பௌத்தக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம்
முனைவர் சு. மாதவன்
ஒரு நூலெழுதத் தக்க தரவுத் தளங்கள் நிறைந்த தலைப்பு இது. ஒரு கட்டுரையளவில் இங்கு அணுகப்படுகிறது. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் உலகளாவிய மானுடப் பொதுமை சான்றது; பௌத்தமும் அவ்வாறானதே. இலக்கியங்களில் செம்மை உள்ளிட்ட கூறுகள் நிறைந்திருப்பதானது வாழ்க்கையிலும் அவை நிறைந்திருக்கக் கண்டோ நிறைந்திருக்க வேண்டி விரும்பியோ இயல்வன. தமிழ்ச் செவ்விலக்கியப் பெரும்பரப்பில், முதலில் கிடைத்துள்ள சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் சமயச் சார்பற்ற பாங்குடன் ஒளிர்ந்து மிளிர்வதை அறிஞர் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். ஏனெனில், நிறுவனமயப்பட்ட சமயமாக எந்தச் சமயமும் அக்காலத்தில் வளர்ந்திருக்கவில்லை. நம்பிக்கை - வழிபாட்டுக் கூறுகளே அவற்றில் இடம் பெற்றுள்ளன. சிவனியமோ, மாலியமோ, சைவ, வைணவச் சமயங்களாகத் தோற்றம் பெறவில்லை; கருக் கொண்டிருந்தன; வைதீக நெறியும் அவ்வாறானதே.
தமிழர் தம் திணைசார் வாழ்வியலில் பரத்தமை நெறியும் போர் நிகழ் வெறியும் மிகுந்ததால் சமூகத்தின் அசைவியக்கம் நிலைகுலைந்து போயிருந்தது. இதனால் அகத்திலும் புறத்திலும் அறநெறிகள் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு, தமிழ்ச் சமூகம் தனக்கான அறநெறி விழுமியங்களைத் தன்னியல்பாகக் கட்டமைத்துக் கொண்டிருந்த வேளையில் வட இந்தியாவிலிருந்து பௌத்தமும் சமணமும் நிறுவனப்பட்ட சமயங்களாகவே தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. வந்து சேர்ந்த பௌத்த, சமண சமயங்களில் சமணம் கடுமையான பின்பற்று நெறிகளைக் கொண்டிருந்ததால் நடுநிலையான பின்பற்று நெறிகளைக் கொண்டிருந்த பௌத்தம் மக்களின் ஏற்பு நிலையைப் பெற்றது. சங்க இலக்கியங்களில் சமணத்தைக் காட்டிலும் பௌத்தம் மிகுதியாக ஊடுருவி நிற்பதிலிருந்து இத்தகைய முடிவுக்கு வரலாம்.
இத்தகைய நோக்குநிலையிலிருந்து பௌத்தக் கோட்பாடுகள் சங்கத் தமிழிலக்கியங்களில் இடம் பெற்றுள்ள போக்குகளை இக்கட்டுரை தொட்டுக்காட்டத் தொடர்கிறது.
பௌத்தக் கோட்பாட்டு நிலைகள்
மனிதர்களின் சிந்தனைகளிலும், செயல்களிலும் இரண்டறக் கலந்திருப்பனவற்றைக் கோட்பாடுகள் என்கிறோம். அவை வாழ்வியலின் கருத்தியல் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் தன்னியல்பாய் உருவானவையும் வந்து கலந்தனவையாகவும் அமைகின்றன. இத்தகையக் கோட்பாடுகளை,
1. நம்பிக்கைகள் சார்ந்தவை
2. வழிபாடுகள் சார்ந்தவை
3. சடங்குகள் சார்ந்தவை
4. நடத்தை நெறிகள் /கடைப்பிடி நெறிகள் சார்ந்தவை
என்ற நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். இவற்றுக்குள் பௌத்தக் கோட்பாடுகளாக எவை எவை தொழிற்பட்டன என ஆராயலாம்.
சங்க காலப் பெயர்களில்
சங்க கால வாழ்வியலின் ஊடாகச் சில வழக்காறுகளின் மூலக்கூறுகளின் பதிவுகள் தென்படுகின்றன. மனித வாழ்வியலில் ஒரு சமூகத்தின் சிந்தனைகள் முதலில் தொழிற்படும் இடம் குடும்பம். குடும்பத்தின் ஓர் அலகு தனிமனிதன். ஒரு குடும்பம் எத்தகைய வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பவை மனிதர்களின் பெயர்கள்.
மனிதர்களின் பெயர்களில்தான் அந்தச் சமூகத்தின் பன்முகச் சிந்தனை விதைகள் தெளிக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோக்கில், சங்ககால மானிடர்களின் பெயர்களில் பௌத்தச் சுவடுகள் தென்படுபவற்றை அணுகலாம். பொதுவாக, எவரொருவர் பெயருமே அவரவர் சார்ந்த மொழி, தொழில், சமயம், சமூகம், மெய்யியல் ஏதேனும் ஒன்றின் கருத்தியல் சார்பைப் பின்புலமாகக் கொண்டு விளங்குகின்றது. சங்கப் புலவர்களின் பெயர்களும் அவ்வாறே அமைந்துள்ளன. அரிசில் கிழார், ஆலந்தூர் கிழார், ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலான பெயர்கள் இவர்கள் நிலவுடைமையாளர்களாய் இருந்துள்ளனர் என்பதையும், உறையூர் மருத்துவன் தாமோதரனார், ஒரேருழவர், தங்கால் பொற்கொல்லனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் முதலான பெயர்கள் இவர்கள் வணிகர்களாக இருந்துள்ளனர் என்பதையும் சுட்டி நிற்கின்றன. இதைப்போலவே இளம்போதியார், சங்க வருணர், சிறுவெண் தேரையார், தேரதரன் ஆகிய பெயர்கள் இவர்கள் பௌத்தச் சார்புடையவர்களாய் இருக்கக் கூடும் என்பதை வெளிப்படுத்துகின்றன.
‘ஐயாதி சிறுவெண்தேரையார்’ என்னும் புலவருக்கு மனிதனின் நன்னடத்தைக்கும் நல்வாழ்க்கும் மூலமான ஐந்து நன்னெறிகளைப் பின்பற்றியவர் என்னும் பொருளில் அதாவது பௌத்தப் பஞ்சசீலங்களைப் பின்பற்றியவர் என்னும் பெயரில் பெயரிடப்பட்டிருக்கலாம்; பெயரிட்டுக் கொண்டிருக்கலாம்.
‘குண்டுகட் பாலியாதனார்’ என்னும் புலவர் பெயரில் உள்ள ‘பாலி’ என்னும் சொல் புத்தரின் தாய்மொழியும் பௌத்த மெய்யியல்களின் மூலமொழியுமான ‘பாலி’ மொழியைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இவரது பெயரின் முன்னொட்டான “குண்டுகட்’ என்பதும் ‘Kuntakal’ என்னும் இன்றைய ஆந்திர மாநில ஊரைச் சுட்டுவதாகலாம். ‘Kuntakal’ என்னும் இவ்வூர் சங்க காலத்தில் தமிழகத்து ஊர்களுள் ஒன்றாக நிலவியதே என்பதும் பொருத்தமாகவே உள்ளது. எனவே, ‘குண்டுகட் பாலியாதனார்’ என்பவர் ‘குண்டுகட்’ ஊரைச் சேர்ந்த பாலிமொழியறிந்த பௌத்தத் துறவியாகலாம். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கோவூர்கிழார், என்பது போலவே இப்பெயராகும். மேலும், சங்ககாலப் புலவா்கள் “சாத்தன்” என்னும் பின்னொட்டு பெயர்களில் 84 பாடல்களைப் பாடியுள்ளார். உறையூா் முதுகண்ணன் சாத்தனார் 5 பாடல்களும், சாத்தந்தையார் 4 பாடல்களும், பெருந்தலைச் சாத்தனார் 6 பாடல்களும், மடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 2 பாடல்களும், ஒக்கூர் மாசாத்தனார், ஒக்கூா் மாசாத்தியார் (பெண்), கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மோசிசாத்தனார், ஆடுதுறை சாத்தனார் ஆகியோர் ஒரு பாடல்கள் வீதம் மொத்தம் 10 புலவா்கள் 23 புறநானூற்றுப் பாடல்களைப் பாடியுள்ளனா். “சாத்தன்” என்னும் சொல்லுக்குப் பெரும்பான்மையான தமிழ் அகராதிகள் “புத்தன்”, “தெரிவிக்கின்றவன்” என்ற பொருளைத் தருகிறது. ஆகவே, “சாத்தனார்” என்னும் பின்னொட்டு பெயருள்ள புறநானூற்றுப் புலவா்கள் “புத்தரின் கருத்தினைத் தெரிவிப்பார்கள்” என்று பொருள் கொள்ளலாம் (அறிவுராஜ்., ந. 2013 : 89)
சங்க இலக்கியங்களில்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களுள் பௌத்தக் கோட்பாடுகள் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும். சமயம் என்பது தமிழர் மரபின் பகுப்புப்படி புறம் சார்ந்தது. எனவே, புறநானூற்றில் சமயக்கோட்பாடுகள் இடம் பெறுவது இயல்பே.
புறநானூற்றில் 360-வது பாடலாக அமைந்துள்ள பாடலை இயற்றியவர் பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்துள்ள பாடலில் பௌத்தச் சார்புடைய சிந்தனைகள் இடம் பெற்றுள்ளமை அறியலாகிறது. அப்பாடல் வருமாறு:
“பெரிது ஆராச் சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண்ணுணா்வினாற் பெருங் கொடையா்
கலுழ் நனையால் தண் தேறலா்
கனி குய்யாற் கொழுந் துவையர்,
தாழ் உழந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்பப் பலா்க்கு ஆற்றி
ஏமமாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே பெரும் கேள் இனி நாளும்,
பலரே தகை அஃது அறியாதோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று, அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி
அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலைமாக
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நித்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,
புலையன் ஏவப் புன்மேல் அமருந்துகொண்டு,
ஆழல்வாய்ப் புக்க பின்னம்,
பலர்வாய்த்து இரா அர், பகுத்துஉண்டோரே? (புறநா. 360) (மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 90)
இப் பாடல் மூன்று கருத்துக்களை முன்வைக்கிறது. அவை வருமாறு:
1. செல்வமும் மன்னி நில்லாது - (செல்வம் நிலையில்லாதது) - செல்வம் நிலையாமை
2. அற்று அதன் பண்பே - இற்று இதன் பண்பே (நாலடி)
உயிரில் பொருள், உயிருள் பொருள் இரண்டின் பண்புகளும் நிலையில்லாததாகவே உள்ளது.
உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை
3. நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை - நாள்தோறும் ஒழுக்கத்தில் குறையாது வாழ வேண்டும் - ஒழுக்கத்தின் இன்றியமையாமை
இப் பாடலில் இடம் பெற்றுள்ள கருத்துக்களைத் தொகுத்தால் நிலையாமை நிலைப்பு என்பதாக, அதாவது நிலையாமை என்னும் நிலையறிந்து நிலைப்பு மிக்க வாழ்க்கைக்குரிய நல்லொழுக்க நெறிகளை விழிப்போடு பின்பற்ற வேண்டும் என்னும் கருத்தை வழங்குகிறது. வாழ்க்கைகக்குச் செல்வம் தேவை என்றாலும், செல்வம் நிலையில்லாதது, வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணினால், வாழ்க்கையை மனிதன் வழியாக நிகழ்த்தும் உயிர் நிலையில்லாதது, உயிர்நிற்கும் யாக்கை நிலையில்லாதது, யாக்கையில் தோன்றும் இளமை நிலையில்லாதது என்று எல்லாம் நிலையில்லாதனவாய் உள்ளன என்பதால் வாழ்க்கை நிலையாமையை உணர வேண்டும். அவ்வாறு, உணர்ந்தால் இந்த உயிர், உடல், இளமை, செல்வம் என்ற நிலையில்லாத நான்கையும் பெற்றுள்ள மனிதன் அவனது வாழ்க்கைக்குப் பிறகும் நிலைத்துப் பிறராலும் பின்பற்றப்பட்டுப் புகழப்படுவதாக அமைவன நல்லொழுக்க நெறிகளே என்ற முடிவுக்கு வரலாம். இவ்வாறான, காரண காரிய இயைபைக் கொண்டு விளங்குகிற இப்பாடலுக்குள் பௌத்தச் சார்புநிலைக் கோட்பாடு இடம் பெற்றிருப்பதாகப் படுகிறது. பௌத்தப் பிடகங்களுக்குள்ளிலிருநது பொருத்தமான ஒப்பிட்டுப் பகுதி கிடைத்தால் இதுகுறித்த அழுத்தமான முடிவுக்கு வரலாம்.
இன்னொரு பாடலான புறநானூறு 363 ஐ இயற்றியவர் ஐயாதிச் சிறுவெண்டேரையர் ஆவார். இவரது பாடல் வருமாறு:
“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலிலும் பலரே சுடுபிணக
காடுபதியாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப்புழுகல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கலனாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீா் வரைப்பகம் முழுதுடன் துறந்தே” (புறநா. 363) (மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 91)
இப்பாடலின் ஒட்டு மொத்தக் கருத்தாகத் துறவுநெறிக் கருத்தமைவும் உட்செறிகருத்தாக நிலையாமைக் கருத்தியலும் இடம் பெற்றுள்ளன. உயிர் நிலையாமை அறிந்து ஒழுக வேண்டும் என்பதை உணர்த்துகிறது இப்பாடல். இப்பாடலும் பௌத்தச் சார்புநெறி பேசுகிறது எனலாம்.
ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் 187 பௌத்த மெய்யியல் - அறவியல் நூலான தம்மபதச் சுலோகம் 98ன் நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளதைத் தெ. பொ. மீ., மு. கு. ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர்.
ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் (187) பௌத்த மெய்யியல் - அறவியல் நூலான தம்மபத்தின் நேரடி மொழிபெயர்ப்பாக விளங்குகிறது என்பதைத் தெ. பொ. மீ., மு. கு. ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். அப்பாடல் வருமாறு;
“நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
இப்பாடல் சொல்லுக்குச் சொல் அப்படியே தம்மபத்த்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதை உறுதிப் படுத்தும் பாலி மொழிப்பாடல் வருமாறு;
“காமே வா யதி வா ராஞ்ஞே
நிஞ்னே வா யதி வாதலே
யத்தா ரஹந்தோவி ஹரந்தி
தங் பூமிங் ராம ணெய்யகங்” (தம்மபதம், 98)
இப்பாடலின் சொற்பொருள் கீழ்க்கண்டவாறு அமைகிறது.
காமே வா - நாடாக இருந்தாலும்
யதி - அல்லது
ரஞ்ஞே வா - காடா இருந்தாலும்
நிந்னே வா - பள்ளமாக இருந்தாலும்
யதி - அல்லது
தலேவா - மேடாக இருந்தாலும்
யத்து - எங்கே
அரஹந்தோ - சான்றோர்கள்
விஹரந்தி - நடமாடுகிறார்களோ
தங் - அந்த
பூமிங் - நிலமானது
ராமணெய்யகங் - எழில்நலமுடையதாகும்.
(மு.கு.ஜகந்தராஜா, இந்திய மொழிகளில் ஒப்பிலக்கியம்,1994 ப.24)
ஆக, தம்மபதப் பாடலின் பொருள்,
“நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும்
பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும்
எங்கே சான்றோர்கள் நடமாடுகின்றார்களோ
அந்த நிலமானது எழில் நலமுடையதாகும்”
என்பதாகும். எனவே, புறநானூறு - தம்மபதப் பாடல்களின் சொல்லமைப்பும், கருத்தமைவும் ஒருங்கே ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இங்கு ஒரு வினா எழுவது இயல்பு. அதாவது, ஔவையார் தம்மபதத்தைப் படித்துவிட்டு மொழி பெயர்த்தாரா? புத்தர் ஔவையாரைப் படித்துவிட்டு மொழிபெயர்த்தாரா? என்பதே அவ்வினா, புத்தர் ஔவையாரின் காலத்துக்கு முந்தியவர் என்பதாலும், அவர் ஒரு மெய்யியல் நிர்மாணிப்பாளர் என்பதாலும் புத்தரின் போதனைகள் தொகுக்கப்பட்டுப் பரப்பப்பட்ட காலத்தில் ஔவையார் இதை அறிந்திருக்கக் கூடும் என்பதே பொருத்தமானதாகும். அசோகனின் மூன்று கல்வெட்டுகளில் அதியமான் இடம் பெற்றிருப்பதும், அதியமானின் அவைக்களப்புலவராக ஔவையார் திகழ்ந்திருப்பதும் நம் ஊக்கத்தை உறுதி செய்கின்றன.
(மாதவன்.,சு 2005 : 106 - 107 )
இதேபோல் பௌத்தச் சக்கரமான அசோக தருமச் சக்கரத்தின் வழக்காற்றை ஏற்பதாகப் புறநானூறு 175 ஆம் பாடலும் அதனை மறுப்பதாகப் புறநானூறு 233 ஆம் பாடலும் உள்ளதை சு.மாதவன் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.
பௌத்த தருமச் சக்கரம் ஏற்பும் எதிர்ப்பும்
ஏற்பு
பௌத்த தருமச் சக்கரத்தின் இயல்பையும், பெருமையையும் விவரிக்கும் தீகநிகாயத்தின் “தம்ம சக்கப் பவத்தன சூக்தம்” என்ற பகுதிக்கு ரைசுடேவிட்சு தரும் விளக்கம் வருமாறு.
தருமச்சக்ரத்தை உருட்டுவது என்பது பௌத்தக் கோட்பாட்டின்படி, அதன் போதனைகளைச் செயல்படுத்துவது என்பதையே சுட்டும். பாலிமொழிகளில் “சக்க” எனப்படும் “சக்கரம்” மக்கள் வழக்கில் உள்ள ஒன்றைக் குறிப்பது ஆகாது. இது இறையாண்மையைச் சுட்டுவது. “சக்கரத்தைச் சூடியவன்” எனப்படும் “சக்கரவர்த்தி” என்ற சொல்லும், எதிர்ப்பின்றி, தனது தேரின் சக்கரத்தை உலகம் முழுவதும் உருட்டிச் செல்லும் “உலகப்பேரரசன்” என்ற கருதுகோளைக் குறிப்பது ஆகும் . “தம்ம்ம்” எனப்படும் அறம் (தருமம்) என்ற சொல், வெறும் சட்ட வடிவத்தைச் சுட்டவில்லை, மாறாக, வேறு எம்மொழியிலும் மொழிப்யெர்க்க முடியாத உண்மை நேர்மை ஆகிய உயர் அறங்களைச் சுட்டி நிற்பதாகும். சுருங்க்க கூறின், தம்ம்ம் என்பது புத்தரின் கோட்பாட்டை முழுமையாக உணர்த்தி நிற்கின்றது. பிரவர்த்தனா (பாலி பவ்வத்தனா) என்பது, ”என்றும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும்” தன்மையை உணர்த்தி நிற்கின்றது. எனவே, இத்தொடரின் முழுப்பொருளும் இதுதான் “உலகம் பேரரசன் தன் இறைமாட்சியின் அடையாளமாகிய தேரை - சக்கரத்தை - இயங்குகிறான் என்பதன் மூலம் உண்மையையும், நேர்மையையும் என்றும் புரந்து வருகிறான்”.
(மேற்கோள், பேரா.க.நெடுஞ்செழியன், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், 1989, ப.95-96)
இவ்விளக்கத்திலிருந்து நான் பெறும் கருத்துக்களாக,
1. தருமச் சக்கரம் என்பது புத்தரின் போதனைகளின்படி ஆளும் அரசாட்சியின் தன்மையைச் சுட்டும் குறியீடு ஆகும்.
2. இத்தகைய ஆட்சியின் தன்மைகள் உண்மையும், நேர்மையும் ஆகும்.
எனக் கொள்ளலாம். இந்தப் பௌத்த மெய்யியல் வரையறைகளோடு புறநானூற்றில் கள்ளில் ஆத்திரையனாரால் எழுதப்பட்டுள்ள ஆதனுங்கனின் ஆட்சிச் சிறப்பு பற்றிய பாடலை ஆராய வேண்டியுள்ளது.
புறநானூற்றில் 175வதாக அமைந்துள்ள கள்ளில் ஆத்திரையனார் பாடல்,
“எந்தை! வாழி, ஆதனுங்க! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்,
என்யான் மறப்பின், மறக்குவென் வென்வேல்
விண்பொரு நெடுங்கடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்ஏத் திகிரி திரிதரக் குறைந்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத்து அன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே”
என்பதாகும்.
இப்பாடலில் இடம்பெறும் “மலர்வாய் மண்டிலம்” என்பது ஆதனுங்களின் ஆட்சி அறத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது என்றும், புத்த ஜாதகக் கதையில் நல்லாட்சியின் அடையாளமாகக் குறிக்கப்படும் ஜாதகக் கதையில் நல்லாட்சியின் அடையாளமாகக் குறிக்கப்படும் “ஒளிவட்டமே” திகிரியாக - மலர்வாய் மண்டிலாக - உருவகிக்கப்படுகின்றது என்றும் பேரா. க. நெடுஞ்செழியன் நிறுவியுள்ளார். இம்முடிவை உறுதிப்படுத்துவதற்கு இப்பாடலில் இடம் பெறும் இன்னொரு பௌத்தக் கருத்தும் இங்கு ஆய்தற்குரியது.
பௌத்தத் தத்துவம் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் இதர மெய்யியல் பிரிவுகளினின்று வேறுபட்டு நிற்கிறது.
1. கடவுளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது
2. ஆன்மாவை நிரந்தரமானதென்று ஒப்புக் கொள்ளாமலிருப்பது
3. எந்த ஒரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது
4. வாழ்விகன் பிரவாகத்தைத் தற்போதைய உடலுக்கு மட்டுமே சொந்தமாகக் கருதாமலிருப்பது.
(ராகுல்சாங்கிருத்தியாயன், பௌத்த்த் த்த்துவ இயல், 1985, ப.1)
மேற்கண்ட நான்கு அடிப்படை மெய்யியல் நோக்கு நிலைகளில் இரண்டாவது கருத்தை வலியுறுத்திக் கூறுவதாகக் கள்ளில் ஆத்திரையனாரின் இப்பாடல் அமைந்துள்ளது. அதாவது,
“நின்யான் மறப்பின், மறக்கும் காலை
என்உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென்....”
என்ற பாடலடிகள் சிந்தனைக்குரியவை.
“உன்னை நான் மறக்கமாட்டேன். அவ்வாறு நான்
மறப்பேனாயின் அது எப்பொழுது நிகழும் தெரியுமா?
என் உயிர் உடலைவிட்டுப் பிரியும் பொழுதும்
என்னையே நான் மறக்கும் பொழுது நேர்ந்தாலும்தான்
உன்னை நான் மறப்பேன்”
என்பது இவ்வரிகளின் பொருளாகும்.
உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகும் எண்ணங்களைச் சுமந்தபடி அகண்ட வெளியில் உயிர் உலவும் என்பது வைதிகச் சமயங்களின் நம்பிக்கை. ஆனால், உடலை விட்டுப் பிரிந்த உயிர் எங்கும் நிலை கொள்வதில்லை. அது அழிந்து போகிறது என்பது பௌத்த மெய்யியல் நிலைப்பாடு. இப்பாடலில் இடம் பெறும் கருத்தும், உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு நினைவொழிந்து போகும் என்பதை வலியுறுத்துகிறது. எனவே, இப்பாடல் பௌத்த மெய்யியலைச் சார்ந்தது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
எதிர்ப்பு
கல்லில் ஆத்திரையனார் தருமச் சக்கரத்தை மலர்வாய் மண்டிரமாக உவமித்து பௌத்த சிந்தனை பரவியிருந்த நிலையை உணர்த்துகிற, அதே புறநானூற்றில் இடம் பெற்றுள்ள வெள்ளெருக்கிலையார் பாடலில் பௌத்த மரபை எள்ளி நகையாடும் சிந்தனைப் போக்கும் பதிவாகியுள்ளது. வெள்ளெருக்கிலையார் என்ற இவரது பெயரிலிருந்து இவர் சிவனிய நெறியினராக இருக்க்க்கூடும் என்றும், அதனால் சிவனியநெறி வளரத் தடையாய் விளங்கிய பௌத்த மரபைப் புறந்தள்ளியுள்ளார் என்றும் கொள்ள இடம் உண்டு.
புறநானூற்றில் 233ஆவதாக இடம்பெற்றுள்ள இவரது பாடல் வருமாறு;
“பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாஅடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்தாள் அகுதைக்கண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பெய்யா கியரோ
இரும் பாண் ஒக்கற் தலைவன், பெரும்பூண்,
போர் அடு தானை, எவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பல என
வைகுறு விடியல், இயம்பிய குரலே”
இப்பாடலில் இடம் பெற்றுள்ள,
“... ... ... ... அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பெய்யாகியரோ”
என்ற தொடர் பௌத்த மரபை எள்ளும் தன்மைத்து என்பதைப் பேரா. க. நெடுஞ்செழியன் சுட்டியுள்ளார். அவரது கருத்து வருமாறு;
“தம்ம சக்க பவத்தன சூத்கம் தேரைப் பற்றிக் குறிப்பதைப் போன்றே, சாதக்க் கதையில் வரும் “சக்கவத்தி சூத்கம்” நல்லாட்சி புரியம் அரசனின் அரண்மனையில் தோன்றும் “ஒளிவட்டம்” பற்றி விளக்கும். “அவ்வொளி வட்டம் வழிகாட்ட, ஓர் அரசன் அது செல்லும் வழியைப் பின் தொடர்ந்து ஆகிய குற்றங்களிலிருந்து காத்தான்” என்று அச்சாதகத் கதை கூறுகிறது. நல்லாட்சியின் அடையாளமாக, மன்னனின் அரண்மனை முன்பாக நின்று ஒளிவிடும். இவ்வொளி வட்டம் ஆட்சியின் குறைவு ஏற்படும் போது அது தானகவே மறைந்து விடும் என்பாது பௌத்த மரபு. இத்தகைய நம்பிக்கை உண்மைக்கு மாறானது என்பது போன்ற குறிப்பும் புறநானூறு 223ஆம் பாடலால் அறிய முடிகிறது.
இப்பாடலைப் பாடிய் வெள்ளொருக் கிலையார் பௌத்த சமய எதிர்ப்பாளராகலாம்”
(இந்தியப் பண்பாட்டில் தமிழும், தமிழகமும் 1989, ப.99)
கள்ளில் ஆத்திரையனார், வெள்ளொருக்கிலையார் ஆகிய இருவரது பாடலையும் ஒப்பிட்டு நோக்குகையில் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்த பௌத்த மெய்யியல் ஏற்பையும், எதிர்ப்பையும் உய்த்துணர முடிகிறது. சங்க காலம் சமயப் பொறைமிக்கது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய வண்ணம் பௌத்த சமய எதிர்ப்பு இருந்திருப்பதையும் அறிய முடிகிறது
(மாதவன்.,சு.2005 : 107 - 112)<.b>
முடிவுகளாக
பத்துப்பாட்டு நூல்களுள் ஆங்காங்கே பௌத்த வழக்காறுகள் தென்படுகின்றன. மதுரைக் காஞ்சி எனும் நூல் பௌத்த விகாரையில் பௌத்த உபாசகர்கள், உபாசகிகள் பூவைத்து வழிபட்டசெய்தியைக் குறிப்பிடுகிறது.
நெடுநல்வாடை எனும் நூலில் ‘பிடகம்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல் பௌத்தத் திரிபிடகத்தைக் குறிப்பதாகலாம்.
இதுகாறும் ஆய்ந்த நிலையிலிருந்து கீழ்கண்ட முடிவுகளைத் தொகுக்கலாம்.
1. பௌத்தப் பிடக்க் கருத்தை முற்றாக ஏற்கும் அளவிற்குத் தமிழகத்தில் பௌத்தம் பரவி இருக்கிறது
2. வைதிக மரபுக்கு முற்றிலும் எதிரான பௌத்த மெய்யியலின் ஆன்மா மறுப்பு புறநானூற்றில் பதிவாகி இருப்பது பௌத்தம் தமிழகத்தில் கொண்டிருந்த பிடிமானத்தை வெளிப்படுத்துகிறது.
3. பௌத்த மெய்யியலுக்கு எதிரான சிந்தனைப் பள்ளி ஒன்று உக்கிரமான கருத்தியல் தாக்குதலை அதன் மீது செலுத்தி இருப்பதால் சங்க காலம் சமயப்பொறை மிக்க காலம் என்கிற கருத்து மறுபரிசீலனைக்கு உரியதாகிறது.
4. பௌத்த மெய்யியல் பின்புலத்தோடு சங்க இலக்கியத்தை ஆராய்ந்தால் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கக் கூடும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.