தமிழ்பேசும் நல்லுலகம் மிகப் பெரிய ஒரு நிலப்பரப்பாக இருந்துள்ளது. அங்கு பல்வேறு குடிமக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் இலக்கண இலக்கிய அடிப்படையில் நூல்களைக் கற்றும் இயற்றியும் திகழ்ந்துள்ளனர். தமிழ் பேசும் நல்லுலகத்தார் கல்வியிலும் கேள்வியிலும் ஓங்கியிருந்தனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் கூறும் நல்லுலகம் தனக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு வந்துள்ளது. அந்த எல்லை, படிப்படியாக நாளடைவில் சுருங்கிக்கொண்டே வந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். தொல்காப்பியர் காலத்தில் பன்னிரண்டு நாடுகள் இருந்துள்ளன. அருவாநாடு, அருவாவடதலைநாடு எனும் இரண்டும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் வடபகுதியாக இருந்துள்ளன. அந்த வடபகுதி தொண்டை மண்டலம் என்றும், தொண்டை நாடு என்றும், கச்சியர் நாடு என்றும், தொண்டை மண்டல நாடு என்றும் வழக்கில் வழங்கி வந்துள்ளது. தொல்காப்பியருடைய காலத்திலேயேத் தொண்டை நாடு ஒரு தனி நாடாகச் சிறந்து விளங்கியுள்ளது. தொண்டை நாடு ஒரு தனித்த நாடாக விளங்கியதற்குச் சங்க இலக்கியங்களே சன்றுகளாக அமைகின்றன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் கூறும் நிலப்பகுதியினைத் தனித்தனியாக ஆண்ட காலங்களில் தொண்டை நாடு ஒரு தனித்த நாடாக ஆளப்பட்டு வந்துள்ளது. இதற்குச் சான்றாக கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படை அமைகிறது. அதில் தொண்டை நாட்டின் வழக்காற்றுக் கூறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் அந்நாட்டின் நிலப்பகுதியினையும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தொண்டைநாடு காஞ்சி மாநகரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆளப்பட்டு வந்த பகுதியாகும் என்பதை இலக்கண இலக்கியக் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறியலாம்.
தொண்டைநாடு என்பதற்கு, தமிழ்மொழி அகராதி தொண்டைமண்டலம்
(கதிரைவேற்பிள்ளை, 2009 : 853) என்றும் மதுரைத் தமிழ்ப்பேரகராதி இது நெடுங்காலம் உபநாடாகவும், சிலகாலம் தனிநாடாகவும் இருந்து பெரும்புகழ் படைத்தது
(சந்தியா நடராசன், 2004:2222) எனவும், சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி தொண்டை மண்டலம்
(சென்னைப் பல்கலைக்கழகம்,1982:2092) என்றும் கூறுகின்றன. அபிதானசிந்தாமணி தொண்டைநாடு மேற்கில் பவள மலையினையும், கிழக்கில் கடலையும், தெற்கில் பினாகினி நதியையும், வடக்கில் திருவேங்கடத்தையும் எல்லையாகக் கொண்ட நாடாகும்.
(சிங்காரவேலு முதலியார்,2004:1092) என்று கூறுகிறது. மதுரைத் தமிழ்ப் பேரகராதி இந்த நாடு கிழக்கே கடலும், மேற்கே பவளமலையும், வடக்கே வேங்கடமலையும், தெற்கே பிநாகிநதியும் எல்லைகளாக உடையது; இதற்குத் தலைமை இடம் காஞ்சிபுரம்; இந்நாடு பண்டையக் காலத்தில் சோழநாட்டைச் சேர்ந்தது
(சந்தியா நடராசன், 2004:1222) என்று எடுத்துரைக்கிறது. தமிழ்மொழி அகராதி, இந்த நாடு கிழக்கே கடலும், மேற்கே பவள மலையும், வடக்கே வேங்கடமலையும், தெற்கே பிநாகிநதியும் எல்லைகளாக உடையது
(கதிரைவேற்பிள்ளை, 2009:858) என்று கூறுகிறது. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி தொண்டை மண்டலம் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும், முந்தைய ஆர்க்காடு, செங்கற்பட்டு, நெல்லூர் மாவட்டங்களை உள்ளடக்கியதுமான தமிழ்நாட்டுப் பகுதி
(சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி,1982:2093) என்று தொண்டை மண்டல சதகத்தின் வழியாகக் கூறுகின்றது. வைணவ உரைநடை வரலாற்று முறைத் தமிழ்ப்பேரகராதி, தொண்டை மண்டலம் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும் ஆற்காடு, செங்கற்பட்டு, நெல்லூர் மாவட்டங்களை உள்ளடக்கியதுமான தமிழ்நாட்டுப் பகுதி
(வைணவ உரைநடை வரலாற்று முறைத் தமிழ்ப் பேரகராதி, 2001:587) எனக் கூறுகிறது. இது இப்போதைய சித்தூர், செங்கற்பட்டு, வடார்க்காடு, தென்னார்க்காடு உள்ளிட்ட வட்டவடிவ நிலப்பரப்பினை உடையது. தொண்டை மண்டல வரலாறுகள் எனும் நூல், தொண்டை மண்டலம் என்றால் எந்தப் பகுதி என்று ஒரு வினாவை எழுப்பி, அதற்கு விடையினைக் கூறியுள்ளது. இதற்கு விடை ஒரு மெக்கன்சியின் சுவடியிலேயே உள்ளது
(டி.3089): கிழக்கே கடல், தெற்கே பெண்ணையாற்றங்கரை, மேற்கே திருவண்ணாமலை, வடக்கே திருக்காளத்தி என இந் நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட நிலமே தொண்டை மண்டலம் என்று இச்சுவடி குறிக்கிறது
(செளந்தர பாண்டியன், 1997:2) தொண்டை நாட்டுச் சிவத்தலங்களைப் பாடிய திருநாவுக்கரசரோ ‘தொண்டை’ என்ற சொல்லை ஓர் இடத்தில் கூடப் பயன்படுத்தவில்லை. சுந்தரர் மட்டும் (கி.பி.9 நூற்றாண்டு) ஓரிடத்தில் ஆறு தொண்டைமான் களிறு என்று கூறுகிறார்
(செளந்தரபாண்டியன்,1997:4) தொண்டை மண்டலத்தைக் குறிப்பிட்டுக் கூறும் சாதியாரும் உளர்; தொண்டை மண்டல வேளாளர், வேளாளரில் ஒரு பிரிவினர். இதைப் போலவே, வைணவ வடகலை சுயமாச்சார்யார்களில் ஒரு பிரிவார் வரதராசப் பெருமாளை வழிபடும் தொண்டை மண்டல சுயமாச்சாரிகள்
(செளந்தரபாண்டியன்,1997:4) சென்னையில் இன்றும் தொண்டைமண்டலத்தின் எச்சமாக ஒரு பகுதி, தொண்டையார்பேட்டை என்று வழங்கி வருகிறது. அது தற்பொழுது தண்டையார்பேட்டை என்று மருவி வழங்கி வருகிறது. அப்பகுதி தொண்டை நாட்டிற்குச் சார்பு பகுதியாக இருந்திருக்கிறது எனக் கருதலாம்.
தமிழ்நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள தொண்டை நாட்டின் எல்லையை மேற்குத் திக்கில் எல்லை பவளமலை (சவ்வாதுமலை); வடக்குத் திக்கில் எல்லை வேங்கடமலை; அழகிய கிழக்குத் திக்கில் எல்லை ஒலிக்கும்கடல்; தெற்குத் திக்கில் தென் பெண்ணையாறு (பினாகினி), இவற்றின் இடைமயில் விளங்குவது இருபது காத தொலைவு. அதாவது, இன்றைய ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களை முழுமையாகவும், வேலூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியும், திருவண்ணாமலை மாவட்டத்தின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளும், விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதியும் இச்சதகப்பாடல்கள் கூறும் செய்திகளின்படி, தொண்ட நாட்டைச் சார்ந்தவனவாய் உள்ளன. இதுவே தொண்டை மண்டலம் என உறுதியாகக் கூறுக என்பதைப் பின்வரும் கம்பர் தனிப்பாடல் வரிகள் கூறுகின்றன:
“மேற்குப் பவளமலை; வேங்கடம் நேர்வடக்காம்;
ஆர்க்கும் இவரி அணி கிழக்கு; - பார்க்குள்உயர்
தெற்குப் பினாகி திகழ் இருப தின்காதம்
நல்தொண்டை நாடெனவே நாட்டு”
(கம்பர் தனிப் பாடல்கள்.145)
எல்லீசரின் தமிழ் யாப்பிலக்கணம் (A Facsimile Edition of Ellis’ Treatise on Tamil Prosody) எனும் இந்நூலை ப. மருதநாயகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து பதிப்பித்துள்ளார். இந்நூல் உருவாகுவதற்குத் துணையாய் இருந்தது எல்லீசருடைய ஆங்கிலக் கையெழுத்துப் பிரதியே ஆகும். ப. மருதநாயகம் இப்பிரதியை இலண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து படியெடுத்து வந்து பத்திப்பித்துள்ளார் என்பது சிறப்பிற்குரியதாகும். எல்லீசர் தமது பதினெட்டாம் வயதில் கி.பி. 1796-ஆம் ஆண்டில் இளம் அதிகாரியாக, இந்தியவிற்கு வந்த அவர் 1819-இல் நாற்பது வயதான போதே இறந்தார் என்பது வேதனைக்குரியாதாகும். அந்நூலில் முதல் வெண்பாவில் சேரத்து எல்லைப் பற்றியும், இரண்டாவது வெண்பாவில் சோழத்து எல்லைப் பற்றியும், மூன்றாவது வெண்பாவில் பாண்டியத்து எல்லைப் பற்றியும், நான்காவது வெண்பாவில் தொண்டைநாட்டு எல்லைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் வெண்பாக்களால் அறியலாம்:
முதல் வெண்பா சேரத்து எல்லை
“வடக்குத்தலைமலையும் வைகாவூர்தெற்குக்
குடகதுப் பொருப்பு வெள்ளிக்குன்று
கடற்கரைசூழ்
களிற்றென்றிலையளவுகா வேரிழநாடா
குளித்தென்றிலையளவு கொங்கு”
(மருதநாயகம்,2011:151)
இரண்டாவது வெண்பா சோழத்து எல்லை
“கடல்கிழக்குத் தெற்குக் கரைவரு வெள்ளாறு
குடதிசைக்குக் கொட்டக்கரையாம்
வடதிசைக்கு
யேனாட்டுச் செய்யாறிருபது நாற்காத்து
சோண்நாட்டெல்லை யெனச்சொல்”
(மருதநாயகம்,2011:151)
மூன்றாவது வெண்பா பாண்டியத்து எல்லை
“பாண்டிக்கு மேல் திசையாம் பன்றிமலை கிழகடலாம்
ஆண்டகையாந் தெற்கேயல்லை கடலாம்
நீண்ட
வடதிசைக்கு வெள்ளாறு மால்வழுதி நாட்டின்
இடமதனைச்சொன்னோமினசத்து”
(மருதநாயகம்,2011 :151-152)
நான்காவது வெண்பா தொண்டைநாட்டு எல்லை
“செய்யாறு தெற்குத் திருவேங்கடம்வடக்கு
மையார்கடல் கிழக்கு மானனையீர்
மெய்யாயி
ரிகிரி மேற்குஇரு தொண்டை நாட்டின்
இடமதனைச் சொன்னோம் வகுத்து”
(மருதநாயகம்,2011:152)
எல்லீசருடைய ஆங்கிலக் கையெழுத்துப் பிரதியில் மேலும் சேரநாட்டு எல்லை, சோழநாட்டு எல்லை, பாண்டியநாட்டு எல்லை ஆகியவற்றைக் குறித்துக் காட்டியிருக்கிறார். ஆனால், அதில் தொண்டைநாட்டு எல்லையினைக் குறித்துக் காட்டவில்லை. தொண்டைநாட்டு எல்லையினைச் சோழநாட்டு எல்லையுடன் இணைத்துக் கூறியுள்ளாரோ என்று தெரியவில்லை. இதனை, ப. மருதநாயகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளதைப் பின்வருமாறு அமையும்:
சேரநாட்டு எல்லைக்குறிப்பு வெண்பா
“வடக்குத்திசைபழனிவான் கிழக்குச் செங்கோட்டூர்
குடக்குமது கோழிக் கூட்டாங்
கடற்கரையின்
ஓர்மது வாகவுள்ளெண் பதின்காதஞ்
சேரநாட்டெல்லை யென்று செப்பு” (மருதநாயகம்,2011:152)
சோழ நாட்டெல்லைக்குறிப்பு வெண்பா
“கடற்கிழக்குத் தெற்குக் கரைபிறள் வெள்ளாறு
குடதிசைக்குக் கோட்டைக்கரையாம்
வடதிசைக்கு
ஏணாட்டி னெல்லையிருபத்தினாற்காதஞ்
சோணாட்டினெல்லையென்றுசொல்” (மருதநாயகம்,2011:152)
பாண்டியநாட்டெல்லைக்குறிப்பு வெண்பா
“வள்ளாதறு தெற்காருமேவுகன்னிக்கே வடக்கு
தள்ளா பெருவளிக்குத்தான்கிழக்காம்
அள்ளாதான்
ஆண்ட கடல் மேற்கினை முப்பத்தறுகாதம்
பாண்டிய நாடெல்லைப்பகுதி” (மருதநாயகம்,2011:153)
அழகிய சொற்கள் நிறைந்த தொன்மையான தமிழ்பேசும் நான்கு பேரரசர்கள் விற்றிருக்கும் அவையில் ஒவையார், செந்தமிழ் பாடுகின்ற வேளாளர்கள் தொண்டைநாட்டில் வாழும் சிறப்புடைமையால், வேழம் உடைத்து எனத் தொடங்கும் பாடலைப் பாடிய பின்னும் வஞ்சிவெளிய எனத் தொடங்கும் பாடலையும் பாடினார். இப்பாடல்கள் பாடப்படுவதற்குக் காரணமாய் அமைந்த சிறப்பினை உடையது தொண்டைமண்டலமே ஆகும் என்பதைப் பின்வரும் பாட்டால் உணரலாம்:
“அருசொன் முதுதமிழ் நால்வேந்தர்
வைகும் அவையில் அளவை
செஞ்சொற் புனைகின்ற வேளாளர்
வைகுஞ் சிறப்புடைத்தால்
விஞ்சிய வேழம்உடைத்து என்னும்
பாடல் விளம்பிப் பின்னும்
வஞ்சி வெளிய வெனும்பா
மொழி தொண்டை மண்டலமே”
(தொ.ம.ச.22)
“வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர் கோன்
தென்னாடு முத்துஉடைத்து; தெண்ணீர் வயற்
தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து”
“வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன்றன்
நான்மா டக்கூ டலிற்கல் வலிது
சோழன் உறந்தைக் கரும்பினிது தொண்டைமான்
கச்சியுள் காக்கை கரிது”
இவ்விரு பாடல்களும் காஞ்சித் தொண்டைமானுடைய அவைக்குச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வருகை தர; அந்நான்கு வேந்தர்களையும் புகழ்ந்து ஒவையார் பாடிய பாடல்களாகும். முதற்பாட்டில் வேழம் உடைத்து மலைநாடு, சோழவளநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோர் உடைத்து எனப் புகழப்பட்டிருப்பது தெரிகிறது. இரண்டாவது பாடலில் சேரநாட்டில் பிற வளங்களுடன் வஞ்சிக்குப் புறத்தே பறவைகள் மிகுதியாக உள்ளன. பாண்டிய நாட்டில் மாணிக்கக்கற்கள் வலிமையாக உள்ளனவே அன்றி மக்கள் மனம் இளகியதாய் உள்ளது. சோழநாட்டில் மருத வளத்தால் கரும்பு மிக இனியது அல்லது கரும்பைப் போல அந்நாட்டு மகளிர் இனியர்; தொண்டைநாட்டில் காக்கை கருமை நிறமுடையதே அன்றி மக்கள் வஞ்சகம் நுதலிய கருங்குணங்கள் இல்லாதவர்கள் என்பதை விளக்குகிறது. ஒவையாரின் இவ்விரு பாடல்களும் தொண்டை நாட்டின் சிறப்புகளைக் கூறுகின்றன
(இராமமூர்த்தி,2011:33 - 34)
நெடுங்காலத்திற்கு முன் தொண்டைநாடு ‘குறும்பர் நிலம்’ என்று பெயர் பெற்றிருந்தது. குறும்பர், தம் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு அங்கு காலம் கழித்தனர். அவர்களே தங்கள் நாட்டை 24 கோட்டங்களாக வகுத்தனர். காவிரிப் பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வாணிகம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்டசக்கரவர்த்தி என்பவன் இக்குறும்பரை வென்று குறும்பர் நாட்டைக் கவர்ந்து அதற்குத் தொண்டைமண்டலம் எனப் பெயரிட்டனன் என்று செவிவழிச் செய்தி கூறுகிறது. தமிழ் நூல்கள் கரிகாற்சோழன் அந்நாட்டைக் கைப்பற்றினான் என்றும், பின்னர் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டுக் கடல் வழி வந்த நாகர் மகள் மகனான இளந்திரையன் ஆண்டதால் தொண்டைமண்டலம் எனப் பெயர் பெற்றது என்றும் கூறுகின்றன. இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் உயர் அலுவலாளராக இருந்த தொண்டைமண்டல அறிஞரான சேக்கிழார்பெருமான், வல்லார்வாய்க் கேட்டுணர்ந்த செய்தி ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது கரிகாலன் இமயம் செல்லும் பொழுது வேடன் ஒருவன் எதிர்ப்பட்டுக் காஞ்சி நகரத்தின் வளமையைக் கூற, அப்பேரரசன் அந்நகரத்தைத் தனதாக்கிக் குன்று போன்ற மதிலை எழுப்பிப் பலரைக் குடியிருத்தினான் என்பது முதற் குலோத்துங்கன் காலத்து நூலாகிய சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி கூறுகிறது. இங்ஙனம் வரும் செய்திகளில் ஓரளவு உண்மையேனும் இருத்தல் வேண்டும் அன்றோ? சோழ மன்னர்களுள் கரிகாலன் ஒருவனே பெருவீரனாக இருந்தான் என்பது இலக்கியங்களும் பட்டயங்களும் எடுத்துக்காட்டும் உண்மை. பிற்காலத் தெலுங்குநாட்டுச் சோழரும் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று கூறிக் கொண்டனர் என்பதிலிருந்து கரிகாலன் ஆட்சி ஆந்திரநாடுவரை பரவி இருந்தது தெளிவன்றோ? அந்தச் சோழ மரபினர் எங்கள் முன்னவனான கரிகாலன் போர் வன்மையை என்ன என்பது கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. எனவே, இதுகாறும் கூறிய செய்திளால், கரிகாற்சோழன் காலத்தில் தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளுதல் தவறாகாது. கரிகாலன் காலம் முதல் பல்லவர் கைப்பற்றும் வரை தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியிற்றான் இருந்தது என்பதை இதுகாறும் எந்த ஆராய்ச்சியாளரும் மறுத்திலர். ஆதலின், கரிகாலன் காலத்தைக் கண்டறிவோமாயின், அக்கால முதல் எத்துணை நூற்றாண்டு தொண்டைமண்டலம் சோழர் ஆட்சியில் இருந்தது. என்னென்ன நலன்களைப் பெற்றது என்பன அறிய இடமுண்டாகும். வடநாடு சென்ற தமிழர் பலராவர். அவருள் ஒருவன் காரிகாலன், வேறு ஒருவன் செங்குட்டுவன். இவ்விருவர் காலங்களும் கடைச்சங்கத்தையும் தொண்டைமண்டலத்தையும் பொதுவாகத் தமிழக நிலையையும் பல்லவர்க்கு முற்பட்ட இந்தியநாட்டு வரலாற்று நிலையையும் அறியப் பேருதவி புரிவன
(இராசமாணிக்கனார், 2008:4-6)