இளங்கிள்ளி காலத்தில் தொண்டைநாடு நெல்லூர்க்கோட்டத்தில் உள்ள பாவித்திரி (இரெட்டிபாளையம்) வரை பரவியிருந்தது. அங்குக் கிடைக்கும் பட்டயங்கள் அப்பகுதியைக் கடல் கொண்ட காகந்திநாடு என்று கூறுகின்றன. நகிரி மலைகளைச் சார்ந்த குறிஞ்சிப்பகுதி தொண்டைமண்டலத்தின் வட எல்லையாகும். அந்தப் பகுதியில் வடக்கே இருந்த சாதவாகனர்க்கும் (ஆந்திரர்) தொண்டை மண்டலத்தை ஆண்ட சோழர்க்கும் எப்பொழுதும் எல்லைப் பூசல்கள் இருந்து வந்தன. எனவே, அப்பகுதி வன்மை குன்றிய பகுதியாகும். அப்பகுதியில் இளங்கிள்ளி காலத்தில் சேரனும் பாண்டியனும் பெரும்படையோடு வந்து போரிட்டனர். காரியாறு (காலேரு - தெலுங்கில்) என்னும் ஆற்றங்கரையில் இளங்கிள்ளி அவர்களை முறியடித்தான். இந்தப் பலம் குன்றிய வட எல்லையே, சாதவாகனப் பேரரசில் தென்கிழக்கு மாகாணத் தலைவராக இருந்த பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றப் பேருதவி செய்ததாகும். இந்த இளங்கிள்ளியின் ஆட்சி ஏறக்குறையக் கி.பி.200 வரை இருந்துள்ளது எனலாம்.
மணிமேகலை என்னும் காவியத்திலிருந்து பெருங்கிள்ளி காலத்தில் புகார் கடல் கொண்டது என்பதை அறியலாம். அங்கிருந்த அறவண அடிகள் முதலிய பெளத்தரும், சான்றோரும் பிறநாடு புக்கனர் என்பதால் சோழர் தலைநகரமும் உறையூருக்கு மாறி இருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இந்நிலையில் இளங்கிள்ளிக்குப் பின் தொண்டை நாட்டை ஆண்ட சோழ அரசில் தலைவன் வன்மையற்றவனாக இருந்திருக்கலாம். மேலும் வடவர் படையெடுத்த பொழுது தலைநகரை இழந்து வருத்த நிலையில் இருந்த சோழ வேந்தன் உடனே தக்க படைகளை உதவிக்கு அனுப்ப முடியாமல் இருந்திருக்கலாம். அல்லது உறையூரிலிருந்து படைகளை அனுப்ப முடியாது தவித்திருக்கலாம். இன்ன பிற காரணங்களால் ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.மு.60 - கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு உட்பட்டு இருந்த தொண்டைமண்டலம் கி.பி.3-ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது. மணிமேகலையை நன்கு ஊன்றிப் படிப்பவர், கி.பி 2-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் வலிகுன்றத் தொடங்கிய செய்தியை நன்கு உணரலாம்
( இராசமாணிக்கனார், 2008 : 14 - 15) தொண்டைமான் இளந்திரையன் காஞ்சிமாநகரைத் தலைமை இடமாகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மூத்த குடிகளும் தொண்டை நாட்டை ஆண்டு வந்துள்ளனர். எனவே, அவர்களைத் தொண்டையர் குடியினர் என்றும், தொண்டையர் எனவும், தொண்டைமான் குடியினர் என்றும், தொண்டை நாட்டு வேந்தர்கள் என்றும், கச்சியர் எனவும், கச்சிவேந்தர்கள் என்றும் கூறுவதை இலக்கியச் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. தொண்டை நாட்டிற்கு, வடக்கு எல்லை வேங்கடமலையாகும். தமிழ் வழங்கும் உலகத்திற்கும் வேங்கடமலை வடஎல்லையாகும் என்பது வரலாற்றுச் சான்றாகும்.
தமிழகம் சங்ககாலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரையில் பல்வேறு அரசாட்சிக்கு உட்பட்ட நாடாக இருந்துள்ளது. வரலாற்றுக் காலக்கட்டங்களில் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பண்டையத் தமிழகம் பன்னிரு நிலங்களாகப் பிறிந்திருந்தது போலவே பிற்காலத்திலும் தமிழகம் தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், மலை மண்டலம், கொங்கு மண்டலம் என்று வழங்கப்பட்டு வந்துள்ளது. தொண்டை மண்டலம் என்பது 20 காதவட்ட எல்லையினையுடையது. 24 கோட்டங்களையும், 79 உட்கோட்டங்களையும் கொண்டது. இது பல நூற்றாண்டுகளாகச் செயங்கொண்ட சோழமண்டலம் என்று வழங்கப்பட்டு வந்துள்ளது. இம்மண்டலத்தில் இருந்த 24 கோட்டங்களுள் ஒன்று எயிற்கோட்டம். அதில் இருந்தது எயில்நாடு. இது செயங்கொண்ட சோழமண்டலத்து, எயிற்கோட்டத்து, எயிற்நாட்டுத் திருவத்தியூர் என்று S.I.I.1- 187-இல் குறிக்கப்பட்டுள்ளதால் விளங்கும். முதலாம் இராசராசனது புகழ்ப் பெயரால் செயங்கொண்ட சோழமாண்டலம் என முன்பு வழங்கி வந்தது. காஞ்சிபுரம் எயிற்கோட்டத்து முக்கிய தலைநகரம். இது சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் சமணர்களுக்கும் பெளத்தர்களுக்கும் அவ்வப்போது கோட்டைபோல் விளங்கியது.
பின்னர் விசயநகர மன்னர்கள் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்தனர். இங்கு 283 க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. வையம் பெறினும் பொய் சொல்ல மாட்டார் தொண்டை நாட்டினர் என்ற புகழ் படைத்தவர்கள் தொண்டைநாட்டு மக்கள். ஒரு காலத்தில் ஒரு வணிகனுடைய உயிரைக் காப்பதற்காக, இம்மண்டலத்தில் உள்ள பழையனூர் வாழ்வேளாண்குடிமக்கள் எழுபதின்மர், தம் உயிரைக் கொடுத்தனர் என்றொரு பழைய வரலாறு கூறுகின்றது. காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டுக்கு ஈசனைக் (சிவபெருமானை) காண வருகின்ற பொழுது தொழுதாவூரில் எழுந்தருளி உள்ள மிகவும் பழமையான ஆதிகும்பேஷ்வரரை (சிவபெருமானை) வணங்கிவிட்டுத் திருவாலங்காட்டுக்குச் சென்றார். காரைக்கால் அம்மையார் ஆதிகும்பேஷ்வரரை (ஆதிஈசனை) தொழுத காரணத்தினால், அவ்வூருக்குத் தொழுதவூர் என்று காரணப்பெயராக அமைந்துள்ளது. இது, இப்பொழுது தொழுதாவூர் என்று மருவி, தமிழக வரலாற்றிலும் தமிழகப் பத்திரப்பதிவுத்துறையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வூர்மக்கள் (தொண்டைநாட்டு மக்கள்) தொழுதாவூரில் வீற்றிருக்கின்ற கடவுள் ஆதி ஈசனை, தொண்டைநாட்டுத் தொழுதாவூர் உடைய ஆதி ஈசனே போற்றி என்று தொடக்கக்காலம் தொட்டு வழிபட்டுக் கொண்டு வருகின்றனர். இக்கோவிலில் ஏழு சால் பொற்காசுகள் புதைத்து வைத்திருப்பதாகச் செவிவழிச்செய்தி இங்குக் கூறப்பட்டுவருகிறது. தொழுதாவூருக்குப் அருகில் உள்ள ஊர் பழையனூராகும். தொழுதாவூரும் பழையனூரும் ஒரே நிலப்பகுதியைச் சார்ந்த ஊர்களாகும். காரைக்கால் அம்மையார் கி.பி.6-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராவர் என்பது குறிப்பிடத்தக்கவொன்றாகும். காரைக்கால் அம்மையார் கி.பி.6-ஆம் நூற்றாண்டு எனும்போது தொழுதாவூர், பழையனூர், திருவாலங்காடு ஆகிய ஊர்கள் மிகவும் பழைமையான தொன்மையான ஊர்கள் என்பதும் பக்தி இயக்கம் தோன்றுவதற்கும் பரவுவதற்கும் இவ்வூர்கள் முன்னோடியாக இருந்துள்ளன என்பதும் காரைக்கால் அம்மையாரும் முன்னோடியாக இருந்துள்ளார்கள் என்பதும் இங்குக் புலனாகின்றது. இதற்குக் காரைக்கால் அம்மையார் இயற்றிய திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகம் சான்றாக அமைகிறது. பல்வேறுபட்ட குடிமக்கள் சிறப்போடு பெருகி வந்திருந்த போதிலும் மேற்கூறியபடி உயிரையும் தரவல்ல வேளாளர்கள் அக்காலத்தில் அன்பு, அடக்கம், பண்பு, ஒழுக்கம் இரக்கம், வாய்மை, தூய்மை, கொடை, பொறை முதலான எல்லாக் குணங்களும் பெற்றிருந்த காரணத்தால்தான் கரிகாற்பெருவளத்தான் இவர்களைத் தொண்டைமண்டலத்தில் குடியேறச்செய்து சிறப்புச்செய்தான் என்று எண்ண முடிகிறது.
தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32 உம் இன்றும் தொண்டைநாட்டுத் திருத்தலங்கள் என்ற பெயராலேயே வழங்கப்படுகின்றன. மலைகள்: திருவேங்கடம், திருத்தணி, திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம் முதலியன சிறந்தவையாகும். ஆறுகள்: பாலாறு, செய்யாறு, தென்பெண்ணையாறு, ஆரணியாறு, நிவா, கூவம், அடையாறு முதலியவையாகும்
(பாலுசாமி, 2009 : 919 - 920) பிற்காலத் தொண்டைமண்டல வரலாற்றில் அந்தணர் ஆதிக்கம் மிகுந்து திகழ்ந்திருக்கிறது. அந்தணர்கள் சமயக்கோட்பாட்டில் அரசக்குடி மரபினரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருந்தனர் எனக் கருதமுடியும்.
தொண்டைநாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் முப்பத்திரண்டாகும். கயிலை மலைதான் எனப்போற்றப்படும் 1. திருக்காளத்தி, 2. திருக்கச்சி ஏகம்பம், 3. கூவம், 4. திருக்கழுக்குன்றம், 5. நாம் பயிலும் வண்ணம் சிவபெருமான் குருவாக அறியுரை கூறும் பாடி 6. திருப்பாசூர், 7. அச்சிறுபாக்கம், 8. திருவேற்காடு, 9. திருவல்லம், 10. திருவொற்றியூர், 11. ஒழிந்தியாபட்டு, 12. மயிலாப்பூர் முதலிய முப்பத்திரண்டு தலங்களில் மகிழ்ச்சியுடன் எழுந்தருளி அருள்புரியும் சிறப்பினை உடையது தொண்டைமண்டலம் என்பதைப் பின்வரும் பாடல் குறிக்கிறது:
“கயிலையும் கச்சியும் விற்கோல்
அமுநற் கழுக்குன்றமும்
பயில்வலி தாயமும் பாசூரும்
அச்சிறு பாக்கமுநல்லு
அயிலையிம் வல்லந் திருவொற்றி
யூரு மரசிலியு
மயிலையும் ஈசன் மகிழ்ந்ததன்று
ஓர்தொண்டை மண்டலமே”
(தொ.ம.ச.3)
மேலும் எஞ்சிய இருபது சிவத்தலங்கள் பின்வருமாறு:
1. திருக்கச்சி மேற்றளி, 2. திரு ஓண காந்தன் தளி 3. திருக்கச்சி அநேக தங்காபதம், 4. திருக்கச்சி நெறிக்கரைக்காடு, 5. திருக்குரங்கணில் முட்டம், 6. திருமாகரல், 7. திருவன்பார்த்தான் பனங்காட்டூர், 8. திருமேல்பேறு, 9. திருவூறல், 10. திரு இலம்பயங்கோட்டூர், 11. திருவாலங்காடு, 12. திருவெண்பாக்கம், 13. திருக்கள்ளில், 14. திருமுல்லைவாயில், 15. திருவோத்தூர், 16. திருவான்மியூர், 17. திருக்கச்சூர் ஆலக்கோயில், 18. திருஇடைச்சுரம், 19. திருவக்கரை, 20. திருஇரும்பை மாகாளம்.
தொண்டைமான் இளந்திரையனும் அவனுடைய முன்னோர்களும் தொண்டை நாட்டை வழிவழியாக ஆட்சிசெய்து வந்துள்ளனர். அவர்களுடைய நாட்டு எல்லைப்பகுதி திருவேங்கடமலைப் பகுதியினை எல்லையாக உடையதாகும் என்பதை,
“வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழும் ஏற்றுஅரு நெடுங்கோட்டு
ஓங்குவெள் அருவி வேங்கடத்து உம்பர்”
(அகம்.213:1-3)
என்ற அகநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. இப்பாடல் வேங்கடமலை தொண்டையர் என்னும் இனமக்களுக்கு உரியது. தொண்டை நாட்டின் வடக்குப் பகுதி. தொண்டையர் குடியினர் பன்னெடுங்காலமாக ஆண்டு வந்துள்ளனர் என்பதைக் காட்டி நிற்கிறது. மேலும் வெல்லும் வேலுடைய திரையனது உயர்ந்த வேங்கடமலை என்பதை,
“வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை”
(அகம்.85:9)
என்ற பாடல் குறிக்கிறது. வேங்கடமலை வரையில் தமிழ்மொழி வழக்கில் இருந்துள்ளது. அதற்கு அப்பால் வேற்றுமொழி வழங்கும் நாடு இருந்துள்ளதை,
“பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்”
(அகம்.211:7-8)
என்ற அகநானூற்றுப் பாடல் குறிக்கிறது. தொண்டைநாட்டிற்குத் தெற்கு எல்லைப்பகுதி தென்பெண்ணை ஆறாகும். இந்த ஆற்றைச் சங்க இலக்கியங்களில் பவத்திரி என்னும் ஊரில் தென்பெண்ணை ஆறு பாய்வதாகக் கூறும். இதற்குத் தென்னெல்லை தென்பெண்ணையாறு என்பதை,
“செல்லா நல்இசை பொலம்பூண் திரையன்
பல்பூங் கானல் பவத்திரி அன்னஇவள்”
(அகம்.340:6-7)
என்ற அகநானூற்றுப் பாடல் காட்டுகிறது. இதற்கு வடஎல்லை வேங்கடமலையும் தென்னெல்லை தென்பெண்ணையாறும் மேற்கெல்லை வடார்க்காட்டையும் சேலமாநாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாகும் என்பது கல்வெட்டுக்களால் அறிகிறோம்
(ஒளவை. சு. துரைசாமிபிள்ளை,2007:403) ஒளவையார் மூவேந்தர்களைப் பற்றிக் கூறும்போது, தொண்டை நாட்டின் சிறப்புகளையும் மிகச்சிறப்பாகக் கூறியுள்ளார். இவர் வேழமுடைத்து மலைநாடு மேதக்க, சோழவளநாடு சோறுடைத்து, பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து என்று புகழ்ந்து கூறியுள்ளார். அக்காலத்தில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் ஆட்சி செய்திருந்தார்கள். அக்காலத்தில் சேரநாடு தமிழ்நாடாக இருந்தது. மூவேந்தருக்குக் கீழடங்கி, குறுநில மன்னர்களாகிய சிற்றரசர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு அக்காலத்தில் வேளிர் அல்லது வேளரசர் என்பது பெயர். அக்காலத்தில் தமிழகம் சோழநாடு, பாண்டிநாடு, சேரநாடு, துளுநாடு (கொங்கணநாடு), தொண்டைநாடு (அருவாநாடு), கொங்கு நாடு என்று ஆறு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. சேர, சோழ, பாண்டி நாடுகளை முடியுடைய பேரரசர் மூவர் அரசாண்டனர். கொங்கண நாடாகிய துளு நாட்டை நன்னர் என்னும் பெயருடைய வேளிர் அரசாண்டனர். கொங்கு நாட்டுக்கும் தொண்டைநாட்டுக்கும் பேரரசர் (முடிமன்னர்) அக்காலத்தில் இல்லை. கொங்கு நாட்டையும் தொண்டைநாட்டையும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் கடைச்சங்ககாலத்தின் இறுதியில் (கி.பி.2-ஆம் நூற்றாண்டின் மத்தியில்) மாறுதல் ஏற்பட்டது.
(வேங்கடசாமி, 2003: 15) பாண்டிநாடு தமிழகத்தின் தெற்கே, வங்காளக்குடாக்கடல், இந்துமா கடல், அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களுக்கிடையே இருக்கிறது. பாண்டி நாட்டுக்கு வடக்கே, வங்காளக்குடாக்கடல் ஓரமாகச் சோழநாடு இருக்கிறது. சோழநாட்டுக்கு வடக்கே வங்காளக்குடாக் கடலையடுத்துத் தொண்டைநாடு இருக்கிறது. தொண்டைநாடு வடபெண்ணை ஆறு வரையில் இருந்தது. இவ்வாறு துளு நாடும் சேரநாடும் பாண்டியநாடும் சோழநாடும் தொண்டைநாடும் கடற்கரை ஓரங்களில் அமைந்திருந்தன. ஆறாவது பிரிவாகிய கொங்குநாடு கடற்கரை இல்லாத உள் நாடாகும்.
(வேங்கடசாமி, 2003: 212)
கடைச்சங்க காலத்தில் இறுதியில் இருந்தவர் கல்லாடனார் எனும் புலவர். இவர் பரணர் கபிலர் ஆகியோர்களுக்குப் பிறகு இருந்தவர். இவருடைய குடும்பத்தினரும் வேங்கடமலைக்கு அப்பால் வேங்கடநாட்டில் இருந்தார்கள் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார் (2001: 161). பொறையாற்றுக்கிழான் என்னும் குறுநில மன்னனைப் பாடிய இப்புலவர் தமது ஊரில் வற்கடகம் நேர்ந்து பசி கூர்ந்த படியினால் தமது சுற்றத்துடன் தெற்கே வந்ததாகக் கூறுகிறார். இதனைப் பின்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன:
“வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந்து இறுத்த என் இரும்போர் ஒக்கல்”
(புறம்.391:7 - 8)
இவர் தமது செய்யுட்களில் வேங்கட நாட்டையாண்ட புல்லி என்னும் அரசனைக் கூறுகிறார். புல்லியனுடைய போர்வீரர்கள் யானைக் கன்றுகளைப் பிடித்து வந்து தங்கள் ஊர்கள்ளுக்கடையில் கொடுத்து அதற்கு விலையாகக் கள்ளைக்குடித்து மகிழ்ந்த செய்தியைக் கூறுகிறார். இதனைப் பின்வரும் அகநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன:
“வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
சுரிஆர் உளைத்தலை பொலியச் சூடி
கறைஅடி மடப்பிடி கானத்து அலறக்
களிற்றுக்கன்று ஒழித்த உவகையர் கலிசிறந்து
கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து
பெரும்பொளி வெண்நார் அழுந்துபடப் பூட்டி
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
நறவுநொடை நல்இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம்”
(அகம்.83:1 - 10)
இவர் பொருள் சேர்ப்பதற்காக வெளிநாடு சென்ற ஒருவன் வேங்கடமலையைக் கடந்து அப்பால் உள்ள நாட்டுக்குச் சென்றதைக் கூறுகிறார். அவ்வாறு கூறுகிறவர் புல்லியையும் கூறுகிறார். இதனைப் பின்வரும் அகநானூற்றுப் பாடலடிகள் விளக்குகின்றன:
“மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்”
(அகம்.209: 8 - 9)
இப்புலவர் சோழநாட்டுக் காவிரிக்கரையிலிருந்த அம்பர் என்னும் ஊரின் அரசனான அருவந்தையிடம் சென்றார். அவ்வள்ளல் இவரை ஆதரித்து விருந்தளித்தான். இப்புலவர் அவனைப் புகழ்ந்து வாழ்த்தினார். இவர் வேங்கடநாட்டு அரசன் புல்லியினுடைய வேங்கடமலையில் பொழியும் மழைத்துளிகளை விட அதிக காலம் வாழ்வாயாக என்று வாழ்த்தித் தன்னுடைய நாட்டையும் தன்னுடைய அரசனையும் நினைவு கூர்கிறார். இதனால் இவருடைய நாட்டுப்பற்றும் அரசபக்தியும் விளங்குகின்றன. இவர் அம்பர் கிழான் அருவந்தையைப் பற்றிப் பாடிய புறநானூற்றுச் செய்யுட்பகுதியைப் பின்வருமாறு காணலாம்:
“வறன்யான் நீங்கல் வேண்டி என்அரை
நீல்நிறச் சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அருவந்தை வாழியர் புல்லிய
வேங்கட விறல்வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே”
(புறம்.385: 5 - 12)
தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற வேங்கடமலை தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற தொண்டை நாட்டிற்கும் வட எல்லையாக விளங்கிக் கொண்டிருப்பதைப் பக்தி இலக்கியங்கள் காட்டுகின்றன. இலக்கியச் சான்றுகள் பின்வருமாறு:
திருப்பாணாழ்வார் அருளிய ‘அமலன் ஆதிப்பிரான்’ என்னும் பாசுரத்தில் திருப்பதி மலையை ‘வடவேங்கட மாமலை’ என்று கூறினார். இதற்கு உரை கூறுவது வருமாறு: ‘வடவேங்கிடம் - தமிழ் தேசத்துக்கு எல்லை நிலம்’ பெரியவாச்சான் பிள்ளை உரை. ‘திருமலை என்னாதே வடவேங்கடம் என்றது. தமிழர் தமிழுக்கு எல்லை நிலம் அதுவாகச் சொல்லுகையாலே’ அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் உரை. திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி முதற் பத்தின் 8-ஆம் திருமொழியில் ‘செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே’ என்று அருளியதற்கு மேற்கண்டவாறே பெரியவாச்சான் பிள்ளை உரை அருளியிருக்கிறார். அதாவது: ‘தமிழ்ப் பாழை நடமாடுகிறதுக்கும் எல்லையான நிலமாயிருக்குமிறே’ (பாழை - மொழி அல்லது பாஷை). இதனால், அக்காலத்தில் திருவேங்கட மலையும் அதனைச் சார்ந்த நாடும் தமிழ் நாடாக இருந்தது என்பது தெரிகின்றது. பிற்காலத்தில் முகம்மதிய அரசர் விசயநகர அரசரை வென்றபிறகு திருவேங்கடத்தில் தெலுங்கர் வந்து குடியேறினர் என்பது வரலாறாகும்.
(வேங்கடசாமி,2001:44)
தொல்காப்பிய இலக்கண நூலில், வேங்கடமலை தமிழகத்தின் வட எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சரியான வடஎல்லை, வேங்கடத்துக்கு அப்பால் உள்ள வடபெண்ணையாற்றின் தென்கரையாகும். வடபெண்ணை ஆற்றிலிருந்து அக்காலத்துத் தமிழ்நாடு தொடங்கியது. இதற்குச் சில சான்றுகள் உள்ளன. கல்லாடனார் வேங்கடமலைக்கு வடக்கில் ஓர் ஊரில் இருந்தவர் என்பதே இதற்குரிய சான்றுகளில் ஒன்றாகும். கல்லாடனார் என்னும் இப்புலவர் பெயரை நோக்கும்போது இப்பெயர் இவருடைய இயற்பெயராகத் தோன்றவில்லை; ஊர்ப்பெயராகத் தோன்றுகிறது. கல்லாடம் என்பது இவர் இருந்த ஊரின் பெயராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
(மயிலை சீனி வேங்கடசாமி,2001:162) இப்புலவர் தமிழ்நாட்டின் வடக்கே எல்லைப்புற நாடாக இருந்த பாணன்நாடு என்பது வாணாதியரையர் ஆண்டநாடு. இந்நாட்டுக்கப்பால் வடுகநாடு இருந்தது. அஃதை என்பவனுக்குரியதும் கோசர் இருந்ததுமான நெய்தலஞ்செறு என்னும் ஊரைக் கூறுகிறார்.
(அகம்.113:3-6) இந்த நெய்தலஞ்செறு துளு நாட்டில் கடற்கரையோரமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தொண்டையோர் வாழ்ந்த தொண்டைநாட்டைக் கூறுகிறார்.
(குறு.60:5-6) வேங்கடமலையைத் திருமாலுக்கு ஒப்பிடுகிறார். விண்டு வனைய விந்தோய் பிறங்கல்
(புறம்.3:1-2) எனவே, இவர் காலத்திலே வேங்கடமலையில் விண்டு (விஷ்ணு - திருமால்) இருந்தார் எனச் சுட்டிக்காட்டுகிறார்
(மயிலை சீனி. வேங்கடசாமி,2001:165)