தைப்பொங்கல் - உழவர் திருநாள்
நோர்வே நக்கீரா
தைப்பொங்கல் என்றவுடன் சக்கரைப்புக்கை, வடை, பாயாசம், வெடிகள் என குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை கொண்டாட்டமாகவே இருக்கும். தமிழர்களால் கொண்டாடப்படும் இத்தைப்பொங்கலை பலரும் பல மாதிரிப் புனைகிறார்கள். தைப்பொங்கலை தமிழர் திருநாள் என்றும் உழவர் திருநாள் என்றும், தமிழர்களின் வருட ப்பிறப்பு என்றும் பலமாதிரிப் புனைவுகளுடன் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படியானால் தைப்பொங்கல் என்றால் என்ன?. இதற்கு விடைகாண விளைகிறது இக்கட்டுரைப் பார்வையின் கோணங்கள்.
பொங்கும் முறை
சூரியன் எழுவதற்கு முன்னர் எழுந்து குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து, கோலம் போட்டு, பொங்கும் பகுதி மா, மாக்குறுணல், செங்கட்டி தூள் கொண்டு வரையறுக்கப்பட்ட பின், முத்தத்தில் சூரியன் எழும் திசையை நோக்கிப் பொங்கல் பானை வைக்கப்படும். வரையறுக்கப்பட்ட பகுதியின் வடகிழக்கு முலையில் தலைவாழை இலையில் நெல்லிட்டு, அதன் மேல் நிறைகுடம் கும்பம், வாழைப்பழம், வாழைப்பழத்தில் சாம்பிறாணிக்குச்சி, வெற்றிலையில் பாக்குச்சீவல், சாணத்தில் பிடிப்கப்பட்ட அறுகம்புல்லுப் பிள்ளையார் ஒரு குவளையில் பசும்பால் அறுகம்புல்லுடன் வைக்கப்படும். முக்கியமாக வசதி உள்ளவர்கள் வெண்பொங்கலுக்கு ஒரு பானையும் சக்கரைப் பொங்கலுக்கு ஒரு பானையும் வைத்தாலும் வெண் பொங்கலே விழாவின் முக்கியஸ்தர் ஆவார்.
பொங்கலுக்கென்று களிமண்ணில் அடுப்புப் பிடிக்கப்பட்டுச் சாணியினால் மெழுகப்பட்டுத் தயாராக இருக்கும். இது காலப்போக்கில் செங்கட்டியில் தொழிற்சாலை அச்சுக்களில் வார்த்த அடுப்புகளாக மாறியதுமுண்டு. ஆரம்ப காலங்களில் மூன்று கல்லிலேயே வைத்துப் பொங்கினார்கள். அதாவது காலத்துக்கேற்ற மாற்றங்களையும் பொங்கல் கிரகித்து வந்திருக்கிறது என்பதையும் காணலாம். பானையில் நீருடன் பசும்பாலும் சேர்ந்து விடுவார்கள். தண்ணீர் கொதித்துப் பொங்கி வழிவதற்காக நெருப்பைக் கொஞ்சம் அதிகமாகவே வைப்பார்கள். பால் விட்ட காரணத்தினால் நுரை வரை கட்டி ஒரு பக்கம் சரியும். அப்போது குஞ்சு குருமன்களுக்கு ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்கும். பொங்கல் சரியும் போதுதான் வெடி கொழுத்த அனுமதி தருவார்கள். அப்போது அயல்வீடுகளுக்கும், ஏன் ஊருக்கேத் தெரியும் பொங்கல் இந்த வீட்டில் சரிந்து விட்டது என்று. பொங்கல் எந்தப் பக்கம் சரிகிறது என்பதை வைத்து அடுத்த வருடம் விளைச்சல் எப்படி இருக்கும் என்று கணிப்பார்கள். முக்கியமாகப் பொங்கல் சரிவது வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு என்பதே விருப்புக்குரியதாக இருக்கும். இதற்கும் பல காரணம் உண்டு.
பொங்கல் சரிந்ததும் புத்தரிசி (சிவப்பரிசி) இட்டுப் பொங்கல் தொடரும் பேளை அருகில் வடை மோதம் முறுக்கு சிப்பி எனத் தின்பண்டங்களும் தயாராகும். பொங்கல் தயாரானதும் வடக்குத் தெற்காக சூரியனுக்கு எதிராகத் தலை வாழையிலையில் பொங்கல் படைக்கப்பட்டு தின்பண்டங்களும் வைக்கப்படும். வடக்குத் தெற்காக தலை வாழையிலையில் படைப்பதற்கும் காரணம் உண்டு. அதாவது சூரியன் வடக்குத் தெற்காக உள்ள அச்சிலே கிழக்கு மேற்காகவே உலகை வலம் வருவார். குடும்பத்திலுள்ள அனைவரும் சூரியனை நோக்கி நின்று தேவாரங்கள் பாடி உழவுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்துவார்கள். சூரியனுக்காய்ப் படைக்கப்பட்ட படையல் நீர் தெளித்த பின் அனைத்திலும் சிறிது சிறிது எடுத்துப் போய் முதலில் காகத்தை அழைத்து அவற்றைக் கொடுப்பார்கள். பொங்கல் நாளில் காகங்களும் நேரமின்றி (பிசியாக) இருக்கும். பின்னர் வீட்டுப்பிராணிகள் அனைத்துக்கும் கொடுத்த பின்னர். அயலவர்களுக்கும் உழவில் உதவிய தொழிலாளருக்கும், முக்கியமாக ஊரில் பொங்காதவர்களுக்கும் (மரணம் சம்பவித்த வீடுகளுக்கு), வேற்று மதத்தவர் களுக்கும் படையல் அனுப்பப்படும்.
தைப்பொங்கலை சரியாக அவதானிப்பீர்களானால் பல சமூகம் சார் விழுமியங்கள், கலாசாரம், பண்பாடுகள், மனிதநேயம், ஒன்றுமை, மேம்பாடு போன்று பல நற்குணங்களையும் பல ஆழமான விழுமியத் தொடரையும் காணலாம். இதைத் தமிழர் திருநாள் என்று யாரும் கூறியதில்லை. தமிழர்களின் உழவர் திருநாள் என்றே இது வழங்கப்பட்டு வந்தது.
பார்வையின் கோணங்கள்
இன்று இப்பொங்கல் பலரால் தமக்கேற்றமாதிரி, தத்தமது வசதிகளுக்கு ஏற்றவாறு, அரசியல் பிரமுகத்துவத்திற்கு ஏற்ற வகையில் பொதுமக்கள் குழப்பப்படுகிறார்கள். இது எமது வருங்காலச் சந்ததியை இன்னும் குழப்பங்களுக்கு உள்ளாக்கி ஒர் ஒழுங்கில்லா தன்மை வெறுப்பு மனப்பான்மையை உருவாக்கும். அதனால் தான் நாம் எப்படித் தைப்பொங்கலைக் கொண்டாடி வந்தோம் என்பதை எழுத வேண்டி இருந்தது.
தையில் வருவதால் தைப்பொங்கல் என்றால் அது ஏன் 14, 15ல் வரவேண்டும்? சரி மாதத்தின் நடுநாள் என்றால் 15, எதற்கு 14 திகதி? எதற்காகச் சூரியனை நோக்கிப் பொங்கப்படுகிறது? உழவுக்கு உதவியவர்களுக்கு சம்பளம் கொடுத்த பின்னர் அவர்களுக்கு எதற்கா படையலும் புதுப்புடவைகளும்? தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் எதற்கு மாட்டுப் பொங்கல்? போகிப் பொங்கல்? எமது காலங்களில் உயரமாக வளர்ந்து வெள்ளத்தின் மேல் படுத்துக் கிடக்கக் கூடிய பெரும் போகப் பெரிய நெற்களே விளைவிக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் சிறுபோக மூன்று மாதத்தில் விளைச்சல் தரும் நெல் வகைகள் கண்டு பிடிக்கப்பட்டன. இருப்பினும் தை மாதக் கடைசி வரை வெள்ளம் நிற்பதனால் விளைச்சல் தை மாத்தின் பின்னரே கிடைக்கும். அப்போ எதற்கு இந்தப் பொங்கல் தை மாதத்தில் வருகிறது என்ற கேள்வியும் எழலாம்.
தைப்பொங்கல் என்ற பெயரிலேயே அதனுடைய அர்த்தம் ஆழமாகப் பொதிந்திருப்பதைப் பார்க்கலாம். தையில் வரவேண்டியது பொங்கப்பட வேண்டியது என்பது கண்கூடு. பொங்கலுக்கு அரிசி, நெல் என்பன முக்கியமாகிறது. இதை தமிழ் வருடப்பிறப்பு என்றால் பதனி (கேக்) வெட்டியோ, மிருகங்களை வதைத்தோ, தண்ணியடித்தோ மேசைக் கதிரைகளில் இருந்தோ கொண்டாடி வந்திருக்கலாமே. ஏன் இப்படி பழக்க வழங்கங்கள் இருக்கவில்லை என்பதை குழப்பங்களை ஏற்படுத்துபவர்களும் குழப்பிப் போனவர்களும் கவனிக்க கடவது. இது எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்று தனிமுறை உண்டு. இது இலங்கை இந்தியாவில் தமிழர்களால் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
முழு விளைச்சலானது தை மாதத்தின் பின்பு கிடைத்தாலும் பயிர் பால்கட்டி அவலுக்குத் தயாராக இருப்பது தைமாத நடுப்பகுதியிலாகும். முழங்காலளவு வெள்ளத்தில் முற்றிய கதிர்களை அறுத்து வந்து வணக்க அறையில் (சாமியறையில்) தொங்க விடுவார்கள். இதை புதிர் எடுப்பு என்பர். நெற்பயிர் செய்கையை வெள்ளாமை என்பர். வெள்ளத்தை ஆண்டுதான் பயிர் செய்ய முடியும். வெள்ளத்தை ஆள்வதற்கு வரம்பு உயரமாக இருந்தல் அவசியல். இதனால்தான் அரசனை வாழ்த்தும் போது “வரப்புயர்க” என்றார் ஔவையார். வரப்புயர நீர் உயரும். நீருயர நெல்லுயரும், நெல்லுயர குடி உயரும், குடி உயர்ந்தால் கோல் உயர்வான். வள்ளுவன் கூட “உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் மற்றையோர் தொழுதுண்டு பின்செல்வர்” என்றார். ஆக உழவு என்பதன் முக்கியத்துவமும் அத்தியாவசியமும் அன்று எப்படி என்பது அறிதகு நிலையாகிறது. இங்கே விளைச்சலே கொண்டாடப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. இதைத் தைபொங்கல் அல்லது உழவர் திருநாள் என்றார்களே தவிர தமிழ் வருடப்பிறப்பு என்று யாரும் கூறியதில்லை. இதில் புழுகுகளும் தேவையில்லை.
இறை நிந்தகர்கள், உழவுத் தொழில் செய்யாதோர், அரசியல் போக்குக் காட்டுவோர், மதம் மாறியோர், மாற்றோர், வேற்று மதத்தவர்கள் எனப் பலதும் தமக்கு ஏற்றால் போல் உழவர் திருநாளை வரையறுக்க முயல்கிறார்கள். அன்று பெரும்பான்மையாக இந்துக்கள் உழவர்களாக இருந்த காரணத்தினால் இந்து மதத்தின் ஆதிக்கம் தைப்பொங்கலில் இருப்பதைக் காணலாம். தமிழர்க்கு என்று ஒரு தனி வருடப்பிறப்பு இல்லாத காரணத்தினால் தைப்பொங்கலை வருடப்பிறப்பாக அறியாமையினர் அறிவிக்க முயல்கின்றனர்.
தைப்பொங்கலில் மட்டுமல்ல தமிழர்களிலும், தமிழிலும், இந்து மதத்தின் பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. முக்கியமாகத் தைப்பொங்கலை திதியை பார்த்தே கணித்தார்கள். இதனால் சில வேளை 14ம் திகதியும் சில வேளைகளில் 15ம் திகதியும் பொங்கல் வருகிறது. நாம் இலங்கையில் பாவிக்கும் பஞ்சாங்கமானது தமிழ் வருடக் கணிப்பீட்டுடன் இரகுநாதையருடையது. ஆனால் இந்தியாவில் திருக்கணிதம் என்ற முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் சில மணித்தியாலங்கள் ஒரிரு நாட்கள் வேறுபாடு உள்ளது. அதாவது நாம் வாழும் பகுதி எந்த கிடை நெடுங்கோடுகளுக்கு இடையில் அமைகிறது என்பதைப் பொறுத்தே கிரகங்களின் நிலை இருக்கும். இந்தப் பஞ்சாங்கங்களின் வேறுபாடுகளாவன ஒருவர் தெருவில் வந்தவுடன் வந்துவிட்டார் என்பார். மற்றையவர் வீட்டுக்குள் வந்ததும் வந்துவிட்டார் என்பார். இதுவே நேர நாள் மாற்றத்துக்குக் காரணமாகிறது.
இனிச் சாத்திர முறைப்படி எப்படி தை14,15ல் பொங்கல் நாள் பொங்கும் நாள் ஆகிறது? உழவுக்கும், உழவர்களுக்கும், தைப்பொங்கலுக்கும் சூரியனே காரணகர்த்தா என்ற பின் சூரியனுடைய சுழற்சி என்பது முக்கியமாகிறது. சூரியபகவான் சித்திரை 14 மேடராசியில் இருந்து ஒவ்வொரு மாதமாக ஒவ்வொரு வீட்டிலும் இருந்து வருவார். சரியாக தை14,15 ல் தனுர் ராசியில் இருந்த சனி பகவான் தன் ஆட்சி வீடான மகரத்தினுள் நுழைவார். சனீஸ்வரனே தானியங்களுக்கும், விளைச்சலுக்கும் அதிபதியாவார். இங்கே கவனியுங்கள் நெல் விளைந்து அறுவடையாகும் காலங்கள் தை ,மாசி இந்த இரண்டு மாதமும் சனியின் ஆதிக்கத்துக்குரிய மாதங்களாக உள்ளதைக் காண்க. கிரகங்களும் அதன் பலன்களும் எப்படி ஒற்றுமைப்படுகிறது என்பதையும் அறிக.
இதே போன்று இராசிகளின் முதல் வீடான மேடத்துக்குள் சூரியன் பிரவேசிப்பது அதாவது ஒரு சுற்று முடிந்து புதுச்சுற்று ஆரம்பிப்பதே தமிழ், சிங்கள, இந்து, பௌத்த வருடப் பிறப்பாகும். என்றும் சுற்றின் ஆரம்பம்தானே புதியது. அதுதானே புது வருடமாக இருக்க முடியும்.
தைப்பொங்கலை தமிழ் வருடப்பிறப்பு என்று மக்களைக் குழப்புவோரின் கவனிக்கவும். தைப்பொங்கலுக்கு அடுத்தடுத்து நாட்களில் மாட்டுப் பொங்கல், போகிப் பொங்கல் வருகிறதே. அது எதற்கு? எதற்கு மாட்டுக்கு மட்டும் பொங்கல்? பன்றிப் பொங்கல், பூனைப் பொங்கல், நாய்ப் பொங்கல் என்று தமிழினம் தொடர்ந்து பொங்கிப் பெருகியிருக்கலாமே. வருடம் முழுவதும் பொங்கலாகவே இருந்திருக்குமே. ஏன் அப்படியில்லை என்பதையும் அறிக.
இனியாவது குழப்பங்களை விடுத்து யாதார்த்தம், உண்மை நிலை, பண்பாடு, கலாச்சாரம் விழுமியங்கள் என்பனவற்றை உணர்ந்து எதிர்கால எம் சமூகத்துக்கு வழி காட்டுங்கள். உளவுக்குச் சூரியன் அவசியம் என்பதை உலகிலுள்ள அனைத்து இனமும் கலாச்சாரங்களும் அறிந்திருக்கின்றன. வட ஐரோப்பா, வட துருவநாடுகளில் சூரியனை வரவேற்கும் ஒளி நாள் பற்றி இணையத்தில் எழுதியிருந்தேன். இன்று அந்த ஒளிநாள் கிறிஸ்தவத்தின் ஆக்கிரமிப்பில் நத்தாராக மாறியுள்ளது. இந்தச் சூரியனை வரவேற்கும் ஒளிநாளை எவரும் வருடப்பிறப்பு என்பதில்லை. இந்துக்கள், தமிழர்கள், முக்கியமாக உளவர்கள் சூரியனை மையமாகக் கொண்டே வாழ்ந்தார்கள். தமிழர்கள், இந்துக்கள், பௌத்தர்களின் நூர்டன் மித்தலெகி (வடதுருவமித்துக்கள்) வழிபாடுகளில் சூரியனும் ஒரு இயற்கைத் தெய்வமாகவே வணங்கப்பட்டிருக்கிறது. நோர்வே போன்ற துருவ நாடுகளுக்கு வடக்கே வாழும் ஒருவகை மங்கோலிய அடியைக் கொண்ட சாமர்களும் சூரிய வணக்கதையே கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இதனால்தான் இந்துக்களின் முதல் வேதமான இருக்கு வேதத்தில் இயற்கை வணக்கமே அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. அதாவது தமிழுக்கு தை முதல்நாள் அதாவது ஆங்கிலத்துக்கு 14 சூரியன் மகரராசியினுள் பிரவேசிக்கும் நாளாகும். இதுவே தைப்பொங்கல் உழவர்திருநாள் ஆகும்.
பொங்கலுக்கு ஊரில் நாம் வெடி கொளுத்திக் கொண்டாடினோம். அரசியல் மூளைச்சலவையில் பின் ஒருவருக்கு ஒருவர் வெடி கொளுத்தி விளையாடினோம். பின் துரோகிகள், இராணுவம் என்று வெடி கொளுத்தல் வளர்ந்து மனிதர்கள் அனுமார்களாகி நாடே வெடிகளால் கொழுத்துப்பட நாட்டை விட்டு ஓடிவந்து புலத்தில் புதைந்து கொண்டோம். ஊரில் ஒரு குடிசை என்றாலும் சிறு முற்றமாவது இருக்கும். எம்மில் பலர் முற்றமேயில்லா தொடர்மாடி கட்டிடங்களிலும், முற்றம் முழுவதும் பனிகொட்டிக் கிடக்கும் தேசங்களில் வாழ்கிறோம். இதனால் புலத்தில் புலனற்று பொங்கல் அடுக்களைகளில் (சமையலறைகளில்) மின்சாரத்தில் பொங்கப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்றங்களை ஏற்றாலும் பொங்கலின் பெருமையையும், உழவின் மகத்துவத்தையும், மனிதர்களின் நன்றி மறவா குணத்தையும், பகிர்ந்துண்ணும் பழக்கங்களையும், மிருகங்களின் மீதான நேசிப்புக்களையும், பொங்கலூடாக உங்கள் புதிய பரம்பரைக்கு எடுத்தியம்புங்கள். பொங்கல் தமிழர்களினதும் இந்துக்களினதும் உழவர்களினதும் பண்பாட்டுக் கலாசார விழுமியத் திருநாளாகும். இது ஒர் உழவர் திருநாள்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|