அமெரிக்கத் தீபாவளி - ஹாலோவீன்
ஆல்பர்ட் பெர்னாண்டோ
இந்தியாவைப் போல் அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அமெரிக்கத் தீபாவளிக்குப் பெயர் "ஹாலோவீன்."
தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து பூங்கொத்துகள், பரிசுக்கூடைகள், ஹாலோவீன் குக்கீஸ், டாய்ஸ்,கேண்டி எனப்படும் மிட்டாய் தினுசுகள், ஸ்டிக்கர்கள், பேனா, பென்சில், ஆடியோ விடியோ காசட்டுகள், வித விதமான முகமூடிகள் (மாஸ்க்குகள்) என கடைகளில் அக்டோபர் மாத துவக்கத்திலேயே படுசுறுசுறுப்பாக வியாபாரம் களை கட்டத் துவங்கி விடுகிறது.
இது தவிர 24மணிநேரமும் இயங்கும் உலகளாவிய வலையகக் கடைகளில் ஆன் லைன் ஷாப்பிங் வேறு பிசியாக நடக்கிறது. இதெல்லாம் சரித்தான்... தீபாவளின்னா நரகாசுரன் அரக்கன் அழிந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம்.
ஹாலோவீனுக்கு அப்படி எதாவது ஒரு காரணம் இருக்கவேண்டுமே... என்பதுதானே உங்கள் கேள்வி? ஹாலோவீனுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
இறந்தவர்கள் சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் " ஹாலோவீன் " நாள் என்பது. இப்படிப்பட்ட கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என அமர்க்களமாக நம்புகிறார்கள் அமெரிக்கர்கள்.
ஆமாம். இந்த ஹாலோவீன் என்றால் என்ன? அது எப்படி வந்தது? என்றுதானே கேட்கிறீர்கள்...
வினோத அலங்கரிப்புகள்... வீட்டு வீட்டுக்கு சோளக்காட்டு பொம்மை போல எதாவது ஒரு பொம்மை உருவம் இருக்கும். வீடு தவறமல் பூசனிக்காய் உள்ளங்கையில் வைக்குமளவு சிறிய அளவிலிருந்து ஒரு ஆள் கட்டிப் பிடிக்கமுடியாத அளவு ராட்சச பூசனி என இடம் பெற்றிருக்கும். பூசனியை முகம் போல வெட்டி இரவில் வண்ண விளக்குகள் ஒளிர வைத்திருப்பார்கள். பொங்கலுக்கு வீட்டு நுழைவாயிலில் இருபுறமும் தோகையுடன் கூடிய கரும்பு செழித்தெழுந்து நிற்குமே, அது போல காய்ந்த மக்காச் சோளத் தட்டைகளை குவியலாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். நிலைப்படியில் மரிக்கொழுந்து, மாவிலைத் தோரணம் கட்டி இருப்பதுபோல கலர் கலரான காய்ந்த மக்காச் சோளக் கதிர்கள், காய்ந்த பல்வேறு இலை கொத்துக்களை செருகி வைத்திருப்பார்கள். வீட்டு முகப்பில் சோபாவில் ஒரு எலும்புக்கூடு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு புகை பிடித்துக் கொண்டிருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் மண்டை ஓடுகள், எலும்புகள் என்று தொங்கிக் கொண்டிருக்கும். இதெல்லாம் எதற்கு? எல்லாம் நம் இனத்தவர்கள் தான் என்று பேய் பிசாசுகள் விசிட் அடிக்கும் போது தெரிந்து கொள்ளத்தான்?! இரவு நேரங்களில் இதை அறியாத பயந்த சுபாவம் உள்ளவர்கள் போனால் இருதயம் திடீர் பிரேக் போட்டுவிடும். இதுபோன்று வினோதமான அலங்கரிப்புகளில் அமெரிக்க இல்லங்கள் காட்சி தரும்.
தெருக்கூத்து
முகங்களில் கருப்புச் சாயம், கண்களைச் சுற்றிக் கலர்கலராக புள்ளி வைத்து, உதட்டுச் சாயம் பூசி, தலைக்கு விக் வைத்துக் கொண்டு ஆண்களும் பெண்களும் பேய்களாக, பிசாசுகளாக, ஆவிகளாக, சூனியக்கார-காரிகளாக மந்திரக்கோல் போன்று வைத்துக் கொண்டு போக்குவரத்து மிகுந்த இடங்களில், பெரிய பெரிய மால்களில் ( பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்தான்) பொது மைதானங்களில் திடீர்... திடீர் என்று தோன்றி திகில் ஏற்படுத்துவார்கள். இதெல்லாம் ஒரு ஜாலி..ஜாலியான நிகழ்வுகளாகத்தான் அங்கங்கே நிகழும். மின்னல் வேகத்தில் வந்து அந்தப் பகுதியில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தி விட்டு வந்த சுவடு தெரியாமல் போயும் விடுவார்கள்.
பேய் மாளிகைகள்
அமெரிக்காவில் "ஹாலோவீன்" அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. இந்த ஹாலோவீன் அருங்காட்சியகங்களின் விசேஷம் என்னவென்றால் பேய், பிசாசுகள், ஆவிகளின் கூட்டுக் குடும்பங்கள் வசிப்பகமாகத் திகழுகிறதுதான். காதில் பூச்சுற்றுகிறார் போல் தெரிகிறதா?
ஒரு ஹாலோவீன் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து வருவோமே. பெரிய பெரிய இராட்சச சிலந்தி வலைகள் பேய் மாளிகை முகப்பில் நமக்கு வரவேற்புரைக்க, புன்னகைப் பூக்கள் பூத்திருக்கும் பம்ப்கின்களின் (பூசணி) அணிவகுப்பை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய முற்பட்டால் ஒரு எலும்புக்கூடு தடுத்து நிறுத்துகிறது. லேசான நடுக்கம் நம் உடம்பில் பரவிப் போக திரும்பி விடலாமா என்ற நம் யோசிப்பு அதற்குத் தெரிந்துபோக "பே மீ சிக்ஸ்" டாலர் என்கிறது. அப்போதுதான் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது நினைவுக்கு வர கிரடிட் கார்டை நம்மிடம் இருந்து பறிக்காத குறையாக வாங்கி ஆறு டாலரை வரவு செய்து கொண்டு ஏர் இந்தியா மகாராஜா போல பவ்யமாக குனிந்து உள்ளே போக அனுமதித்தது.
கும்மிருட்டாக இருந்த அந்த பேய் மாளிகையில் திடீரென்று பேய்களின் அலறல், அங்கங்கே எரியும் நெருப்புத் துண்டங்கள் போன்ற கண்கள் மட்டும் இங்கும் அங்குமாக நடமாடுவது தெரிந்தது. பளீர் பளீர் என்று மின்னல் மின்ன கோடையிடியாக இடி இடிக்க அந்த மின்னல் வெளிச்சத்தில் கோரமான உருவங்கள் அது ஆவியோ பேயோ அதது சாப்பிட்டுக் கொண்டும், குடித்துக் கொண்டும், நடனமாடிக் கொண்டும், மாடிப் படிகளில் இரண்டு "கோஷ்ட்டுகள்" கோஷ்ட்டி கானமாக ஒருவித சேஷ்டைகளில் ஈடுபட்டிருந்தது. அடுப்பங்கரைப் பக்கமிருந்து வரும் புகை மண்டலமா? ஆவி மண்டலப் புகையா? என்பது தெரியாமல் வீடு முழுக்கப் பரவி இருந்ததை அறிய முடிந்தது.
மாடிமேல் மாடி வைத்துக் கட்டப்பட்டிருந்த அந்த மாடியறை ஒன்றில் அந்த மாளிகை யாருக்குச் சொந்தமானது? எந்த வருடத்திலிருந்து பராமரிக்கப்படுகிறது? இது போன்ற தகவல்கள் பட்டியலிடப்பட்டிருந்தது.
உண்மையில் அந்த வீடு யாருக்குச் சொந்தமோ அந்தப் பேயையும்... ஸாரி... பேய் உடையிலிருந்த ஆஜானுபாகுவான மனிதரை சந்தித்த போது அவர் சொன்னார் "அவருடைய அப்பா காலத்திலிருந்து ஹாலோவீன் தினத்துக்காக வீட்டை அலங்கரித்து அக்டோபர் கடைசி வாரத்தில் பொதுமக்களை சந்தோஷிக்கச் செய்வது வழக்கம். கடந்த பல வருடங்களாக இந்த வீட்டை "கோஷ்ட்"டுகளுக்கான இருப்பிடமாக்கி, நாள்தோறும் பொதுமக்களுக்காக குறிப்பிட்ட நேரத்தில் வருடம் முழுக்க திறந்து வைக்கிறோம். பொதுமக்கள் தரும் கட்டணத்தை வைத்து இதை மெயின்டெய்ன் செய்கிறேன்.
அக்டோபர் மாதத்தில் மட்டுமே இது போன்று மக்கள் பார்வையிடுவதற்காக முழு வீட்டையும் ஹாலோவீனுக்காக தயார் செய்வார்கள். ஆனால் அலபமா, ஜியார்ஜியா, அயோவா, மிசிசிப்பி, நெபராஸ்கா, ஒஹையோ, ரோடிஐலண்ட், டெக்சாஸ், கலிபோர்னியா, இல்லிநாய்ஸ், லூசியானா, மாண்டனா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா,டென்னஸ்ஸி, வாஷிங்டன் ஆகிய 16 மாநிலங்களில் தனி நபர்களால் நிர்வகிக்கப்படும் "ஹாலோவீன் காட்சியகங்கள்" வருடம் முழுக்க இயங்குவதாகவும் தெரிவித்தார்.
யாரோ நமது பின் மண்டையில் பட்டென்று அடிக்க 'ஷாக்' ஆகி திரும்பிப் பார்த்தால் திருவாளர் வவ்வால்தான் பறந்து போகும் போது அப்படிச் செய்து விட்டுப் போயிருக்கிறார் என்று தெரிந்தது. இடத்தைக் காலி செய்ய இதுவே தருணம் என்று ஆவியிடம் ...ஸாரி...அவரிடம் தாங்க்ஸ் சொல்லி விட்டு அங்கிருந்து நழுவினோம்.
எங்கும் கோலாகலம்
ஆவிகளுக்குப் பிடித்த இருட்டுப் பொழுதுகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மக்கள் ஆழ்ந்து போகிறார்கள். வாழ்க்கை வாழ்ந்து படுவதற்கே என்கிற சித்தாந்தத்துக்கு உதாரணமானவர்கள். ஹாலோவீன் தினத்தை பிரதிபலிக்கிற விதவிதமான வண்ண உடைகளில் இரவு விடுதிகளை நிறைத்துக் கொண்டு ஆட்டமும் பாட்டமும், கேளிக்கைகளில் தங்களைத் தற்காலிகமாக மறந்து உல்லாசிக்கிறார்கள்.
இராஜ ராஜாக்கள், கோமாளிகள் என்ற முகமூடிகளில் அவர்களின் முகவரிகள் மறைந்திருக்கலாம். அகமும் முகமும் ஒருசேரச் சிந்துகிற மகிழ்ச்சிப் பூக்களை எல்லோரிடமும் சிதறவிட மறப்பதில்லை. உற்சாக பானம் அருந்திவிட்டு உளறும் நிலைக்கு யாரும் போய்விடுவதில்லை. உற்சாகமாக இருப்பதற்காக மட்டுமே இதை அருந்துகிறார்கள். நியுமெக்சிக்கோ மற்றும் சில பகுதிகளில் வாழும் அமெரிக்க இண்டியன்கள் (சிவப்பு இந்திய காட்டுவாசிகள்) மட்டுமே போதை தலைக்கேற உருள்வது பிறழ்வது எல்லாம். இந்த நாளில் அநேகர் "டேட்டிங்" வைத்துக் கொண்டு கவலையின்றி ஆவிகளோடு ஆவிகளாக ஐக்கியமாவது உட்பட கோலாகலமாக கழிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில்
மழலையர் பள்ளியிலிருந்து கல்லூரிவரை "ஹாலோவீன்" கொண்டாட்டத்துக்கு குறைவிருக்காது. அதிலும் சின்னஞ் சிறு பிஞ்சுகள் தங்களுக்குப் பிடித்த மிக்கி மவுஸ், எல்மோ, பிக்பேர்டு, லேடி பக், பேட் (வவ்வால்), முயல், கிளி எமன் வாகனம் போல கொம்புக்காளை மாடு இப்படி எத்தனையோ முகமூடிகளில் வித்தியாசமான காஸ்ட்யூம்களில் ஜொலிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். அன்று அந்தந்த வகுப்பு ஆசிரிய அசிரியைகள் கூட கோமாளி போல சூனியக்காரி போல வந்து குழந்தைகளை "TRICK OR TREAT BAGS" கொடுத்து மகிழ்விப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி அரங்கில் ஒருநாள் எல்லா வகுப்பு மாணவ மாணவிகளும் இணைந்து பங்கேற்கும் "ஹாலோவீன்" நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்களும் வந்து கலந்து உற்சாகப்படுத்துவார்கள். ஐரிஷ் குழந்தைகள் உருளைக்கிழங்கையோ டர்னிப் காயையோ அகல்விளக்கு போன்று செய்து அதில் திரியிட்டு விளக்கு போன்று எரிய விடுவார்கள். சொர்க்கமும் நரகமும் நிராகரித்த ஒரு ரெண்டுங்கெட்டான் " ஜோக்" என்று ஒரு கதையுண்டு. அந்த ஜோக் வேதாளத்திற்கு மிகப் பிடித்தமானது இந்த உருளை..டர்னிப் விளக்கு என்பதால் இப்படிச் செய்வதாகச் சொல்வார்கள்.
அக்.31ம் தேதி சிறு குழந்தைகள் கையில் ஒரு கூடையோ பையோ எடுத்துக்கொண்டு வீடு வீடாகக் கிளம்பி விடுவார்கள். வீட்டிலிருப்போர் குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லி விதவிதமான கேண்டிகளை (இனிப்பு மிட்டாய்களை) வழங்குவார்கள். குழந்தைகள் மீண்டும் வீடு திரும்பும் போது உற்சாகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பார்கள். பின்னே மாதக் கணக்கில் கேண்டிகளே வாங்கத் தேவையில்லாதபடி பைகளை நிரப்பிக் கொண்டல்லவா வந்திருப்பார்கள்!
கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் கூட வினோத உடைகளில், விசேஷ நடனங்கள், ஷாம்பெய்ன் களியாட்டங்கள் என்று அசத்தி விடுவார்கள். கல்லூரிக் காதல் பறவைகளுக்கு அன்று தரையில் கால்பாவாது. ஜோடி ஜோடியாக ஆடிக்கொண்டு இருப்பவர்கள் காஸ்ட்யூம்களில் அசத்துவார்கள். காரணம், கவர்ச்சிகரமாக காஸ்ட்யூம் அணிந்து எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கும் ஜோடிகளுக்குப் பரிசு உண்டே! இப்படி நடனமாடும் ஜோடிகளுக்கிடையே ஒரு சிலர் 'சில்மிஷ'ங்களில் இறங்கி விடுவதும் உண்டு. முகமூடியணிந்து நடனமாடிக் கொண்டிருக்கும் ஜோடி ஒன்றை நைசாகப் பிரித்து ஆணைத் தள்ளிக் கொண்டு போய் விடுவார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் அங்கே வருபவரைச் சேர்த்துக் கொண்டு பெண் நடனமாடுவார்.
உச்சக்கட்டமாக இறுகத் தழுவி முத்திரை முத்தமும் கொடுத்து விடுவார். கொடுத்த ஜோரில் முகக் கவசத்தை கழற்றுவார். அப்போதுதான் தெரியும் இடையில் இணைந்தவர் தனது பார்ட்னர் இல்லையென்று, உடனே கண்ணைக் கசக்கிக்கொண்டு கண்ணகி வேஷம் எல்லாம் போட மாட்டார்கள். இதெல்லாம் ஒரு கலகலப்பான நாளில் த்ரில் அனுபவங்கள் அவ்வளவுதான். சில நேரங்களில் சில இடங்களில் வேலி தாண்டுகிற வெள்ளாடுகள் இருக்கலாம், அது வேறு விஷயம்;
இது தவிர அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் ஹாலோவீன் பார்ட்டி என்று ஏற்பாடு செய்து ஆண் பெண் பேதமின்றி மதுக் கிண்ணங்களை விரும்பிய கலவையில் எடுத்துக்கொண்டு வேடிக்கை விளையாட்டுகள், சிலர் சூதாட்டங்களிலும் நள்ளிரவுக்கு மேலும் நீடிக்கும் பார்ட்டிகளில் சந்தோஷித்துக் கிடப்பார்கள். கணவரில்லாத குழந்தைகள் உள்ள அலுவலகப் பெண்கள் 20 சதம் இருப்பார்கள். இவர்களோடு இரவைக் கழிக்க ஒரு கூட்டம் அலை மோதும். லாட்டரிச் சீட்டில் லட்சம் விழுந்தால் அது கிடைத்தவருக்கே அதிர்ஷ்டம் என்பது போல அதிர்ஷ்டசாலிகள் 'ஹாலோவீன் நைட்' டுக்கு நழுவி விடுவார்கள்.
ஹாலோவீன் சினிமா
ஹாலோவீன் என்ற பெயரில் ஆறு திரைப்படங்கள் அமெரிக்காவிலிருந்து வெளி வந்துள்ளது. இதில் திரைப்பட இயக்குனர் ஜான் கார்ப்பெண்டர் எடுத்த "ஹாலோவீன்" திரைப்படம் மிகப் பிரபலம்.
பிரமாண்டப் பேரணி
"மாட்டோம்...மாட்டோம் எங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்," "போராடுவோம், போராடுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்" என்கிற பேரணிகளைப் பற்றி கேள்விப் பட்டிருந்த நமக்கு அமெரிக்காவிலே ஜாலியாக, எல்லோரும் இன்புறுவதற்காகவே ஒரு பிரமாண்டப் பேரணி நியூயார்க் நகரில் 32 வருடங்களாக நடந்து வந்திருப்பதை அறிந்து ஆச்சரியப் பட்டுப் போனோம்.
கட்சி ஊர்வலத்துக்கு ஆள் இல்லையா காசைக் கொடுத்தாவது கூட்டத்தை சேர்த்து விடும் திறமை மிக்க நம் பூமியில், ஊர்வலத்தில் போக காசைக் கொடுத்து விட்டு கலந்து கொள்கிற பேரணியைக் கண்டு ஆச்சரியப்படாமல் என்ன செய்வது? அக்டோபர் 31ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஹாலோவீன் பேரணிதான் அது.
1973ல் நியூயார்க் க்ரீன்விச் வில்லேஜ்-ல் கிராமீய பொம்மலாட்டக்காரரும் முகமூடி தயாரிப்பாளருமான ரால்ப் லீ (Ralph Lee) என்பவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களோடு முகமூடியணிந்து வீடு வீடாகப் போய் ஹாலோவீன் வாழ்த்துச் சொல்லி வலம் வந்தார்.
இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்ட நியூயார்க் சிட்டி தியேட்டர் நிர்வாகம், லீயை நியூயார்க் நகரில் முக்கிய தெருக்களில் பேரணியாக நடத்தக் கேட்டுக் கொண்டது. பேரணி குறித்து பெரிய அளவில் தியேட்டர் நிர்வாகம் விளம்பரம் செய்தது. பல்லாயிரக் கணக்கில் பங்கேற்ற பிரம்மாண்டப் பேரணியாக லீ நடத்திக் காட்டினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் கவர்ச்சிகரமாக வினோத உடைகளில், லீ யின் விதவிதமான மாஸ்க்குகளை அணிந்து பங்கேற்பாளர்கள் பேரணியில் கலந்து கொள்ளத் துவங்கினர். 9வது ஆண்டில் அமெரிக்கா முழுவதிலுமிருந்து ஆர்வத்தோடு பேரணியில் கலந்து கொண்ட ஆர்வலர்கள் எண்ணிக்கை சில லட்சங்களைத் தாண்டியது.
நியூயார்க் சிட்டி தியேட்டர் நிர்வாக இயக்குனரான ஜென்னி ப்லமிங் என்ற பெண்மணி இந்தப் பேரணிக்குப் பொறுப்பேற்று வருடாவருடம் 20,000 விசேஷ காஸ்ட்யூம்களில் 1.5 மில்லியன் அமெரிக்கர்கள் கலந்து கொள்ளும் பேரணியாக உருவெடுக்கக் காரணமாகவுள்ளார். துவக்கத்தில் அஞ்சலட்டை அளவிலான செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மட்டுமே செய்தி வெளியிட்டது. தற்போது இந்தப் பேரணியை வர்ணிக்காத தகவல் தொடர்புச் சாதனமே இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டது. 1993ல் நியூயார்க் நகர மேயர் டேவிட் எம் டின்கின்ஸ், வயது, இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் இந்தப் பேரணியைக் கண்டு மகிழ்ந்து," நகரையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். இந் நிகழ்வினை வருடம் தோறும் அக்டோபர் நான்காம் வாரத்தில் (24-31) "ஹாலோவீக்" என நியூயார்க் நகரம் கொண்டாடும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
1000-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களால் மிகப் பிரம்மாண்டமான இராட்சச பொம்மைகளைக் கொண்டு "நடமாடும் பொம்மலாட்ட" நிகழ்வினை இந்தப் பேரணியில் நடத்துகின்றனர். ஆப்ரிக்கன், பிரேசிலியன், டிக்ஸிலேண்ட், ஐரிஷ், ஜீவிஷ், இத்தாலியர், கரீபியன், சைனீஸ், மற்றும் ஜப்பானியர்களின் வெவ்வேறு 38 விதமான சங்கீதங்கள் இசைக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் பேரணி நடக்கும் நாளில் கண்டுகளிக்க வந்த அமெரிக்கா மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளால் கிடைத்த வருமானம் மட்டும் 60 மில்லியன் டாலர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
அமெரிக்காவின் கலை மற்றும் பண்பாட்டு நகராண்மைக் கழகத்தின் "ஓபி விருது" (Obie Award) நியூயார்க் சிட்டி தியேட்டருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நெரிசல் மிகுந்த நகரத்தில் பேரணியில் கலந்து கொள்ளவும் பேரணியை கண்டு களிக்கவும் பல லட்சக்கணக்கான மக்கள் கூடியும் மற்ற காலங்களை விட இந்த நாளில் கிரிமினல் குற்றங்கள் குறைந்ததும்தான் என அறிவித்தது.
டைட்டானிக் கப்பல் பயணியின் ஆவி
அக்டோபர் 30ம்தேதி மதியம் 12.30 மணிக்கு தனியார் பேருந்து நிறுவனங்கள் நபருக்கு எட்டு டாலர் வாங்கிக் கொண்டு பிரபலமானவர்கள் அடக்கம் செய்யப்பட கல்லறைகளுக்கு அழைத்துச் செல்வார்கள். இதில் ஒரு கல்லறை "டைடானிக் கப்பல்" பயணியான 'இசிடார் ஸ்டாரஸ்' அடக்கம் செய்யப்பட்ட இடம். கல்லறைகள் இருக்குமிடங்களில் வினோத உடைகளில் எலும்புக் கூடுகளாக, ஆவிகளாக, பேய்களாக உயிரோடு இருக்கும்போதே இறந்தவர்களைப் போல நடமாடுவதும், வினோத ஒலி எழுப்புவதும், கும்மாளமிடுவதும், மதுவும், மாதுவுமாக ஒரே ஆர்ப்பரிப்புதான். எல்லாம் குளிர் நடுக்கியெடுக்கும் நள்ளிரவில்...?
ஹாலோவீன் ஏன்?
கடைகளில் " WHO DIED?" என்று பொறிக்கப்பட்டுள்ள டி-சர்ட்டுகள் செப்.11. சம்பவத்தை நினைவுகூறும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் ஹாலோவீன் தினம் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டுமா? நமது வீட்டு முகப்பில் கல்லறைகளையும் மரங்களில் பேய்கள்...ஆவிகள் தொங்குவதைப் போல அலங்கரிக்க வேண்டியதில்லையா? ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்! தீவிரவாதிகள் போலவும், விமானம் கட்டிடத்தை தாக்குவது போலவும் தயவு செய்து அலங்கரிக்காதீர்கள்! மேலும் கல்லறை அலங்கரிப்பில் இந்தக் கோரத் தாக்குதலில் உயிரிழந்த யாருடைய பெயரையும் எழுதியோ வைக்காதீர்கள்!
இறந்தவர்கள் பூமிக்கு நடந்து வரும் தினம் இது என்பது சிலரது நம்பிக்கை ! அதனால்தான் சிறுவர் சிறுமியர் வாலிபர், பெரியவர் என்ற பேதமின்றி பேய்களைப் போல ஆவிகளைப் போல உடையணிந்து வலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். Trick- or- Treat செய்து ஆவிகளைப் பரிசுகளால் மகிழ்விக்கச் செய்வதை தொடர்வோம்.
யாருடைய நம்பிக்கை எப்படியிருந்தாலும் ஹாலோவீன் இரவு என்பது இறந்து போன நம்மவர்களுக்காக நாம் செய்யும் மரியாதை! அவர்களைக் கெளரவப்படுத்தும் அந்த நிகழ்வை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது? அது மட்டுமா, அநேகமாக முதல் தடவையாக தங்கள் குழந்தைகள் முகமூடி அணிந்து "Trick-or-Treat" போகும் போது பெற்றோர்களுக்கு புதிய பல அறிமுகங்கள் கிடைக்கும்.
கடைகளில் ஹாலோவீன் அடையாள வில்லைகள், பூசணிக்காய் முகங்கள், விதவிதமான ஹாலோவீன் உடைகள், வகைவகையான ஹாலோவீன் கேண்டிகள், கல்லறைத் தூண்கள், ரத்தம் சொட்டச் சொட்ட உடம்பின் பாகங்கள், வினோத ஒலியெழுப்பும் ஒலி, ஒளி நாடாக்கள், மக்களை திகில் கொள்ளச் செய்யும் ஆயிரக்கணக்கான அலங்கரிப்புப் பொருட்கள் என்று பல பில்லியன் டாலர் புரளுகின்ற ஹாலோவீன் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் பணப் புழக்கம் வெகுவாகப் புழங்கும் ஒரு வெளிச்ச விழாதான் ஹாலோவீன் விழா.
ஹாலோவீன் இப்படித்தான்.......(Flash Back) நான்காம் நூற்றாண்டில் ரோமச் சக்கரவர்த்தியாக இருந்த கான்ஸ்டண்டைன் காலத்தில் இறந்தவர்களின் நினைவாக அக்டோபர் மாதம் 31ம் தேதியை மரித்தோர் தினம் என்று கொண்டாடத் தலைப்பட்டனர்.
ஏழாம் நூற்றாண்டில் மே மாதத்தில் அனைத்துப் புனிதர்கள் நாள் (ALL SAINT'S DAY ) என்று கொண்டாடினர். 9ம் நூற்றாண்டில் இந்த நாள் நவம்பர் 1ம்தேதியாக மாறியது. அப்போது வாழ்ந்த பாகான் என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அற்ப ஆயுளில் இறந்தவர்கள் ஆவியாக, பேயாக அக்டோபர் 31ம் தேதி வருவதாக நம்பி அந்த நாளை அனைத்து ஆவிகள் தினமாக ( ALL HALLOW'S EVEN) என வழிபட்டனர். 10ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் நவம்பர் 2ம் தேதியை " அனைத்து ஆத்மாக்கள் தினம் " (ALL SOULS' DAY ) என இறந்து போன அனைத்து ஆத்மாக்களுக்காக ஏற்படுத்தினர். இந்த மூன்று தினங்களும் அடுத்தடுத்து வந்ததால் சில நாடுகளில் இதை ஒருங்கிணைத்து ஒன்றாக்கினர். ஹாலோவீன் என்பதின் அடையாளச் சின்னமாக சூனியக்காரி உருவத்தை படு விகாரமாக ஏற்படுத்திக் கொண்டனர்.
இங்கிலாந்தில் இந்த நாளில் துடைப்பக் குச்சியில் ஒருவிதமான களிம்பை தடவி வீட்டுக்கு வெளியே வைத்து விடுவார்களாம். பேயாக உலவும் ஆவிகள் இந்த துடைப்பக் குச்சியை எடுக்கும் போது அதிலுள்ள களிம்பு ஒட்டிக் கொள்வதால் கால்கள் தரையில் பாவாமல் வெகுவேகமாக நிலத்துக்கும் கடலுக்கும் மேல் பறந்து போய் விடுவதாக நம்பி இப்படிச் செய்து வந்திருக்கின்றனர்.
இதனால் வீட்டுக்கு வந்தது விளக்குமாற்றோடு போச்சு என்று சொல்லிக் கொள்வார்களாம். ஐரிஷ் நாட்டில் ஸ்டிங்கி ஜேக் என்ற கட்டுக் கதை சொல்லபடுகிறது. ஸ்டிங்கி ஜேக் சாத்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அதன் படி உயிரோடு இருந்தவரை ஜேக்கிற்கு எந்த தீங்கும் செய்யவில்லையாம். ஜேக் இறந்த பிறகு சுவர்க்கத்திற்கு போகும் போது இருட்டாக இருந்ததால் வழி தெரியவில்லையாம். அப்போது சாத்தான் சொர்க்கத்துக்கு போக விடாமல் தடுத்து எரியும் நெருப்புத் துண்டை வீசி எறிந்ததாம்.
ஜேக் அந்த நெருப்புத் துண்டை டர்னிப் காயில் வைத்துப் பிடித்துக்கொண்டு அந்த வெளிச்சத்தில் சொர்க்கம் போய் சேர்ந்ததாக கதை. ஸ்காட்டிஷ் குழந்தைகள் இன்றும் இதனை நினைவு கொள்ளும் வகையில் டர்னிப்பை வெட்டி மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இன்றும் பெரிய பெரிய பீட்ரூட்டைப் பயன்படுத்துகின்றனர்.
ஸ்காட்டிஷ், ஐரிஷ் இனத்தவர்கள் அமெரிக்காவில் வந்து குடியேறிய போது டர்னிப், பீட் ரூட், உருளைக் கிழங்குக்குப் பதிலாக பூசனிக்காயை அலங்காரப் பொருளாக வெவ்வேறு வடிவங்களில் வெட்டி வீடு தோறும் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஐரோப்பியர்கள் வருடத்தில் இந்த அக்டோபர் மாதத்தில் மிகவும் கடினமானதாக கருதுவார்கள்.
ஏனெனில் நடுக்கி எடுக்கும் குளிர் துவங்கும் இம்மாதத்தில் குளிர் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை வீட்டில் சேகரித்து வைக்க வேண்டும். வீட்டுக்குள் வெப்பமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு வெளியே ஆவிகள் உலவும் என்றும் அதனால் அவைகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு வீட்டுக்கு வெளியே போகும் போது அடையாளம் தெரியாமலிருக்க முகமூடிகளை அணிந்து செல்லத் துவங்கினர்.
இது மெல்ல மெல்ல ஒரு வேடிக்கை நிகழ்வாக மாறி குழந்தைகள் வினோத உடைகள் முகத்திற்கு கவசம் அணிந்து அண்டை அயலாரை பயமுறுத்துகிற பாசாங்குதனை செய்யத் துவங்கினர்.
இங்கிலாந்தின் ஒரு பகுதியில் ஹாலோவீன் தினத்தில் வீடு வீடாகப் போய் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள். கேக்குகள், பணம் என்று அளிப்பதை இன்றும் காணலாம். ஸ்பானியர்கள் கல்லறைக்குச் சென்று கேக்குகளையும் பருப்பு வகைகளையும் வைத்து ஆவிகளை மகிழச் செய்வார்களாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.