கம்பராமாயணத்தில் முனிவர்கள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
தொடர்ச்சி - பகுதி 2
பரசுராமர்
இராமன் வில்லை ஒடித்துச் சீதையைத் திருமணம் செய்து கொண்டு வரும்போது, பரசுராமர் எதிரே வந்து நீ ஒடித்த வில்லின் தன்மையை நான் அறிவேன். இப்போது உன் அழகியத் தோளின் வலிமையைச் சோதிக்கும் ஆசை உடையவன். எண்ணற்ற அரசர்களை அழித்து உயர்ந்த என் திரண்டத் தோள்களில் ஏற்பட்டத் தினவும் சிறிது பெற்றுள்ளேன்.இங்கு நான் வந்ததன் காரணம் இதுவே, வேறொரு நோக்கமும் இல்லை என்றுரைத்தார்.அவர் கூறியதைக் கேட்ட தசரதன், பரசுராமனை நோக்கி, நிலவுலகம் முழுவதையும் வென்று, அதை ஒப்பற்ற முனிவனானக் காசிபனுக்குக் கருணையோடு தானம் செய்தவனே, சிவனும், பிரம்மனும், திருமாலும் உன் வீரத்துக்கு ஒரு பொருளாக மாட்டார் அவ்வாறிருக்க, அற்ப மானிடர் உனக்கு ஒரு பொருளாவாரோ? இந்த இராமனும், எனது பிராணனும் இனி உன் அடைக்கலப் பொருள் என்று கூறினான்.
“சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான்”
(பரசுராமப்படலம் 1227)
தன்னை காக்க வேண்டி யார் அடைக்கலமாக வந்தாலும், அவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டியுது கடமையாகும். ஆனால் தசரதன், இராமனுக்காக வேண்டி பரசுராமரிடம் அடைக்கலமாக வேண்டியும், அவர் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. இராமனிடம், வில்லை வளைத்துக் காட்டுமாறு கூறினார். இராமனும் வில்லை வளைத்து நாண்ஏற்றி அந்த அம்பு இலக்கு இன்றி வீணாக்கக்கூடாது. இந்த அம்புக்கு இலக்கு எது என்று கேட்டபோது, “உன்னால் எய்யப்படும் அம்பு, இடையே வீணாகப் போகாமல் நான் செய்துள்ள தவங்களின் பயன் முழுவதையும் கவர்ந்து செல்வதாக” என்று பரசுராமன் கூறினான்.உடனே இராமன் அம்பைப் பிடித்துக் கையைச் சிறிது தளர்த்தினான். வில்லிலிருந்து புறப்பட்டுச் சென்ற அம்பு பரசுராமரது குற்றமற்ற தவப்பயன் முழுவதையும் கவர்ந்து கொண்டு இராமனிடமே மீண்டு வந்தது.
“கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே”
(பரசுராமப்படலம் 1247)
அடைக்கலம் வேண்டி வந்தவர்க்கு அடைக்கலம் அளிக்கவில்லை என்றால் அது அவர்களுக்கேத் துன்பமாகவே அமையும். பரசுராமனும், முருகப் பெருமானும் சிவபிரானிடம் வில் வித்தை கற்று வந்தனர். அது போழ்து, அவர்களது ஆற்றலைச் சோதிக்கக் கிரௌஞ்ச கிரியின் சிகரம் ஒன்றைத் துளைக்குமாறு சிவன் ஆணையிட்டார். முருகன் செயல்படத் தயங்கினார். பரசுராமன் கணையைச் செலுத்திக் கிரௌஞ்ச மலையில் துளை ஒன்று உண்டாக்கினார். இது பருவ மாற்ற காலங்களில் அன்னம், பறவை முதலானவை மலையைச் சுற்றிச் செல்லாது, துளை வழி எளிதில் இடம் மாறிக் கொள்ள வழி செய்தது.
பரசுராமன் இருபத்து ஒரு தலைமுறை அரச குலத்தினரைப் பழி வாங்கிப் பூமியைத் தனதாக்கிக் கொண்டார். தான் வென்ற உலகம் முழுவதையும் காசிப முனிவருக்குத் தானம் செய்து விட்டார்.
“தானம் செய்த இடத்தில் வசிக்கலாமோ?” எனக் காசிபர் கேட்டார். பரசுராமர் வருணனிடம், “தனக்குக் கடலை வற்றச் செய்து இடம் தர வேண்டும்” என்று கேட்டார். வருணன் அனுமதி தந்தான். பரசுராமர் சைய மலையிலிருந்து தன் மழுவை எறிய அது விழுந்த இடம் வரையிலும் கடல் விலகிச் சென்றது. அவ்விடத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டார் பரசுராமர்.
“கமை ஒப்பது ஓர் தவமும், கடு கனல் ஒப்பது ஓர் சினமும்,
சமையப் பெரிது உடையான், நெறி தள்ளுற்ற இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா
சிமையக் கிரி உருவ, தனி வடிவாளிகள் தெரிவான்”
(பரசுராமப்படலம்1222)
இப்பாடலின் பின் இரண்டு வரிகள் பரசுராமன் பற்றி ஒரு வரலாறு சொல்வன;
“சையம்புக நிமிர் அக்கடல் தழுவும்படி சமைவான்
மையின் உயர்மலை நூறிய மழுவாளவன் வந்தான்
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்
வெய்யன் வர நிபம் என்னை கொல்?’ என வெய்துறும் வேலை”
(பரசுராமப்படலம்1223)
சலபோசனமுனிவர்
தசரதன் வேட்டையாட விருப்பம் கொண்டு காட்டிற்குச் சென்றான். யானை, சிங்கங்களை தேடி அலைந்த போது , ஓரிடத்தில் யானை நீர் அருந்தும் சத்தம் கேட்க, (யானை என்று கருதி அம்பு எடுத்து ‘சப்தவேதி’என்னும் கலைப்படி ஒலியை நோக்கி) அவ்விடத்திற்கு அம்பைச் செலுத்தினான். சலபோசன முனிவர்க்கும், அவர் மனைவிக்கும் கண் தெரியாததால், அவர் மகன் சுரோசணன் அவர்களைப் பாதுகாத்து வந்தான். அப்பெற்றோர்களுக்குத் தாகம் தீர்ப்பதற்காகத் தண்ணீர் எடுத்துவர வந்த சுரோசணன் மேல் அம்புபட, குரல் கேட்ட தசரதன் பதறிப் போய் அக் குரல் கேட்ட இடத்திற்கு ஓடி வர, மரணவேதனையில் தவித்த சுரோசணன், “அனைத்து விபரங்களையும் கூறி, பெற்றோர்களுக்குத் தண்ணீர் கொடுத்து விடுங்கள்” என்று கூறி உயிர்விட்டான். தண்ணீருடன் சென்ற தசரதனை விசாரித்தப் பெற்றோர் “மனம் உடைந்து, நாங்கள் இப்போதே விண்ணுலகம் செல்கிறோம், நீயும் உன் மகன் உன்னை விட்டுப் பிரிய விண்ணுலகம் அடைவாயாக” என்று சாபமிட்டனர்.
இந்த சாப வரலாறு இராமன் காடு சென்றதால் ஏற்பட்ட பிரிவுத் துயரத்தால், தசரதன் கோசலையிடம் கூறும் இடத்தில் அமைந்துள்ளது.
“விண்ணின் தலை சேருதும் யாம் எம்போல் விடலை பிரிய
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா” (அயோத்தியாகாண்டம் - நகர்நீங்குபடலம் 377)
கங்கைக்கரை முனிவர்கள்
தெய்வத்தன்மை பொருந்திய ஆற்றின் கரையில் தங்கி வாழும் முனிவர்கள் அனைவரும் தவத்தின் மூலம் தாங்கள் சென்று அடைய வேண்டிய புகலிடமான தெய்வம் இங்கே வந்து விட்டது என்று மகிழ்ந்து அழகிய விழிகளை உடைய இராமனைக் காண்பதற்காக அவர் இருக்குமிடம் சென்று கண்டு மூவரையும் அழைத்து வந்து, உண்பதற்கு காய்களையும், பழங்களையும் அளித்து மகிழ்ந்தனர். இராமன் கங்கையில் நீராடின பிறகு வேதம் ஓதும் முனிவர்களின் இருப்பிடங்களை அடைந்து மெய்யுணர்வு பெற்ற ஞானிகளை உணரத்தக்க பரம்பொருளை வணங்கினான். பின்னர் தீயை வளர்த்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தான். அதன் பின்னரும் பேரறிஞர்களாளான அந்த முனிவர்களுக்கு தகுந்த விருந்தினனாக அமைந்து விருந்துண்டான்.
“பொழியும் கண்ணின் புதுப் புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொல்லின் மொய்ம் மலர் சூட்டினர்” (கங்கைப் படலம் 623)
பரத்வாஜ முனிவர்
‘பரத்தின் நீங்கும் பரத்துவன்’ என்னும் பேர். அவர் வரத்தின் மிக்கு உயர்ந்தவர். வினைச் சுமையாகிய பரத்திலிருந்து நீங்கியவர் என்பதால் அவர் ’பரத்வாசர்’ எனப் பெற்றார். பரத்வாஜ முனிவர் இவர் கையில் குடையைப் பெற்றவர். நீண்ட திரிதண்டத்தை ஏந்தியவர். கமண்டலம் கைக் கொண்டவர். பெரிய சடை முடியை உடையவர்.மானினது உரித்த தோலைப் போர்த்தவன். நல்ல மர நாரால் செய்யப்பட்ட ஆடையை உடுத்தவன். மயிர் நீண்டு தொங்கும் வடிவம் அடைந்தவன். முக்தி நெறியை விரும்பும் ஒழுக்கம் உள்ளவன். நான்கு வேதங்களும் நடனம் செய்யும் நாவினை உடையவன். செந்நிறம் பெற்ற தீயோம்புதலைச் செல்வமாகப் பெற்றவன். நான்கு திசைகளை நோக்கிய நான்கு முகங்களைப் பெற்ற பிரம்மன் செம்மையாகப் படைத்த உயிர்கள் அனைத்தையும் தன்னுயிர் போலக் கருதிக் காக்கும் அந்தணன், ‘ஏழு உலகங்களைப் படைத்திடுக” என்று சொன்னாலும், தேவாதி தேவனான திருமாலின் உந்தியில் இருந்து உண்டாக்காமல், அவற்றைத் தானேப் படைக்கும் வல்லமை உள்ளவன்.
“குடையினன் நிமிர்கோலன் குண்டிகையினன் மூரிச்
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நீரின்
உடையினன் மயிர்”(வனம்புகு படலம் 701)
முனிவர் இரு வினைகளை வென்றவர். சித்திரக்கூடத்தில் வாழ்கிறார். தான் செய்த தவத்தின் பயனாக இராமனைப் பார்த்தவன் என்று எண்ணினார்.
பரத்வாஜ முனிவரின் ஆசிரமம்
கங்கையும், யமுனையும் கட்புலனுக்கு எட்டாமல் ஓடும் சரஸ்வதி நதியும் கூடும் திரிவேணி சங்கமம் என்னும் பிரயாகை. விசேட தீர்த்தத் தலம். பிரம்ம தேவருக்கும் இத்தீர்த்தம் கிடைத்தற்கு அரியது. பரத்வாஜர் தான் தங்கியிருந்த பிரயாகையின் பெருமையை, இவ்வாறு இராம இலட்சுமணர் சீதை ஆகியோருக்குச் சொன்னார். இந்தப் புகழ் பெற்றப் புண்ணிய சங்கமத்தை நான் பிரியாது இங்கேயேத் தங்கியுள்ளேன். அரும்பெறல் தீர்த்தம் அமைந்துள்ள இத்தீர்த்தம் சார்ந்த இடம் எங்களைப்போன்ற முனிவருக்கு ஏற்ற இடம் என்றார் பரத்வாஜர்.
“கங்கையாளொடு கரியவள், நாமகள், கலந்த
சங்கம் ஆதலின் பிரியலென், தாமரை வடித்த
செங்கண் நாயக அயனுக்கும் அரும்பைறல்தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான்” (வனம்புகு படலம் 711)
இராமனும், சீதையும் சித்திரகூட மலைக்காடுகளில் நடந்தபோது, சுற்றிலும் வனவிலங்குகளும், பறவைகளும், பல்வகை பணிகள் புரிவதைக் கண்டான் அவற்றைத் தன்னுடன் இணைத்துக் கைகோர்த்து நடந்து வந்த சீதைக்குச் சுட்டிக்காட்டினான்.
“இடிகொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடைக்கொள் சென்னியர் தாழ்வு இலர் தாம் மதித்து ஏற
படிகளாம் எனத் தாழ்வரைக் கிடப்பன” (வனம்புகு படலம் 762)
வழியில் இருந்த பெரிய மலை பாம்புகள் தங்கள் உடலை முதிர்ந்த முனிவர்கள் மிதித்து ஏறவும் அதனின்று உயர்ந்த இடங்களில் ஏறிச் செல்லவும் உதவின.
அத்திரி முனிவர்
சப்த ரிஷிகளில் ஒருவர் அத்திரி முனிவர். அவரது மனைவி அனுசுயா.
திரி -மூன்று
அ- இல்லை
காமம், கோபம், மயக்கம் என்ற மூன்று குற்றங்களும் இல்லாதவர் அத்திரி முனிவர்.
அனுசுயா - அசூயை இல்லாதவள். இம்மாதரசி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாகச் செய்தவள். சமானமில்லாத கற்புக்கரசி. இராம இலட்சுமணர் சீதையுடன் சித்திரகூட மலையை விட்டுத் தெற்கேச் சென்றனர்.
அத்திரி முனிவரை அடைந்தபோது, அவர் உற்றார் யாவரும் விருந்தாக வந்ததுபோல் மகிழ்ந்தார். முனிவரின் மனைவி அனுசுயா சீதைக்கு அணிகலன்களும், ஆடைகளும் தந்தாள். (அத்திரி என்றால் அழுக்காறு இல்லாதவர் என்று பொருள்). கற்புக்கரசி தந்தவற்றை சீதை மகிழ்ச்சியுடன் அணிந்தாள். மூவரும் புறப்பட்டனர். அந்த அழகிய அணிகலன்களுடன் சீதை இராம இலட்சுமணர்களுடன் தாண்டவ வனம் சென்றாள்.
“அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசுயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்” (விராதன் வதைப்படலம் 4)
பின்னர் அவர்கள் பஞ்சவடி சென்றனர். அங்கிருந்து இராவணனால் கவரப்பட்ட சீதை, புஷ்பக விமானத்தில் போகும்போது, அணிகலன்களைக் கழற்றி சிறு துணியில் முடிந்து கீழேப் போட்டாள். யாராவது கண்டு எடுத்து இராமனிடம் காட்டுவார்கள் என்றே சீதை நம்பினாள். விழுந்த இடம் கிஷ்கிந்தை. அங்கு இருந்த வானரங்களும், முடிச்சுகளைப் பார்த்தன. சுக்ரீவனிடம் ஒப்படைத்தன. பின்னர் இராம இலட்சுமணர்கள் வந்து சுக்ரீவனைக் கண்டபோது, சீதையை இராவணன் கவர்ந்து சென்றதை கூறினர். அப்போது வானரங்கள் ஒரு பெண் விமானத்தின் மீது இருந்து அணிகலன்களைக் கழற்றி வீசி எறிந்ததாகக் கூறி அம்முடிச்சுகளைத் தந்தனர். இராமன் வந்தபோது, சுக்ரீவன் அந்த முடிச்சுகளைக் காட்டினான். இராமன் அணிகலன்களைக் கண்டு அவை அனுசுயா அளித்த நகைகளையே சீதை அணிந்திருந்தவையேயாகும் என்றான்.
“தெளிவற நோக்கினன் தெரிவை மெய்அணி
எரிகனல் எய்திய மெழுகின் யாக்கைபோல்
உருகினன் என்கிலம் உயிருக்கும் ஊற்றம்ஆய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்கொல் யாம்” (கலன்காண் படலம் 197)
அத்திரி முனிவர் மனைவி அன்புடன் சீதைக்கு அளித்த அந்நகைகளே அவளைக் கண்டுபிடிக்க உதவியது.
சரபங்க முனிவர்
இவர் கற்பங்கள் பல தவஞ்செய்தவர். சரப - பிராணவாயு. பங்கம் - தடுத்து நிறுத்துதல். பிராணவாயுவைத் தடுத்து நிறுத்தித் தவம் செய்தவர். சரம்- பாணம். மன்மத பாணத்தை வென்றவர் என்பது மற்றொரு பொருள்.தேவர்களின் அதிபதி இந்திரன், பிரம்மதேவன் கட்டளைப்படி சரபங்க முனிவரை பிரம்மலோகம் அழைத்துச் செல்ல வேண்டி, முனிவரிடம் வந்தார். முனிவரும் அவனைச் சிறப்புடன் வரவேற்று வந்த காரணம் என்ன என்று வினவினார். இந்திரன், சிறந்த தவத்தை அடைந்தவனே, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் படைத்தவனாகிய பிரம்மன் தான் வாழும் இடத்தை உனக்குக் கொடுத்தான். அத்தகைய சிறப்பான இடத்திற்கு நலமுடைய உன் மனைவியுடன் உடனே வருவாயாக என்றான். அதற்கு முனிவர், நான் அங்கு வரும் விருப்பம் உடையவன் அல்லன். நான் அவைகளைப் பெற ஆசைப்பட மாட்டேன் எனது அரிய தவம் பல கற்ப காலங்கள் கடந்து நின்றுள்ளது. சிறிய கால எல்லை இல்லாதது நிலைத்த தன்மை வேறுபாடாததும், சுருங்குதலும், வளர்தலும் இல்லாததும் குணம் மாறுபடாததும், விளங்குகின்ற பூதங்கள் எல்லாம் பெரிய காற்றால் அழிந்தாலும், அப்போதும் அழியாமல் இருப்பதுமான பரமபதத்தை நான் அடைவேன் என்று கூறினார். இராம இலட்சுமணர்கள் அங்கு வர, இராமனிடம் அனுமதிபெற்று சரபங்க முனிவர், தன் மனைவியுடன் தீக்குளித்து இறைவனை நேரில் கண்டு கொண்டே பரமபதம் அடைந்தார்.
“ஆதலின் இது பெற அருள் என உரையா
காதலி அவளொடு கதழ் எரி முழுகி
போதலை மருவினன் ஒரு நெறி புகலா
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன்” (சரவங்கன் பிறப்பு நீங்கு படலம் 113)
சுதீக்கண முனிவர்
அகத்தியரைக் காண செல்லும் வழியில் சுதீக்கண முனிவரை இராம இலட்சுமணர்கள் கண்டனர். பிரமனது மரபிலே பிறந்தவர்களில் முதன்மையான முனிவர். சிறந்த தவத்தை செய்து முடித்தவர். இவர் தான் செய்த தவங்களை எல்லாம் இராமனுக்கு அளித்தார்.
“உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர்
நவமை நீங்கிய நற்றவன் சொல்லுவான்
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை
தவம் எலாம் கொளத்தக்கனையால் என்றார்” (அகத்திய ப்படலம் 146)
இது பெரியோர் தமது நற்செயல்களை ஆண்டவனுக்கு காணிக்கையாகும் ’சாத்வீக தியாகம்’ எனப்படும்.
அகத்திய முனிவர்
இயக்கர் குலத்தைச் சேர்ந்த சற்சரணிண் மகன் சுகேது. அவனுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் பிரம்மனை வேண்டினான். யானையின் வலிமையை ஒத்த ஒரு மகள் பிறப்பாள் என்று வரம் தந்தார். அவளே சுகேதுவின் மகள் தாடகை..சுந்தனுக்கும், தாடகைக்கும் திருமணம் நடந்தது. மாரீசன், சுபாகு என்ற இரு மகன்கள் பிறந்தனர். சுந்தன், அகத்திய முனிவர் வாழ்ந்து வந்த சோலையில் மரங்களைப் பற்றி வீசியும், மான்களை உதைத்தும் இடையூறு செய்ததால், அகத்தியர் கண் விழித்து அவனைப் பார்க்க அவன் சாம்பலானான். தனது கணவரை இழந்து பட்டதும் அகத்தியர் மீது ஆத்திரம் கொண்டு, தன் இரு மைந்தர்களான மாரீசன்,சுபாகு இருவரோடும் அவரை எதிர்த்து வந்தாள். அந்த இயக்கர்களை அகத்தியர் அரக்கர்களாக திரியுமாறு சபித்தார்.
அசுரர்கள் கடலில் மூழ்கி ஒளிந்து கொண்ட போது, தேவர்களின் வேண்டுதலால் கடல் முழுவதையும் ஒரு கையால் அள்ளி முகந்து பருகியவர். பின்பு அதை உமிழ்ந்தவர். சிறிய உருவத்தை உடையவர். வஞ்சனை மிகுந்த வாளை உடைய அசுரனான வாதாபி என்பவனது வலிமை வாய்ந்த உடலை இனிதாக உண்டு, உலகத்துக்கு அவனால் உண்டான துன்பத்தைப் போக்கியவர்.
முன்னொரு காலத்தில் தென்திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்து போக, சிவபெருமான், அகத்தியரிடம் ’உடையவனே தென்திசை செல்க’ என கூற, அதன்படி வானளாவி உயர்ந்துள்ள பொதிகை மலையை அடைந்து, அங்கு சமமாக உலகை சமநிலை அடையும்படி தங்கியிருந்தார். நான்கு வேதங்களின் பயிற்சிபெற்ற தமிழ் உலகம் பேசும் வழக்கின் கண்ணம் நுண்ணறிவால் செய்யப்பட்ட தமிழ்ப் புலவரின் செய்யுள் இலக்கணம் ஆராய்ந்து, சிவபெருமான் தனக்கு கற்றுத்தந்த தமிழ் இலக்கணத்தை நூலாக செய்து தந்தவன். எட்டு திசைகளிலும், ஏழு உலகங்களும் அங்குள்ள எல்லா உயிர்களும் நற்கதி அடையும் படி, தமது கமண்டலத்தில் இணையற்ற காவிரி ஆற்றைக் கொண்டு வந்து தந்தார். அந்த அகத்தியர் ஆசிரமத்திற்கு இராமன் வந்தான். அன்போடு வரவேற்று விருந்தளித்த அகத்தியர், அவனுக்கு முன்பு திருமால் கையில் வைத்திருந்த இவ்வில்லை அம்புத் தொகுதிகள் குறையாமல் நிறைந்திருக்கும் புட்டியிலோடு பெற்றுக் கொள்க என்றும், இந்த உலகம் முழுவதையும் ஒரு தராசுத் தட்டில் இட்டாலும், மற்றொரு தட்டில் இட்டஇந்த வாளுக்கு அது ஒப்பாக வரும் தன்மை உடையது என்று சொல்லமுடியாத வாளினையும், வெம்மை மிகுந்த தீயைப் போன்ற திருமேனியைப்
பெற்றவன் சிவன் மேருமலையை வில்லாக வளைத்து திரிபுரங்களை எரித்து அழித்த ஒப்பில்லாத வலிய அம்பையும், அகத்தியர் இராமனுக்கு அளித்தார்.
“வழிபட இருப்பது இது தன்னை வடி வாளிக்
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி” (அகத்தியப் படலம் 170)
வீடணனின் ஆலோசனைப்படி, நிகும்பலையில் இந்திரஜித் செய்யத் தொடங்கிய வேள்வியை அழிக்க இராமன், இலட்சுமணனுக்கு கொடுத்த வில் திருமால் வில். அத்துடன் அம்பறாத்தூணி கவசமும் திருமாலேத் தந்தார். அம்பு எய்வது பற்றியும் கூறினார். திருமாலிடம் இருந்த வில்லினை பிரம்மன் வேள்வி செய்து வேண்டிப் பெற்று, அகத்தியரிடம் அதனைத் தந்தார்.
அவர் தண்டகாரண்யத்தில் நமக்கு அளித்தார் திருமால் வில் தவிர ஒப்பற்ற வாளையும், சிவன் முப்புரம் எரித்த அம்பையும் அகத்தியர் இராமனுக்கு அளித்தார்.இராமன், இலட்சுமணனிடம் அகத்தியர் தனக்களித்த திருமால் வில்லையேத் தந்தார்.
வாலகில்யர்
தாண்டகவனத்தில் பலவகையான முனிவர்கள் வாழ்ந்து வந்தார்கள். வாலகில்லியர் என்ற முனிவர்கள், அங்குட்ட அளவில் உள்ளவர்கள். இவர்கள் பிரமகுமாரர்கள். இவர்கள் அளவற்ற பெருந்தவசீலர்கள். ஆதித்தன் அருகில் இருந்து ஆதித்தனுடைய வெயிலை மிதமாக்கி உலகுக்கு அருள்பவர்கள். இராமனைக் காண இந்த வாலக்கில்லிய முனிவர்களும் வந்தார்கள். இத்தகைய சிறந்த முனிவர்கள் இராவணாதி அவுணர்களால் இரவும், பகலும் வேதனைப்பட்டு நிலை குலைந்து துயரத்தால் துள்ளித் துடித்துக் கொண்டிருந்தார்கள். இந்த முனிபுங்கவர்கள் ’சாபாநுக்கிரக சக்தி’ படைத்தவர்கள். இவர்கள் நினைத்தால் அசுரர்கள் அனைவரும் ஒரு வினாடியில் அழிவார்கள். ஆனால் கோபத்தை வேருடன் கலைந்து சாந்த சீலர்களாக விளங்குவதனால் துயரம் அடைந்தார்கள்.
பழமையான பிரம்மன் பெற்றெடுத்த பால கில்லர் பாலகில்லியர் என்பவர்கள் தலையை மழித்துள்ள முண்டர்கள் மௌனவிரதம் உடையவர்கள். முதலியராகிய தண்டகவனத்தில் வாழும் முனிவர்கள் இராமனைக் கண்டு மனம் மகிழ்ந்தார்கள்.
“பண்டைய அயன் தரு பாலகில்லரும்...
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அத்” (அகத்தியர்படலம்118)
தண்டகாரண்யத்தில் வாழ்ந்த முனிவர் இவர் தங்கியிருந்த வனத்தில் முனிவர்கள் இராமனிடம் அபயம் பெற்றனர். இராமன் இலட்சுமணன் சீதையோடு பத்து ஆண்டுகள் அங்கு தங்கினான்.
“ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவன்
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர்
சிந்தை எண்ணி அகத்தியற் சேர்க என
இந்து நன்னுதல் தன்னொடும் ஏகினார்” (அகத்தியர்படலம் 141)
சுயம்பிரபை
‘மயன்’ என்ற அசுரன் தேவப்பெண்களுள் ஒருத்தியின் இன்பத்தை விரும்பினான். அந்த அழகிய தேவமாதுஎன் உயிர்ப்போன்ற தோழி. அந்த அசுரன் என்னை மன்றாடிக் கேட்டதால், நான் அவளை தேவ உலகிலிருந்து இந்துருட்ச பிலத்தில் சேர்க்க, இருவரும் இங்கு தங்க, இந்திரன் சினந்து விபரம் தெரிந்துகொள்ள, “நீ இந்த நகரிலேயே தங்குக என்றும், நகரத்தைக் காக்கும்வேலை உன்னுடையது என்றும் கூறி சாபமிட, இராமனால் அனுப்பப்படும் வானரர்கள் இங்கு வந்தால், அப்போது உன் துன்பம் நீங்கும்” என்றார்.
“வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான்” (கிட்கிந்தா காண்டம்- பிலம் புக்கு நீங்கு படலம் 873)
இந்த சுயம்பிரபை சாபவரலாறு கிட்கிந்தா காண்டம் பிலம்புக்கு நீங்குபடலத்தில் கூறப்பட்டுள்ளது. சுயம் பிரபை ஒரு தவசி. உண்ணவும், உடுத்தவும் நிறைய இருந்தும் உரையாடி மகிழ உற்ற துணைவராக யாரும் இல்லாத தனிப்பிலத்தில் தனது நேரத்தை செம்மைப்படுத்திக் கொள்ள தவ யோகத்தை மேற்கொண்டாள். தன்னை நோக்கி வானவர்கள் வர வேண்டும், தனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதே அவளுடைய தவத்தின் குறிக்கோளாகும்.
புலஸ்த்திய முனிவர்
பிரம்மனின் மகனாகிய புலஸ்திய முனிவரின் மகனான விசரவசிவன் கேசசி தம்பதியர் பெற்ற மகள் சூர்ப்பணகை. இராவணன், கும்பகர்ணன் இருவருக்கும் இளைய சகோதரி வீடணனுக்கு மூத்தவள்.
“பூவிலோன் முதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற” (சூர்ப்பணகைப் படலம் 256)
நான்முகன்மகன்- புலத்தியன்
புலத்தியன் மகன்- விசிரவாகு எனும் முனிவன்
விசிரவாகுவின் மகன்- இராவணன்
“வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன்மைந்தன்
ஐயன் வேதம் ஆயிரம் வல்லான், அறிவாளன்
மெய்யன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினைவென்றோன்
செய்யும் புன்மையாது கொல் என்றார் சிலர்எல்லாம்” (நிந்தனைப்படலம் 482)
நாரதமுனிவர்
தேவரிஷி என்று அழைக்கப்படுகிறார்.இராவணன் அவையில் சாமகானம் பாடினார். மிக உயர்ந்த இசை நெறிகளில் மாறுபடுதல் இல்லாமல் தாளங்கள் அவற்றின் நிலைகளை அளந்து காட்ட, குற்றமில்லாத பண்கள் நிரம்பிய வீணையின் நரம்புகளில் உண்டாக்கிய இனிய வேதத்தை நாரத முனிவன், கலைமகளைப் போல தன் காதுகளில் பொழிய இலங்கை சபையில் இராவணன் இருந்தான்.
“வீணையின் நரம்பிடை விளைந்த தேமறை
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே” (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 564)
சபரி
மதங்கமாமுனிவர் ஆசிரமத்தில் வேடுவர் குலத்து சபரி தவம் செய்து வந்தாள். இராமன் அவளை சந்தித்து, ‘நீ எவ்வகையான துன்பமும் இல்லாமல் சுகமாக இருக்கின்றாய் போலும்’என்று நலம் விசாரித்தான். அப்போது அந்த சபரி பக்தியோடு இராமனைத் துதித்து, அவனைச் சந்தித்த ஆனந்தத்தால் அழுது அருவியாகக் கண்ணீரைப் பெருக்கினாள். பின்பு உன்னை தரிசித்ததால், எனது பொய்யான உலகப்பற்று அழிந்து போனது. அளவற்ற நெடுங்காலம் நான் மேற்கொண்ட தவத்தின் பயன், இப்போது கிட்டியது என்று கூறி, அவர்கள் உண்பதற்குத் தேவையான காய், கனி முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுத்து, விருந்து படைத்தாள்.
அப்போது என் தந்தையே சிவனும், தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனும், தேவர்கள் யாவரும் இந்திரனும் இங்கு வந்து என்னை மகிழ்ச்சியுடன் பார்த்து உனது மாசற்ற தவத்துக்கு முடிவாக நீ
சித்தி வெறும் காலம் நெருங்கிவிட்டது. இராமன் இங்கே வருவதை எதிர்பார்த்து இருந்து வரும்போது, அவனுக்கு உரிய உபச்சாரங்களை விரும்பிச் செய்த பிறகு, எம் உலகத்துக்கு வருக என்று கூறிச் சென்றார்கள். உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால், இன்று தான் என் தவம் பலித்தது என்று சபரி கூறினாள் இராமன் அரிய தவத்துக்கு அரசியான அவளை அன்போடு பார்த்து தாயே வழிநடையால் உண்டான எங்களது வருத்தத்தை உன் உபசரிப்பால் தீர்த்து விட்டாய் நீ வாழ்வாயாக என்று கூறினான். சபரி சொன்னதை பரம்பொருள் கேட்டான். அத்தவமூதாட்டி ஞானாசிரியர் போலச் சொல்ல இராமன் கேட்டான். சபரி வினையறு நோன்பினள்.
“அருந்தவத்து அரசிதன்னை அன்புற நோக்கி எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய், அம்மனை வாழி என்றான்” (சபரி பிறப்பு நீங்கு படலம் 1187)
மதங்க மகரிஷி
நினைத்தவற்றையெல்லாம் தரும் வல்லமை பெற்ற கற்பக மரம் என்று சொல்லும்படி உண்ணுவதற்கு வேண்டிய அனைத்தையும் அளிக்கும் செழிப்புள்ள நறுமணம் மிகுந்தது. அந்த மதங்க முனிவரின் ஆசிரமம் இருந்த சோலை. அங்கே உலகத்தார் விரும்புகின்ற இன்பமே அல்லாமல், துன்பங்களே இல்லை. இவ்வாறு சொல்லும்படி இருப்பதான சோலை நல்வினை செய்தவர்கள் தங்கி இருக்கும் சொர்க்கலோகம் போல இருந்தது.
“கண்ணிய தருதற்கு ஒத்த கற்பகத் தருஆம் என்ன
உண்ணிய நல்கும் செல்வம்உறு நறுஞ்சோலை ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றித் துன்பங்கள் இல்லைஆன
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கம் போன்றது அன்றே” (சவரி பிறப்பு நீங்கும் படலம் 1183)
பம்பை நதியின் மேற்கு கரையில் ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட மாமுனிவர், சபரிக்கு ராமநாமத்தை உபதேசித்து அவளை தினமும் அந்த மந்திரத்தை ஜெபித்து வாழச் செய்து, கண்டிப்பாக ஒரு நாள் இராமன் நேரில் வந்து அவளை ஆசீர்வதிப்பார் என்று சொல்லி பிரம்மலோகம் சென்றார் மாமுனிவர்.
ஒருசமயம் ’துந்துபி’ என்ற கொடிய அரக்கனுக்கும், வாலிக்கும் சண்டை நடந்தது. வாலி அந்த துந்துபியை துவைத்து இரத்தம் சொட்ட சொட்ட தூக்கி வீசி எறிந்தான். அந்த உடல் பம்பை நதிக்கரையில் உள்ள மதங்க மகரிஷி வழிபாட்டிற்கு, சுத்தப்படுத்தி இருந்த இடத்தை அசிங்கப்படுத்தியதோடு, இரத்தத் துளிகள் மதங்க மகரிஷியின் மேலும் பட்டது. உடனே கோபம் கொண்ட மகரிஷி, தன் ஞானதிருஷ்டியால் இந்த உடலை எறிந்தவன் வாலி என்று அறிந்து, என் ஆசிரமத்தை சுற்றி ஒரு காத தூரம் சுற்றளவுக்கு உள்ள இடத்தில் வாலி வரக் கூடாது அப்படி வந்தால், தலை வெடித்து இறந்து விடுவான் என சபித்தார். இந்த சபிக்கப்பட்ட கிஷ்கிந்தையில் இருந்து ஒருகாத சுற்றளவில் தான் ரிஷ்யமுக பர்வதம் அருகில் இருந்ததால் வாலியிடம் பயந்துகொண்டு சாபத்தினால் வாலி வர முடியாத ரிஷ்யமுக மலையில் சுக்ரீவன் வசித்து வந்தார். சிலநேரங்களில் சில முனிவர்கள் முனிந்து சாபமிடுவார்கள்.
வான்மீகி முனிவர்
காவியத்தின் தொடக்கத்திலேயே அவையடக்கத்திலேயே கம்பர் அவையடக்கமாக இராமனின் கதையை இயம்புவதற்கு வான்மீகமுனிவர் பெருந்தவம் செய்திருக்கவேண்டும் என்றார். இதனை, ‘மாக்கதை செய்த மாதவன்” என்கிறார். மாதவம் செய்த வான்மீகியின் இராமகதை நின்ற தேயம் இது. இங்குதான் சாபச்சொல் உடனே பலித்துவிடுவதுபோல் இராமன் தன் கணையால் ஏழு மராமரங்களையும் துளைத்தான். யுத்தகாண்டத்தில் இந்திரசித்தன் பெரும்படையுடன் வந்து இருப்பதைத் தன்னால் அளவிட்டுச் சொல்லி வருணிக்க முடியவில்லை என்றும், வான்மீகியைத் துணைக்கு அழைப்பதாகவும் கம்பர்கூறியுள்ளார்.
“அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகம் என்னும்
நல் நான்மறையான், அது நாற்பது வெள்ளம் என்னச்
சொன்னான், பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்க வல்லார்” (நாக பாசப்படலம்1967)
குசத்துவ முனிவர்
வேதவதி, குசத்துவ முனிவரின் புதல்வி. முனிவர் வேதம் ஓதிக் கொண்டிருக்கும் சமயத்தில் குழந்தை பிறந்ததால் அவளுக்கு ‘வேதவதி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் வளர்ந்து பருவமடைந்த போது, அவள் அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்து கொள்ள விரும்பினர். ஆனால், முனிவர் தன் மகளுக்குத் திருமால் தான் தகுந்த வரன் என்று எண்ணினார். அவளை மணந்து கொள்ளவிரும்பி, ‘சம்பு’ என்ற அரக்கன் முன் வந்து விருப்பத்தைச் சொல்ல , முனிவர் மறுக்க, அரக்கன் முனிவரைக் கொன்றான், அவர் மனைவியும் இறந்தார். தந்தையின் விருப்பப்படியே திருமாலையே மணக்க வேதவதி தவம் இருந்தாள்.அவளைக் கண்ட இராவணன் அவளை மணக்க ஆசைப்பட, அவள் மறுக்க அவளை வலியத் தீண்டினான். அதனால் சினமடைந்த வேதவதி, “பிரம்மன் அளித்த வரத்தின் பலத்தால் ஆணவத்தோடு நீ என்னைத் தீண்டியதால் உன்னைக் குலத்தோடு அழிக்க, நான் மீண்டும் பிறந்து வருவேன். உன் மரணத்துக்குக் காரணமான நோயாக நானே ஆவேன்” என்றுசொல்லிவிட்டு தீயில் பாய்ந்து உயிரையே விட்டுவிட்டாள்.
“தீயிடைக் குளித்தவத் தெய்வக் கற்பினால்
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ” (இராவணன் மந்திரப் படலம் 92)
இந்த சாப வரலாறு விபீடணன், இராவணனுக்கு அறிவுரைக் கூறும் போது மொழிந்தான்.
முடிவுரை
முனிவர்கள் காடுகளில் தங்கி தவம் செய்வார்கள். உலக நன்மைக்காக கேள்விகள் புரிவார்கள். உலக இன்பங்கள் துறந்து, பற்றற்று இருப்பார்கள். இடைவிடாது பரமாத்மாவை, நினைப்பவர்கள். மௌனமாக இருப்பார்கள். தான் செய்த தவத்தின் பலனைத், தாம் விரும்பியவர்களுக்கு உவந்து அளிப்பார்கள். கம்பராமாயணத்தில் வசிஷ்டமுனிவர், விபாண்டக முனிவர், கலைக்கோட்டமுனிவர், பிருகு முனிவர், விஸ்வாமித்திரமுனிவர், சூளி முனிவர், காசிபமுனிவர், சுக்ராச்சாரிய முனிவர், கௌதம முனிவர், சதானந்தமுனிவர், இரிசிக முனிவர், ஜமதக்னி முனிவர், பரசுராம முனிவர், சலபோசன முனிவர், கங்கைக்கரை முனிவர்கள், பரத்வாஜ முனிவர், அத்திரி முனிவர், சரபங்க முனிவர், சுதீக்ண முனிவர், அகத்தியமுனிவர், வாலகில்ய முனிவர்கள்,சுயம்பிரபை, புலஸ்த்திய முனிவர், நரதமுனிவர், சபரி, மதங்கமகரிசி, வான்மீகி முனிவர், குசத்துவமுனிவர் ஆகிய முனிவர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை,2016.
2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.
3. கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளி பதிப்பகம், சென்னை,2019.
6. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்ஷண்யா பதிப்பகம், சென்னை,2019.
7. கிருபானந்த வாரியார், இராமகாவியம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை,2012.
8. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
9. ஸ்ரீ. சந்திரன். ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.
10. பாலசுப்பிரமணியன்.கு. வை (உரை.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
11. ஸ்ரீ சந்திரன். ஜெ.மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.