பாரதியின் என்றும் ஏற்புடைய சிந்தனைகள்
முனைவர் மா. தியாகராஜன்
பாரதியின் சிந்தனைகள் நேற்றோடும் காற்றோடும் கரைந்து போகக்கூடியவை அல்ல. கடலும் மலையும் உள்ள வரை, வானும் மண்ணும் உள்ள வரை நிலைத்து நின்று மானுட சமுதாயத்திற்கு வழிகாட்டுவன.
"பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேண்டும்"
- என்ற அவா கொண்டவன் பாரதி. தான் வாழ்ந்த காலத்தில் மொழியை, கலையை, கலாச்சாரத்தை, மக்களைத் தன் தோளில் சுமந்தவன். அதனால் தான் நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலமும்அவனை நினைத்துக் கொண்டே இருக்கிறது. அவனது சிந்தனைகள்
"வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்,
சந்திர மண்டலத்தியல் கண்ட தெளிவோம்"
- என்ற அறிவியல் நோக்காகும்.
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்"
- என்ற சமூக நோக்கும் கொண்டவையாக இருந்தன.
"பயிற்றிப் பல கல்வி தந்து இப்பாரினை உயர்த்திட வேண்டும்"
- என்ற முற்போக்கு சிந்தனையாளன் அல்லவா அவன்? ஆதலால் இன்றையச் சூழலில் பாரதியின் சிந்தனைகள் முழுமையாக ஏற்புடையவையே.
அறிவியல் சிந்தனை
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"
- எனும் வள்ளுவன் வழியில் எதையும் நுணுகிப்பார்க்கும் அறிவியல் பார்வையுடையவன் பாரதி. வானில் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய "தூமகேது" எனும் வால் நட்சத்திரம் பற்றிப் பலரும் பலவாறாகக் கருத்துக் கூறி வருகிறார்கள். பூமிக்கு ஆபத்து என்று சிலரும் பூமிக்கு நன்மை கிடைக்கும் என்று சிலரும் கூறுகின்றனர்.
"வாராய் சுடரே வார்த்தை சில கேட்பேன்
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றான் பொய்யோ மெய்யோ?"
என்றும்
"ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒருமுறை
மண்ணை நீ அணுகும் வாக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகைள்
விளையு மென்கின்றார், மெய்யோ, பொய்யோ?"
(பாரதி கவிதைகள் தனிப்பாடல் சாதார வைருசத்து தூமகேது பற்றிய பாடல்)
வானத்தில் நமைபெறும் மேகங்களின் மாற்றங்களால் பூமியின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும். இது பருவ நிலையோடு கூடிய அறிவியல் மாற்றமாகும். இதனை நாம் இன்று காணுகின்ற சூழல் ஏற்படுகிறது. இதனை பாரதியார் அன்றே மெய்யா? பொய்யா? என்ற வினாவின் மூலம் தெளிவு படுத்துகிறார்.
"அறிவினை வளர்த்திட வேண்டும் மக்கள்
அத்தனை பேர்க்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தல் பின்பு
தெய்வம் எல்லோரைப்ம் வாழ்த்தும்"
(பாரதியார் கவிதைகள், முரசு என்ற தலைப்பில் உள்ளது)
அறிவை வளர்த்திட வேண்டும் என்பதிலே பாரதி காட்டுகின்ற ஆர்வம் நம்மையெல்லாம் வியக்க வைக்கிறது. அறிவு மேம்மபாடு அடைந்தால் தான் ஏற்றத்தாழ்வுகள் மறையும் என்ற பாரதியின் சிந்தனை எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவது அல்லவா?
தொலைத் தொடர்புச் சிந்தனைகள்
கவிஞன் சராசரி மனிதனிலிருந்து வேறுபட்டவன். முக்காலத்தையும் உணர்ந்த முனிவர்களினும் கவிஞன் உயர்ந்தவன் பாரதி மகாகவி. அவனது சிந்தனைகள் எப்போதும் புதுமையை நாடியே சென்றன. புழுவின் உடலில் புலியின் வீரத்தைப் பாய்ச்சியவன் பாரதி. தேடிச் சோறு தின்று வாழ்வைக் கழித்தவன் அல்லன். சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது என்ற அறிவியல் நாட்டம் கொண்டவன் பாரதி.
"காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்"
- என்ற பாரதியின் சிந்தனை தான இன்று செல்லிடப் பேசியாக (Hand Phone) வடிவமைத்து உலகையே கைக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறது.
வானியல் சிந்தனை
"சந்திர மணடலத்தியல் கண்ட தெளிவோம்
சந்தி தெரு பெம்க்கும் சாத்திரம் கற்போம்"
- என்ற பாரதியின் சிந்தனை வானியல் அறிவை விளக்கும். இன்று (2007) சுனிதா வில்லியம்ஸ் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் செய்த சாதனை பாரதியின் அறிவியல் சிந்தனையின் தொடர்ச்சியாகும்.
சுற்றுச் சூழல் சிந்தனை
"சந்தி தெருவெங்கும் சாத்திரம் கற்போம்"
- என்ற பாரதியின் சிந்தனை தான். சுற்றுப்புறச் சூழலில் இன்று சிங்கப்பூர் உலக நாடுகளுக்கே எடுத்துக் காட்டாக விளங்கக் காரணம் என்று கூறலாம். காவியம் செய்வோம்; நல்ல காடு வளர்ப்போம்; என்ற பாரதியின் அறிவியல் சிந்தனை என்றைக்கும் பொருந்தக் கூடியது அல்லவா?
தொழில் சிந்தனை
"ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்"
- என்ற பாரதியின் புதிய சிந்தனையை அமெரிக்கா பின்பற்றியது. அதனால்தான் இன்று வங்கக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் அணுசக்தி கப்பல்கள் (4.7.2007) உலகையே வியக்க வைக்கிறது.
"உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"
என்ற பாரதியின் சிந்தனை எல்லார்க்கும் பொருந்தக் கூடிய அறிவியல் சிந்தனையாகும்.
பெண்ணியச் சிந்தனை
பாரதி இந்தியப் பெண்களின் நிலையை எண்ணியே கவிதை பாடினான். ஆனால் அது உலகப் பெண்களின் மேன்மைக்குத் துணை செய்தது. "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டில்" என்றான் பாரதி. இன்று முப்பத்து மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு அரசியல் சட்ட ரீதியாகக் கிடைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை இந்திய நாடாளுமன்றததில் வலிமையாக எழுப்பப்பட்டு வருகிறது.
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சமமாகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினான் பாரதி,
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
- என்று பாடிய பாரதியின் சிந்தனை தான் இன்று இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெண் வேட்பாளராகக் கவரக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது என்று கூறலாம். மேலும்
"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா
என்றும் வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா,
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயிற் பிறகொரு தாழ்வில்லை"
-என்று பாரதி பெண்ணியச் சிந்தனையின் முன்னோடியாகத் திகழ்கின்றான். இவை பெண்மை நலங்காக்கும் இன்றைபூச் சூழலில் ஏற்புடையவையே ஆகும்.
தேசியச் சிந்தனை
"பாரதநாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவ கற்றாதீர்"
- என்ற பாரதியின் தேசியச் சிநதனை எல்லா நாட்டவர்க்கும் வேண்டும்.
"முப்பது கோடி முகமுடையாள்
மொய்ம்புற வொன்றுடையாள்- இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள்எனிற்
சிந்தை ஒன்றுடையாள்"
- எனும் வரிகள் ஒரு தேசத்தில் பிறந்த யாவருக்கும் இருக்க வேண்டிய தேசப்பற்றையும், ஒருமைப்பாட்டையும் தெளிவாக உணர்த்திக் காட்டுகிறது.
இன்று நதிநீர்ப் பங்கீடு என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவுள்ளது. இதற்காகத் தான் பாரதி அன்றே
"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்"
- என்று யோசனை தெரிவித்தார்.
பாரதியின் சிந்தனையை நாம் ஏற்றிருந்தால் இன்று இந்தியாவின் வடக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டப் பல நகரங்கள் முழ்கும் சூழல் ஏற்பட்டிருக்காது. தமிழ் மண்ணில் பிறந்த பாரதி தேசியத்தின் குரலாக ஒலித்தான்; அவனது தேசியச் சிந்தனை என்றும் தேவைப்படுகிறது.
மனித நேயச் சிந்தனை
மனிதநேயம் என்பது வேண்டியவர், வேண்டாதவர், தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் உற்ற நேரத்தில் உரிய வகையில் கைம்மாறு கருதாமல் உதவும் மனப்பாங்கே என்பர். ‘மனிதர்கள் தனக்குத் தேவையென்பதைச் சொல்லுவதற்கு முன்பே அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு உதவ முன்வரவேண்டும்’ என்பதை வேதாந்தரி மகரிஷி வலியுறுத்துகிறார்.
பாரதி மனித நேயத்தின் மறுவடிவாய் விளங்கியவன்
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும மனிதருக் கெல்லாம்"
- என்று மக்களின் பசியைப் போக்கிட வழி சொன்னவன். உயர் திணையை மட்டுமன்றி அஃறிணையின் பசித்துன்பத்தையும் உணர்ந்து உணவளித்து மகிழ்ந்தவன்.
"காக்கை குருவி எங்கள் சாதி -நீள்
கடலும் வானும் எங்கள் கூட்டம்"
- என்று பெருமிதம் கொண்டவன்.
மனிதரை மனிதர் சாப்பிடும் கொடுமை நிகழும் இந்த மண்ணுலகில் காக்கைக்குருவிகள் கூட நம்முடைய மனித சாதிதான் என்று கூறும் பாரதியின் மனிதநேயச் சிந்தனை எள்றைக்கும் சிறப்புடையதுதான். பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பார்கள். பசியால் ஒருவன் துன்புறும் போது அவன் கொலை, கொள்ளை முதலிய பாவச் செயல்களிலும் ஈடுபடுகிறான். "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?" என்று வினவுகிறார்.
ஆன்மீகச் சிந்தனை
பாரதி பெண்மையைச் சக்தியாகக் கண்டவன்; காளியாகக் கண்டவன். அதனால் பாரதியின் பக்திசிந்தனை மிகவும் தெளிவானது.
"ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! –
பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வ
முண்டாமெனல் கேளீரோ?"
(பாரதியார் கவிதைகள், அறிவே தெய்வம் என்ற தலைப்பிலிருந்து)
- என்று கூறிவிட்டு "உள்ளதனைத்திலும் உள்ளொளியாகி ஒளிர்ந்திடும் ஆன்மாவே, என்றுமே அறிவும் உள்ளத்தின் வலிமையுமே தெய்வம்’ என்று சிந்திக்கும் பாரதியின் ஆன்மீகச் சிந்தனை தான் இன்றைக்கு யோகா (Yoga) என்ற பயிற்சியில் தனக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொணரும் ஆற்றலைக் குறிக்கிறது. கோயில்களில் மட்டும் இறைவன் இருப்பதாக நினைத்து உண்டியலில் பணத்தைக் கொட்டும் மனிதர்கள் பசியோட தெருவில் வாடும் ஏழைகளுக்கு உதவாமல் செல்கிறார்களே அவர்கள் உணர வேண்டும்.
தாய்மொழிச் சிந்தனை
பாரதி பல மொழிகளைக் கற்றவன் ஆனாலும் தான் தன் தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தியவன். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" என்று தமிழின் மேன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்தான். அத்தகைய தாய் மொழியாம் தமிழின் இனிமையை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத் தான்,
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
- என்று வலியுறுத்தினார். தமிழ்ச்சமுதாயம் நலமுடன் வாழ வேண்டுமெனில் தமிழ் மொழி ஓங்கி வளர வேண்டும் என்று விரும்பினார்.
"சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!"
- என்று கூறிவிட்டு
"இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"
- என்பதை உணர்த்துகிறார்.
"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!"
- என்று தாய் மொழியைப் பாரதி போற்றிப் புகழ்கிறார். அதனால் இன்றும் அவர் போற்றப்படுகிறார். பாரதியை
"நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
காடுகமழவரும் கற்பூரச் சொற்கோ"
- என்று பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டுகிறார். பாரதி சொல்லிலும், செயலிலும் புதுமையைக் கடைப்பிடித்தவன். பாரதியின் சிந்தனைகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தேவைப்படும் சிந்தனைகளாகும். பாரதி ஒரு அமரகவி அவனது எழுதுகோல் சமூகத்தை நோக்கியே எழுதியது. அவனது சிந்தனைகள் சமூகத்தின் முன்னேற்றம் குறித்தே எழுந்தது. எனவே பாரதியின் சிந்தனைகள் என்றென்றும் ஏற்புடையவையே.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.