1582ம் ஆண்டு ஐப்பசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்பட்ட அப்பைய தீட்சிதரின் தம்பி ஆச்சான் தீட்சிதரின் புத்திரர் ஸ்ரீ நாராயணத்வரிக்கும் பூமிதேவி அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் பிறந்தார். நீலகண்ட தீட்சிதர் சிறிய வயதிலேயே தகப்பனையும் பாட்டனையும் இழந்து விட்டமையால் அவருடைய பெரிய பாட்டனாராகிய ஸ்ரீ அப்பைய தீட்சிதரால் வளர்க்கப்பட்டார்.
ஸ்ரீ நீலகண்ட தீட்சிதருக்கு 12வயதாகிய பொழுது ஸ்ரீ அப்பைய தீட்சிதர் தன் அந்திம காலத்தை சிதம்பரத்தில் கழிக்க விரும்பி குடும்பத்துடன் சிதம்பரத்திற்கு சென்றார். அங்கு சொத்தைப் பாகம் செய்த போது அவர்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றியது. அப்போது, ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் தாத்தாவிடம், தங்கள் சந்ததிகளை இறைவனிடம் நீங்கள் அடைக்கலம் செய்து விட்டபடியால் ஈஸ்வரன் எங்களை கைவிடமாட்டார். மேலும் தனக்கு பிதாவாகவும் போஷகராயும் விளங்கும் தங்கள் அன்பும் ஆசியும் போதும் என்றாராம். இதைக் கேட்டு பெரியவர் அப்பைய தீட்சிதர் 12வயதே நிரம்பிய ஸ்ரீ நீலகண்டரின் இறை பக்தியையும் அவர் மேதமையையும் கண்டு வியந்தார். பின் தன்னிடமுள்ள சிறந்த கிரந்தங்களாகிய தேவீ மகாத்மியத்தையும் ரகுவம்சத்தையும் தான் அதுவரை பூஜை செய்து வந்த பஞ்சலிங்கங்களையும் அவருக்கு அளித்து ஆசிர்வதித்தார்.
ஸ்ரீ அப்பைய தீட்சிதர் மறைவிற்குப் பின் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் தஞ்சையில் வாழ்ந்த ஸ்ரீ கோவிந்த தீட்சிதரின் குமாரராகிய ஸ்ரீ வேங்கடேஸ்வரமகீ என்னும் பெரியாரை தன் குருவாகக் கொண்டார், பின்பு ஸ்ரீ கீர்வாணேந்திரர் என்னும் பெரியவரிடம் ஸ்ரீ வித்யா உபதேசமும் பெற்றார், இவரை புகழ்ந்து குருராஜஸ்தவம் என்னும் நூலையும் இயற்றினார்.
பின்பு மதுரையை அக்காலத்தில் ஆண்ட திருமலை நாயக்க மன்னனிடம் மந்திரியாகப் பணியாற்றினார். அப்போது, மன்னன் உத்தரவின்படி பட்டத்து ராணியின் சிலையை ஒரு சிற்பி செதுக்கி வந்தார். அந்த சிலையின் இடது தொடைப்பகுதியில் தற்செயலாக ஒரு சிறு அளவு பெயர்ந்ததால் சிற்பி மனம் வருந்தினான். இதைக் கண்ட தீட்சிதர் இதற்காக நீ வருந்த வேண்டாம். கடவுளின் விருப்பப்படிதான் அப்படி நடந்துள்ளது. அப்படியே இருக்கட்டும் என்று தெரிவித்தார். மறுநாள் சிலையைக் கண்ட அரசன் சிலையில் உள்ள பின்னத்தைப் பற்றி கேட்க சிற்பி நடந்தவற்றை அப்படியே அரசனிடம் சொன்னான். தனக்கு மட்டும் தெரிந்த ரகசியம் ஸ்ரீ தீட்சிதருக்கும் தெரிந்திருந்ததை எண்ணித் தீட்சிதர் மேல் விபரீதமான சந்தேகம் கொண்ட மன்னர் தீட்சிதரைத் தண்டிக்க எண்ணி காவலாளிகளை அனுப்பி அவரை அழைத்து வரச் சொன்னார். இதைத் தன் ஞானதிருஷ்டியால் ஸ்ரீ தீட்சிதர் உணர்ந்தறிந்தார். தீட்சிதர் எரியும் கற்பூரத்தால் தன் கண்களைத் தானே பொசுக்கி கொண்டார். இதைக் கேட்ட அரசன் தன் சந்தேகத்தின் விளைவாக ஒரு ஞானியைப் புண்படுத்தியதற்கு வருந்தினான். தீட்சிதர் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மையின் மேல் பக்தியுடன் இயற்றியதுதான் ஆநந்தஸாகரஸத்வம் என்னும் அரிய நூல்.
இதில் அவர் 61வது ஸ்லோகத்தில் அன்னையே மிக அழகிய உன் பாதாரவிந்தங்களை என் மேல் உள்ள அபரிமிதமான கருணையால் நீ காண்பித்தாலும் அதை என்னால் பார்க்க இயலாதே என்று வருந்திப் பாடியிருந்தார். இதனால் மனம் இரங்கிய மதுரை மீனாட்சி மீண்டும் கண் பார்வை அளித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் ,வைராக்ய சதகம். நள சரித்திர நாடகம். கங்காவதரணம். சிவலீலார்ணவம். கலிவிடம்பனம். ஆநந்தஸாகரஸத்வம். சாந்தி விலாசம். சிவோத்கர்ஷ மஞ்சரி. முகுந்த விலாஸம். ரகுவிரஸ்தவம். சண்டீரகஸ்யம். அன்யாபதேச சதகம். நீலகண்ட விஜய சம்பூ. கையட வியாக்யானம். ஸபார்ஜன ஸதகம். குருராஜஸ்தவம். வைராக்ய ஸதகம். சிவ தத்வ ரகஸ்யம் முதலிய நூல்களை எழுதியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவரது ஒவ்வொரு படைப்பும் வடமொழி இலக்கியத்தில் மிக மிகச் சிறந்த படைப்பாகத் திகழ்கின்றன. இவரது படைப்புகளில் இவருடைய புலமை, சொல்லாட்சி, நகைச்சுவை, அறிவுப் பூர்வமான விளக்கம், பல்வேறுபட்ட அனுபவம், ஆழந்த இறை பக்தி, மேன்மையான பண்புகள் ஆகியவை நன்கு விளங்கும்.
அதன் பிறகு, தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் தாமிரபரணி நதியின் வடக்கு கரையில் பாலாமடை ( திருநெல்வேலியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது.) கிராமத்தையும் சுற்றியுள்ள நிலங்களையும் திருமலை மன்னன் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதருக்கு மான்யமாக அளித்தான். அரசின் ஆவணங்களில் இது நீலகண்ட சமுத்திரம் என்றும் வழங்கப்படுகிறது. (See Archaelogical Survey of India Annual Report 1976-77 Epigraphy Sl.No. 243 to 244). இந்த கிராமத்தில் தன் சந்ததிகளுடன் தன் அந்திம நாட்களை இறை பணியிலேயே கழித்து பின் சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொண்டு ஒரு மார்கழி மாத சுக்லாவஷ்டமியில் ஜீவ சமாதியடைந்தார்.
இவருடைய சமாதியில் ஒரு நல் அதிர்வை இப்போதும் உணரமுடியும், இவருடைய சமாதியின் மேல் ஸ்ரீ தீட்சிதரே காசியில் இருந்து எடுத்து வந்த ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருகில் ஸ்ரீ காசி விசாலாட்சி அன்னையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இந்த கிராமம் இன்றும் சுபிட்சத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. இந்த இரண்டு விக்ரகங்களும் 1926ம் ஆண்டு ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் பாலாமடைக்கு விஜயம் செய்த பொழுது அதிவக்ஷ்டானத்தில் கோயில் இல்லாததால் உடன் கோயில் கட்ட விரும்பினார்கள், 1930ம் ஆண்டு கோயில் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் காசியிலிருந்து எடுத்து வந்த ஸ்ரீ காசி விஸ்வநாதரும் அருகில் காசி விசாலாட்சி அன்னையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிசேகமும் செய்யப்பட்டன(ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம் கும்பாபிசேக நினைவு மலர் பக்கம் 73 முதல்77) என்கிறார்கள்.
ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குருக்கள் தங்கள் விஜய யாத்திரைகளின் பொழுது முக்கியமாக இரண்டு அதிஷ்டானங்களுக்கு விஜயம் செய்வதை ஒரு நியதியாக கொண்டுள்ளார்கள், அவை முறையே நெரூரில் ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திராளின் அதிஷ்டானமும் பாலாமடையில் உள்ள ஸ்ரீ நீலகண்ட தீட்சிதரின் அதிஷ்டானமுமாகும். மேலும் ஸ்ரீ அப்பைய தீட்சிதரால் பூஜை செய்யப்பட்டு பின்னர் நீலகண்ட தீட்சிதராலும் ஆராதிக்கப்பட்டு வந்த ஸ்ரீ சந்திரமௌரீஸ்வரர் லிங்கம். பஞ்சலோக மகாகணபதி மற்றும் ஸ்ரீ சக்கரமும் தற்பொழுது ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் பூஜையில் உள்ளன.
மேலும் இங்கு பார்த்தனால் ஸ்தாபிக்கப்பட்டு கந்தர்வர்களால் பூஜிக்கப்பட்ட வட மொழியில் ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் என்றும் தமிழில் அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படும் பரமேஸ்வரன் அருள்பாலித்து வருகிறார், இங்கு இறைவன் தனித்து இருந்தமையால் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் மதுரையில் தான் தினமும் வழிபட்ட மதுரை மீனாட்சி அம்மையை போன்ற ஓர் அழகிய சிலையை வடிக்கச்செய்து ஸ்ரீ மங்களேஸ்வரி என்ற அழகிய நாமம் சூட்டி இறைவனுக்கு தெற்கே பிரதிஷ்டை செய்தார், இக்கோயிலில் மேலும் கணபதியும். முருகன் வள்ளி தெய்வயானையுடன் அழகாய் காட்சிதருகின்றனர், ஆனால் இக்கோயிலில் நவக்கிரஹங்கள் இல்லை.
இந்த பாலாமடை கிராமத்தில். ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸர்வக்ஞபீடமான தக்க்ஷிணாம்னாய ஸ்ரீ சாரதாபீடத்தின் ஆச்சாரியார் வழிவந்த ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்தர் ஸ்வாமிகள் அருளாசியுடன் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் திருக்கரங்களால் ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் மற்றும் பளிங்கு கல்லால் மிக நேர்த்தியுடன் வடிக்கப்பட்ட ஸ்ரீ ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டையும் கும்பாபிசேகமும் 24.1.1992 அன்று நடந்தேறியது, அது நாள் முதல் பூஜைகளும் தவறாது நடந்து வருகிறது.
ஸ்ரீ மீனாஷியின் இறையருளை வாழ்க்கையில் நேரில் அனுபவித்த மகானாக ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் கருதப்படுகிறார், சிறந்த ஆட்சி வல்லுனரும். தூயத்திருத் தொண்டரும். சிறந்த கவிஞரும். மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் அமைச்சருமாக இருந்த ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் நினைவை மறவாதிருக்க செய்யும் பொருட்டு மகாகவீ ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
இந்த மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அறக்கட்டளை ஸ்ரீ நீலகண்ட தீட்சிதரின் பிறந்த மற்றும் நினைவு நாட்களை சிறப்பான முறையில் கொண்டாடுதல். அவர் அருளிய எல்லா கிரந்தங்களையும் (இயன்ற வரை. மொழிபெயர்ப்புடனும் பதவுரையுடனும்) வெளியிடுதல். வருடாந்திர நினைவு சொற்பொழிவு. அவர் வாழ்ந்த பாலாமடையில் அவர் நினைவு கூறும் நிகழ்ச்சிகளை நடத்தும் வண்ணம் நினைவு கட்டிடம் எழுப்புதல் மேலும் அவர் அதிஷ்டானத்தை பராமரித்து நித்ய பூஜைகளை தவறாது நடத்துதல் அகிய பணிகளை தன் நோக்கமாய் கொண்டுள்ளது.