தமிழ் கிறித்தவக் கீர்த்தனைகள்
பேராசிரியர். சிட்னி சுதந்திரன்
இந்தியச் சீர்திருத்தக் கிறிஸ்தவ சமயவரலாற்றில் மறக்க முடியாத நாள், ஜூலை மாதம் 9ம் தேதி, 1706 ஆம் ஆண்டாகும். அன்று தான், அதாவது, 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நாட்டு லுத்தரன் சபையைச் சேர்ந்த, 23 வயது பர்த்தலோமேயு சீகன்பால்கும், அவரோடு ஹென்ரிக் புளுச்சோவும், முதல் சீர்திருத்தக் கிறிஸ்தவ மிசனெரிகளாக டென்மார்க் மன்னன் நான்காம் பிரடெரிக்கால் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டு, தஞ்சாவூருக்கு கிழக்கே உள்ள தரங்கம்பாடியில் காலடி எடுத்து வைத்தனர். அதன் பின்பு ஐரோப்பியர்களின் SPCK, SPG சங்கங்கள், மற்றும் அமெரிக்கன் மிஷன், CMS போன்ற இயக்கங்களால், தமிழகத்தில் சீர்திருத்தத் திருச்சபைகள் பல்வேறு பகுதிகளில் வேரூன்றி வளர்ந்து வந்தன. இந்தக் காலத்தில், கிறிஸ்துவ மத வழிபாட்டிற்கு பாடல்கள் இன்றியமையாத தேவையாய் அமைந்திருந்தன.
கவிதையின் வலிமை
கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம். கட்டவிழ்ந்து துள்ளி வரும் சிந்தனைகளை, சொற்களால் கோலமிடுவதே கவிதை என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
“கிழக்குக்கு வலியெடுத்தால்
அது சூரியனைப் பிரசவிக்கிறது..
மொட்டு முதிர்ந்து விட்டால்
பொட்டென்று மலர்ந்து விடுகிறது..”
கவிஞனும் அப்படித்தான். உள்ளே ஏதோ ஓர் வலி...! ஏதோ ஓர் சுமை...! அதை இறக்கி வைக்க அவன் மொழியைத் துணைக்கு அழைக்கிறான். கலை வண்ணம் பூசி, தன் வலிகளை, தன் சுமைகளை, தன் கனவுகளை அழகு செய்கிறான். அது கவிதையாகிறது..!
பாடல்கள் கவிஞர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுத்து வருகின்றன. கவிதைகள் நெஞ்சின் ஒலிகள். உள்ளத்தின் உணர்வுகளுக்கு ஒரு வடிகால். காலத்தால் அழிக்க முடியாததாய் காகிதத்தில் பதிக்கப்படும் படிமங்கள். பதிப்போரையும், படிப்போரையும் இணைத்திடும் உணர்ச்சிப் பாலம்.
“கவிதை” என்றால் கற்பனை என்ற எண்ணம் பொய்த்துப் போகிறது. கவிதைகள் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு ஒன்றியவைகள். ஒவ்வொரு கவிதைக்கும் பின்னால் ஒரு உண்மைச் சம்பவம் ஒளிந்து கொண்டிருக்கிறது. சுருங்கச் சொன்னால் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களையே கவிதை வடிவில் தருகிறார்கள். கவிஞன் மனித வாழ்வோடு ஒன்றுபட்டவன். அவன் கண்டு, கேட்டு, ரசித்து, அனுபவித்த உணர்ச்சிகளையே கவிதையில் வடித்துத் தருகிறான். நிகழ்வுகளை நினைவுபடுத்தும் ஒருசில வார்த்தைகள் தான் கவிதை வடிவம். தரமான கவிதைகள் சாகாவரம் பெற்றவைகள். கவிதை சுவையானது..! சுகமானது..!
கவிதையின் தனிச்சிறப்பு தாளமும், சந்தமும் நிறைந்திருப்பது தான். தமிழ் இலக்கணம் தாளங்களை வைத்தே வரையறுக்கப்பட்டுள்ளது. ஓசையை அடியாகக் கொண்டே எதுகையும், மோனையும் தோன்றியுள்ளன. அதனால் கவிதைகள் இசையோடும், தாளத்தோடும் இணைந்து பாடல்களாய்ப் பாடப்படும் போது மனித இதயங்களை மெய் மறக்கச் செய்கின்றன. பாடல்கள் இளந்தென்றலாய் இதயங்களை வருடிச் செல்லும் சுகம் தெரிகிறது. பாடல் ஒரு தீச்சுடர். அது எந்த உருவத்தில் பற்றுகிறதோ, அந்த உருவமாய் கொழுந்து விட்டெரிகிறது. அது தனக்கு சுலபமாய் இருக்கும் எல்லா இடங்களிலும் புகுந்து கொள்கிறது. பாடல்களிலுள்ள கருத்துக்கள் வெகு எளிதாய் நெஞ்சுக்குள் நுழைந்து, பதிந்து விடுகிறது. பிடித்த பாடல் என்றால் வாய் மெல்ல அதை அசை போடத் தொடங்குகிறது. ராகத்தோடு வார்த்தைகளும் பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்த விதைகளாய் முளைத்து துளிர்விட ஆரம்பிக்கின்றன. நெஞ்சில் பதிந்த பாடல்கள் அநேகருக்கு குளிக்கும் அறையிலிருந்தும் குதூகலமாய் வெளிப்படுகின்றன.
கிறித்துவப் பாடல்களின் தேவை
ஆலயங்களிலும், ஜெபக்கூட்டங்களிலும், பாடல்களால் தேவனைப் போற்றிப் புகழ்வதும், அவரிடம் மன்றாடுவதும், அவருடைய பிறப்பை, இறப்பை, உயிர்த்தெழுதலை பாடல்களால் நினைவு கூறுவதும் ஒரு முக்கியப் பகுதியாய் அமைந்திருந்தது. அத்தோடு கிறிஸ்தவ திருமணப் பாடல்கள், மரணத்தில் பாடும் பாடல்கள், ஞானஸ்நான ஆராதனைப் பாடல்கள் என பல விழாக் காலத்திற்கான பாடல்களும் தேவையாயிருந்தன. இன்று அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கைக்கும், கிறிஸ்தவ வழிபாட்டிற்கும் அமைந்து விட்டன. இன்றைய காலகட்டத்தில் ஆராதனைகளில் பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததோடல்லாமல், மூன்றில் ஒருபகுதி காலத்தை எடுத்துக் கொள்கிறது என்றால் அது மிகையாகாது.
கிறித்துவப் பாடல் நூல்கள்
1853ம் ஆண்டில், “கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்” (Christian Literary Society - CLS), தமிழகத்தில் பல்வேறு சபைகளில் பாடப்பட்டு வந்த பாடல்களிருந்து நல்ல பாடல்களைத் தேர்வு செய்து, எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் பயன்படுத்தும் விதமாக கிறிஸ்தவப் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இதனைத் திறம்பட செய்தவர் அருள்திரு. வெப் ஐயர் ஆவார்கள்.
அதன் பின்பு, 1870ம் ஆண்டில், கனம். வாஷர்பான் ஐயர் தலைமை வகித்து நடத்திய கிறிஸ்தவ இலக்கியச் சங்கக் கூட்டத்தில், புதிய பாடல்கள் சேர்க்கப்பட்டன. பழைய பாடல்கள் திருத்தப்பட்டன. இதனால் நூல் பெரிதானது.
கனம். ஜே.எஸ். சாண்ட்லர் ஐயர், மூன்றாம் பதிப்பில் இன்னும் பல புதிய கீர்த்தனைகளைச் சேர்த்தார். 1926ம் ஆண்டில் வெளிவந்த நான்காம் பதிப்பை, லுத்தரன் சபையைத் தவிர மற்ற எல்லா சீர்திருத்தத் திருச்சபைகளும் உபயோகப்படுத்தின.
1950ம் ஆண்டு, மே மாதம், எச்.ஏ. பாப்லி அவர்கள் தலைமையில், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்; குன்னூரில் கூடி, லுத்தரன் சபைக்கான 35 பாடல்களையும், அத்தோடு, திருப்பத்தூர், “ஆசிரம பாமாலை“, சங்கை ஜே. ஏ. சாமுவேல் இயற்றிய “கைப்பிரதிப் பாடல்கள்”, கருணாகரபுரியில் அச்சிடப் பெற்ற “கிறிஸ்தவக் கீர்த்தனை மாலை”, “திருமறையூர் இன்னிசைப் பாக்கள்”, ஆசிரியர் எஸ். மாசிலாமணி இயற்றிய “கிறிஸ்தவ இன்னிசைப் பாக்கள்” ஆகிய நூல்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கீர்த்தனைகளையும் சேர்த்து, மொத்தம் சுமார் 70 கீர்த்தனைகள், புதிய பொது கீர்த்தனை நூலில் இடம் பெறச் செய்தனர். அத்தோடு, அநேக பழைய, பயன்படுத்தாத கீர்த்தனைகளையும் நூலிலிருந்து நீக்கினர். இந்தப் புத்தகம் “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, என்கிற பாடல் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் இடம் பெற்ற அத்தனைப் பாடல்களும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, ராகத்தோடும், தாளத்தோடும் அமைந்தவையாகும். இப்புத்தகத்தில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள், 132 பாடல்கள், 23 குருமார்களால் (ஐயர்), இயற்றப்பட்டவை.
1988ல், வழக்கில் இல்லாத பாடல்கள் நீக்கப்பட்டு, புதுப் பாடல்கள் சேர்க்கப்பட்டு, பதினான்காவது திருத்திய, விரிவாக்கப் பதிப்பு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகளும், புத்தெழுச்சி கீதங்களும்”, என்ற பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட பெரும்பான்மையான பாடல்கள், தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் சுமார் இருபது ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாடல்களாகும். இப்பாடல்கள் கர்நாடக இசையில் அமையாதவைகளாகும்.
1980ல், நெல்லை திருச்சபையின், இருநூறாண்டு நிறைவு விழா நினைவாக, திருநெல்வேலி திருமண்டலம், “கீதங்களும் கீர்த்தனைகளும்”, என்ற பாடல் புத்தகத்தை வெளியிட்டது. இதில் பாமாலைப் பாடல்கள், கீர்த்தனைப் பாடல்கள், புத்தெழுச்சிப் பாடல்கள், ஜெபப்புத்தகம் ஆகியவைகள் அடங்கும். இது ஒரு நல்ல புத்தகம். நாம் பாடும் அனைத்துப் பாடல்களும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது போற்றுதற்குரியது. ஆனாலும் இந்நூலில் ஒரு குறை, அது யாதெனில், பாடலாசிரியர் அகராதி அல்லது கவிஞர் அகராதி விடுபட்டுப் போயிருப்பதுதான்.
கவிஞர்கள் விடுபடும் அவலம்
கவிதைகள் முன் நிற்க கவிஞர்கள் பின் நிற்கிறார்கள். அதனால் தான் அநேக கவிஞர்களின் பெயர்கள் அகராதியிலிருந்தே விடுபட்டுப் போகின்றன. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு, “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்”, பாடல் புத்தகத்தில், ஒரு சில கவிஞர்களின் பெயர்கள் தரப்படவில்லை அல்லது தெரியாமலே போய் விட்டதைப் பார்க்கிறோம். அனாதைக் குழந்தைகளாய் பாடல்கள் காட்சி தருகின்றன.
உதாரணமாக, “கிறிஸ்தவக் கீர்த்தனைகள்” (மூன்றாம் பதிப்பு-1956 ) எனும் பாடல் புத்தகத்தில்,
எனது கர்த்தரின் ராஜரீக நாள் -074
விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம் - 128
பாதம் ஒன்றே வேண்டும் - 201
உனக்கொத்தாசைவரும் நல் உயர் பருவதம். இதோ! -227
செய்ய வேண்டியதைச் சீக்கிரம் -261
கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த - 275
ஐயனே! இவர்க் காசி ஈகுவாய் - 303
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், யேசு நாதையா -331
வினை சூழா திந்த இரவினில் காத்தாள் -339
ஓய்வு நாள் இது – மனமே -340
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் - 388
மேற்கூறிய பாடல்களின் ஆசிரியர்கள் யார் என்று தெரியாத ஒரு அவல நிலை. இன்னும் கொடுமை என்னவென்றால், இந்தப் பாடல்களில் அநேகப் பாடல்கள் கிறித்துவர்களுக்குப் பிடித்த, நாம் அடிக்கடி பாடும், மிக இனிமையான பாடல்களாகும்.
திரைப்படப் பாடல்களில் கவிஞர்களுக்கு கிடைக்கும் சிறிதளவு பெயர் கூட கிற்த்துவ மதப் பாடல்களில் கிடைப்பதில்லை. அநேக சந்தர்ப்பங்களில், ஒலிநாடாவில் நாம் கேட்கும் கிறிஸ்தவப் பாடல்கள், பாடலைப் பாடிய பாடகருக்குச் சொந்தம் என்ற முத்திரையில் தான் விற்பனைக்கு வருகின்றன. அப்படியென்றால், அந்தப் பாடல் பாடியவருக்கு மட்டும்தான் சொந்தம் என்பதாக இருக்கிறது. பாடலை எழுதிய கவிஞன் காணாமலே போய் விடுகிறான்.
இன்றைய கால மாற்றத்தில், தொலைக்காட்சியில் கிறிஸ்தவப் பாடல்கள் நிறைய ஒளிபரப்பப்படுகின்றன. நல்ல ஒரு வளர்ச்சி, முயற்சியும் கூட..! அந்தப் பாடல் காட்சிகளில் வருபவர்கள், பாடகர்களா? அல்லது வாயசைப்பவர்களா? என்று தெரியவில்லை! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் -அவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல. பாடல் காட்சிகளில், நம்மால் பார்க்க முடியாத கடல்களையும், காடுகளையும், பள்ளத்தாக்குகளையும், பாலைவனங்களையும், மலைகளையும், மலர்களையும் காட்டுகிறவர்கள், கவிஞர் பெயரைத் திரையில் ஒரு ஓரமாய்க் காண்பிக்கலாமே! கவிதை ஒரு குழந்தை..! அதை ஈன்றெடுத்தத் தாயின் பெயரை வெளியிடுவதில் என்ன தயக்கம்? கவிஞர்களை கனம் பண்ணுவோம்..!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.