சங்க இலக்கியங்கள் காட்டும் உமணர் வாழ்வியல்
கு. ஜீவாலட்சுமி
முன்னுரை
தமிழ்ச் சமூகம் என்பது தொன்மையான வரலாற்றை உடையது. இச்சமூகம் தங்களது உணவுத் தேட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ‘இனக்குழு’வாக வாழும் இயல்பினை உடையது. இச்சமூகத்தின் ‘பண்டமாற்று’ முறையிலான உணவுத் தேட்டத்தின் விளைவாக உப்பு விற்கும் தொழிலை மேற்கொண்ட இனக்குழுவை ‘உமணர்’ என சங்ககால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. உப்பு, உப்பு விற்றல், உமணர் பற்றிய வாழ்வியலை அடையாளப்படுத்தும் விதமாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
உப்பும் நெல்லும்
சகடுகள் வரிசையாகச் செல்லும் ஒழுங்கு உடைய உமணர் ‘நோன்புகட்டுமணர் ஒழிகை’ எனச் சிறுபாணாற்றுப்படையிலும், ‘பல் எருத்து உமணர்’ என பெரும்பாணாற்றுப் படையிலும் கூறப்படுகிறது. இந்த உமணர்கள் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிச் சென்று பல ஊர்களில் விலை கூறி விற்று, அங்கு கிடைக்கும் பொருட்களை பண்டமாற்றாகப் பெறும் பழக்கத்தை உடையவர்கள் என்பதை;
“சில்பத உணவின் கொள்ளை சாற்றி,
பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி”
எனும் பாடல் வழி அறியமுடிகிறது.
“சில்பத உணவு - உணவிற்குச் சிறிதாக
இடப்படும் உப்பு; கொள்கை சாற்றி - விலை கூறி”
(செ.கு.-8)
உப்பை விற்று, நெல்லைப் பெற்று அதனை உரலில் இட்டு குற்றி அரிசியாக்கி சமைத்து உண்ணும் பழக்கம் இப்பகுதியில் விளக்கப்படுகின்றது.
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ”
என வரும் அகநானூற்றுப் பாடலும், உமணர் பண்டமாற்றுக் கொண்டு சமைத்து உண்ணும் இயல்பினர் என்பதை எடுத்துக் கூறும்.
நெய்தல் நிலமக்கள் மீனையும், கள்ளையும் கொடுத்து அதற்கு விலையாக குறிஞ்சி நிலத்தாரிடம் தேன், கிழங்கு வாங்கிவந்த செய்தியை
“தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நிறவு மறுகவும்”
எனப் பொருநராற்றுப்படை கூறுகிறது.
உப்பு விற்றல்
உப்பெடுத்தல் தொழிலும் இவர்களுடையது ஆகவே இவர்களை ‘உமணர்’ (பெரும்.-65, அகம்-102:4, புறம்:116-7) என்று அழைத்தனர்.
இப்பரதவர்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தலும் அவற்றை உலர்த்துதலும், உப்பு எடுத்தலும் ஆகும். இவர்கள் தூண்டிலை இட்டும் வலை வீசியும் மீன் பிடிப்பர்.
“உப்பு விளைவித்தல் இவர்களது பெருந்தொழில்களில் ஒன்று. உழாமலேயே உவர் நீரைப் பாத்திகளாகக் கட்டி உப்பை விளைவித்ததலினால் ‘உவர் விளைவு உப்பின் உழா உழவர்’ என்கிறார் உலோச்சனார். உப்பெடுத்து வணிகம் செய்யும் மக்கள் ‘உமணர்’ என்று கூறப்படுவர்’ (பெரும்.45-65)
குறுந்தொகையில் உமணர்
உப்பு வணிகர்கள் கூட்டம் கூட்டமாக பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து சென்று உப்பு விற்றனர் என்கிறது. குறுந்தொகை,
“உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின்”
(குறுந்.124:1)
காற்றடிக்கும் காலத்தில் எருது பூட்டிய உப்பு வண்டிகளைச் செலுத்தாது நிறுத்தி வைத்தனர் என்பதை,
“உமண் எருத்து ஒழிகைத் தோடு நிரைத்தன்ன”
(குறுந்.388:4)
என்று கூறுவதன் வழி அறியமுடிகிறது.
உப்பு வணிகர்கள் உப்பை விலைகூறி விற்றனர் என்று நற்றினை கூறுகிறது. இதனை,
“வெண் கல் உப்பின் கொள்ளை காற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்”
(நற்.4: 7-8)
செல்லும் ஓசையைக் கேட்டு நெய்தல் நிலத்துப் பறவைகள் அஞ்சின எனக் கூறுவது கொண்டு உப்பு விலை கூறி விற்கப்பட்டதையும், நெய்தல் நிலத்தில் உப்பு விளைவிக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. உப்பு உவர் நிலத்தில் விளைவிக்கப்பட்டு குன்றுபோல் குவிக்கப்பட்டிருந்தது என்பதை
“உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை”
(நற்.138:1)
என நற்றிணை கூறுகிறது.
மருதநிலத்தில் உள்ள உப்பு வாணிகர் வெண்ணெல்லை வண்டிகளிலே ஏற்றிக் கொண்டு போய் விற்று, அதற்கு விலையாகப் பிற நாடாகிய நெய்தல் நிலப்பகுதியில் விளைந்த உப்பைப் பெற்று வந்து விலை கூறுவர் என நற்றிணை கூறுகிறது. இதனை,
“தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,
நெடு நெறி ஓழுகை நிலவு மணல் நீந்தி”
(நற். 183:1-3)
நெல்லைத் தந்து உப்பைப் பெற்று வந்தனர் எனும் செய்தியை நற்றிணை வழி அறியமுடிகிறது.
நேரிய இடத்தையுடைய சீறிய உப்புப் பாத்திகளில் கடல்நீரை ஊற்றி மழையை எதிர்பாராது செய்யும் வேளாண்மையை உடையதும் கடற்கரைச் சோலை எனக் கூறும் நற்றிணையில் உப்பு விளைவிக்கும் முறைபற்றிய செய்தியை அறியமுடிகிறது.
“உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த”
(நற்.254:6-7)
புலால் மணம் பொருந்திய மீனை உப்பிட்டு வற்றலாய் உணர்த்தும் செய்தியையும், உப்பு வணிகர்களின் வண்டிகள் வரிசையாகச் செல்வதை உமணர் ஒழிகை என்பர்.
(சிறு. 55, புறம் 116:7-8)
எருதுபூட்டிய வண்டியில்,
உமணர் தம் மகளிருடன் சென்று
உப்பை விலை கூறி விற்பர்.
“சில்பத உணவின் கொல்லை சாற்றி,
பல் எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி”
(பெரும். 64-65)
உமணர்கள் உப்பு மூட்டைகளை வண்டியில் ஏற்றிப் பல ஊர்களுக்குப் சென்று விற்று, அவ்விடத்து விளையும் பொருள்களைப் பண்டாற்றாக பெறும் கொள்கையை உடையவர்கள்.
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளிரோ”
(அகம், 140:5-9)
என உப்பை பெற்று நெல்லைப்பெற்று உண்டு வாழ்ந்தனர்.
வெள்ளிய மணற்பரப்பில் கடல்பரந்து ஏறுகின்ற நெய்தல் நிலத்தைக் கிடந்த நெடுவழியிடத்தே உப்பங்களிகள் சூழ்ந்த ஊர்கள் இருந்தன.
“கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர,
பாடல் சான்ற நெய்தல் நெடுவழி”
(சிறுபாண். 151-152)
என சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
விளைவிக்கும் நெய்தல் நில உழாது மக்களாகிய பரதவர் உவர் நிலத்து விளைந்த உப்பினை, உப்பு வணிகர் வரும் காலம் நோக்கி கடற்கரைச் சோலையின் குவிப்பர் என்று நற்றிணை கூறுகிறது. இதனை,
“உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஓழிகை உமணர் வரு பதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை”
எனக் கூறுவது கொண்டு உப்பை விளைய வைப்பவர் பரதவர், அதனை விலை கூறி விற்பவர் உமணர் என்பதை அறியமுடிகிறது.
முடம்பட்ட காளையை உப்பு வணிகர்கள் விட்டு நீங்கினர், என
“நீரும் புல்லும் ஈயாது, உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்ப”
(புறம். 307:7-9)
உப்பு வணிகர்கள் உப்பை ஏற்றிக் கொண்டு காட்டு வழியில் வண்டிகளைச் செலுத்தினர், என
“உப்புஓய் சாகாட்டு உமணர் காட்ட
கழிமுரி குன்றத்து அற்றே”
(புறம்: 313:5-6)
உப்பு வாணிகமாக உள்நாட்டுக்குள்ளேயே பண்டமாற்று முறையில் நடைபெற்றது என்பதை அறியமுடிகிறது.
தெளிந்த உப்பங்கழியிடத்து விளைந்த வெண்மையான கல் உப்பினைப் பலர் அறிய விலை கூறி விற்ற உப்பு வணிகர்கள், எருதுகள் பலவற்றையும் பரந்து மேயும்படி அவிழ்த்து விட்டுச் சமைத்து உண்டு இளைப்பாறி அவ்விடத்தை விட்டும் செல்வர் என
“தெண்கழ விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழிகை
உரனுடைச் அவல பகடுபல பரப்பி
உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்”
(அகம்: 159:1-4)
உப்பு வணிகரது மகள் உப்பை விலைகூறி விற்றாள் எனும் செய்தியை
“கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்
சேரி விலைமாற கூறலின்,
(அகம்: 140:5-8)
பெண்களிடம் வீதிகளில் விலை கூறி உப்பு விற்றனர் எனும் செய்தியை அறியமுடிகிறது. “வௌ; உப்பு” என
(மது:கா:318) கூறுகிறது. உமணரை “உப்பு பகர்ந்ரொடு” என கூறுகிறது.
(மது:கா:117) உப்பு விற்றவர்கள் ‘உமணர்’ எனப்பட்டனர். உப்பு ‘நெல்’ முதலிய உணவுப் பொருட்களுக்கு மாற்றாக விற்கப்பட்டது. அந்தந்த நிலங்களில் கிடைக்கும் பொருட்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு ‘உப்பை’ விலையாக விற்றனர். உப்பை விளைவிக்கும் குழுவிடமிருந்து நெல் முதலியன கொடுத்து உப்பை விலைக்கு வாங்கிச் சகடங்களில் கொண்டு சென்று, பிற நிலங்களில் உப்பை விற்பவர்கள் ‘உமணர்’கள் என்பதை அறியமுடிகிறது.