சங்ககாலத் தொழில்கள்
அ. ராமமூர்த்தி
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்.
முன்னுரை
பழங்கால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். பின் உணவின் தேவை அதிகரிக்கும் போது, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றி பெற அவரவர் திறன்களைக் காட்டத் தொடங்கினர். இவ்வகையில், சமூகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியக் காரணியான தொழில்துறை வளர்ச்சியில், பழந்தமிழர் செயல்பாடுகள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சங்ககாலத் தொழில் பிரிவுகள்
‘அந்தணர், அரசர், அளவர், இடையர், உப்பு வாணிகர் (உமணர்), உழவர், எயிற்றியர், கடம்பர், கடைச்சியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குயவர், குறத்தியர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், நுளையர், பரதவர், பறையர், பாடினி, பாணர், பாணிச்சி, புலையர், புண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொருநர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவனர், யாழ்ப்புலவர், யானைப்பாகர், யானைவேட்டுவர், வடவடுகர், வண்ணாத்தி, வணிகர், வலைஞர், பேடர்’ என்று அக்காலத் தொழில் பிரிவினரை உ.வே. சாமிநாதையர் காட்டுவர் (புறநானூறு, உ.வே.சா. எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள், ப. 65). இவற்றுள் சமூக முன்னேற்றத்திற்கான பொருளாதாரம் சார்ந்த தொழில்கள் இங்குச் சிறப்பிடம் பெறுகின்றன.
சங்ககால முதன்மை தொழில்கள்
பழந்தமிழகத்தில் பல தொழில்கள் காணப்படினும், வேளாண்மை, வாணிகம், நெசவு, கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல், உப்பெடுத்தல், கட்டடத்தொழில், வளையல் தொழில், மண்பாண்டத் தொழில், தச்சுத் தொழில், வேட்டையாடுதல், உலோகத்தொழில், கைவினைப்பொருள்கள் தயாரிப்பு, தோல் பொருள் தயரித்தல், முத்தெடுத்தல் போன்றவை முதன்மை பெறுகின்றன.
இத்தொழில்களை அடிப்படைத் தேவைகளைச் சார்ந்த தொழில்கள், பொருளாதாரத்தைச் சார்ந்த தொழில்கள் என இருவகைகளில் பகுத்துக்காணலாம். வேளாண்மை, நெசவு மற்றும் கட்டடத்தொழிலுல் அடிப்படைத் தேவைகளைச் சார்ந்த தொழில்களாகவும், அவையல்லாத வணிகம், கால்நடை வளர்ப்பு, உலோகத்தொழில், கைவினைப் பொருள்கள் உற்பத்தி, காடுசார் தொழில்கள், கடல்சார் தொழில்கள் போன்றவை பொருளாதாரத்தைச் சார்ந்த தொழில்களாகவும் அமைகின்றன.
பொருளாதாரம் சார்ந்த தொழில்கள்
1. வேளாண் தொழில்
கிராமப் புறங்களில் மக்களின் வேலைவாய்ப்பிற்கு உறுதியளிக்கும் தொழில்களுள் முக்கியமானதாக வேளாண்தொழில் அமைகிறது. இத்தொழில் உணவு உற்பத்தி என்பதோடு நில்லாது, சமூகப் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெரும் பங்காற்றுகிறது.
மிளகு போன்ற உணவுப் பொருள் நாட்டின் பொருளாதாரத்தை ஈட்டுவதில் பெரும்பங்காற்றியது. மிளகு சிறந்த ஏற்றுமதிப் பொருளாகவும் பயன்பட்டது. இது அதிகமாகப் பயிரிடப்பட்டதை, ‘கறிவளர் அடுக்கத்து இரவின்’
(குறு. 90:2), ‘கறிவளர் அடுக்கத்து ஆங்கண்’
(குறு. 288:1, புறம். 168:2, ஐங்குறு. 234:1, அகம். 2:6, 112:14, சிலம்பு. 28:114, நற். 151:17) என்ற இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன.
2. வாணிகம்
ஒரு நாட்டின் தொழில்களிலே உழவும், வாணிகமும் தலைசிறந்தன என்பது அறிஞர் கொள்கை. பொருளாதாரம் சார்ந்த தொழில்களில் முதன்மை நிலையினைப் பெறுவது வாணிகத் தொழிலாகும். ‘வியன் மேவல் விழுச் செல்வத்து இரு வகையான்இசை சான்ற’
(மதுரைக்காஞ்சி. 120, 121) என்று, சான்றோரால் புகழப்படும் சிறந்த செல்வமாகிய உழவு, வாணிகம் என்னும் இருவகையாலும் புகழ் நிறைந்த குடிகள் என்று போற்றுகிறது மதுரைக்காஞ்சி.
3. கால்நடை வளர்ப்பு
வேளாண்மைத் தொழிலின் துணைத்தொழிலாகக் கால்நடை வளர்ப்புத் தொழில் அமைகிறது. பண்டைத் தமிழர்கள் கால்நடைகளின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். சமுதாயப் பொருளாதார வலிமையைத் தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாகக் கால்நடைகளின் எண்ணிக்கை அமைந்தது.
ஆநிரை மேய்ப்பவர் ‘ஆயர்’, ‘கோவலர்’, ‘இடையர்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இதனை, ‘புல்லினத்து ஆயர்’
(கலி. 110:1), ‘ஆடுடை இடைமகன்’
(நற். 266:3), ‘கொல்லை கோவலர்’
(நற். 266:1) என்பதில் அறியலாம்.
இவர்கள், முல்லை நிலத்துப் புல்வெளிகளில் ஆநிரைகளை மேய விட்டதை,
‘முல்லை வியன் புலம் பரப்பிக், கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும் பூ அயரப்”
(அகம். 14:7-8)
என்ற பாடல்களில் அறியலாம்.
4. கடல்சார் தொழில்கள்
கடல்சார் பொருள்களான மீன் பிடித்தல், உப்பெடுத்தல், முத்தெடுத்தல், உணங்கு மீன் உற்பத்தி போன்றவையும் பொருளாதாரத்தை ஈட்டும் தொழில்களாக அமைகின்றன. மீன் பிடித்தொழிலும், விற்பனையும் பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன. உப்பு வாணிகம் பண்டமாற்றில் முதன்மையான இடத்தைப் பெறுகிறது.
பரதவர் கட்டுமரம், திமில் போன்றவற்றில் கடலுக்குச் சென்றனர். திமிலில் விளக்கு எரியவிட்டு இரவிலும் மீன் வேட்டையாடினர். அவ்விளக்கு வானிலவு போல ஒளி வீசியதை,
‘மீன் கொள்ள பரதவர் கொடுந் திமில், நளி சுடர்
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு”
(அகம். 65:11,12)
என்ற பாடலால் அறியலாம்.
நெய்தல் நில மக்கள் கடற்கரையிலும், கழிக்கரையிலும் உள்ள உவர்நிலத்தில் சிறுசிறு பாத்திகள் அமைத்து, அவற்றில் கடல் நீரினையும், உப்பங்கழி நீரினையும் பாய்ச்சி உப்பு விளைவித்ததை,
“பெயினே விடுமான் உளையின் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச்சேறு புலர்ந்து
இருங்கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்”
(நற். 311:1-4)
என்று நற்றிணை பாடலால் அறியலாம்.
கொடுமணம், பந்தர் ஆகிய இடங்களில் முத்தெடுத்தலில் சிறந்து விளங்கியதை,
“கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்”
(பதி. 67:1-2)
என்ற வரிகளால் அறியலாம்.
5. காடு சார் தொழில்கள்
திணை சார்பு தொழில்கள் என்ற அடிப்படையில், காடு சார்ந்த (மலை மற்றும் வனப் பகுதிகளை உள்ளடக்கியவை) தொழில்கள் சிறப்பாக நடைபெற்றன. காடுசார் வேளாண்மையைத் தவிர்த்து, குறிப்பாக, வேட்டையாடுதல், தேனெடுத்தல், மலைபடு பொருள்களின் வாணிகமும் பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய தொழில்களாக அறியப்பட்டதை,
“மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்
ஆறு முட்டுறா அது, அறம் புரிந்து ஒழுகும்”
(பதி. 59:15-16)
என்ற வரியால் அறியலாம்.
6. கைவினைப் பொருள்கள் உற்பத்தி
பழந்தமிழரின் ஏற்றுமதிப் பொருள்களில் கைவினைப் பொருள்களும் இடம் பெற்றுப் பொருளாதார வளத்தினைப் பெருக்கின. பொன்னாலும், மணியாலும், முத்தாலும், பவளத்தாலும் செய்யப்பட்ட மாலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வகைப் பொருள்கள் கிடைத்த இடங்களையும், அவற்றை ஒன்று சேர்த்து மாலையாக்கிய செய்தியையும்,
“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மா, மலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை”
(புறம். 218:1-4)
என்ற பாடலடிகள் காட்டுகின்றன.
7. தச்சுத் தொழில்
இவர்கள் மரவேலை செய்வோர்
(புறம். 206:11-13, 290:4-5, 87:2-4, நெடுநல். 85-86, சிறுபாண். 256-258, பெரும்பாண். 248-249) ஆகிய பாடல் வரிகளால் தச்சுத் தொழில் பழந்தமிழகத்தில் சிறந்திருந்தது என்பதை அறிய முடிகிறது.
உப்பு வண்டிகள், தேர்கள், கட்டில் போன்றவை உறுதியாகவும், கலைநயத்தோடும் செய்யப்பட்டன. ஒரு நாளில் எட்டுத்தேர் செய்யும் தச்சனின் தொழில் வன்மையை ஔவையார்,
“எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்”
(புறம். 87:2-3)
என்ற வரிகளால் சுட்டுவார்.
தச்சர்களைப் போல, தச்சச் சிறாரும் தச்சுத் தொழிலில் தேர்ந்திருந்தனர். தச்சச் சிறார் செய்த சிறுவர்களுக்கான தேரினை,
“தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த
ஊரா நற்றோர் உருட்டிய புதல்வர்”
(பெரும்பாண். 248-249)
என்ற அடிகள் காட்டுகின்றன.
8. மண்பாண்டத் தொழில்
மண்பாண்டத் தொழில் செய்வோர் பெரிதும் மதிக்கப்பட்டனர். இவர் ‘கலம்செய் கோவே’ (புறம். 228:1) என அழைக்கப்பட்டனர். மண் பானை ‘குழிசி’ என்றும் வழங்கப்பட்டது (பெரும்பாண். 99). இல்லப் பயன்பாட்டுப் பொருள்களும், முது மக்கள் தாழி போன்ற இன்னபிறவும்; மண்ணால் செய்யப்பட்டதால், அத்தொழில் சமூகத்தில் சிறந்த இடத்தினைப் பெற்றிருந்தது.
9. கொல்லத் தொழில்
பழந்தமிழகத்தில் கொல்லத் தொழில் (இரும்பு தொழில் செய்வோர்) சிறப்புற்று விளங்கிற்று. வேளாண் கருவிகள், படைக்கருவிகள், இல்லப் பயன்பாட்டுக் கருவிகள் போன்றவை தயாரிப்பில் கொல்லர் ஈடுபட்டதால், சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்டனர். இவர்கள், தேர், பாண்டில், உளி
(சிறுபாண். 52) போன்றவற்றையும் இல்லப் பயன்பாட்டுப் பொருளாகிய உலக்கை
(பெரும்பாண். 97) போன்றவற்றையும், வேளாண் கருவிகளான உழுகொழு, நுகம், அச்சு, பார், உருளை
(பொருநர். 29, பெரும்பாண். 63-66) போன்றவற்றையும், இன்னும் பல பொருட்களை வடிவமைத்தனர்.
முடிவுரை
மேற்குறிப்பிட்ட தொழில்களே அல்லாமல், அட்டில் தொழில், கட்டில் பின்னும் தொழில், பாய் பின்னும் தொழில், வெண் சுண்ணாம்புத் தயாரித்தல், நறுமணப் பொருள்கள் தயாரித்தல், சலவைத் தொழில், கல் தச்சர், தோல் தொழில், மெத்தை தலையனை தயாரிப்போர், மணி செய்வோர், அழகுச் சாதனப் பொருள்கள் தயாரிப்போர் போன்ற தொழில்களை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளதை இக்கட்டுரை வழியாக அறியலாம்.
துணை நூற்பட்டியல்
1. புறநானூறு, சாமிநாதையர், உ.வே., எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், (1985)
2. சங்க இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98 (முதல் பதிப்பு - ஏப்ரல் 2004).
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.