இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

குறுந்தொகையில் உவமை

முனைவர். மா.தியாகராசன்


முன்னுரை

நறுந்தேனின் சுவையாய், கற்கும் தோறும் இனிக்கும் இயல்பினையுடையது குறுந்தொகை. சர்க்கரைப் பொங்கலைத் தட்டில் வைத்து அதை எந்தப்பகுதியிலிருந்து எடுத்துச் சுவைத்தாலும் இனிப்புச்சுவை குன்றாது இனிப்பைத் தருமல்லவா? அவ்வாறே குறுந்தொகை எனும் நறுந்தொகைப் பெட்டகத்தில் எல்லாப் பாடல்களும் இனிய சுவையினை நல்க வல்லதாய் அமைந்துள்ளது. பழங்கால மக்களின் வாழ்க்கை முறையையும் பண்பாடு, கலாச்சாரம் முதலிய கூறுகளையும் கண்ணாடி போல் தெளிவாகக் காட்டும் தன்மையது. வரலாற்றுக் குறிப்பேடாகவும், வாழ்வின் பெட்டகமாகவும் விளங்குவதோடு இயல்பான உவமைகளைக் கொண்டு அமைந்துள்ள பாங்கு எண்ணி மகிழத் தக்கதாகும். கற்றறிந்த நற்சான்றோர்களால் , ‘நல்ல குறுந்தொகை‘ என்னும் அடைமொழியோடு போற்றப்படுகின்ற குறுந்தொகையில் கொட்டிக் கிடக்கும் உவமைகளைப்பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உவமைச் சிறப்பு ஏன்?

ஒரு செய்தியைக் கற்போர் உள்ளத்தே பதிய வைத்திட அதனோடு தொடர்புடைய பொருளை உவமையாகக் கூறுவது உலகியல்பு. தொல்காப்பியர் தம் இலக்கண நூலில் உவமையின் இன்றியமையாமையை விளக்கவே உவம இயல் என்றோர் இயலையே வகுத்துள்ளார். அத்தகைய சிறப்பிற்கிணங்க குறுந்தொகையில் பொன் போல் ஆவிரை, பூப்போல் உண்கண் என்ற பொதுத் தன்மை நிறைந்த உவமைகள் நம்மை வியக்க வைக்கின்றன. இனி அவற்றின் சிறப்பியல்புகளை இனிக்காண்போம்.



உவமைகளில் உலாவரும் மாந்தர்கள்

தலைவன், தலைவி, தோழி, செவிலி, மகள் போக்கிய தாய், காதற்பரத்தை எனக் குறுந்தொகை மாந்தர்கள் விளங்குகிறார்கள். இவர்களை மையமாகக் கொண்டே குறுந்தொகைக் ‘களம்' அமைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் பெருந்தக்க யாவுள?' எனும் திருக்குறள் சிறப்பிற்கேற்ப பெண்மையின் சிறப்பினை முழுவதும் கொண்டு விளங்கும் தலைவியின் சிறப்பு வெகுவாகப் பாராட்டப்படுகிறது.

“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர்பவளே ” (குறு- 49)

என மறுமையிலும் தன்னுடைய தலைவனையே கணவனாகப் பெற விரும்புகின்றாள் ஒரு தலைவி.

உள்ளம் நிறையும் உவமைகள்

சங்க இலக்கியத்தில் உவமைகள் நிறைந்து காணப்படுகின்ற இலக்கியம் குறுந்தொகையாகும். நூற்றுக்கும் மேற்பட்ட உவமைகளால் இவ்விலக்கியம் சிறப்புகிறது. உவமைகளால் பாடலுக்கும் பெருமையும் சுவையும் இனிமையும் நிறைகிறது. குறுந்தொகைப் பாடல்கள் சிவலற்றைப் பாடிய ஆசிரியரின் பெயர் அறியப்படாத நிலையில் , பாடலில் காணப்படும் உவமைகளே அவர்களுக்குப் பெயராகியுள்ளது. இதன் மூலம் உவமைகளின் சிறப்பு நன்கு விளக்கப்படுகிறது. கயமனார்(9) , செம்புலப்பெயல் நீரார்(40), அணிலாடு மன்றிலார்(41), நெடுவெண்ணிலவினார்(47), மீனெறி தூண்டிலார்(54), விட்ட குதிரையார்(74), ஓரேருழவர்(131), கூவன் மைந்தன் (224), காலெறி கடிகையார்(267), ஓரிற்பிச்சையார்( 277), கல்பொரு நிறுநுரையார்(290), கள்ளிலாத் திரையனார்(293), குப்பைக் கோழியார(305), பதடி வைகலார்(323), கவைமகன்(324), வில்லக விரலினார்(370), கங்குல் வெள்ளத்தார்(387), குறியிறையார்(394) எனப் பதினெட்டிற்கும் மேற்பட்ட புலவர்கள் தங்களின் பாடல்களில் காணப்படும் உவமைகளைக் கொண்டு அழைக்கப்படும் சிறப்பை உணர முடிகிறது.



கல்மோதி கரையும் உள்ளம்

தலைவனின் பிரிவால் துயர்பட்டு உடல் மெலிவுறும் தலைவியின் துன்பத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது. கீழ்வரும் பாடலில் காணப்படும் உவமை.

“செறிதுணி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே”

நீர்நிலையிலே பெருகிய நுரையானது அலையின் மிகுதியால் கரையிலே உள்ள கல்லில் மோதி உடைவது போல தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ளம் பிரிவு எனும் கல்லில் மோதி சிறிது சிறதாக உடைந்து அழிகிறது. கல்பொரு சிறுநுரை போல இவ்வுமை கற்போரின் நெஞ்சில் புதுமையையும் இனிமையையும் கலந்து அவலத்தையும் சுவைக்கும் மனப்பக்குவத்தைத் தருகிறது. இப்பாடலாசிரியரும் கல்பொரு சிறுநுரையார்' என்றே அழைக்கப்படுகிறார்.

அழகுநலம் பொருந்திய, ஒளிவீசும் வரிசையை உடைய தலைவியன் பற்களுக்ககிடையே உள்ள எயிற்றினில் பனிமலரிலிருந்து உதிரும் வெள்ளிய நீரைப் போன்ற இனிய நீர் சுரக்கின்றது. அந்த நீரின் இனிமைக்குக் கரும்பின் அடிப்பாகத்தைச் சுவைத்தால் ஏற்படும் இன்பத்தை உவமையாகக் கூறுகிறார் புலவர்.

“.. ... ... கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாளெயிர் ஊறிய வசையில் தீநீர்” (குறு- 267)

இத்தகைய உவமையைக் கையாண்ட அந்தப் புலவன் காலெறி கடிகையார் என்னும் இனிக்கும் பெயராலேயே அழைக்கப்படுகிறார்.



கலங்கும் கண்கள்

தலைவன் எத்தனை அழகு பொருந்திய தலைவியைக் கொண்டிருந்தாலும், பரத்தையரோடு உறவு கொண்டு ஒழுகுவதையே நாட்டமாகக் கொண்டு விளங்குகிறான். இவ்வாறு பரத்தையும் தலைவனும் ஒன்றுபட்டதற்கு வில்லைப் பிடித்த விரல்களை உவமை கூறினார் புலவர். அவர் தான் ‘வில்ல விரலினார்' என்னும் சொல்லால் அழைக்கப்படும் நல்லகப்புலவர். சினைபிடித்த பச்சைப் பாம்பின் உடல் போன்று பருத்த கணுக்களைக் கொண்ட கரும்பின் மடல் அவிழ துகில் போல வான மங்கையின் மேலாடும் முகில் கூட்ட மழைத்துளிகள் சிந்துகின்ற போது வாடையெனும் குளிர்காற்றால் வாடுகின்றாள் தலைவி. தலைவனோ, போர் முனையில் வில், வேல், வாள் எனும் ஏர் பூட்டி வெற்றி விளைச்சல் நடத்தி விட்டு வாடை நாள் தொடங்கும் முன்னரே வந்து விடுவதாக ஓடைமலர் போன்றவளிடம் கூறிச் சென்றவன் இன்னும் வரவில்லை. அவன் பிரிந்து செல்லும் போது அவனுக்கு விடை கொடுத்த தலைவியின் கண்கள் இப்போது அழுகிறது. இதோ தன் விழிகளைப் பார்த்துத் தலைவி கோபம் கொள்கிறாள். ‘கண்களே( நாணம் கொள்க(' எனக் கடுமையாக மொழிகிறாள். கரும்பின் கணுக்களிலே காணப்படும் பசுஞ்சோலை, பச்சைப் பாம்பு கருக் கொண்டிருக்கும் காட்சிக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பது இங்கே சிறப்பாகும். கழார்க் கீரன் எயிற்றி என்னும் புலவர் பாடிய இந்த இனிய பாடல்... ... ...

“... ... ... சினைப்பசும் பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
... ... ... ... ... ... ... ... ...
தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே” (குறு-35)

புலவரின் கண்களில் இயற்கையெல்லாம் உவமையாகி விடுகிறது.

நீ வேறு நான் வேறா?

இதோ இங்கேயும் ஒரு இயற்கை நிகழ்ச்சி உவமையாகிறது. செம்புலப் பெயனீரார் என்னும் சிந்தைக்கினிய புலவர் தன் செந்தமிழ்க் கவிதைகளில் கூறும் உவமை இது. வானத்திலிருந்து திரண்டு வந்து மண்ணில் விழும் மழைத்துளி பூமியிலே காணப்படும் செம்மண்ணின் தன்மைக்கேற்றவாறு தன் நிறம் மாறிக் கொள்ளும் இயற்கைக் காட்சியைக் காணுகிறான். துள்ளியோடும் மான் கூட்டமும் பறந்த திரிந்து அலையும் பறவைக் கூட்டமும் வெட்கப்படுமாறு , கூடிக்கிடக்கும் தலைவியும் தலைவனும் தங்கள் அன்பின் வலிமையையும் பெருமையையும் வியந்து கூறுமாற்றலை இப்பாடல் விளக்குகிறது.



உன்னையும் என்னையும் பிரிக்கின்ற சக்தி இந்த உலகத்தில் யாருக்கும் இல்லையடி உன்னைப் பெற்ற தாய் யார் என்று எனக்குத் தெரியாது. தந்தை யார் என்று தெரியாது? உன் தந்தைக்கும் என் தந்தைக்கும் உறவு முறை என்று தெரியாது ஆனால் செம்மண் நிலத்தில் பொழிந்த மழை நீரானது அந்த நிலத்தின் தன்மையை ஏற்றுக் கொள்கிறது. பின்னர் யாராலும் அதைப் பிரிக்க இயலாது; அது போல் நமக்கும் பிரிவு என்றுமில்லை.

“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
... ... ... ... ... ... ...
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” (குறு-40)

இப்பாடலில் வரும் ‘செம்புலப் பெயல் நீர்' என்னும் செந்தமிழ்த் தொடராலேயே இப்புலவரும் செம்புலப் பெயநீரார் என்றே அழைக்கப்படுவதும் எத்துணைச் சிறப்பு.

கோழியின் மீது கோபம்

தலைவன் அருகிலிருந்தால் காலம் கரைவது எப்படித் தெரியும்? தலைவி புலம்புகிறாள் தன் தோழியிடம் அத்தான் ... ... என் அத்தான் அதை எவ்வாறு சொல்வேனடி என்று கண்ணதாசன் தலைவியின் தவிப்பைத் திரைப்பாடலில் காட்டியது போல் இக்குறுந் தொகைத் தலைவியின் நெஞ்சக் குமுறலை அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் கள்ளூறும் சுவைத் தமிழ்ப்பாடலில் காட்டுகிறார். தோழி என்... ...( வேதனையை என்னவென்று சொல்வேனடி பொழுது விடியாமலே நீளும் என்று எண்ணி நானும் தலைவனோடு விளையாடிக் கொண்டிருந்தேனடி நானும் என்னென்பேன், ஏதென்பேன், ‘கூரிய வாள் போல்' என் தோள்பிரிக்க, வைகறை வந்ததடி வைகறையின் வரவை குக்கூ... ... என்று கூவி சேவற்கோழி சொன்னதடி தோழி என்று வைகறையை வாளுக்கு உவமையாகக் கூறுமிடம் காதலன் தோளின் இனிமையும் பிரிக்கவரும் வைகறை என்னும் வாளின் கடுமையும் இப்பாடலில் நம் நெஞ்சைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

“குக்கூ... ...என்றது கோழி; அதனெதிர்
துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம்
தோள்தோய் காதலர் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்ததென்றால் எனவே” (குறு-157)

பொருள்:

துட்கென்று --- அதிர்ச்சியால் திக்குற்று,

தேள் தோய்--- தோளைத் தழுவிக் கிடத்தல்

வைகறை ----- வடியற்காலை

கட்புலன் உவமைகள்

சங்ககாலப் புலவர்கள் அறிவுத்திறன் நிரம்பக் கொண்டே எதையும் செயல்படுத்தியுள்ளனர். தாங்கள் காணுகின்ற காட்சிகளையெல்லாம் அற்புதமாய் நெஞ்சில் நிறுத்தி அவற்றைப் பாடலாக்கித் தானும் மகிழ்ந்து கற்போரையும் மகிழச் செய்துள்ளனர். உவமைகளைக் காட்டுவதன் மூலம் அக்காட்சியை நம் கண்முன்னே தெரிகின்ற வண்ணம் செய்து விடுவர். பொன்னாலான மணியை நூலில் கோர்த்திட் தன் விரல்களில் பொருத்தியிருக்கிறாள். அழகிய தாமரைப் போன்ற கரங்களை உடைய பெண்னொருத்தி.அவளுடைய சிவந்த நகங்களுக்கிடையே பொன்னாலான மணியானது தங்கியிருக்கும் காட்சியைக் காணும் புலவர் அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் ‘வேப்பம் பழத்தைக் கிளி தன் அழகிய சிவந்த வாயால் கவ்வியிருப்பது போல்' என்னும் உவமையால் காட்டுகிறார். இதுபாலவே பின்னாளில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் கோவைப் பழத்தைக் கொத்திக் கொண்டு செல்லும் காட்சியை ‘விளக்கினுள் விளக்கை ஏற்றிச் செல்வது போல' எனும் உவமையால் காட்டுகிறார்.
“உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான்... ...
நிலங்கரி கள்ளியங் காடிறந்தோரே” (குறு- 67)



மதுரைக் கண்ணனார் என்னும் புலவர் தான் செல்லும் வழியிலே ஓர் இனியக் காட்சியைக் காணுகிறார் கண்ணனார் அல்லவா( தான் காணும் காட்சியைக் கவிதையில் படம் படிக்காமல் விடுவாரா? என்ன? கொத்துக் கொத்தாய் செங்காந்தள் மலர்கள் அவர் செல்லும் வழியிலே பூத்துக் குலுங்கி நிற்கிறது. இதனைக் கண்ட கண்ணனார் சேவலின் சிவந்த கொண்டையை உவமையாகக் கூறுகிறார். இன்றும் கோழிக் கொண்டை என்னும் ஒருவகைப் பூ பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

“குவியிணர்த் தோன்றி ஒண்பூ வண்ண
... ... ... ... கணங்கொள் சேவல்
... ... ... ... எடப்பி யோயே” (குறு-107)

கருவிளை மலரின் நடுவில் உள்ள புள்ளியைக் காணுகின்றார் கிள்ளிமங்களங்கிழார் என்னும் புலவர். அப்புள்ளிக்கு உவமையாக மயிலின் தோகையிலே காணப்படும் கண் போன்ற அழகிய புள்ளிக்கு உவமையாகக் கூறுகின்றார்.

“வாரா ராயினும் ... ... பீலியின் ஒண்பொறி... ...” (குறு- 110)

தீன்மதி நாகனார் என்னும் தேன்மதி நிறைந்த புலவர் தன்னந்தனியே ஒரு காட்டுவழி போகிறார். அங்கே பெரிய உருண்டையான கருங்கல் குன்று போல் கிடக்கிறது. இதனைத் தன் சிந்தையில் நிறுத்தி ஒரு யானை தன் துதிக்கையை மறைத்துக் கொண்டு அதாவது கையற்ற யானையொன்று நிற்பது போல என்று தன் உவமையை வெளியிடுகிறார்.

“மென்தேள் ... ... கூழை கிடும்பிடி
கைக் கரந்தன்ன... ... ”(குறு-111)

வனத்திடையே மயில் கூட்டம்தன் விரல்கள் பதிய நடந்து சென்றுள்ள காட்சியைக் கண்ட கொல்லன் அழிசி என்னும் புலவரோ நொச்சி இலையை மயிலின் பாதத்திற்கு உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

“கொன்(ர் துஞ்சினும் ... ... மயிலடி இலைய மாக்குர னொச்சி” (குறு-138)

நீர்நாயின் புறத்தோற்றத்தைக் கண்ட ஒளவையார் அதன் மேலுள்ள அழகிய வரிகள் பிரம்பின் மேலுள்ள வரிகள் போல் இருப்பதாக உவமை கூறுகிறார்.

‘அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்' (குறு-364)

செவிப்புலன் உவமைகள்

‘கற்றலிற் கேட்டலே நன்று' என்பாரன்றோ வள்ளுவப் பெருந்தகை. அவ்வாறே நம் சங்கப் புலவர்களும் இனிய உவமைகளை நம் கண்ணுக்கு இனிதாகக் காட்டி மகிழ்வித்தார்கள். இப்போது சில செவிவழியாய்க் கேட்டு இன்புறத் தக்க உவமைகளைக் காட்டியுள்ள பாங்கினையும் நாமறிந்து இன்புறுவோம்.

காற்றிலே ஆடுகின்ற வாகை மரத்தின் கிளைகள் அதனோடு சேர்ந்து வாகை மரத்திலுள்ள முற்றிய நெற்றுகள் ஓசை எழுப்புகின்றன. இது காற்றினால் ஏற்படும் ஒலியாகும். இதனைச் செவியுற்ற பெரும்பதுமனார் என்னும் புலவர். தம் வயிற்றுப் பிழைப்பிற்காகக் கழைக் கூத்தாடும் ஆரியக் கூத்தாடிகள் என்னும் மக்கள் கயிற்றில் ஏறி ஆடும் போது எழுப்புகின்ற ஓசைக்கு உவமையாகக் கூறியிருக்கின்றார்.

“வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால் பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே” (குறு-7)



கண்டோர் கூற்றாய் அமைந்துள்ள இப்பாடலில் காணப்படும் செவிப்புலன் உவமை சிந்தையை இனிப்பாக்குந் திறத்தனவாகும். இன்னும் வில்லவன் ஒருவன் தன் அம்பின் நுனியை உகிரால்(நகத்தால்) வருடும் ஓசையைச் செவிமடுத்து அவ்வோசையை ஆண்பல்லி தன் காதல் துணையாகிய பெண் பல்லியை ஒலி செய்து அழைக்கும் ஓசைக்கு ஒப்புமையாகக் கூறுகிறார். இவர் வேறு யாருமல்லர் பாலை பாடிய பெருங்கடுக்கோ எனும் புலவர் தான். கொல்லன் அழிசி என்னும் புலவர் மலர்கள் இதழ் திறந்து விரியும் போதும் காம்பு எனும் கட்டவிழந்து தரையில் விழும் போதும் எழுகின்ற ஓசையைக் கூட செவி மடுத்துள்ள பாங்கு எண்ணிப்பார்க்கத் தக்கதாகும். செவிக்குணவு என்பார் அய்யன் வள்ளுவர். ஆனால் இவரது செவியோ மலர் அவிழ்ந்து விழும் நுண்ணிய ஓசையையும் உற்றுணர்ந்து நம்மை வியக்க வைக்கிறது. ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு; உலகமெலாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் என்நிலவு என்பது கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரியாகும். இரவில் வளரும் நிலவின் ஓசையும் வான மண்டலத்தில் ஊர்வலம் போகும் மேகக்கூட்டத்தின் அசைவில் எழும் ஓசையும் இரவில் கண்ணயர்ந்து உறங்கும் எல்லோருக்கும் கேட்குமா? கேட்காது. ஆனால் ஊரே தூங்குகின்ற வேளை தன் வீட்டின் அருகேயுள்ள நொச்சி மரத்திலிருந்து பூக்கள் உதிர்ந்து விழும் ஓசையைக் கேட்டுத் துயிலாத மனமும், துவளுகின்ற உள்ளமும் கொண்ட காரிகை ஒருத்தியின் உள் மன ஓசை இங்கே படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

“மயிலடி யிலையை மாக்குரல் நொச்சி
அணிமிகு மென் கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே” (குறு -138)

இவ்வாறு நினைத்து நினைத்துக் கற்க கற்க இன்பம் தரும் உவமைகள் குறுந்தொகையில் பொதிந்துள்ளன.

மங்கல உவமை

குறுந்தொகைக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் இறை வாழ்த்துச் செய்யுள் பாடியுள்ளார். மிக நுட்பமான பாடல்

“தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்தன்ன மேனி திகழொளி
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபட எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே” (குறு – 1)

இப்பாடல் தாமரை என்னும் மங்கலச் சொல்லால் தொடங்கி உலகு என்னும் மங்கலச் சொல்லால் முடிகிறது. குறுந்தொகைப் பாடலின் எல்லை நான்கடி முதல் எட்டு அடியாகும். அதற்கேற்ப ஆறடியாகவும் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகிய குறிஞ்சிக்கடவுளாகிய ஆறுமுகனை ஆறு அடிகளால் பாடியுள்ளமையும் சிறப்பாகும். மேலும் “தாமரை புரையும் காமர் சேவடி” என்னும் முதல் வரியிலேயே உவமை கையாளப்பட்டுள்ள சிறப்பு எண்ணி மகிழத்தக்கதாகும். முருகப்பெருமானின் திருவடிகளின் பெருமையைக் கூறவந்த பெருந்தேவனார் அதனைத் தாமரை மலர் போன்ற மென்மையும், செம்மையும், உயர்வும் கொண்ட தாமரை மலரோடு ஒப்புமை படுத்துகின்றார். தாமரை என்பது மருத நிலத்தின் கருப்பொருளாகும். பவழம் என்பது நெய்தல் நிலக் கருப்பொருள் குன்றிமணி, முல்லை நிலக் கருப்பொருள் குன்று ---- குறிஞ்சி முதற் பொருள் என நான்கு நிலத்தின் கருப்பொருளும் அதனோடு முதல் நில தெய்வமாகிய முருகனுக்குக் கூறப்பட்டிருப்பது உவமைச் சிறப்போடு நுட்பம் நிறைந்த பாடல் என்பதற்குச் சான்று. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலே இத்துணைச் சிறப்பான உவமையைக் கொண்டு விளங்குவதே உவமைக்கு ஒப்பற்ற நூல் குறுந்தொகை என்பதைக் குறிபபால் உணர்த்துவதாய் உள்ளது.

உயர் சிறப்பால் உயர்ந்து நிற்கும் உவமைகள்

அணிற்பல்லன்ன – மள்ளிச் செடியின் முட்கள் (குறு-49)

உடைந்த வளை போன்ற பிறை நிலா (குறு-307)

ஞாயிறனையன் தோழி (குறு-315)

என உவமையிலேயே சிறந்த உவமையும் குறந்தொகையில் காணப்படவது சிறப்பு.

அன்பிற்கு அடைக்குந் தாழ் இல்லை என்றார் வள்ளுவர். அத்தகைய அன்பினது வலிமை எத்தகைய சிறப்பிற்குரியது என்பதைத் தன் தோழிக்கு உணர்த்துகிறாள் தலைவி. இத்தகைய சிறப்பான உவமை வேறு எந்த இலக்கியத்திலும் சொல்லபட்டிருக்க இயலாது. அறிவினால் அறிய இயலாது அன்புளர்ச்சியினால் மட்டுமே நன்கு உணரத்தக்கதுமானது தூய அன்பு. அன்பினது பரப்பளவானது இந்நிலப்பரப்ப் போல் பரந்தததன்று அதனினும் பரந்தது என்றும் உயர்வினைக் காட்டுமிடத்து அது வானை விட உயர்ந்தது என்றும் ஆழத்தைக் காட்டுமிடத்து அது கடலின் ஆழத்தை விட மிகவும் ஆழமானது என்றும் கூறுமிடத்துத் தலைவி இவ்வுமைகளால் அன்பின் பெருமையை யாராலும் அளந்தறிந்து காட்டிட இயலாது என்பதையே தெளிவுறுத்திக் காட்டியுள்ளாள்.



“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ததன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” (குறு-3)

அகலம், உயரம், ஆழம் மூன்றனுக்கும் ஒப்பற்ற உவமை காட்டப்பட்டுள்ளது.

ஈண்டு தெய்வப்புலவரும் தம் திருமறையில் ஞாலத்தின் மாணப்பெரிது (குறள்-102) கடலிற்பெரிது (குறள்-103) வானுயர் தோற்றம் (குறள்-272)

எனக் காட்டியிருப்பது நோக்கி மகிழத்தக்கதாகும்.

வராற்றுச் செய்தி உவமை (அலரும் அதிகனும்)

பசும்பூண் பாண்டியன் ஏவலின்படி அதிகன் என்பவன் வாகைப்பறந்தலை அதிகனையும் அவன் ஏறிவந்த யானையையும் கொன்று பெரிய வெற்றி ஆரவாரம் செய்தார்கள். இஃது ஒரு வரலாற்று நிகழ்வு. இதையே உவமையாகக் கொண்டு பரணர் என்னும் புலவர் ஒரு காதல் பாடல் இயற்றுகிறார். காதலும் காதலுக்கு உவமையாக வீரமும் கைகோர்த்து நிற்கும் இலக்கிய இனிமையைக் காண்போம்.

“மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன்
... ... ... ... ... ... ... ...
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே” (குறு- 393)

காதலன் காதலியின் மாலை குழையும்படி அவளைத் தழுவி மகிழ்வித்தது சில நாட்கள் தாம் ஆனால் அதனால் ஊரில் எழுந்த அலரோ (பழிமொழி) அதிகன் யானையோடு போர்க்களத்திலே வீழ்ந்த போது கொங்கர் எழுப்பிய ஆரவாரத்தை விடப் பெரிதாகும். எத்தகைய வரலாற்றுச் செய்தியை உவமையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது இப்பாடல். இப்பாடல் இல்லையென்றால் பசும்பூண் பாண்டியனைப் பற்றிய வரலாற்றுச் செய்தி நமக்குக் கிட்டாமலேயே போயிருக்கும். (சங்ககால மன்னர் நிலை வரலாறு- பக்.17, ஐந்திணைப் பதிப்பகம்,சென்னை )

உவமையிலும் அறம்

சங்கப்பாடல்கள் அறத்தை வலியுறுத்துகின்றன. அவற்றுள் குறுந்தொகையோ அறச் செய்திகளை உவமையாகக் கொண்டு இனிமை சேர்க்கின்றன. சங்கப்பாடல் வீரத்தையும் கொடையையும் இரு கண்ணாகவே போதிக்கின்றன. தலைவனைப் பிரிந்த தலைவி பசலை நோயினால் துன்புறுகிறாள். மீண்டும் தலைவன் தன்னிடத்தில் வந்தவுடன் பசலை நோயானது மறைந்து விடுகிறது. அதனை உணர்த்த வந்த நக்கீரர் என்னும் புலவர் தலைவியின் பசலை நோய் தலைவனைக் கண்டதும் விரைந்து நீங்கியதற்கு ஈதலை கடமையாகக் கொண்டவனது கைப்பொருள் ஒருவழி நில்லாது விரைந்து செல்லுதலை உவமையாகக் காட்டுகிறார்.



“நல்லிசை வேட்ட நயனுடைய நெஞ்சின்
கடப்பாட் டாளன் உடைப்பொருள் போல
தங்குதற்குரிய தன்று நின்
அங்கலுழ் மேனி பாய பசப்பே” (குறு-143)

இப்படிக் காதலைச் சொல்லுமிடத்தில் அதற்கு உவமையாக ஈதலை உணர்த்துகிறது இலக்கியம்.

அன்றில் போல அன்பு

மனித சமுதாயத்தின் இன்றியமையா நிகழ்வுகளில் காதல் முதலிடம் பெறுகிறது. ‘அன்பின் வழியது உயிர்நிலை' என்றார் செந்நாப்போதார் அல்லவா? தான் விரும்பிய தலைவனைக் காணத்துடிக்கும் தலைவியைத் தடுத்து விடுகிறாள் தாய். தலைவியின் துயரமோ பெருகி ஓடுகிறது. இதனை நமக்கு உணர்த்துகிறது கீழ்வரும் பாடல்

“பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுகதில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயிற்கே” (குறு-57)

தலைவியின் உள்ளம் தலைவனின் பிரிவால் அடைந்திருக்கும் ஆற்றொணாத் துயரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது பாடல். கவிஞன் உணர்ச்சியின் உந்துதலால் தலைவியின் மனத்துயரைப் பாடலால் சமமப்படுத்துகிறான். நீரில் இணைந்து நீந்திச் செல்லும் அன்றில் பறவையானது இடையிலே தாமரை மலர் தண்டுடன் இடைப்பட்டது அதனால் சற்றுப் பிரிய நேரிட்டது. இந்தப்பிரிவானது ஆண்டுகள் பல பிரிந்தது போன்ற துயரத்தை உணர்த்துகின்றது.

இணைப்பறவைகளாகிய அன்றிலின் தூய காதலன்பு தலைவியின் உள்ளத்திற்கு உவமை காட்டப்பட்டுள்ளது. குறுந்தொகையில் கையாளப்பட்டுள்ள மிகச் சிறந்த உவமைகளில் இஃதும் ஒன்றாகும்.

ஆடிப்பாவை

ஆலங்குடி வங்கனார் என்னும் நூலறி புலவர் இயற்றிய பாடல் அதில் காணப்படும் உவமை நினைத்து நினைத்து மகிழத்தக்க நகைச் சுவை உணர்வுடன் கூடிய காலத்தால் அழியாத உவமைகளைக் கொண்டுள்ளது. இஃது வெளிப்படையாய் வரும் உவமையாகும்.

கண்ணாடி முன் நின்று ஒருவன் தன் கையையும் காலையும் தூக்கினால் அதுவும் தூக்கும் அல்லவா? கண்ணாடி நோக்கும் அனைவரும் இதனை நன்கு உணர முடியும். கண்ணாடிக்குள் தெரியும் அந்த உருவத்திற்கு சிறிதும் உணர்ச்சி இராது. ஆனால் உணர்ச்சியற்ற அவ்வுருவம் தன் முதல் உருவம் செய்யும் செயலையெல்லாம் தவறாமல் செய்யும். இதனைப் புலவர் எதனோடு உவமை காட்டுகிறார் தெரியுமா? தலைவன் பரத்தையிடம் கொண்ட உறவை விடுத்து மீண்டும் தலைவியிடம் சேர்ந்து விடுகிறான். இதனால் கோபங்கொண்ட பரத்தையோ தலைவனை இவ்வாறு பழித்துரைக்கிறாள். இந்தத் தலைவனுக்கு சொந்த புத்தி கிடையாத எல்லாமே தலைவியின் அறிவுரையைக் கேட்டு அதன்படி தான் நடக்கிறான்.



“கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல” என்று தலைவனைப் பழித்துரைக்கிறாள்.

“கழனி மாஅத்து ... ... ... ...
... ... ... ...ஆடிப்பாவை போல
மேவன... ... ... ..தய்க்கே” (குறு 8)

இந்த இனிய உவமை பின்னால் வந்த சிந்தாமணியிலும், தமிழ்விடு தூதிலும் கையாளப்பட்டுள்ளது.

“கழனி மாஅத்து விளைந்துகும் தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரண் ”

என்னும் உவமை மிகச்சிறந்த உவமையாகும். அக இலக்கிம் காட்டும் பொருளுக்கு வெளிப்படையான பொருளை விடக் குறிப்புப் பொருளே சிறப்புடையதாகும் என்பது அறிஞர் கொள்கை. இப்பாடலில் கூறப்பட்ட ‘ஆடிப்பாவை' என்னும் உவமை வெளிப்படையாகவும் தெளிவாகவும் கற்போர்க்கு விளங்கும் தன்மையது. ஆனால் முன்னடிகளிலே கூறப்பட்ட உவமை செய்யுளை ஆழந்து நோக்குவார்க்கு மட்டுமே விளங்கத் தக்கதாக அமைந்துள்ளது. இது உள்ளுறை உவமை எனப்படுகிறது. உள்ளுறை உவமை பற்றிய தெளிவான ஆய்வினை உவமையிலில் தொல்காப்பியர் செய்தள்ளார். அகத்திணையியலில் உள்ளுறை உவமை பிறக்கும் நிலத்தையும் அதன் தன்மையையும் கூறியுள்ளார்.

“உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே” (தொல், அக்த்திணை, நூற்பா எண்-44)

கருப்பொருள்களுள் தெய்வத்தை ஒழித்து ஒழிந்த கருப்பொருள்களே தனக்கத் தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படும்என்பது இதன் பொருளாகும்.

குறுந்தொகை என்னும் அகத்துறை இலக்கியத்தில் இத்தகைய உள்ளுறை உவமம் எங்குங் காணுமாறு விரவியுள்ளன.

உள்ளுறை உவமங்கள் தம்மை ஆக்கிய புவலரின் கருத்தினைக் கற்போர்க்கு மெல்ல மெல்ல உணர்த்தும் போது உண்டாகும் இன்பம் தலைசிறந்தது. இவ்வின்பம் ஏனைய மொழிகளில் காணப்படாத தனித் தமிழ்ப் பேரின்பமாகும்.

“கழனி மாஅத்து விளைந்துகும் தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரண் ”

என்னும் உவமையின் கண் பொதிந்துள்ள உள்ளுறை என்ன? கழனி, மாமரம், பழனம், வாளை என்பன போன்றவை மருதத்தின் கருப்பொருளாகும். தலைவன் மீது பழிகூறும் பரத்தை மனங்கனிந்து தம்மிடம் வரும் தலைவனை மட்டுமே தம்இல்லில் வைத்து இன்பம் தருவாள் அல்லாது தலைவியோ தம்மிடம் வந்த தலைவனை மடக்கித் தன்னில்லில் வைத்துக் கொண்டாள். இங்கே உள்ளுறை உவமை என்ன கூறுகிறது? வயல் வரப்பிலே நிற்கின்ற தேமா மரத்தின் கண்ணே தோன்றி முதிர்நத கனி , தானே கனிந்து காம்பற்று நீர் நிறை வயலில் விழுந்து விட்டது; அப்போது மட்டும் நீரில் உறையும் வாளை மீனானது அக்கனியை நுகரும் தன்மையுடையது. அவ்வாறே தலைவனின் உள்ளம் காமத்தால் கனிந்து தம் இல்லம் வந்தால் மட்டுமே யாம் நுகர்வோம் அல்லாது தலைவியினைப் போல் தானே வலிந்து நுகர்வோம் அல்லேம் என்று கூறுதலே உள்ளுறை உவமைச்சிறப்பு.



வெண்ணெய் போல் உருகும் தலைவன்

மற்றோரிடத்துக் காமநோயால் தவிக்கும் தலைவனிடம் அவனது தோழன் கூறும் சமாதானம் எடுபடாமல் தான் காமநோயினால் படுதம் துயரை உவமையால் கூறும் சுவையே தனி

“இடிக்குங் கேளிர் ... ... ...
... ... ... .. ... ... ...
ஞாயிறு காயும் வெவ்வரை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல
... ... ... .. ... அரிதே ” ( குறு- 58)

வெம்மையான சுடரினை வெளிப்படுத்திவரும் சூரியன் இங்கே காம நோய்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சூரியனின் வெம்மையான ஒளி பட்டுவெப்பமேறிய பாறைக்கல் காமத்தீயால் வருந்துகின்ற உள்ளத்திற்கு உவமை; உவமையை இவ்வாறு பொருத்திக் காணாது வெண்ணெய் உருகுதலைக் காம நோய்க்கு உவமையாகக் கூறுவாறும் உளர். இஃது எவ்வாறு பொருந்தும் என்பதை ஆழ்ந்துணர்வார் மட்டுமே அறிவர்.

இவ்வுமைக்கண் காணப்படும் நெருங்கிய பொதுத் தன்மை யாதெனில் ஞாயிற்றின் இவ்வெப்பம் இயற்கையாக உள்ளது. அதுபோல் காமநோயும் இயற்கையாகவே உள்ளது என்பதாகும். வெண்ணெய் உருகி விடாமல் காக்க நிழல் வேண்டும். அதுபோல தலைவனின் உள்ளம் காமநோயால் உருகாது இருப்பதற்குத் தலைவியின் ஆதரவு என்னும் குளிர் நிழல் வேண்டும். உடல் உள்ளத்தின் வழி நிற்கிறது ஆகையால் உள்ளத்தைப் பாறையாகவும், உடலை வெண்ணெய்யாகவும் கூறப்பட்டுள்ளது. ஈண்டு “தெய்வமென உற்ற உடல் சிந்தை வயம்” அன்றோ எனும் கம்பரின் பாடலாலும் அறியலாம். தலைவனின் நிலையை உணர்ந்து கையில்லாத நிலையில் அவன் முன்னே உருகும் வெண்ணெய்யைப் பாதுகாக்கப் பிறரிடம் கூற முயல்வதற்கோ, இயலாதவாறு அவன் ஊமையாகவும், விளங்குவதாகவும் காட்டியிருப்பது அவன் தன் காமநோயைத் தலைவியிடம் கூறவும் இயலாதவனாய் உள்ளான் என்பது சுட்டப்படுகிறது.

முடிவுரை

குறுந்தொகையின்கண் அடங்கியுள்ள செய்யுள்களைப் புனைந்த நல்லிசைப் புலவர்களின் உவமைத் திறத்தை இதுகாறும் கண்டோம். ஓவியப்புலவன் ஒருவன் வண்ணமும் தூரிகையும் கொண்டு காண்போர் உள்ளத்தைக் கவரும் வகை ஓவியம் தீட்டுதல் போல் நல்லிசைப் புலவர்கள் நல்லியல்புடைய நால்வகைச் சொற்களைக் கொண்டே தான் உணர்ந்த அழகெல்லாம் தன் செய்யுட்களைப் பயில்வோறும் உணரும்படி செய்துள்ளமை பாராட்டுதற்குரியது. குறுந்தொகைப் புலவர்கள் தம் நுண்மான் நுழை புலத்தால் அற்புதக் கருத்துக்களைத் தம் புதுமைமையான உவமைத் திறத்தால் கையாண்டுள்ளமை நாம் நினைந்து நினைந்து போற்றுதற்குரியது. இன்னும் எத்தனையோ சிறப்புக்கள் குறுந்தொகையில் கொட்டிக் கிடக்கின்றன. உவமைகளையும் உள்ளுறை உவமங்களையும் கொட்டி வைத்திருக்கும் நல்ல குறுந்தொகையை நாளும் சுவைத்துப் போற்றுவோம்.

கட்டுரை எழுதத் துணை நின்ற நூல்கள்

1) குறுந்தொகை மூலமும் உரையும், கழக வெளியீடு, முதல் பதிப்பு மே-1955, அப்பர் அச்சகம், சென்னை
2) குறுந்தொகைப் பெருஞ்செல்வம், தமிழறிஞர் சாமிசிதம்பரனார், இலக்கிய நிலையம், 19, செளராஷ்டிரா நகர், 7வது தெரு, சென்னை600094, முதற்பதிப்பு நவம்பர்-1983)
3) குறுந்தொகை தெளிவுரை, புலியூர்க்கேசிகள் தெளிவுரை, பாரிநிலைய வெளியீடு, சென்னை, (இரண்டாம் பதிப்பு டிசம்பர் 1970)
4) ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர் 1985, மதுரை, நல்ல குறுந்தொகை, கா.காளிமுத்து, கட்டுரை
5) சங்கப்பாட்டில் பொங்கும் உணர்ச்சி, அ.வை,சுப்பிரமணியன், சேகர் பதிப்பகம், சென்னை.600078, (முதற்பதிப்பு 1983 )
6) சங்கத்தமிழ், கலைஞர் மு.கருணாநிதி, ராக்கோர்ட் பப்ளிகேசன்((பி)லிட், சென்னை-600083, (முதற்பதிப்பு)
7) சங்கால மன்னர் காலநிலை வரலாறு, வி.பி.புருஷோத்தமன், சாலை அச்சகம், சென்னை, (முதற்பதிப்பு 1989)
8) சங்க இலக்கியம் அகம், சரளா ராஜகோபாலன்
9) சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, (முதற்பதிப்பு 1984)
10) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ஜூன் 1992, எண் 268, ராயப்பேட்டை சாலை, சென்னை 6000014.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p29.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License