மட்டக்களப்புப் பிராந்திய கலாசார சுற்றுலா மையங்களும்
வரலாற்றுப் பண்பாட்டுப் பெருமைகளும் - ஒரு பார்வை
பேராசிரியர். கலாநிதி. (திருமதி) எஸ். கேசவன்
இந்து நாகரிகத் துறை, கலை கலாசாரப் பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
அறிமுகம்
மனித இனம் பயணம் செய்வது தொல்வழக்கம். உலா, பயணம் முதலியன சுற்றுலா (Tour) எனும் பொருண்மையிலான சொற்களாகும். சுற்றுலா செல்வதன் மூலம் மனிதனின் உலகியல் அறிவு, பல்லினச் சூழல், மானுடப் பண்புகள், சமய ஆன்மீக உணர்வு, கல்வி, கலாசார அறிவாற்றல்கள், ஆய்வு நாட்டம் போன்றன விருத்தி அடைகின்றன. அது மாத்திரமன்றி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய வருமானம், அந்நியச் செலாவணி, வேலைவாய்ப்பு போன்றனவும் சுற்றுலாத்துறை மூலம் விருத்தியடைகின்றன.
திறவுச் சொற்கள்
சுற்றுலா, மட்டக்களப்பு, பண்பாடு, பொருளாதாரம்
சுற்றுலா – பத விளக்கம்
Tour என்னும் ஆங்கிலச் சொல் Tournus என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து தோன்றியது. ‘Tournus’ என்றால் சக்கரம் என்று பொருள். இச்சொல் சுற்றி வருதலைக் குறிக்கும். இவ்வாறு இலத்தீன் மொழியில் பிறந்த இச்சொல் கி.பி. 1292 இல் ஆங்கில மொழியில் கலந்து Tour என அழைக்கப்பட்டது. Tour எனும் சொல் ஹிப்ரு மொழியில் உள்ள Torah என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகவும் கூறப்படுகின்றது.
சுற்றுலா பற்றிய அறிஞர்களின் விளக்கங்கள்
மனிதனின் செயல்பாடுகள், இயற்கையின் கூறுபாடுகள் முதலியவற்றில் இதுகாறும் அறிந்திராதவற்றை ஆய்வு செய்யப் புகுதலே சுற்றுலா என்பது பிரிமால்ட் அவர்களின் விளக்கமாகும். 'விளையாட்டுப் போட்டிகளைக் காணச் செல்லல், ஊர்களைச் சுற்றிப் பார்த்தல், சைக்கிள்களில் பயணம் செய்தல், உல்லாசப் படகுகளில் பயணம் செய்தல், முகாமிடல், மனமகிழ்வுக்காக பிற இடங்களை நோக்கிச் செல்லுதல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக கருதப்படுவதே சுற்றுலா" என்பது ஜோஸ் இக்னாசியோ டி அரில்லாகா என்பவரின் வித்தியாசமான விளக்கமாகும்.
“சுற்றுலா நவீனக் காலத்தில் ஒரு தனிச் சிறப்பிடத்தை வகிக்கின்றது. இழந்த வலிமையை மீண்டும் பெற மாறுபட்ட சூழ்நிலைகளைக் காண, இயற்கை அழகினைக் கண்டு மகிழ, அது ஒரு வளர்ந்து வரும் தேவையாகிவிட்டது” என்ற எஃபிரியூலர் விளக்கம் (1). ஹியாடின் “ஓய்வுக்கான மாற்றம் கலாச்சார கூறுகளில் மனநிறைவழிக்கும் ஒரு சமூகச் செயல்பாடேச் சுற்றுலா என்கிறார். ஜோவியக் என்பவர் சுற்றுலாவை ஓர் சமுதாய இயக்கமாகவேக் காண்கிறார். “ஓய்வெடுப்பதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான ஒரு சமுதாய இயக்கம்” இது என்கிறார்.
சுற்றுலாவின் நவீனக் கால அவசியத்தை வலியுறுத்துகின்றது. தெற்காசியாவின் முக்கியமான சுற்றுலாக் கவர்ச்சிகளில் ஒன்றான இலங்கைத்தீவு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளைக் கவரும் சுற்றுலா மையங்களைத் தன்னகத்தேக் கொண்டதாகக் காணப்படுகிறது.
சுற்றுலாவின் வகைகள்
சுற்றுலா மேற்கொள்ளப்படும் தன்மைகள் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் சுற்றுலாவினைப் பல வகைப்படுத்தி நோக்கலாம்.
1. உள்நாட்டுச் சுற்றுலா (Domestic Tourism)
2. பன்னாட்டுச் சுற்றுலா (International Tourism)
3. பண்பாட்டுச் சுற்றுலா (Cultural Tourism)
4. கல்விச் சுற்றுலா (Educational Tourism)
5. மருத்துவச் சுற்றுலா (Health Tourism)
6. ஓய்வுச் சுற்றுலா (Leisure Tourism)
7. சமய, ஆன்மீகச் சுற்றுலா (Religion Tourism)
எனப் பலவகையுண்டு.
இக்கட்டுரை மட்டக்களப்புப் பிராந்தியக் கலாசாரச் சுற்றுலா மையங்களையும், வரலாற்றுப் பண்பாட்டுப் பெருமைகளையும் மையப்படுத்தியதாக அமைகின்றது.
மட்டக்களப்புத் தேசம்
இலங்கைத் தீவின் கிழக்குக் கரையில் மட்டக்களப்புத் தேசம் அமைந்துள்ளது. அது வடக்கே வெருகல் கங்கையையும், தெற்கே குமுக்கன் ஆற்றையும் எல்லைகளாகக் கொண்டமைந்துள்ளது. மட்டக்களப்புப் பிராந்தியம் முழுவதிலும் வாழ்ந்த மக்களிடையேச் சமய வழிபாடுகள், சம்பிரதாயங்கள், இலக்கிய மரபுகள், சடங்குகள் முதலானவற்றிலே ஒரு பொதுவான பாரம்பரியம் காணப்பட்டது. அதன் விளைவாகவே மத்தியக் காலத்தில் மட்டக்களப்புத் தேசம் என்ற சிந்தனை உருவாகியது. இந்நிலை 04 ஒக்டோபர் 1962ஆம் ஆண்டு அத்தேசத்தின் தென்பகுதி அம்பாறை மாவட்டமாகப் பிரிக்கப்படும் வரை நீடித்திருந்தது.
மட்டக்களப்புத் தேசம் முற்காலத்தில் எட்டுப் பற்றுக்களாக வகுக்கப்பட்டிருந்தன. அவையாவன;
1. பாணமைப்பற்று
2. அக்கரைப்பற்று
3. கரைவாகுப்பற்று
4. சம்மாந்துறைப்பற்று
5. போரதீவுப்பற்று
6. எருவில்பற்று
7. மண்முனைப்பற்று
8. ஏறாவூர் கோரளைப்பற்று
என்பனவாகும்.
இவற்றுள் பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, கரைவாகுப்பற்று, சம்மாந்துறைப்பற்று ஆகியவை இன்றைய அம்பாறை மாவட்டத்தின் பகுதிகளாக உள்ளன. ஏனையவை மட்டக்களப்பு மாவட்டத்தினுள் உள்ளடங்குகின்றன. இன்றுள்ள மட்டக்களப்பு மாவட்டம், மொத்தமாக 2,854 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. அதில், நிலம் 2,610 சதுரக் கிலோ மீற்றர் பரப்பும் நீர் 244 சதுரக் கிலோ மீற்றர் பரப்பும் கொண்டது.
மட்டக்களப்பு வாவியும் பெயர்க்காரணங்களும்
மட்டக்களப்புத் தேசத்தின் பிரதான அம்சம், அதன் வாவியே. இவ்வாவியில் நன்னீரும், உவர்நீரும் கலக்கின்றன. இதனால் இம் மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை இவ்வாவி பெறுகின்றது. உப்புநீர்ப்பகுதி மீன் பிடித்தலுக்கும், நன்னீர்ப்பகுதி வேளாண்மை செய்தலுக்கும் பயனுடையதாக விளங்குகின்றது. இத்தேசத்தின் பெயர் இவ்வாவியின் காரணமாகவே உருவாகியது எனத் தெரிகின்றது. புவியியல் அடிப்படையில் மட்டமான களப்பினை உடையதாக இருப்பதால், அதாவது ஆழமற்றதாக, மட்டமாய் இருந்தபடியால் மட்டக்களப்பு எனப் பெயர் பெற்றது எனவும் கூறுவர். இவ்வாவியானது நீரும் சேறுமாய் உள்ள சதுப்பு நிலங்களைக் கொண்டமையினால் சேற்று வாவி எனப் பொருள் கொண்டு சிங்களவர்கள் ‘மடகளப்புவ’ என்று அழைத்தனர். மட்டக்களப்பை ஆங்கிலத்தில் குறிக்கும் “பற்றிக்கலோ” (Batticaloa) என்பது போர்த்துக்கீசச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. அரசியல் முறைகளிலும், சமுதாய முறைகளிலும் முக்குவரின் செல்வாக்கு மேலோங்கியிருந்தமையால் முக்குவதேசம் எனவும் இத்தேசம் அழைக்கப்பட்டது.
மட்டக்களப்புப் பிராந்தியத்தின் சுற்றுலாச் சிறப்பம்சங்கள்
உலகில் மீன் பாடும் ஓசை என்று அறியப்படும் தனித்துவமான ஓசை மேலைநாட்டில் கலிபோர்னியாவிலும், மட்டக்களப்பிலுமே கேட்கிறது என சுவாமி விபுலானந்தர் “யாழ்” நூலிலேக் குறிப்பிட்டுள்ளார். இதை நீரர மகளிர், கடற்கன்னி என அழைப்பது மட்டக்களப்பு வழக்கம். பூரணை (முழுநிலவு) நாளில் இரவில் கல்லடிப் பாலத்தின் ஆழமான பகுதியில், 1620 ஆகஸ்ட் 03ஆம் திகதி மீன்கள் பாடிய அதிசயம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நீரர மகளிர் சின்னமே மட்டக்களப்பு பிரதேசச் சின்னமாக விளங்குகின்றது. இதனை, கடற்கன்னிகள் என்றும் அழைக்கின்றனர்.
மட்டக்களப்பு விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற மண். கிழக்கேக் கடலும் மேற்கே வாவியும் நீண்டிருக்கும். இம்மண்ணின் புவியியல் நீர்வளத்துக்கும், அதில் பயிர் விளைச்சலுக்கும் உதவியாக விளங்கியிருக்கிறது. இம்மண்ணிலே தனித்துவமாக விளையும் மீன் வகைகள், கால்நடைகளின் உற்பத்திகள், தானியப்பயிர்கள் என்பன காரணமாக, செழிப்பான வாழ்வியலும், அதனால் விருந்தோம்பும் பண்பும் வளர்ச்சி கண்ட நிலமாக மட்டக்களப்புத் தேசம் விளங்குகின்றது.
மட்டக்களப்புத் தேச மக்களது தொழில்களுக்கும், பண்பாட்டு மரபுகளுக்கும் இயைபாக கோயிற்கலை வழிபாட்டு முறைகள், மற்றைய இடங்களில் மங்கி மறைந்துவிட்ட கண்ணகி வழிபாடு, அம்மன் சடங்கு, வதனமார் சடங்கு முதலிய வாழ்வியற் சடங்குகள் முதலியன இம்மண்ணின் கலாசார, ஆன்மிக சுற்றுலாவியல் முக்கியத்துவத்தைச் சொல்வனவாகும். கூத்து, வசந்தன் முதலிய இப்பகுதிக்கேச் சிறப்பான நிகழ்த்துக் கலைகள், இங்கு நீடிப்பதும், முக்கியமான சுற்றுலாக் கவர்ச்சிகளாக விளங்கி வருகின்றன. இவை தவிர, வரலாற்று முக்கியம் வாய்ந்த அரச பரம்பரைகள், ஒல்லாந்தர் கோட்டை, கல்லடிப் பாலம், பூங்காக்கள், வரலாற்றுச் சின்னங்கள் போன்ற இன்னோரன்ன பல விடயங்கள் சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன.
1. ஒல்லாந்தர் கோட்டை மட்டக்களப்பு
ஒல்லாந்தர் கோட்டை
|
ஒல்லாந்தர் கோட்டை முகப்பு
|
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவில் இது அமைந்துள்ளது. போர்த்துக்கேயரால் 1628 ஆம் ஆண்டு கட்டப்பெற்ற இக்கோட்டையானது, ஒல்லாந்தர்களால் 1638 இல் கைப்பற்றப்பட்டுப் புனரமைக்கப்பட்டது. இக்கோட்டை அமைந்துள்ள பிரதேசத்தைப் போர்த்துக்கேயர் கைப்பற்றும் முன்பு அவ்விடத்தில் கோயில் ஒன்று இருந்ததாகவும், அதனை அழித்தே போர்த்துக்கேயர் கோட்டையை அமைத்தனர் எனவும் கூறப்படுகிறது. கி.பி.1505 இல் லோரன்சொ அல்மெய்டா தலைமையில் இலங்கையில் நுழைந்த போர்த்துக்கேயர் குழு தமது ஆட்சியதிகாரத்தை விஸ்தரிப்பதற்காக மட்டக்களப்பில் ஒரு கோட்டையை அமைக்க முயன்றனர். அதன் நிமித்தம் கி.பி.1622 இல் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கி.பி.1628 இல் பணிகள் நிறைவுற்றன.
இக்கோட்டை 1638 இல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. 1639 இல் ஒல்லாந்தரால் கோட்டை தகர்க்கப்பட்டு, 1665இல் கட்டிமுடிக்கப்பட்டது. இது மீண்டும் 1682இல் செப்பனிடப்பட்டதுடன், 1707 – முன் கொத்தளமும் மேற்பகுதியும் கட்டிச் சேர்க்கப்பட்டது. ஒல்லாந்தர் இக்கோட்டையை 1766 இல் கண்டிய அரசுக்கு விட்டுக் கொடுத்தனர். கண்டி அரசிடமிருந்து இது 1796 இல் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
2. மட்டக்களப்பு வெளிச்சவீடு
வெளிச்ச வீடு கலங்கரை விளக்கம்
|
கலங்கரை விளக்கம்
|
மட்டக்களப்பு வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள, 1913 இல் கட்டப்பட்ட 28 மீற்றர் (91 அடி) உயரமுடைய வெளிச்சவீடு ஆகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கிமீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும் போது மட்டக்களப்பு வாவிக் கடலில் கலக்கும் முகத்துவாரத்தையும் எலும்புத்தீவையும் (Bone Island) மற்றும் கிழக்கில் இந்தியப் பெருங்கடல் ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பார்க்க முடியும். வெளிச்சவீட்டின் உச்சியிலிருந்து பார்க்கையில் மட்டக்களப்பின் ரம்மியத்தை அனுபவிக்கவும் முடிகின்றது.
பொதுவாக, கலங்கரை விளக்கங்கள் கடலில் திசை காட்டவேப் பயன்படும். ஆனால் ஆற்றுமுகங்கள், கழிமுகங்கள் அதிகமுள்ள மட்டக்களப்பில் குறித்த வெளிச்சவீட்டிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் தரித்திருக்கும் கப்பல்கள், கழிமுகத்தினுள்ளே சென்றடையும் மண் காரணமாக உள்ளே வரமுடியுமா இல்லையா என்பதைக் காட்டவே இது பயன்பட்டதாகச் சொல்கின்றனர். மட்டக்களப்பு துறைமுகம், மணல் பாறைகள் கொண்டு மூடப்படும் இயற்கை சுபாவமுடையது என்பதால் ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகவே இது பயன்பட்டது.
இவ்வெளிச்சவீடானது 1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக, மின்குமிழ்கள் செயலிழந்தும், அதனைப் பாதுகாத்த கண்ணாடி அறை சேதமடைந்தும் போயின. (2). யுத்தக் காலத்தில் இங்கு பொருத்தப்பட்டிருந்த செம்பினாலான “இடிதாங்கி” திருடர்கள் கைவசமாகியது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலைகளினால் கலங்கரை விளக்கத்தின் மதில் சுவரின் ஒரு பகுதி காணாமல் போனதுடன் தீவிர மண்ணரிப்பின் தாக்கத்தையும் எதிர்கொண்டு வருகிறது.
2008 ஆம் ஆண்டு இதனைப் புனரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் மீண்டும் பொலிவுடன், புதிய வீச்சுடன் வெளிச்சவீடு இயங்கத் தொடங்கியது. இப்பிரதேசம் இன்று வெளிச்சவீட்டுப் பூங்காவாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கில் கூடும் மக்களுக்கு ஓர் சிறந்த பொழுதுபோக்கிடமாக மாத்திரமன்றி பலரின் ஜீவனோபாயத்திற்கான ஆதாரமாகவும் இன்று இது திகழ்வது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இவ்வெளிச்சவீடு பூங்காவும் மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருவதுடன், இப்பகுதியின் தூய்மையும் அமைதியும் மாநகர சபையால் சிறப்பாகப் பேணப்படுவதும் ஓர் முக்கிய விடயமாகும். (3)
3. கல்லடிப் பாலம்
இன்று கல்லடிப் பாலம் என்று அறியப்படும் ‘லேடி மனிங் பாலம்’ பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்டது. இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுவதுடன், மட்டக்களப்பில் இருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக, இப்பாலமே இன்றியமையாது என்பதால் இப்பாலம் கிழக்கு மாகாணத்தில் ஓர் முக்கியப் பாலமாகக் காணப்படுகின்றது. இது இலங்கையின் நீளமான பாலங்களுள் அன்றான கல்லடிப் பாலம் உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னர் “பாடுமீனின்” இசையைக் கேட்க உதவியது. (4)
“மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடிக் கரைக்குச் செல்லத் தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன” என நூறு வருட மட்டுநகர் நினைவுகள்’ எனும் நூலில் கூறப்படுகின்றது. இதனால் 1924 இல் சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதியினால் இப்பாலம் அமைக்கப்பட்டது. கல்லடிப் பாலம் தற்கால போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய முடியாமல் காணப்பட்டதால் இதற்கு அருகாமையில் புதிய கல்லடிப் பாலம் 2.6 பில்லியன் (இலங்கை) செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 22 மார்ச் 2013 இல் திறந்து வைக்கப்பட்ட இப்பாலத்தின் நீளம் 288.35மீ (946அடி), அகலம் 14மீ (46அடி) ஆகும். (5)
4. மட்டக்களப்பு வாயில்
மட்டக்களப்பு வாயில் என்பது புளியந்தீவில் அமைந்திருந்த புராதன துறைமுக தரையிறக்கப் பகுதியில் அமைந்துள்ள ஓர் நினைவுச் சின்னமாகும். இதன் மூலமே மட்டக்களப்புப் பிரதான நிலப்பகுதி புளியந்தீவுடன் இணைக்கப்பட்டது. மட்டக்களப்பிற்கான முதலாவது மெதடிஸ்த நற்செய்தியாளர் வண. வில்லியம் ஓல்ட் 1814 இல் இங்கு தரையிறங்கியதாக நம்பப்படுவதால் மட்டக்களப்பு வாயில் நினைவுச் சின்னத்திற்கு அருகில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (6)
5. சுவாமி விபுலாநந்தர் சமாதி
இலங்கையில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களுள் தலையாயவர் சுவாமி விபுலாநந்தர். மயில்வாகனன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவு என்னும் ஊரில் 03.05.1892இல் பிறந்தார். தனது 16 ஆவது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்ற இவர், 1916 மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்று, ‘முத்தமிழ் வித்தகர்’ பட்டமும் பெற்றார். ஆசிரியப் பணியாற்றிய இவர், இராமகிருஷ்ண மிஷனில் துறவு பூண்டு இணைந்துகொள்ள, 1924 ஆம் ஆண்டு ஞான உபதேசம் பெற்று, சுவாமி சிவாநந்தரால் ‘சுவாமி விபுலாநந்தர்’ என்ற தீட்சா நாமம் பெற்று முழுத்துறவியானார். மட்டக்களப்பு நகரின் கல்வி வளர்ச்சிக்கும் சைவ சமய வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய அடிகளார், சிறிது காலமே மட்டக்களப்பில் வாழ்ந்தார். யாழ்நூல் அரங்கேற்றத்துக்குப் பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பிய இவர், 1947ஆம் ஆண்டு ஆடித் திங்கள் 19 ஆம் நாள் சனிக்கிழமை இரவு இவ்வுலக வாழ்வை நீத்தார்.
அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் அருகாமையிலுள்ள வளவினுள் மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அவரது திருவுடல் வைக்கப்பட்டது. சுவாமியின் ஜனன மற்றும் ஜெயந்தி தினங்கள் அடியாரின் சமாதியில் அன்பர்களால் வருடந்தோறும் தவறாது நினைவு கூரப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
6. மட்டக்களப்பிலுள்ள சிலைகள்
அ) சுவாமி விவேகானந்தர் சிலை

தேசிய இளைஞர் மன்றத்தினால் வழங்கப்பட்ட நிதியைக் கொண்டும் ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் தலைவர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும் பல சிலைகள் ஆரையம்பதி பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சுவாமி விவேகானந்தருக்கென அமைக்கப்பட்டுள்ள சிலை முக்கியமானது. சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவத்தின் செல்வாக்கு மிக்க ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். இராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடராவார்.
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிக்காகோ உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றார். 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி சுவாமி விவேகானந்தர் பொன்.குமாரசாமி முதலான நமது நாட்டுச் சைவ அன்பர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்தார். அவர் கொழும்பு ஜிந்துப்பிட்டியிலும் பின்பு கண்டி, மாத்தளை, வவுனியா, யாழ்ப்பாணம், அனுராதபுரம் முதலான இடங்களுக்கும் சென்று அருளுரைகளும் பேருரைகளும் நிகழ்த்தினார். சுவாமி விவேகானந்தரது சொற்பொழிவுகளால் கவரப்பட்ட நமது நாட்டு சைவ அன்பர்கள் அவரது பெயரால் விவேகானந்த சபைகளை நிறுவினர். அவை கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆனைப்பந்தி, மானிப்பாய் முதலான இடங்களில் நிறுவப்பட்டன. அத்துடன் அவரது திருவுருவங்களையும் பிரதிஷ்டை செய்தனர். மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தர் சிலை, காத்தான்குடி - ஆரையம்பதி நகரங்களின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆ) திருவள்ளுவர் சிலை

தமிழ் நாட்டிலிருந்து தமிழகத் தொழிலதிபர் கலைமாமணி வி.ஜி.சந்தோசம் அவர்களால் தருவிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தினால் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைக்கப்பட்டு, தமிழ் சங்கத் தலைவரான எஸ். கணேசராஜா தலைமையில் மக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டது.
இ) மட்டக்களப்பு காந்தி சிலை

மகாத்மா காந்தி இந்தியப் போராட்டத்தை கடமையேற்று நடாத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அகிம்சை என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகிற்கு வித்திட்ட உன்னத மனிதர். பிரிட்டிஸ் காலனித்துவத்திற்கு எதிராக அகிம்சை ரீதியில் போராடி இந்திய தேசத்திற்கும் மட்டுமன்றி, இலங்கை உட்பட தெற்காசியத் தேசத்திற்கேச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததால், இவருடைய தியாகத்தை நினைவு கூரும் வகையில் உலகம் தோறும் இவருக்காக சிலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இலங்கையில் மூன்று வாரங்கள் தங்கியிருந்தார். இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு மகாத்மா காந்தி அவர்கள் வருகை தரவில்லையாயினும் அவருக்கு இங்கே சிலை அமைக்கப்பட்டுள்ளமையானது அம்மக்கள் காந்தி மீது கொண்டுள்ள அபிமானத்தைக் காட்டுகின்றது. இச்சிலையானது 60 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மட்டக்களப்பு நகர மத்தியில் வாவிக்கரை ஓரமாக மகாத்மா காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்த இடம் ‘காந்தி சதுக்கம்’ என்று அழைக்கப்பட்டது. 2012.04.06 அன்று சில விசமிகளால் உடைத்தெறியப்பட்ட போதும் மீண்டும் காந்தி சிலை புனரமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அப்பூங்காவிற்கு ‘காந்திப் பூங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈ) ஒளவையார் சிலை – கல்லடி மட்டக்களப்பு

ஒளவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர். ஒளவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.
மூத்த ஒளவையார். தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் உற்ற நண்பர். இந்த சங்ககால ஒளவையாருக்குப் பிறகு, எட்டாம் நூற்றாண்டில் நாயன்மார்கள் காலத்தில் ஒரு ஒளவையார் சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் தெரிகிறது. அவருக்கும் பின் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் இன்று பலராலும் அறியப்படும் ஔவையார். இவர் இயற்றியதாக நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விநாயகர் அகவல், ஞானக்குறள் சிற்றிலக்கியம் (பந்தன் அந்தாதி) என்பன காணப்படுகின்றன.
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் வர்த்தகர் வேல்முருகன் குடும்பத்தினரால், தங்கள் 40 வருட நிறைவைக் குறிக்குமுகமாக ஒளவையார் சிலை திறந்துவைக்கப்பட்டது. நின்ற நிலையில் வெண்ணிற ஆடை அணிந்து, வலக்கையில் தடியுடனும் இடக்கையில் ஏடுகளுடனும் இடத்தோளில் துணியாலான பையுடனும் காணப்படும் ஒளவையார், நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் கழுத்தில் உருத்திராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார்.
உ) உலக நாச்சியார் சிலை
மண்முனைப் பிரதேசத்தை அரசாட்சி செய்த கலிங்க தேசத்தரசன் குகசேனனின் புத்திரி உலக நாச்சி ஆவார். காடுகளை அழித்து களனிகளாக மாற்றும் வேலைத்திட்டம் அவளது காலத்திலேயே இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றீச்சரம் கோவிலைக் கட்டியவர் இவரே. மண்முனையினைத் தளமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த உலக நாச்சியார், மட்டக்களப்பின் முதலாவது சிற்றரசி என்பதனால் அவரினை நினைவுகூரும் முகமாக அவருக்கு இரு திருவுருவச்சிலைகள் ஆரையம்பதியில் அமைக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று, ஆரையம்பதி பொதுச்சந்தைக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது. (7) அலங்கரிக்கப்பட்ட குதிரையின் மீது கையில் வீரவாளுடனும் மஞ்சள் நிறச் சேலையுடனும் உலக நாச்சியாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

இரண்டாவது சிலை, உலக நாச்சியின் மாளிகை அமைந்திருந்த ஆரையம்பதி பழைய கல்முனை வீதி கோவில்குளம் சிகரம் பிரதேசத்தில் காணப்படுகின்றது. சேலையணிந்து இடக்கையில் வீரவாளுடனும், வலக்கையில் இலிங்கம் தரித்து தலையில் கிரீடத்துடனும் உலக நாச்சியார் காட்சியளிக்கின்றார். இச்சிலை பொன்னிறத்தில் நிறம் தீட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது (உரு.14). ஆரையம்பதி ஆற்றல் பேரவையினால் நிறுவப்பட்ட இத்திருவச்சிலை அதே ஊரைச் சேர்ந்த ரூபன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அத்தோடு இதற்கான காணியினை இலவசமாக திருமதி.சோமசுந்தரம் பொன்னம்மா என்பவர் வழங்கியிருந்தார். (8)
ஊ) எல்லாளன் சிலை

இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களில் எல்லாளன் குறிப்பிடத்தக்கவராவார். இவர் கி.மு.161 இல் இருந்து கி.மு.295 வரையான காலப்பகுதியில் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனைப் பற்றி மகாவம்சத்தில் 21 செய்யுள்கள் மட்டுமே கூறுகிறன.(9) ஆரையம்பதியில் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் நடுப் பகுதியில் எல்லாளன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எ) ஆரையம்பதி இராவணன் சிலை

இராவணன் சிலை ஆரையம்பதி – கல்முனை பிரதான வீதியில் சிவனேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரமுடையது. பத்துத் தலைகளுடன் நெற்றியில் திருநீற்றுப் பூச்சும் முறுக்கிய மீசையும் கொண்டு கம்பீரத் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. வலக்கை கதாயுதத்தை ஊன்றியபடியும் இடக்கை இடையைப் பற்றிக் கொண்டும் உள்ளன.
ஏ) கடற்கரைக் கால பைரவர் சிலை

நின்ற நிலையில் வலது காலை நிலத்தில் ஊன்றி, இடக்காலைத் தூக்கியபடி வைரவர் சிலை, ஆரையம்பதி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஆறு திருக்கரங்கள் காணப்படுகின்றன. மேல் வலக்கையில் திரிசூலம், வலது நடுக்கையில் கட்கம், வலது கீழ்க்கையில் பரசு, இடது மேற்கையில் சங்கம், இடது நடுக்கையில் டமருகம், இடது கீழ்க்கையில் நாகம் என்பன காணப்படுகின்றன. இடையில் புலித்தோலும் மார்பில் ருத்திராட்ச மாலையும் பூணூலும் கழுத்தில் நாகாபரணமும் அமையக் கருமை நிறத்தில் காட்சியளிக்கிறார். (10)
7. மட்டக்களப்புப் புகையிரத நிலையம்
மட்டக்களப்பிலுள்ள சினைவுச் சின்னங்களுள் மட்டக்களப்பு புகையிரத நிலையமும் சிறப்பிடம் பெறுகிறது. சுமார் 90 வருட பழமை கொண்ட இந்நிலையம், மட்டக்களப்பு நகரில் உள்ள பெரிய தொடருந்து நிலையமாகும். இச்சேவைகள் 1929 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. பின் உள்நாட்டுப் போர் காலத்தில் 1990களில் நிறுத்தப்பட்டிருந்தது. மட்டக்களப்பு வரையும் காணப்படும் இச்சேவைக்கு முன்னதாகவுள்ள நிலையம் ஏறாவூர் புகையிரத நிலையமாகும்.
8. குசலான மலை
மட்டக்களப்பு பிராந்தியத்தில் சமய, ஆன்மிக சுற்றுலாத் தளங்களாக கோயில்களை நாம் அடையாளப்படுத்தலாம். இலங்கையில் ஆதித்தமிழன் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட குசலான மலை செங்கலடி சந்தியிலிருந்து மேற்காக கறுத்தபாலமூடாக மகாஓயா செல்லும் வீதியில் 13 கிலோ மீற்றர் தொலைவில் கரடியனாறு எனும் பழந்தமிழ்க் கிராமத்தின் வடமேற்குத்திசையில் 3 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இது இறைவழிபாடு, தொல்லியல், மலையேற்றம் முதலியவற்றுக்குப் புகழ்பெற்றதாகும்.
இம்மலை உச்சியில் பண்டைய காலத்து வேல் தாங்கிய சிறுகோயில் இருந்தது. இந்தக்குசலான் மலைக்கும் அருகிலுள்ள 7 சிறுகுன்றுகளுக்கும் மத்தியில்தான் கரடியனாறுக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது. முந்தெனி ஆற்றால் இக்கரடியனாறுக்குளம் இயற்கையாக உருவாகியதாகும். இங்கு ஆதித்தமிழர்கள் வாழ்ந்ததற்கான தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. குசலான்மலை சுமார் 250 அடி உயரமுடைய தட்டையான அமைப்புடைய குன்றாகும். 200 அடி நீளமும் 100 அடி அகலமும் உடைய இக்குன்றில் சுனைகள் பத்துக்கும் மேற்பட்ட குகைகள் காணப்படுகின்றன. படிக்கற்கள் காணப்படுகின்றன. (11)
9. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்
மட்டக்களப்பு நகரின் தெற்குத் திசையில் சுமார் பதின்மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரையில் கொக்கட்டிச்சோலை என்னும் பழம்பதியுள்ளது. கொக்கட்டி மரங்கள் செறிந்த சோலையாக இருந்த இடமாதலால் ‘கொக்கட்டிச்சோலை’ எனும் பெயர் தோன்றலாயிற்று. “கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீச்சரம்” மட்டக்களப்பில் உள்ள தேசத்துக் கோவில்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மட்டக்களப்புத் தேசமே உரிமை கொண்டாடும் கோயில்கள் “தேசத்துக் கோயில்” என்று அழைக்கப்படுகின்றன.
கலிங்க (ஒரிசா) தேசத்திலிருந்து வந்து மண்முனைப் பிரதேசத்தை அரசாட்சி செய்து வந்த கலிங்க தேசத்தரசன் குகசேனனுடைய புத்திரி உலக நாச்சியின் ஆட்சிக்காலத்தில் காடுகளை அழித்து களனிகளாக மாற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது. அவ்வேளையில் வேடர்குல திடகன் என்பவன் கொக்கட்டி மரத்தை வெட்டும்போது, கொக்கட்டி மரத்தின் வெட்டுவாயில் இருந்து குருதி பாய்ந்தது. அதைக் கண்ட அவன் தனது உடையினால் வெட்டு வாயைக் கட்டிவிட்டு உலக நாச்சியிடம் செய்தியைக் கூறினான்.
உலக நாச்சியும் அந்த இடத்தில் ஒரு இலிங்கம் இருந்ததைக் கண்டு ஆலயம் அமைத்து வட நாட்டு கொல்லடத்திலிருந்து பட்டர் மூவரை வரவழைத்து பூசை பண்ணுவித்தாள். இவ்வாலயம் குளக்கோட்டன், கலிங்கமாகோன், விமலதர்மசூரியன், விக்கிரம இராஜசிங்கன் முதலிய மன்னர்களால் பரிபாலிக்கப்பெற்ற ஆலயமாக திகழ்கின்றது. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் ஆலயத்தை அழிக்கும் பொருட்டு வந்த போர்த்துக்கேய தளபதி அங்கிருந்த நந்தி புல் தின்னுமா? எனக் கேலி செய்ய அந்நந்தி எழுந்து புல் தின்று சாணமும் இட்ட அதிசயம் இக்கோவிலில் இடம்பெற்றது. ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் இக்கோவில் திருவிழா “தேரோட்டம்” என்று அழைக்கப்படுவதுடன், பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கூடும் நிகழ்வாகவும் காணப்படுகிறது.
10. அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம்
அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 2 மைல் தூரத்தில் அமிர்தகழி எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் உள்ள சிவலிங்கம்; விநாயகர் அங்கியுடனே சிவலிங்கம் காட்சி தருவதால் அடியார்களால் மாமாங்கப் பிள்ளையார் என்றே மூலமூர்த்தி போற்றப்படுகின்றார். ஆலயத்திற்கு வடபுறத்தேயுள்ள மாமாங்கத் தடாகம் இவ்வாலயத்தின் தீர்த்தக் குளமாகும்.
மாமாங்கக்குளத்திலே ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வதுடன் பிதிர்க்கடன் நிறைவேற்றுவதும் சிறப்பம்சங்களாகும். இவ்வாலயத்தின் தீர்த்தக் குளம் நோய்கள் பல தீர்க்கும் அற்புத சக்திகளையுடையது. இக்குளத்தில் காணப்படும் சந்தனச் சேறும் பல அரிய வைத்திய குணங்களுடையதெனவும், பல்வேறுபட்ட சரும நோய்களுக்குரிய நிவாரணி எனவும் நம்பப்படுகிறது.
இராமன், இராவணனை வென்று, சீதையை சிறைமீட்டு அயோத்தி திரும்பும் வழியில் இத்தலம் அமைந்துள்ள இடத்தில் ஓய்வெடுத்ததாகவும், சிவலிங்கம் ஒன்றை எடுத்துவர அனுமனை அனுப்பியதாகவும், அனுமன் தாமதமானதால் அங்கிருந்த மண்ணினால் இலிங்கம் செய்து சிவபூசை செய்ததாகவும், தனது கோதண்டத்தை நிலத்தில் ஊன்றி பூசைக்கு தேவையான தீர்த்தத்தினை பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த ஆலய நிர்வாகம் கோட்டைமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும், அமிர்தகழி பகுதி ஏழூர்க் குருகுல வம்சத்தவர்களுக்குமே உரிமை உடையது.
11. சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி ஆலயம்
மட்டக்களப்பு நகரின் வடக்கே 22 கிலோ மீற்றர் தொலைவில் சித்தாண்டி என்னும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. தொன்மையும் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இவ்வாலயத்தில் மூலவராக வேலாயுதம் காணப்படுவதுடன், அதன் அருகில் அமைந்துள்ள குமாரத்தன் கோயில், இத்தலத்தின் பழமைக்குச் சான்றாகும். முன்னொரு காலத்தில் சிகண்டி என்கின்ற சித்தர் ஒருவர் கொத்துப்பந்தல் அமைத்து வேல் ஒன்றினை வைத்து வழிபட்டு வந்ததால் இவ்வாலயத்திற்கு ‘சித்தாண்டி முருகன் ஆலயம்’ எனப் பெயர் வந்தது எனக் கருதப்படுகிறது.
சோழ மன்னர் இராஜேந்திரனின் (கி.பி.1017- 1070) புதல்வன் சங்கவன் எனப்படும் இலங்கேஸ்வரனால் ஆலயத்திற்கும் இவ்வாலய குருக்களான உலகநாத குருவிற்கும் ஆலயத்தில் பணியாற்றிய கோவில் திருப்பணியாளர்களுக்கும் தேவையான வருமானத்தினை ஈட்டிக்கொள்ளும் வகையில் வயல்நிலங்கள் மானியமாகக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்நாட்டு திசையாயிரத்து ஐந்நூற்றுவர், சித்திரமேழி நாட்டவர், பசும்பையர் என்ற வணிக கணத்து வேளாளர்களே சித்தாண்டியில் முதன் முதலில் குடியேறி ஆலயத்தினை புனரமைத்தனர் என்று அறிய முடிகின்றது. சித்தாண்டி வேளாளர் குலத்தினர் பசும்பையர் வழி வந்தவர் என்பதை குறிக்க, தற்போதும் தம் மந்தைகளில் பசும்பையைக் குறியிடுகின்றனர். தற்போது ஆலயத்தில் வன்னிமை குடியைச் சேர்ந்த வன்னியர் ஒருவரும், புதூர் குடியைச் சேர்ந்த வண்ணக்கர் ஒருவரும், அத்தியாகுடி வண்ணக்கர் ஒருவருமாக ஆலயத்தின் பிரதான நிர்வாகிகளாகக் கடமையாற்றி வருகின்றனர்.
வன்னிமைக்குடியினர், புதூர் குடியினர், அத்தியா குடியினர், திருப்பணி குடியினர், கண்காணி குடியினர், பட்டியன் குடியினர், சந்தாபணிக்கன் குடியினர், பரம குடியினர், காளிங்கன் குடியினர், மருத்துவக் குடியினர், வந்தாறுமூலை பரமக்குட்டிக் குடியினர், கிரான் கிண்ணையடி நாட்டூர் வேளாளர், செங்கலடி பொன்னையா வன்னியர் சந்ததியினர் ஆகிய குடியினர் ஒரு நாள் திருவிழாவினை நடாத்தி வருவதோடு இறுதி மூன்று நாட்களும் மயில் கட்டுத் திருவிழா நடைபெறுகின்றது.
முடிவுரை
மட்டக்களப்பு பிராந்தியம் தனித்துவமான கலாசாரச் சுற்றுலா மையங்களையும், வரலாற்றுப் பெருமைகளையும் கொண்டமைந்தது என்பதை இங்கு நோக்கப்பட்ட விடயங்களினூடாக அறியலாம். அந்தஸ்து, கௌரவம், தொழில் அல்லது வணிக மூலாதாரங்கள் முதலிய பல விடயங்களிற்காகப் பயணிகள் இச்சுற்றுலா மையங்களுக்குச் செல்கின்றனர். இச்சுற்றுலா மையங்களுக்குட் செல்வதனால், தனி மனித, குடும்ப, சமூக, பிரதேச தொடர்புகள் வலுப்பெறுகின்றன. எனவே, மட்டக்களப்புப் பிராந்திய சுற்றுலாத் துறை மேம்பட பல திட்டங்களை அமுல்படுத்தும் போது, இப்பிரதேசம் எதிர்காலத்தில் மேலும் மெருகூட்டப்பட்ட பிரதேசமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
அடிக்குறிப்புகள்
1. தங்கமணி, ம.இ.ரா. (2004). சுற்றுலாவியல் ஓர் அறிமுகம், ப.6
2. ப. முரளிதரன் (கல்லடி, மட்டக்களப்பு) என்பவர் எழுதிய “மக்கள் மனங்களிலும் ஒளிவீசும் மட்டக்களப்பு கலங்கரை விளக்கு!” கட்டுரை - இதுவும் உண்மையே! வலைப்பூ (http://ithuvum.blogspot.com/2011/10/)
3. மேலது.
4. தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றிருக்கும் “கல்லடிப் பாலம்” கட்டுரை (https://ta.wikipedia.org/s/5evs)
5. மேலது.
6. தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றிருக்கும் “மட்டக்களப்பு வாயில்” கட்டுரை. (https://ta.wikipedia.org/s/36n8)
7. அத தெரண வலைத்தளத்தில் “மட்டக்களப்பின் சிற்றரசி உலக நாச்சியாரின் சிலை அடித்து சேதம் (படங்கள்)” கட்டுரை. (https://tamil.adaderana.lk/news.php?nid=45198)
8. அக்னி செய்திகள் வலைத்தளத்தில், “312ம் நூற்றாண்டு உலக நாச்சி தமிழ் வீர பெண்மனியின் வரலாறு மதங்களுடன் இனைக்கப்படிருப்பது தமிழுக்கு வெக்ககேடும் மானக்கேடும்” கட்டுரை. (http://akkininews.blogspot.com/2014/09/312_15.html)
9. தமிழ் விக்கிப்பீடியா தளத்தில் “வல்லாளன்” கட்டுரை. (https://ta.wikipedia.org/s/81c)
10. நேர்காணல் - சர்வேஸ்வரன், ஆரையம்பதி
11. குறியீடு வலைத்தளத்தில் நிலையவன் எழுதிய “மட்டக்களப்பில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் வெளியானது” கட்டுரை. (https://www.kuriyeedu.com/?p=130734)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.