எட்டுத்தொகையில் விறலியா்
முனைவர் ப. மீனாட்சி
உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் பற்றிக் கூறுங்கால் “அது ஒர் இனக்குழு அமைப்பு என்றும், சாதி (Caste) அச்சமுதாயத்தின் முக்கிய அம்சமாக விளங்கினாலும், அதனுள்ளும் இனக்குழுப் பண்புகள் நிலைத்திருந்தன என்றும் சுட்டிக்காட்டுவர்” (1) இத்தகைய இனக்குழுச் சமுதாயம் மாறும்போது தொழிலடிப்படையில் மக்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து போயினர். அதன் பொருட்டு ஆடல் பாடல்களில் வல்லவர்களுக்குக் கூத்தும் பாட்டும் தொழிலாகிவிட்டன. இந்நிலையிலேயே (கோடியர், கண்ணுளர், பாணர், கூத்தர், பொருநர், விறலியர்) கலையைத் தொழிலாகக் கொண்ட ஒரு சமூகப்பிரிவு தோன்றிது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, பறவைகள் இடம்பெயர்தல் இயல்பு. அதுபோன்ற நாடோடி வாழ்வினை மேற்கொண்டவர்களே கலைஞர்கள். இத்தகைய கலைஞர்களின் இயல்பினை,
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பலன் எதிரச் சொன்ன பக்கமும்” (2)
ஆடல் பாடலைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த கலை வகுப்பினர் பற்றிய குறிப்புகளும் தொல்காப்பியத்தில் உள்ளது. இக்கலை வகுப்பில் ஒரு பிரிவினரான விறலியா் குறித்துக் கட்டுரையில் காண்போம்.
கலைஞா்கள்
“ஆடலையும் நாடகத்தையும் தொழிலாகக் கொண்டவர்கள் கூத்தர் என்றும், இசை பாடுவோரும் பண்களைக் கருவிகளில் இசைப்போரும் பாணர்களென்றும், போர்க்களங்களில் இசை பெருக்கிக் கூத்தாடுவோர் பொருநர் என்றும், பாடியும் ஆடியும் நாடகமாடிய மகளிர் விறலியர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இசை மற்றும் ஆடல் அபிநயக் கலைகளைக் கற்றறிந்து அவற்றினை முறையாகவும் சுவையாகவும் பிறர் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டும் திறமையும் பெற்றிருந்தனர்” (3) இவர்களுள் பன்முகக் கலைகளில் விறல்பட நிற்பவர்களாகிய விறலியர். விறலி இணை, முழவு, யபழ், பெருவங்கியம் எல்லரி, சிறுபறை,பதலை போன்ற இசைக்கருவிகளை இசைப்பதில் தேர்ச்சியுடையவள்.
“இசையும் கூத்தும் எல்லோராலும் கையாளத்தக்கக் கலைகளல்ல. பழங்காலத்தில் சிறுபாணர், பெரும்பாணர், இசைப்பாணர், யாழ்ப்பாணர் என இசைவாணர் வகையினரும், கூத்தர், பொருநர், விறலியர், நாடகக்கணிகையர் என்னும் கூத்துக்கலை வகுப்பினரும், பறையர், துடியர், இணைஞர், வயிரியர் என்னும் கருவிசையாளர் வகையினரும், அவரவர் கலைகளை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்” (4)
“மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திடல் வேண்டுமம்மா” என்றார் கவிமணி. விறலி பெண் என்பதாலோ என்னவோ அவளது திறமைகள் இருட்டடிக்கப்பட்டு, சமூகத்தில் இரண்டாம் தர நிலையைப் பெற்றுள்ளாள். பாணன், பொருநனது கலைத்திறனைப் போற்றும் வகையில் “பாணராற்றுப்படை”, “பொருநராற்றுப்படை” தோன்றியுள்ளது. ஆனால் விறலியின் ஆளுமை தனி இலக்கியத்தில் வளர்த்தெடுக்க இயலாமல் தனிப்பாடல் என்ற அளவில் சுருங்கிவிட்டது.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்கள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டிருப்பினும், பாணனும், விறலியும் ஐவகை நிலத்திற்குரிய மக்களாவர். இவர்கள் தமிழ்மொழி மற்றும் கலை வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றனர். தனக்கென வாழ்பவர் வீணானவர், பிறர்க்கு ஈந்து வாழ்பவர் சிறப்பானவர் என வாழ்ந்தவர் விறலியர்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை” (5)
என்னும் வள்ளுவரின் வாக்கினுக்கு ஏற்ப பிறர் துயர் களைய வழி கூறல், தான் பெற்ற பரிசிலையும் பகிர்ந்தளித்து வாழ்தல் போன்ற உயரிய மனப்பான்மையும், சட்டதிட்டத்தினையும் கொண்டு வாழ்ந்தவர். சங்ககாலக் கலைக்குழுத் தலைமையின் எச்சமாக விறலியர் இருந்துள்ளனர். விறலி பாணன் அல்லது பொருநனின் மனைவியாக விளங்கியதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. இவர்கள் குடி உடைமை இல்லாதவராகவும் வறுமை நிலைக்கு உட்பட்டவராகவும் இருந்துள்ளனர். அகவாழ்வில் தலைவன் தலைவியரிடையே ஊடல் தணிக்கும் வாயிலாகச் சென்ற விறலியர் தான், பின்னாளில் வந்த கணிகையர் நிறுவன உருவாக்கத்திற்கான வேர் எனச் சில அறிஞர்கள் கூறுவது மேலாய்வுக்கு உட்பட்டதாக உள்ளது.
“அமிழ்து பொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்” (6)
என்னும் பதிற்றுப்பத்து பாடல் வரிகள் விறலியரைக் காம வேட்கைக்கு உரியவராக காட்டுகிறது. இதனை மறுக்கும் செய்தி (பத்துப்பாட்டில்) “முல்லை சான்ற கற்பினள் என சிறுபாணாற்றுப் படையில் விறலியின் கற்பு மேன்மைப்படுத்தப் பெற்றுள்ளது. இத்தகைய விறலியினது இயல்புகள் பலவற்றையும் விறலி விடு தூது நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வதாக இவ்வியல் அமைகிறது.
விறலி - பொருள் விளக்கம்
இயற்கையோடு இயைந்த இவர்களது வாழ்க்கையில் இசையும் கூத்தும் இரண்டறக் கலந்திருந்தன. விறல் என்ற சொல்லடியிலிருந்து தோன்றியதே விறலி. “விறல் என்பதற்கு வெற்றி, பெருமை, வலிமை, வீரம், சிறப்பு எனப் பல பொருளை அகராதிகள் முன் வைக்கின்றன. விறலி என்பதற்கு உள்ளக் குறிப்பு புறத்தே வெளிப்பட ஆடுபவள், பாணர், குலப்பெண், பதினாறு அகவைப் பெண் எனப் பொருள் கூறப்படுகிறது.” (7)
“பண்ணிசைத்தோர் பாணர் என அழைக்கப்பட்டமையால், அவர்தம் பெண்டிராகிய பாண்மகளிர் பாடினி, விறலி, பாட்டி, மதங்கி என்று அழைக்கப்பட்டதாகத் திவாகரம் சொல்வதிலிருந்து பாடினியர் பாடுவதிலும் ஆடுவதிலும் கருவிகளை இசைப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என உணரலாம்” (8)
“மெய்ப்பாடுகள் தோன்ற விறல்பட ஆடியதால், அவர்கள் விறலியர் என்றும், விழாக்காலங்களில் ஆடியதால் ஆடுகளமகளிர் என்றும், ஆடுகளப் பாவையர் என்றும் அழைக்கப்பட்டனர்” (9)
“எண் வகைச் சுவையும் மனத்தின் கண்பட்ட குறிப்புகளும் புறத்து போர்ந்து புலப்பட ஆடுதல் விறலாதலின் அதனை ஆடுபவள் விறலி எனப்பட்டாள். (Female Dancer who exhibits the various emotions and sentiments in her) விறலி என்பவள் பதினாறு வயதுப் பெண், பாண் சாதியைச் சார்ந்தவள் என்று தமிழ் லெக்சிகன் குறிப்பிட்டுள்ளது” (10)
“நானிலங்களிலும் இருந்த வள்ளல்கள் பாற் சென்று உள்ளக்குறிப்பு புறத்து வெளிப்பட ஆடிய நடன மங்கை பண்டைக்காலத்தல் விறலி எனப்பட்டாள்” (11)
“விறலி - விறல் வெளிப்பட ஆடுபவள் a dancer (women) who brings out various emotions and santiments in her dance, பாணர் சாதிப்பெண், women of the “Panar” Caste” (12)
வாயில்கள்
சங்ககால மக்களது வாழ்க்கை களவு, கற்பு என இரண்டாகப் பாகுபடுத்தப் பெற்றுள்ளது. இவ்விரு பாங்கிலும் ஊடல் என்பது இயல்பாக அமையப் பெற்றுள்ளது. தலைவன் தலைவியரிடையே ஏற்படக்கூடிய ஊடலைத் தீர்ப்பதற்காகத் தொல்காப்பியர் “வாயில்கள்” என்போரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
“பார்ப்பான், பாங்கான், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோ
டளவியல் மரபி னறுவகை யோருங்
களவினிற் கிளவிக் குரிய ரென்ப” (13)
என வரையறுத்துக் கூறுயுள்ளார்.
“பாணன், கூத்தன், விறலி, பரத்தை,
யாணஞ் சான்ற அறிவர், கண்டோர்,
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான முதலா
முன்னுறக் கிளந்த அறுவரோடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற்குரியர்” (14)
இல்லற வாழ்வில் கூற்று நிகழ்த்துவோரை இவ்வண்ணம் தொல்காப்பியர் தனியே வரையறுத்துக் கூறியுள்ளார். இதில் “விறலி” கற்புப் பிரிவில் ஊடல் தணிக்கும் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாள்.
ஊரார், அயலார், சேரியர், தந்தை, அன்னை ஆகியோரைக் கொண்டு செய்யுள் புனையும் வழக்கம் இல்லை என்பதை,
“ஊரும், அயலும், சேரி யோரும்,
நோய்மருங் கறிஞரும், தந்தையும், தன்ஐயும்
கொண்டெடுத்து மொழியப் படுதல் அல்லது
கூற்றுஅவண் இன்மை யாப்புறத்தோன்றும்” (15)
என்னும் சூத்திரத்தின் வழி தொல்காப்பியர் விளங்குகின்றார்.
“தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்,
பாணன், பாடினி, இளைஞர், விருந்தினர்,
கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர்,
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” (16)
எனவும் கூறியுள்ளனர்.
“பாணர் கூத்தர் விறலியர் என்றிவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்” (17)
பன்முகக் கலைகளில் தேர்ச்சி உடையவர் விறலியர் என்பதை தொல்காப்பியத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இலக்கியப்பதிவுகள்
விறலியரது பல்வேறு இயல்பினையும் சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியமெனக் கீழ்வருமாறு பகுத்து ஆராயலாம்.
சங்க இலக்கியம் - விறலி
தொல்காப்பியரால் ஊடல் தணிக்கும் வாயிலாக அறிமுகப்படுத்தப் பெற்ற விறலியினது செயல்கள் பலவும் சங்க இலக்கியமாகிய எட்டுத் தொகை, பத்துப்பாட்டில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் விறலியைப் பற்றிய செய்திகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை போன்றவற்றில் விறலி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆடற்கலையில் வல்ல மங்கை விறலி. விறலி என்பதற்கு மெய்ப்பாடு என்னும் பொருளுமுண்டு. கூத்தரைப்போல் எண் வகை மெய்ப்பாடும் புறத்தே தோன்ற நடிக்கும் ஆற்றல் வாய்ந்தவள். எனவே இவள் விறலி எனப்பட்டாள்.
எட்டுத்தொகை
விறலியின் திறன்கள் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
விறலியின் கலைத்திறன்
இயற்கையோடு இணைந்த உணர்ச்சி வெளிப்பாடே கலையாகும். மனித உணர்வுகளுக்குக் கலைகள் வடிகால்களாக இருந்துள்ளன. கண்ணுக்கும் கருத்தினுக்கும் இவை ஒருசேர விருந்தளிக்கும் தன்மை உடையன. கலைஞர்கள் சமூகத்தின் தேவையை நிறைவு செய்வோர் ஆவர். படிப்பறிவில்லாப் பாமர மக்களைக்கூட எளிதில் புரிந்து கொள்ளச் செய்வது கலையாகும். காலச் சூழ்நிலைக்குத் தக்கவாறும், சமூகத்திற்கு ஏற்றவாறும் பல நுணுக்கங்களைக் கையாண்டு ஆடலிலோ அல்லது பாடல் வடிவிலோ பெரும் மாற்றத்தை ஏற்படுத்தகின்றனர். சங்ககாலக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாணர், பொருநர், விறலியர், கூத்தர், ஓவியர், சிற்பர், துடியர் போன்றோராவர். மற்றவர்களை வாழ வைக்கவும், மகிழ்விக்கவும் கலை பெரிதும் துணைபுரிகி்ன்றது.
“குழு வளர்ச்சி பெறும்பொழுது, வேலைப் பிரிவினை தோன்றுகிறது. அப்பொழுது ஆடல், பாடல்களில் வல்லவர்களுக்கு கூத்தும், பாட்டும் தொழிலாகி விடுகிறது. இந்நிலைலேயே பாணர், கூத்தர், பொருநர், விறலியர் போன்ற கலையைத் தொழிலாகக் கொண்டவர்களான ஒரு சமூகப்பிரிவு தோன்றியது” என்னும் கூற்று கலைக்குழுவில் இடம்பெறும் விறலியின் குழு வாழ்வு முறையை எடுத்துரைக்கிறது” (18)
இத்தகைய கலைஞர்கள் குறுநில மன்னர்களிடத்தும், நிலக்கிழார்களிடத்தும் கலை நிகழ்ச்சி, பெரும் பொருளைப் பரிசாகப் பெற்றுள்ளனர் மன்னர்களால் என்றென்றும் வாழ்த்துவதற்கு உரியவர்களே கலைஞர்கள். இவர்களுள் ஒருவரே விறலி. இவ்விறலியினது இசைத்திறனை,
“ஒரு திறம் பாடல்நல் விறலியர் ஒல்குடி றுடங்க
ஒருதிறம் வாடை யுளர் வயிற் பூங்கொடி றுடங்க
ஒருதிறம் பாடினி குரலும் பாலையங் குரலின்” (19)
என்னும் பரிபாடல் வரிகள் உணர்த்துகின்றன.
இத்தகைய மென்மையான குரலினை உடைய விறலியினது சிறப்பினை,
“... ... ... ... ... வேந்தன்
மறம் பாடிய பாடினியும்மே
ஏர் உடைய விழுக் கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே” (20)
என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
“ஒண்டொடி மகளிர் பண்டையாழ் பாட
ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்பத்
தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள் வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென்வேல்” (21)
இப்பாடலில் விறலியரும் பரத்தையரும் ஒன்றிணைந்து பாடல் பாடியதாகச் செய்தி சொல்லப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விறலியும் பரத்தமைத் தொழிலை மேற்கொண்டு இருக்கலாம் என அறிஞர் பெருமக்கள் எண்ணுகின்றனர். விறலி பாடல் பாடியதற்கு மட்டுமே சான்று உண்டே தவிர பரத்தமை மேற்கொண்டதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்விதத் தெளிவான சான்றுமில்லை. ஆணுக்கு நிகராகப் பன்முகக் கலைகளில் விறலி தேர்ச்சி பெற்றிருப்பினும், பெண் என்பதாலேயே இரண்டாம் தரமாக மதிக்கப் பெறுகிறாள். விறலி ஊடல் தணிக்கும் வாயிலாகச் செயல்பட்டமைக்கும் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உண்டு.
“மடக்கண் தகரக் கூந்தல் பணைத்தோள்
வளர்ந்தவால் எயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கின்
பிணையல் அம்தழைத் தைஇ துணையிலாள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே
எழுமினோ எழுமின்எம் கொழுநற் காக்கும்
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடி யாங்குநம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப் படினே” (22)
என்னும் பாடல் தலைமகளது புலவியைத் தீர்ப்பதற்குத் தலைவன் விறலியைத் தூது அனுப்பியதை எடுத்துரைக்கிறது.
விறலியின் பெருமை
அகப்பாடல்களில் தலைவி, தலைவன், தோழி, பரத்தை, காதற்பரத்தை என்னும் ஐவரது கூற்றுகளும் தமது உயர்வுகளைப் பற்றித் தாமே கூறுவதாக அமைய, விறலி, சான்றோர், காவலர் போன்றோர் கூற்றுகள் அக உணர்வு நிலையிலே வேறுபட்ட சூழலில் அமைந்த கூற்றுகளாக விளங்குகின்றன.
“சுடர்த் தொடிக் கோமகன் சினந்தென அதனெதிர்
மடத் தகை ஆயம் கைதொழு தாஅங்கு
உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்
சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம்
முன் கடை நிறிஇச் சென்றிசினோனே
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
பிச்சை சூழ் பெருங்களிறு போல எம்
அட்டில் ஓஐல தொட்டலை நின்மே” (23)
இப்பாடல் விறலி கூற்றாக அமையினும் இரு வேறுபட்ட தன்மைகளை விளக்குகிறது. ஒன்று வாயில் மறுத்தல் மற்றொன்று வரைவு கடாவுதலாகும்.
விறலி மறம் பாடல்
ஒத்த அன்புடையாரது உளப்பாங்கினை உணர்ந்து உன்னத வாழ்வு பெற உதவிய விறலி, புற வாழ்விலும் தம் முத்திரையைப் பதித்துள்ளாள். இலக்கியத்தில் விறலியர் அரசனின் வீரத்தைப் புகழும் மரபு இடம்பெற்றுள்ளது.
“... ... ... ... ... இளையர்
இன்களி வழாஅ மென்சொ லமர்ந்து
நெஞ்சுமலி உவகையர் வியன்கலம் வாழ்த்து” (24)
இப்பாடல் விறலி மறம் பாடும் திறத்தை வெளிப்படுத்துகிறது.
குடியிருப்பு
மனிதனது அடிப்படைத் தேவைகளுள் ஒன்று உறைவிடம் சமுதாயத்தில் ஒவ்வோர் இனத்தைச் சார்ந்தவரும் ஒவ்வொரு பகுதியில் வாழந்துள்ளனர். இதில் துடியன், பாணன், விறலி ஆகியோர் சீறூரின் குடியாக இருந்து வாழ்ந்தமையைப் புறநானூறுப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
“துடிய பாண பாடுவல் விறலி
என் ஆகுவிர்கொல் அளியர் நுமக்கும்
இவண்உறை வாழ்க்கையோ அரிதே” (25)
இப்பாடலில் சீறூர்த் தலைவன் இறந்தமையால் விறலி முதலானோர் ஓரிடத்தில் தங்கி வாழும் (வாழ்வை இழந்த) நிலை கூறப்பட்டுள்ளது.
பழுமரம் நாடும் பறவை போன்று நாடோடி வாழ்வினை மேற்கொண்டிருப்பினும் பிறர் துன்பம் களைவதில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவள். விறலியானவள் பல வளையல்களை அணிந்தவள் என்றும் அசைகின்ற மாலையை அணியும் இயல்புடையவள் என்றும் விறலி குறித்த தோற்ற வருணனை சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
முடிவுரை
* சங்க இலக்கியங்களில் ஆடலும் பாடலும் அறிந்தவளாக விறலி காட்டப்படுகிறாள்.
* ஆணுக்கு நிகரான எண்ணெண் கலைத்திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவள்.
* பழுமரம் நாடும் பறவை போன்று நாடோடி வாழ்வினை மேற்கொண்டிருப்பினும் பிறர் துன்பம் களைவதில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவள் விறலி.
* ஆணுக்கு நிகராகப் பன்முகக் கலைகளில் விறலி தேர்ச்சி பெற்றிருப்பினும் பெண் என்பதாலேயே இரண்டாம் தரமாக மதிக்கப் பெறுகிறாள்.
அடிக்குறிப்புகள்
1. பெ. அழகு கிருஷ்ணன், சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும், ப.25.
2. ச. வே. சுப்பிரமணியம், தொல்காப்பியம் தெளிவுரை, ப.400.
3. மு. கருணாநிதி (உ.ஆ), திருக்குறள் தெளிவுரை, ப.41.
4. திருமதி ஞானகுலேந்திரன், பழந்தமிழர் ஆடலில் இசை, ப.2.
5. மு.கருணாநிதி (உ.ஆ), மு.நூ, ப.67,
6. ஔவை துரைசாமிப்பிள்ளை (உ.ஆ),பதிற்றுபத்து, பா.எ.51
7. திருமதி ஞானகுலேந்திரன், மு.நூ, ப.29.
8. கழக வெளியீடு, கழகத் தமிழ் அகராதி, ப.864.
9. இரா. கலைக்கோவன், தலைக்கோல்,பக்.142-143.
10. தமிழ் லெக்சிகன், தொகுதி-6, ப.3733.
11. மா. இராசமாணிக்கனார், தமிழகக் கலைகள், ப.90.
12. லிப்கோ - தமிழ் - தமிழ் - ஆங்கிலப் பேரகராதி, ப.941.
13. ச. வே. சுப்பிரமணியம், மு.நூ. ப.564.
14. மேலது, ப.564
15. மேலது, ப.157.
16. மேலது, ப.460.
17. மேலது, ப.144.
18. பெ. மாதையன், பெண்டிர்-காதல்-கற்பு, ப.87.
19. ஔவை துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ), பரிபாடல், பா.எ.15.
20. ஔவை துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ), புறநானூறு, பா.எ.11.
21. பொ. வே. சோமசுந்தரனார், அகநானூறு, பா.எ.186.
22. கதிர் மகாதேவன் (உ.ஆ), நற்றிணை, பா.எ. 170
23. மேலது, பா.எ.300
24. ஔவை துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ), பதிற்றுப்பத்து, பா.எ.40
25. ஔவை துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ), புறநானூறு, பா.எ.280.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.