட்டு உபயோகத்திற்கு ஒரு புதிய பொருளை வாங்கி அளிக்கின்ற பழக்கமும் சிலரிடம் காணப்படுகிறது.
புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப் பிடிக்கப்படுகிறது. பஞ்சாங்கம் வாசிப்பதிலும் நம் முன்னோர்கள் ஒருவித அர்த்தம் உள்ளடக்கி வைத்துள்ளனர். பஞ்சாங்கம் என்பது பஞ்ச... அங்கம் என்ற இரு தனிச் சொல்லின் சொற் சேர்க்கையாகும். இதன் பொருள்:
அய்ந்து உறுப்புக்களான வாரம் அல்லது கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது. வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும். இது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமைக்கு உரிமை என்று பொருள்.
ஞாயிறு ( சூரியன் ) திங்கள் ( சந்திரன் ), செவ்வாய் ( மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகம் ), புதன் ( மெர்க்குரி), வியாழன் ( ஜூப்பிடர் ), வெள்ளி ( வீனஸ் ), சனி ( சாட்டர்ன் எனும் சனிக் கிரகம்) எனும் ஏழு கிரகங்களின் பிரதிபலிப்பாகத்தான் வாரத்தின் ஏழு நாட்களைப் பெயர் சூட்டி வழக்கில் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர் என்பதை நம்மில் பலர் அறிவோம்.
தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேச ராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டு புலருகிற நாளுக்கு முன் தினம் இரவு தங்கள் படுக்கையறையில் நிலைக் கண்ணாடி முன்பாக ஒரு வெள்ளித் தட்டில் அல்லது சுத்தமான தட்டில் பலவகையான பழங்கள், தங்கள் வீட்டில் உள்ள பணம்... காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவார்கள். காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் பார்வை பதிய கண் விழிப்பார்கள். இப்படிச் செய்வதால் அந்தப் புத்தாண்டில் செல்வம் குறைவிலாது கிடைக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தமிழகத்தில் இந்தப் பழக்க வழக்கம் பெரும்பாலான இந்துக் குடும்பங்களில் நிலவுவதை இன்றும் காண முடியும்.
தீபாவளி, பொங்கல் போல் தமிழ்ப் புத்தாண்டு அவ்வளவாகச் சிறப்பாகக் கொண்டாடப் படுவதில்லை. கோயில்களில் பஞ்சாங்கத்தைப் படித்து வரும் ஆண்டின் பலன்களைக் கூறுவார்கள். பெரும்பாலவர்கள் கோயில்களுக்குச் செல்வர். ஒரு சிலர் புத்தாடைகள் உடுத்திச் செல்வர். வீடுகளில் எளிமையான வகையில் வழிபாடுகளுடன் சைவ உணவு வகைகளை உண்டு மகிழ்வர்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபலமான நாளிதழ்கள் எதிலும் தமிழ் ஆண்டு குறிப்பிடப் படுவதில்லை; சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ் முரசு என்ற ஒரே ஒரு பத்திரிக்கையில் தமிழ் ஆண்டு, மாதம் என்று பிரசுரிக்கப்படுகிறது. மலேசியாவிலிருந்து பல பத்திரிக்கைகள் வெளி வருகின்றது. அவற்றில் தமிழ் நேசன் மட்டும் திருவள்ளுவராண்டு 2037, பார்த்திப ஆண்டு மாசி... தேதி எனவும் ஹிஜ்ரி 1427 மாதம், தேதி என முதல் பக்கத்தில் வெளியிடுவதைக் குறிப்பிடலாம்.
நாளும் கோளும் எப்டி இருந்தாலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைவது அறிவு ஒன்றுதான். அறிவு வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமைவது கல்வி. நம்மைக் கரை சேர்க்க வல்லது கல்வி மட்டுமே. புலம் பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் இல்லங்களில் தமிழ் தவிர்க்கப் படுகிறது. இந்தப் புத்தாண்டு தினத்திலிருந்தாவது அன்று முழுக்க வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாரதியையோ, வள்ளுவனையோ அறிமுகப் படுத்துங்கள். இந்தப் புத்தாண்டிலிருந்தாவது நாள்தோறும் குழந்தைகளுக்கு சில ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்களை தவறாமல் சொல்லிக் கொடுங்கள்.
என்ன? உங்களிடம் தமிழ் நாள்காட்டி இல்லையென்ற கவலையா? கவலையை விடுங்கள்; இந்தச் சுட்டியை சொடுக்கினால் நாள், நட்சத்திரம், நல்ல நேரம் சகலத்தையும் பார்க்கலாம்!
அறுபதாண்டுப் பட்டியல்
தமிழ் வருட பெயர்கள் மற்றும் ஆங்கில ஆண்டு கொண்ட பட்டியல்
1 பிரபவ 1987--1988
2 விபவ 1988--1989
3 சுக்ல 1989--1990
4 பிரமோதூத 1990--1991
5 பிரசோர்பத்தி 1991--1992
6 ஆங்கீரச 1992--1993
7 ஸ்ரீமுக 1993--1994
8 பவ 1994--1995
9 யுவ 1995--1996
10 தாது 1996--1997
11 ஈஸ்வர 1997--1998
12 வெகுதானிய 1998--1999
13 பிரமாதி 1999--2000
14 விக்கிரம 2000--2001
15 விஷ¤ 2001--2002
16 சித்திரபானு 2002--2003
17 சுபானு 2003--2004
18 தாரண 2004--2005
19 பார்த்திப 2005--2006
20 விய 2006--2007
21 சர்வசித்து 2007--2008
22 சர்வதாரி 2008--2009
23 விரோதி 2009--2010
24 விருத்தி 2010--2011
25 கர 2011--2012
26 நந்தன 2012--2013
27 விஜய 2013--2014
28 ஜய 2014--2015
29 மன்மத 2015--2016
30 துன்முகி 2016--2017
31 ஹேவிளம்பி 2017--2018
32 விளம்பி 2018--2019
33 விகாரி 2019--2020
34 சார்வரி 2020--2021
35 பிலவ 2021--2022
36 சுபகிருது 2022--2023
37 சோபகிருது 2023--2024
38 குரோதி 2024--2025
39 விசுவாசுவ 2025--2026
40 பிராபவ 2026--2027
41 பிலவங்க 2027--2028
42 கீலக 2028--2029
43 செளமிய 2029--2030
44 சாதாரண 2030--2031
45 விரோதிகிருது 2031--2032
46 பரிதாபி 2032--2033
47 பிரமதீச 2033--2034
48 ஆனந்த 2034--2035
49 ராட்சச 2035--2036
50 நள 2036--2037
51 பிங்கள 2037--2038
52 காளயுக்தி 2038--2039
53 சித்தார்த்தி 2039--2040
54 ரெளத்திரி 2040--2041
55 துன்மதி 2041--2042
56 துந்துபி 2042--2043
57 ருத்ரோத்காரி 2043--2044
58 ரக்தாட்சி 2044--2045
59 குரோதன 2045--2046
60 அட்சய 2046--2047
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.