சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கும் சந்தனம் குறித்த பல்வேறு செய்திகளை இக்கட்டுரையில் காணலாம். குறிப்பாக;
1. சாந்து பூசுதல், கொங்கைகளில் சந்தனம் பூசுதல், மைந்தர் சந்தனம் அணிதல், சாந்தின் தன்மை உன்னமரம், மார்பு வடு - சந்தனம் பூசுதல், சாந்தம் பூசுதல், சந்தனத் தேய்வைப் பூசுதல், சாந்தம் நுண்துகள் அணிதல்
2. சந்தன மணமேற்ற காற்று - கமழ்புகை, சந்தனத்தின் பயன், சந்தன மரங்கள் நீரின் தன்மை, சந்தனத்தின் தன்மை, வயிரம் முற்றிய சந்தனமரம்
3. சந்தனம் பூசப்பெற்ற கட்குடம்
4.சந்தன மாலை
5.சந்தனக் கட்டைகள், சந்தனக்கட்டை எரிக்கப் பெறல், சந்தனக்கட்டைகள் - விருந்தினர்கட்கு அளித்தல், சாந்தம் ஞெகிழி - கொள்ளிக்கட்டை, சாந்தப்புகை - சாந்தம்பூ, அகில், சந்தனக் கட்டைக் கட்டுப்பரண்
6. சந்தன விறகின் புகை சந்தனம் - விறகாகப் பயன்பட்டமை - சந்தனப் புகை சாந்தம் விறகு
7. சந்தனத்தாது
8. சந்தன உரல் - உலக்கை
9. சந்தன உலக்கை
ஆகியவற்றின் பயன்பாட்டினைப் பற்றியும் காண்போம்.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியின் பாடலில் சாந்தமைந்த மார்பின் கண்ணே நெடியவேல் பாய்ந்தனவாக அரசரும் பொருது அக்களத்தின் கண்ணே மடிந்தனர் என்பதை,
'சாந்தமை மார்பி னெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே” (1)
எனும் வரிகள் இதனைச் சுட்டுகின்றன.
இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடிய பாடலில், புலால் நாறும் வாளினையும், பூசிப் புலர்ந்த சாந்தினையும் உடையவன் என்பதை,
'புலவிவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்” (2)
என்று இப்பாடலடிகள் சான்று பகர்கின்றன.
வல்விலோரியைக் குறிப்பிடும் இடத்து, சந்தனம் பூசிப் புலர்த்திய அழகிய பரந்த மார்பினை உடையவன் என்பதை,
'ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்” (3)
எனும் இவ்வடி இதனை மெய்ப்பிக்கும்.
ஐங்குறுநூற்றில்;
'சாந்தம் நாறும் நின் மார்பு’ என தலைவனைக் குறிப்பிடுகின்றது.
“சாந்த நாறு நறியோள்
கூந்த னாறுநின் மாrபே தெய்யோ” (4)
என்பதால் அறியலாம்.
கொங்கைகளில் சந்தனம் பூசுதல், மைந்தர் சந்தனம் அணிதல்
செவ்வேள் பற்றிய பாடலில், பரங்குன்றத்தின் கண் ஆடல் மகளிரொருத்தி ஆடிய ஆடலை இரசித்துத் தன் கணவன் அவள் பக்கம் செல்லாதிருக்க அவ்வாடல் மகளினும் மிகுந்த அழகுடையவளாக தன்னை அலங்காரம் செய்பவள் ஆனாள். பின்னும் ஒருத்தி அப்பரத்தையை விரும்பாதிருக்கச் செய்யும் பொருட்டு தன் கொங்கைகளில் சந்தனத்தைப் பூசி உதிர்த்துப் பின்னும்; பூசி மணமேற்றி நின்றாள். (5)
இதனை,
'பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்
உதிர்த்துப் பின்னுற வூட்டுவாள் விருப்பும்” (6)
என்பது சான்று பகரும்.
வையை பற்றிய பாடலில், வையை நீரில் நீராடிய அம்மக்கள் அணிந்திருந்த சந்தனமும், மாலைகளும், மலர்களும், நெகிழ்ந்து நிறைந்தமையாலே தன்னிறம் தோன்றாது மறைந்தது. (7)
இதனை,
'சாந்துங் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமும்
கூந்தலும் பித்தையுஞ் சோர்ந்தன பூவினு மல்லாற்” (8)
என்றும் இதே பாடலில்,
'சாந்துங் கமழ்தாருங் கோதையுஞ் சுண்ணமும்” (9)
என்றும் குறிப்பிடுகின்றது.
சாந்தின் தன்மை உன்னமரம்
புலாஅம் பாசறை எனும் தலைப்பில் உள்ள பாடலில், பலா மரத்திலே பழுத்து வெடித்த பழத்தின் வெடிப்பில் இருந்தொழுகும் தேனை, வாடைக்காற்று எரியும், பறம்பு நாட்டில் பொருந்திய பெரிய விறல் படைத்தவனும், ஓவியத்தில் எழுதியது போன்ற வேலைப் பாடமைந்த நல்ல மனையின் கண்ணே இருக்கும் பாவை போன்ற நல்ல அழுகும் நலமும் உடையாட்குக் கணவனும், பொன் போலும் நிறமுடைய பூவினையும், சிறிய இலையினையும், புல்லிய அடிப்பகுதியினையும் உடைய உன்னமரத்துக்குப் பகைவனும், எமக்கு அரசனும், பூவிப்புலஉந்த சாந்தினையுடைய அகன்ற மார்பினையும், குன்றாத ஈகையால் பெரிய வள்ளன்மையினையும் உடையானுமாகிய பாரி என்று கபிலர் பாடியுள்ளார்.
பூசிய சாந்தின் ஈரம் புலர்ந்தாலும், ஈதற்குக் கொண்ட நெஞ்சின் ஈரம் எஞ்ஞான்றும் புலராது - ஈகை வினையைப் புரிவித்தல் பற்றி, 'புலர்ந்த சாந்திற் புலரா வீகை” என இயைத்துச் சொன் முரணாகிய தொடையழகு தோன்றக் கூறினார்.
சாந்து பூசுவதற்கு இடனாவது மார்பும், ஈகை வினைக் கிடனாவது வண்மைய மாதலின், 'புலர்ந்த சாந்தின் மலர்ந்த மார்பு” என்றும் “புலரா வீகை மாவண் பாரி” இயைத்துப் பொருள் கூறப்பட்டுள்ளது. (10)
'புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி” (11)
எனும் பாடலடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
மார்பு வடு - சந்தனம் பூசுதல்
வெண்போழ்க் கண்ணி எனும் தலைப்பில் பூசிய சந்தனத்தின் பொலிவு தோன்றாதபடி மறைத்த மார்பினை உடைய சான்றோர்க்குத் தலைவன் எனுமிடத்து,
'எஃகா டூனங் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழின் மறைந்த சான்றோர் பெருமகன்” (12)
மெய்யானது சிதைந்து அச்சிதைந்த வடுக்களானே பூசின சாந்தின் அழகை மறைத்தது. (13)
ஔவையார் பாடலில், தலைவன் தன் மார்பில் குறிய புள்ளிகள் அமைந்த பூசிய சாந்தத்தினை உடையவன் என்பதை,
'இடைச்சுரத்து எழிலி உரைத்தென மார்பில்
குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு” (14)
எனும் வரிகள் இதனை உணர்த்துகின்றன.
சாந்தம் பூசுதல்
சிறிய கிளைகளிலே பூங்கொத்துகளையுடைய பெரிய குளிர்ச்சி பொருந்திய சந்தன மரத்தின் குறையோடு பலவாய பொருள்களையும் சேர்ந்து அமைக்கப் பெற்ற சாந்தம் பூசிய கூந்தல் என்பதை,
'சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத்து உதிர்த்த துகள்படு கூழைப்” (15)
என கூந்தல் வாரிய செய்தியினைப் புலப்படுத்துகின்றது.
தலைவன், சந்தனம் தவழும் மார்பினை உடையவன் என்பதை இப்பாடலடிகள் சான்று தருகின்றன.
'ஆரங் கமழும் மார்பினை
சாரல் சிறுகுடி ஈங்குநீ வரலே” (16)
உடையவன் என்பதை இப்பாடலடிகள் சான்று தருகின்றன.
சந்தனத்தேய்வைப் பூசுதல்
கொற்றங்கெற்றனார் தமது பாடலில், கரிய பக்க மலையின் கண்ணுள்ள அருவியில் நீர் விளையாட்டயர்ந்து மலைச்சாரலில் எழுந்த சந்தனமரம் நறுமணங் கமழ்தலால் வண்டு வந்து விழும்படி அச்சந்தனத் தேய்வைப் பூசிப் பெரிதும் விரும்பியச் செய்தியை,
'பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்” (17)
எனும் பாடல் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
சேந்தன் பூதனார் பாடலில் வயிரம் பொருந்திய மரத்துடனே சேரப் பிணித்து மிகப் புரட்டா நிற்கும் சந்தன மரத்தினின்றும் போந்த நறுமணங் கமழ்கின்ற மலைப்பிளப்பினை உடைய மலரைச்
'சாந்தம் போகிய தேங்கமழ் விடர்முகை
எருவை நறும்பூ நீடிய” (18)
எனும் பாடலடிகள் குறிப்பிடுகின்றது.
நெடிய கணுக்களையுடைய சந்தனமரத்தின் அசைகின்ற கிளையிலே சுற்றிய நிறம் பொருந்திய இலையுடைய நறிய தமாலக்கொடி என்பதை,
'நெடுங்கண் ஆரத்து அலங்குவினை வலந்த
பசுங்கேழ் இலைய நறுங்கொடித் தமாலந்” (19)
எனும் இவ்வடிகள் சுட்டுகின்றன.
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடலில், தலைவன் 'ஆரம் நீவிய அணிகிளர் ஆகம்” (20) பொருந்தியவன் என்பதை இவ்வரி சுட்டுகின்றது.
சாந்தம் நுண்துகள் அணிதல்
முல்லை நிலப்பாடலில், தண் கமழ் சாந்தம் நுண்துகள் அணிய தண்ணிய கமழும் சாந்தினொடு நுண்ணிய பொடிகளை அணிந்தச் செய்தியினை,
'புகழ்குறி கொண்ட பொலந்தார் அகலத்துத்
தண்கமழ் சாந்தம் நுண்டுகள் அணிய” (21)
எனும் வரிகள் சுட்டுகின்றன.
நல்லியக்கோடன் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடலில் நறிய பூக்களையுடைய சரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும், நீராடும் துறையிலே நீராடு மகளிர்க்குத் தெப்பமாக நீர் கொணர்ந்து தருகின்றது. (22) என்பதனை,
'நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய” (23)
எனும் பாடலடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
குறவர்கள் மார்பினில் சந்தனம் அணிதல் குன்றுதோறாடல் பதிகத்தினுள், நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடைய கொடிய தொழிலை உடைய வில்லாலே கொல்லுதலைச் செய்த குறவர்கள் (24) என்பதனை,
'நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்” (25)
எனும் பாடலடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
குறிஞ்சி நிலப்பாடலில் 'ஆர நாற அருவிடர்த் ததைந்த” (26)
என்பதன் மூலம் சந்தனம் பூசப் பெற்றச் செய்தியும் அறியலாம்.
தேன் மணங் கமழும் மார்பிலே பூசிப்புலர்ந்ததையுடைய இருங்கோ வேண்மான் என்று
மருதநிலப் பாடல் சான்று பகர்கின்றது.
'தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான்” (27)
என்பது இதனைச் சுட்டும்.
நெய்தல் நிலப்பாடலில், நறுமணம் கூட்டி அரைக்கப் பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசியவன் தலைவன் என்பதை,
'அரையுற் றமைந்த ஆரம் நீவிப்
புரையப் பூண்ட கோதை மார்பினை” (28)
எனும் பாடலடிகள் சுட்டுகின்றது.
மேலும் 'ஆர மார்பின் அரிஞிமி றார்ப்பத்” (29)
எனும் அடியும் மேற்குறிப்பிட்டச் செய்தியை மெய்ப்பிக்கும்.
நம்பி நெடுஞ்செழியன் குளிர்ந்த மணம் நாறும் சாந்தைப் பூசினான் 'தண்கமழுஞ் சாந்து நீவின்ன” (30) என்பதை இவ்வடியினை புறம் சான்று பகர்கின்றது.
சந்தனத்தின் மணங்கமழும் மார்பினையுமுடைய மறம் பொருந்திய போரைச் செய்யும் அகுதை என்றும் புறம் சான்று பகர்கின்றது. (31)
குளிர்ந்தனவாகி நறுமணங் கமழ்கின்ற ஒள்ளிய நுதலையுடையவளே! என்பதனை,
'தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே” (32)
எனும் இவ்வடி மெய்ப்பிக்கின்றது.
மலையின் கண் பிறந்த சிவந்த சந்தனத்தையும், முத்துமாலையையும் உடைய மார்பினன் என்பதனை,
'மலைசெஞ் சாந்தின் ஆர மார்பினன்” (33)
எனும் வரி மெய்ப்பிக்கின்றது.
'ஆரம் நாறும் மார்பினன்” (34)
எனும் இவ்வடியினால் சந்தனம் மார்பினில் பூசப்பெற்றதை அறியலாம்.
பதிற், கல்கால் கவணை எனும் தலைப்பில் உள்ள பாடலில்,
'புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு” (35)
என்பதற்கு, ஆடவர்க்குச் சீர்த்த இலக்கணமாக நூல்களில் கூறப்பட்ட மாட்சிமைப்பட்ட வரிகள் பொருந்திய பூசப்பட்டு விளங்கும் சந்தனத்தோடு, தண்ணிதாய் மணங் கமழும் முத்துமாலையை அணிந்தச் செய்தியைத் தெரிவிக்கின்றது.