இந்தியாவில் புகழ்பெற்ற தலைவர்கள் அல்லது சிறப்பு பெற்றவர்கள் உருவம் கொண்ட தபால்தலைகளை வெளியிடுவது குறித்த முடிவினை இந்திய அரசு மட்டுமே எடுத்து வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இண்டிபெக்ஸ் 2011 (INDIPEX - 2011) எனும் உலகத் தபால்தலை சேகரிப்புக் கண்காட்சியின் போது “என் தபால்தலை” (My Stamps) எனும் பெயரில் தனி நபர்களின் உருவங்களுடனான தபால்தலைகள் வெளியிடும் திட்டத்தை இந்தியத் தபால்துறை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் பெற்ற வெற்றியைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு அவருக்குச் சிறப்பு செய்ய முடியும். இதுபோல், நம்முடன் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் போன்றவர்களின் பணிகளுக்கான பாராட்டு விழா அல்லது பணி நிறைவுக்கான பிரிவு உபச்சார விழா, குழந்தைகள் பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா மற்றும் சிறப்பு விழாக்கள் போன்றவைகளில் தொடர்புடையவர்களது உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு அவரைச் சிறப்பிக்க முடியும்.
இந்தத் தபால்தலை வெளியீட்டிற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
தபால்தலை சேகரிப்பு சிறப்பு சேவையகம், முக்கியத் தபால் அலுவலகங்கள் மற்றும் சுற்றுலாத்தலம் அமைந்திருக்கும் இடங்களிலுள்ள தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் “என் தபால்தலை” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு என் தபால்தலை வெளியீட்டிற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி, ஒரு தாளுக்கு ரூ 300 (ரூபாய் மூன்று நூறு) கட்டணமாகச் செலுத்த வேண்டும். அத்துடன் இந்திய அரசு அல்லது மாநில அரசு வழங்கிய நம்முடைய அடையாள அட்டை நகல், நாம் சிறப்பிக்க விரும்புபவரது மார்பளவிலான ஒளிப்படம் மற்றும் சிறப்புப் படம் போன்றவைகளை குறுந்தகடு மூலமாக இணைத்து அளிக்க வேண்டும். கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் போன்றவற்றின் இலச்சினைகள், சுற்றுலாத் தலங்கள், கலை வேலைப்பாடுடைய படைப்புகள், மரபுரிமையுடைய கட்டிடங்கள் (Heritage Buildings), வரலாற்று நகரங்கள், காட்டுயிர்கள் போன்ற ஏதாவது ஒன்றினைச் சிறப்புப் படமாக இணைத்து அளிக்கலாம்.
இதைப் பெற்றுக் கொண்ட தபால் அலுவலகத்தினர் எட்டாவது நாளில் நாம் சிறப்பிக்க விரும்பிய நபரின் உருவம் கொண்ட 12 தபால்தலை கொண்ட சிறப்புத் தபால்தலைத் தாளினை நமக்கு அளிக்கின்றனர். நாம் சிறப்பிக்க விரும்புபவரது சிறப்பு நாளுக்குப் பத்து நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பித்துச் சிறப்புத் தபால்தலைத் தாளைப் பெற்றுக் கொள்வது நல்லது. இந்தச் சிறப்புத் தபால்தலைகளுக்கு இறந்தவர்களின் உருவம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூட்டாண்மை நிறுவனங்கள் தங்கள் பணியாளரைச் சிறப்பிக்கவோ அல்லது வேறு சிறப்புகளை வெளிப்படுத்தவோ என் தபால்தலை வெளியிட விரும்பினால் அதையும் தபால் அலுவலகங்கள் செய்து தருகின்றன. நிறுவனங்கள் என் தபால்தலை திட்ட்த்தில் விண்ணப்பிக்கும் போது, குறைந்தது 100 தபால்தலைத் தாள்கள் கேட்டுத்தான் விண்ணப்பிக்க முடியும். இதற்கும் ஒரு தபால்தலைத் தாளுக்கு ரூ300 கட்டணமாகப் பெறப்படுகிறது. ஒன்றுக்கு மேல் 100 வரையிலான தபால்தலைத் தாள்களுக்குக் கட்டணத்தில் 10 சதவிகிதம் கழிவு அளிக்கப்படுகிறது. 101 முதல் 200 வரையிலான தபால்தலைத் தாள்களுக்கு 20 சதவிகிதம் கட்டணக் கழிவு அளிக்கப்படுகிறது.
தனிநபர்களுக்கு ரூ300 செலவில் சிறப்புத் தபால்தலை வெளியிட்டுச் சிறப்பிக்க முடியும் என்பதால் நாம் நமக்குப் பிடித்தவர்கள், நண்பர்கள் போன்றவர்கள் வெற்றியினை அல்லது அவர்களது சிறப்புகளைப் பாராட்டும் விதமாக அவரது ஒளிப்படத்துடனான தபால்தலை வெளியிட்டுச் சிறப்பிக்கலாம். அவரது மகிழ்ச்சியையும் அதிகரிக்கலாம்.