கவிஞர் முடியரசனாரின் பூங்கொடியில் சாத்தனாரின் மணிமேகலை
முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ்
முன்னுரை
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த சமயத் தலைவரான புத்தரின் சிந்தனைகளைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்ற எண்ணத்தில் பாட்டுடைச் செய்யுளாகப் படைத்த காப்பியம் ‘மணிமேகலை’ ஆகும் இதைப்போலவே தமிழ்மொழியில் தமிழைப் பரப்புவதற்காக ஒரு காப்பியம் வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் பாரதிதாசன் மரபில் வந்த கவிஞர் முடியரசன் 1964 ஆம் ஆண்டு இயற்றிய காப்பியம் ‘பூங்கொடி’. இந்தக் காப்பியம் சாத்தனாரின் மணிமேகலையின் மீட்டுருவாக்கம் எனலாம்.
மீட்டுருவாக்கம் விளக்கம்
வாழ்வியற்களஞ்சியம், “மீட்டுருவாக்கங்கள் ஒரு வகை வசதிக்காகப் படைத்துக் கொள்ளப்பட்டவை. ஓர் இனத்தைச் சேர்ந்த மொழிகளில் கிட்டத்தட்ட ஒரே பொருண்மையைத் தரும் சொற்கள் வடிவத்தில் சிறிதுவேறுபட்டு அமைந்திருக்குமானால் அவ்வேறுபாட்டினூடே ஓர் ஒற்றுமையைக் கண்டு அந்த ஒற்றுமை எந்தெந்த மொழிகளில், எந்தெந்தச் சூழலில், எவ்வெவ்வாறு திரிந்தது என்று எடுத்து விளக்கும் குறியீடே மீட்டுருவாக்கம்” என்று விளக்கம் தருகிறது. இதைப்போன்று தி. சு. நடராசன் என்பார் மீட்டுருவாக்கம் என்பதற்கு “கட்டவிழ்ப்பு என்பது கொள்கை அல்லது சித்தாந்தம் என்பதன் கட்டுமானத்தை மறுக்கிறது அல்லது சிதைக்கிறது” என்று குறிப்பிடப்படும் செய்திகளின் அடிப்படையாக கவிஞர் முடியரசன் பூங்கொடியில் எவ்வாறான கட்டுடைப்பை மேற்கொண்டு பூங்கொடி காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பதை விளக்க முற்படுகிறது இந்தக் கட்டுரை.
கட்டமைப்பு
கட்டமைப்பு என்னும் சொல், ஒரு படைப்பின் உருவாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதன் பொருளைக் குறிக்கிறது. கட்டமைப்பின் விளக்கம் என்பது பற்றி சேம்பர்ஸ் அகராதியின் விளக்கம் வருமாறு: ஆழ்நிலைமனத்தில் புதைந்து கிடக்கின்ற எண்ணங்களின் வகைகள், நடத்தையின் தன்மைகள், சமூக உருவாக்கம் ஆகிய பொருள்களை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தன்மைகள், சமூக உருவாக்கம் ஆகிய பொருள்களை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இலக்கிய வடிவில் எவ்வாறு கட்டமைக்கபட்டுள்ளது என்பதே கட்டமைப்பு என்று குறிப்பிடலாம். சீத்தலைச் சாத்தனார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றிய மணிமேகலையும், 1964ஆம் ஆண்டு கவிஞர் முடியரசனாரின் பூங்கொடி காப்பியமும் பின்வரும் கட்டமைப்பினைக் கொண்டுள்ளன. சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் 30 காதைகளையும், கவிஞர் முடியரசன் எழுதிய பூங்கொடி காப்பியம் 31 காதைகளையும் கொண்டுள்ளன. இப்படிப்பட்ட இலக்கிய அமைப்பினைப் பற்றி ஆங்கிலத் திறனாய்வாளர் டி. எஸ். எலியட் மூன்று வகையாகக் குறிப்பிட்டுள்ளவற்றை ஒன்று “உத்திகளை மற்றவர்களைப் பார்த்து அப்படியே பின்பற்றுபவர்கள் ஒருவகைக் கவிஞர்கள்” (வ. ஹரிஹரன், தொ. மு. சி. ரகுநாதனின் கவிதை உலகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., (சென்னை,2010), ப. 82.) என்று குறிப்பிட்டுள்ளமை போலவே கவிஞர் முடியரசன், சாத்தனார் தமது காப்பியத்தில் அமைத்துள்ள அமைப்பையே பின் பற்றியுள்ளார் என்பது தெளிவு.
உள்ளடக்கம்
உள்ளடக்கம் என்பது நூலின் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை தொகுக்கப்பட்ட முறையைச் சுட்டுவது எனலாம். மேலும், உள்ளடக்கம் பற்றி தி.சு. நடராசன் என்பார் “இலக்கியத்தை ஆய்வுக்கென எடுத்துக்கொள்கிற போது, அதனைத் தனக்குள் பல உறுப்புகள்கொண்ட குறிப்பிட்ட ஓர் ஒழுங்கு அமைவுடன் கூடிய - ஓர் அமைப்பாக, அமைப்பியல் காணுகிறது. அமைப்பு என்பது ஒரு முழுமை. இந்த முழுமை, அதன் ஒவ்வொரு உறுப்பையும் பகுதியையும் குறிக்கும்.” என்று விளக்கம் தருகிறார். மேலும், இரண்டாயிரமாண்டுக் காலத் தமிழ்இலக்கிய வரலாற்றை நோக்கும் போது, சூழலுக்கேற்ற உள்ளடக்கமும் உள்ளடக்கத்திற்கு ஏற்ற வடிவமும் தொடர்ந்து மரபுக்கவிதைகளில் கையாளப்பட்டு வந்திருப்பதை உணரமுடிகிறது. மேற்கண்ட நிலையில் சாத்தனாரின் மணிமேகலையிலும், முடியரசனாரின் பூங்கொடியிலும் மொழிநடையாக ஆசிரியப்பாவை இருவரும் கையாண்டுள்ளனர். ஒரு நூலின் உள்ளடக்கம் சிறப்பாக அமைவதற்குப் படைப்பாளி எதைக் கையாள வேண்டுமோ அதைச் சாத்தனாரும், கவிஞர் முடியரசனும் பின்பற்றியுள்ளனர். உள்ளடக்கத்தில் கையாளவேண்டிய தலைப்பினை அடுத்து எந்தெந்த தலைப்பினைக் கொண்டு செல்லவேண்டும் என்று சிறப்பாகத் தெரிவு செய்து காப்பியத்தை அமைத்துள்ளனர். அவை பற்றி, மணிமேகலை பதிகம் உட்பட விழாவறை காதை முதலாக பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை வரை 30 காதைகளும் பூங்கொடி, தமிழ்த்தாய் வாழ்த்து உட்பட விழாவயர் காதை தொடங்கி விடுதலைக் காதை முடிய 31 காதைகளையும் கொண்டுள்ளன.
மணிமேகலை
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மணிமேகலை ”அறம்” தலைக்கப் பாடுபட்டாள். பூங்கொடி 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டது. தமிழ் நாட்டில் 1964ஆம் காலக்கட்டத்தில் மத்திய அரசால் இந்தி மொழி முதன்மை மொழியாக அனைத்து மாநிலமும் ஏற்க வேண்டும் என்ற சூழலை மையமாகக்கொண்டு படைக்கப்பட்ட பூங்கொடி ‘தமிழ்’ தழைக்கப் பாடுபடுகின்றாள்.
மேலேகண்ட செய்திகளை அடிப்படையாகக்கொண்டு முதல் இரு காதையிலும் முடியரசன் கட்டுடைப்பு செய்த செய்திகள், சாத்தனார் விழாவறை காதையில் சோழமன்னர்களால் நிகழ்த்தப்பெற்ற இந்திரவிழா நிகழ்வைக் கவிஞர் முடியரசன் அதைத் தமிழர்த் திருநாளாம் ‘தை’ முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவாகப் படைத்துள்ளார். சாத்தனார் விழா அறிக்கையை,
“திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி
வான மும்மாரி பொழிக”
(மணி 1: 31-32)
என்று யானைமீது அமர்ந்து முரசறைவோன் குறிப்பிடுவதாகப் படைத்துள்ளர் முடியரசன், பூங்கொடியில்
“தமிழர் திருநாள் தை முதல் நாளாம்
அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள்”
“நமக்கென மொழியும் நாளும்
உலகம் அறிய உணர்த்துவம் வாரீர்”
(பூங்கொடி பக். 4 - 5)
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாட அழைப்பு விடுத்து, நமது தாய்மொழியாம் தமிழை உலகுக்கு உணர்த்த வாரீா் என்று மக்களையும் ஒற்றுமை பரப்ப அழைக்கின்றார். இரண்டாம் காதையில் சாத்தனாரின், மணிமேகலை தனது பெற்றோர்களுக்கு உற்ற துன்பத்தைக் கேட்டவுடன் துறவு வாழ்க்கை மேற்கொள்வதாகப் படைத்துள்ளார்.
“மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்த லல்லது யாவது
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஆள்”
(மணி 2: 55-56)
என்ற வரியிலிருந்து பாட்டியாகிய சித்திராபதி, மணிமேகலையை இந்திராவிற்கு அழைத்து தம் தொழிற்படுத்த விரும்புதையும், மாதவி மறுத்துரைப்பதையும் படைத்துள்ளார் இதனையே, முடியரசன், அருண்மொழியின் கூற்றாக,
“… … ... … … … … என் வயி றீன்ற
மகளே யயினும் வள்ளியின் மகளே
பூங்கொடி என்று பொருந்தினேன் ஆதலின்
ஆங்கவள் தன்னை இசைத்துறை அறுத்துப்
பாங்குடன் பொது நலப் பணிக்கே ஆக்கினேன்”
(பூங்கொடி ப. 8.)
எனப் படைத்துள்ளார். சாத்தனாரின் கண்ட மணிமேகலை துறவு வாழ்க்கை வாழ முடிவுசெய்கிறாள். முடியரசன் கண்ட பூங்கொடி தனது தந்தை விட்டுச்சென்ற பொதுப்பணியாம் தமிழ்ப்பணியைச் செய்ய முற்படுகிறாள் என்று தமிழ்நாட்டைப் பற்றியும், மொழிச் சூழல் பற்றியும் முதல் இரு காதைகளில் கவிஞர் முடியரசன் கட்டுடைப்பு செய்துள்ளார்.
தமிழ்க் காப்பிய உலகில் புதுமைக் காதைகள் பற்றிய செய்திகள்
சாத்தனாரின் மணிமேகலை புத்தசமயக் காப்பியம். அதன் கதைத்தலைவியாகிய மணிமேகலை புத்தசமயக் கருத்துகளைப் பரப்புவதற்காகப் படைக்கப்பட்டாள். கவிஞர் முடியரசனின் பூங்கொடிக் காப்பியத்தில் தமிழ் மரபிற்கேற்ப புதுமைகளோடு படைத்துள்ள காதையாகப் படிப்பகம் புக்ககாதை, கல்லறைகாண் காதை, திறக்குறள் கற்றுத் தெளிந்த காதை, தொல்காப்பியம் உணர்ந்த காதை, இசைப் பணிபுரிந்த காதை, நூல் நிலையம் அமைத்த காதை, யாழ்நூல் பெற்ற காதை, சொற்பர் நிகழ்த்திய காதை, அறப்போர் நிகழ்த்திய காதை முதலிய காதைகள் தமிழறிஞர் இதுகாறும் கேட்டறியாகாதை என்றே குறிப்பிடலாம்.
பளிக்கறைபுக்ககாதை - படிப்பகம் புக்ககாதை - காதல் செய்தியை வெளிப்படுத்தியதில் முடியரசன் பண்பாட்டுக் கட்டுடைப்பைக் கையாண்டுள்ளார்.
மணிமேகலையில் உதயகுமரன், மணிமேலையின் மீதுகொண்ட காதலால் சுதமதியின் ஆலோசனையால் பளிக்கறையில் மறைந்து கொள்கிறாள். இதனைச் சாத்தனாரின்
“ஆங்கவள் தன்னையென் அணித்தேரேற்றி
ஈங்கியான் வருவேன்”
என்று எட்டிக்குமரனிடம் உதயகுமரன் கூறினான். இதில் சாத்தனாரின் மணிமேகலையின் மனக்குறிப்பை அறியாமல் உதயகுமரன் மணிமேகலையைத் தனது தேரேற்றிவருவேன் என்பதை, பூங்கொடியில் பூங்கொடியின் அழகில் மயங்கிய கோமகன் தனதுகாதலை வெளிப்படுத்திய முறை
“ஒண்டொடி அவள் மனஒப்புதல் பெற்றத்
தண்டமிழ் நிகா;க்கும் தையல் கொழுநன்
ஆவேன் யான்” (பூங்கொடி ப. 16.)
என்று முகுந்தனிடம் தமிழ்ப் பண்பாட்டின் உணர்வின்படி பூங்கொடியின் இசைவு பெற்று அவளுக்குக் கணவன் ஆவேன் என்று குறிப்பிட்டுள்ளமையில் கட்டுடைப்புச் செய்துள்ளார் என்பது தெளிவு. மேலும், இதே காதையில் மணிமேகலையில் சுதமதி உதயகுமரனுக்குக் கூறும் அறிவுரையை நோக்கும்போது, “அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் மகளிரின் கூறுமாறும் உண்டோ?” என்று அரசகுமாரனுக்கு அறிவுரை வழங்கும் நிலையாக அமைந்துள்ளது. இதையே முடியரசன் அல்லியின் அறிவுரையாகக் கூறும்போது, “செல்வம் நிறைந்தவனே பெருமையான கல்வியைக் கற்றவனே மங்கையர் அறிவுரை உனக்குத் தேவையெனில் நான் கூறுவேன்” என்று காப்பியத் தலைவியின் தோழி கூறுவதாகப் படைத்துக் காட்டியுள்ளார்.
சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை - கல்லறைகாண் காதையில் பகுத்தறிவு சிந்தனை
சாத்தனாரின் தமது காப்பியத்தில் மணிமேகலா தெய்வத்தை வெளிப்படுத்தும் போது தமது சமயக்கடவுளாகப் போற்றப்படும் புத்தரை வணங்கி அவரின் பெருமைகளை உரைப்பதை அ.மு. பரமசிவானந்தம் “சாத்தனாரின் மணிமேகலையில் பௌத்த சமய உண்மைகளை விளக்குகிறார். புத்த தருமத்தையும் புத்தசங்கத்தையும் பலவிடங்களில் விளக்குகிறார் என்பதை,
“ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன்
பாத பீடிகை பணிந்தன ளேத்திப்”
(மணி 6. 11-12)
மேலும், சுடுகாடு, வரம் கொடுக்கும் தேவர்கள் பற்றிக் குறிப்பிட்டு பின்பு மணிமேகலையை மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் சென்ற நிகழ்ச்சிகளைச் சாத்தனார் படைத்த தன்மையைக் கவிஞர் முடியரசன் தமது பூங்கொடியில் காலமாற்றத்தைக்காட்டித் தமிழ்ப் பகுத்தறிவுச் சிந்தனையுடன் படைத்துள்ளார்.
முத்தக்கூத்தன் கல்லறையைப் பூங்கொடிக்கும், அல்லிக்கும் அறிமுகப்படுத்த வரும் தாமரைக்கண்ணிஎன்னும் தமிழ்த் தேவதை மலர் சோலைக்குள் வரும்போது,
“தாமரைக் கண்ணி தமிழ்மொழி வாழ்த்திப்
பூமலர் மேனிப் பூங்கொடி தன்னொடு”
(பூங்கொடி ப. 25.)
பூங்கொடியில் தாமரைக்கண்ணிதோன்றும் இடமெல்லம் கவிஞர் முடியரசன் தமது தாய்மொழியாம் தமிழ்மொழியை வாழ்த்துவதாகப் படைத்துள்ளார். இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் பிறமொழியின் ஆதிக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தமது காப்பியத்தலைவி பொதுப்பணியாம் தமிழ்ப்பணியைப் பரப்பும் நோக்கில் படைத்துள்ளார்.
முத்தக்கூத்தன் கல்லறையைப்பற்றி தாமரைக்கண்ணி பூங்கொடிக்கும், அல்லிக்கும் எடுத்துரைத்தலில் பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தியுள்ளார் என்றே குறிப்பிடவேண்டும் சாத்தனார் மணிமேகலையில் சக்கரவாளக்கோட்டம் பற்றி மணிமேகலா தெய்வம் குறிப்பிடும்போது, சுடுகாடு என்றால் பயமாக இருக்கும், அங்கே பிணம் திண்ணும் பேய்கள் உள்ளது பாசப்பூதம் இருக்கும் என்று குறிப்பிட்டு அதைக்கண்டு பயப்படவேண்டாம் என்று படைத்துள்ளார். ஆனால், பூங்கொடியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பொரியாரின் சிந்தனையில் தாமரைக்கண்ணி பேசுவதாகப் படைத்துள்ளார் என்பதை,
“பேயென ஒருபொருள் உண்டெனப் பேசுதல்
ஆயிழை! பேதமை ஆகும் அறிகதில்!”
(பூங்கொடி ப. 26.)
பேய் என்ற ஒன்றைப் பற்றி அறியாமை தன்மையில் குழம்பி அச்சம் கொள்ளும் போது பகுத்தறிவுச் சிந்தனைகளோடு சிந்திக்கவேண்டும். காரணம் பூங்கொடி காப்பியம் படைக்கப்பட்ட காலச்சூழல் 20ஆம் நூற்றாண்டின் சமூக வளர்ச்சியிலும் மாற்றத்திலும் பகுத்தறிவுக் கொள்கை முக்கிய இடபெறும் எனலாம். இந்தப் பகுத்தறிவு தமிழகத்திற்குப் புதியன அல்ல எந்த செய்தியையும் பகுத்தறிவோடு பார்க்கவேண்டும் என்பதைத் திருவள்ளுவர்;
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
(குறள் 423)
இந்த உலகில் எந்தப் பொருளையும் அறிவு வகையினால் மெய்ப்பொருளை நாடுவது பகுத்தறிவு. “புராணக் கற்பனைகளும், மூட நம்பிக்கைளும், இயற்கை இகந்த நிகழ்ச்சிகளும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதன” என்று ஒய். டென்னிசன் குறிப்பிட்டுள்ள கருத்திற்கு ஏற்ப பேய் உண்டோ? உண்டு என்றால் அது அறிவின்மை என்று பதிவு செய்துள்ளமை சிறப்பு. இதனை அடிப்படையாக் கொண்டு சுடுகாட்டைப்பற்றி முடியரசன் செய்திகளை ஆராய்கின்றபோது, இன்றும் சிலர் நம்மில் சுடுகாட்டுப் பக்கம் சென்றால் பேய் பிடித்துக் கொள்ளும் என்ற பொதுவான அச்சம் மக்களிடம் உள்ளது. அந்த அச்சத்தைப் போக்கும் விதம் தாமரைக்கண்ணி என்னும் தமிழ்த் தேவதை பூங்கொடியிடமும், அல்லியிடமும் முத்தக்கூத்தன் கல்லறையைக் கண்டால் நெஞ்சுரம் எற்படும் என்பதை,
“மொழிக்குயிர் ஈந்தநல் முத்தக் கூத்தன்
பளிக்கறைப் புதைகுழிபாங்குடன் மிளிரும்
அதனைக் காணின் அச்சம் தொலையும்
மத முறுகொடியர் மனச்செருக் கொழிக்க
நெஞ்சுரம் ஏறும், நிமிர்ந்து நடப்பீர்”
(பூங்கொடி ப. 27.)
என்று முத்தக்கூத்தன் எவ்வாறு இறந்தான் என்றநிலையை அடுத்து, முடியரசன் முத்தக்கூத்தன் 1964ஆம் ஆண்டு இந்தக் காப்பித்தை இயற்றவேண்டிய சூழலைப் பதிவு செய்துள்ளமை தமிழகத்தில் இந்தி மொழித்திணிப்பை மத்திய அரசாங்கம் செய்தபோது தமிழர்களின் தாய்மொழியான தமிழ்மொழியைக் காப்பதற்காகத் தமிழர்கள் கையாண்ட அறப்போராட்டம் தொடங்கி, கையில் கொடியேந்தி மொழிப்போராட்டத்தில் ஈடுப்பட்ட போது அரசின் அடக்குமுறையால் குருதி சிந்தினார். ஆனால், உறுதிகுலைந்திலார் அந்தச் சூழலில் போராட்டத்தில் ஈடுபட்டோர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு உண்ணா நோன்பு மேற்கொண்டிருந்த முத்தக்கூத்தன் சில நாத்தனமான வஞ்சகர்களால் கொலை செய்யப்பட்டான். அவனைப் புதைக்கப்பட்ட கல்லறையைக் கண்டாலும் அவ்வழி சென்றாலும் அச்சம் நீங்கி முழுமையான வலிமை கிடைக்கும், பிறரின் மனச்செருக்கு அழிக்கும், மனவலிமை கிடைக்கும், பெண்கள் அச்சமின்றி தலைநிமிர்ந்து நடக்கலாம் என்று முடியரசன் குறிப்பிட்டுள்ளமை சிந்திக்தக்கது.
‘மணிபல்லவம்’ என்ற தீவு, பூங்கொடியில் “கடல் நகர்“ என மாற்றம் பெற்றுள்ளது. சாத்தனார் படைத்த மணி பல்லவத்தீவில் மணிமேகலை புத்தபீடிகை அதை வணங்கி பாத்திரம் பெற்றுப் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு வழங்குகிறாள். இதைப் பூங்கொடியில் முடியரசன் கட்டுடைப்பு செய்துள்ளார் மணிபல்லவம் என்பதைக் கடல்நகர் என்றும், பூங்கொடியில் மக்கள் அறியாமையைப் பிணியாகக் காட்டியுள்ளார்.
பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை - திருக்குறள் கற்றுணர்ந்த காதை
சாத்தனாரின் படைத்த மணிமேகலையில் மணிமேகலைக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் உற்றபொழுது மணிமேகலா தெய்வம் தோன்றி அவளுக்குத் துன்பத்தைப் போக்கும் ஆறுதல் மொழி கூறும். மேலும், புத்தபெருமான் சிலையை வணங்கியவுடன் பழம்பிறப்பின் செய்திகளை உணர்ந்து கொள்வதாகவும், காந்தார நாட்டு அரச மைத்துனன் பிரமதருமனுக்கு அறம்போதிக்கையில், அங்குள்ள நாவலந்தீவில் பூகம்பம் ஏற்படும். அதனால் அத்தீவினைவிட்டு அகன்று விடு என்ற செய்தியை, பூங்கொடியில் கவிஞரின் முடியரசன் பழம்பிறப்பின் மீது நம்பிக்கை இல்லை. காரணம், இவர் பகுத்தறிவுச் சிந்தனையாளார்களின் வழி வந்தவர் என்பதால் ‘நாவலந்தீவு’ என்பதை ‘அறியாமை இருளில் உள்ள கடல்நகர் என்று படைத்துக்கொண்டார். அந்நகர் வந்த பூங்கொடியைத் தேடிவந்த பாவலரை வணங்கி மாலையிட்டு, அவரிடம் தாம் திருக்குறளை முழுமையாகக் கற்று விட்டடேன் என்று குறிப்பிடுவதாகப் படைத்துள்ளார். பிறகு, பூங்கொடி கடல்நகர் மக்களுக்குத் தமிழ் உணர்வைக் கற்பிக்கிற போது சிலர் பழிப்புரையோடு, பல இடர் பெற்றேன் என்று பூங்கொடி நாவலரிடம் கூறுகிறாள். இதைக்கேட்ட நாவலா்.
“அன்னாய்! உலகில் அறிவொளி பரப்ப
முன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே
தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின
எல்லையில் இன்பம் எடுத்தது முடியும்” (பூங்கொடி ப. 41.)
என்று கூறித் தாம் தமிழ்ப்பணி ஆற்றும் வேளையில் தன் தலை மேல் கல் போட வந்த செய்தியையும் பூங்கொடியிடம் கூறுகின்றார்.
“பாறைக் கல்லொடுபக்கம் வந்தனர்”
“உடலும் உயிரும் உலகுக் காக்கினென்.
இடரினைக் கண்டு தொடைநடுக் குறுதல்
மடமை அன்றோ? முதியலார் செயலது” (பூங்கொடி ப. 41.)
எனத் தமிழ் மொழி உணர்வை மக்களுக்கு ஊட்டும்போது வரும் இன்னல், துன்பம் அதனை ஒருபொருட்டாக எண்ணுதல் கூடாது. மேலும், நாம் இந்த உடலையும் உயிரினையும் பெற்றிருப்பது இந்த உலகைக் காப்பதற்காகவே என்று நாவலர் பூங்கொடிக்கும் மன உறுதியை ஏற்படுத்துகிறார்.
மந்திரம் கொடுத்த காதை - தொல்காப்பியம் உணர்ந்த காதை
இந்தக் காதையில் மணிமேகலா தெய்வத்தின் உதவியால் நாவந்தீவு சென்ற மணிமேகலை வருத்தப்பட்டு இருந்தவேளையில், புத்தர் பெருமானின் பீடிகையின் தன்மையால் தமது பழம்பிறப்பை உணர்ந்து, பிறகு எனது கணவன் யாங்குளன் என்று கேட்டாள். அங்கே, சாத்தனாரின் சாதுசக்கரன் என்னும் பௌத்த முனிவரை அறிமுகம் செய்து, பௌத்த சமய உண்மைகளை அறிந்து “நீ வேற்றுரு பெய்துவிப்பதும் வானிலே இயங்கச் செய்வதுமாகிய இரண்டு மந்திரங்களை அறிவுறுத்தி, இது புத்தபெருமான் அருளிய திருவறம் இதை உறுதியாய் பெறுவாய் என்றும் ஒன்று மறந்தேன் என்று மீண்டும் “மக்கள் யாக்கை உணவின் பிண்டம்; இப்பெருமந்திரம் இரும்பசி அறுக்கம்” என்று சொல்லி வானில் பறந்தது.
கவிஞர் முடியரசனின் பூங்கொடியில் பூங்கொடி பாவலர் அறிவுரையால் திருக்குறளை நன்றாகக் கற்றுக் குறள்பரப்பும் போது முடிரயரசனால்
“நாற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்
சொற்பொருள் தெளிந்த சூழ வருவார்க்க
உணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்”
(பூங்கொடி ப. 44.)
என்று குறள் பணியை மகிழ்ச்சியுடன் செய்து பொழுதினில் தாமரைக்கண்ணித் தோன்றி பூங்கொடியிடம் கோமகன் பாவலன் பெயரால் படிப்பகம் நிறுவிய தன்னலச் செயலைக் குறிப்பிட்டமையால் பூங்கொடி வருத்தம் அடைகிறாள். அதை,
“உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்
நின்னலம் சிறிதும் நினையார் உளரே”
(பூங்கொடி ப. 46.)
சாத்தனாரின் மணிமேகலையில் பௌத்த சமய உண்மைகளை அறிந்து கொண்டதனால் மணிமேகலா தெய்வம் இரண்டு வரம் கொடுத்து. அதைக் கட்டுடைப்பு செய்யும் முடியரசன் இந்தியாவில் நடந்த இந்தித் திணிப்பின் சூழலில் தமிழகத்தில் யான் தமிழன் என்று குறிப்பிட்டு, அந்தக் காலக்கட்டத்தில் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் அகப்பகை, புறப்பகை என்பது எது? என்று தமது காப்பியத்தில் தாமரைக்கண்ணி குறிப்பிடும் தன்மை,
“உள்ளமும் உயிரும் உணர்வும் தமிழென
உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்”
(பூங்கொடி ப. 46.)
என்று உண்மையான தமிழனுக்குரிய பண்பையும், யார் ? உணர்வு கொண்ட தமிழன் என்றும், மணிமேகலா தெய்வம் கொடுத்து வரத்தை முடியரசன் கட்டுடைப்பு செய்து அதைத் தமிழ்நாட்டிற்கு வந்த பகைகளாக அமைத்துக் காட்டியுள்ளார். அகப்பகை என்பது அப்போது தமிழகத்தை ஆட்சி செய்தவர்களையும், புறப்பகை என்பது தமிழ்மொழியின் கிளை மொழியாளார்களையும், வழங்குதல் இல்லா வடமொழியையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப்பகையை வெல்லவேண்டுமானால் பூங்கொடியே பன்மொழி பயிலவும், பிழையாய் தமிழைப் பேசியும், எழுதியும் பிழைப்போருக்கு பேரறிவையும் ஊட்டுக என்றும், தமிழ்மொழியின் இலக்கணமாம் தொல்காப்பியத்தை இழித்தும், பழித்தும் உரைத்தவர்களின் கொட்டம் அடக்கு என்று கூறி ‘ஐவகை இலக்கணம் உணர்வார் மொழியில் உயர்வார்’ என்று படைத்துக் காட்டியுள்ளார். இதுகாறும் கண்ட செய்திகள் தமிழ் உலகில் அறிஞர்கள் கேட்டறியாச் செய்திகள் என்றே கூறலாம்.
கதை மாந்தர்களின் தன்மைகள்
மணிமேகலையில் இடம் பெற்றுள்ள பாத்திரங்கள் பல எனினும் மணிமேகலையுடன் நெருங்கிய பாத்திரங்களான மாதவி, சுதமதி, உதயகுமரன், சித்திராபதி, மணிமேகலா தெய்வம், தீவதிலகை, அறவணஅடிகள் முதலானோர்; காப்பித்தின் அடிப்டைக் கதைக்குரிய நிகழ்ச்சியுடன் ஒன்றுபட்டு இயங்குகின்றன. பூங்கொடியில் முடியரசன் படைத்த பாத்திரங்களான அருண்மொழி, அல்லி, கோமகன், வஞ்சி, தாமரைக்கண்ணி, மலையுரை அடிகள் போன்றோர் கதைக்குரிய நிகழ்ச்சியுடன் ஒத்துப் போகின்றனர்.
20 ஆம் நூற்றாண்டு பதிவுகள்
மணிமேகலையின் சமய வாழ்க்கையும் சமய உணர்வும்
சாத்தனார் படைத்த மணிமேகலைக் காப்பியத்தில் பௌத்த சமயத்தைத் தழுவிய சமய வாழ்க்கை. கவிஞர் முடியரசனின் பூங்கொடியில் பூங்கொடி பொதுப்பணி வாழ்க்கையை மேற்கொள்கிறாள். மணிமேகலையின் சமய உணர்வு, பூங்கொடியில் தமிழ் உணர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமுதசுரபியின் நிலை
மணிமேகலையில் அமுதசுரபி எப்பொழுதும் குறைவுபடாமல் பால்சுரத்தல்போல உணவு சுரத்தல், சிறந்தவர் கைக்கொள்ளும் போது சுரத்தல் போன்ற தன்மை பொருந்தியதாகக் காணப்படுகிறது. கவிஞர் முடியரசனின் பூங்கொடியில், அறியாமை இருளில் உள்ளவர்களுக்கு அறியாமையைப் போக்கும் தமிழிலக்கிய இலக்கியச் சுவடிகளாய் மாற்றம் பெற்றுள்ளன.
முடிவுரை
பௌத்த அறத்தை நிலைக்கச் செய்ய படைக்கப்பட்ட மணிமேகலையைப் போலவே கவிஞர் முடியரசனாரின் எண்ணம் போற்றத்தக்கது. தமிழ்மொழி வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோளாய் எண்ணி தன்னுடைய இன்பங்களையும், துன்பங்களையும் மறந்து மொழிநலம் காத்த பூங்கொடி வாழ்க.
ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்
1. ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை (உ.ஆ) கூலவாணிகன் சாத்தனாரின் ‘மணிமேகலை’ மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், 2007.
2. கவிஞர் முடியரசன், பூங்கொடி காவியம், சீதை பதிப்பகம், 2008.
3. அ.மு. பரமசிவானந்தம், சாத்தனார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1974.
4. சாமி. சிதம்பரனார், மணிமேகலை உரைநடையில், மங்கை வெளியீடு, 2014.
5. முனைவர் ஒய். டென்னிசன், மணிமேகலைக் காப்பியமும் பிற இயைபுக் கதைகளும் - ஓர் ஒப்பாய்வு, மொல் பதிப்பகம், 2001.
6. தி.சு. நடராசன், திறனாய்வுக்கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., 1998.
7. வாழ்வியற்களஞ்சியம், தொகுதி -13. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வெளியீடு.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.