கம்பராமாயணத்தில் ஆறுகள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
ஒரு நாடு என்றால் எல்லா வளமும் இருக்க வேண்டும். மக்களுக்கு இன்றியமையாத் தேவையான உணவு, உடை, உறைவிடம் நன்முறையில் எல்லோருக்கும் கிடைக்க நிலவளம் சிறந்து இருக்க வேண்டும். நீர்வளம் இருந்தால், நிலவளம் இருக்கும். நீர்வளம் நிறைந்திருக்க வேண்டுமானால் நாட்டில் எல்லா இடங்களிலும், வற்றாத ஜீவநதி வேண்டும். விருப்பு வெறுப்பில்லாமல் சகல ஜீவன்களுக்கும் உதவுகிறது ஆறு. மலை சிகரங்களுக்கு இடையிலே தான் ஆறு உற்பத்தி ஆகிறது. ஆனால், பல கிளைகளாகப் பெருகி ஓடுகிறது. அருவியாய் ஒழுகுகிறது. இறுதியில் கடலில் கலந்து
விடுகிறது. ஒரு நாட்டின் அழகிற்கு ஆறு தான் காரணம். இயற்கை அழகு வாய்ந்த நாட்டின் ஆழமாய் விளங்குவது ஆறு ஆகும். அதனாலேயே ஆறில்லா ஊருக்கு அறிவு இல்லை என்பர். வெண்ணிலா அழகு போல நாட்டிற்கு அழகு ஆறே ஆகும் கம்பராமாயணத்தில் வரும் ஆறுகள் குறித்து ஆராய்வோம்.
வசிட்ட முனிவன் இராமனின் முடிசூட்டு விழாவிற்கு வேள்வி நிகழ்த்த கங்கை முதல் காவிரி வரை உள்ள புண்ணிய தீர்த்தங்களில் மங்கலகரமான நீரைக் கொணரச் செய்தான்.
1. சரயு ஆறு
சூரிய குலத்தில் பிறந்த வேந்தர்கள் எண்ணற்றவர்கள் அனைவரும் ஒழுக்கம் வாய்ந்தவர்கள். வேந்தர்களின் ஆட்சியில் ஒழுக்கம் எவ்வாறு இடையறாது இருந்ததோ, அவ்வாறே சரயு ஆற்றின் நீரோட்டமும் இருந்தது. நினைந்து ஊட்டும் தாய் போல, உயிர் க் குலத்தின் தேவையறிந்து நீர் வழங்குவது சரயு ஆறாகும். வெள்ள நீரும் இறைவனின் பல்வேறு பெயர்கள் போல ஏரி, குளம், கால்வாய், தடாகம், பொய்கை, சோலை, காடு, கவிச்சோலை ,நெல்வயல் போன்ற பல இடங்களில், பல பெயர்களால் பறந்து செல்கிறது. நீர் பெருக்கெடுத்து அருவி, ஆறாகி ஓடும் காட்சி கருநிற பாறைகளில் வழிந்து விழும், மழைத் தாரைகள் வெள்ளிக் கம்பிகளை வீழ்த்தி விட்டது சுற்றிலும் பசுமையான அடர்ந்த மரங்கள் வெளிச்சம் குறைவான பகுதி கருமையான மலைக்குன்று. இந்தப் பின்புலத்தில் வெண்மை நிறம் கொண்ட மழைநீர் வீழ்ந்து வெள்ளிக் கம்பிகளாக வருகின்றன.
"புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்” (ஆற்றுப்படலம் 16)
"சரயு என்பது தாய் முலை அன்னதுஇவ்
வுரவு நீர் நிலத்து எங்கும் உயிர்க்கு எலாம்" (ஆற்றுப்படலம் 24)
சரயு ஆற்றின் வெள்ளப் பெருக்கினை, வேத நெறிகளை உணர்ந்த பெரியவர்களின் கைகொடுத்த தானத்தின் பயனைப் போன்று பயனுடையதாக அளவின்றி பெருக்கெடுத்து ஓடியது. பெருக்கெடுத்து
ஓடும் வெள்ளம் மிகுதியால், தான் செல்லும் வழியில் இருக்கும் விலை உயர்ந்த மலைபடு பொருட்களையெல்லாம் சந்தனம், அகில், தந்தம் ஆகியவற்றை வாரிக்கொண்டு ஓடுகிறது. இவ்வாறு செல்லும் ஆற்றின் போக்கு வணிகர்களை ஒத்ததாக இருக்கிறது. எங்கே எப்பொருள் மலிவாக கிடைக்கும், அவற்றை வாங்கி பல இடங்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்யும் பணிகளைப் போன்று பொருட்களை வாரிக் கொண்டு சென்றது.
"மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும்
அணியும் ஆணை வெண்கோடும் அகிலும் தண்” (ஆற்றுப்படலம் 19)
நீர்ப் பெருக்கெடுத்து அருவியாக, ஆறாக ஓடும். ஆற்று நீர், ஒரே நேர்கோட்டு அமைப்பில் ஓடுவதில்லை. வளைந்தும், நெளிந்தும் மலர்கள், இலைகள், வண்ணப் பொடிகள் முதலியவற்றோடு கலந்தும் ஓடிவரும் காட்சி, பல வண்ணங்களைக் கொண்டு வளைந்து தோன்றும் வானவில் போன்று இருந்தது ஆறு. கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தோன்றும் உயிரினங்கள் யாவருக்கும், பாலூட்டி இனம் தாயின் மார்பகம் போன்றதாகும்.
சரயு வெள்ளப் பெருக்குடன் ஓடுகிறது. இந்த வெள்ளம், தன் ஓட்டத்தில் பல மாறுதல்களைச் செய்கிறது.
"முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி,
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி
எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்
செல்லுறு கதியின் செல்லும் வினைஎனச்சென்றது என்றே” (ஆற்றுப்படலம் 29)
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி விட்டது. மருதத்தை முல்லையாக மாற்றி விட்டது. நெய்தலை, மருதமாகவும் ஆக்கி விட்டது. பல்வேறு நிலங்களின் பண்டங்களையெல்லாம் தம்தம் இடத்தை விட்டு,
வேறு நிலத்துக்குக் கொண்டு செல்கிறது வெள்ள நீர், இம் மாற்றப் போக்கில் நால்வகை நிலங்களும், வெள்ள ஓட்டத்தில் உருமாற்றம் பெற்று விட்டன. இம் மாறுபாடுகளுக்கு அரிய எடுத்துக்காட்டைக் கையாள்கிறார். இத்தன்மையால் செலுத்தப்படுகின்ற போக்கில் இழுத்துச் செல்லுகின்ற இரு வினைகள் போல, வெள்ளம் இழுத்துச் சென்றது.
பிறவிகள் நால்வகைப் பட்டவை. தேவகதி, மனித கதி, விலங்கு கதி, தாவர கதி என்பன அவை.
ஒரு நிலத்தை வேறு நிலத்தின் இயல்புடையதாகச் செய்யவல்லது வெள்ளம். அது போலவே, "தேவரை மனிதராக்கியும், மனிதரைத் தேவராக்கியும், இவ்வாறே நான்கு வகைக் கதியையும் நிலை தடுமாறச் செய்வது, வினை என்னும் வெள்ளத்தின் போக்கு. 'ஒரு நிலத்துப் பொருள்களை, மறு நிலத்துக்குக் கொண்டு சேர்த்து, நிலத்து இயல்பை மாற்றுவதாகச் சரயு வெள்ளத்தை வருணித்தார். இது திணை மயக்கம். திணை என்னும் சொல் ஒழுகலாறு என்னும் பொருளினது. உயிரினங்கள் தம் ஒழுக்கத்தின் போக்குக்கு ஏற்றபடியே வாழ்வின் போக்கினவாகும்; ஊழ் அமைதியின் ஆகும். சமய, தத்துவவாதிகளின் வினைக் கோட் பாட்டை வெள்ளத்து வருணனையிலே கவிச்சக்கரவர்த்தி எளிமையாகவும், இனிமையாகவும் விளக்குகிறார்" என்பது உரையாசிரியர் குறிப்பு. (கோவை கம்பன் அற நிலையப் பதிப்பு)
சரயு சொல்லும் பிறிதோர் உண்மை
"தாது உகு சோலை தோறும், சண்பகக் காவு தோறும்
போது அவிழ் பொய்கை தோறும், புதுமணல் தடங்கள் தோறும் ,
மாதவி வேலிப் பூக வனம்தொறும், வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிர் என, உலாயது அன்றே" (ஆற்றுப்படலம் 32)
சரயு நீர் பூஞ்சோலைகளின் ஊடே புகுந்து உலாவுகின்றது; சண்பக மரக் காடுகளின் இடையே, நடை போடுகின்றது. விரிந்த நீர் நிலைகளில் பரவிச் செல்கின்றது; புதுமணல் பரந்துள்ள மேட்டைத் தாண்டித் தடாகங்களில் நுழைகின்றது. ஒரே ஆன்மா தான், பல உடல்களில் உலாவுகின்றது என்ற தத்துவம் இங்கே கம்பரால் கொள்ளப்பட்டது.
"வான்நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப” (அயோத்தியா காண்டம் கடவுள் வாழ்த்து 1)
எனும் அயோத்தியா காண்டக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், இக்கருத்து எதிரொலிக்கக் காணலாம்.
சமய தத்துவக் கோட்பாடுகளை, இயற்கைக் கோட்பாடுகளோடு ஒப்பிடுவதில் ஒப்பற்றவர் கம்பர்.
சரயுவின் ஓட்டமும் - சமயமும் - கம்பரின் தத்துவமும் இறைத் தத்துவமும்
"கல்லிடைப் பிறந்து, போந்து,
கடலிடைக் கலந்த நீத்தம்
`எல்லை இல் மறைகளாலும் இயம்ப
அரும் பொருள் ஈது' என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகித்
துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயம் சொல்லும்
பொருளும்போல் பரந்தது அன்றே" (ஆற்றுப்படலம் 31)
சரயு ஆறானது பல கால்வாய்களாகப் பிரிந்து நீளப் பாய்ந்து செல்கிறது. இது, ஒரே குலம் பல கிளைகளாகப் பிரிந்து நெடிது தொடர்ந்து வாழ்வது போன்றதாகும். கால்வாய் ஒன்று பலவாகப்
பிரிந்தாலும் உள் நிறைந்து ஓடும் நீர் ஒன்றே.
ஆறு எப்படிப் பிறந்து, பல நிலங்களில் ஒடிக் கடலில் கலக்கின்றது என்பதைக் கம்பர் சரயு பற்றிய வருணனையில் குறிப்பிட்டு, இறைத் தத்துவத்தை இணைத்துப் பாடுகிறார். ஆறு கல்லின்
இடையில் பிறக்கின்றது. பல ஆறுகள் பற்பல கற்களினிடையிலிருந்து பிறக்கின்றன. அவை மணலிலும், மேட்டிலும், பள்ளத்திலும் புரண்டு ஓடுகின்றன. முடிவில் எல்லாம் கடலில் கலந்து ஒரே வெள்ளப் பெருக்காய்த் தோன்றுகிறது.
பரம்பொருள் ஒன்றே; அது போல் வெள்ள நீரும் ஒன்றே. பல்வேறு சமய, தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப், பரம்பொருளும் வெவ்வேறு நாம, ரூப பேதங்களாக விளங்குகிறது. அது போலவே
வெள்ள நீரும் ஏரி, குளம், கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கின்றது, பின்னர் கடலில் கலக்கின்றது. பரம்பொருளை வழிபடும் பல்வேறு ஞானத் துறைகளாகிய சமயங்களின் தோற்றமும், முடிவும் போல தொடக்கத்தில் ஒன்றான சரயு ஆறு, தான் செல்லும் வழியில் பல பெயர்கள் பெற்றுக் கடல் எனும் பரம்பொருளில் இணைந்தது என்பது கம்பநயம்.
2. கோமதி ஆறு
தாடகை வதம் முடிந்த பிறகு, இராம,இலட்சுமணர்கள் விசுவாமித்திரருடன் வரும் வழியில் சரயு ஆற்றோடு, கோமதி ஆறும் வந்து கலப்பதனால் ஒலி கேட்டது.
"ஆன கோமதி வந்து பாயும் எய்தும் அது என்ன அப்பால்
போனபின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார்" (வேள்விப்படலம் 403)
3. கௌசிகி ஆறு
தன் கணவனாகிய இரிசிகமுனிவர் வானில் செல்ல, அந்த பிரிவைப் பொறுக்க முடியாதவளாக கௌசிகி ஒரு ஆற்றின் வடிவில் அவனைத் தொடர்ந்து வானத்தில் சென்றாள். அதைக் கண்ட முனிவருக்குத் தலைவனான இரிசிகன், " ரிய உலகத்து மக்களின் துன்பங்களை நீக்கும் பொருட்டு, இந்த ஆற்றின் வடிவிலே பூமிக்கு செல்க" என்று அவளிடம் கூறிவிட்டு, பிரம்மலோகம் சேர்ந்தார். எனக்கு முன்னே பிறந்த கௌசிகி, தன் கணவன் அறிவுரையின்படி இப்பெரிய ஆற்றின் வடிவம் ஆகிவிட்டாள் என்று விசுவாமித்திரர், கௌசிகி ஆற்றின் வரலாற்றை இராம, இலட்சுமணருக்கு உரைத்தார்.
"காதலன் சேணின் நீங்க கவுசிகை தரிக்கலாற்றாள்
மீத உறப் படரலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி" (வேள்விப்படலம் 412)
படைக்கலம் வழங்கிய பின்னர் விசுவாமித்திரர், இராமர், இலட்சுமணர்களை அழைத்துக் கொண்டு, கங்கை ஆற்றை அடைந்தார். அப்போது அங்கு இருந்த அந்த இடத்தின் தன்மையையும், திருமால் வாமன வடிவத்துடன், மகாபலியிடம் மண் கேட்ட இடம் இதுவே, என்றும் விளக்கமளித்தார். பெருமாள் கங்கை ஆற்றங்கரையில் அமைந்திருந்த சோலையில் நூறு ஊழிக்காலம் தவம் புரிந்தார். அவ்வாறு தவம்செய்து வருகின்ற வேளையில், அசுரன் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் அதற்குரிய அரசர்களிடம் இருந்து தனது ஆற்றலால் பறித்துக் கொண்டான். ஆற்றங்கரையில் முனிவர்களுக்கு இராமன் அபயம் அளித்தான். பின்னர் தண்டகாரண்யத்தில் முனிவர்களை யார் தடுத்தாலும் காப்பேன் என்று இராமன் கூறினார்.
4. சோணையாறு
விசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனக மன்னனின் வேள்வியைக் காண அழைத்துச் செல்கிறார். கானகம் செல்லும் வழியில் சோணை ஆறு உள்ளது. நீரினால் கழுவப் பெற்ற சிறந்த ரத்தினங்களும், சந்தனமும், அகிலும் பொருந்தியுள்ள மணல் குன்றுகள் ஆகிய இன்பத்தைத் தருகின்ற அணிகலன்கள் அணிந்த கொங்கைகளையும், இவை மிகுந்த நீர் வஞ்சிக்கொடிகளாகிய இடையையும், அழகிய கருமணல் ஆகிய கூந்தலையும் மலையைச் சுற்றியுள்ள சிலம்புகளையும் உடைய சோணையாறு என்ற பெண்ணை அடைந்தனர்.
இராமன், சீதை திருமணம் நடைபெற இருப்பதைக் காண அயோத்தியிலிருந்துப் புறப்பட்டு வந்த அனைவரும், சோணையாற்றை அடைந்தனர்.
“புலம்பும் மேகலைப் புது மலர் புனை அறல் கூந்தல்
சிலம்பு அலம்பு கால் சோணை ஆம் தெரிவையைச் சேர்ந்தார்” (அகலிகைப்படலம் 458)
5. சேனை ஆறு
சந்திர மலை, மலையின் இன்பமெல்லாம் நுகர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மகளிர் பலரும், குடைந்து குடைந்து நீராடினர். அதனால் நீரில் உள்ள அலைகள் உண்டாயின. இதனால் அந்த நீர்நிலையில் பூத்திருந்த செந்தாமரை மலர்கள் நீரில் முழுவதுமாக இருந்தன. தாமரை மலர்கள் அப்பெண்களின் முகத்துக்கு தான் ஒப்பாக இல்லையே என வெட்கம் கொண்டு, நீரிலே மறைந்து கொள்வதைப் போலத் தோன்றின. புணர்ந்த ஆடலும், மகளிர் அணி அலங்காரம் பெற்றிருந்த நீர்நிலைகள் அவர்கள் நீங்கி போனதாலே வெறிச்சோடி போயின. ஆண்களும், பெண்களும் நீரில் விளையாடினர். அவர்கள் நீராடும்போது, வாசனை வீசுகின்ற சுண்ணப் பொடி ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர். நறுமணமுள்ள கஸ்தூரியையும் ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர்.
“வண்டு உணக் கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும்
கொண்டு எதிர் வீசுவாரும் கோதை கொண்டு ஓச்சுவாரும்
தொண்டை வாய்ப் பெய்து தூநீர் கொழுநர்மேல் தூகின்றாரும்
புண்டரீகக்கை கூப்பிப்புனல் முகத்து இறைக்கின்றாரும்” (புனல் விளையாட்டுப்படலம்882)
6. யமுனை
யமுனையில் இராம, இலட்சுமணன், சீதை மூவரும் நீராடினர். பின்பு கிழங்குகளுடன் சுவையானப் பழங்களை உண்டனர். வளையும் இயல்புடைய மூங்கில் கழிகளை வெட்டினான். அவற்றை மாணைக் கொடியால் பிணைத்து, சிறந்த தெப்பம் ஒன்றைக் கட்டினான் இலட்சுமணன். அதன் மேல் திரண்ட கல்லைப்போலப் பருத்தத் தோள்களை உடைய இராமன் மனைவியோடு, இனிதாக ஏறி அமர, இலட்சுமணன் தன் இரு கைகளாலும், தெப்பத்தைத் தள்ளிக் கொண்டு நீந்தினான்.
“ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டுநீர் உண்டார்” (வனம்புகுபடலம் 715)
”வாங்கு வேய்ங் கழை துணித்தன் மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம்போல்” (வனம்புகுபடலம் 716)
7. கங்கையாறு
சகரன் செய்த வேள்வியால் சகரன் பிள்ளைகள் சாம்பலாகி, அவர்கள் முக்தி பெற, அவர்களது மரபில் வந்த பகீரதன் பெரும் தவமியற்றி ஆகாயக் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அதுவே கங்கை ஆறு என்பதாகும். (கங்கை காண் படலம்) பிறர் செய்யும் பாவங்களைப் போக்கும் கங்கை, இன்று தன்னைத் தந்த இறைவனாகிய இராமன் மூழ்கியதால், தன் பாவங்களைப் போக்கிக் கொண்டு மகிழ்ந்தது என்கிறார்.
“கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா
பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்தை
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள்” (கங்கைப்படலம் 626)
கங்கை செவிலித் தாயாக இருந்து நீராடுவதாகக் கற்பனை செய்கிறார். செவிலித்தாய் என்பதற்கு ஏற்ப, கங்கைக்கு, நரைத்தக் கூந்தலாக ’நுரை கொழுந்தை’ என்று கூறுகிறார். சீதை நீரில் இறங்கி
குளித்ததும், அவள் நீளமுள்ள கூந்தலில் நறுமணத்தை அப்போது கங்கைப் பெற்றாள் என்கிறார்.
“பொழியுங் கண்ணில் புதுப்புனல் ஆட்டினர்
மொழியும் இன்சொலின் மொய்ம்மலர் சூட்டினர்
அழிவில் அன்பெனும் ஆரமிழ்து ஊட்டினர்
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர்” (கங்கைப்படலம் 623)
கங்காதேவியும், ’இராகவா உலகிலுள்ள மாந்தர்கள் என்னில் மூழ்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வார்கள். இன்று நீ என்னில் மூழ்கியதால் என்னிடம் தங்கியிருந்த பாவங்கள் அகன்றன.
நான் உய்வு பெற்றேன்’ என்று கூறிக் கைதொழுது கங்கை மகிழ்ந்தாள்.
கங்கை ஆறே, தெய்வத் தன்மைப் பொருந்தியது அங்கே பல முனிவர்கள் தங்கியிருந்தனர்.
“கங்கை என்னும் கடவுள் திரு நதி.
தங்கி வைகும் தபோதனர் யாவரும்” (கங்கைப்படலம் 619)
வேதங்களைக் கற்று, குற்றங்கள் அற்ற, மேம்பாடுடைய முனிவர்கள் தங்கும் கங்கை விரிந்து பரவும் அலை நீரை உடையது.
8. காவிரிஆறு
காவிரி நாடன்ன கழனிநாடு என்று கோசல நாட்டின் சிறப்பைக் கூற வந்தவர், காவிரி ஆறு பாய்கின்ற சோழநாட்டைப் போன்ற கோசலநாடு என்று கூறுகிறார். ஒரு நாட்டின் பெருமையை விளக்குவதற்கு எடுத்துக் காட்டாய் நிற்பது காவிரி. ஆறு என்றாலே அது காவிரி ஆறையேக் குறிக்கும் என்கிறார்.அகத்தியப் படலத்தில் ;கன்னி இள வாழைக்கனி’ அந்தப் பஞ்சவடியில் பழங்களை வழங்கும் மிக இளமையான வாழைமரங்கள் உள்ளன. அணிலின் வாலைப் போன்ற செந்நெல் கதிர்கள் உள்ளன.
கடவுள் தன்மைப் பெற்ற காவிரி என்று கூறத்தக்க, நீர் நிறைந்த ஆறுகள் உள்ளன என்று கூறுமிடத்து, தாய்நாட்டுப் பற்றும், காவிரியின் ஏற்றமும் புலப்படுகிறது.
காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.
நளன், சேது அணைக் கட்டினான். நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் கொண்ட அணை அது. அணைக்கட்டி முடிந்ததும், அதன் மேல் அரக்கர் பதி வீடணன் முன்னால் நடந்தான். கருநிறக் களிறு என்னும் இராமனும், அவன் வெற்றி புனை தம்பியும் பின் நடந்தனர். கடைசியில் நிறைநூல் கற்று உணரும் மாருதி வந்தான். பெருந்திரளான வானரங்களைக் கொண்ட சேனைகள் நவமணிகளையும், சந்தனச் கட்டைகளையும், அலை கடலில் வீழுமாறும் செல்லும் காவிரி போன்று நடை போட்டது சேனை, கடல்மீது நடந்து சென்ற வானரப் படையானது. குறிஞ்சி முதலான நிலங்களில் உள்ள பொருள்களைப் புரட்டிச் செல்வதால் ’பொன்னி’ என ஆயிற்று. பொன்னி என்று முடித்தும் மனம் ஆறாத கம்பர் காவிரியை மேலும் உவமித்து விவரித்தார்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலப்பாகுபாடுகளைப் பாடுவது, தமிழ் இலக்கிய மரபு, கம்பர் காவிரியை இலங்கை மீது கட்டப்பட்ட சேதுவைப் பாடும் போது புகழ்ந்து
குறிப்பிட்டு மனம் மகிழ்கின்றார். காவிரிப் பூம்பட்டினக் கடலில், காவிரி கலக்கிறது. கருங்கடலில் பொன்னியாறு கலக்கும் போது ஏற்படும் நிற, தன்மை மாற்றங்களை,
“இருங்கவி கொள் சேனை, மணி ஆரம் இடறி தன்
மருங்கு வளர் தெண்திரை வயங்கு பொழில் மான,
ஒருங்கு நனி போயின - உயர்ந்த கரை யூடே
கருங் கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப” (ஒற்றுக் கேள்விப்படலம் 692)
என்று பாடுகிறார்.
தாங்கள் கட்டிய பாலத்தில் வானரப் படைகள் மகிழ்வோடு சென்றன. அவ்வாறு செல்வது என்பது காவிரியாறு கடலில் கலக்கும் போது விரைவு போல மகிழ்ச்சியளிப்பது போல இருந்தது.
“ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது, இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று
யாதும் ஒழியா வகை சுமந்து, கடல் எய்தப்
போதலினும், அன்ன படை பொன்னி எனல் ஆகும்” (ஒற்றுக் கேள்விப்படலம் 693)
கம்பர் பஞ்சவடியை வருணித்து வியந்த போதும் ‘பொன்னி’ பற்றிப் புகன்றது நினைந்து மகிழத் தக்கது.
“கன்னி இளவாழை கனி ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள: தெய்வப்
பொன்னி எனல் ஆயபுனல் ஆறும் உள, போதா
அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட” (அகத்தியப்படலம் 173)
கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும் பொன்னி ஆற்றையும், பொன்னான சோழ நாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். அவ்விடங்களில் சில அனுமன் மருத்துவ மலையைத், தேடி இமயம் அடைந்து, பல மலைகளைக் கடந்தான். உத்தரகுரு என்னும் செழிப்பும், வளப்பமும் உடைய இடம் வந்தான். அவ் உத்தரகுருவை வருணிக்கும் கம்பர், அதனைக் காவிரி நாடு போன்றது என உவமித்தார். தமிழ் கம்பரின் நாட்டுப் பற்றை இது சுட்டும்.சோழநாட்டையும், அதனை ஆண்டு வரும் சோழஅரசனையும், காவிரியையும் இணைத்துக் கம்பர்,
“வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கிப் போனான்” (மருத்துமலைப்படலம் 2702)
கம்பர் தமது தாயக மண்ணான காவிரியைக், கங்கையோடு ஒப்பிட்டும் மகிழ்ந்துள்ளார். பரதன் சேனையோடு கங்கைக் கரையை அடையும் போது,
“பூவிரி பொலன் கழல், பொரு இல் தானையான்
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஓரிஇ
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான்” (கங்கை காண் படலம் 985)
அனுமன் தன் துணைவர்களுடன் சீதையைத் தேடிச் செல்கையில் சோழ நாடு கடந்தனர். சோழ வள நாட்டை ஐந்து பாடல்களில் வருணித்து மகிழ்கிறார். (கிட்கிந்தா காண்டம்- ஆறுசெல்படலம் 931, 932, 933, 943)
“அன்ன தண்டக நாடு கடந்து, அகன்
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்;
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து,
இன்னல் செய்யும் நெறிஅரிது ஏகுவார்” (கிட்கிந்தா காண்டம்- ஆறுசெல்படலம் 930)
9. கங்கா, யமுனா, சரஸ்வதி
கங்கா, யமுனா, சரஸ்வதி மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம், திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும். பரத்வாஜ முனிவர் காடு வந்த இராம இலட்சுமணர்களை கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தில் தங்குமாறு கூறியதை,
“கங்கை யாளொடு கரியவள் நாமகள் கலந்த
சங்கம் ஆதலின்” (வனம்புகுபடலம் 711)
என்பதன் மூலம் அறிய முடிகிறது.
சீதையின் நீண்ட கூந்தலின் தொகுதியான மேகக்கூட்டம் அவளது தொங்கி நீரிலே தங்கி குறைவது கங்கை ஆற்றுடன் கலக்கின்ற கருமையான யமுனையின் மிகுதியான நீர் சூழல்கள் தோன்றி
ஓடுவது போலத் திகழ்ந்தன. கங்கையின் புண்ணியத் தீர்த்தத்தில், முன்னோர்கள் எலும்பு படுமாயின் நற்கதி அடைவர் என்றும், நரகத்திற்கு செல்லக்கூடிய பாவிகளுக்கும், புண்ணிய பலனை அளிக்கக் கூடியது கங்கை நீர், காற்று, பனியினைக் குடித்து பல்லாயிரம் ஆண்டுகள் பகீரதன் தவம் இயற்றி, பூமிக்கு அழைத்து வந்த சிவனின் சடை மழைக்குள் இருந்து பொங்கிப் பாய்ந்தாள் புனித கங்கை.
10. கோதாவரி ஆறு
கோதாவரி ஆறு உருண்டு, புரண்டு உயிரோட்டமாகச் செல்கிறது. அது புவியினுக்கு அழகானதாகத் தோன்றுகிறது. சிறந்த பொருள்களைக் கொடுக்கின்றது. வயல்களுக்குப் பலன் அளிக்கின்றது. பல நீர்த்துறைகளைக் கொண்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நிலப்பகுதிகளில் பரவிப் பாய்கின்றது. செவ்வையாகத் தெளிந்து ஓடுகிறது. குளிர்ந்த நீரோட்டம் உடையதாகின்றது இந்த ஆறு.
“புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்கு ஆகி
அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்” (சூர்ப்பணகைப் படலம் 218)
“சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி” ஆறு மலர் மாலை போன்றும், மேலெழுந்து வீசும் அலைகளையுடையதாய், முத்துப் போன்ற தெளிந்த நீரினை உடையது.
“கோதை போல் கிடந்த கோதாவரி” (கிட்கிந்தா காண்டம்-ஆறுசெல்படலம் 911)
“எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு” (கிட்கிந்தா காண்டம்-ஆறுசெல்படலம் 912)
புண்ணிய ஆறாகிய கோதாவரி இம்மையும், மறுமையும் நற்பேற்றினையும் அளிக்க வல்லது.
இடையறாது பெருகுகின்ற பழமையையும், பெருமையையும் வாய்ந்த புண்ணிய ஆறு கோதாவரி வெள்ளமானது முத்துக்களை இழுத்துக் கொண்டும், பொன் துகள்களை எடுத்துக் கொண்டும்,
இடையர்களின் முற்றங்களிலுள்ள மத்துகளை இழுத்துக் கொண்டும், மரங்களை இழுத்துக் கொண்டும், கற்களைப் புரட்டி இழுத்துக் கொண்டும், மிருகங்களை இழுத்துக் கொண்டு செல்லும் தன்மையுடையது. தன்னில் முழுகிய எவர்க்கும் தேவலோகத்தைத் தரவல்லது.
“முத் தீர்ந்து பொன் திரட்டி மணி உருட்டி
முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்தீ ர்ந்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து
மான் ஈர்த்து வருவது யார்க்கும்” (நாடவிட்டப்படலம் 758)
11. பம்பை ஆறு
ஒரு நாள் உச்சிப்பொழுதில் இராமனும், இலட்சுமணனும் பம்பை ஆற்றங்கரையில் நடந்து வருகின்றனர். அங்கு காணப்படும் இளம்பெண்களும், செந்தாமரை மலர்களும் மற்றும் காணப்பட்ட எல்லாப் பொருட்களும் சீதையின் நடைக்கும், அங்கங்களுக்கும் ஒப்பாக இருந்தன. நல்ல கவிகள் செய்த நூல் ஆராய்ந்து பல்வகை பாவின் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், பொருளை சந்தேகமில்லாமல் விளங்க வைத்தல் போன்று பம்பை ஆறு அத்துடன் காணப்பட்டாலும் தெளிந்த நீர் விரைந்து அழகாக இருந்தது.
“களம் நவில் அன்னமே முதல கண்ணகன்
தள மலர்ப் புள் ஒலி தழங்க இன்னதோர்
கிளவி என்று அறிவருங் கிளர்ச்சித்து ஆதலின்
வளநகர்க் கூலமே போலும் மாண்டது” (பம்பைப்படலம் 6)
பெரிய நகரத்தின் கடை வீதிகளில், பல நாட்டு மனிதர்கள் கூடி, பலவகை மொழிகளைப் பேசும் போது உண்டாகும் பேரொலியை இன்னதென்று அறிய முடியாது. அதுபோல, பொய்கையில் பல வகை
பறவைகள் சேர்ந்து, போகும் வழி ஓசை என்ற ஒன்றைத்தான் அறிய முடியும். அந்த ஓசையை எந்த ஓசை எனப் பிரித்து அறிய முடியாத வகையில் ஓசை இருந்தது என்கிறார்.
பம்பை என்னும் பெயருடைய நீர்நிலை, வண்டுகள் வந்து தங்கும் மலர்களை உடையது,சிவந்த கண்களைக் கொண்டனவும், அச்சத்தைத் தருவதுமான யானைகள் வந்து நீராடப் பெறுவது, தெளிவைக் கொண்டது. விண்மீன்கள் பொருந்தியதும், மேகங்கள் தங்கப் பெற்றதுமான மிக்க நீரையுடைய வானமே இவ்வுலகில் வந்து கிடக்கின்றது என்று சொல்லக்கூடிய சிறப்பை உடையது.
“மீன் படி மேகமும் படிந்து வீங்கு நீர்
வான் படிந்து உலகிடைக் கிடந்த மாண்பது” (பம்பைப்படலம் 1)
12. பொருநை (தாமிரபரணி ஆறு)
மலையை இடம் இருக்கவிட்டு வலங்கொண்டு சென்றால் பொன்துகள் நிரம்பிய நீர்ப்பெருக்குள்ள தாமிரபரணி என்னும் ஆறு செல்வதாகக் கூறுகிறார்.
‘முதலைகள் நிறைந்த தாமிரபரணி’ என்று பொருநை ஆற்றின் ஆழத்தையும், அகலத்தையும் வால்மீகி கூறுகிறார். ‘பொன் கொழிக்க, மண் செழிக்க புனல் பெருகும் பொருநை’ என்று கம்பர் கூறுகிறார்.
சுக்ரீவன், சீதையைத் தேடிச் செல்லும் வானர வீரர்க்கு வழி குறித்து கூறும்போது, தென் திசையில் இருக்கும் நாடான பாண்டி நாட்டில் உள்ள அகன்ற பொதிய மலையில், நிலைபெற்ற சிறந்த அகத்திய முனிவனின் தமிழ்ச்சங்கத்தை அடைவீர்கள். அது எப்போதும் அம்முனிவன் வாழ்வதற்கான இடமாகும். ஆதலால் அந்த மலையை இடமிருக்க விட்டு, வலம் கொண்டு செல்லுங்கள். இவ்வாறு
செல்லின் பொன்றுகள் நிரம்பிய நீர்ப்பெருக்குள்ள தாமிரபரணி என்னும் ஆறும் பிற்படச் சென்று, யானைக் குன்றுகள் வாழப்பெறும் தாழ்வரையுள்ள மயேந்திரன் என பெரிய மலையையும் அதனருகில் தென்பெருங் கடலையும், காண்பீராக என்றான்.
“பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி பின்பு ஒழிய நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா
நெடுவரையும் கடலும் காண்டிர்” (நாடவிட்ட படலம் 768)
பொதுவாக மலையிலிருந்து பிறந்த ஆறுகள், கடலில் சென்று சேரும் இயல்புடையன. இதனை கார்கால படலத்தில்,
“செறிபுனல் பூந்துகில் திரைக் கையால்திரைத்து
உறுதுணைக் கால்மடுத் து ஓடிஓதநீர்
எறுழ்வலிக் கணவனை யெய்தி யாறு எலாம்
முறுவலிக் கின்றன போன்ற முத்து எலாம்” (கார்காலப் படலம் 555)
இதில் கடலை நாயகனாகவும், ஆறுகளை நாயகியாகவும் கூறும் மரபு அமைந்துள்ளது.
13. சுவணநதி
கோதாவரியைக் கடந்து போனால் அறவழி போலவும், தெளிவான அருளால் விளங்கும் அனைவரும் விரும்பும் அருள்மயமான வழி போலவும், குளிர்ந்து கதிரவனின் ஒளி தன்னில் நுழையாதபடி, விளங்குகின்ற மலர் நிறைந்த சோலையானது தன் இரு பக்கங்களிலும் மிகுதியாக நெருங்கி, அதனுள் இருந்த இருள் இருந்த இடம் தெரியாதபடி ஓடுமாறு, மணிகள் ஒளிருவதற்கு இடமாகிய, தேவர்கள் வேண்டியதால் முருகக் கடவுள் தனியாக இருந்த சுவணநதியைப் போய்ச் சேர்வீர்கள்.
“எவ் ஆறும் உறத் துவன்றிஇருள்ஓட
மணி இருப்பது இமையோர் வேண்ட
தேவ் ஆற முகந்து ஒருவன் தனிக் கிடந்த
சுவணத்தைச் சேர்திர்மாதோ” (நாடவிட்ட படலம் 759)
14. நர்மதை ஆறு
நர்மதை ஆற்றில் தேவர்கள் நீராடுவர்.வெள்ளத்தால் அடித்து வரப்பெற்ற மலர்களிடத்துள்ள தேனைப் பருகிய வண்டுகள், களிப்பினால் ’பஞ்சமம்’ என்னும் பண்ணைப் பாடும். பல்வகை இரத்தினங்களின் ஒளியால், இருளானது இருந்த இடம் தெரியாது விலகுதற்குரிய சிறப்பிடம் பெற்றது.
இங்குள்ள எருமைக் கன்றுகள், நீருண்ட கால மேகங்களோடு, வேறுபாடு தோன்றாதவாறு நர்மதை ஆற்று நீரில் படிந்து காணப்பட்டதை,
“மேக மலையினொடும் விரவி மேதியின்
நாகுசேர் நருமதை ஆறு நண்ணினார்” (பிலம்புக்குநீங்குபடலம் 818)
ஆற்றில் அன்னப் பறவைகள் விளையாடுவதுண்டு. தேவ மாதர்களான ரம்பை முதலிய பெண்கள் நீராடுவர். வானவர் உலாவுவர். வண்டுகள் பாடித் திரியும். (4528)
15. பெண்ணையாறு
அனுமன், அங்கதன், சாம்பன் முதலானோர் சீதையைத் தேட, தென்திசை வந்தனர். பெண்ணை ஆற்றைக் கண்டனர். அந்த ஆற்றை கம்பர் பெண்ணை என்னும் ஆற்றுப் பெண் என்றும், சொல்லுடன் இணைத்து, சிலேடையாகப் பாடுகிறார். பெண்ணையாற்றை, ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினார்.
இச்சொல் நதியைக் குறிக்கும். மணற் குன்றுகள், செவ்வாம்பல், முத்துகள், தாமரை. பெண் :கொங்கைகள், வாய், பற்கள், முகம், பெண்ணை நாடுவோர் பெண்ணை நண்ணினார் என்றனர். இதில் பெண்ணை என்னும் சொல் இரட்டுற மொழிதலாக ஒரு பெண்ணுக்கும், பெண் ஆற்றுக்கும் அமைந்தது சிலேடை நயம்.
“புள்நை வெம்முலைப் புள்ளினம் ஏய்தடத்து
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்
வண்ண வெண் நகைத் தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார்” (கிட்கிந்தா காண்டம்-ஆறுசெல்படலம் 896)
பெண்ணை ஆற்றில் புதிதாக மலர்ந்துள்ள மலர்களோடு மணற்குன்றுகள், செவ்வாம்பல், முத்துகள் ஆகியவை நிறைந்து காணப்படும். இந்த ஆற்றில் நீராடுவோர், நோய்கள் நீங்கப் பெறுவர். மூழ்கியவர் எந்த அளவு பாவியாயிருப்பினும் அவர்களின் பிறவிக்குக் காரணமான பாவங்களையெல்லாம் போக்கி முக்தி அளிக்க வல்லது.
16. சங்கமுக ஆறு
அனுமன், இலங்கையின் வீதிகளில் முதன்முறையாக நடை போடுகிறான், ஒரு காட்சியைக் காண்கிறான். அது சங்கமுக ஆறு. அங்கு அரக்க மகளிரை அமர வைத்துத் தேவமகளிர் நீராட்டுகின்றனர். தடித்த இடையும், பெருந்த உடலும் உடைய அவ்வரக்கப் பெண்டிரை உட்கார வைத்து, சங்கமுக ஆற்றில் நீராட்டுகின்றனர். நீராட்டும் அமர மாதர்களுக்குச் சிற்றிடை. சிற்றிடைத் தாங்காத பெரிய தனங்கள். அமரமாதர் தம் இடை துவள, அரக்க மாதருக்கு நீராட்டுகின்றனர்.
“ஈட்டுவர், தவும் அலால் மற்று ஈட்டினால், இயைவது இன்மை
காட்டினார் வீதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!
பூட்டுவார் முலைபொறாத பொய் இடை நைய பூ நீர்
ஆட்டுவார். அமரர் மாதர்; ஆடுவார் அரக்கமாதர்” (ஊர் தேடு படலம் 198)
கச்சணிந்த மார்புடைய தேவமகளிர் தம் மெல்லிடை வருந்த, சங்கமுக ஆற்றில், அரக்கமகளிரை நீராட்ட, அவர் ஆடுவர். இது இயல்புக்கு எதிரான செயல் ஆதலின் விதியாயிற்று.
“கானக மயில்கள் என்ன, களிமட அன்னம் என்ன
ஆனனக் கமலப்போது பொலிதா, அரக்கமாதர்,
தேன்உகு சரளச் சோலை தெய்வநீர் ஆற்றின் தெண்நீர்,
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாசை” (ஊர்தேடுபடலம் 197)
முடிவுரை
நீர்வளம் இருந்தால், நிலவளம் இருக்கும். எனவே நீர்வளமும், நிலவளமும் இன்றியமையாதது. நாட்டின் வளம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் வற்றாத ஆறுகள் வேண்டும்.
கம்பராமாயணத்தில் சரயு ஆறு, கோமதிஆறு, கௌசிகி ஆறு, சோணையாறு, சேனையாறு, யமுனைஆறு, கங்கைஆறு, காவிரிஆறு, கங்கை, யமுனை, சரசுவதி ஆறு, கோதாவரி ஆறு, பம்பை ஆறு, தாமிரபரணி ஆறு, நர்மதை ஆறு, பெண்ணைஆறு, சுவணநதி, சங்கமுக ஆறு ஆகிய ஆறுகள் குறித்துக் கூறப்பட்டுள்ளன.
துணை நூற்பட்டியல்
1. இராமன் பன்முகநோக்கில், அ.ச. ஞானசம்பந்தன், சாரு பதிப்பகம், சென்னை, 2016.
2. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, சென்னை.
3. கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. எல்லைகள் நீத்த இராம காதை, பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.
6. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.
7. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|