குறுந்தொகையில் சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகளில்
வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகள்
ப. சூர்யலெக்ஷ்மி
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
(மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்),
திருநெல்வேலி.
முன்னுரை
தொல்காப்பியர் அகத்திணைக்குரிய கற்பு மெய்ப்பாட்டினை இரண்டாக வகுத்துள்ளார். அவை வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகள், வரைந்த பின் நிகழும் மெய்ப்பாடுகள் என்பதாகும். தலைவன் தலைவி இருவரும் காதல் வயப்பட்டு அந்தக் களவு கற்பாக மாறுவதைத் தலைவி விரும்புவதாகக் காணப்படுகிறாள். குறுந்தொகையில் பெண்பாற் புலவர்களின் பாடல்களை வரைவு வேட்ககைக்குரிய மெய்ப்பாட்டினைப் பொருத்தி ஆய்வதாக இக்கட்டுரையானது அமைகிறது.
வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகள்
வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாடுகள் எட்டு அவை,
"முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்
அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல்
தூதுமுனி வின்மை துஞ்சி சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்
றாயிரு நான்கே அழிவில் கூட்டம்" (தொல்.மெய்.நூற்,267)
முட்டுவயிற் கழறல்
முட்டுவயிற் கழறல் என்பது களவொழுக்கத்திற்க்கு முட்டுப் பாடாகிய வழி (நிலவு வெளிப்பாடு, காவலர் கடுதல், தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை முதலியவற்றால் தலைவன் குறியிடத்து வருவதற்கு இடையீடுபடுதல்) இடித்துரைத்தல். முட்டுவயிற் கழறல் என்பது - களவு இடையீடு பட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல் என்றவாறு. (இளம் உரை 2008 பக்-370) பேராசிரியர் தலைக்கூட்டத்திற்கு முட்டுப்பாடிகிய வழிக் கழறியுரைத்தல் என்கிறார் (ஆ.சிவலிங்கனார் 1998 பக்.94). முட்டுவயிற் கழறல் என்பதனை ஆங்கிலத்தில் "Making assertions when having no union with him" என்கிறார்.(ஆ.சிவலிங்கனார் 1998 பக் 93)
ஔவையின் பாடலில் தலைவன் வரும் வழியில் இடியும், பலத்த காற்றும் இடையூறாக உள்ளது. அதனால், தலைவி வரைவுக்கு முற்படுகிறாள். பாடலில்;
"நெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும் கடுவிசை உருமீன் கழறுகுரல் அனைஇக் காலொடு வந்த கமஞ்சூல் மாமழை ஆர்அளி இலையோ நீயே பேர் இசை" (குறுந் 158,1-4)
இதேபோல் கழார்க்கீரன் எயிற்றினாரின் பாடலில் இரவுக்குறியில் தலைவன் வரும் வழியில் காவலர் துஞ்சாமை வெளிப்படுகிறது.
"துஞ்சா வாழி தோழி காவலர்" (குறுந் 267,5-7)
நெடுவெண்ணிலவினாரின் பாடலில் இரவுக்குறியில் தலைவன் வருவதால் வெண்ணிலவு முட்டுப்பாடாகிறது.
"எல்லி வருநர் களவிற்க்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே" (குறுந் 47 3-4)
முனிவு மெய்ந்நிறுத்தல்
முனிவு மெய்ந்நிறுத்தல் என்பது வரையாக கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்பாடு குறிப்பால் வற்புறுத்துணர்த்தல் என்று ந. சுப்பு ரெட்டியார் விளக்கம் தருகிறார். முனிவு மெய்ந்நிறுத்தல் என்பது வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யிங்கண்ணே நிறுத்தல் (இளம் உரை, 1998 பக் 93 ) தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்குநிலைமை (பேரா.உரை.1998 பக்.94 ) முனிவு மெய்ந்நிறுத்தல் என்பதனை "Exhibiting disgust" என்கிறார்.
காமஞ்சேர் குளத்தாரின் பாடலில் தலைவன் செய்த தண்ணளியை நினைந்து தலைவி தான் ஆற்றயிருக்கும் செவ்வியை உணர்த்துகிறாள்.
"நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே , இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி" (குறுந் 4 , 1-2)
நெய்தற் கார்க்கியரின் பாடலில் தலைவன் வாராவிடின் தலைவி சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வாள் அதனால் அவளை வரைய வேண்டும் என்கிறார் தோழி பாடலில் தலைவியை தலைவன் களவில் மணந்தான் அவன் தன்னை வரைதல் வேண்டும் என்கிறார் பாடலில்;
"கானக நாடனோ டாண்டொழிந் தன்றே" (குறுந் 54,5)
வெண்மணிப்பூதியாரின் பாடலில் தலைவன் தன்னை மணந்தால் தோள்கள் சிறப்புறுவதும் அவள் பிரிந்தால் சேர்வதுமாக உள்ளது அதனால் வரைதல் வேண்டும் என்கிறார்.
"... ... ... மற்று அவன் மணப்பின் மாண்நலம் எய்தி தணப்பின் ஞெகிழ்ப, எம்தடமென் தோளே?" (குறுந் 299, 6-8)
அச்சத்தின் அகறல்
அச்சத்தின் அகறல் என்பது பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்றொழுகல் (இளம்.உரை,1998 பக்.93) தலைமகன்கண் ஏதமஞ்சி அவனை நீங்குங் குறிப்பும் (பேரா. உரை 1998 பக். 94) இலக்குவானர் "Leaving him for fear of any harm being done to him" என்கிறார்.
குன்றியனாரின் பாடலில் தலைவன் வரும் ஏதம் அஞ்சி தலைவி அச்சமுறுகிறாள்.
"பார்வ லஞ்சிய பருவர லீர்ஞெண்டு" (குறுந் 117,2)
வெண்பூதியாரின் பாடலில் தலைவன் வரையாது காலம் தாழ்த்தினான். இருவரின் நட்பு ஊரில் அலராக வெளிப்பட்டது.
" மறைஅலர் ஆகி மன்றத் தஃதே" (குறுந் 97,4)
அவன் புணர்வு மறுத்தல்
அவன் புணர்வு மறுத்தல் என்பது இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கெழுந்த உள்ள நிகழ்ச்சி. இதனை இளம்பூரணார், தலைமகன் புணர்ச்சிகண் வாராக்காலத்துத் தானும் மனைழியாது நிற்கும் நிலை என்கிறார். (இளம்.உரை.1998 பக்.93) இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கெழுந்த உள்ள நிகழ்ச்சியும்,அது தமரையஞ்சி மறுத்தமையானும் இது வரைவு கடாவுதற்குக் கருத்தாகலானுந் தினைப்புவினை மறுத்தலொடு இது வேற்றுமையுடைத்து. (பேரா.உரை.1998.பக்.95)இலக்குவனார் ஆங்கிலத்தில் “Refusing to have his union” என்கிறார். (ஆ. சிவலிங்கனார் 1998 பக். 93)
ஔவையார் பாடலில் இரவுக்குறியில் வரும் தலைவன் வரையாது காலம் தாழ்த்தினான், அதனைத் தோழி மறுப்பது பாடலில்;
"அரிது அவர் வுற்றனை நெஞ்சே! நன்றும், பெரிதால் அம்மனின் பூசல், உயர்கோட்டு" (குறுந் 29,-5)
குன்றியனாரின் பாடலில் இரவுக்குறியில் வரும் தலைவனை தோழி வரைய கூறுகிறாள். அவன் வந்துப்போவதால் தலைவி துன்பம் எய்கிறாள், என்கிறார். பாடலில்;
"செறுவர்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ" (குறுந்.336 1-2)
வெண்பூதியாரின் பாடலில் சிறைப்புறுமாக உள்ள தலைவன் கேட்ப தலைவியின் மேனியில் பசலை உண்டானது. தலைவன் அன்பற்றவனாக உள்ளான் அவன் தன்னை வரைதல் வேண்டும் என்கிறார் தலைவி பாடலில்;
"செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே, ... ... ... கிடமற்
றோழியெந் நீரிரோ வெனினே" (குறுந் 2,7)
தூது முனிவின்மை
தூது முனிவின்மை என்பது, புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று தூதிரந்து பன்முறையாலும் சொல்லுதல், அஃதாவது, வரைவு கருதி தலைவனுக்குத் தூதுய்க்கவும் அவன் தூது எதிரவும் விரும்புதல். இளம்பூரணார் தூதுமுனிவின்மை என்பது தூதுவிட்ட வழி வெறாமை என்கிறார். (இளம்.உரை 1998 பக்:93) புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று தூதிரந்து பன்முறையானுஞ் சொல்லுதல். (பேரா.உரை 1998 பக்.95) இலக்குவனார் ஆங்கிலத்தில் “Having no disgust in sending messengers” (ஆ. சிவலிங்கனார்,1998.பக்:93)
வெள்ளிவீதியாரின் பாடலில் தலைவனைக் காணாத தலைவி வருந்தினாள். தோழி, தான் தூது விடுத்து தலைவனைத் தேடித் தருவதாக கூறுகிறாள், பாடலில் (குறுந் 130, 4-5)
காதல் கைம்மிகல்
காதல் கைம்மிகல் என்பது புணர்வு பெறாமல் வரைவு நீட்டித்த வழிக் காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் நிகழும் உள்ளக் குறிப்பு. இளம்பூரணார் காதல் கைம்மிகல் என்பதனை கவற்சியான் உறங்காமையன்றி யுரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல். (இளம்.உரை.1998.94) காமங் கையிகந்தவழி நிகழும் உள்ள நிகழ்ச்சியும் (பேரா.உரை.1998,96) இலக்குவனார் ஆங்கிலத்தில் என்கிறார் (ஆ. சிவலிங்கனார்,1998,93)
ஔவையார் பாடலில் தலைவன் வரையாமல் காலம் தாழ்த்தினான், அவன் பிரிவைத் தலைவி ஆற்றாள் எனத் தோழியுணர்வது பாடலில்;
"உள்ளின், உள்ளம் வேமே; உள்ளது, இருப்பின் எம் அளிவைத்து அன்றே; வருத்தி" (குறுந் 102, 1-2)
கட்டுரையின்மை
கட்டுரையின்மை என்பது உரை மறுத்திருத்தல்; கூற்று நிக்ழ்த்துதலின்றி உள்ளக் கருத்தினையும் மறைத்தமர்ந்திருத்தல் இதனால் தோழி கண்ணாயினும் தலைமகன் கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகன் கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையாள் என்பது அறியத்தக்கது. இளம்பூரணார் நிகழ்த்துதலன்றி உள்ளக் கருத்தினை மறைந்தமாந்திருத்தல். (இளம்.உரை 1998,94) உரைமறுத்திருத்தலும், அதனானே அதற்குத் தோழிக்கண்ணாயினுந் தலைமகன் கண்ணாயினும் உரைமுறை நிகழ்வதல்லது தலைமகள் உரையாளென்பது பெற்றாம். (பேரா.உரை.1998, 97) இதனை “Being speechless” என்று இலக்குவனார் கூறுகிறார் (ஆ. சிவலிங்கனார் 1998,93)
பொதுக்கயத்துக் கீரந்தையின் பாடலில் தலைவன் தலைவியின் தமரினெய்தல் வேண்டின்மையின் கட்டுரையின்மையில் வந்துள்ளது.
"யான்றன் அறிவன் தானறி யலளே
யாங்கா குவன்கொல் தானே
பெருமுது செல்வர் ஒருமட மகளே" (குறுந் 337,5-7)
வெள்ளிவீதீயாரின் பாடலில் தலைவி தலைவியின் தமர் வரைவுக்கு உடன்படுவார்களோ என்று எண்ணிய நேரத்தில் தோழி தலைவியை நோக்கி உடன்படுவர் என்று ஆற்றுகிறாள். பாடலில்;
"நன்று நன்று என்னும் மாக்களோடு, இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே" (குறுந் 146, 4-5)
முடிவுரை
வரைவு வேட்கைக்குரிய மெய்ப்பாட்டில் தலைவி தன் மனவுணர்வுகளை தோழி மூலமாகவோ, சிறைபுறமாக நிற்கும் தலைவன் கேட்கும் விதமாகவோ, தூது அனுப்பியாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமுடையவளாக காணப்படுகிறாள்.
துணை நூற்பட்டியல்
1. சிவலிங்கனார். ஆ, தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம், சென்னை (1998)
2. சுப்புரெட்டியார். ந, தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, சென்னை. (2012)
3. முருகேசப்பாண்டியன். ந, அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் சங்கப்பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை (2014)
(குறிப்பு: துணைநூற்பட்டியலில் நூலாசிரியர், நூலின் பெயர், பதிப்பகம் பெயர், பதிப்பு, ஆண்டு குறிப்பிடுவது நல்லது - ஆசிரியர்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.