பிற்கால இலக்கண நூல்களில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலின் தாக்கம்
பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
“தொல்காப்பியத்திலும் அதன் உரையிலுமே நோக்கு, வண்ணம், வனப்பு, மெய்ப்பாடு, அணி அனைத்தும் இலக்கியக் கொள்கைகளாக நோக்கி விளக்கப்படாமல், பிற்கால இலக்கண நூல்களுள்ளும் சரிவர இடம் பெறாமல் போயின. பிற்கால நூல்களனைத்தும் இவற்றை வளர்க்கவோ, விளக்கவோ, மறுக்கவோ முயலாமல் ஓய்ந்து போயின. எனவே, இத்துறையில் புகுவார்க்கு இடர்பாடு மிகுதியாகிறது” (சங்க இலக்கிய ஒப்பீடு, ப.13) என தமிழண்ணல் கூறுகின்றார். அவருடைய கருத்தினைக் களமாகக் கொண்டு மெய்ப்பாட்டினைப் பிற்கால இலக்கண நூல்கள் எவ்வாறு வளர்க்காமல் போயின என்பதனை இக்கட்டுரை ஆராயவுள்ளது.
இறையனார் அகப்பொருள்
இறையனார் அகப்பொருளில் செய்யுள் உறுப்புகளாக திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், எச்சம், மெய்ப்பாடு, பயன், கோள் எனும் பத்தை ஆசிரியர் கூறியுள்ளார். அஃதாவது,
“திணையே கைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு
பயனே கோளென் றாங்கப் பத்தே
அகனைந் திணையும் உரைத்தல் ஆறே” (நூ.56.)
என்பதாகும். இதில் “ ‘மெய்ப்பாடு’ என்பது எட்டு வகைப்படும். அவை;
1. நகை
2. அழுகை
3. இளிவரல்
4. மருட்கை
5. உவகை
6. அச்சம்
7. பெருமிதம்
8. வெகுளி
என்பன. அவற்றுள் இன்னதோர் மெய்ப்பாடு வந்ததென்று அறிவது (இறையனார் அகப்பொருள், ப.215.) என நக்கீரர் மெய்ப்பாட்டைக் குறித்து தமது உரையில் கூறுகின்றார். ஆனால், அவர் தொல்காப்பியத்தைப் போலவோ, விரித்தோப் பேசாமல் செய்யுள் உறுப்பு எனும் அளவிலேயே மெய்ப்பாட்டை விட்டுச் சென்றுள்ளார்.
நம்பியகப்பொருள்
மெய்ப்பாடு என்னும் உறுப்பு உணர்த்த வந்த ஆசிரியர். நகையும், அழுகையும், இளிவரலும், மருட்கையும், உவகையும், அச்சமும், பெருமிதமும், வெகுளியும் என்னும் எட்டு வகை மெய்ப்பாடும், அவ்விடத்து நிகழும் பொருளைக் கேட்போர் மெய்யின் கண்ணே வெளிப்பட நிற்பன என்று கூறியுள்ளார்.
“நகை முதலாமிரு நான்குமெய்ப் பாடும்
நிகழ்பொருள் மெய்ப்பட நிற்பமெய்ப்பாடே” ( நூ.231)
என கூறி என்வகை மெய்ப்பாட்டை மட்டும் உணர்த்தியுள்ளதே தவிர, விரித்து பேசவோ, விளக்கிப் பேசவோ நம்பியகப் பொருள் செய்யவில்லை.
வீரசோழியம்
புத்தமித்திரனார் தன் இலக்கண நூலான வீரசோழியத்தில் மெய்ப்பாட்டு இலக்கணத்தைச் சுட்டியுள்ளார். புத்திரமித்திரர் தன் வீரசோழிய நூலில் பொருளதிகாரப் பிரிவில் பொருட்படலத்தில் அகம், புறம், அகப்புறம் ஆகியன பற்றிய இலக்கணங்களை எடுத்துரைத்துள்ளார். அகப்பாடல்களில் இருபத்தேழு உரைமுறைகள் உள்ளவாக வீரசோழியம் குறிக்கின்றது. அவற்றுள் ஒன்றாக மெய்ப்பாட்டியலை குறித்துள்ளது.
“மெய்ப்பாட்டியல்வகை மேதகவிரிப்பின்
மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றஞ்
செவ்விதிற் றெரிந்து செப்பன் மற்றதுவே” (பக்.78-79.)
மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள், அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் எனப் பிரிக்கின்றார். ஆனால், வீரசோழிய ஆசிரியர் அகத்திற்குரிய மெய்ப்பாடுகள், புறத்திற்குரிய மெய்ப்பாடுகள் என பிரித்துரைக்கின்றார். இதனை,
“உட்கோணிலைமை யுணர வுரைப்பின்
மெய்க்கொளத் தோன்றினவை மெய்ப்பாடென்க” (ப.80.)
என்கின்றது. தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டிலும் மெய்ப்பாடுகள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக இருபத்து நான்கினைக் காட்ட, வீரசோழியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக ஐந்து கணைகள், முப்பத்திரண்டு துறைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றது. இவையிரண்டையும் பொருத்திப் பார்க்கையில், எட்டு, இரண்டு நூல்களிலும் பொருந்தி அமைகின்றன. மற்றவை பொருந்தவில்லை. அவ்வகையில் தொல்காப்பிய அக மெய்ப்பாடுகள் பதினாறும், வீரசோழியத்தின் இருபத்து நான்கும் பொருத்தமில்லாமல் தனித்து விளங்குவனவாகும். வடமொழியில் உள்ள சாந்தம் என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தாலும், வீரசோழியத்தாலும் தனித்த ஒன்றாக ஏற்கப்படவில்லை. வடமொழியின் சார்பின் காரணமாக சிருங்கார ரசம், வீர ரசம் ஆகியன வீரசோழியத்தினால் எடுத்தாளப்பட்டுள்ளன.
தண்டியலங்காரம்
தண்டியாசிரியர் பாடலுக்கு அணி செய்கின்ற சுவையணி நிலையில் வைத்து மெய்ப்பாட்டைக் குறிப்பிடுகின்றார். எட்டு வகைப்பட்ட மெய்ப்பாட்டானும் நடப்பது சுவையென்னும் அலங்காரம் என்கிறார். இதனை,
“உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டின் இல்லது சுவையே” (நூ.68.)
எனும் நூற்பாவின் வழி அறியலாம். அதாவது, உள்ளத்தில் நிகழும் தன்மை புறத்தில் மற்றவர்களுக்கு புலப்படும்படியாக விளங்கும் எட்டு வகையான மெய்ப்பாட்டுகளினால் வெளிப்படுவது சுவை என்னும் அலங்காரமாகும். மேலும், எட்டு வகை மெய்ப்பாடுகள் எவை என்பதை,
“அவை தாம்
வீர மச்ச மிழிப்பொடு வியப்பே
காம மவல முருத்திர நகையே” (பொ. நூ.19.)
என்று குறிப்பிடுகிறார். இவற்றை,
தொல்காப்பியம் |
தண்டியலங்காரம் |
நகை |
நகை |
அழுகை |
அவலம் |
இளிவரல் |
இரிப்பு |
மருட்கை |
வியப்பு |
அச்சம் |
அச்சம் |
வெகுளி |
உருத்திரம் |
பெருமிதம் |
வீரம் |
உவகை |
காமம் |
என வகைப்படுத்தலாம். தொல்காப்பியம் கூறும் மெய்ப்பாட்டிற்கான நிலைக்களன்கள் தண்டியில் விரிவாகப் பேசப்படவில்லை. இரண்டு நூலிலும் மெய்ப்பாடுகள் செய்யுள் உறுப்புகளாகக் கூறப்பட்டுள்ளன. வடமொழியை அடியொற்றி தண்டி எழுதப்பட்டாலும் ‘சாந்தம்’ எனும் மெய்ப்பாட்டினைத் தவிர்த்து மெய்ப்பாடுகள் எட்டு எனத் தொல்காப்பியத்தை அடியொற்றியே குறிப்பிடுகிறது. ஆனால், வீரசோழியம் மெய்ப்பாடாவது கண்டது போலத் தோன்றும் கருத்து. இவை நாட்டியத்திலும், காப்பியத்திலும், செய்கைத் திறத்தினாலும், சொல் திறத்தினாலும், தூண்டப்பட்ட வாசனையின் திண்மையால் தம்மவையே போல அனுபவ நிலையில் வந்து ஆனந்தமாக நிற்பன என்கிறது.
முப்பெரும் இலக்கண நூல்கள்
முப்பெரும் இலக்கண நூலாசிரியர் மெய்ப்பாட்டைக் குறித்து கூறும்போது பொருளதிகார பிரிவில் ஒன்றென கூறியுள்ளார். இதனை,
“பொருளதி காரமுன்ன முத்தி
வெளிப்படை குறிப்பே மெய்பா டன்மொழி
யொட்டாகு பெயரே யுவகை யிறைச்சி
யுபசார மாசை யுண்மயக் காதி
யேது வாக வியம்புவர் சொற்பொருள்” (நூ.42)
எனும் நூற்பாவின் வழி அறியலாம். ஆனால் இவரும் மெய்ப்பாட்டை விரித்துப் பேசவில்லை.
நாடகவியல்
உடம்பின் இடத்து உண்டாகிக் காண்போர்க்குப் புலனாகும்படி வெளிப்பட்டுத் தோன்றும் தோற்றம்; உய்த்துணரும் அறிவில்லாமலே எதிர்ப்பட்ட பொருளின் தன்மையாலே உள்ள பொருளினைக் பார்த்து எதிரிற் பார்த்தது போலத் தோன்றும் கருத்து ஆகியன மெய்ப்பாடாகும். இதனை நாடகவியலில்,
“மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றமு
முய்த்துணர் வின்றித தலைவரு பொருளின்
மெய்ப்பொரு ணேரிற் கண்டது போலத்
தோன்றுங் கருத்துஞ் சொற்றமெய்ப்பாடாம்” (நூ.225)
என நாடகவியலாசிரியர் கூறியுள்ளார். மேற்படி இங்கு மெய்ப்பாடு என்பது நாடகத்திற்கானது என்ற விவாதமோ, இம்மெய்ப்பாடு இவ்விவ்விடங்களில் நாடகங்களில் வெளிப்படும் என்ற தெளிவான நூற்பாவோ அமைக்கப்படவில்லை.
இலக்கண விளக்கம்
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கமும் தொல்காப்பியத்தை அடியொற்றியே மெய்ப்பாடுகளுக்கு இலக்கணம் உரைக்கின்றது. இதனை,
“உள்நிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண்வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவை; அவை
காமம் அவலம் உருத்திரம் நகை என
இயம்பிப் போந்த இருநான்கு வகைத்தே” (நூ.665)
என்றும். மேலும்,
“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு… … ...
… … … … … … …
… … … … … … …
… … … … … … …
ஒன்று நான்குசெய்து உறழஎண் ணான்காம்
என்று கூறுப இயல்புணர்ந் தோரே” (நூ.578.)
என்ற நூற்பாவின் வழி, “உள்ளத்து உணர்ச்சியை உற்றவர் அறிவிக்காமலே உடம்பின்கண் நிகழும் வேறுபாட்டால் அறிவிக்கும் கருவி மெய்ப்பாடு ஆகும். செய்யுளின் மெய்ப்பாட்டு உறுப்பாவது சொற்களைக் கொண்டு பொருளைக் கண்முன் நிறுத்துவதாம்” என்று விளக்கம் தருகிறது. நகை முதலிய ஒவ்வொன்றிற்கும் நிலைக்களம் நந்நான்காகத் தொல்காப்பியம் தனித்தனியேக் குறிப்பிடும் அனைத்தும் இங்கு ஒரே நூற்பாவில் கூறப்பட்டுள்ளது.
தொன்னூல் விளக்கம்
உள்மெய்ப்பாடாகிய சுவையின் காரணமாக மெய்யின் புறத்தே அமைவது மெய்ப்பாடாகும். எனும் கருத்தை,
“சுவையணி என்ப இழிவு கடுஞ்சினம் காமம்
வியப்பு அவலம் இழிவு அச்சம் வீரம் நகைஎன
எண்மெய்ப் பாட்டின் இயைவன கூறி
உள்மெய்ப்பாட்டை உணர்த்தித் தோன்றலே” (நூ.351)
எனும் நூற்பா சுட்டுகிறது. “நெஞ்சக் கடுத்தவற்றைக் காட்டும் புறக்குறிவிரித்துக் கூறல் சுவையணி. இந்நூலும் தொல்காப்பியர் உவகையுள் உள்ளடங்கும் காமத்தைத் தனியொரு மெய்ப்பாடாகவும் கொண்டுள்ளது” என ச. வே. சுப்பிரமணியம் தமது (நூ.351) உரையில் கூறியுள்ளார். அதாவது, மெய்ப்பாடு என்பது சுவை எனும் சொல்லினால் குறிக்கப்பட்டுள்ளது. இதிலும் மெய்ப்பாடு பற்றிய விரிவான ஆய்வுகளோ, வளர்ச்சிப் படிநிலையோ காணப்படவில்லை.
முத்துவீரியம்
உள்ளத்தில் நிகழும் தன்மை வெளிப்படையாக விளங்க, எட்டுவகை மெய்ப்பாடுகளாலும் அமைவது சுவையணி ஆகும். இதனை,
“புந்தியின் நிகழ்திறன் புறத்துப் புலனாய்
விளங்கல் எண்வகை மெய்ப்பாட் டானும்
ஒழுகல் சுவைஎன உரைக்கப் படுமே” (நூ.1241)
எனும் நூற்பாவின் வழி ஆசிரியர் கூறியுள்ளார். மேலும்,
“அவைதாம்
அச்சமும் வீரமும் அவலமும் காமமும்
இழிப்பும் வியப்பும் எழில்படு நகையும்
உருத்திரமும்மென உரைக்கப் படுமே” (நூ.1242)
எனும் நூற்பாவில் காமம், வீரம் இவற்றைத் தனித்தனி மெய்ப்பாடுகளாக முத்துவீரியம் கூறுகிறது. மேலும், அச்சம், வீரம், அவலம், காமம், இழிப்பு, வியப்பு, நகை, உருத்திரம் என எட்டு வகைச் சுவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்வகை மெய்ப்பாட்டை மட்டுமே பிற்காலப் பெரும்பாலான இலக்கண நூல்கள் பேசியுள்ளன என்பதற்கு முத்துவீரியம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
மாறனலங்காரம்
தொல்காப்பியத்தை அடியொற்றியே மாறனலங்காரமும் மெய்ப்பாட்டில் தோன்றும் சுவையெட்டு எனக் கூறுகிறது. இதனை,
“பொறியுணர் வொடும் ஒரு பொருளினை எதிர்ந்த
நெறியுடை மனத்து நிகழ்தரு பான்மை
அயலவர் உறப்புறுத்ததாய்ப் பொருள் எட்டின்
இயல்வது சுவை என்று இயம்பினர் புலவர்” (நூ.197)
என்ற நூற்பா உணர்த்துகிறது. மேலும் ‘இந்திரயங்களின் அறிவினொடும் யாதானுமொரு பொருளைக் காணப்பட்ட மனத்துள் அப்பொருள் ஏதுவாக நிகழ்ந்த தன்மை நிகழ்ந்தவாறே புறத்தார்க்கும் புலப்படுமாறு வெளிப்பட மெய்ப்பாடுகள் எட்டால் தோன்றுவது சுவையென்னும் அலங்காரம்’ என்று விளக்கம் தருகிறது. சுவைகள் எட்டு என்பதை,
“அவைதாம்
பெருமிதம், நடுக்கம், அழுகை, இளிவரல்
உருத்திரம், நகை, வியப்பு, காமெனும் வகையே” (நூ.198)
என்கின்றது. மாறனலங்காரமும் தொல்காப்பியம் கூறுவதைப் போலவே பெருமிதம் என்று தனி மெய்ப்பாடாகக் கூறுகிறது. காமத்தைத் தனியொரு மெய்ப்பாடாகக் கொள்வதில் பிற இலக்கண ஆசிரியர்களோடு இந்நூலாசிரியரும் உடன்படுகிறார். மேலும், தெல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளில் மருட்கையை வியப்பு என்றும் அச்சத்தை நடுக்கம் என்றும் வெகுளியை உருத்திரம் என்றும் மாறனலங்காரம் குறிப்பிடுகிறது.
செயிற்றியம்
அச்சமுற்றானிடம் தோன்றும் அச்சம் அவன் சத்துவத்தினால் வெளிப்பட்டு காண்போர்க்குப் புலனாகும் தன்மை மெய்ப்பாடு எனப்படும். இதனை,
“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்
மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே”
என செயிற்றியம் கூறுகிறது.
சுவாமிநாதம்
சுவாமி நாததத்திலும் அகப்பாட்டுறுப்புகளின் பட்டியலில் கேட்போர், பயன் ஆகிய இரண்டும் குறிக்கப் பெற்று ஒவ்வொன்றகச் சுருக்கமாக வரிசைமுறைப்படி விளக்கப் பெற்றுள்ளன.
“எண்ணும் திணை கைகோள்கூற் றொடு கேட்டோர் காலம்
இடம்மெய்ப்பாடு எச்சம்முன்னம் பயன்பொருளே துறையாய்
நண்ணிரண்டாறு அகத்துறுப்பாம்…..” (124)
தொல்காப்பியத்தில் இடம் பெறும் செய்யுளுறுப்பான கேட்போர் என்பதற்கான இலக்கண வரையறையைக் குறிப்பிட்ட சில நூற்பாக்களுக்குள் மட்டும் அடக்கிவிடாமல், கூற்று எனும் செய்யுள் உறுப்புடன் மட்டும் தொடர்புபடுத்தாமல் பயன், நோக்கு, மெய்ப்பாடு, முன்னம், மாத்திரை முதலான உறுப்புகளுடனும் தொடர்புபடுத்துகையில், அக்கேட்போருக்கு ஆன வரையறை வேறு ஒரு தளத்தையும் உள்ளடக்கியுள்ளதை அறிய முடிகின்றது.
லீலாதிலகம் (கேரளம்)
லீலாதிலகம் பற்றி வே.சா. அருள்ராசு, மலையாள இலக்கண வரலாறு, எனும் நூலில், “மலையாள மொழி இலக்கணங்களில் முதலாவது எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் கி.பி.14 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாகும். அதுவும் மலையாள மொழிக்குரிய இலக்கணமாகக் கருதப்படவில்லை. காரணம் வடமொழியிலேயே அது எழுதப்பட்டுள்ளது” (மலையாள இலக்கண வரலாறு, ப.10.) என்கிறார். லீலாதிலகம் எட்டு சிற்பங்களில் (இயல்களில்) 151 நூற்பாக்களைக் கொண்டு காணப்படுகிறது. இதில் எட்டாம் சிற்பத்தில் 15 நூற்பாக்களில் மெய்ப்பாடு பற்றிப் பேசப் பெற்றுள்ளது. தலைவியைச் செல்வத்தில் உயர்ந்தவளாகவும், தலைவனைத் தாழ்ந்தவனாகவும் கற்பித்து வருணிப்பதும் மெய்ப்பாட்டுக் குற்றம். தலைவிக்குக் தாழ்ந்தவனோடுள்ள கூடலும் மெய்ப்பாட்டுக் குற்றமாம். குலத்தின் பெயரையோ, தேசத்தின் பெயரையோ இடத்தின் பெயரையோ பெண்ணுக்கு நல்குவது பொருத்தமன்று. நாட்டு மொழிக்கும் மெய்ப்பாட்டிற்கும் முதன்மை மலையாளம் அளிக்கும் மணிப்பிரவாளம் உத்தம மணிப்பிரவாளம். என்கின்றது லீலாதிலம். (1:2) ஒன்பது வகையாக மணிப்பிரவாளம் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வகைப்பாடுகள் மொழிக்கலப்பின் தன்மையை அடிப்படையாகக் கொண்டமைகின்றன.
1. உத்தம மணிப்பிரவாளம் நாட்டு மொழிக்கும் மெய்ப்பாட்டிற்கும் முதன்மையளிக்கப்பெறும், சமஸ்கிருதச் சொற்கள் குறைந்திருக்கும்.
2. உத்தம மணிப்பிரவாளப் போலி, நாட்டு மொழிக்கு முதன்மையும் மெய்ப்பாட்டிற்கும் சொற்களின் வெளிப்படைப் பொருளுக்கும் ஒத்த முதன்மையும் அளிக்கப் பெறும் (ப.35) நாட்டு மொழிச் சொற்களும் சமஸ்கிருதச் சொற்களும் சமமாக அமைந்தும் மெய்ப்பாட்டிற்கும் முதன்மை கொடுக்கப்பெற்று அமைவது உண்டு.(ப.36)
3. மந்திம மணிப்பிரவாளம் : நாட்டு மொழியும் சமஸ்கிருதமும் ஒத்த நிலை உடையனவாகவும் மெய்ப்பாடும் சொற்பொருளும் ஒத்த முதன்மை வாய்ந்தனவாகவும் அமைதல் (ப.36)
4. மதீதிம மணிப்பிரவாளப் போலி : நாட்டு மொழியும் சமஸ்கிருதமும் சமமாகவும், மெய்ப்பாட்டைவிடச் சொற்பொருட்கு முதன்மையும் பெற்று வருவது (ப.37) மெய்ப்பாடு சொற்பொருளுக்குச் சமமாகவும் நாட்டு மொழி குறைந்து அமைவதும் உண்டு. மேலும், நாட்டு மொழிச் சொற்கள் மிருந்தும் மெய்ப்பாடு குறைந்தும் அமைவது உண்டு (ப.38) மெய்ப்பாடு முதன்மைபெற்றும், நாட்டு மொழிச் சொற்கள் குறைந்தும் அமைவது உண்டு (ப.39).
5. அதம மணிப்பிரவாளம் : நாட்டுமொழிச் சொற்களும் மெய்ப்பாடும் குறைந்து அமைவது
இது மொழிவகையால் ஆய்ந்து செல்கின்றது.
சப்த சிந்தாமணி (ஆந்திரம்)
சப்த சிந்தாமணி தெலுங்கில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல். இந்நூலில் மெய்ப்பாடுகள் குறித்து, காப்பியம் - ரசங்களை உடையது (1:3) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
கவிராஜமார்க்கம் (கன்னடம்)
கவிராஜமார்க்கம் கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல். இதில் மெய்ப்பாட்டியலைப் பற்றி கூறும் போது நூலாசிரியர், சுவைகள் - ஒன்பது வகைப்படும் (2:98) என்றும், சுவை கெடுதல் பற்றியும் பேசப்பட்டுள்ளது (2:115,116) என்றும் கூறியுள்ளார். இங்கு சுவை என்பது மெய்ப்பாடே ஆகும்.
முடிவாக
தொல்காப்பியத்திற்குப் பிறகு மெய்ப்பாட்டு இலக்கியக் கொள்கையினை நோக்கி விளக்கப்படாமல், பிற்கால இலக்கண நூல்களுள்ளும் சரிவர இடம்பெறாமல் போனது. பிற்கால நூல்களனைத்தும் இவற்றை வளர்க்கவோ, விளக்கவோ, மறுக்கவோ முயலாமல் ஓய்ந்து போயின. எனவே இத்துறையில் புகுவார்க்கு இடர்பாடு மிகுதியாகிறது எனும் தமிழண்ணல் கருத்தானது எல்லாவகையிலும் உண்மையானது என்பதனை இக்கட்டுரை பல்வேறு காலக்கட்டத்தில் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் தோன்றிய இலக்கண நூல்களினூடாக ஆய்ந்து ஆய்வு முடிவாகக் கொடுத்துள்ளது.
குறிப்பு:
(இக்கட்டுரைக்கு ‘துணைநூற்பட்டியல்’ சேர்த்து அளித்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். துணைநூற்பட்டியல் அனுப்பி வைத்தால், இங்கே இடம் பெறச்செய்யலாம். - ஆசிரியர்)
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|