ஜே.ஜே.: சில குறிப்புகள் நாவலின் கதை அமைப்பில் நவீனத்துவம்
வி. அன்னபாக்கியம்
முன்னுரை
மரபுவழிக் கலையினை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற முயற்சியில் தோன்றியது நவீனத்துவம் ஆகும். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே : சில குறிப்புகள் என்ற நாவலின் கதை அமைப்பில் அமைந்துள்ள நவீனத்துவம் பற்றிய சிந்தனையை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
நவீனத்துவம் விளக்கம்
ஆங்கிலத்தில், “Modernity” என்ற சொல்லிலிருந்து நவீனத்துவம் பிறந்தது. அதே போன்று, “Modernism” (நவீனவாதம்), “Modernization” (நவீனமயமாக்கல்), என்ற சொல்லாட்சிகளும் இருந்திருக்கின்றன. இவற்றிற்கிடையே பொருட்பரப்பில் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. எனினும், “Modern” என்னும் சொல்லடியாகவே இச்சொற்கள் பிறந்துள்ளன.
“பழமையிலிருந்து வேறுபட்டுப் புதுமையை நோக்கிச் செல்வது அல்லது சமகாலத்தியது, பழமை அல்ல, இதை ஒரு இயக்கமாகக் கொள்ளலாமே தவிர, இலக்கியக் கோட்பாடு என்று கூறமுடியாது என்றும் வாதிடுகின்றனர் ” (1)
நவீனத்துவம் என்பது வேறு, புதுமை என்பது வேறு. நவீனத்துவம் என்பது அது தானே கிளைத்து வருவதாகும். புதுமை என்பது அப்படி அன்று; அது பழமையிலிருந்து உருவாகுவது அல்லது கால் பதிப்பது ஆகும்.
நவீனத்துவம் என்பது சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சி நிலையாகும். “வழிவழி வந்த மரபிலிருந்து மாறுபட்டு புதுமையைச் சார்ந்து நிற்றல் அல்லது புதுமையை நாடிச் செல்லல் என்பது இவை உணர்த்தும் பொதுப்பொருளாகும்” (2) என்று நுஃமான் குறிப்பிடுகின்றார். இக்காலத்தமிழ் இலக்கியங்களில் நவீனத்துவம் பற்றிய சிந்தனை பரவலாகக் கையாளப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் நவீனத்துவம்
நவீனத்துவம் என்று அழைக்கப்படும் அந்தப் புதுமை இலக்கியப் பண்பு, முதல் இரண்டு உலகப்போர்கள் நடைபெற்ற (1914-1945) ஆண்டுகளுக்கிடையில் சுமார் முப்பது ஆண்டுகள் ஐரோப்பிய நாட்டுக் கலை - இலக்கிய அறிவு ஜீவிகளால் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. முதலில் ஓவியம், சிற்பம், இசை முதலிய கலைத்துறைகளைப் பாதித்த இந்த நவீனத்துவம் நாளடைவில் இலக்கியத் துறையையும் தாக்கியது.
அதற்குப் பின்பு, “ஹென்றி ஜேம்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ், தாம்ஸ்மன் கான்ராட், ப்ரவுஸ்ட், ஸ்வெவோ, அன்ட்ரிகைட், காஃப்கா, பாக்னர் போன்ற மேலை நாட்டுப் புனைகதை ஆசிரியர்களின் படைப்புகள் வழியாக இந்தியாவிற்கு அறிமுகமாகித் தமிழகத்தையும் எட்டிப் பார்த்தது ” (3) என்று கி. இராசா கூறுவதன் மூலம் நவீனத்துவம் தமிழகத்தில் அறிமுகமாகியதை அறியலாம்.
நவீனத்துவக் காலக்கட்டம்
மகாகவி பாரதி வசனகவிதை என்ற வடிவத்தினைப் பரிசோதனை செய்யத் தொடங்கிய போதே நவீனத்துவம் தொடங்கி விட்டது எனத் திறனாய்வாளர் மதிப்பிடுவர். எனினும் நவீனத்துவக் காலகட்டத்தினை, “1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் இலக்கியம் கலை போன்றவற்றுக்கு நவீனத்துவக் காலகட்டம் என்று கொள்ளப்படுகின்றது” (4) என ஆ. செல்லப்பெருமாள் தன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கூறியுள்ளார்.
ஜே.ஜே. சில குறிப்புகள் - பின்னணியும் நோக்கமும்
சுந்தர ராமசாமியின் இரண்டாவது நாவல் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ முதல் நாவல் வெளிவந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த நாவலாகும். உருவ அமைப்பிலும், மொழி நடையிலும் பிற நாவலை விட முற்றிலும் வேறுபட்டதாகும். அதற்கான பின்னணியினைப் பற்றிச் சுந்தரராமசாமி கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது.
ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்குரிய உத்வேகம் தற்செயலாக ஏற்பட்டது என்கின்றார். வேறொரு நாவல் எழுதிக் கொண்டிருக்கும் போது, அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது, தேக்கநிலை உருவாகிறது. இதனால் மறுநாள் சம்பத் என்பவன் மூலம் விவாதம் மேலும் தொடர, அவன் படைப்பாளியும், ஓவியனுமான ஜோசஃப் ஜேம்ஸ் என்பவனை அழைத்து வருவதாகக் கூறுகிறான்.
அதைத் தொடர்ந்து, “ஜோசஃப் ஜேம்ஸ் என்ற பெயரை எழுதியதுமே என் மனம் சிறகு கட்டிப் பறக்கத் தொடங்கிற்று. மிகுந்த உவகைத் தரும் ஆவேசத்திற்கு ஆளானேன். எழுதும் நாவலை விட்டுவிட்டு ஜோசஃப் ஜேம்ஸின் அழைப்புக்கு ஏற்ப, அவனைப் பின்தொடர்ந்து சென்றால் முற்றிலும் புதிய உலகம் ஒன்று உருவாகக் கூடும்” (5) என்று சுந்தரராமசாமி கூறுவதனால் ஜே.ஜே.யின் பின்னணி புலப்படுகின்றது.
“முதலில் டாக்டர் பிஷாரிடியும், எஸ்.ஆர்.எஸ்ஸீம் ஜே.ஜே.யின் ஓவியத்தைப் போய்ப் பார்க்கும் பகுதியை எழுதிவிட்டு, பின்பு அந்தப் பகுதிக்கு முன்பின்னாக வேறு பகுதிகளை எழுதிச் சேர்த்தேன்” (6) என்று சுந்தரராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
‘ஜே.ஜே. சில குறிப்புகள் என்ற நாவல் எழுதியதற்கான நோக்கம் தமிழ் வாசகர்களின் சிந்தனையைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே என்று சுந்தரராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
சு. ரா. வின் நவீனத்துவம்
சுந்தரராமசாமி தன் நாவலான ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலை முற்றிலுமாக புதிய பாணியில் படைத்துள்ளார். அந்த நாவலின் உருவம், உள்ளடக்கம், உத்தி என்று எல்லாவற்றிலும் மரபு நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ள தன்மை சுந்தர ராமசாமியின் நவீனத்துவத்தைக் காட்டுகின்றது எனலாம். இதனை,
1. கதையமைப்பு
2. பாத்திர அறிமுகமும் விமர்சனமும்
3. நாவலின் பின்பகுதி
4. நாவலின் நடை
5. வாசகத்திற்கும் வாசகனுக்குமான உறவுநிலை
6. கவித்துவம்
என்ற ஆறுநிலைகளில் காணலாம். ஆய்வுக் கட்டுரையின் பக்கவரையறையைக் கருத்தில் கொண்டு, கதை அமைப்பில் சுந்தரராமசாமி செய்துள்ள நவீனத்துவத்தை மட்டும் காண்போம்.
மரபுகளைத் தகர்த்தல்
முன்னோர்கள் செய்த செயலையே பின்வருபவர்களும் செய்வது என்பது மரபாகும். முன்னோர் எவ்வழி செப்பினர் அவ்வழி செப்புதல் மரபு என்ற நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது நவீனத்துவமாகும். இன்றைய நிலையில் தொழில் நுட்பத்தைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப இலக்கியம் படைப்பதில் தான் புதுமை இருக்கின்றது. புதிய முறைகளைக் கொண்டு வந்து பழைய மரபுகளைத் தகர்த்துக் கூறுதல் புதிய நிலையாகும்.
சுந்தரராமசாமியும் தன் நாவலினை, வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள உருவம், உள்ளடக்கம், உத்தி என்ற மரபு நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத் தனக்கென உள்ள ஒரு தனிக் கொள்கையோடு படைத்துள்ளார்.
கதையமைப்பு
கதை என்பது அதனைப் படிப்பவர்க்கு அடுத்து என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும். “கதையைப் படிப்போர் அடுத்து என்ன நடக்குமோ என்றும், எவ்வாறு நிகழ்ச்சிகள் விளக்கப்படுமோ என்றும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் படியாகக் கதையமைப்பு இருத்தல் வேண்டும்” (7) எனத் தா. ஏ. ஞானமூர்த்தி குறிப்பிடுகின்றார்.
சுந்தரராமசாமி தன் நாவலின் கதையை ஏதோ ஒரு உண்மையான கதையைக் கூறுவது போலவும், ஒரு மனிதனின் வரலாறு போலவும், அம்மனிதனின் அன்றாட நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது போலவும் அமைத்துள்ளார். மலையாள எழுத்தாளனான ஜோசஃப் ஜேம்ஸ்ஸின் தாக்கத்தைச் சுந்தரராமசாமி பெற்றுள்ளார். சுந்தரராமசாமி மேற்கொண்டுள்ள இத்தாக்குரவு கதைப்பொருளில் புதிய சிந்தனையைப் பதித்திருக்கிறது எனலாம்.
உண்மைக்கதை போன்ற அமைப்பு
ஓர் எழுத்தாளன் என்பவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சுந்தரராமசாமி விரும்பினாரோ அதற்கு ஏற்ப ஒரு கற்பனைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நாவலின் கதையினை அமைத்துள்ளார். “கற்பனை ஆற்றல், வாழ்வை இன்பமாக அனுபவிக்கத் தேவையான ஒன்று என்பதும், அது மிகுந்திருப்பவனே படைப்புக் கலைஞன்” (8) என்ற அகிலனின் கூற்றுக்கு ஏற்பச் சுந்தரராமசாமி திகழ்ந்தார்.
நாவலின் தலைமைப் பாத்திரமான ஜே.ஜே. என்பது சு.ராவின் கற்பனையில் தோன்றியதேயாகும். இவ்வாறு கற்பனையில் தோன்றிய பாத்திரத்தைக் கொண்டு, அவனது அன்றாட நிகழ்ச்சிகளைப் பதிவு செய்திருப்பது வாசகனிடம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துகின்றன.
சில குறிப்புகள் போன்ற அமைப்பு
சுந்தரராமசாமி தன் நாவலின் பெயருக்கு ஏற்ப கதையினைச் சில குறிப்புகளாக அமைத்துள்ளார். ஜோசப் ஜேம்ஸ்ஸைப் பற்றிய சில செய்திகளைக் குறிப்புகளாகக் கோடிட்டுக் காட்டியுள்ள தன்மையினை, “இங்கு என் நோக்கம் ஜோசப் ஜேம்ஸ்ஸைப் பற்றிச் சில குறிப்புகளை முன்வைப்பது தான்” (9) என்று கூறித் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் சுந்தரராமசாமி, “ மேல்வாரியாகப் பார்க்கும் போது, இது சிறிய புத்தகம் போலவும் ஒரு எழுத்தாளனின் அரைகுறையான வரலாறு போலவும் தெரியும்” (10) என்றும் கூறுவதன் மூலம் நாவலின் கதையமைப்புப் புலப்படுகின்றது.
காட்சியால் நகரும் கதையமைப்பு
நிகழ்ச்சிகளை - கதையின் போக்கினை எடுத்துரைக்கும் முறையிலேயே படைப்பாசிரியரின் கலைத்திறன் வெளிப்படும். “ஒரு கதையை யாருடைய விழி வழியாகப் பார்க்கிறோம் என்பது தான் நோக்குநிலையின் சத்தாகும்” (11) என மா. இராமலிங்கம் குறிப்பிடுகிறார்.
‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ என்ற நாவலின் கதையினை நூலாசிரியரின் விழி வழியாகப் பார்க்க முடிகிறது. நவீன இலக்கியப் பண்புகளுள் ஒன்றான, நிகழ்ச்சிகளே இல்லாமல் கதை சொல்லும் தன்மையினை இந்நாவல் பெற்றுள்ளது எனலாம். நிகழ்ச்சிகளின் வேலையைக் கதையில் இடம்பெறும் காட்சிகளே செய்து விடுகின்றன. இக்காட்சிகளை ஆசிரியர் உற்றுப்பார்த்து வருணிப்பதன் வாயிலாகவும், கதை மாந்தர் தம் பார்வை வாயிலாகவும் ஆசிரியர் திறம்படக் காட்டியுள்ளார் எனலாம்.
உலகப் பொருள்களில் மனித மனம் எங்கெல்லாம் பயணப்படுகிறதோ அவற்றை எல்லாம் ஆசிரியர் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தலைமைப் பாத்திரம் இயற்கை மற்றும் மனிதனின் புறச்செயல்பாடுகள், பிற கலைக் கூறுகளை உற்று நோக்கியுள்ள தன்மையினைக் கூறுவதன் மூலம் காட்சியால் நகரும் கதை அமைப்பினைக் கையாண்டுள்ள ஆசிரியரின் திறம் வெளிப்படுகிறது.
கட்டுரை தன்மையான அமைப்பு
கட்டுரை என்பது உரைநடையாக அமைவது ஆகும். சுந்தரராமசாமி இந்நாவல் முழுவதையுமே திறனாய்வுக் கட்டுரை நடையிலேயே அமைத்துள்ளார்.
உலக அசைவுகள் மற்றும் மனிதச் செயல்கள் அனைத்தும் இந்நாவலில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன எனலாம். எந்தப் பொருளை எடுத்தாலும் அவற்றின் செயல், தன்மை போன்றவை திறனாயப்பட்டுள்ளன.
கதைப்பாத்திரங்கள் ஒன்றையொன்று மாறி மாறி விமர்சனம் செய்வதன் மூலம் இந்நாவலை விமர்சனக் கட்டுரை என்றும் மதிப்பிடலாம்.
கதை அமைப்பிற்கென ஆசிரியர் கையாண்டுள்ள நவீனத்துவத் தன்மை சுவைத்து மகிழத்தக்கதாக உள்ளது.
முடிவுரை
நவீனத்துவம் என்ற கலைச்சொல் இன்று திறனாய்வில் பரவலாகப் பேசப்படுகின்றது. நவீனத்துவத்தில் மரபு வழியாக வந்த சில கட்டுப்பாடுகளை மீறுதல் என்பது முக்கியக் கூறாகக் கருதப்படுவதை அறியமுடிகிறது. இவ்வாறாக சுந்தரராமசாமி தன் நாவலின் கதையமைப்பை முற்றிலும் நவீனமாகப் படைத்துள்ளார்.
குறிப்புகள்
1. இ.எஸ்.தேவசிகாமணி(தொ.ஆ.), இலக்கிய இஸங்கள், ப. 45
2. நுஃமான், திறனாய்வுக் கட்டுரைகள், ப. 146
3. கி. இராசா, வேர்ப்பலா, ப.96
4. தி.சு.நடராசன், அ.ராமசாமி(தொ.ஆ.), பின்னை நவீனத்துவம் கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும், ப.136
5. ராஜமார்த்தாண்டன், சுந்தரராமசாமி படைப்புலகம், ப. 183
6. மேலது.,
7. தா.ஏ. ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப. 333
8. அகிலன், கதைக்கலை, ப. 7
9. சுந்தரராமசாமி, ஜே.ஜே.: சில குறிப்புகள், ப. 11
10. மேலது.,ப. 13
11. மா. இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப. 134.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.