கலித்தொகையில் திருக்குறள் கருத்துக்கள்
முனைவர். மா. தியாகராசன்
முன்னுரை
உலக அறநூல்களுள் ஒப்பற்ற ஒரு நூலாக திகழ்வது நம் திருக்குறளே ஆகும். இனம், நாடு, மொழி, சமயம் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்த மனிதகுலத்தை மாண்புறச் செய்யும் நூலாக விளாங்குவதனால்தான் திருக்குறளை ‘உலகப் பொதுமறை’ என்று அனைவருமே போற்றிப் பாராட்டுகின்றனர்.
திருவள்ளுவ மாலையில் மதுரைத்தமிழ் நாகனார் “எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்” என்று கூறியவாறு எல்லோருக்கும் எல்லாக் காலத்திற்கும் தேவையான எல்லாக் கருத்துக்களையும் எடுத்துக் கூறும் இனிய நூல் திருக்குறளேயாகும். அதனால்தான் திருவள்ளுவருக்குப் பின் தோன்றிய புலவர்கள் அனைவரும் தாங்கள் இயற்றியுள்ள எல்லா நூல்களிலும் திருக்குறள் தொடர்களையும், திருக்குறள் கருத்துக்களையும் அப்படியே எடுத்தாண்டுள்ளார்கள். அந்த வகையில் சங்கத்தொகை நூல்களுள் ஒன்றாகிய – கற்போர்க்கு களிப்பூட்டும் கலித்தொகையில் திருக்குறள் கருத்துக்களும் தொடர்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளுடன் 150 பாடல்களையும் கொண்ட கலித்தொகையில் 63 பாடல்களிலும் 97 திருகுறட்பாக்களின் கருத்துக்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் எடுத்து விளக்கிட விரும்புகின்றேன்.
பாலைக்கலியில் பரவியுள்ள கருத்துக்கள்
பெண்கள் தாம் பிறந்த வீட்டை விட இல்லறம் ஏற்ற புகுந்த வீட்டிற்கே பெரிதும் பயன்படுவார்கள். நறுமணம் மிக்க சந்தனம் மலையில் பிறந்தாலும் அந்த சந்தனம் பூசிக் கொள்பவருக்குத்தான் மணமும், குளிர்ச்சியும் கொடுக்குமே தவிர மலைக்கு சந்தனத்தால் பயன் ஏதுமில்லை. கடலில் தோன்றும் முத்தும் மாலையாக அணிபவருக்கு பயன்படுமேயல்லாமல் கடலுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. யாழில் தோன்றுகின்ற இனிய இசையும் கேட்பவருக்கு இன்பம் தருமேயல்லாமல் யாழுக்கு இசை எந்தப் பயனை கொடுக்கும்?
இவை போலவே பெண்களும் புகுந்த வீட்டிற்கே பெரிதும் பயன்படுவார்கள் என்னும் கருத்துக்களை கூறி இறுதியாக அத்தகைய இல்லறமே அறங்களில் தலையாய அறம் ஆகும். மறுமையில் வீட்டின்பத்தை அடைவதற்கு உரிய வழியும் இல்லறமேயாகும் என்பதனை “அறந்தலைப்பிரியா ஆறு மற்றதுவே” (பாலைக்கலிப் பாடல் எண். 8) என்று கலித்தொகையில் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ கூறியுள்ளார். இக்கருத்தினை தெய்வப் புலவர் திருவள்ளுவர் தாம் அருளிய திருக்குறளில் “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” எனக் கூறியுள்ளார். அறன் என்று சிறப்பித்துக் கூறத்தக்கது இல்லறமேயாகும் என்பது இதன் கருத்து. இதே கருத்தினை ஔவையாரும் இல்லறமல்லது நல்லறமன்று” என்று கூறியுள்ளார். எனவே பாலைக்கனி பாடிய சேரமான் பெருங்கடுங்கோவும் இல்லறமே ஏனைய அறங்களில் உயர்ந்தது என்னும் திருக்குறள் கருத்தினை உள்வாங்கி இல்லறமே தலையாய அறம் என குறிப்பிட்டுள்ள பாங்கு எண்ணி இன்புறத்தக்கதாகும்.
தவம் என்பது மக்களுடைய ஆற்றலைப் பெருக்கும். எல்லா வகையான நுகர்ச்சிகளையும் கொடுக்கும் என்பதனால் தவம் செய்வோர் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றார்கள். இதனைத் “தவம்” என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவப் பெருந்தகை. “ வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்” எனக் குரல் கொடுத்துள்ளார். இதே கருத்தை பாலைக்கலி ஆசிரியர் அருந்தவம் ஆற்றியோர் நுகர்ச்சிபோல்” (பாலைக்கலி பாடல் எண்.29) என்று கூறியுள்ளார். அருந்தவம் அதனை செய்வோர்க்கு அனைத்து வகையான நுகர்ச்சிகளையும் அளிக்கும் எனப் பாடியுள்ளார். இவ்வாறு திருக்குறள் கூறும் தவத்தின் சிறப்பைக் கலித்தொகை போற்றியுள்ளது.
குறிஞ்சிக்கலியில் குறனின் பொருள்கள்
கலித்தொகையின் நாற்பத்து இரண்டாம் பாடலாக அமைந்துள்ள, குறிஞ்சிக் கலி ஆறாம் பாடலில் தோழி தலைவனைப் பழிப்பதாகக் கூறவும் அவள் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறுவதாகவும் அமைந்துள்ள பாடலில், தலைவி கூற்றாக அமைந்துள்ள பகுதியில். “ஏடி! தோழி! எப்போதும் ஒழியாமல் தலைவன் மீது கொடுமையாகக் கூறிக் கொண்டிருக்காதே! என் நெஞ்சத்தைத் தன்னுடைய அன்பால் பிணித்துக் கொண்ட என் தலைவன் சான்றோர் அஞ்சத்தக்க கொடுஞ்செயல்களைச் செய்வ தற்கு அஞ்சாத அறன் இல்லாதவன் அல்லன்” எனத் தலைவி புகழ்ந்து கூறுவதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் ‘தலைவன் அஞ்சத்தக்க தீய செயல்களை அஞ்சாமல் செய்யக் கூடியவன் அல்லன் தீய செல்களைச் செய்வதற்கு அஞ்சக் கூடியவன்’ என்னும் கருத்து அமைந்துள்ளது. இஃது “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞசல் அறிவார் தொழில் (குறள் 428 அறிவுடமை 8) என்னும் திருக்குறள் கருத்தை விளக்கிக் கூறம் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் இக்கருத்து, தீவினையச்சம் என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள “தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு” (குறள் 201) என்னும் திருக்குறள் கருத்தினையும் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது, எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாகும்.
அடுத்ததாகத் “தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நடைபெறும் உரையாடலில் இருவருடைய சொல்லாற்றலும் புலப்படுவதைக் காணலாம், தன்னை வலிதிற் கட்டியணைக்கின்ற தலைவனை நோக்கித் தலைவி. “தங்களுக்கு இனிதானது என்று எண்ணிப் பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யலாமா? அது நன்றாகுமா? செய்பவர்க்கும் துன்பத்தானே தரும்?” என்னும் பொருள்பட, “தமக்கினி தென்று வலிதிற் பிறர்க் கின்னா செய்வது நன்றாமோ மற்று )கலி 62 குறிஞ்சிக் கல் பாடல் எண்.26) என்று தலைவி கூறும் பகுதியின் பொருள். பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும் (குறள் 319) என்னும் குறளின் பொருளை யொட்டி அமைந்திருக்கிறது.
அதே கலித்தொகைப் பாடலில் தலைவன், “பெண்கள் குற்றமில்லாத நிலவு போன்ற முகத்தை உடையவர்கள்” என்று கூறுகின்றான். இது, “அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து” என்னும் திருக்குறள் கருத்திற்கு ஏற்பவே புனையப்பட்டுள்ளது. இந்தக் குறள் கூறும் பொருள். பெண்கள் முகம் போல நிலவு அழகுற விளங்கினாலும் நிலவைக் காட்டிலும் பெண்கள் முகமே உயர்வுடையது ஏனெனில் தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் நிலவுக்கு உண்டு மாதர் முகத்தில் இந்தக் குறைகள் இல்லை” என்பதாகும். இந்தக் கருத்து கலித்தொகைப் பாடலில், “மையின் மதியின் விளங்கு முகத்தார்” என்று பெண்கள் முகம் கூறப்பட்டுள்ளது. பெண்கள் முகம் களங்கம் அற்ற நிலவு என்பதை இவ்வித நூல்களும் எடுத்துக் காட்டியுள்ள முறை ஒன்றாகவே அமைந்துள்ளது.
மருதக் கலியில் மாண்புறு திருக்குறள்
தலைவி தன் தோழியை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ள கலித்தொகைப் பாடலில் “தோழியே! தலைவன் பரத்தையர் பால் சென்று அவர்களுடன் கூடி மகிழ்ந்த குறிகளுடன் என்னிடம் வருவானாயின் நான் அவன் மீது சினம் கொண்டு புலவியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணியிருப்பேன். ஆனால் என்னுடைய மனமோ அவனைக் கண்டவுடனே அத்தவறுகளோடு கூடிய தலைவனை அதே நிலையில் கூடி மகிழ வேண்டும் என்று கூறுகிறதே என் செய்வேன்!” என்று கூறும பகுதி இடம் பெற்றுள்ளது.
“நலத்தகை உழிலுண் கண் நல்லார் தம் கோதையால் அலைத்த புண் வடுகிட்டி அன்பின்றி வரின், எல்லா! புலப்பேன்யான் என்பேன் மன்! அந்நிலையே அவற்காணின் கூடுவேன் என்னும் இக்கொள்கையில் நெஞ்சே” (கலி 67 மருதக் கலி பாடல் எண்-2) என்பது அப்பகுதிக்குரிய பாடல் அடிகள். இது, திருக்குறளில் தலைவி கூறுவதாக அமைந்துள்ள குறள் “தோழி” நான் தலைவன் மீது புலவி கொள்ள வேண்டும் என்று கருதிச் சினத்துடன் தலைவன் வரும்போது வேறு ஓர் இடத்திற்குச் சென்றேன் ஆனால் என் நெஞ்சம் என் உறுதியை ஏற்காமல் எனக்கு மாறாக அவருடன் கூட வேண்டும் என்று கூறியதால் நான் தலைவனைத் தழுவினேன்” என்னும் கருத்தமைந்த “புலப்பல் எனச் சென்றேன். புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு” (திருக்குறள் 1259 அதிகாரம்- நிறையழிதல்-9) திருக்குறளுடன் முழுவதும் பொருந்துமாறு அமைந்துள்ளது ஒப்பிட்டுப் பார்க்கும்போது உவகை தருகின்றது.
முல்லைக்கலியில் முத்தனைய குறள்
தலைவி ஒருத்தி, தன் தோழியை நோக்கி, “நான் தலைவனுடன் பிறர் அறியாமல் பழகி வந்தேன். அந்தக் களவு வெளிப்பட்டு விட்டது. எவ்வாறு வெளிப்பட்டது தெரியுமா? தலைவன் எனக்குக் கொடுத்த முல்லைச் சரத்தையும் தலை மாலையையும் நான் என் கூந்தலுக்குள் முடித்துக் கொண்டிருந்தேன். என தந்தையாரும் தாயாரும் வீட்டில் இருந்தார்கள். அப்போது செவிலித்தாய் என் கூந்தலுக்கு வெண்ணெய் தேய்த்து முடிப்பதற்கு என்னை அழைத்தாள், கூந்தலுக்குள் மலர்ச்சரம் இருக்கும் நினைவு இல்லாமல் நான் செவிலியிடம் சென்றேன். அவள் என் கூந்தலை அவிழ்த்த போது உள்ளிருந்த முல்லை மாலை தந்தையாரும், தாயாரும் காணும்படியாக என் கூந்தலிருந்து விழுந்தது. அந்த மாலை என் களவு ஒழுக்கத்தை என் பெற்றோர்க்குத் தெளிவாகத் தெரியப்படுத்தி விட்டது. அதனைப் பார்த்த செவிலித்தாயும் நெருப்பைக் கையால் தொட்டவளைப் போல் அதிர்ச்சியுற்று வீட்டிற்கு வெளியே சென்று விட்டாள்” என்று கூறிய தலைவி தன் களவு வெளிப்பட்ட நிலைக்கு ஓர் உவமையாக “கள் குடிப்போர் பிறர் காணாத வண்ணம் மறைவாகக் கள் அருந்துவார்கள். அதன் பின்னர் அந்தக் கள் உண்டாக்கும் களிப்பால் அவர் உடல் தள்ளாடுதல், முகச்சோர்வு முதலியவை அவர் கள் அருந்தியதைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடுவதால் அதன் பின்னர் அவர் மறைக்க இயலாமல் தம் நாணத்தை இழந்து தாம் கள் உண்டதைப் பலர்க்கும் கூறிவிடுவார் அதுபோல என் களவுக் காதல் வெளிப்பட்டுவிட்டது” என்று கூறினாள்.
“தோழி நாங், காணாமை உண்ட கடுங்கள்ளை மெய் கூர நாணாது சென்று நடுங்க உரைத் தாங்குக் கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்” (கலி 115 முல்லைக்கலி 15) இந்தக் கலித்தொகை அடிகளில் அமைந்துள்ள உவமை திருக்குறளில். நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும் பேணாப் பெருங் குற்றத் தார்க்கு” (குறள் 924, கள்ளுண்ணாமை 4) என்னும் குறளின் கருத்துடன் பொருந்த அமைந்துள்ளது.
கள் அருந்தியவன் நாணத்தை இழந்து தான் கள் அருந்தியதைப் பலரும் அறியுமாறு வெளிப்படுத்தி விடுவதைப் போல தலைவியும் நாணம் இழந்து தன் காதல் பெற்றோர் அறிய வெளிப்பட்டு விட்டதே என்று வருந்துவது பொருத்தமுற அமைந்துள்ளது. ஆயினும் இவற்றைக் கேட்ட தோழி பின்னர்த் தலைவியை நோக்கி “களவு வெளிப்பட்டது குறித்து அஞ்சவேண்டா. நின்னை அவனுக்கே மணம் செய்து கொடுக்க நம் பெற்றோர் முடிவு செய்து விட்டார்கள் என்று கூறி தலைவியின் அச்சம் நீக்கியதாக இந்தப் பாடல் நிறைவு பெறுகிறது.
நெய்தல் கலியில் நெஞ்சினிக்கும் திருக்குறள்
தலைவி ஒருத்தியைத் தன் நெஞ்சில் நிறுத்தி மடலேற முனைந்த தலைவன் ஒருவன் சான்றோரைப் பார்த்துத் தன் துன்பத்தைக் கூறுவதாக அமைந்துள்ள பாடலில் “சான்றோரே! நீவிர் வாழிய பிறர் துன்பத்தையும் தம் துன்பமாகவே கருதி அவர் துன்பத்தை நீக்குதல் சான்றோர்க்குரிய கடன் என்பதால் என் துன்பத்தை உங்களுக்கு நான் கூறுகின்றேன்” எனக் கூறத் தொடங்குகின்றான்.
“சான்றவிர் வாழியோ! சான்றவிர் என்றும் பிறர்நோயும் தம் நோய் போல் போற்றி அறனறிதல் சான்றவர்க் கெல்லாம் கடனானால் இவ்விருந்த சான்றீர்! உமக் கொன்று அறிவுறுப்பேன்” (கலி 139 நெய்தல் கலி 22) தலைவன் கூறுவதாக அமைந்த இந்தக் கலித் தொகைப் பாடல் அடிகளில், பிறிதோர் உயிருக்கு வரும் துன்பத்தையும் தம்முயிர்க்கு வந்த துன்பமாகவே கருதிப் பிறர் துன்பத்தை நீக்காவிட்டால் சான்றோர் தாம் பெற்ற அறிவினால் என்ன பயன்? என்னும் பொருளை உள்ளடக்கி அமைந்துள்ளன.
“அறிவினான் ஆகுவ துண்டோ? பிறிதின் நோய் தம் நோய் போல் போற்றாக் கடை” (குறள் 315 இன்னா செய்யாமை 5) என்னும் திருக்குறளின் கருத்து மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.
முடிவுரை
கலித்தொகையில் அமைந்திருக்கும் ஐந்து திணைப் பாடல்களையும் ஒரு திணைக்குரிய பாடல்களை ஒரு புலவர் என்ற வகையில் ஐந்து புலவர்கள் தனித்தனியே பாடியுள்ளார்கள். ஒவ்வொரு புலவரின் கற்பனையும் எண்ணவோட்டமும் வேறு வேறானவையாகவே அமைந்துள்ளன. ஐந்து திணைகளுக்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவையும் வெறு வேறானவை என்றாலும் கலித் தொகைப் பாடல்கள் எல்லாம் அகப்பொருள் பற்றிய பாடல்கள் என்னும் அடிப்படையில் அவை ஒன்றுபடுகின்றன. கலித்தொகை அகம் பாடும் நூலே தவிர அறம் கூறும் நூல் அன்று. இருப்பினும் அறநூலாகிய திருக்குளில் கூறப்பட்டுள்ள அரிய கருத்துக்கள் அக நூலாகிய கலித்தொகையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்வு தருகிறது. ஐந்து திணைகளைப் பாடிய புலவர் ஐவரும் தத்தம் பாடல்களில் தவறாமல் திருக்குறள் சிந்தனைகளை விதைத்துள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது திருக்குறளின் பெருமை புரிகிறது! தமிழர்தம் அறவுணர்வு நெஞ்சில் விரிகிறது!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.