பாரதியின் சமூகப்பார்வை
முனைவர் மா. தியாகராசன்
முன்னுரை
எமக்குத் தொழில் கவிதை, இமைப்பொழுதும் சோராதிருத்தல், நாட்டுக்குழைத்தல் என்ற பாரதியின் சமூகப்பார்வை விசாலமானது. ஊருக்குழைத்தல் யோகம் என்ற உயர் சிந்தனைக்குரியவன் பாரதி. பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று எழுதிக் குவித்தவன் பாரதி.
நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக்
கவிழ்க்கும் கவிமுரசு அல்லவா,
நல்லதோர் வீணை செய்தே- அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?
வல்லமை தாராயோ- இந்த
‘மாநிலம்’ பயனுற வாழ்வ தற்கே, என்று, மண்பயனுற
வேண்டும், மாநிலம் பயனுற வேண்டும், மக்கள் பயனுற
வேண்டும்,
- என்று உள்ளாற உணர்ந்தவர் பாரதி.
மண்விடுதலையும், பெண்விடுதலையும் பாடவந்த பாரதி சமூகவிடுதலையையும் இணைத்துக் கொண்டான், சமூகப்பார்வையிலும் பன்முகக் கோணங்களில் தன் பார்வையை செலுத்தியவன் பாரதி.
மொழியுணர்வு
ஒரு மனிதனுக்கு மொழிப்பற்றும் தேசப்பற்றும் மிக மிக அவசியமாகும், மற்றைய எல்லா மேன்மைக்கும் இதுவே அடிப்படையாக அமைகிறது. பாரதி மொழியை விழியாகப் போற்றியவன், மொழியின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தி சமூகம் மேம்பட என்றுமுள தென்தமிழை, சீரிளமை மாறாதத்தமிழை தித்திக்கும் முத்தமிழை, வண்டமிழை வாயாரப் பாடிய பாரதி தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து
‘பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திருதல் நன்றோ? சொல்லீர்!’
- என்று சினந்து, வினா எழுப்புகிறார், தமிழ்ச்சமுதாயம் உலக அரங்கில் உயர்ந்தோங்கி விளங்கிட வேண்டும் என்பதிலே பாரதி காட்டிய அக்கறையின் வெளிப்பாடுதான் இது என்பதை நாம் உணர வேண்டும் அல்லவா?
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லோ- அதைத் தொழுது படித்திடடி பாப்பா’ என்று கூறும் பாரதியிடம், தனிமைச் சுவையுள்ள சொல்லை- எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை, எனும் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது.
தெள்ளுற்ற தமிழமுதின்
சுவைகண்டார் இங்கமரர்
சிறப்புக் கண்டார்,
என்றும் நம் பாரதி தமிழின் சிறப்பைப் போற்றுவதற்குக் காரணம் மொழியுணர்வில் பாரதி கொண்டிருக்கும் பற்றுத்தான் காரணம்.
தேசிய உணர்வு
பாரதி தன் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பற்று போற்றிப் புகழத்தக்கதாகும்.
பெற்றத் தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தன
- என்று போற்றுமிடத்து பாரதி தாய்நாட்டின் சிறப்பை எவ்வாறு உணர்ந்திருக்கின்றார் என்பதை நாம் அறியலாம்.
பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்...
என்றும் மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநிலம்மீது இதுபோல் பிரிதில்லையே...
- என்றும் தன் தாய்த்திருநாட்டை நேசித்து பூசிக்கிறார்.
தமிழ்நாட்டைப் போற்றுகின்ற போது ‘புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’ என்கிறார்.மேலும்,
‘எத்தனை யுண்டோ புவிமீது- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு’
-என்று போற்றுகிறார்.
கல்விச் சிறந்த தமிழ்நாடு- புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு- நல்ல
பல்வித மாயின் சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு
- என்று பாரதி கூறுமிடத்து தான் பிறந்த தமிழ்நாட்டின் சிறப்பை அடித்தளமாக்கி அதன்மூலம் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் பாங்கு போற்றத்தக்கதாகும்.
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
- என்று பெருமிதம் கொள்ளும் பாரதியின் தேசிய உணர்வு அனைவர்க்கும் வேண்டும்.
பெண்ணியம்
பாரதி பெண் விடுதலையை மிகவும் வலியுறுத்தியவன். பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் பின் இந்த மண்ணுக்கு, எழுச்சி இல்லை என்று கூறியவன்.
‘ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்’
ஞானம் வேண்டும், நல்லறம் வேண்டும், வீரம் வேண்டும், சுதந்திரம் வேண்டும், இவைதாம் நற்குடி பெண்ணின் குணங்கள், என்று கருதும் பாரதி
நாணமும் அச்சமும்
நாய்கட்கு வேண்டும்
- என்று கூறுகிறார்.
இதிலிருந்து பெண்ணானவள் அச்சப்பட்டு, நாணப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடப்பவள் அல்ல, நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, புவியில் யார்க்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்குடன், பெண் விளங்க வேண்டும் என்று விரும்புகிறார் பாரதி.
பாரதியின் சமூகப்பார்வை விரிந்து பறந்தது. மொழி, தேசியம், பெண்ணியம், இவற்றின் மூலம், சமூகப்புரட்சியை பாரதி விழைக்க முற்பட்டான்.
‘பெண்கள் அறிவை வளர்த்தால்- வையம்
பேதமை யற்றிடும் கண்டீர்’
பெண்கள் அறிவை வளர்த்தால், என்று கூறுவதிலிருந்து பெண்களுக்கு இயற்கையாக அறிவும், ஞானமும் உண்டு என்பதையும் இங்கே பாரதி நிறுவுகிறார்.
‘மாதர் தம்மை இழுவு செய்யும்br>
மடமையைக் கொளுத்துவோம்’
- என்ற பாரதியின் பெண்ணியச் சிந்தனை என்றென்னும் பெண்குலத்தின் விடியலை உலகிங்கே உணர்த்துடவையாகும்.
பொதுமைப் பண்பு
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பாக விளங்கியவன் பாரதி; ஒப்பிலாத சமுதாயம், உலகிற்கொடு புதுமை, என்று கனவு கண்டவன் பாரதி.
---தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
சாதிக் கொடுமைகள் வேண்டாம்- அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்,
உழைக்காமல் ஒரு கூட்டம் உண்ணுவதும், உழைக்கின்ற மக்கள் துன்பத்தில் வாடுவதும், சமூகக் கொடுமைக்கு வழிகோலும்
- என்று பாரதி முழங்கினார். இதையே
ஏழையென்றும் அடிமை யென்றும்
எவனுமில்லை ஜாதியில்- இழிவு கொண்ட
மனிதரென்ப திந்தியாவில் இல்லையே
- என்ற வரிகளின் மூலம் உணரலாம்.
வண்ணங்களின் வேறுபாட்டால்- மானுடம் வேறுபடக் கூடாது என்று கருதுபவர் பாரதி.
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.
பொய்யகலத் தொழில் செய்தே- பிறர்
போற்றிட வாழ்பவர் மேலோர்
என்று கூறும் பாரதி சாதியால் ஒருவர் மேலோர் என்று கருத முடியாது என்பதை உணர்த்துகிறார்.
வன்முறையாலும், மதவெறியாலும், ஏமாற்று வேலைகளினாலும், சமூகம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை கண்டு மனம் வெதும்பும் பாரதி
நெஞ்சு பொறுக்கு தில்லை- இந்த
நிலைகெட்ட மனிதனை நினைத்து விட்டால்
என்று இரத்தக்கண்ணீர் வடிக்கிறார்.
மனிதருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?
திடங்கொண்டவர் மெலிந்தோலை இங்கு தின்று பிழைத்திடலாமா என்று கேட்கிறார்.
சமூகத்தில் அனைவரும் அனைத்தையும் பெற்று வாழுதல் வேண்டும் என்பதே பாரதியின் சமூகக் கோட்பாடு.
அரும்பு வியர்வை உதிர்த்து
புவிமேல் ஆயிரம் தொழில்செய்து வாழ்வோம்,
வெட்டுக் கனிகள் செய்து தங்க முதலாம்
வேநிபல பொருளுள் குடைந் தெடுப்போம்,
- எனக்கூறி சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகை காணுகிறார். தொடர்ந்து
பட்டினி வாடையும் பஞ்சி லுடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்;
என்று பொருளாதார வியூகம் வகுக்கும் பாரதி புதுயுகம் படைக்க கவியுகம் தந்த கர்ம யோகியாவான். இவ்வாறு பாரதி நாட்டையும் மொழியையும் செம்மைப்படுத்த செய்த கவிதைகள் ஏராளம். அதில் அவன் உணர்த்தும் கருத்துக்களும் அதிகம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|