சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் சிறப்புகள்
முனைவர் ஜெ. ரஞ்சனி
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் தமிழால் தம்மை வளர்த்துக் கொண்டு தம்மால் தமிழையும் வளர்த்த தமிழ்வேந்தர். பிறந்து மொழிபயின்ற பின் தமக்காகவும், தமிழர்களுக்காகவும் தம்மை முழுமையாக ஒப்படைத்த தலைவர். தமிழ்நாட்டின் எல்லைகளைக் காத்து நின்ற தானைத் தலைவர். முத்தமிழ்க் காப்பிய வித்தகர். சென்னையைத் தமிழ்நாடாக்கிய செந்தமிழ் வீரர் என்று குறிப்பிட வேண்டும்.
இன மத கலப்புகளும் தமிழர் பண்பாடும்
இன சமயக் கலப்புகளால் தமிழர் பண்பாடு அழியவில்லை எனும் தமது ஆய்வை ம.பொ.சி. “இலக்கியங்களிலே இன சமயக் கலப்புகள்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இனக்கலப்பும் மதக்கலப்பும் ஏற்பட்ட சமய சகாப்தத்திலே தமிழருடைய பண்பாடு அழிந்தொழிந்து விட்டது என்று இலக்கிய ஆய்வாளர்கள் சிலரும் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. சைவ சாத்திரங்களிலே தலை சிறந்ததான திருமந்திரத்திலே, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிறார் திருமூலர். இதனைச் சமயவாதிகளேயன்றி பகுத்தறிவாளரும் தங்களுடையதாக்கிக் கொண்டு விட்டார்களே என்று குறிப்பிடுகின்றார்.
தமிழ் பண்பாட்டில் கடவுள் நம்பிக்கை
ம.பொ.சியின் நோக்கில் தமிழ்ப்பண்பாடு, கடவுள் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டதாகும். தமிழர், தமிழ், தமிழ்நாடு என்று பெயர்களைச் சொல்லி இயக்கம் நடத்துவோரில் ஒரு சாரர் பண்டையத் தமிழருக்குத் தெய்வம் கிடையாது, மதம் கிடையாது, பண்டிகை கிடையாது என்றெல்லாம் ஒரு தலையாகப் பேசியும் எழுதியும் வருவதற்கு வருத்தம் தெரிவிக்கின்றார். சமயத்தில் முற்போக்கான கொள்கைகளை வலியுறுத்துவோரை வைதீகர்களில் சிலர் “நாத்திகர்கள்” என முத்திரைக் குத்தி ஒதுக்குவது ம.பொ.சிக்கு இசைவானதன்று. ஆத்திகத்தின் பெயரால் நடத்தப்படும் சுரண்டல்களையும் ம.பொ.சி. எதிர்த்தார். ஒழுக்க சமயத்தை நிலைநாட்ட வேண்டியதின் அவசியத்தையும் ம.பொ.சி. பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ஆலய வழிபாடு தமிழிலேயே நடைபெற வேண்டும் எனக் கூறுவதோ, வழிபாட்டுத் தொழிலில் சாதி வேற்றுமை கூடாதென்று வற்புறுத்துவதோ நாத்திகவாதமல்ல. நாட்டில் பரவி வரும் நாத்திகத்தைத் தடுக்கவும், ஆத்திகத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் கொடுமையை ஒழிக்கவும் அதுவே சரியான வழி.
சிலப்பதிகார இயக்கம்
சிலப்பதிகார மாநாடுகள், சிலப்பதிகார வகுப்புகள், சிலப்பதிகாரப் பேருரைகள், ஆய்வுகள் மூலமாகச் சிலப்பதிகார இயக்கத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. தமிழ் இலக்கியங்கள் பற்றிய மாநாடுகள் ம.பொ.சி.யின் சிலப்பதிகார இயக்கத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளன. ஆனால், சிலப்பதிகாரத்திற்காக முதன்முதலில் ஒரு மாநாட்டை ம.பொ.சி தான் நடத்தினார். 24.03.1951 அன்று சென்னை இராயப்பேட்டையில் கண்ணகி பந்தலில் நடத்தப் பெற்ற இம்மாநாட்டில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் பேராசியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பேரறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை, டாக்டர் ந. சஞ்சீவி முதலான தமிழறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தைத் தேர்வு செய்து அதைப் பரப்புவதற்கு ஓர் இயக்கத்தை உருவாக்கியதற்கான காரணத்தை ம.பொ.சி. விளக்குகின்றார்.
“தமிழரசு கழகத்தின் சார்பில் காங்கிரசு பாரம்பரியத்தின் பிரதிநிதியாகவும் நின்று சிலப்பதிகாரம் காப்பியத்தை மக்கள் மத்தியிலே கொண்டுவர நான் விரும்பியதற்கு காரணம் உண்டு. திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ நான் விரும்பாதவனல்ல. மனமார விரும்பக் கூடியவன். ஆயினும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக் கூடிய இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரம் தான் வேறில்லை”
என்று குறிப்பிடுகிறார்.
வடக்கெல்லைப் போராட்டம்
1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் தேதியன்றே தமிழரசுக்கழகம் தமிழகம் வடக்கு எல்லை மீட்சிக் கிளர்ச்சியைத் தொடங்கினார். சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், திருத்தணி, பல்லவனேரி, கங்குந்திக்குப்பம் ஆகிய ஆறு தாலுக்காக்களையும் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்று போராடியவர் ம.பொ.சி. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய மூன்று தாலுக்காக்களில் தான் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். அதனால், அப்பகுதியைக் கோரியதாகக் குறிப்பிடுகிறார்.
திருப்பதியை ம.பொ.சி. கேட்டதற்கான காரணம் இலக்கிய ஏடுகளிலுள்ள சான்றுகள் தமிழினத்தாருக்குச் சாதகமாக இருப்பதாலும், அவற்றை மட்டும் காட்டிக் கேட்டதையும் தன் போராட்ட வாழ்க்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளை மீட்க முயன்றதற்காகத் தமிழர் ஆட்சியிலேயே எட்டு முறை சிறை வைக்கப்பட்டவர் ம.பொ.சி. என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான போராட்டம்
தமிழ்நாடு எனும் பெயர் மாற்றம் கோரி தீர்மானத்தை முதன்முதலில் நிறைவேற்றியது தமிழரசு கழகமே. 1955 ஆம் ஆண்டு நவம்பர் 29ல் தமிழரசுக் கழகத்தின் செயற்குழு கூடி தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை “மெட்ராஸ் ஸ்டேட்” என்று அழைக்கப்படுவதை எதிர்க்கின்றது. மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும் எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இப்போராட்டத்தில் ம.பொ.சி தீவிரமாக ஈடுபட்டு வெற்றியை நிலை நாட்டினார்.
சைவ சமயப்பற்று
தமிழ்நாட்டிற்கே உரிய சைவ உணர்வு அழியக்கூடாது என்று விரும்புபவர்களில் ம.பொ.சி.யும் ஒருவர். சிவம் என்பது அனாதியான ஒரு பொருள். அதனை நாம் அணுகுவதற்கு ஒரு சாதனமாகத் தான் சைவம் தோன்றியது. ஆம், சிவம் கர்த்தா, சைவம் கருவி. கருவியை கர்த்தாவாக கருதும் மயக்கம் கூடாது. சிவவழிபாடு அனாதியானது என்பதற்கு நம் தமிழில் உள்ள சங்க இலக்கியங்களே சான்று ஆகும். ம.பொ.சி. சைவம் தமிழர்களின் மதம் என்று குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கதாகும்.
சைவம் தமிழரிடையே தோன்றிய சமயம் என்றும், தமிழர் எல்லோரும் முன்னொரு காலத்தில் சைவர்களாக இருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைய நிலைமை வேறு. பிற்காலத்தில் தமிழரிலே பலர் வேறு சமயங்களைத் தழுவிச் சைவ சமயத்திற்கு அயலாராகி விட்டனர். ஆம், தமிழகத்திலே உள்ள சமண, பௌத்த, இசுலாமிய, கிறித்துவ மக்களிலே மிகப்பெரும்பாலோர் மதம் மாறியவர்களே, மதம் மாறிய பின்னரும் அவர்களெல்லாம் தமிழினத்தவரே ஆவார்.
சைவர் என்ற சொல்லுக்கு, தமிழர் என்று பொருள் சொல்வதற்கில்லை. தமிழ்மொழியும், தமிழ் நிலமும் சைவர் அல்லாதாருக்கும் சொந்தமாகும். இனம் வேறு, மதம் வேறு. இந்த உண்மையை சைவ சமயப் பிரச்சாரங்கள் மறந்து விடக்கூடாது என்று சைவ சமயத்தைப் பற்றி விளக்குகின்றார்.
சர்வமத சமரசம்
சிலப்பதிகாரம் முதல் பாரதி இலக்கியம் வரையில் பேணப்பெற்று வந்த சர்வமத சமரசக் கோட்பாட்டைப் பற்றி ம.பொ.சி. எடுத்துரைத்துள்ளார்.
எனக்குள்ள தமிழன் என்னும் இன உணர்ச்சியும், இந்தியன் என்னும் சமுதாய உணர்ச்சியும் மதப்பூசல்களிலிருந்து என்னைக் காப்பாற்றி வருகின்றன என்று ம.பொ.சி. கூறியது சர்வமத சமரசம் பற்றி பேச அவருடைய தகுதியை உணர்த்துகிறது. சர்வமத சமரசம் என்பது சிவன், திருமால், அல்லா, கர்த்தர், அருகர், புத்தர் ஆகிய அனைத்துத் தெய்வங்களையும் ஒவ்வொருவரும் வழிபடுவது தான் சர்வமத சமரசம் என்று ம.பொ.சி கருதவில்லை. அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றார். அத்தகைய குழப்பத்தால் பக்தி வளராது என்றும் மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களைத் துதிக்கலாம். அதே சமயத்தில், பிற தெய்வங்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி துதிப்பதும், மதிப்பதுமாக இருந்தால் போதும். ஒரு மதத்தாரின் தெய்வத்தை இன்னொரு மதத்தார் பழிக்க வேண்டாம். இதுதான், சர்வமத சமரசத்திற்கு வழி என்று குறிப்பிடுகின்றார்.
தமிழர் கலாச்சாரம்
தமிழர் கலாச்சாரம் என்ற தலைப்பிலே ம.பொ.சி. 31.10.1954-ல் செங்கோல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆரியமதம், வேங்கடத்திற்குத் தெற்கே தனது தனித்தன்மையை இழந்து தமிழ்ப்பண்பு வழியும், தமிழருடைய பழக்கவழக்கப் படியும், திரிந்துவிட்டதை எவரும் தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தமிழ் பண்பு வழி திருந்த மறுத்ததால் தான் சமணமும், பௌத்தமும், ஆரிய மதத்துக்கு எதிராகத் தமிழகத்தில் வாழ முடியவில்லை.
வேங்கடத்திற்குத் தெற்கே புகுந்த புற சமயக் கருத்துக்கள், கதைகள் எதையும் தமிழர்கள் ஏற்க மறுத்து எதிர்த்துப் போராடியதில்லை. அவற்றைத் தமிழ் வழிப்படுத்தி தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். குறிப்பாக ஆரிய மதப்பண்புகளைக் கூறும் ராமாயணம், மகாபாரதம் போன்ற மாபெரும் காப்பியங்களைத் தமிழர்கள் விரும்பி ஏற்றனர். வெறுத்து ஒதுக்கவில்லை. ஆனால், அவற்றை மூலமொழியில் ஏற்க மறுத்து மொழி பெயர்ப்பின் வடிவில் வரவேற்று வாழ்வளித்தனர். தமிழில் மொழிபெயர்த்ததோடு நிற்காமல், அக்காப்பியங்கள் கூறும் பண்பாட்டினைத் தமிழ் வடிவிலும் திருத்தி கொண்டனர்.
சமய வேற்றுமைகளையெல்லாம் விரோதங்களாக வளர்த்து கொள்ளாமல், சர்வ சமயங்களையும் சமரசமாகப் பாவிக்கும் பெருமை தமிழருக்கே உரியது. ஆம். பண்பட்ட தமிழ் அதற்குப் பயன்பட்டது என்று ம.பொ.சி. கூறியுள்ளார்.
தமிழர் திருநாள்
“சாதி சமய கட்சி வேறுபாடின்றி தமிழினமே ஒன்றுபடு” எனும் முழக்கத்திற்குச் செயல் வடிவம் தர, பொங்கல் திருநாளைத் தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன்முதலில் ஏற்பாடு செய்தவர். 1946 ஆம் ஆண்டு ஜனவரி 14ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.
கட்டபொம்மன் விழா
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன்முதலில் விடுதலைப் போரைத் துவக்கி வைத்தவர், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் என பிரகடனப்படுத்தி தமிழரசுக் கழகம் கட்டபொம்மன் தூக்கிலிப்பட்ட 16.10.1799ஆம் நாளை நினைவு நாளாகக் கொண்டாடும் வழக்கத்தையும், தனியாக 16.10.1944ல் சென்னை இராஜாஜி மண்டபத்தின் பின்புறத்திலுள்ள பூங்காவில் இவ்விழாவைத் துவக்கி வைத்த பெருமைக்குரியவர் ம.பொ.சி.
இளங்கோவடிகள் விழா
சிலப்பதிகார இயக்கம் எனப் பெயர் பெற்ற தமிழரசுக்கழகம் சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் நினைவு நாளை ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் கொண்டாட முதன்முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. முதல் விழா 14.04.1950ல் சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதில் ம.பொ.சி., டாக்டர் மு.வ., கலைஞர், டி.கே.சண்முகம், பம்மல் சம்பந்த முதலியார் முதலானோர் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், பண்பாட்டிற்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ம.பொ.சி.
தொகுப்புரை
தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு இவை மூன்றனுக்காகத் தம் வாழ்வையும், மூச்சையும் அர்ப்பணித்தவர், சிலம்புச் செல்வர் அவர்கள் ஆவார். இவர் மொழிச்சிந்தனை மிக்கவர். தமிழ்நாடு எல்லைகளை வரையறுத்தவர். தமிழருக்கான கொடியை வரைந்தவர். தமிழரசுக்கான, தமிழரசைக்காண தம் வாழ்நாளைத் தியாகம் செய்தவர், தமிழ் பண்பாட்டைக் காத்த மாவீரர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்றால் அது மிகையில்லை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.